பிரான்சின் நான்ந் நகரில் பொலிசாரின் திடீர் தாக்குதலில் ஸ்டீவ் கனிஸோ காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பின்னர்

“நாட்டில் அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று மக்ரோன் அச்சுறுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சின் நான்ந் நகரிலுள்ள Wilson Quai இல், ஜூன் 22 சனிக்கிழமை அதிகாலையில் ஒரு டெக்னோ இசை விழாவில் நிகழ்த்தப்பட்ட வன்முறையான பொலிஸ் தாக்குதலின் போது, பள்ளி நேரத்திற்குப் பிந்தைய பராமரிப்பு உதவியாளரான இருந்த 24 வயதான ஸ்டீவ் மையா கனிஸோ காணாமல் போன நிலையில், ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் நதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்ட நாளை இந்த நாள் குறிக்கிறது.

இந்த சம்பவம் நடந்த மாதத்திலிருந்து, பொலிஸ் தாக்குதலை நடத்தியவர்களும் அதற்கு உத்தரவிட்டவர்களும் தான் இதற்கு பொறுப்பு எனக் கூறி ஆயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மற்றும் ஆதரவாளர்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வந்துள்ளனர். “ஸ்டீவ் எங்கே?” என்று சிலைகள் மீது போஸ்டர்கள் வைப்பது மற்றும் நான்ந் நகரம் எங்கிலும் சுவர்களில் வர்ணங்களால் எழுதுவது, மேலும் இணையத்திலும் பரவலாக பகிர்வது என பிரான்சில் பொலிஸ் மிருகத்தனத்தை எதிர்ப்பதற்கான விடயமாக இது உருவெடுத்துள்ளது.

ஜூன் 22 அதிகாலை 4 மணியளவில் திட்டமிட்ட நேரத்தில் இசை விழா முடிவு பெற இருந்த நிலையில் கனிஸோ கடைசியாக அங்கு காணப்பட்டார். இசை நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அரை மணி நேரம் கூடுதலாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மீது கண்ணீர்ப்புகை, தாக்குதல் நாய்கள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் கையெறி குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கியும், கொடூரமாக அவர்களை அடித்தும் மற்றும் டேஸர் துப்பாக்கிச் சூடு நடத்தியும் ஒரு இராணுவ பாணியிலான தாக்குதலை பொலிசார் அங்கு நிகழ்த்தத் தொடங்கினர். அப்போது பொலிஸின் வெறித்தனமான தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு முனைந்த பதினான்கு பேர், லுவார் (Loire) நதி படகுத்துறை விளிம்பில் ஏழு மீட்டர் உயரத்தில் இருந்து நதிக்குள் விழுந்தனர். ஸ்டீவ் கனிஸோவும் லுவார் நதியில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது, என்றாலும் அவருக்கு நீந்தத் தெரியாது என தெரிய வந்துள்ளது. அவரது உடல் இப்போது வரை கண்டெடுக்கப்படவில்லை.

விழாவின் போது பொலிஸ் தாக்குதல் நிகழ்வுகளை ஒரு இளைஞர் அவரது செல் போனில் பதிவு செய்திருந்ததில் இருந்து பெறப்பட்ட ஒரு காணொளியைLiberation நாளிதழ் சென்ற வாரம் வெளியிட்டது. அந்த நிகழ்வை முடிப்பதற்கு பொலிஸ் முனைந்த நிலையில், அவர்கள் மீது சில போத்தல்கள் வீசப்பட்டதிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதே அந்த திடீர் தாக்குதல் என்று பொலிசார் வழங்கிய அபத்தமான நியாயத்தை இது தகர்த்தெறிகிறது.

இந்தக் காணொளி விழாவில் கலந்து கொண்டவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அபாயம் பற்றி முழுமையாக அறிந்துதான் பொலிஸ் நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இக் காணொளியில், கலகக் கவசங்களை தாங்கிய பொலிசார் ஒற்றைக் கோப்பில் அணிவகுத்துச் செல்வதையும், ஒரு பொலிஸ் அதிகாரி தாக்குதல் நாயை கட்டுப்படுத்தியவாறு ஒரு இளைஞரை நேரடியாக ஆற்றை நோக்கித் தள்ளிக் கொண்டு செல்வதையும் காணமுடிகிறது. மேலும், சிதறடிக்கப்பட்ட இளைஞர்கள் “லுவார் பின்னால் உள்ளது!” என்று கூச்சலிடுவதை தெளிவாகக் கேட்க முடிந்தபோதும் கூட, அவர்கள் தாக்குதலைத் தொடர்கின்றனர்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், மக்கள் நதிக்குள் விழுந்ததற்கான பலத்த கூச்சல்கள் அங்கு கேட்டன. அப்போது, “கண்ணீர் புகை தாக்கத்தினால் லுவார் நதிக்குள் மக்கள் விழுந்து விட்டனர்,” என்றும், “சென்று அவர்களை இப்போதே காப்பாற்றுங்கள்!” என்றும் ஒருவர் கூறுகிறார். அப்போது கூட, நதியை நோக்கிய திசையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதை பொலிசார் தொடர்கின்றனர்.

