இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் வழக்கறிஞராக செயற்படுவதை தடை செய்ய இராணுவம் தலையிடுகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பொறுப்பாளரும் மனித உரிமை வழக்கறிஞருமான குமாரவடிவேல் குருபரன், சட்டத்தரணியாக தொழில் புரிவதை இரத்து செய்வதற்காக, இராணுவத்தின் தலையீட்டின் அடிப்படையில், அந்த பல்கலைக்கழக நிர்வாக குழு அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்துள்ளது.

இராணுவத் தலைவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவில் புகார் செய்ததை அடுத்து, ஆணைக்குழுவானது சட்டக் கோவையில் விரிவுரையாளர்களுக்கு உள்ள உரிமைகளைக் கூட மீறி, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக சபையானது, தனிப்பட்ட வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு குருபரனுக்கு கடந்த மாத தொடக்கத்தில் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் கை மேலோங்கி இயங்குவதையே இந்த சம்பவம் காட்டுகின்றது.

குறிப்பாக, யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள நாவற்குளியில் நடந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக ஆட்கொணர்வு மனு வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்காக குருபரன் ஆஜரானதை அடுத்தே, இராணுவத்தால் இந்த வேட்டையாடல் தூண்டிவிடப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு, போரின் போது நாவற்குளியில் இரண்டு டசின் தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை சம்பந்தமானதே இந்த வழக்கு ஆகும். அந்த நேரத்தில் அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த, இராணுவ தலைமையகத்தின் முன்னாள் இயக்குனர் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பட்டிவலான, இந்த காணாமல் போன சம்பவத்திற்கு நேரடியாக பொறுப்பு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கெப்பட்டிவலான சார்பாக அரச சட்டமா அதிபர் முன்நிலை ஆவதை மனுதாரர்கள் எதிர்த்தனர். எனினும், யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் அந்த ஆட்சேபனையை நிராகரித்தது. ஒரு மனுதாரரின் வழக்கறிஞராகவும், தமிழ் மக்கள் பேரவையின் பேச்சாளராகவும் ஊடகங்களுக்கு பேசிய குருபரன், குறித்த அதிகாரி பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதற்கான பலமான தகவல்கள் இருந்தபோதும், அவருக்காக தான் முன்நிலையாவது பொருத்தமானது என சட்டமா அதிபர் கருதுவதானது "மிகவும் வருந்தத்தக்கது" என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1 அன்று, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவில் உடையில் இருந்த இராணுவ சிப்பாய்களாக இருக்கக் கூடியவர்கள், தமிழ் வழக்கறிஞர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்குப் பின்னர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் மூன்று அதிகாரிகள், செயற்பாடுகளை பரிசோதிப்பதற்காக எனக் கூறிக்கொண்டு, அடையாளம் கொள்கை ஆய்வுக்கான மையம் என்ற குருபரனின் அரசுசாரா அமைப்பின் அலுவலகத்துக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், மூத்த விரிவுரையாளரும் சட்டபீடத்தின் தலைவருமான குருபரன், ஒரு சட்டத்தரணியாக செயற்படுவது பற்றி கேள்வி எழுப்பி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இராணுவம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதையடுத்து, குருபரன் சட்டத்தரணியாக செயல்படுவதைத் தடுக்க தீர்மானம் எடுக்குமாறு கோரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அறிவித்துள்ளது. நவம்பர் 9 அன்று, ஆணைக்குழுவின் உத்தரவைப் பின்பற்றுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குருபரனின் தனிப்பட்ட சட்டத் தொழிலுக்கு எதிராக ஆணைக்குழு எடுத்த முடிவைக் கண்டித்து, ஒரு விரிவுரையாளர்கள் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “பல்கலைக்கழக கல்விச் சட்டம், விரிவுரையாளர்களுக்கு, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கும் பிற பொறுப்புகளுக்கும் தடை ஏற்படாமல் சட்டத்தரணியாக செயற்பட அனுமதி கொடுத்துள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குருபரன் மீதான தாக்குதலை "நியாயப்படுத்தும்" பொருட்டு அவர் ஒரு சட்டத்தரணியாக செயல்படுவதைத் தடுக்க முடிவெடுத்த பின்னர், அண்மையில் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்துறையில் வழக்கறிஞர்களாக பணியாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும், "எங்கள் பல்கலைக்கழக முறைக்குள் மருத்துவம், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை போன்ற பாடங்களை கற்பிக்கும் கல்வியாளர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் உள்ள நிறுவனங்களிலும் அவர்களின் துறை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் மற்றும் அரச, சமூக நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கவும் அனுமதிக்கப்படுகிறது,” என்று ஆணைக்குழு அறிக்கை மேலும் கூறுகிறது.

