ஹானோ நகரப் படுகொலைக்குப் பின்னர் ஜேர்மனியில் வலதுசாரி பயங்கரவாதத்தை நிறுத்து!

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு வலதுசாரி தீவிரவாத பயங்கரவாதி புதன்கிழமை இரவு ஜேர்மன் ஹெஸ்ஸ மாநிலத்தின் ஹானோ நகரில் துப்பாக்கியால் சுட்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அவர் இன்னும் ஆறு நபர்களையும் காயப்படுத்தி இருந்தார், அதில் ஒருவர் மோசமான நிலையில் உள்ளார். இந்த படுகொலைகள் பெருவாரியாக புலம்பெயர்ந்தவர்கள் கூடுதலாக வந்து போகும் இரண்டு ஹூக்கா கூடங்களில் [hookah bars] நடந்தது. அந்த துப்பாக்கிதாரியும் அவர் தாயாரும் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்ததைப் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

துப்பாக்கிதாரியாக குற்றஞ்சாட்டப்படுபவர், ஹானோவில் வளர்ந்து பைரோய்த் (Bayreuth) நகரில் பொருளாதாரம் படித்த 43 வயதான Tobias. R என்பவர் ஆவார். தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு, அவரால் எழுதப்பட்டு அந்த தாக்குதலுக்கு முன்னரே இணையத்தில் அவரால் பிரசுரிக்கப்பட்டிருந்த 24 பக்க ஆவணத்தில், R. “ஓர் ஆழ்ந்த இனவாத கண்ணோட்டதை" காட்டியிருந்ததாக அந்த சம்பவத்தை விசாரித்து வரும் மத்திய வழக்குத்தொடுனர் பீட்டர் பிராங்க் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

அந்த ஆவணத்தில், அதை எழுதியவர் தன்னைத்தானே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஓர் ஆதரவாளராக அறிவித்திருந்தார். ஒரு எதிர்காலப் போரில் ஒட்டுமொத்த நாடுகளையும் "முற்றிலுமாக அழிப்பது" நியாயமானதா என்றவர் பரிசீலிக்கிறார். ஜேர்மனியர்களில் எத்தனை பங்கினர் "சுத்தமான மற்றும் மதிப்புடைய ஜேர்மனிய இனத்தவர்கள்" என்று ஊகிக்கும் அவர், அடோல்ஃப் ஹிட்லரை விட மிகப் பெரியளவில் மனிதகுலப் படுகொலைக்கு திட்டங்களைத் தீட்டுகிறார். அவர் ஆசியாவின் அரைவாசி பகுதிகள், வட ஆபிரிக்காவின் பல்வேறு மக்கள் மற்றும் இஸ்ரேல் உட்பட 20 க்கும் அதிகமான நாடுகளைப் பட்டியலிடுவதுடன், அவற்றின் மக்கள் நிர்மூலமாக்கப்பட வேண்டுமென சிந்திக்கிறார்.

இதை போலவே வலதுசாரி தீவிரவாதிகளால் 1980 இல் நடத்தப்பட்ட அக்டோபர் மாத கொண்டாட்ட குண்டுவெடிப்புக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கையில், இந்த ஹானோ படுகொலையே ஜேர்மனியில் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலாக உள்ளது. ஜேர்மனியில் பல தொடர்ச்சியான கொலைகார வலதுசாரி தீவிரவாத தாக்குதல்களில் இது சமீபத்தியது மட்டுமே ஆகும்.

· 2000 மற்றும் 2006 க்கு இடையே, தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு பயங்கரவாத குழு ஒன்பது புலம்பெயர்ந்தோரையும் ஒரு பொலிஸ் அதிகாரியையும் படுகொலை செய்தது;

· 18 வயதான வலதுசாரி தீவிரவாதி டேவிட் சொன்பொலே, ஜூலை 22, 2016 இல், முனீச்சில் ஒன்பது பேரைப் படுகொலை செய்தார்;

· பொலிஸிற்கு நன்கறியப்பட்ட ஒரு நவ-நாஜி, ஜூன் 2, 2019 இல் ஹெஸ்ஸ மாநிலத்திலுள்ள காசெல் மாகாண தலைவர் வால்டர் லூப்க்க ஐ கொலை செய்தார்;

· அக்டோபர் 9, 2019 இல், யூதர்களின் Yom Kippur தேவாலய வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த 70 பேர் ஒரு கூட்டுப்படுகொலை நடவடிக்கையிலிருந்து மயிரிழையில் தப்பினர். துப்பாக்கிதாரி ஸ்டீபன் பேலியட் அந்த வழிபாட்டுத் தலத்திற்குள் பலவந்தமாக நுழைய முடியாமல் போனதும், அங்கே அவ்வழியில் சென்று கொண்டிருந்த இருவரைத் துப்பாக்கியால் சுட்டார்;

· நாடெங்கிலுமான மசூதிகளில் ஒரே நேரத்தில் படுகொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டி, கடந்த வாரயிறுதியில், பொலிஸ் பன்னிரெண்டு நபர்களைக் கைது செய்தது.