ஸ்டீவின் மரண வாய்ப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளின் முற்றிலும் எதிர்பார்க்கக்கூடிய விளைவுதான் என்பதற்கான சான்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்ரோன் நிர்வாகம், பொலிசாரை பாதுகாப்பதை மட்டும் இரட்டிப்பாக்கவில்லை. அரசின் படைகள் தண்டனையின்றி தொழிலாள வர்க்கத்தை தாக்கி கொல்ல முடியும் என்ற ஒரு செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனிஸோ காணமற்போனது பற்றி கருத்து தெரிவிக்குமாறு பத்திரிகையாளர்கள் நேற்று கேட்டபோது, அவர் “சூழ்நிலையால் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டவரானார்” என்று மக்ரோன் நொண்டிச் சாக்கு கூறினார். மேலும் அவர், “நமது நாடு இருந்து வரும் வன்முறையான சூழலை ஒருவர் மறந்துவிடக் கூடாது,” என்றும், முடிவில் “நாட்டில் அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

“வன்முறை” என்பதான மக்ரோனின் பாசாங்குத்தனமான குறிப்பு, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நடந்து வரும் பாரிய “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களைக் குறிக்கும் தெளிவான ஒரு உருவகமாகவே உள்ளது. எவ்வாறாயினும், 2,500 பேரை காயப்படுத்திய, கண்ணிமைக்கும் நேரத்தில் 20 பேரை சுட்டு வீழ்த்திய, மற்றும் ஐந்து பேரின் கைகளை உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்கிய அரசு படைகளின் பக்கம்தான் வன்முறை என்பது கிட்டத்தட்ட முற்றிலுமாக இருந்து வருகிறது. பொலிஸ் தாக்குதலினால் 73 வயதான ஜெனுவீவ் லுகே என்ற பெண்மணி நினைவிழந்த நிலையில் உள்ளார்; மேலும், 80 வயதான Zenouab Radouane இன் முகத்தில் வீசப்பட்ட உணர்ச்சிகளை மழுங்கடிக்கும் கையெறி குண்டு வீச்சில் அவரது தாடை சிதறிப் போனதால் உயிரிழந்தார். 7,000 - 9,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே வேளையில் ஒரு பொலிஸ் அதிகாரி மீது கூட குற்றம்சாட்டப்படவில்லை.

அத்தோடு, ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் “நாட்டில் அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும்,” அல்லது பொலிஸ் அடக்குமுறை தீவிரமடையும் என்று அறிவிப்பதற்கு இந்த பதிவு இப்போது பயன்படுத்தப்படுகிறது.

சென்ற மாதம், உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனர், “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதில் ஈடுபட்ட 9,000 இற்கு அதிகமான பொலிசாரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். அவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களில், ஜூன் 21-22 இல் நான்ந்தில் நடந்த பொலிஸ் தாக்குதலுக்கு பொறுப்பாளியாக இருந்த காவல்துறை ஆணையர் Gregoire Chassaing உம் அடங்குவார்.

ஸ்டீவ் காணாமல் போனதற்கு வழிவகுத்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களே விசாரணையை நடத்தினால் அவர்கள் குற்றம்சாட்டப்படுவார்கள் என்பதால், நான்ந் நிகழ்வுகள் குறித்து ஒரு உள்ளக பொலிஸ் விசாரணைக்கு காஸ்டனர் உத்திரவிட்டுள்ளார். குறிப்பாக, பொலிஸ் ஒடுக்குமுறையைத் தூண்டியதான, விழாவில் இசைக்கப்பட்ட இறுதிப் பாடலாக, நவ-பாசிச தேசிய பேரணி மற்றும் அதன் முன்னோடிக் கட்சியான தேசிய முன்னணிக்கு (Front national) எதிரான இளைஞர்களின் எதிர்ப்பு கோஷங்களுடன் பிரபலமாக தொடர்புடையதான “Porcherie des Bérurier noir,” என்ற 1980 களின் பிரெஞ்சு பங்க் (punk) பாடல் இருந்தது.

