இந்தியாவில் மாவோயிச தொழிற்சங்க தலைவர்கள் மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து தனிமைப்படுத்துகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் (Motherson Automotive Technologies & Engineering - MATE) நிறுவனத்தின் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் நடத்தப்படும் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமானது இப்போது மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. அந்த ஆலையில் தொழிலாளர்கள் புதிதாக ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி அதை அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU) உடன் இணைத்தனர், இந்நிலையில் AICCTU அப்போராட்டத்தை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதர்சன் தொழிற்சாலையில் பணிபுரியும் 1500 ஒப்பந்த தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் போராட்டத்திற்கு அழைப்பதற்கு AICCTU தலைவர்கள் மறுக்கிறார்கள். இது நிறுவனத்தின் “வழக்கம் போல் வேலைகள் தொடர்வதை” அனுமதிக்கிறது, மேலும் மற்ற மாநிலங்களிலிருந்து புதிய தற்காலிக தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளது.

AICCTU இன் தனிமைப்படுத்தலால் தைரியம் அடைந்த MATE நிர்வாகம் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை வேட்டையாடுவதை தீவிரப்படுத்தி வருகிறது, ஆகஸ்ட் 26 அன்று வேலைநிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 44 தொழிலாளர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) — விடுதலை [சிபிஐ (எம்எல்) - விடுதலை] அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் AICCTU இருக்கிறது. வேலைநிறுத்தம் செய்யும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஸ்ரீபெரும்புதூர் தொழில்துறை மண்டலத்திலும், இந்தியாவின் பிற இடங்களிலும் உள்ள மற்ற வாகனத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுவது என்பது ஒருபுறம் இருக்க, மதர்சன் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மற்றும் பயிற்சியாளர்களையும் அணிதிரட்ட மறுப்பதுதானது தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கான MATE இன் முயற்சிகளுக்கு உறுதுணையாக செயல்படுவதாக உள்ளது.

ஊதிய உயர்வுக்காகவும், கடுமையான வேலை நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் மற்றும் நிர்வாகத்தால் தொழிலாளர்களை தகாதவார்த்தைகளால் இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்குமாக போராட MATE இன் நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களுக்கான செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் எனும் தொழிற்சங்கத்தை அமைத்தார்கள். ஆனால் AICCTU தவறாக வழிநடத்தி சென்று மேலும் நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும், பழிவாங்கல்களையும் எதிர்கொள்வதற்காக புதிய தொழிற்சங்கம் அதில் இணையவில்லை.

உலக மந்தநிலையின் ஒரு பகுதியாக, மோசமடைந்து வரும் வாகனத் துறையில் இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. செப்டம்பர் மாதத்திற்கான சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (SIAM) புள்ளிவிபரங்களின்படி, பயணிகள் வாகன (passenger vehicle) விற்பனை 23.69 சதவீதமும், வர்த்தக வாகன (commercial vehicle) விற்பனை 62.11 சதவீதமும் சரிந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் சில மாடல்களில் அதன் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள குர்கிராம் (Gurugram) மற்றும் மானேசர் (Manesar) ஆலைகளில் முதல் முறையாக இரண்டு நாட்களுக்கு உற்பத்தியை ஒரே நேரத்தில் நிறுத்தியுள்ளது.