அரசாங்க பிரதிநிதிகளும் நாடாளுமன்ற கட்சிகளும் அத்தாக்குதலை பற்றி அதிர்ச்சியடைந்ததாகவும் அதனை நம்பமுடியாததாகவும் இருந்தது என்றனர். என்னவொரு பாசாங்குத்தனம்! இந்த தாக்குதல் தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிக்கும் இதே அரசியல்வாதிகள் தான் வலதுசாரி தீவிரவாத பயங்கரவாதத்திற்கான சித்தாந்த மற்றும் அரசியல் சூழலை உருவாக்கியவர்கள். அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சி வலதுசாரி பயங்கரவாதிகளின் அரசியல் அங்கமாக செயல்படுகிறது என்றால், பின்னர் உள்நாட்டு உளவுத்துறையோ, மகா கூட்டணி அரசாங்கத்தின் உதவியுடன், அதன் அரசு அங்கமாக செயல்படுகிறது. இந்த ஹானோ தாக்குதல், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முதல்முறையாக ஒரு அதிவலது கட்சியான AfD இன் வாக்குகளின் உதவியுடன் அதன் அண்டை மாநிலம் தூரிங்கியாவில் ஒரு முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டு வெறும் இரண்டு வாரங்களில் நடந்துள்ளது.

நியூயோர்க்டைம்ஸே கூட குறிப்பிட்டதைப் போல, இந்த தேர்வானது அதிவலதின் "மிகப்பெரும் வெற்றியை" பிரதிநிதித்துவம் செய்தது. “புலம்பெயர்ந்தோர் சம்பந்தமாக மத்தியவாதிகளும் அதிவலதுகளும் ஒரே மாதிரியான கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இடதுசாரிகளை ஒரு பொதுவான எதிரி என்ற கருத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்போது, தசாப்தங்களிலேயே முதல்முறையாக, அவர்கள் ஓர் ஆளுநரையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று அப்பத்திரிகை கருத்துரைத்தது.

வைய்மார் குடியரசின் கடைசி ஆண்டுகளைப் போல, அங்கே இன்று பாசிச இயக்கத்திற்கு பாரிய ஆதரவு அடித்தளம் இல்லை. மக்களில் பெரும் பெரும்பான்மையினர், அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள், AfD அரசியல்வாதிகளை அலட்சியத்துடனும் சீற்றத்துடனும் பார்க்கிறார்கள். இந்த வலதுசாரி தீவிரவாத கட்சி எல்லாவற்றையும் விட அதிகமாக இராணுவம், பொலிஸ் மற்றும் அரசு அமைப்புகளின் பலமான ஆதரவைச் சார்ந்துள்ளது, இவற்றில் இருந்தும் மற்றும் AfD தலைமையின் பெரும்பான்மையினர் எந்தெந்த ஸ்தாபக கட்சிகளில் இருந்து வந்தார்களோ அவற்றில் இருந்துமே, அக்கட்சியின் பெரும்பாலான வாக்காளர்களும் உறுப்பினர்களும் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். ஜேர்மன் அரசியலில் அது செல்வாக்கான கட்சியான வளர்கிறது என்றால் அது ஆளும் உயரடுக்கு சம்பந்தப்பட்டுள்ள ஓர் அரசியல் சதியின்-சூழ்ச்சியின்- விளைவாகும்.

