1930 களின் பேராபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கட்டும்! ஜேர்மனியில் அரசியல் சதித்திட்டமும், பாசிசத்தின் எழுச்சியும்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தூரிங்கியா மாநிலத்தில் ஓர் மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதில் அதிதீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) க்கு ஒத்துழைப்பதென கடந்த வாரம் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியின் (FDP) கடந்த வார முடிவு, ஜேர்மன் அரசியலின் இழிந்த நிலையை வெளிப்படுத்துகின்றது. மூன்றாம் குடியரசு தோல்வியடைந்து எழுபத்தி ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், ஹிட்லருக்கும் முற்றிலும் நாஜிக்களுக்கும் வக்காலத்துவாங்குபவர்களால் நடத்தப்படும் ஒரு கட்சி ஆளும் உயரடுக்கால் ஒரு சட்டபூர்வ அரசியல் பங்காளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜேர்மனி ஏர்ஃபோர்ட்டில் AfD ஆதரவாளர்கள் கட்சி தேர்தல் விளம்பரத்துடன் நடந்து செல்கின்றனர் [படம்: அசோசியேடெட்பிரஸ்/ ஜென்ஸ்மெயெர்]

கடந்த தசாப்தத்தின் போது ஜேர்மனியில் அரசியல் வலதின் வளர்ச்சி, சர்வதேச ஊடகங்களில் மிகவும் குறைவாக குறிப்பிடப்பட்ட செய்திகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தூரிங்கியா சம்பவங்களுக்குப் பின்னர், நியூயோர்க்டைம்ஸ் கூட ஜேர்மன் பாசிசவாதத்தின் எழுச்சியை ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக புறக்கணித்து விட முடியாது என்பதை உணர்ந்துள்ளது. டைம்ஸ்அதன் பெப்ரவரி 7 பதிப்பின் ஒரு கட்டுரையில் எழுதியது:

சில சமயங்களில், மேற்பரப்பின் கீழ் இருப்பதை வெளியில் கொண்டு வர ஒரு பூகம்பம் தேவைப்படுகிறது.

கிழக்கு ஜேர்மன் மாநிலமான தூரிங்கியாவின் இவ்வார பிராந்திய தேர்தல் ஜேர்மனியின் அரசியல் மையத்தின் பேரழிவுகரமான நிலையையும், இப்போது அது பேணி வருவதாக பிரகடனப்படுத்தும் பாசிச-விரோத பொதுக்கருத்திலிருந்து அந்நாடு எவ்வளவு தூரத்தில் நிற்கிறது என்பதையும் எடுத்துக்காட்டியது.

நாஜிக்களால் அழிக்கப்படும் வரையில் ஜேர்மனியில் முதன்முதலில் குறுகிய காலம் உயிர்வாழ்ந்திருந்த ஜனநாயக அனுபவமான மூன்றாம் குடியரசு தற்போதைய ஜேர்மனியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று குறிப்பு புள்ளியாகியுள்ளது.

AfD உடன் CDU மற்றும் FDP இன் ஒத்துழைப்பு, "நாஜி சகாப்தம் முடிந்ததற்குப் பின்னர் இருந்து ஜேர்மன் அரசியலில் இடத்தை பெற்றிருந்த ஒரு தடை உடைந்துவிட்டது. FDP இன் திரு. கெம்மரிச் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஒரு வலதுசாரி கட்சியின் வாக்குகளை சார்ந்து நின்று தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உயர்மட்ட ஜேர்மன் அரசியல்வாதியாக ஆனார்,” என்று டைம்ஸ்ஒப்புக் கொண்டது.

AfD உடன் ஒத்துழைப்பதென்ற CDU மற்றும் FDP இன் முடிவு பற்றி டைம்ஸ் தொடர்ந்து குறிப்பிட்டது,

குறிப்பாக தூரிங்கியாவில் கவலைக்குரியது என்னவெனில், அங்கே பிராந்திய நாடாளுமன்றத்தில் FDP வெறுமனே இரண்டாவது பலமான கட்சி என்பது மட்டுமல்ல, மாறாக வேறெந்த மாநிலத்தையும் விட அதிக தீவிரமானதாகவும் இருந்துள்ளது. அங்கே AfD இன் தலைவர் பியோர்ன் ஹொக்க “Der Flügel” என்று அறியப்படும் கட்சிக்குள் உள்ள ஒரு கடுமையான நிலைப்பாட்டை கொண்ட பிரிவின் தலைவராக உள்ளார். அவர், 2018 என்ற நூலில், “மக்கள் பிரதியீடு செய்யப்படுவதன் மூலமாக தேசத்தின் மரணம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது,” என்று எச்சரித்தார். அவரைச் சட்டபூர்வமாக ஒரு பாசிசவாதியாக குறிப்பிடலாமென கடந்தாண்டு ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

