முன்னோக்கு

உலக சோசலிச வலைத்தளம் 75,000 ஆங்கில கட்டுரைகளை எட்டியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெப்ரவரி 14, 1998 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தொடங்கியதில் இருந்து அதன் ஆங்கில மொழி பக்கங்களில் 75,000 கட்டுரைகளைப் பிரசுரித்து, கடந்த வாரம்உலக சோசலிச வலைத் தளம்ஒரு மிகமுக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய, சிங்கள, தமிழ், நோர்வேஜியன், மாண்டரின், துருக்கிஷ், கிரேக்கம், அரபு, ரஷ்ய மற்றும் போர்ச்சுக்கீசிய மொழி உட்பட ஏனைய 21 மொழிகளில் பிரசுரிக்கப்படும் பல ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும் சேர்த்தால், WSWS இல் பிரசுரிக்கப்பட்ட ஆவணங்களின் மொத்த எண்ணிக்கை ஏற்கனவே 100,000 ஐ கடந்து விட்டன.

நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள் செயலாற்றி, தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கும் அதிகமாக பிரசுரிக்கப்பட்ட அரசியல் பகுப்பாய்வு மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் அம்பலப்படுத்தல்களின் ஈடிணையற்ற பணியை இந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 1998 இல் வாரத்திற்கு ஐந்து நாட்களென WSWS கட்டுரை பிரசுரிப்பைத் தொடங்கியது. ஏப்ரல் 1999 இல், WSWS அதன் கட்டுரைகள் பிரசுரிக்கும் செயல்திட்டத்தை வாரத்திற்கு ஆறு நாட்களாக விரிவாக்கியது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் சோசலிச ஆசிரியர் குழுவின் 24 மணி நேர ஒத்துழைப்பைச் சார்ந்து, உலக சோசலிச வலைத் தளம் அதன் திட்டமிட்ட பிரசுரிப்பில் ஒரேயொரு நாளைக் கூட தவறவிட்டதில்லை. தேசிய எல்லைகளைக் கடந்த இந்த நெருக்கமான அன்றாட அரசியல் கூட்டுறவு, WSWS எதன் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டதோ அந்த முன்னோக்கை, அதாவது புரட்சிகர மார்க்சிச கோட்பாடுகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை, நடைமுறையளவில் கைவரப்பெறுவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

மார்க்சிச இயக்க வரலாற்றில் WSWS ஓர் அசாதாரண சாதனையாகும். இதுவே முதலாவதும், ஒரேயொரு, நாளாந்த சர்வதேச சோசலிச பிரசுரமாக திகழ்கிறது. WSWS, இன்றைய நாளின் புரட்சிகர மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை, தொடர்ந்து இடைவிடாது உறுதியாக தாங்கிப் பிடித்துள்ளதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க போராடி வருகிறது.

WSWS இன் 20 ஆம் நினைவாண்டு தருணத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் நாம் விவரித்ததைப் போல:

உலக சோசலிச வலைத் தளத்தின்தனித்துவமான தன்மை, மார்க்சிச தத்துவத்தின் அடிப்படையிலும், ஒட்டுமொத்த இருபதாம் நூற்றாண்டு முழுவதிலுமான சர்வதேச வர்க்க போராட்டத்தின் இன்றியமையா மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்து தொடர்ச்சியான மறுஆய்வு செய்ததன் அடிப்படையிலும் நனவுடன் அமைக்கப்பட்ட முன்னோக்கிலிருந்து வருகிறது. முதலாளித்துவ ஊடகங்களில் மேலோங்கி உள்ள —இன்னும் அதிக தரங்குறைந்த வடிவில், குட்டி முதலாளித்துவ இடது மற்றும் போலி-இடது வலைத் தளங்களில் பதிவிடப்படும்— நடைமுறைவாத தோற்றப்பாட்டுவாதத்திற்கு நேரெதிரான விதத்தில், WSWS அன்றாட நிகழ்வுகளை அவற்றிற்குரிய வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்துகிறது.

பெப்ரவரி 1998 இல் WSWS ஸ்தாபிக்கப்பட்டதானது, தொழிலாளர் புரட்சிகர கட்சிக்குள் 1985-86 உடைவுக்குப் பின்னர், ICFI ஐ அரசியல்ரீதியில் ஐக்கியப்பட்ட ஓர் உலக கட்சியாக, நனவுபூர்வமாக மார்க்சிச இயக்கத்தின் முந்தைய வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் மாற்றியதன் விளைவாக இருந்தது.