2017 இல் மகா கூட்டணியில் தொடர்வதென சமூக ஜனநாயகக் கட்சி (SPD) முடிவெடுத்ததன் மூலமாக, கடந்த மத்திய தேர்தலில் AfD வெறும் 12.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்த போதினும் கூட AfD ஐ நனவுபூர்வமாக அது உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக ஆக்கியது. அப்போதிருந்து, அந்த அதிவலது கட்சி பல்வேறு முக்கிய நாடாளுமன்ற குழுக்களின் தலைமையில் நியமிக்கப்பட்டு வருகிறது என்பது உள்ளடங்கலாக அது நாடாளுமன்ற செயல்பாடுகளுக்குள் முழுமையாக ஒருங்கிணைந்துள்ளது. அகதிகள் தொடர்பாக AfD இன் கொள்கையையே ஏற்றுள்ள மகா கூட்டணி, இராணுவவாத திட்டநிரலுடன், சமூக செலவினங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களையும் பின்தொடர்ந்து வருகிறது. இவற்றை பாசிசவாத வழிமுறைகள் மூலமாக, அதாவது AfD இன் ஆதரவுடன் மக்கள் எதிர்ப்பை உடைக்கும் வழிமுறைகள் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும்.

அதே நேரத்தில், உளவுத்துறை முகமைகளிடம் இருந்தும் AfD ஆதரவும் ஆலோசனைகளும் பெற்று வருகிறது. ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்பு பாதுகாப்பு முகமையின் (Verfassungsschutz) முன்னாள் தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன் இப்போது பகிரங்கமான AfD ஆதரவாளராக உள்ளார். இந்த Verfassungsschutz முகமை, உளவாளிகள் வலையமைப்பின் ஒத்துழைப்புடன், இராணுவம் மற்றும் பொலிஸ் உடன் தொடர்புகளைக் கொண்டுள்ள அதிவலது வலையமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி வழிநடத்தி வருகிறது. இத்தகைய தகவல் வழங்கும் -உளவாளிகளில்- பலர் NSU ஐ சுற்றியுள்ள நெருக்கமான வட்டாரத்தில் செயலூக்கத்துடன் செயற்பட்டுள்ளனர்.

மகா கூட்டணியும் அதன் உளவுத்துறை முகமைகளும் அதிவலது வளர்ச்சியை ஊக்குவித்து அதற்கு சுதந்திரமாக செயற்படவிட்டுள்ள அதேவேளையில், அவை இடதுகளுக்கு எதிராக ஒரு கடுமையான தாக்குதலைத் தொடுக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) AfD க்கு எதிராகவும், ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வருவதுடன், முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைப்பதால், 2018 க்குப் பின்னர் இருந்து, மகா கூட்டணியின் Verfassungsschutz அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியை (Sozialistische Gleichheitspartei) “கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டிய அமைப்பாக" பட்டியலிட்டுள்ளது.

சித்தாந்தரீதியில், திட்டமிட்டு பல்கலைக்கழகங்களில் வரலாறை திருத்தி எழுதியதன் மூலமும் மற்றும் நாஜிக்களின் குற்றங்களைக் குறைத்துக் காட்டியதன் மூலமும், AfD மற்றும் ஏனைய அதிவலது வலையமைப்புகளுக்கு பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் "வக்கிரமானவர் இல்லை" என்றும், அவர் "அவுஸ்விட்ச் குறித்து எதையும் அறிந்து கொள்ளவே விரும்பவில்லை" என்றும் வாதிட்ட ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இதில் ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ளார். அவரே கூட ஒரு வலதுசாரி தீவிரவாத வலையமைப்பின் பாகமாக உள்ள நிலையில், பார்பெரோவ்ஸ்கி சர்வாதிகாரங்களை "மாற்று ஒழுங்குமுறைகள்" என்று பாராட்டுவதுடன், அகதிகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை "ஒப்பீட்டளவில் தீங்கில்லாதவை" என்கிறார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் தேர்தல் விளம்பர அட்டைகளை அந்த பேராசிரியர் கிழித்தெறிவதை ஒரு பல்கலைக்கழக மாணவர் பார்த்ததும், பார்பெரோவ்ஸ்கி அவரை சரீரரீதியில் தாக்கினார். அந்த சம்பவம் காணொளியில் பதிவாகி உள்ள போதினும் கூட, ஹம்போல்ட் பல்கலைக்கழக தலைவர் சபீன குன்ஸ்ட் (SPD) அந்த வலதுசாரி தீவிரவாத பேராசிரியரை பாதுகாத்ததுடன், அப்பெண்மணி அவரது நடவடிக்கை புரிந்து கொள்ளக்கூடியதே என்றும் தெரிவித்தார். மத்திய அரசாங்கமும் பார்பெரோவ்ஸ்கியை ஆதரிக்கிறது. இத்தகைய நிலைமைகளின் கீழ், ஹானோவில் நடந்ததைப் போன்ற வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத தாக்குதல்கள் வெறுமனே சாத்தியம் மட்டுமல்ல, மாறாக நிச்சயமாகவும் நடக்கலாம். அவை மகா கூட்டணியால் முன்னெடுக்கப்பட்டு எல்லா கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் அகதிகள் விரோத ஆத்திரமூட்டல் மற்றும் கம்யூனிச விரோத வெறித்தனம் மற்றும் இராணுவவாதத்தின் விளைபொருளாகும். ஜேர்மனியில் மக்களிடையே அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, மீண்டுமொருமுறை பாசிசவாதத்தை ஓர் அரசியல் சக்தியாக மீளஸ்தாபிதம் செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

