போலன்ஸ்கியின் திரைப்படம் J’Accuse திரையிடுவதைத் தடுக்க #MeToo பாசிசவாத சக்திகளுடன் ஒத்துழைக்கிறது

Alex Lantier
18 February 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரேஃபுஸ் விவகாரம் (Drefyus Affair) சம்பந்தமான ரோமன் போலன்ஸ்கியின் திரைப்படத்தை, வரவிருக்கும் பெப்ரவரி 28 விழாவில் 12 விருதுகளுக்காக தேர்வு செய்தமைக்காக, #MeToo பிரச்சாரம் மற்றும் பிரெஞ்சு அரசிடமிருந்து வந்த இடைவிடாத தாக்குதலுக்குப் பின்னர், வியாழக்கிழமை, பிரான்சின் சீசர் விருது வழங்கும் தேர்வுக் குழு கூட்டாக இராஜினாமா செய்தது.

ட்ரேஃபுஸ் விவகாரம் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியலில் ஒரு முக்கிய பிளவுக்கோடாக விளங்குகிறது. 1894 இல் ஜேர்மனிக்காக உளவு பார்த்தார் என்று பொய்யாக தண்டிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு யூத அதிகாரியான கேப்டன் ஆல்பிரட் ட்ரேஃபுஸ்ஸை விடுவிக்க 12 ஆண்டுகள் போராட்டம் நடந்தது. ஜோன் ஜோர்ரெஸ் (Jean Jaurès) மற்றும் சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் தலைமையில் ட்ரேஃபுஸ் பாதுகாவலர்களுக்கும், சார்லஸ் மோராஸ் தலைமையில் யூத-எதிர்ப்புவாத Action française (அக்ஸியோன்பிரான்ஸேஸ்) அமைப்பு, இராணுவ தளபதிகள் மற்றும் தேவாலயம் என ட்ரேஃபுஸ் இன் விரோதிகளுக்கும் (antidreyfusards) இடையே பிரான்ஸ் உள்நாட்டு போரின் விளிம்பில் இருந்தது. இறுதியில் ட்ரேஃபுஸ் விடுவிக்கப்பட்டார், அவர் மீது ஜோடிக்கப்பட்ட சூழ்ச்சி 1906 இல் உறுதியாக நிராகரிக்கப்பட்டது.

இரண்டாம் உலக போரின் போது பிரெஞ்சு யூதர்களில் ஒரு கால்வாசி பேர் அவுஸ்விட்ச்சுக்கும் ஏனைய நாஜி நிர்மூலமாக்கல் முகாம்களுக்கும் அனுப்புவதை மேற்பார்வையிட்ட விச்சி ஆட்சிக்கு ஒத்துழைப்பதற்காக அக்ஸியோன்பிரான்ஸேஸ் சித்தாந்த அடித்தளங்களையும், அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையினரையும் வழங்குமளவுக்குச் சென்றது.

20 ஆம் நூற்றாண்டில் சோசலிசம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அந்த மாபெரும் ஆரம்ப மோதல் குறித்து கவனத்தை ஈர்க்கத்தக்க ஒரு சக்தி வாய்ந்த படமாக J’Accuse உள்ளது. தளபதி மரி-ஜோர்ஜ் பிக்கார், ட்ரேஃபுஸ் அப்பாவி என்பதற்கு தீர்க்கமான ஆதாரத்தை கண்டறிந்ததுடன் ட்ரேஃபுஸ் மீதான களங்கத்தை நீக்க புகழ்பெற்ற நாவலாசிரியர் எமில் ஸோலாவின் முயற்சிகளுக்கு தீர்க்ககரமான ஆதாரத்தையும் வழங்கியதால், அவரின் யூத-எதிர்ப்புவாத காற்புணர்ச்சிகளையும் கடந்து நிற்கும் ஓர் அதிகாரியாக அந்த படம் அவரின் வாழ்வை முன்நிறுத்துகிறது. ட்ரேஃபுஸ் மீது ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்காக பொய்யுரைக்கும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டி, “J’Accuse” (நான் குற்றஞ்சாட்டுகிறேன்) என்று குடியரசின் ஜனாதிபதிக்கு ஸோலா எழுதிய பகிரங்க கடிதத்தின் பெரும்பகுதிகளை வாசித்துக் காட்டுவது அப்படத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

J’Accuse (ஓர்அதிகாரியும், ஓர்உளவாளியும்)

