புத்தாண்டு உரை: பரந்த வேலைநிறுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் சிக்கன நடவடிக்கையை திணிக்க உறுதியளிக்கிறார்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புத்தாண்டு குறித்த தனது சுருக்கமான, அலட்சியமான உரையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், “அவநம்பிக்கை” என்றும் “சோம்பேறித்தனம்” என்றும் அவர் ஏளனம் செய்யும் பரந்த வேலைநிறுத்தங்களையும் பாரிய மக்கள் எதிர்ப்பையும் மீறி அவரது ஓய்வூதிய வெட்டுக்களை நடைமுறைப்படுத்தப் போவதாக உறுதியளித்தார்.

இமானுவல் மக்ரோன் தனது பதவியேற்பு விழாவில் தங்க மெருகிடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் (புகைப்படம்: விக்கிமீடியா)

ஜனவரி 2 அன்று, மக்ரோனின் ஓய்வூதிய “சீர்திருத்தத்திற்கு” எதிராக இரயில் மற்றும் போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டு 29 நாட்கள் கழிந்து விட்ட நிலையில், இந்த வேலைநிறுத்தம், மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சில் மிக நீண்டகாலமாக தொடர்ச்சியாக நடக்கும் தேசிய வேலைநிறுத்தமாக உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்க்கின்றனர் என்ற நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள், மற்றும் ஒப்பேரா மற்றும் பாலே நிறுவன ஊழியர்கள் வரையிலுமாக இந்த வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து வெடித்து உழைக்கும் மக்களின் பரந்த அடுக்குகளை பாதித்துக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியா, லெபனான் மற்றும் ஈராக்கிலும், மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் நிலவும் புதிய காலனித்துவ சர்வாதிகாரங்களுக்கு எதிரான அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள், மற்றும் பரந்த இயக்கங்கள் உட்பட, கடந்த ஆண்டு நிகழ்ந்த பல உலகளாவிய எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்களின் மத்தியில் இதுவும் எழுந்துள்ளது.

டிசம்பர் 5 அன்று வேலைநிறுத்தம் வெடித்ததிலிருந்து சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste- PES) மேற்கொண்ட பகுப்பாய்வை மக்ரோனின் உரை நிரூபிக்கிறது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவுமில்லை. அதற்கு மாறாக, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதும், அத்துடன் அவரது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எப்போதுமான பரந்தளவிலான தொழிலாளர் அடுக்குகளை அணிதிரட்டுவதும் தான் முன்னோக்கிய வழியாகும்.

அவரது உரையின் முதன்மைக் கருத்தாக சமூக எதிர்ப்பிற்கு “சமாதானத்தை” வழங்குவார் என்ற ஊடக பிரச்சாரத்தை அவரது உரை பொய்யாக்கியது. பிரெஞ்சு ஜனாதிபதி அவரது வெட்டுக்கள் குறித்து வெளிப்படையாக சமரசம் செய்து நிரூபிப்பார் என்று ஊடகங்கள் ஊகித்த சமயத்தில், வேலைநிறுத்தம் குறித்து பல வாரங்களாக எந்தவித பகிரங்கமான அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை. ஆனால் தற்போது அவரது உரையில், தொழிலாள வர்க்கத்துடனான ஒரு நேரடி மோதலில் தான் வெட்டுக்களை திணிக்க விரும்புவதை மக்ரோன் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் இவ்வாறு அறிவித்தார்: “மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மக்களை எவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாக்கும், மேலும் அவர்களிடையே எவ்வளவு பயத்தை உருவாக்கும் மற்றும் எதிர்ப்பைத் தூண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். என்றாலும், நம் நாட்டையும், நமது அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதை நாம் கைவிட வேண்டுமா? இல்லை, ஏற்கனவே கைவிடப்பட்ட முறையை இது கைவிடும், இது நமது காட்டிக் கொடுப்புக்களுக்கான விலையாக, நமது குழந்தைகளை காட்டிக் கொடுக்கும், அவர்களுக்குப் பின்னர் அவர்களது குழந்தைகளை காட்டிக் கொடுக்கும். இதனால்தான் ஓய்வூதிய சீர்திருத்தம் என்பது இறுதிவரை மேற்கொள்ளப்படும்.”

மக்கள் எதிர்ப்பை தூண்டுவதற்காக, அவரது கொள்கைகளை விமர்சிக்கும் அநாமதேய விமர்சகர்களால் பரப்பப்பட்ட அடையாளம் காணப்படாத “பொய்களையும் சூழ்ச்சிகளையும்” கண்டித்து, “இந்த சீர்திருத்தங்களை அவநம்பிக்கை என்றோ அசைவற்ற தன்மை என்றோ நான் ஒதுக்கிவிடமாட்டேன்” என்று மக்ரோன் கூறினார்.

