இலங்கை: முன்னாள் வடக்கு முதலமைச்சர், "காணாமல் போனவர்கள்" சம்பந்தமான பிரச்சாரத்தை வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதன் பக்கம் திசை திருப்ப முயல்கிறார்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையின் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது காணாமல் போனவர்கள் “உண்மையில் இறந்துவிட்டனர்” என்ற ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் சமீபத்திய கூற்று குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரின் முழு அறிக்கையும், காணாமல் போனவர்களுக்கு நீதி கோரும் சாதாரண மக்களின் பிரச்சாரத்தை, இராஜபக்ஷ, ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பெரும் வல்லரசுகளுக்கு பயனற்ற வேண்டுகோள் விடுப்பதன் பக்கம் தடம்புறளச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இராஜபக்ஷவின் கூற்று தொடர்பாக தமிழ் மக்களிடையே பெருகிவரும் எதிர்ப்பின் மத்தியிலேயே விக்னேஸ்வரனின் அறிக்கை வெளிவந்துள்ளது.

ஜனவரி 17 அன்று, ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கருடனான சந்திப்பில், ஜனாதிபதி இராஜபக்ஷ “காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள்” என்ற அசாதாரண ஏற்றுக்கொள்ளலைச் செய்தார். போரின் போது 20,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினர் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொலைப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர் அல்லது வெள்ளை வேன்களில் கடத்தப்பட்ட பின்னர் "காணாமல் போயினர்". காணாமல்போன இந்த நபர்களின் உறவினர்கள் தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். பாரிய கைதுகள் மற்றும் சரணடைவுகளுக்குப் பின்னர் அல்லது பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பெரும்பாலானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், விக்னேஸ்வரன் இந்த போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஜனாதிபதியிடம் இழிந்த முறையில் முறையிட்டார். அவர் கூறினார்: "ஜனாதிபதி ஐ.நா., மனித உரிமைகள் பேரவை, சர்வதேச சமூகம் மற்றும் நாட்டின் மக்களுக்கு, எப்போது, எங்கு, யாரால் காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்."

முன்னதாக, போரின் போது யாரும் காணமல் போகவில்லை என்று இராஜபக்ஷ மறுத்துவிட்டார் –ஏனயை இராணுவ அதிகாரிகளும் அவரை ஆதரித்தனர்.

இராஜபக்ஷவின் கூற்றைக் கண்டு யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அந்த சமயத்தில் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்ததுடன், புலிகள் மீதான கொடூரமான இறுதி தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார். அவரது சகோதரர் மஹிந்த இராஜபக்ஷ, ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதியாகவும் இருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் "உடனடியாக இந்த விஷயத்தை [யு.என்.எச்.ஆர்.சி] உறுப்பு நாடுகளுக்கு கொண்டு சென்று எங்கள் பிரச்சினைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க வேண்டும்" என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்துகிறார். அவர் குறிப்பிடுவது, அமெரிக்கா மற்றும் இலங்கையின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பாக 2015 அக்டோபரில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே ஆகும்.

இராஜபக்சவின் கொடூரமான இராணுவத் தாக்குதல்களை வாஷிங்டன் முழுமையாக ஆதரித்தது. பெய்ஜிங்குடனான உறவுகள் வளர்ந்து வருவதைக் கண்ட பின்னரே அவருக்கு எதிராக அது திரும்பியது. கொழும்பை சீனாவிலிருந்து தூர விலக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்காக, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை கோரி, யு.என்.எச்.ஆர்.சி.யில் அமெரிக்கா பல தீர்மானங்களை முன்வைத்தது. பின்னர், 2015 ஜனாதிபதித் தேர்தலில், மைத்ரிபால சிறிசேன ஆட்சிக்கு வர வாஷிங்டன் ஏற்பாடு செய்தது.

சிறிசேன மற்றும் பிரதமர் மந்திரி ரனில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, மனித உரிமைகள் குறித்த தனது பாசாங்குத்தனமான நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக்கொண்டது. 2015 செப்டம்பரில், “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தின் மூலம், அது நாட்டின் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது சொந்த விசாரணைகளை நடத்த அனுமதித்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தலைவர், எம்.ஏ. சுமந்திரன், இந்த தீர்மானத்தை பூரனப்படுத்த ஐ.நா.வின் அமெரிக்க துணைத் தூதரான மைக்கல். ஜே. சீசனை சந்திக்க நியூ யோர்க்கிற்கு பறந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே, இலங்கையின் போர்க்குற்றங்களில் உலகத்தின் மிக ஆபத்தான போர்க்குற்றவாளியான அமெரிக்காவின் ஆர்வம் போலியானதாகவே இருந்தது. இந்த விஷயத்தில், சீனாவிற்கு எதிரான அதன் ஆக்கிரோஷமான இராணுவ தயாரிப்புகளில் இலங்கையை ஒருங்கிணைப்பதற்காக அது மனித உரிமை மீறல்களை பயன்படுத்திக்கொள்கிறது.

இரண்டு ஆண்டுகளாக கால்களை பின்ன இழுத்தவாறு இருந்த சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க காணாமல் போனவர்களின் அலுவலகம் (OMP) என்று அழைக்கப்படுவதை திறந்தது. இருப்பினும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த அலுவலகத்தை ஒரு பயனற்ற நடவடிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை என்று நிராகரித்தனர்.

"பல்லாயிரக்கணக்கான மக்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதற்கான பின்னணியை சர்வதேச சமூகத்துக்கும் நமது மக்களுக்கும் ஒரு முறையான சர்வதேச சுயாதீன விசாரணையின் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்" என்று விக்னேஸ்வரன் வலியுறுத்துகிறார். இந்த "சர்வதேச சமூகம்" என்று அழைக்கப்படுவது அமெரிக்கா மற்றும் பிற பெரிய ஏகாதிபத்திய சக்திகளைத் தவிர வேறில்லை.

காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக இராஜபக்ஷவின் பொறுப்பு பற்றி விக்னேஸ்வரன் அவரை குற்றம் சாட்டவில்லை. குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரவில்லை. அதற்கு பதிலாக, ஜனாதிபதி "அவர் ஏன் இராணுவத்தை அழைத்து அவர்கள் பொறுப்பேற்றவர்களுக்கு என்ன ஆனது என்று கேட்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்," என்று அபத்தமாக கேட்டுக்கொண்டார். இவ்வாறு, இந்த தமிழ் தலைவர், காணாமல் போனவர்களுக்கான பொறுப்பு கூறுவதில் இருந்து இராஜபக்ஷவை காப்பாற்றி விடுகின்றார்.

இராஜபக்சவின் விசாரணையானது காணாமல்போன மக்களின் உறவினர்களுக்கு "மன அமைதியைக் கொடுக்கும்" என்றும், இதுபோன்ற "பொறுப்புக்கூறல் செயல் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்" என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

விக்னேஸ்வரன் பரிந்துரைத்த நல்லிணக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முதலாளித்துவத்திற்கு கூடுதல் நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பு அரசியல் ஸ்தாபகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் ஆகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பிற தமிழ் கட்சிகளின் தலைவர்களைப் போல், விக்னேஸ்வரனும், இலங்கையின் போரில் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை கொழும்பிடமிருந்து சலுகைகளைப் பெற பயன்படுத்துகின்றார். பெரும் வல்லரசுகளுக்கான அவர்களது வேண்டுகோள்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வுக்காக கொழும்புடன் பேரம் பேசுவதற்காக அவற்றின் ஆதரவை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

நிர்வாகத்தை இராணுவமயமாக்குவதற்கான இராஜபக்ஷவின் நடவடிக்கைகளைப் பற்றி விக்னேஸ்வரன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து திரும்பப் பெற அவரது தமிழ் மக்கள் கூட்டணி மற்ற தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.

விக்னேஸ்வரன் பிற்போக்கு அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்வாங்கப்பட்ட ஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. அவர் கட்சியில் உறுப்பினராக கூட இல்லை என்றாலும், கொழும்பு அரசாங்கத்தையும் சர்வதேச சக்திகளையும் சமாளிக்கக்கூடிய ஒரு மரியாதைக்குரிய மனிதராக 2013 மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தது.

அமெரிக்க சார்பு சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் உண்மையான பங்காளியாக செயல்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்புக்கு எதிர்ப்பு அதிகரித்து வந்த நிலையில், விக்னேஸ்வரன் ஒரு மாற்றீட்டை வழங்குவதாக கூறி, மற்றொரு தமிழ் வகுப்புவாத கட்சியாக தனது சொந்த தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கினார்.

எவ்வாறாயினும், விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயமானவையே, அடிப்படையானவை அல்ல. இரு கட்சிகளும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் அவல நிலையை சுரண்டிக்கொள்வதோடு, சீனாவுக்கு எதிராக வாஷிங்டனும் இந்தியாவும் முன்னெடுக்கும் புவிசார் அரசியல் உந்துதலுக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக அவர் பெருகிய முறையில் தமிழ் இனவாதத்தை தூண்டிவிடுகிறார். சில இனவாதக் கட்சிகளுடன் சேர்ந்து, அவர் கடும்போக்கு தேசியவாத "எழுக தமிழ்" இயக்கத்தை ஏற்பாடு செய்தார்.

இந்த வகுப்புவாத பிரச்சாரமானது நீதியைக் கோருகின்ற தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே வளரும் அமைதியின்மைக்கும், மற்றும் கொழும்பு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை கட்டவிழ்த்து விடுவதால் சமூக நிலைமைகள் மேலும் மோசமடைவதற்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களுக்கும் எதிரான ஒரு பிரதிபலிப்பாகும்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்கள் சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுடன் இணைந்து வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். கொழும்பு ஸ்தாபகத்தைப் போலவே, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் குழுக்களும் இந்த ஒன்றுபட்ட போராட்டங்களால் பீதியடைந்துள்ளன, ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரட்டலுக்கான வழிகளைத் திறக்கின்றன.

போரின்போது தமிழர்கள் காணாமல் போனதைப் போல, வளர்ந்து வந்த கிராமப்புற அமைதியின்மையை அடக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட 1988-1990 பயங்கரத்தின் போது, இலங்கை பாதுகாப்புப் படையினரும், கொலைக் குழுக்களும் சிங்கள இளைஞர்களை அவர்களது வீடுகளில் இருந்து இழுத்துச் சென்று 60,000 பேரைக் கொன்றன.

தமிழ் மக்கள் உலகெங்கிலும் போருக்கு உந்தும் அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது. மத்திய அரசு பிராந்தியத்தை அடைத்து, தனது நேரடி ஆட்சியை தினித்த பின்னர் காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு எதிராக மிருகத்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள அமெரிக்காவின் பிராந்திய "கூட்டாளியான" புது தில்லியையும் அவர்கள் நம்ப முடியாது, ஐக்கிய நாடுகள் சபையோ இத்தகைய பெரும் வல்லரசுகளின் அரசியல் சதித்திட்டங்களின் மையமாக இருந்து வருகிறது.

இலங்கையின் வடக்கில் உள்ள மக்கள் தமிழ் தேசியவாதத்தை நிராகரித்து சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு மூல காரணமான முதலாளித்துவத்தை தூக்கியெறிய வேண்டும். தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்குக்காக போராடுகிறது.