பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான டிசம்பர் 5 எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான டிசம்பர் 5 வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பரவலாக பின்பற்றப்பட்ட செப்டம்பர் 16 வேலைநிறுத்தம் மற்றும் தேசிய இரயில்வேயின் (National Railways - SNCF) தொழிற்சங்க கட்டுப்பாட்டை மீறிய திடீர் வேலைநிறுத்தங்களை தொடர்ந்து, பாரிஸில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோபத்தைத் தடுக்க ஆரம்பகட்டமாக, பரந்த போக்குவரத்தின் ஐந்து தொழிற்சங்கங்கள் மேலதிக நடவடிக்கைக்காக டிசம்பர் 5 வேலைநிறுத்தத்திற்கு தயக்கத்துடன் அழைப்பு விடுத்துள்ளன. இந்த அணிதிரட்டல் பாரியதாகவும், மேலும் பிரெஞ்சு பொருளாதாரத்தை முடக்கக்கூடிய அறிகுறிகளும் காணப்படுகின்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சூழ்ச்சிகளுக்கு அப்பால், மக்ரோனின் சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ் அடக்குமுறை மீதான கோபம், தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளின் மத்தியில் பரவி வருகின்றது. வேலைநிறுத்த நடவடிக்கைக்கான ஆதரவு பிரபலமாக உள்ளன. வேறுபட்ட கருத்துக் கணிப்புக்களின் படி, 70 சதவிகித வெகுஜனங்கள், டிசம்பர் 5 க்குப் பின்னர் வேலைநிறுத்தங்கள் தொடரும் என்றும், 69 சதவிகிதத்தினர் அதை ஆதரிப்பார்கள் என்றும் கூறுகின்றனர். வேலைநிறுத்த நடவடிக்கைக்கான ஆதரவு உடலால் வேலை செய்யும் தொழிலாளர்கள் (74 சதவிகிதம்) மற்றும் அரசு ஊழியர்கள் (70 சதவிகிதம்) மத்தியில் வலுவாக உள்ளது.

பிரான்சில் வளர்ந்து வரும் இந்த சமூக சீற்றம் என்பது, அமெரிக்க வாகனத்துறை வேலைநிறுத்தங்கள், மற்றும் அல்ஜீரியா, கட்டலோனியா, சிலி, லெபனான், ஈராக் மற்றும் ஹாங் காங் ஆகிய நாடுகளில் சமூக சமத்துவமின்மை மீதான கோபத்தால் உந்தப்பட்ட வெகுஜன போராட்டங்கள் உட்பட, வர்க்கப் போராட்டத்தின் ஒரு பரந்த சர்வதேச எழுச்சியின் ஒரு பாகமாகும். பிரான்சில், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட “மஞ்சள் சீருடை” இயக்கம், நவம்பர் 17 அன்று தனது முதலாம் ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடியது.

தொழிலாளர்களின் பல பிரிவுகள் இப்போது டிசம்பர் 5 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. பாரிஸ் Unsa-RATP (National Union of Independent Unions - UNSA) உதவி பொதுச் செயலர் Laurent Djebali, “டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கி, சுரங்கப்பாதை மற்றும் பிராந்திய பரந்த போக்குவரத்து என எதுவும் இருக்காது, ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கும்” என வலதுசாரி Le Figaroசெய்தியிதழுக்கு தெரிவித்தார்.

SNCF (தேசிய இரயில்வே) இல் ஜனவரி 2020 இல் பல அடுக்கு பணியாளர் முறையை அறிமுகப்படுத்த அரசு தயாராகின்ற நிலையில், இரயில்வே தொழிலாளர்களின் பல தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அறிவித்துள்ளன. ஓய்வூதியம், ஊதிய வெட்டுக்கள் மற்றும் SNCF இன் பகுதியளவு தனியார்மயமாக்கம் ஆகியவற்றின் மீதான பரந்த கோபத்திற்கு மத்தியில் நடந்த இரண்டு திடீர் வேலைநிறுத்தங்களால் எந்தவொரு சலுகையும் பெறப்படாமல், தொழிலாளர்களை பணிக்குத் திரும்புமாறு கட்டளையிட்டதற்கு பின்னர் தொழிற்சங்கங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.