டைம்ஸ் பின்வருமாறு நிறைவு செய்தது:

அதிவலதைப் பொறுத்த வரையில், இந்த வாரம் ஒரு நிகரில்லா வெற்றியாகும். AfD இன் தலைவர்கள் நீண்ட காலமாகவே மத்தியவாத மற்றும் பழமைவாத கட்சிகளுடன் ஒரு நெருக்கத்தை அனுமானித்து நம்பி இருந்தனர். புதன்கிழமை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூரிங்கியா ஆளுநரை வாழ்த்துவதற்கு கைக்குலுக்கிய போது, திரு. ஹொக்க புன்னகைத்தார். அந்த காட்சி, ஜேர்மனியர்கள் பலருக்கும் ஒரு பிரபலமான 1933 புகைப்படத்தை நினைவூட்டியது, அதில் அடோல்ப் ஹிட்லர் ஜேர்மனியின் அப்போதைய ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்க்கை வாழ்த்துகிறார்.

2020 இன் ஜேர்மனி 1933 இன் ஜேர்மனியை போல் இல்லை. ஆனால் ஜேர்மன் அரசியல் சமீபத்திய ஆண்டுகளில் கவலைக்குரிய விதத்தில் மாறியுள்ளது. மத்தியவாதிகளும் அதிவலதினரும் புலம்பெயர்ந்தோர் பற்றி தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இடதை ஒரு பொதுவான எதிரியாக கருதுவதை பகிர்ந்து கொள்கிறார்கள். இப்போதோ, பல தசாப்தங்களில் முதல்முறையாக, அவர்கள் ஓர் மாநில முதல்வரை கூட பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜேர்மனியில் ஒரு தீவிரமான நவ-நாஜி எழுச்சி இருப்பதைக் குறித்து இதற்கு முன்னர் ஊடகங்களில் ஏறத்தாழ ஒன்றும் வாசித்திராத அல்லது கேள்விப்பட்டிராத டைம்ஸ் வாசகர்கள், தூரிங்கியாவின் சம்பவங்கள் எதிர்பார்த்திராத ஒரு திடீர் நிகழ்வு என்று நம்புவதற்கு இட்டுச்செல்லப்படலாம்.

ஆனால் இது அவ்வாறு இல்லை. இந்த சம்பவங்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட எண்ணற்ற கட்டுரைகளில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei – SGP) ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகளினது நீடித்த எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகின்றன. ஹிட்லரிசத்தின் வளர்ச்சியில் ஒரு பிரதான பாத்திரம் வகித்த அதே மாநிலமான தூரிங்கியாவில் இந்த அரசியல் சூழ்ச்சியானது, நவ-நாஜி அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியைச் செயலூக்கத்துடன் ஊக்குவிக்கவும் சட்டபூர்வமாக்கவும் ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் உள்ளடங்கலாக, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கட்டவிழ்த்து விடப்பட்ட, ஓர் அரசியல் சதியின் விளைவாகும்.

AfD இன் வளர்ச்சியை விவரிக்கையில் "சதி" என்ற வார்த்தையின் பிரயோகம் முற்றிலும் பொருத்தமானதே. 1920 கள் மற்றும் 1930 களின் நாஜிக்களுக்கும் AfD க்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் என்னவென்றால் இந்த நவீன-கால பாசிசவாத அமைப்பு ஒரு பாரிய இயக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. 2013 இன் தொடக்கத்தில் CDU மற்றும் FDP உடனான ஒரு உடைவில் இருந்து மேலெழுந்த, AfD உறுப்பினர்களில் பெரும் பங்கினர் அரசு அமைப்பிலிருந்து அனைத்திற்கும் மேலாக இராணுவம், நீதித்துறை மற்றும் பொலிஸில் இருந்து நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் முன்னதாக ஏதேனுமொரு ஸ்தாபக கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார்கள். சான்றாக:

