பார்சிலோனாவில் கட்டலான் தேசியவாதிகளின் சிறையடைப்புக்கு எதிராக பாரிய பேரணி

மொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 10 ஸ்பானிய பொதுத் தேர்தல்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, ஒன்பது கட்டலான் அரசியல்வாதிகள் மற்றும் செயலாற்றுபவர்கள் மீதான ஜோடிப்பு வழக்கின் பேரில் அவர்களுக்கு 9 முதல் 13 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமாக சனிக்கிழமை மாலை பார்சிலோனாவில் நூறாயிரக்கணக்கானவர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

பிரிவினைவாத சார்பு ஆம்னியம் கலாச்சார மற்றும் கட்டலான் தேசிய சட்டமன்ற அமைப்புக்கள் அழைப்பு விடுத்து, கட்டலோனியாவுக்காக ஒன்றிணைவோம் (JxCAT), கட்டலான் குடியரசு இடது (ERC) மற்றும் ஜனரஞ்சக ஐக்கிய வேட்பாளர்கள் (CUP) ஆகிய கட்டலான் பிரிவினைவாத கட்சிகளின் ஆதரவுடன் நடந்த பேரணியில் 350,000 பேர் இணைந்து கொண்டனர் என சோசலிஸ்ட் கட்சி காபாந்து அரசாங்கத்தின் பொலிஸ் குறைத்து மதிப்பிட்டது. பேரணியின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொலிசார் தெரிவித்த 750,000 பேருக்கு ஒத்ததாக இருந்தது.

குடிமக்கள் கட்சி மற்றும் ஜனரஞ்சக கட்சி (PP) முதல் போலி-இடது பொடேமோஸ் கட்சி வரையிலான ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் ஸ்பானிய தேசிய மற்றும் கட்டலான் பிராந்திய பொலிஸ் முந்தைய ஆர்ப்பாட்டங்களை நசுக்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் “சுதந்திரம்!” என்ற ஒரே முழக்கத்துடன் அணிவகுத்துச் சென்றனர். அமைதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கட்டலான் தேசியவாதிகளுக்கு எதிராக கடும் தண்டனைகளை விதித்துள்ள இந்த தீர்ப்பு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துவதுடன், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோரை அதை எதிர்த்து அணிவகுக்கச் செய்கிறது. இந்த தீர்ப்புக்குப் பின்னர், இரண்டே வாரங்களில் இதுவரை 2,000 க்கு அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த மோதல்களினால் 700 க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதுடன், கைது செய்யப்பட்ட 200 ஆர்ப்பாட்டக்காரர்களில் 31 பேர் பிணையற்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும், பொலிஸின் இரப்பர் தோட்டா சூட்டில் நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்வையை இழந்துள்ளனர்.

பொலிசார் உடனான வன்முறையான தாக்குதல்களுடன் சனிக்கிழமை இரவு முடிந்தது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், குடியரசின் பாதுகாப்பிற்கான பிரிவினைவாதக் குழுக்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அழைப்புவிடுத்த ஆர்ப்பாட்டத்தில் 10,000 க்கு அதிகமானோர் ஒன்றுதிரண்டனர். அவர்கள் அணிவகுத்துச் செல்கையில், முழு கலக முனைப்பு கொண்ட நூற்றுக்கணக்கான பொலிசார்களை எதிர்கொண்டனர். Mossos d’Esquadra என்ற கட்டலான் பிராந்திய பொலிஸ், ஆத்திரமூட்டும் வகையில் கூட்டத்தினர் ஊடாக கலக எதிர்ப்பு வேன்களை ஓட்டிச் சென்றபோது அங்கு பதட்டங்கள் வெடித்தன. இந்த தூண்டப்பட்ட மோதல்களில் 46 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