ஹானோ துப்பாக்கிதாரி "தனித்த ஓநாய்" என்ற உத்தியோகபூர்வ விளக்கமானது அபத்தமானது. அதிவலது வலையமைப்புகள் பொலிஸ், ஆயுதப்படை, மற்றும் உளவுத்துறை முகமைகளுடன் நெருக்கமான தொடர்புகளை அனுபவித்து வருவதுடன், பத்தாயிரக் கணக்கான பெயர்களுடன் கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல்களை பேணுவதுடன் மற்றும் நடைமுறையளவில் தடையின்றி செயல்படுகின்றன.

லூப்க்க படுகொலைக்குப் பின்னர், அதிவலது பயங்கரவாத நடவடிக்கைகளின் அளவை மறைப்பதற்கு தனித்த ஓநாய் என்ற தத்துவம் சேவையாற்றியது. குற்ற முன்வரலாறு கொண்ட ஒரு நவ-நாஜியான படுகொலைகாரர் என்று குற்றஞ்சாட்டப்படும் ஸ்டீபன் ஏர்ன்ஸ்ட் மற்றும் அவர் உடனிருந்த Markus H. உம் பல ஆண்டுகளாக அதிவலது அரசியலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும், Verfassungsschutz உடன் நெருக்கமாக தொடர்பில் இருந்துள்ளனர் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. இதன் மீது தெளிவைக் கொண்டு வரக்கூடிய கோப்புகள் 40 ஆண்டுகளுக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

தூரிங்கியா சம்பவங்களைத் தொடர்ந்து, WSWS, “எச்சரிக்கை மணி ஒலிக்கட்டும்! ஜேர்மனியில் அரசியல் சதித்திட்டமும் பாசிசத்தின் எழுச்சியும்" என்ற அதன் முன்னோக்கில் பின்வருமாறு எச்சரித்தது: “ஜேர்மனியின் அரசியல் சூழ்நிலை, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கவனத்தைக் கோருகிறது. 20 ஆம் நூற்றாண்டு வரலாற்று வெளிச்சத்தில், ஜேர்மனியில் நவ-நாசிசத்தின் மீள்வரவை நோக்கி ஒரு மெத்தனமான நிலைப்பாடு எடுப்பது சாத்தியமே இல்லை.”

இந்த எச்சரிக்கை ஒரு சில நாட்களிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “உலகெங்கிலும் போலவே, ஜேர்மனியிலும் அரசியல் தீவிரமயப்படல் நிகழ்வுபோக்கு நடந்து வருகிறது. மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூரிங்கியா சம்பவங்கள் இந்த நிகழ்வுபோக்கை விரைவுப்படுத்தும்,” என்று நாம் வரைந்த தீர்மானத்தை ஹானோ தாக்குதல் உறுதிப்படுத்துகிறது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) அதிவலதுக்கு எதிரான போராட்டங்களை விரிவுபடுத்தவும் மற்றும் ஒரு தெளிவான அரசியல் முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கவும் அழைப்பு விடுக்கிறது. ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்பு பாதுகாப்பு முகமை (Verfassungsschutz) கலைக்கப்பட வேண்டும் மற்றும் இடது சாரி குழுக்கள் மீதான உளவுபார்ப்பு மற்றும் இன்னலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஜேர்மனி மீண்டும் ஆக்ரோஷமான இராணுவ வெளியுறவு கொள்கையை நோக்கி திரும்புவதை நிறுத்து! பாசிசவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடு!

கட்டுரையாளர்பரிந்துரைக்கும்ஏனையகட்டுரைகள்:

1930 களின் பேராபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கட்டும்! ஜேர்மனியில் அரசியல் சதித்திட்டமும், பாசிசத்தின் எழுச்சியும்
[14 February 2020]

A socialist perspective against the return of fascism in Europe
[8 May 2019]

Loading