வடக்கில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்பந்தமாக இராணுவம் இவ்வளவு கொடுமையாக நடந்துகொள்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக, "தேசிய பாதுகாப்பை" புறக்கணித்து செயற்பட்டதாக இராணுவ புலனாய்வுத்துறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண துணைவேந்தர் ரட்னம் விக்னேஸ்வரன், 2019 தொடக்கத்தில் நீக்கப்பட்டார். 2009 இல் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூருவதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் முள்ளிவாய்க்காலிலும் நினைவுச் சின்னங்களை நிர்மாணிப்பது மற்றும் வளாகத்தில் எழுக தமிழ் நிகழ்வுகளை நடத்துவது உட்பட, “புலிகளுக்கு ஆதரவான மாணவர் நடவடிக்கைகளை” தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

2009 இல் போர் முடிவடைந்ததிலிருந்து, அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களை அடக்குவதற்காக இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்கின்றன. இந்த அரசாங்கங்கள், இராணுவம் நேரடியாக பொதுமக்கள் நிர்வாகத்தில் ஈடுபடவில்லை எனக் காட்ட முயன்ற போதிலும், மேற்கண்ட நிகழ்வுகள் இது ஒரு பொய் என்பதைக் காட்டுகின்றன. இந்த இரண்டு மாகாணங்களிலும் ஏறத்தாழ இராணுவத் தலையீட்டுடனான ஆட்சியே நடக்கின்றது.

"யாழ்ப்பாண பல்கலைக்கழக விவகாரங்களில் இராணுவத்தின் தலையீட்டை அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வடக்கில் உள்ள ஆர்வலர் குழுக்கள் பலமுறை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்" என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

போரின்போது தமிழ் இளைஞர்களைக் கொன்றமை அல்லது காணாமல் ஆக்கியமை சம்பந்தமாக அரசாங்கப் படைகள் மீது குற்றம் சாட்டப்பட்ட ஏராளமான சம்பவங்கள் உள்ளன. யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்த வழக்குகள் நீதிமன்றங்களில், குறிப்பாக வடக்கில் இழுபட்டு வருகின்றன.

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக தமிழ் கைதிகளை குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்க, கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி வருவதுடன் "சாட்சிகளின் இல்லாமை" மற்றும் வடக்கு கிழக்கில் போர்க்கால சூழ்நிலையுடன் தொடர்புபட்ட பிற பிரச்சினைகளை சாக்காகக் கொண்டு, இராணுவ அதிகாரிகள் மீதான வழக்குகள் தாமதப்படுத்தப்படுகின்றன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடைசி அரசாங்கம் அளித்த பல பொய் வாக்குறுதிகளில், போரின் போது தமிழர்கள் அழிக்கப்பட்டதை விசாரிப்பதாகவும் ஒரு வாக்குறுதி இருந்தது. அரசாங்கம் அவற்றை குப்பைத் தொட்டியில் வீசி பொறுப்பான இராணுவ வீரர்களை காப்பற்றவே செயற்பட்டுள்ளது. கண்கட்டி வித்தையாக, சில அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது கூட அவர்கள் தப்பிக்க வழிசெய்தவாறே ஆகும்.

இப்போது, புதிய ஜனாதிபதியான கோட்டாபய இராஜபக்ஷவின் கீழ், இராணுவ சிப்பாய்கள் எந்தக் குற்றமும் செய்யாத “போர் வீரர்கள்” என்பதால், குற்றச்சாட்டு சுமத்துவது கூட ஒரு குற்றமாகக் கருதப்படுவதே நடக்கின்றது.

Loading