La Vanguardia நாளிதழுக்கு பேசுகையில், Mossos பொலிஸ் படையை நடத்தும் கட்டலான் உள்துறை அமைச்சரான கட்டலான் தேசியவாதி மிக்கேல் புச், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை பாதுகாத்தார். PSOE தலைமையிலான தேசிய பொலிஸூடன் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை Mossos அடக்கியதை கட்டலான் நாட்டுப்பற்று (Catalan patriotism) என்று சித்தரித்து, புச், “தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் [மாட்ரிட்] Mossos இன் கட்டுப்பாட்டை பறிக்க அவர் அனுமதிக்க மாட்டார்” என்றும், “பொது சட்ட வேலை பலரை தொந்தரவு செய்கிறது, ஆனால் சுய-அரசாங்கம் என்பது பொலிஸூக்காக அரசியல் பொறுப்பை விருப்பத்துடன் ஏற்க தயாராக இருப்பதாகும்” என்றும் தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு சற்று கூடுதலான காலத்திற்குள்ளாக நூறாயிரக்கணக்கானோர் இரண்டு முறை அணிவகுத்துள்ளனர். வெறும் ஒன்பது நாட்களுக்கு முன்னர், பார்சிலோனா வழியாக அரை மில்லியனுக்கு அதிகமானோர் அணிவகுத்துச் சென்ற அதேவேளையில், பல தொழில்துறைகளில் நடந்த வேலைநிறுத்தங்கள் கட்டலோனியாவை முடக்கியது.

ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசுக்கு எதிராக வளர்ந்து வரும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு இயக்கம் அபிவிருத்தி கண்டு வருகிறது. பல அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளின் படி, இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரிவினைவாதத்திற்கு எதிரான பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்களை ஈர்க்கின்றன என்றாலும், இவர்கள் முதன்மையாக மாட்ரிட்டின் சிக்கனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் குறித்து சீற்றமடைகிறார்கள்.

சனிக்கிழமை La Vanguardia நாளிதழில், கல்வியாளர் மானுவல் காஸ்டெல்ஸ் இவ்வாறு எழுதினார்: “பார்சிலோனா பற்றி எரிகிறது. என்றாலும் சிலியில் சாண்டியாகோ, மற்றும் ஹாங் காங், மற்றும் குயிட்டோ, மற்றும் தற்போது வரை சமீபத்தில் பாரிஸ் கூட பற்றி எரிகிறது […] இதற்கான காரணங்கள் தான் வேறுபட்டவை, ஆனால் வகுக்கப்பட்ட ஒழுங்கை எதிர்கொள்ளும் அமைதியான இயக்கத்தின் எதிர்வினைகளும் மாற்றங்களும் மிகவும் ஒத்தவையாக உள்ளன. இங்கு, “தரவரிசைகளை அரசு நெருக்கமாக கொண்டு வந்து, கலகப் பிரிவு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மூலமாக பதிலிறுத்தது” என்பது “பொதுவான விடயம்” என்று தெரிவித்தார்.

கட்டலான் தேசியவாதிகள் மீதான இந்த ஜோடிப்பு வழக்கு, “பிரிவினைவாதிகள் அல்லாதவர்கள் உட்பட, கட்டலான் மக்களின் பெரும்பான்மையினரை சீற்றப்படுத்தியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். “ஸ்பெயின் அரசால் மட்டுமல்லாது, பிரிவினைவாத தலைவர்களாலும் காட்டிக்கொடுக்கப்பட்டதாக அரசியல் விரக்தியடைந்த ஒரு முழு தலைமுறையினர் உணர்கின்றனர்” என்று எச்சரித்து அவர் நிறைவு செய்தார்.

கட்டலோனிய எதிர்ப்புக்களுக்கு வெறித்தனமான விரோதத்துடன் இருந்து வரும், (PSOE) சார்பு நாளிதழ் El Pais, ஆர்ப்பாட்டங்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறையை “பொது ஒழுங்கு” பிரச்சினையாக பாதுகாக்கிறது, இருப்பினும் அது பொலிசாரை எதிர்த்து போராடும் இளைஞர்கள் “தீர்ப்பால் அணிதிரட்டப்பட்டனர், ஆனால் அவர்களின் காரணங்கள் பிரிவினைவாதத்திற்கு அப்பாற்பட்டவை” என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. அது ஐந்து இளம் ஆர்ப்பாட்டக்காரர்களை பேட்டி கண்டது, இவர்கள் அனைவரும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள், பொலிஸ் அரசு அடக்குமுறை, மற்றும் அவர்களது ஸ்திரமற்ற வேலைகள் மற்றும் சமூக நிலைமைகள் குறித்து கண்டனம் செய்தனர்.