அதாவது, ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரிப்பது, பொதுத்துறை ஓய்வூதிய திட்டங்களில் வெட்டுக்களை அறிவிப்பது, மேலும், ஒவ்வொரு வருடமும் புதிய தலைமுறை தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதால், அரசை தன்னிச்சையாக நிர்ணயிக்க அனுமதிக்கும் பண மதிப்பான “புள்ளிகளை,” அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதிய சலுகைகளை –அதாவது, குறைப்பதற்கு– கணக்கிடுவது ஆகியவற்றிலிருந்து மக்ரோன் பின்வாங்க மாட்டார். அதாவது, வர்க்க அடிப்படையிலான ஓய்வூதிய முறையை சுமத்துவதே இதன் நோக்கமாகும், அதனால் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் வறுமையில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் வசதி படைத்தவர்களோ தனியார் ஓய்வூதியக் கணக்குகளை அனுபவிக்கின்றனர்.

ஜனவரி 1 ஆம் தேதி சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக்கின் பிரெஞ்சு நடவடிக்கைகளின் தலைவரான ஜோன்-பிரான்சுவா சிரெல்லிக்கு légion d’honneur விருது வழங்கியதன் மூலம் மக்ரோன் இதை தெளிவுபடுத்தினார். சில கணக்கீடுகளின் படி, பிளாக்ராக் (BlackRock) நிறுவனம், பிரான்சில் உள்ள தனியார் ஓய்வூதியக் கணக்குகளிலிருந்து 70 பில்லியன் யூரோவுக்கு அதிகமான இலாபத்தை ஈட்டுகிறது.

தனது உரையில் அனுதாபத்தைக் காட்ட மக்ரோனின் சில முயற்சிகள் அற்பமானவை, தொழிலாளர்களைப் பார்த்து பயந்துபோன ஒரு பணக்கார வங்கியாளரின் வெளிப்படையான நேர்மையற்ற தன்மை, முன்னாள் அரச அரண்மனைகளில் ஒளிந்து கொண்டிருக்கிறார்: எலிசே, வேர்சாய், ப்ரேகான்ஸொன் கோட்டை. விடுமுறை நாட்களில் நோய்வாய்ப்பட்டிருக்கும் மற்றும் தனியாக இருப்பவர்களுக்கான ஒரு வெற்றுக் குறிப்புடன் அவர் தனது உரையை தொடங்கினார், பின்னர் “ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தொழில் போக்கு” குறித்த தனது கவலையை தெரிவித்தார். இந்த “கவலை” குறிப்பிடுவது என்னவென்றால், அவர்களின் ஓய்வூதியத்தை 20 முதல் 40 சதவிகிதம் வரை குறைக்க அவர் தயாராகி வருகிறார் என்பதாகும்.

“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களையும், மேலும் வேலைநிறுத்தக்காரர்களால் பெரும்பாலும் அமைதியாக நடத்தப்பட்ட அணிவகுப்புக்களையும் கொடூரமாக தாக்கிய கலகப் பிரிவு பொலிசாரைப் பற்றி பாடிய வழக்கமான பாராட்டுக்கள் தவிர, தொழிற்சங்க அதிகாரத்துவம் குறித்த தனது ஒரே மாதிரியான கருத்துக்களை மக்ரோன் தெரிவித்தார். ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்து, “பிரதமர் எட்வர்ட் பிலிப்பின் அரசாங்கம், ஒரு முடிவை எதிர்நோக்கும் தொழிற்சங்கம் மற்றும் முதலாளிகளின் அமைப்புக்கள் உடன் விரைவாக ஒரு சமரசத்தை எட்டும்” என்று வலியுறுத்தினார்.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி, ஓய்வூதியங்களுக்கான போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கைகளிலிருந்து விடுவிப்பதாகும். மக்ரோன் உடனான தேசியளவிலான பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த போராட்டத்திற்கு தீர்வுகாண முடியாது, இது தொழிலாளர்களுக்காக எதையும் பெற்றுத்தரப்போவதில்லை. இந்த பரந்த ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் புரட்சிகர தாக்கங்களுடன் கூடிய வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும். எனவே, தொழிலாள வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு புரட்சிகர சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாக, மக்ரோனை வெளியேற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கு தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதே முன்னோக்கிய வழியாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே, மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் தொடர்பான விவாதங்களையும் பேச்சுவார்த்தைகளையும் தொழிற்சங்கங்கள் நடத்தி வந்துள்ளன. டிசம்பர் 5 அன்று நடந்த ஆரம்பகட்ட வேலைநிறுத்த அழைப்பிற்கு ஒத்துழைக்க மறுத்த அரசாங்க சார்பு பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (French Democratic Labor Confederation – CFDT) உட்பட, பல அமைப்புக்களும் பெரும்பாலான வெட்டுக்களுக்கு ஆதரவளிக்கின்றன.