கடந்த மாதம் இரயில்வே தொழிலாளர்கள் தொழிற்சங்க கட்டுப்பாட்டை மீறிய திடீர் வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சாட்டிலோனில் (Châtillon) அவர்கள் விடுத்த அறிக்கை பின்வருமாறு விவரிக்கிறது: “ஐந்தாண்டுகளாக முடக்கப்பட்ட மிகக் குறைந்த ஊதியங்கள், குறைவான பணியாளர்கள், மற்றும் வேலையிலிருந்து இராஜினாமாக்களின் அதிகரிப்பு போன்ற வேலைநிலைமைகளுக்கு மத்தியில் பணிபுரிவதை எங்களால் இனிமேலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நெகிழ்வுத்தன்மை மற்றும் இலாபங்களை அதிகரிக்க, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியுடன் SNCF எவ்வாறு விளையாடுகிறது என்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகிறோம். … மறுசீரமைப்பு, குறைந்த ஊதியங்கள், வேலை வெட்டுக்கள் மற்றும் குறைவான பணியாளர்கள் என அனைத்து கஷ்டங்களும் இனி போதும்!”

இரயில்வே தொழிலாளர்களுக்கு பக்கபலமாக, நாடு முழுவதுமாக பதினொரு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களுக்கு அறிவித்துள்ளன, விமானப் போக்குவரத்து நிலப் போக்குவரத்துடன் இணைகிறது, Air France உடன் சேர்ந்து, டிரக் ஓட்டுநர்களும் டிசம்பர் 5 அன்று வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.

நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் முகம் கொடுக்கும் மிக மோசமான நிலைமைகளுக்கு எதிராக மார்ச் முதல் வேலைநிறுத்தங்களை செய்து வரும் மருத்துவமனைகள், சுகாதார அமைப்பை மேலும் சீரழிக்கும் சுகாதாரச் சட்டம் 2022 மற்றும் மருத்துவ பணியின் மோசமான நிலைமைகளைக் கண்டித்து வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்வர். சுகாதார பணியாளர்களும் டிசம்பர் 5 அன்று வீதிகளில் அணிவகுப்பர்.

மேலும் பரந்தளவில் பொதுத்துறையில், மூன்று கல்வி சங்கங்களும் (SNES-FSU, SUD-Education et l'Unsa-Education) ஆசிரியர்களை வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. தீயணைப்பு பணியாளர்கள், மின்சார தொழிலாளர்கள், துறைமுகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மத்தியிலும் வேலைநிறுத்த இயக்கங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றன. மாணவர்களும் வழக்கறிஞர்களும் கூட அணிவகுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்திற்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையேயான நீடித்த மோதல் முக்கியமான அரசியல் கேள்விகளை எழுப்புகிறது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மற்றும் நெருக்கமாக பணியாற்றும், மேலும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு விரோதமானவை என நிரூபிக்கப்பட்டதுமான தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மக்ரோனுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை தீர்க்கமாக எதிர்க்கின்றன. அவர்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தப்படுகின்றனர், என்றாலும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் மட்டுமே அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். வேலைநிறுத்தத்தின் தோல்வியை ஒழுங்கமைக்க, தொழிலாளர்களை வற்புறுத்தி மீண்டும் வேலைக்கு அழைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள், தொழிலாளர்களின் கசப்பான எதிரிகளாக இருப்பர் என்பது நிரூபிக்கப்படும்.

இவ்வாறு UNSA தொழிற்சங்கத்தின் Laurent Escure “கோபம் சில துறைகளில் பரபரப்பை ஏற்படுத்துகிறது” என்று முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். “சில முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும்” ஏனென்றால் “5 ஆம் தேதிக்குப் பின்னர் நாங்கள் அதைச் செய்தால், அது ஆபத்தான கட்டமாக இருக்கும்” என்று அவர்களை அவர் எச்சரித்தார். அதாவது, வேலைநிறுத்தம் தொடங்கியவுடன் தொழிலாளர்கள் மீது அவர்கள் சுமத்த முயற்சிக்கும் ஒரு இழிவான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், மேலும் பாதிப்பை ஏற்படுத்தி, முற்றிலும் அடையாள வேலைநிறுத்தமாக மாற்றவும் எஸ்க்யூர் முன்மொழிகிறார்.

தொழிலாளர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி, தொழிற்சங்க எந்திரத்திலிருந்து போராட்டங்களை கையில் எடுப்பதும், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதும் ஆகும். உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டத்திற்குள் நுழைகையில், இந்த குழுக்கள் வேலைநிறுத்தங்களையும் நடவடிக்கைகளையும் ஒழுங்கமைப்பதோடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் ஐக்கியத்தை வளர்த்துக் கொள்ளும். இந்த நிகழ்ச்சிப்போக்கின் போது, நிதியப் பிரபுத்துவத்தை பறிமுதல் செய்ய, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற போராட வேண்டியதன் அவசியத்தை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தும்.