நேற்று, ஸ்டீவ் காணாமல் போன ஒரு மாத நிறைவை குறிக்கும் விதமாகவும், அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டனம் செய்வதற்காகவும் Quai Wilson சாலையில் 700 பேர் ஒன்று கூடினர். லுவார் நதியை அடுத்து இரண்டு மனித சங்கிலிகளை உருவாக்கி ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

“நீதி இரண்டு வேறுபட்ட வேகங்களில் செல்கின்றதான ஒரு தாக்கத்தை ஒருவர் கொண்டுள்ளார்,” என்று பொருள் விநியோக ஓட்டுநரும் ஸ்டீவின் நண்பருமான 24 வயது அலெக்ஸான் Le Monde நாளிதழுக்கு தெரிவித்தார். “நதியில் விழுந்தது ஒரு சி.ஆர்.எஸ் (கலகப் பிரிவு அதிகாரி) ஆக இருந்திருப்பாரானால், அந்த உச்சகட்ட நேரத்தில் அவரை கண்டுபிடிப்பதற்கான அனைத்து வழிகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கும். அத்துடன், இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் உடனடியாக குற்றம்சாட்டப்பட்டிருப்பார்கள்.

அனைத்து அறிக்கைகளின்படி, கனிஸோ பரவலாக விரும்பப்படும் ஒரு இளைஞனாக இருந்துள்ளார். Treillieres ஆரம்பப் பள்ளியில் பல வருடங்களாக பள்ளி நேரத்திற்குப் பிந்தைய பராமரிப்பு திட்டத்தில் கனிஸோ வேலை செய்துள்ளார் என்று அவரது சக பணியாளர்கள் Liberation நாளிதழுக்கு தெரிவித்தது குறிப்பாக குறிப்பிடத்தக்கது. மேலும், “அவர் காணாமல் போனது பற்றி நாங்கள் குழந்தைகளுக்கு விளக்கும்போது, அவர்களில் சிலர் அவர் திரும்பி வர வேண்டும் என்று கோரினர். மற்றவர்கள் அழுதனர். அவர் இப்போது இல்லாததால் அவர் பணிபுரிந்த அறைக்கு மாணவர்கள் திரும்பிச் செல்லவில்லை. அவர் எப்போதுமே நீர்க்குமிழி போன்று இருந்தார், இப்போது அது துளையை விட்டு சென்றுவிட்டது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சோசலிஸ்ட் கட்சி (Socialist Party-PS) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise-LFI) கட்சி ஆகியவற்றின் இழிந்த தலையீட்டுக்கும் பொலிஸ் வன்முறைச் செயலுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோபத்த்திற்கும் எதிர்ப்புக்கும் இடையே கட்டுப்படுத்த முடியாத இடைவெளி உள்ளது.

ஜூலை 19 அன்று, அடிபணியா பிரான்ஸ் ஒரு "சமூக ஊடக பிரச்சாரம்" என்று அது என்று அது அழைத்த ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது, உண்மையில் யாரையும் எதிலும் ஈடுபடுத்தாத ஒரு பகட்டுவித்தையாகும். ட்விட்டரில், பாராளுமன்ற பிரதிநிதிகள் கேமராவை மவுனமாக உற்றுப் பார்க்கும், மற்றும் “ஸ்டீவ் எங்கே?” என்று சைகை காண்பிக்கும் காணொளிகளை பதிவிட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் மூடிமறைத்த விசாரணையை வெளியே கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட முறையாக, அது ஒரு கூடுதல் பாராளுமன்ற விசாரணை ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, இது ஆளும் வர்க்கத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் காவல்துறையை கணக்கில் வைத்திருப்பார்கள் என்ற பிரமைகளை ஊக்குவிப்பதன் மூலம் தொழிலாள வர்க்க எதிர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்.

லுவார்-அட்லாண்டிக் பகுதியை சேர்ந்த PS பெண் செனட்டர் மிஷேல் மெனியேர், “ஒழுங்கை பராமரிப்பதற்கான கோட்பாட்டை மாற்றவேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன், “காவல்துறையின் நோக்கம் மக்களைப் பாதுகாப்பதாகும்” என்றும் கூறினார்.

இந்த அறிக்கைகள் அத்தியாவசியமான பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கு நோக்கம் கொண்டுள்ளன: தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை வன்முறையால் அடக்குவதன் மூலம் சமூகத்தின் நிதிய உயரடுக்கின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான பொறுப்பாளியாக, முதலாளித்துவ அரசின் ஆயுத அமைப்புகளாக இயங்கும் காவல்துறையின், வர்க்க செயல்பாட்டின் தவிர்க்கமுடியாத விளைவாக பொலிஸ் வன்முறை உள்ளது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது, சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்கான போராட்டமாகும்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் அடிபணியா பிரான்ஸ் இரண்டு கட்சிகளுமே பொலிஸ் எந்திரத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்த முதலாளித்துவக் கட்சிகளாகும். முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பிரான்சுவா ஹோலண்ட், மெலோன்சோனின் கட்சியின் வாக்குகளையும் பெற்று, 2015 இல் அவசரகால நிலையை அறிமுகப்படுத்தி, ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தம் செய்ததுடன், பொலிஸ் அதிகாரங்களையும் மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியிருந்தார்.

Loading