எவ்வாறாயினும், ஸ்ராலினிச பொது தொழிலாளர் கூட்டமைப்பின் (General Confederation of Labor-CGT) தலைவரான பிலிப் மார்டினேஸின் பங்கு, அடிப்படையில் வேறுபட்டதல்ல. ஒட்டுமொத்த CGT அதிகாரத்துவமும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் போன்ற குட்டி முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுசேர்ந்து, மக்ரோன் அவரது வெட்டுக்களை மீளப் பெறவும், சிறந்த ஓய்வூதிய முறைக்காக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொழிலாளர்கள் மக்ரோனை சமதானப்படுத்தமுடியும் என்ற தவறான வழியை மார்டினேஸ் முன்வைக்கிறார். அதேபோல, மக்ரோன் பிரான்ஸை புரிந்து கொள்ளவில்லை என்று பாசாங்குத்தனமாக வாதிடுவதன் மூலம் மக்ரோனின் பேச்சுக்கு அவர் பதிலிறுத்தார்.

“ஒரு குமிழியில் சிக்கிக் கொண்ட குடியரசின் தலைவர் நமக்கு இருக்கிறார் என்பதுடன், அவர் இந்த நாட்டில் அனைத்தும் சரியாக நடக்கிறது என்றும் நினைக்கிறார். அவர் மெத்தனமானவர்,” என்று ஜனவரி 1 அன்று BFM-TV இல் மார்டினேஸ் தெரிவித்ததுடன், அடுத்தகட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், “நமது எச்சரிக்கை சமிக்ஞை பலமாக இருக்க வேண்டும்,” என்றும் அறிவித்தார்.

ஜனவரி 7 அன்று நடைபெறவுள்ள அரசாங்கத்துடனான தொழிற்சங்கங்களின் அடுத்த முறையான பேச்சுவார்த்தைக்கு தனக்கு “எந்தவித அழைப்பும் வரவில்லை” என்று மார்டினேஸ் புகார் கூறினார், என்றாலும் ஏதேனுமொரு வழியில் அவர் அதற்கு செல்வார் என்றார். “நாம் அனைத்திலும் கலந்து கொண்டோம்,” என்றும் அவர் கூறினார்.

சாதகமான பேச்சுவார்த்தை தீர்வுக்கான தவறான நம்பிக்கையை கொடுத்து, மக்ரோனை வீழ்த்துவதற்கான தொழிலாளர்களின் போராட்டத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட மார்டினேஸின் மூலோபாயம், ஒரு திவாலானது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் பற்றி பிரெஞ்சு ஜனாதிபதி அறியாதவராக இருக்கலாம், ஆனால் அவர் மனநிறைவுடன் இல்லை. கடந்த ஆண்டு "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களில் டஜன் கணக்கான சாட்சியங்கள், மக்ரோன், அவரது மனைவி பிரிஜிட் மற்றும் அவரது பெரும்பாலான ஊழியர்களும் ஒரு புரட்சிகர எழுச்சியின் பயங்கரம் குறித்த அச்சத்தில் வாழ்கின்றனர்.

"பிரிஜிட் பீதியில் உள்ளார்: மக்ரோன் தம்பதியினர் ஒரு கிளர்ச்சிக்கு அஞ்சுகிறார்கள்" என்ற தலைப்பில் Gala சஞ்சிகையின் கடந்த மாதக் கட்டுரை, ஒரு அநாமதேய மந்திரியை மேற்கோள் காட்டி, அது "பரிவாரங்கள் மற்றும் மந்திரி அலுவலகங்களில் பயங்கரத்தை” விவரிக்கிறது.

1793 ஆம் ஆண்டில் பிரெஞ்சு புரட்சியின் போது கில்லட்டினில் தலைவெட்டப்பட்ட அரசி மரி-அந்துவானெட்டுக்கும் தனக்கும் இடையிலான ஒப்பீடுகள் குறித்து பிரிஜிட் மக்ரோன் மிகவும் கோபப்படுகிறார் என எழுதுகிறது.

மக்ரோன் தனது வெட்டுக்களைத் திணிக்கிறார், ஏனென்றால், உலக அரங்கில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பொருளாதார போட்டித்தன்மையையும் அதன் இராணுவ நலன்களையும் பாதுகாப்பதால், நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை ஆயுதப்படைகள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் பைகளுக்கு மாற்றுவதற்கு உறுதியாகவுள்ளார். தொழிலாளர்களுடன் எழுந்துள்ள மோதலைக் கண்டு அவர் அஞ்சினாலும், மிகுந்த உணர்வுபூர்வமாக அவர் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவரது புத்தாண்டு உரை தெளிவுபடுத்தியது போல, மக்ரோனின் சிக்கன திட்ட நிரலை நிறுத்துவதற்கான ஒரே வழி, அவரது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டம் மட்டுமே.

Loading