இப்போது வரையில் ஓர் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக புகழ் பெற்ற திரைப்பட தொழில்வாழ்வில் உள்ள ஒரு பிராங்கோ-போலாந்து யூத இயக்குனரான ரோமன் போலன்ஸ்கியின் தலைசிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும். 1933 இல் பாரீசில் பிறந்து கிராக்கோவில் (Cracow) வளர்ந்த போலன்ஸ்கி அவரது பெற்றோர்களும் சகோதரியும் இரண்டாம் உலக போரின் நாஜி மரண முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டதையும் மற்றும் 1969 இல் அவர் மனைவியும் நடிகையுமான Sharon Tate படுகொலை செய்யப்பட்டதையும் அனுபவிக்கவேண்டியிருந்தது. 1977 இல் பருவமடையாத சமந்தா கைமருடன் சட்டவிரோதமாக பாலியல் தொடர்பு கொண்ட குற்றத்திற்காக அலைக்கழிக்கப்பட்டு, 42 நாட்கள் சிறையில் இருந்த பின்னர், ஒப்பந்த மனுவின் வரையறைகளைச் சட்டவிரோதமாக உடைக்க ஒரு நீதிபதி அச்சுறுத்திய போது அவர் அமெரிக்காவை விட்டு தப்பித்து வெளியேறினார். அதற்குப் பின்னர் இருந்து, அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளும் பெண்ணியவாத குழுக்களும் அவரை ஈவிரக்கமின்றி துரத்திக் கொண்டிருக்கின்றனர்.

J’Accuse படத்தை ஒடுக்குவதற்கான பிரச்சாரத்தில் எந்த நியாயபூர்வதன்மையும் இல்லை. அதுபோன்ற தணிக்கையின் சட்டபூர்வ விளைவுகள் மற்றும் அரசியல் விளைவுகள் ரோமன் போலன்ஸ்கி மீதான அதன் தாக்கங்களையும் கடந்து நீள்கிறது. J’Accuse படத்தைத் தாக்குவதன் மூலம், #MeToo பிரச்சாரம் கருத்து சுதந்திரம் மீதான ஒரு பிற்போக்குத்தனமான தாக்குதலின் ஒரு கருவியாக சேவையாற்றுகிறது என்பதுடன், திரைப்பட இயக்கத்தின் உத்தியோகபூர்வ அரசு தணிக்கையை நிறுவ செயல்படுகிறது மற்றும் ஓர் ஒடுக்குமுறை அரசியல் சூழலை ஊக்குவிக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே, J’Accuse படத்திற்கு எதிரான #MeToo பிரச்சாரத்தில் ஒரு பாசிசவாத வாடை வீசுகிறது. நவம்பரில் அந்த படம் வெளியாவதற்கு சற்று முன்னர், நடிகை வலெரி மோன்னியே (Valérie Monnier) 1975 இல் போலன்ஸ்கி அவரை கற்பழித்ததாக திடீரென ஆதாரமின்றி குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார், இது குறித்து அவர் ஓராண்டாக அரசு அதிகாரிகளுடன் தனிப்பட்டரீதியில் விவாதித்திருந்தார். #MeToo குழுக்கள் பின்னர் அப்படத்தைப் பார்ப்பவர்கள் அல்லது ஆர்வத்தை வெளிப்படுத்துபவர்கள் கற்பழிப்புக்கு "உடந்தையாய்" இருப்பவர்கள் என்று வாதிட்டன. ட்ரேஃபுஸ் விவகாரத்தின் பரந்த வரலாற்று முக்கியத்துவத்தை வைத்து பார்க்கையில், இது பிரான்சில் இடதுசாரி கணோட்டங்களைக் கொண்ட எவரொருவரும் கற்பழிப்பை ஆதரிப்பவர்கள் என்று வலியுறுத்துவதற்கு நிகராக உள்ளது.

அப்படத்துக்கு எதிராக #MeToo தாக்குதல்கள் மற்றும் பல அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலும், அப்படம் பிரெஞ்சு வசூல் பட்டியலில் முதலிடத்தை எட்டியது. ஆகவே சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகள் உட்பட J’Accuse படத்துக்கு விருதுகளுக்கான பட்டியலில் அதை பெயரிட சீசர்ஸ் தேர்வுக்குழு முடிவெடுத்ததற்குக் கடந்த மாதம் #MeToo ஆட்சேபம் தெரிவித்த போது, தலைவர் Alain Terzian அவற்றை நிராகரித்தார். அவர் குறிப்பிட்டார்: “சீசர் விருதுகள் தார்மீக நெறிமுறைகளை ஏற்றுள்ள ஓர் அமைப்புக்குரியதல்ல. நான் தவறாக கூறுகிறேன் என்றால், 1.5 மில்லியன் பிரெஞ்சு மக்கள் இந்த படத்தைக் காண சென்றுள்ளனர். அவர்களைக் கேளுங்கள்,” என்றார்.