இந்த எழுச்சி பெற்றுவரும் எதிர்ப்பு, கட்டலான் தேசியவாதிகளுக்கு எதிராகவும் திரும்புகின்ற நிலையில், ஆர்ப்பாட்டங்களை தனிமைப்படுத்த தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. சமூக ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் (UGT) மற்றும் ஸ்ராலினிச தொழிலாளர் ஆணையங்கள் (CCOO) ஆகிய ஸ்பெயினின் இரண்டு பெரும் தொழிற்சங்கங்கள் கடந்த வாரம், அணிவகுப்பில் பங்கேற்க மறுத்துவிட்டன; கட்டலான் UGT, தனது உறுப்பினர்களை அணிவகுப்பில் பங்கேற்க அழைக்கும், என்றாலும் அது அதன் பதாகையின் கீழ் பங்கேற்காது என்று தெரிவித்தது.

ஞாயிறன்று, வலதுசாரி பிரிவினைவாத எதிர்ப்பு கட்டலான் சிவில் சொசைட்டி (CCS) அமைப்பு, கட்டலான் தேசியவாதத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பொலிஸை பொறுத்தவரை, இது 80,000 ஆர்ப்பாட்டக்காரர்களை மட்டுமே அணிதிரட்டியது.

மாட்ரிட்டை தளமாகக் கொண்ட ஊடகங்களின் முழு ஆதரவைப் பெற்ற, CCS ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற PSOE அரசாங்க அமைச்சர்கள், PP இன் தலைவர்கள், குடிமக்கள் மற்றும் அதிவலது Vox கட்சியுடன் அணிவகுத்தனர். பார்சிலோனாவில் Via Laitena பொதுப் பாதையில் உள்ள பொலிஸ் தலைமையகம் முன்பாக அவர்கள் அணிவகுத்து நின்றபோது, அணிவகுப்பாளர்கள் பொலிஸுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கட்டலான் தேசியவாதிகளின் பிரிவினைவாத கிளர்ச்சியுடன் சேர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய பெரும் விரக்தியின் காரணமாக, CCS அதன் ஆர்ப்பாட்டங்களுக்கு 450,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் வரை அணிதிரட்ட முடிந்தது. ஆயினும், இந்த ஆண்டு அதன் அணிவகுப்பு பொலிஸ் அடக்குமுறை மற்றும் அரசியல் கைதிகளை சிறையிலடைப்பது குறித்து அதையொத்த ஆதரவைப் பெறத் தவறிவிட்டது. கட்டலான் தேசியவாதத்திற்கு விரோதமான மற்றும் நேட்டோ சார்பு கட்டலான் முதலாளித்துவ சிறு-அரசு உருவாக்கப்படுவதை எதிர்க்கும் மக்கள்தொகை பிரிவினர், இப்போது PSOE ஐ ஆதரிக்க மறுக்கின்றனர் என்பது தெளிவான மற்றொரு குறிகாட்டியாக உள்ளது.

பாசிச Vox கட்சியுடன் சேர்ந்து ஒருபுறமாக அணிவகுப்பதற்கான சமூக ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) முடிவு ஒரு எச்சரிக்கையாக உள்ளது. இது வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியை எதிர்கொண்டு, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் ஒரு பாசிச திசையில் திரும்புகிறது என்பது மற்றொரு உறுதிப்படுத்தல் ஆகும். உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்த படி, ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த சக்திகள், உத்தியோகபூர்வ அரசியலை வலதிற்கு மாற்ற - சிக்கன சார்பு கட்டலான் தேசியவாத கட்சிகளால் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான மற்றும், மாட்ரிட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அவர்களது நிதி உறவுகள் தொடர்பாக சிறந்த விதிமுறைகளை வகுக்க முனைவதற்கான ஒரு சூழ்ச்சியாக - 2017 கட்டலான் சுதந்திர வாக்கெடுப்பை பிடித்து தொங்கின.