  • ஹிட்லரின் இராணுவத்தைப் பெருமைபீற்றுபவரும் ஹிட்லர் மற்றும் நாஜிக்களை வெறுமனே "வெற்றிகரமான 1,000 ஆண்டுகாலத்திற்கு மேலான ஜேர்மன் வரலாற்றின் மீது விழுந்த ஒரு பறவையின் எச்சம்" என்று விவரிப்பவருமான AfD இன் கௌரவத் தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட், 40 ஆண்டுகளாக CDU இன் உயர்மட்ட நிர்வாகியாக இருந்தார்.
  • ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் AfD பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை கொடுக்கும் Guido Reil என்பவர் IG BCE தொழில்துறை வர்த்தகச் சங்கத்தின் ஓர் உறுப்பினர் என்பதுடன், 2016 இல் AfD இல் இணைவதற்கு முன்னர் 26 ஆண்டுகளாக சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இன் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
  • AfD பேர்லின் பிராந்தியதலைவர் Georg Pazderski, புளோரிடாவின் தாம்பாவில் MacDill விமானப்படை தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் மற்றும் நேச கூட்டுப்படையின் லிஸ்பன் கட்டளையகம் உட்பட நேட்டோ தலைமையகங்களில் சேவையாற்றிய ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி ஆவார்.

AfD இன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதன் முயற்சியில், ஆளும் வர்க்கம் ஓர் அடிப்படையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. இந்த பாசிசவாதிகள் பெரும் பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படுகிறார்கள்.

AfD செப்டம்பர் 2017 இல் வெறும் 12.6 சதவீத வாக்குகளுடன் மத்திய நாடாளுமன்றம் Bundestag இக்குள் நுழைந்த போது, அங்கே நாடெங்கிலும் தன்னிச்சையான பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 2018 இல் AfD ஒரு மத்திய பங்கு வகித்திருந்த கெம்னிட்ஸ் நகர பாசிசவாத கலகங்களுக்குப் பின்னர், நூறாயிரக் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர். பேர்லினில் மட்டும், 250.000 மக்கள் அக்டோபர் 13, 2018 இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அக்டோபரில் Halle நகரில் யூத வழிபாட்டுத் தலங்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றும் மிக சமீபத்தில் தூரிங்கியாவில் கெம்மரிச் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தும் இனவாதம் மற்றும் பாசிசவாத வன்முறைக்கு எதிராக தன்னிச்சையாக பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பாரிய மக்கள் விரோதத்தினை எதிர்கொள்கையில், அதிகார பதவிகளுக்கு மேலுயர்வதற்கு AfD பிரதான கட்சிகளின் ஒத்துழைப்பைச் சார்ந்திருந்தது. கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் மகா கூட்டணி மத்திய அரசாங்கம், AfD இன் செல்வாக்கிற்கு முட்டுக்கொடுப்பதற்கு தீர்க்கமான இயங்குமுறையாக இருந்துள்ளது.

2017 தேர்தல்களுக்குப் பின்னர், ஜேர்மன் நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒரு புதிய அரசாங்கத்திற்கான கட்டமைப்பைத் தீர்மானிப்பதற்காக ஆறு மாதங்களுக்கும் அதிகமாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் செலவிட்டன. இந்த நிகழ்முறையில், குறிப்பாக ஜேர்மனியின் விரிவார்ந்த மீள்இராணுவமயமாக்கல், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்கள், AfD உடன் திட்டமிட்ட கூட்டுறவு ஆகியவை சம்பந்தமாக நீண்டகால உடன்படிக்கைகள் எட்டப்பட்டன.