ஏறத்தாழ 1988 இன் தொடக்கத்தில், ICFI, பூகோளமயப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி மற்றும் அதனுடன் இணைந்து புரட்சிகரமான தொலைத்தொடர்பு மாற்றங்களது முக்கியத்துவம் மீது கவனத்தைக் குவித்திருந்தது. இதன் விளைவாக, இணையத்தின் முக்கியத்துவத்தை ஆளும் வர்க்கமே பரந்தளவில் புரிந்து கொள்வதற்கு முன்னதாகவே, நான்காம் அகிலம் அதன் சாத்தியத்திறனை பெரிதும் புரிந்துகொண்டிருந்தது. அது புரட்சிகர சிந்தனைகளை பரவலாக விதைக்கவும் மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் முன்னர் நினைத்தும் பார்க்க முடியாததாக இருந்த தொழிலாள வர்க்க இயக்கத்தை ஒருங்கிணைப்பதற்கும் செயலூக்கத்துடன் வழிவகைகளைத் தேடி கொண்டிருந்தது.

அனைத்திற்கும் மேலாக, 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ஆளும் வர்க்க சித்தாந்தவாதிகள் பிரகடனப்படுத்தியவாறு "வரலாற்றின் முடிவை" குறிக்கவில்லை என்பதை நான்காம் அகிலம் புரிந்து வைத்திருந்தது. அதற்கு பதிலாக சோவியத் ஒன்றியத்தின் முடிவு, முதல் தொழிலாளர் அரசுக்குள் ஏகாதிபத்தியத்தின் கருவியாகவும் உலக சோசலிச புரட்சிக்கு ஒரு சமரசமற்ற எதிர்ப்பாகவும் ஸ்ராலினிசத்தை ட்ரொட்ஸ்கி குணாம்சப்படுத்தியதன் சரியானத்தன்மையை உறுதிப்படுத்தியது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பே கூட பூகோளமயப்பட்ட உற்பத்தியின் அபிவிருத்தி ஏற்படுத்திய உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாக இருந்தது, அது ஸ்ராலினின் "தனியொரு நாட்டில் சோசலிசம்" முன்னோக்கு உட்பட, அனைத்து தேசிய வேலைத்திட்டங்களையும் தவிர்க்கவியலாத வகையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.

WSWS அதன் 1998 ஆரம்ப அறிக்கையில் புதிய வெளியீட்டை அறிவித்து குறிப்பிடுகையில், அது "வரலாற்று அறிவு, கலாச்சார விமர்சனம், விஞ்ஞானபூர்வ அறிவொளி மற்றும் புரட்சிகர மூலோபாயம் ஆகியவற்றின் ஆழமான தகவல் களஞ்சியத்திற்காக போராடும். தொழிலாளர்களின் நவீன சோசலிச இயக்கத்தின் மறுபிறப்புக்கு இன்றியமையாத அரசியல் மற்றும் கலாச்சார விவரிப்பின் மட்டத்தை உயர்த்துவதே அதன் குறிக்கோளாகும்," என்று எழுதியது.

இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான அதன் பிரசுரிப்பு காலத்தில் WSWS இன் விரிவடைந்துள்ள செல்வாக்கும், அதன் விளைவாக அனைத்துலகக் குழுவின் பிரிவுகளாக சோசலிச சமத்துவக் கட்சிகளின் வளர்ச்சியும், 1998 இன் முதலாண்டு பிரசுரத்திலேயே 1,500 க்கும் அதிகமான ஆங்கில-மொழி கட்டுரைகளில் இருந்து, உலகளாவிய நிதியியல் முறிவின் ஆண்டான 2008 இல் அண்மித்து 3,000 கட்டுரைகள் வரையில், 2014 இல் இருந்து இப்போது வரையில் ஒவ்வொரு ஆண்டும் 5,000 இக்கும் அதிகமான கட்டுரைகளுடன் இப்போதைய வேகம் வரையில், பிரசுரிக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பைச் சாத்தியமாக்கி உள்ளன.

அமெரிக்கா மற்றும் கனடாவின் அரசியல், சமூக நெருக்கடி, மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்களைப் பற்றி 22,000 இக்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்து கிரீஸ் மற்றும் ரஷ்யா வரையில் ஐரோப்பாவில் அரசியல் மற்றும் சமூக அபிவிருத்திகளை சுமார் 15,000 கட்டுரைகள் பகுப்பாய்வு செய்துள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் சம்பந்தமாக 6,000 கட்டுரைகள் உள்ளன, ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டம் பற்றி 7,500 கட்டுரைகள் உள்ளன, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் யேமனில் அமெரிக்கா தூண்டிவிட்ட போர்கள் உட்பட மத்திய கிழக்கு சம்பந்தமாக 6,500 கட்டுரைகள் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா சம்பந்தமாக ஆயிரக் கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