சுகாதார பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் அல்லது அதற்கு மேலாக எதன் மீதான தாக்குதலாக இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தை வறுமையில் ஆழ்த்துவதற்கான நிதிய பிரபுத்துவத்தின் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கம் நுழைகிறது. பிரான்சின் 42 வகையான சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களை அகற்றுவதற்கும், மேலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உறுதியற்ற பண மதிப்பின் “புள்ளிகளை” கொண்டு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும் மக்ரோன் விரும்புகிறார். இந்த சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், மாதத்திற்கு 900 யூரோ ஓய்வூதியத்தை இழப்பார் என்று ஒரு ஆசிரியர் BFM தொலைக்காட்சி செய்திகளில் கணக்கிட்டார்.

மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LRM) கட்சி, தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து நிதிய பிரபுத்துவ வர்க்க ஆணவத்துடன் சேர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கண்டிக்கிறது. கடந்த வியாழக்கிழமை, சுகாதார அமைச்சர் Agnès Buzyn, வேலைநிறுத்தம் “மிகுந்த சுயநலமான கோரிக்கைகளை” கொண்டுள்ளது என்று கூறினார். தேசிய சட்டமன்றத் தலைவர் ரிச்சார்ட் ஃபெராண்ட் ஞாயிற்றுக்கிழமை, இது “சமத்துவமின்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு அணிதிரள்வு” என்று அறிவித்தார்.”

சிறப்பு ஓய்வூதிய திட்டங்களைக் கொண்ட தொழிலாளர்கள் சமத்துவமின்மையை ஊக்குவிக்கவில்லை, இது ஒரு ஆத்திரமூட்டும் பொய்யாகும். தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பரந்த சமூகச் செல்வத்தை விழுங்கும் ஒரு ஒட்டுண்ணி கோடீஸ்வர அடுக்குதான் சமத்துவமின்மையை தூண்டுகிறது. அவர்களது செல்வத்தை பறிமுதல் செய்வது அவசர மற்றும் அவசியமான நடவடிக்கையாகும்.

மக்ரோன் ஊதியங்களையும் சமூக நலன்களையும் குறைக்கின்ற அதேவேளை, பிரான்சின் 13 செல்வமிக்க கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) கடந்த ஆண்டு தங்கள் செல்வத்தின் நிகர மதிப்பில் அண்மித்து 24 பில்லியன் யூரோக்களைச் சேர்த்தனர், 2008 முதல் பிரான்சில் தேக்கமடைந்த பொருளாதாரம் நிலவுகின்ற போதிலும், உலகில் பில்லியனர்கள் மிக வேகமாக பணக்காரர்களாகும் நாடுகளில் பிரான்சை முன்னணி நாடாக உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஆடம்பர நகைக்கடை டிஃபானி & கோ வை வாங்கியதன் மூலம், 106 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்து மதிப்பை அடைந்து, பேர்னார் ஆர்னோ சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். அதாவது, தொழிலாளர்களின் செலவில் பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பை மீண்டும் பில்லியன்களில் உயர்த்துவதன் மூலம் சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்க மக்ரோனின் கொள்கைகளே நோக்கம் கொண்டுள்ளன.

வெடிப்புறும் சூழ்நிலை ஒருபுறமிருந்தாலும், சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவித சலுகைகளும் வழங்க மாட்டாது என்று அரசாங்கம் சமிக்ஞை செய்கிறது. மாட்ரிட்டில் நடந்த COP25 சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்ளும் தனது திட்டத்தை மக்ரோன் இரத்து செய்து, இலண்டனில் நடக்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கான தனது பயணத்தையும் சுருக்கினார். அமியான் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், பிரெஞ்சு மக்களை அவர் பின்வருமாறு விமர்சித்தார்: “நான் வானொலி கேட்டாலோ அல்லது தொலைக்காட்சிக்கு திரும்பினாலோ, ஒட்டுமொத்தமாக நாம் கேட்கும் அனைத்தும் மோசமானவை என்றே நான் உணர்கிறேன [...] இந்த நேரத்தில் நம் நாடு தன்னைப் பற்றி மிகவும் எதிர்மறையாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.”

பிரதமர் எட்வார்ட் பிலிப் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தொழிற்சங்கங்களையும் முதலாளிகளின் கூட்டமைப்புக்களையும் சந்தித்த பின்னர், அவர்களின் “மிகப்பெரிய உறுதியை” அறிவிப்பதைத் தவிர வேறெதையும் அறிவிக்கவில்லை. வேலைநிறுத்தம் “நடக்கும்” என்று மெடெஃப் முதலாளிகளின் கூட்டமைப்பின் தலைவரான Geoffroy Roux de Bézieux கூறினார், என்றாலும் வேலைநிறுத்தத்தால் “சிரமங்கள்” ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் வர்க்கத்தின் வளைந்து கொடுக்காத தன்மையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டிய ஒரே வழி, நிதிய பிரபுத்துவத்தை பறிமுதல் செய்வதாகும். இது, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பது மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பது பற்றிய கேள்வியை முன்வைக்கிறது.

Loading