சோசலிஸ்ட் கட்சி (PSOE), கட்டலான் வாக்கெடுப்பு மீதான அதன் 2017 அடக்குமுறையில் PP கட்சியின் சிறுபான்மை அரசாங்க ஆதரவுடன் முதலில் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. பொடேமோஸின் நாடாளுமன்ற சூழ்ச்சியால் சென்ற ஆண்டு ஆட்சியில் அமர்த்தப்பட்ட PSOE, கட்டலான் தேசியவாதிகள் மீதான ஜோடிப்பு வழக்கு விசாரணையையும் மற்றும் ஸ்பானிய பேரினவாதம் ஊக்குவிக்கப்படுவதையும் மேற்பார்வையிட்ட போது, PP இன் சிக்கன மற்றும் இராணுவக் கொள்கைகளை அது பின்பற்றியது. இந்த ஆண்டு PSOE அடக்குமுறையை அதிகரித்தது, மோசடி பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கட்டலான் செயலாற்றுபவர்களை கைது செய்தது, மேலும் அதன் பிற்போக்குத்தனமான தீர்ப்பிற்கு இருக்கும் எதிர்ப்பை நசுக்குவதற்காக ஆயிரக்கணக்கான பொலிஸை கட்டலோனியாவுக்கு அனுப்பியது.

அடக்குமுறைக்கு சவால் செய்யாமல் PSOE தொடருமானால், எல்லாவற்றிற்கும் மேலாக பொடேமோஸின் பிற்போக்குத்தன பாத்திரத்திற்கு இது காரணமாகும். அதன் பொது செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் PSOE க்கு தனது விசுவாசத்தை காட்ட உறுதிபூண்டதோடு, கட்டலான் ஜோடிப்பு வழக்கின் தீர்ப்பை ஏற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நேற்று, பொடேமோஸ் அமைப்பின் செயலாளர் பப்லோ எச்செனிக், “இந்த பிரச்சாரத்திற்கு ஒத்தூதும் கட்சியாக பொடேமோஸ் உள்ளது” என்று இழிவான முறையில் கூறினார். “[PP தலைவர் பப்லோ] காசாடோ மற்றும் [குடிமக்கள் கட்சித் தலைவர் ஆல்பர்ட்] ரிவேராவின் அடக்குமுறையை” அல்லது பொடேமோஸால் மேம்படுத்தப்பட்ட முயற்சியாக அவர் கூறும் “பேச்சுவார்த்தை”க்கான அழைப்பை தேர்வு செய்யுமாறு சோசலிஸ்ட் கட்சி பிரதமர் பெட்ரோ சான்சேஸை வற்புறுத்தினார்.

இந்த பிரச்சாரத்தின் மிகப்பெரிய பயனாளியாக Vox உள்ளது, அதன் தலைவரான சாண்டியாகோ அபாஸ்கலுக்கு முழுமையாக ஊடக பிராச்சாரத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. El Espanol இணைய செய்தியிதழ் வெளியிட்ட நேற்றைய தேர்தல் கருத்துக் கணிப்பின் படி, பொதுத் தேர்தல்கள் இன்று நடத்தப்பட்டால் கூட, கடந்த ஏப்ரல் மாதத்தை காட்டிலும் ஆறு ஆசனங்கள் மட்டும் குறைவாக 117 ஆசனங்களை PSOE வெல்லும். PP கட்சி 66 இல் இருந்து 101 ஆக உயர்ந்து அதிகப்படியான ஆசனங்களை வெல்லும். Vox, அதன் மிகச்சிறந்த முடிவை எட்டும் வகையில் 38 பிரதிநிதிகளுடன் மூன்றாவது இடத்தை பிடிக்கும், இது ஏப்ரல் மாதத்தை விட 14 கூடுதல் ஆசனங்களைக் கொண்டதாகும்.

Loading