நவம்பர் 2017 இன் இறுதியில், ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் ஒரு கூட்டு சந்திப்பிற்காக AfD இன் துணைத்தலைவர்கள் அலெக்சாண்டர் கௌலாண்ட் மற்றும் அலிஸ் வைடெலை அவரின் அரசு இல்லமான பெல்வியு மாளிகைக்கு வரவேற்றார். அந்த சந்திப்பு மத்திய பத்திரிகை அலுவலகத்தில் இருந்து புகைப்படங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2018 இல் மகா கூட்டணி அதிகாரத்திற்கு வந்த போது, அது தீவிர வலதினது கொள்கைகளின் பெரும் பகுதிகளை ஏற்றுக் கொண்டதுடன், வெகு விரைவிலேயே AfD ஐ அசியல் அமைப்புமுறைக்குள் ஒருங்கிணைத்தது.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இந்த நிகழ்முறையில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. AfD மொத்த வாக்காளர்களில் எட்டில் ஒருவரின் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தது என்ற போதினும், CDU உடன் சேர்ந்து கூட்டாக ஆட்சி செலுத்துவது என்று SPD தீர்மானித்ததன் விளைவாக, AfD உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக ஆனது. இது AfD இன் நாடாளுமன்ற மற்றும் ஊடக பிரசன்னத்தைப் பரந்தளவில் அதிகரித்தது. ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வு தொடங்கும் போதும் முக்கிய ஒளிபரப்பு நேரங்களிலும் ஊடகங்களில் கௌலாண்ட் மற்றும் அவரின் சக கூட்டாளிகளால் அவர்களின் பாசிசவாத அருவருப்பைப் பரப்ப முடிந்தது. இழிவார்ந்த வலதுசாரி தீவிரவாதிகள், SPD ஆதரவுடன் முக்கிய நாடாளுமன்ற குழுக்களின் உயர்மட்டத்திற்கு உயர்ந்துள்ளனர்.

AfD ஐ உள்ளெடுத்துக் கொண்டமை, AfD இன் இரண்டு முக்கிய விடயங்களான நாசிசத்தை நியாயப்படுத்துதல் மற்றும் சோசலிச இடதுக்கு எதிரான போராட்டம் ஆகியவை மகா கூட்டணி பரிவாரத்தின் இன்றியமையா அம்சமாக உள்ளன. 2018 இல், ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்பு பாதுகாப்பு முகமையால் [Verfassungsschutz- ஜேர்மனியின் இரகசிய சேவை இவ்வாறு தான் அழைக்கப்படுகிறது], அரசு உத்தரவுக்கிணங்க வெளியிடப்பட்ட அறிக்கை, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) சற்றும் விட்டுக்கொடுக்காமல் AfD ஐ மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தை எதிர்க்கிறது மற்றும் முதலாளித்துவ-விரோத சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது என்ற அடித்தளத்தில் SGP ஐ "உளவுபார்ப்பதற்குரிய ஓர் அமைப்பாக" மேற்கோளிட்டது.

AfD மற்றும் “The Wing” உம் "இடதுசாரி தீவிரவாதிகள்" என்று கூறப்படுபவர்களால் "பலியானவர்கள்" என்பதாக ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்பு பாதுகாப்பு முகமையால் அனுதாபத்துடன் குறிப்பிடப்பட்டன. இந்த வலதுசாரி பயங்கரவாத வலையமைப்புகள் இராணுவம், பொலிஸ் மற்றும் இரகசிய சேவைகள் வரையில் நீண்டு விரிவடைந்துள்ளன என்பது பொதுவாக அறியப்பட்ட ஒரு விடயமாக உள்ளது. இந்த வலையமைப்புக்கள் பத்தாயிரக் கணக்கானவர்களை இலக்குகளாக கொண்டுள்ள மரண பட்டியல்களை வைத்துள்ளன. ஜூன் 2, 2019 இல் பிரபல CDU அரசியல்வாதி வால்டர் லூப்க்க கொல்லப்பட்டதற்குப் பின்னரும் கூட அவர்களின் நடவடிக்கைகள் பெரிதும் ஜேர்மன் அரசால் அலட்சியமாக உதறிவிடப்படுகின்றன. லூப்க்க AfD ஐ விமர்சித்ததற்காகவே கொல்லப்பட்டார் என்று பரவலாக சந்தேகிக்கப்படுகிறது. ஓர் உயர்மட்ட அரசியல்வாதி கொல்லப்பட்டமை தொடர்பான செய்திகள், ஒருசில வாரங்களுக்குள்ளேயே ஊடகங்களால் கைவிடப்பட்டன.

