இலங்கை: ஹட்டன் போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் தீயினால் அழிந்த வீடுகளுக்காக புதிய வீடுகளை கோரி போராடுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 7 அன்று, ஹட்டன் ஃபோர்டைஸ் தோட்டத் தொழிலாளர்கள் தீ விபத்தில் அழிந்த வீடுகளுக்காக புதிய வீடுகளைக் கோரி ஒரு போராட்டத்தை நடத்தினர். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காலை 10 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் போடைஸ் டயகம செல்லும் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. பொலிஸ் தோட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவான தீர்வு அளிப்பதாக உறுதியளித்ததை அடுத்து இந்த போராட்டம் நிறுத்தப்பட்டது.

ஏறக்குறைய ஒரு வருடமாக, இந்த உழைக்கும் குடும்பங்கள் நீர், மின்சாரம் மற்றும் சுகாதாரத்திற்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். மழை நாட்களில், கூடாரங்களுக்குள் விஷ பாம்புகளுக்கும் வெள்ள அபாயத்துக்கும் அவர்கள் முகம் கொடுக்கின்றார்கள். இந்த பாதுகாப்பின்மை அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பிள்ளைகளின் கல்வியை பெரிதும் பாதிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது தொடர்பாக தோட்ட அதிகாரிகள், அரசாங்கம் அல்லது தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது இன்னொரு தோட்டத்தில் நான்காவது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 2 அன்று, கொட்டகலை கிறைஸ்லர்ஸ் பார்ம் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட நாற்பது பேர் வீடற்றவர்கள் ஆயினர். நேரில் கண்ட சாட்சிகளின் படி, ஒரு வீடு தீ பற்றி அது ஏனைய வீடுகளுக்கும் பரவியது.

இந்த தீ தொழிலாளர்கள் உடமைகள் உட்பட வீடுகளை முற்றிலுமாக அழித்தது. பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் திருமணச் சான்றிதழ்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களையும், பாடசாலை பிள்ளைகளின் புத்தகங்கள், உடைகள் மற்றும் சீருடைகள் போன்றவற்றையும் தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.

எரிந்துபோன ஏனைய வீடுகளைப் போலவே, கிறைஸ்லர்ஸ் பார்ம் சம்பவத்தைப் பற்றியும் முறையான விசாரணைகள் செய்யப்படவில்லை. இந்த தோட்டங்களில் தீயணைப்பு பிரிவு இல்லை. அவ்வாறு இருந்தாலும் கூட ஒழுங்கான பாதைகள் இல்லாமையால் லயன் அறைகளுக்குச் செல்வது எளிதல்ல. தீ விபத்தின் போது பயன்படுத்த தீயை அணைக்கும் கருவிகள், நீர் கொள்கலன்கள் அல்லது நீர் ஆதாரங்கள் பயன்படுத்த எந்தவிதமான சாத்தியங்களும் இங்கு இல்லை.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஆர்.இராமநாயகம் பின்வருமாறு விளக்கினார்:“மாலை 4.30மணியளவில் தீ பற்றியது. மற்ற தொழிலாளர்களின் உதவியுடன் மக்களை காப்பாற்றக் கூடியதாகவிருந்தது. இது இரவாக இருந்திருந்தால், இதைவிட மோசமான சேதமாக இருந்திருக்கும். எமது கடின உழைப்பால் வாங்கிய டிவி, உடைகள், சமையல் உபகரணங்கள் மற்றும் எஞ்சிய அனைத்தையும் நாங்கள் இழந்துவிட்டோம். எங்கள் சம்பளம் உணவுக்கே போதுமானதாக இல்லை. நாம் இழந்ததை எவ்வாறு திரும்பப் பெறுவது?”

பி. சிவராஜா பாதிப்புக்கு உள்ளான மற்றொரு தொழிலாளி. அவர் கூறியதாவது: “சிலர் எங்களுக்கு உணவைக் கொடுத்தார்கள். தூங்கும் மெத்தைகளை தந்து உதவினார்கள். ஆனால் ஒவ்வொரு குடும்பமும் கிட்டத்தட்ட 300,000 ரூபாவுக்கு அதிகமாக எல்லாவற்றையும் இழந்துள்ளன. அவை நாங்கள் நீண்ட காலமாக சம்பாதித்து சேகரித்தவை எமக்கு பாரிய இழப்பு. அரசாங்கமோ தொழிற்சங்கங்களோ எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்பவில்லை. பல தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் லயன் அமைப்புதான். ஆனால் யாரும் கவனம் செலுத்துவதில்லை.”

இவ்வாறு அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்கள் தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி துளி கூட அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றன. தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தூர்ந்த பாழடைந்த நிலையிலான லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். இந்த தீ விபத்துகளுக்கு முக்கிய காரணம், வரிசையான லயன் அமைப்பு முறையே ஆகும். தோட்ட லயங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட சீரான மின் இணைப்புகள் இல்லை. தோட்ட உரிமையாளர்கள் லயன் அறைகளுக்கு மின்சாரவசதி செய்து கொடுக்காமையினால் அவற்றையும் தொழிலாளர்களே தமது செலவில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பாழடைந்த அறைகளின் சீலிங்குகளுக்கு பெரும்பாலும் உரப் பைகள் போன்ற எரியக்கூடிய பொருட்கள பயன்படுத்தப்படுகிறது. குறைந்த அளவு இடம் இருப்பதால், அவர்கள் வீட்டிலும் விறகுகளை அங்கு சேமித்துக்கொள்கின்றனர். மேலும், மழை மற்றும் குளிர்ந்த காலநிலையில் விறகுகளை வெளியில் சேமிக்க முடியாது. எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தானது. இந்த லயன் அறைகளை கூறைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மரங்கள் எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவை. ஒரு தீப்பொறி வெடிக்கும்போது சேமித்திருக்கும் விறகுகளில் தீ பற்றிகொள்ள்கின்றன.