திரைப்படத்தைப் பற்றி மட்டுமே 2,000 கட்டுரைகள் உள்ளடங்கலாக, கலை, கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானம் சம்பந்தமாக 4,000 க்கும் அதிகமான கட்டுரைகளை WSWS பிரசுரித்துள்ளது, இன்னும் அதிக பரந்தளவில் கலை மற்றும் அருங்காட்சியக கண்காட்சிகள், புகைப்படக்கலை, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட மீளாய்வுகள், கட்டிடக் கலை மற்றும் நடனம், மற்றும் தொல்சீர் இசை கச்சேரியில் இருந்து நவீன ராப் இசைப்பாடல் வரையில் இசையின் அனைத்து வடிவங்கள் குறித்தும் WSWS கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இருதரப்பினருக்கும் இன்றியமையா அரசியல் கல்வியூட்டும் வரலாற்று தலைப்புகளில் மற்றொரு 1,500 கட்டுரைகள் அர்பணிக்கப்பட்டு, அவை பிற்போக்குத்தனமான விஞ்ஞானத்தன்மையற்ற பின்நவீனத்துவ சித்தரிப்புகளுக்கு எதிரான விட்டுக்கொடுப்பற்ற எதிர்ப்புக்கு உயிரூட்டி உள்ளன.

WSWS இன் மார்க்சிச பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்படாத சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட போராட்டமோ அல்லது உலக அரசியலின் பிரதான அரசியல் சம்பவம் என்றோ எதுவும் இல்லை, இவை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளைக் கட்டமைப்பது உட்பட அனைத்துலகக் குழுவின் பிரிவுகளது அரசியல் தலையீட்டுக்கு அடிப்படையாக விளங்குகின்றன.

அமெரிக்காவில் ஜனாதிபதி பில் கிளிண்டன் மீது பதவிநீக்க குற்றவிசாரணைக்கு இட்டுச் சென்ற அமெரிக்க அரசியல் நெருக்கடி ஆரம்பித்ததில் இருந்து WSWS அன்றாட பிரசுரிப்பைத் தொடங்கியது. அந்த ஆண்டின் போக்கில், WSWS, இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை நீக்குவதற்கான அதிவலது பிரச்சாரத்தைப் பகுப்பாராய்ந்தும் மற்றும் எதிர்த்தும் 100 க்கும் அதிகமான கட்டுரைகள் மற்றும் கருத்துரைகளைப் பிரசுரித்தது. இது, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு பிரதிநிதித்துவம் செய்த அச்சுறுத்தலை நாம் விவரித்த அதேவேளையில், ஈராக் மீது குண்டுவீசுவதற்கும் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதற்கும் அவர் உத்தரவிட்டபோது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைத் தளபதியாக கிளிண்டனின் நடவடிக்கைகளுக்கு நாம் சிறிதும் விட்டுக்கொடுப்பின்றி எதிர்ப்பை முன்நிறுத்தி இருந்தோம்.

இந்த அனுபவம், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகள் மற்றும் தொழிற்சங்கங்களிலும், தொழிற் கட்சி மற்றும் சமூக-ஜனநாயக கட்சிகளிலும் போலி-இடது அமைப்புகளிலும் உள்ள அவற்றின் துணைக்கருவிகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் வழியை அபிவிருத்தி செய்யக்கூடிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஆற்றலை எடுத்துக்காட்டியது.