ஆழ்ந்த சரிவு காரணமாக வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிப்பாளர்கள் உற்பத்தியைக் குறைத்து தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. "இந்தப் போக்கு தொடர்ந்தால் 1 மில்லியன் (பத்து லட்சம்) மக்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்." என்று தானியங்கி உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) தலைவர் ராம் வெங்கடரமணி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொழில்துறையின் வளர்ந்து வரும் நெருக்கடியின் சுமையை, தொழிலாளர்களை கடுமையான சுரண்டல் நிலைமைகளுக்கு உட்படுத்துவதன் மூலம், தொழிலாளர்கள் மீது சுமத்த மதர்சன் நிர்வாகம் முயற்சிக்கின்றது.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால், வேலைநிறுத்தம் தொடங்கும் போது வைத்த அனைத்து முக்கிய கோரிக்கைகளையும் கைவிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர AICCTU முயற்சிக்கிறது. எவ்வாறாயினும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் எந்த நிபந்தனையும் இன்றி வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு கூறுவதில் MATE நிர்வாகம் பிடிவாதமாகவும் திமிராகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற AICCTU இன் ஒரே ஒரு கோரிக்கையையும் அது நிராகரிக்கிறது. பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களிடமும் விசாரணைகள் நடத்தப்படும் என்று அது வலியுறுத்துகிறது.

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் வாகனத் தொழிலாளர்களிடம் ஆதரவு கோரி அழைப்பு விடாது, ஆனால் வலதுசாரி அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடம் முறையிடக்கோரி AICCTU வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்ளை வழிநடத்துகிறது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் கோப உணர்வுகளை தணிய வைப்பதற்காக பட்டினிப் போராட்டம் போன்ற பயனற்ற எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடும்படி அது அழைப்பு விடுக்கிறது. மாவட்ட தலைநகரான காஞ்சீபுரத்தில் அக்டோபர் 18 அன்று AICCTU அழைப்பு விடுத்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் இத்தகைய வெற்று மற்றும் திசைதிருப்பும் போராட்டங்கள் மீது நம்பிக்கையில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

அக்டோபர் 18 பட்டினிப் போராட்டத்தின் போதும் மற்றும் செப்டம்பர் 13 ம் தேதி ஸ்ரீபெரம்புதூரில் நடந்த ஒரு எதிர்ப்பு பேரணியின்போதும், தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதும் AICCTU தேசியத் தலைவர் எஸ்.குமாரசாமி மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மற்றும் அதிமுக தலைமையிலான மாநில அரசாங்கம் குறித்து வாய்வீச்சு விமர்சனங்களை முன்வைத்தார். இந்திய நீதிமன்றங்களும் தொழிலாளர் ஆணையாளரும் கூட முதலாளிகளின் பக்கத்தை எடுத்துக்கொள்வதாகவும், தொழிலாளர்களின் அவலநிலை குறித்து அலட்சியமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவர்களை நம்பக்கூடாது என்று அவர் இடிந்தார். ஆயினும் அடுத்த மூச்சிலேயே அவர் அதே அதிகாரிகளிடம் முறையிடுவதற்கான ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்தார்.

AICCTU இன் கொள்கைகள் மாவோயிச சிபிஐ-எம்எல்-விடுதலையின் பிற்போக்கு அரசியலில் இருந்து வருகின்றன. சிபிஐ-எம்எல்-விடுதலை இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றுடன் கூட்டணியில் உள்ளது - இது பெருவணிக திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியை உருவாக்கியது. சமீபத்திய இந்திய நாடாளுமன்றத் தேர்தலில். சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை வழங்கிய அரசியல் ஆதரவிற்காக பிராந்திய வகுப்புவாத திமுகவிடம் இருந்து முறையே 100 மில்லியன் (10 கோடி) ரூபாயும் 150 மில்லியன் (15 கோடி) ரூபாயும் பெற்றன.

சிபிஎம், சிபிஐ மற்றும் சிபிஐ-எம்எல்-விடுதலை ஆகிய மூன்று ஸ்ராலினிச கட்சிகளும், 2019 தேசியத் தேர்தல்களில், நீண்ட காலமாக இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருந்தன.