J’Accuse படத்துக்கு எதிரான அதன் தாக்குதலை அதிகரித்ததன் மூலமாக #MeToo விடையிறுத்தது. மக்ரோன் மற்றும் ஜோன்-லூக் மெலென்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியுடன் நெருக்கமாக தொடர்புடைய “Dare To Be Feminist” அமைப்பு, J’Accuse படத்துக்கு சீசர்ஸ் "விருதுகள் வழங்க கூடாது" என்று கூறும் ஒரு மனு அனுப்பியது. “இரண்டாண்டு கால #MeToo பிரச்சாரத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் ஹார்வி வைன்ஸ்டீன் ஆயுள் தண்டனையை முகங்கொடுக்கும் நிலையில் இருக்கையில், ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு வன்முறையான சிறார்பாலியல் குற்றவாளியை பிரான்சில் நாம் பகிரங்கமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்” என்று அது வலியுறுத்தியது.

இயக்குனர் Bertrand Tavernier மற்றும் நடிகர் Omar Sy உட்பட 400 திரைப்பட துறை கலைஞர்களின் ஒரு குழு, சீசர் தேர்வுக் குழுவை முற்றிலுமாக மறுகட்டுமானம் செய்வதற்கு #MeToo பிரச்சாரத்தின் அழைப்பை ஆதரித்து வருந்தத்தக்க வகையில் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டது.

சீசர் விருது தேர்வுக்குழுவின் தலைவர் Alain Terzian நூற்றுக் கணக்கான பெண்களை தேர்வுக்குழுவில் நியமித்து, விருதுகள் மற்றும் நிலைப்பாடுகளில் ஆண்-பெண் விகிதம் சமச்சீராக நடைமுறைப்படுத்தப்படும் என்று முடிவெடுத்ததன் மூலமாக தற்காலிகமாக அவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார். ஆனால் பிரெஞ்சு சினிமாவின் அந்த ஒட்டுமொத்த முன்னணி குழுவும் இராஜினாமா செய்யும் வரையில், போலன்ஸ்கியை "கற்பழிப்பு செய்தவர்" என்ற குற்றச்சாட்டுக்களும் மற்றும் சீசர் விருது தேர்வுக்குழு "கற்பழிப்பு கலாச்சாரத்தை" ஊக்குவிக்கிறது என்பதும் மழையெனப் பொழியத் தொடங்கியது.

J’Accuse படத்திற்கு அமெரிக்காவிலோ அல்லது பிரிட்டனிலோ வினியோகஸ்தர்கள் இல்லை, அங்கே #MeToo பிரச்சாரம் நடைமுறையளவில் அதை தடுத்துள்ளது. பிரிட்டனில் இரகசியமாக திரையிடப்பட்ட ஒரு காட்சியில் கலந்து கொண்ட பின்னர், ஹார்பர்ஸ்பத்திரிகையின் ஜோன் ஆர். மெக்ஆர்தர் எழுதியது: “போலன்ஸ்கி உடன் ஒத்துழைப்பதினால் வரும் சாத்தியமான பின்விளைவுகள் மிகவும் அபாயகரமாக இருக்குமென்பதால், பிரிட்டன் அல்லது அமெரிக்க வினியோகஸ்தர் யாருமே, பிரான்சில் வசூல் பட்டியலில் வெற்றியுடன் மற்றும் பெரும் பாராட்டுடன் தொடங்கியுள்ள இப்படத்தை வெளியிடும் அபாயத்தை எடுக்க மாட்டார்கள் ... என்னை அழைத்தவர்கள் உட்பட யாருமே ட்வீட்டரில் கல்லடி படவோ அல்லது தங்களின் வியாபார இடத்தின் முன்னால் மறியல் நடத்தப்படுவதையோ விரும்பவில்லை,” என்று எழுதினார்.

#MeToo இன் பாத்திரம், முதலாளித்துவ அரசாங்கங்களின் திட்டநிரலுடன் குட்டி-முதலாளித்துவ அடையாள அரசியலின் இடைத்தொடர்பை அம்பலப்படுத்துகிறது. வர்க்க அரசியலுக்கு எதிராக பாலியல் அரசியலை ஊக்குவிக்கும் #MeToo சளைக்காது வலதுக்கு நகர்ந்துள்ளது.