சமூக ஜனநாயகக் கட்சியின் முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் அரசியல்ரீதியில் முதுகெலும்பற்ற இடது கட்சி [Die Linke] தூரிங்கியா நிகழ்வுகளுக்கு வலதை நோக்கிய மற்றொரு கோழைத்தனமான திருப்பத்துடன் விடையிறுத்து வருகிறது. அது CDU இன் நன்மதிப்பைப் பெற முயல்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக AfD உடன் ஒத்துழைக்க அது தயாராக இருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

ஜேர்மனியில் AfD இன் வளர்ச்சியிலும் மற்றும் நவபாசிசவாத அரசியலைத் திட்டமிட்டு சட்டபூர்வமாக்குவதிலும் மற்றொரு முக்கிய அம்சமும் உள்ளது. இராணுவவாதம் மற்றும் ஏதேச்சதிகாரத்தின் மீட்டுயிர்ப்பிப்புக்கு மக்களின் எதிர்ப்பைக் கடந்து வருவதற்காக, அங்கே வெறித்தனமாக மார்க்சிச-விரோதத்தையும், நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்டுவது மற்றும் ஹிட்லருக்கு மறுவாழ்வு வழங்குவதன் அடிப்படையில் ஒரு புதிய வரலாற்று சொல்லாடலை உருவாக்குவதற்காக ஜேர்மன் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு முயற்சி நடக்கிறது.

இந்த வஞ்சகமான நிகழ்ச்சிப்போக்கில், பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகம் மத்திய பாத்திரம் வகித்துள்ளது, அதன் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளுக்கான துறையின் தலைவர் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கிக்கு அது தங்குதடையின்றி அமைப்புரீதியிலான ஆதரவை வழங்கி உள்ளது. “ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை” என்றும், அந்த தலையாய தலைவர் (Führer) அவுஸ்விட்ச் குறித்தும் யூதர்களின் பாரிய நிர்மூலமாக்கல் குறித்தும் எதையும் தெரிந்து கொள்ளவே விரும்பியதில்லை என்றும் அவரின் பொய்யான கூற்றுக்காக இழிபெயர் பெற்றவராவார்.

SPD இன் முன்னாள் நிர்வாகியான அப்பல்கலைக்கழகத்தின் தலைவி சபீன குன்ஸ்ட், பார்பெரோவ்ஸ்கி மீதான விமர்சனத்தை "ஏற்றுக் கொள்ளவியலாது" என்று அறிவித்துள்ளார். ஒரு நாஜி அதிகாரியைப் போல நடந்து கொள்ளும் பார்பெரோவ்ஸ்கி அந்த பல்கலைக்கழகத்தில் ஒரு இடதுசாரி மாணவரை சரீரரீதியில் தாக்கி உள்ள போதினும் கூட —இந்தவொரு சம்பவம் காணொளியில் பதிவு செய்யப்பட்டு 20,000 க்கும் அதிகமான முறை யூடியூப்பில் பார்க்கப்பட்டது (பார்க்கவும் காணொளி)— குன்ஸ்ட் பார்பெரோவ்ஸ்கியை விமர்சிப்பதை அனுமதிக்க மறுத்துவிட்டார்.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திடமிருந்து அவர் பெற்றுள்ள ஆதரவுடன், பார்பெரோவ்ஸ்கி அதிகரித்தளவில் ஒரு பிரபல அரசியல் புள்ளியாக ஆகியுள்ளார். அவர் மூன்றாம் குடியரசு தோல்வியின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டு நினைவாண்டு தினப் பொது நிகழ்வில் ஒரு பிரதான உரை வழங்க உள்ளார். உயர்மட்ட அரசியல் ஆதரவுடன் அவர் கம்யூனிச-விரோத வெறிப்பேச்சுக்களை வழங்குவதற்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்.

ஜேர்மனியின் அரசியல் நிலைமை, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கவனத்தைக் கோருகிறது. வரலாற்று வெளிச்சத்தில், ஜேர்மனியில் நவ-நாசிசத்தின் மீளெழுச்சியை நோக்கி ஒரு மெத்தனமான நிலைப்பாடு எடுப்பது சாத்தியமில்லை.