அதைப் பின்தொடர்ந்து வந்த 21 ஆண்டுகளில், WSWS, உலக ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகவும் நனவுபூர்வமான பிரிவுகளின் எதிர்ப்பை முன்னெடுத்தது. நாம் சேர்பியா மற்றும் லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சுக்கு எதிராக, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக, மேற்கு ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் புத்துயிரூட்டலுக்கு எதிராக, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீளெழுச்சிக்கு எதிராக, ஐரோப்பாவில் மிகவும் சக்தி வாய்ந்த பிற்போக்குத்தனத்திற்கு எதிராக போராடினோம். WSWS மூலமாக, அனைத்துலகக் குழு ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பும் பிரச்சாரத்தைத் தொடங்கியது, அது இப்போது அமெரிக்க போர் குற்றங்களை விக்கிலீக்ஸ் மூலமாக அம்பலப்படுத்தியதற்காக ஆயுள்தண்டனையை முகங்கொடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசான்ஜைப் பாதுகாக்கும் போராட்ட வடிவை எடுத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் WSWS க்கு வாசகர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர், நாங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களைப் பாதுகாக்கவும் மற்றும் விரிவாக்கவும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்யவும் முனைந்துள்ளோம். நீண்ட காலத்திற்கு முன்னரே தொழிலாளர் நலன்களுக்கான எந்தவொரு போராட்டத்தையும் கைவிட்டுள்ள பழைய திவாலான அமைப்புகளுக்கு எதிராகவும், இந்த வரலாற்று சகாப்தத்தில் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள மத்திய பணியான உலக சோசலிச புரட்சி முன்னோக்கின் அடிப்படையில் புதிய பெருந்திரளான மக்கள் அமைப்புகளைக் கட்டமைப்பதற்காக நாம் சிறிதும் விட்டுக்கொடுப்பின்றி போராடி உள்ளோம்.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் ஒரு பிரதான சமூக மற்றும் அரசியல் சக்தியாக மீளெழுந்துள்ளது, இது அமெரிக்க பொதுப்பள்ளி ஆசிரியர்களின் மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள், பிரான்சில் "மஞ்சள் சீருடை" இயக்கம் மற்றும் ஏனைய பிற சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்களில் கடந்தாண்டு ஆரம்பத்தில் சமிக்ஞை காட்டியது. இந்த இயக்கம், போர்த்தோ ரிகோவில் இருந்து ஹாங்காங் வரையில் பெருந்திரளான மக்கள் போராட்டங்கள், அல்ஜீரியா மற்றும் சூடானில் பலமாக வேரோடிய சர்வாதிகாரங்களையே உலுக்கி வரும் சமூக மேலெழுச்சிகள், முன்னேறிய தொழில்துறைமயமான நாடுகளில் அதிகரித்து வரும் வேலைநிறுத்த நடவடிக்கை போக்குடன் சேர்ந்து, இந்தாண்டு அதிவேகமாக வளர்ந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் இந்த மீளெழுச்சியின் மிகவும் நனவுபூர்வமான வெளிப்பாடுதான்உலக சோசலிச வலைத் தளவாசகர் எண்ணிக்கை அதிகரிப்பாகும். உலக சோசலிச வலைத் தளம் உலகளவில் தொழிலாள வர்க்கத்தை கல்வியூட்டுவதிலும் மற்றும் ஒழுங்கமைப்பதிலும் முன்பினும் அதிக நேரடியான பாத்திரம் வகித்து வருகிறது.

கூகுள், பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடக பெருநிறுவனங்கள் 2017 இல் தொடங்கிய நடவடிக்கையின் விளைவாக WSWS ஐ அணுகுவதை மட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மத்தியிலும், WSWS இன் வாசகர் எண்ணிக்கை மாதத்திற்கு ஒரு மில்லியனை எட்டியுள்ளது, பெப்ரவரி மட்டத்தை விட அண்மித்து மூன்று மடங்கு அதிகரித்து ஆகஸ்டில் இது 1.58 மில்லியனை எட்டியது.

தொழில்துறை தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் போராட்டங்கள் மீதான கட்டுரைகள் சமூக ஊடகங்களில் பரந்தளவில் வினியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பாக குறிப்பிடத்தக்கதாகும். இது உலக தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் தீர்க்கமான படை புதிய தலைமையை எதிர்நோக்கி வருகிறது என்பதற்கு ஒரு அறிகுறியாக உள்ளது.

வாசகர் எண்ணிக்கையின் அதிகரித்து வரும் வேகத்திற்கு இணங்க, நாம் காணொளிகள், நேரடி ஒளிபரப்புகள் மற்றும் ஏனைய பன்முக ஊடக வடிவங்களைப் பயன்படுத்தியும் தளத்தின் தொழில்நுட்ப அடித்தளங்களைத் தொடர்ந்து விரிவாக்கி வருகிறோம்.

உலக சோசலிச வலைத் தளத்தின்போராட்டத்தை முன்னெடுக்குமாறும், WSWS கட்டுரைகளை உங்கள் நண்பர்கள், சக வகுப்பறை மாணவ-மாணவிகள் மற்றும் சக தொழிலாளர்களுக்கு பகிர்வதன் மூலமாகவும், அவற்றை அச்செடுத்து வழங்குவதன் மூலமாகவும் இணைய தணிக்கையை முறியடிக்க உதவுமாறும் நாம் நமது வாசகர்களை வலியுறுத்துகிறோம். உங்கள் பகுதிகள் மற்றும் வேலையிட அபிவிருத்திகள் குறித்து அறிக்கைகள் அனுப்புவதன் மூலமாக WSWS இன் செய்தியாளராக ஆகுங்கள்.

உலக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு அரசியல் தயாரிப்பு மற்றும் ஒழுங்கமைப்பு செய்யும் அதன் அதிமுக்கிய பணியை விரிவாக்குவதை சாத்தியமாக்கும் வகையில், WSWS இன் வழமையான ஒரு நிதி ஆதரவாளராக மாறுங்கள்.

Loading