பெருவாரியான மக்கள் செல்வாக்கிழந்த ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பணக்காரர்களுக்கான வரி வெட்டுக்களுக்கு எதிரான 16 மாத கால பாரிய வேலை நிறுத்தங்கள் மற்றும் மஞ்சள் சீருடை போராட்டங்களுக்கு விடையிறுப்பாக, மக்ரோன், போராட்டக்காரர்களை தாக்குவதற்கு அதிவலது பொலிஸ் படைகளை விதைத்ததன் மூலமாக, விடையிறுத்துள்ளார். 2018 இல் மக்ரோன் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு "மாவீரர்" என்று புகழ்ந்துரைத்ததில் இருந்து, பொலிஸ் 11,000 க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளது, அண்மித்து 5,000 நபர்களைக் காயப்படுத்தி உள்ளது மற்றும் இரண்டு பேரைக் கொன்றுள்ளது.

அது வெறுக்கப்படுவதை அறிந்துள்ள மக்ரோன் அரசாங்கம், தணிக்கையை ஊக்குவிக்கவும் மற்றும் அதன் ஒடுக்குமுறை கொள்கைகளுக்கு ஒரு நடுத்தர வர்க்க அடித்தளத்தைக் கட்டமைக்கவும் #MeToo ஐ கையிலெடுத்து வருகிறது. #MeToo அமைப்பு போராட்டக்காரர்கள் மீது அதிகரித்து வரும் பொலிஸ் தாக்குதல்களை விமர்சிக்கவில்லை. அதற்கு பதிலாக, அது பொது வாழ்வில் அரசு கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் மற்றும் நல்ல சம்பளத்திலான வேலைகளில் ஒரு பகுதியை பெண்களுக்கு வழங்குவதை அதிகரிக்க வேண்டுமென்றும் கோருகிறது.

சீசர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்கள் குறித்த அறிவிப்புக்கு உடனடியாக பின்னர், பெண்-ஆண் சமத்துவ அமைச்சர் Marlène Schiappa, J’Accuse திரைப்படம் மீது தாக்குதலைத் தொடுக்க ஊடகங்களில் உலா வந்தார். சீசர் விருது தேர்வுக்குழு "கற்பழிப்பு கலாச்சாரத்திற்கு உடந்தையாய்" உள்ளதா என்று LCI குறித்து வினவிய போது, பிரெஞ்சு சினிமா "பாலியல் மற்றும் பெண்களை நோக்கிய பாலியல் வன்முறை விடயத்தில் முதிர்ச்சி" அடைந்திருக்கவில்லை என்று Schiappa தெரிவித்தார். J’Accuse படத்தை Terzian பாதுகாப்பது குறித்து "அதிர்ச்சி" அடைந்ததாக தெரிவித்த அவர், அப்படம் விருதுகளை வென்றால் அவருக்குப் "பெரும் ஆத்திரம்" உண்டாகுமென அவர் தெரிவித்தார்.

போலன்ஸ்கி மீதான #MeToo இன் தாக்குதல் மற்றும் சீசர் மீதான இந்த கட்டுப்பாடு மூலமாக, பிரெஞ்சு அரசாங்கம் இடதுசாரி எதிர்ப்பின் அனைத்து திரைப்படத்துறை வெளிப்படுத்தலைகளையும் இலக்கு வைத்து வருகிறது. தொழிலாள வர்க்க அண்டை பகுதிகளில் பொலிஸ் வன்முறை பற்றிய திரைப்படமான, 11 சீசர் விருதுகளுக்காக இடம் பெற்றுள்ள Les Misérables திரைப்படத்தின் பிராங்கோ-மாலியன் இயக்குனர் Ladj Ly ஐயும் Schiappa கண்டித்தார். போலன்ஸ்கி மற்றும் Ly க்கு இடையே "எந்த வித்தியாசமும்" இல்லை —அதாவது Ly உம் எந்த விருதும் பெறக் கூடாது— என்று வாதிட்ட Schiappa, Ly “விண் அதிர புகழப்படுவது" குறித்து அவர் "ஆச்சரியமடைவதாக" தெரிவித்தார்.

2018 இல் தேசியவாத மற்றும் பாசிசவாத பிரபலமான சார்லஸ் மோராஸ் இன் எழுத்துக்களைப் பிரசுரிக்க முனைந்த அமைச்சகமான கலாச்சாரத்துறையின் அமைச்சர் Frank Riester, J’Accuse படம் சம்பந்தமாக சீசர் தேர்வுக்குழு வெளியேறியதை "நல்ல முடிவு" என்று புகழ்ந்தார்.

#MeToo இயக்கமானது, அதிவலது இனவாத சக்திகளுக்கு "பெண்ணிய" மூடிமறைப்பை வழங்கும் ஒரு பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ இயக்கமாகும். திரைப்பட துறையில் #MeToo இயக்கத்தின் இலக்குகளில் உள்ள மூவரான Harvey Weinstein, Woody Allen மற்றும் Polanski ஆகியோர் யூதர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.