எவ்வாறிருப்பினும் இன்று நிலவும் நிலைமைக்கும் 1930 களின் நிலைமைக்கும் இடையே அங்கே ஓர் அடிப்படையான மற்றும் ஆழ்ந்த வித்தியாசம் உள்ளது. பாசிசம் எந்த விதத்திலும் ஜேர்மனியில் ஒரு பாரிய இயக்கமாக இல்லை. அங்கே ஜேர்மன் தொழிலாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் கடந்த கால நாஜி மீதும் அதன் குற்றங்களைக் குறைத்துக் காட்டும் அனைவர் மீதும் ஓர் ஆழ்ந்த வெறுப்பு உள்ளது. ஜேர்மனி எங்கிலும், நாஜிக்களின் குற்றங்களை நினைவூட்டவும் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் நினைவைக் கௌரவிக்கவும் அங்கே நினைவுகூடங்கள் உள்ளன. மூன்றாம் குடியரசின் பயங்கரங்கள் ஜேர்மன் மக்களின் ஒருங்கிணைந்த நனவில் ஆழமாக வேரூன்றி உள்ளன.

அதே நேரத்தில், மாக்சிசத்தின் புத்திஜீவித அரசியல் பாரம்பரியங்களை அழிப்பதற்கான உத்தியோகபூர்வ கட்சிகள், ஊழல்பீடித்த ஊடகங்கள் மற்றும் கல்வித்துறை வல்லுனர்களின் அனைத்து முயற்சிகளுக்கு மத்தியிலும், அந்நாட்டின் கலாச்சாரத்தில் அப்பாரம்பரியங்கள் ஆழமாக வேரூன்றி உள்ளன. நவம்பர் 1820 இல் பிறந்த பிரெடெரிக் ஏங்கெல்ஸ்சின் இருநூறாம் ஆண்டு விழா ஜேர்மனி எங்கிலும் பெருவிருப்புடன் கொண்டாடப்படும் என்று ஒருவர் நிச்சயமாக நம்பலாம்.

ஆனால் இந்த பாரிய ஆதரவின்மை என்பது 1933 இல் நாஜிக்களின் வெற்றிக்கு இட்டுச் சென்ற அரசியல் நிகழ்ச்சிப்போக்குடன் வியப்பூட்டும் அபாயகரமான சமாந்தரத்தையும் கொண்டுள்ளது. அந்த சூழ்ச்சி நடவடிக்கையின் அம்சம் தான் தீவிர வலதை அரசியல் ஸ்தாபகத்திற்குள் பலப்படுத்தியது. இந்த நிகழ்ச்சிப்போக்கு —அதன் பிற்போக்குத்தனமான விளைவுகளுடன்— தூரிங்கியா சம்பவங்களால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

AfD இன் வளர்ச்சிக்கு எதிராகவும் ஜேர்மனியிலும் சர்வதேச அளவிலும் பாசிசவாதம் மற்றும் இராணுவவாதத்தின் மீள்வரவுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடும் ஒரே கட்சி ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியாகும் (Sozialistische Gleichheitspartei). அதன் எச்சரிக்கைகள் நிரூபணமாகி உள்ளன. AfD இன் வளர்ச்சிக்கு அடியிலுள்ள அரசியல் சூழ்ச்சியைக் குறித்த SGP தலைவர் கிறிஸ்தோப் வாண்ட்ரியர் அவரின் விலைமதிப்பற்ற வெளியீட்டில் பின்வருமாறு எழுதினார்:

பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர்களையும், சமூகரீதியில் சிதைந்து போன குட்டி முதலாளித்துவத்தின் உறுப்பினர்களையும், நம்பிக்கை தளர்ந்த வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களையும் அதன் உறுப்பினர்களாக அணிதிரட்டியிருந்த ஹிட்லரின் SA அதிரடி படையினர் போன்ற போர்க்களத்திற்கு தயாரான படைப்பிரிவுகளோ அல்லது ஒரு பாரிய ஆதரவு அடித்தளமோ AfD க்கு கிடையாது. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், அரசாங்கம் மற்றும் அரசு எந்திரத்திலிருந்து பிரத்தியேகமாக அதன் பெறும் ஆதரவில் இருந்தே AfD பலம் பெறுகிறது.

உலகெங்கிலும் போலவே, ஜேர்மனியிலும் அரசியல் தீவிரமயப்படல் நிகழ்ச்சிப்போக்கு நடந்து வருகிறது. பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூரிங்கியா சம்பவங்கள் இந்த நிகழ்வுபோக்கை தீவிரப்படுத்தும். ஆனால் உரிய நேரத்திலும் அரசியல்ரீதியிலும் அதன் நனவுபூர்வமான அபிவிருத்திக்கு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியையும் (Sozialistische Gleichheitspartei) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் (ICFI) ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

Loading