சிபிஐ-எம்.எல்-விடுதலை மற்றும் AICCTU ஆகியவவை மேலும் வலதுபுறமாக தமிழ் தேசியவாதத்திற்கு திரும்புவது சமீபத்திய உண்ணாவிரதத்தின் முடிவில் கோஷமிடப்பட்ட முழக்கங்களில் வெளிப்பட்டது. "AICCTU க்கு வெற்றி" மற்றும் "இன்குலாப் ஜிந்தாபாத்" (புரட்சி நீடூழி வாழ்க) போன்ற தீவிரமான முழக்கங்களை கைவிட்டு, தமிழகத்தை தளமாகக் கொண்ட பிராந்தியவாத கட்சிகளின் பொதுவான முழக்கமான "வெல்க தமிழ்" என்று AICCTU தலைவர்கள் முழக்கமிட்டனர். அந்த முழக்கங்கள் மூலம், AICCTU தலைவர்கள் பிற்போக்குத்தனமான இன-வகுப்புவாத வழிகளில் தொழிலாளர்களைப் பிரிக்கவும், தமிழக பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுடன் அணி சேரவும் செயல்படுகிறார்கள்.

AICCTU தலைவர்கள், ஸ்ராலினிச சிபிஎம் இன் தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தை (CITU) தொழிலாளர் உரிமைகளுக்கான "போராளிகள்" என்று பாராட்டுகின்றனர். கடந்த டிசம்பரில் யமஹா வாகனத் தொழிலாளர்களின் போராட்டம் உட்பட வேலைநிறுத்தங்களைக் காட்டிக் கொடுத்தது குறித்து சிஐடியு நீண்ட பதிவுகளைக் கொண்டுள்ளது. CITU யமஹா நிர்வாகத்துடன் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதில் "தொழில்துறை அமைதி" க்கு உறுதியளித்தது மற்றும் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களைத் தடுத்தது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பிடாடியில் உள்ள மதர்சன் ஆலையில் CITU உடன் இணைந்த தொழிற்சங்கங்களின் ஏமாற்றும் “ஒற்றுமை நிகழ்ச்சி” ஒன்றை AICCTU தலைவர்கள் ஏற்பாடு செய்தனர். CITU இணைக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அக்டோபர் 4ம் தேதி மதர்சன் வேலைநிறுத்தக்காரர்களை சந்தித்தனர். அங்கு அவர்கள் வேலைநிறுத்த நிதிக்கு 5,000 ரூபாய் நன்கொடை அளித்தனர் மற்றும் வாய்மொழி "ஆதரவை" அறிவித்தனர். ஆனால் வேலைநிறுத்தம் செய்யும் ஸ்ரீபெரம்புதூர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தொழில்துறை நடவடிக்கையிலும் கர்நாடக மதர்சன் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிரான MATE தாக்குதல் மீண்டும் அனைத்து தொழிலாளர்களின் ஐக்கிய போராட்டங்களை பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தையும், தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்துவதில் AICCTU மற்றும் CITU மற்றும் பிற தொழிற்சங்கங்களின் துரோகத்திற்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் அவசியத்தையும் காட்டுகிறது.

WSWS ஆதரவாளர்கள் மதர்சன் வேலைநிறுத்தம் குறித்த சமீபத்திய WSWS கட்டுரைகளின் நகல்களை சென்னை பகுதியில் உள்ள நிறுவனத்தின் பிற ஆலைகளில் விநியோகித்துள்ளனர். அவர்கள் ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒரு பிரிவினரையும் சந்தித்து வேலைநிறுத்தத்தால் எழுப்பப்பட்ட அரசியல் பிரச்சினைகள் மற்றும் WSWS ஆல் பரிந்துரைக்கப்பட்ட மாற்று சோசலிச திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர். வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை அறிவிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், அதே வேளையில், தொழிற்சங்கம் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு முறையிடவில்லை என்று புகார் கூறினர். அவர்களின் பாதிக்கப்படக்கூடிய வேலை நிலைமை இருந்தபோதிலும், நல்ல ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளுக்காக அனைத்து தொழிலாளர்களின் ஐக்கிய போராட்டங்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் WSWS விடுக்கும் அழைப்பை அவர்கள் வரவேற்றனர்.

Loading