தீ விபத்தில் இடம்பெயர்ந்த சிறு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட நாற்பது பேர் பழைய பணியாளர் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களில் புதிய வீடுகள் கட்டுவதை கைவிட்டுள்ளதால் இந்த தொழிலாளர்கள் இடத்திற்கு இடம் மாற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

* டிசம்பரில், ஃபோர்டைஸ் தோட்டத்தின் தீ விபத்துக்குள்ளான அறைகளில் இருந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் இடம்பெயர்ந்தனர். அவர்கள் பல நாட்கள் தோட்ட மருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தோட்ட மைதானத்தில் தற்காலிக கொட்டகைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த இடம் இரண்டு ஆறுகளால் சூழப்பட்டுள்ளது, அந்த குடும்பங்கள் கடினமான சூழ்நிலையில் வாழ்கின்றன. இந்த 10x10 அறைகள் மழையால் சேறு நிரம்பி வழிகின்றன. தொழிலாளர் குடும்பங்கள் கடந்த பத்து மாதங்களாக இந்த தற்காலிக கொட்டகைகளில் வசித்து வருகின்றன.

* ஜனவரி 29, ரொப்ஹில் தோட்டத்தின் வானக்காடு பிரிவில் 12 லயன் அறைகள் தீவிபத்தால் அழிக்கப்பட்டன. 21 சிறுவர்கள் உட்பட குறைந்தது 66 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் ஒரு இந்து கோவிலில் தஞ்சமடையத் தள்ளப்பட்டனர். பின்னர் இவர்கள் ஒரு சிறிய திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அவர்கள் இன்னும் அதே மண்டபத்திலேயே வசிக்கிறார்கள்.

* ஹட்டனில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள ஹோலிரூட் தோட்டத்தில் 24 குடும்பங்கள் தீ விபத்தில் சிக்கின. குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட நூறு பேர் இடம்பெயர்ந்தனர். அவர்கள் முதலில் ஒரு சிறிய கலாச்சார மையத்திலும் பின்னர் ஒரு திருமண வரவேற்புப் பகுதியிலும் வைக்கப்பட்டனர்.

ஃபோடைஸ் தோட்டத்தின் தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு தாங்கள் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகளை விளக்கினர். “குழந்தைகள் ஒவ்வொரு நாளும் நோய்வாய்ப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு படிக்க வழி இல்லை. தரையில் சிமென்ட் இல்லாததால் தரையில் தூங்குவது மிகவும் கடினம். எங்களுக்கு தூக்கம் இல்லை. ஒரு தனியார் வாடகை வீட்டிற்கு, ஒரு குடும்பம் ரூ. 800 மாதாந்தம் செலுத்தவேண்டும். இது தீக்கு முன் மின்சார கட்டனத்திற்காக நாங்கள் செலுத்திய தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.

"இந்த பகுதியில் வசிக்கின்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர்களால் எமக்கு தண்ணீர் வசதி செய்துத்தரப்பட்டது. எங்கள் வீட்டுத் திட்டத்திற்கு பொருத்தமான நிலம் ஒதுக்கப்படுவதைத் தடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தேசிய தொழிலாளர் சங்கமும் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. இப்போது தோட்டத்தின் நிர்வாகம் வீட்டுவசதிக்கு வேறு பகுதியை ஒதுக்கியுள்ளது. அங்கிருந்து பாடசாலைக்கு அல்லது வேறு எங்கும் செல்வது கடினம். அருகில் ஒரு நதி பாய்கிறது. அது அலறுவது போல் தெரிகிறது. சிறியவர்கள் பயப்படுகிறார்கள். அங்கு வீடுகள் கட்ட நாங்கள் உடன்படவில்லை. தோட்டத்தில் வீடுகள் கட்ட ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால் நிர்வாகம் அவற்றைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு தொழிற்சங்கமும் அதன் உறுப்பினர் கட்டணத்தை அதிகரிக்கிறது. ஆனால் அவர்கள் எங்களுக்காக போராடுவதில்லை. தொழிலாளர்களை பிளவுபடுத்தவே தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன,” என்று ஒரு தொழிலாளி கூறினார்.

ஒரு இளம் தாயான எம்.சங்கீதா கூறியதாவது: “எங்கள் பெற்றோர்களும் மூதாதையர்களும் இந்த தோட்டங்களில் வேலை செய்தனர். கம்பனிகள் எங்களிடமிருந்து பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டுகின்றன, ஆனால் வீடு கட்டுவதற்கு பொருத்தமான எந்த நிலத்தையும் கொடுக்க அவை தயாராக இல்லை. எங்களுடைய உடமைகள் அனைத்தும் நெருப்பால் அழிக்கப்பட்டன. அரசாங்கமும் தோட்ட அதிகாரிகளும் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் எங்களை கைவிட்டுள்ளன.”

Loading