இலங்கை ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய போலி சம்பள உயர்வு

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை மார்ச் 1 முதல் 1,000 ரூபாவாக உயர்த்த ஜனாதிபதி விரும்புகிறார் என ஜனவரி 14 அன்று, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்க்ஷவின் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தலைவருமான ஆறுமுகம் தொண்டமான், உடனடியாக இந்த அறிவிப்பை ஊக்குவித்ததுடன், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்க்ஷ கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது எனவும் கூறினார்.

இராஜபக்ஷவின் அறிவிப்பு ஒரு தெளிவான பொய் ஆகும். ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலைத் நடத்த திட்டமிடும் ஜனாதிபதியும் அவரது ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) சிறுபான்மை அரசாங்கமும், குறைந்த சம்பளம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரு சமூக வெடிகுண்டின் மீது அமர்ந்துள்ளது. தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பிரதான பகுதியினர், கடந்த 18 மாதங்களாக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இராஜபக்க்ஷவின் ஊதிய முன்மொழிவு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் கோபத்தை திசைதிருப்பவும், வரவிருக்கும் தேர்தலில் அவர்களது வாக்குகளைப் பெற்று கொள்வதற்குமான ஒரு தீவிர முயற்சியாகும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வெல்வதன் மூலம் சர்வாதிகார ஆட்சி முறைகளை நிறுவத் தேவையான ஒரு அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ளலாம் என அவர் ஏதிர்பார்க்கிறார்.

இராஜபக்க்ஷ, கடந்த நவம்பரில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். வாக்குறுதி தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை வெல்லும் என்று அவர் நம்பினாலும், ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் நுவரெலியா மாவட்டத்தில் அவருக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தோட்டத் தொழிலாளர்களில் -பெரும்பாண்மையோர் தமிழ் பேசுகின்றவர்கள்- இராஜபக்க்ஷவை எதிர்ப்பதுடன் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக்களரி போரின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்து அவர் ஆற்றிய பங்கை அவர்கள் நன்கு அறிவார்கள். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக தோட்ட இளைஞர்கள் அந்த நேரத்தில் அரசாங்கத்தால் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டனர்.

இராஜபக்சவின் உத்தேச சம்பள உயர்வானது 2018 டிசம்பரில் நடந்த நீண்ட தேசிய வேலைநிறுத்தத்தில் தோட்டத் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அண்மிக்கவும் முடியாது. அவர்களின் அன்றாட சம்பளம் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்றும் ஓய்வூதியம் உட்பட ஏனைய சலுகைளையும் அதிகரிக்குமாறு அவர்கள் கோரினர்.

11 நாட்களுக்குப் பின்பு வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்த இ.தொ.கா. உட்பட ஏனைய தொழிற்சங்கங்களும், 2019 ஜனவரியில் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தினசரி அடிப்படை ஊதியம் 200 ரூபாவால் மட்டுமே உயர்த்தப்பட்டு மேலதிக கொடுப்பனவுகள் உட்பட 750 ரூபாயாக ஆக்கப்பட்டது. ஒரு தோட்டத் தொழிலாளியின் தினசரி ஊதியத்தை 855 ரூபாயாக உயர்த்தியதாக, ஊழியர் சேமலாப நிதிக்கு அவர்கள் செலுத்திய மாதாந்த தொகையையும் சேர்த்து தோட்ட நிறுவனங்கள் பொய் பிரச்சாரம் செய்தன.

இந்த போலியான புள்ளிவிவரத்தைப் பயன்படுத்தி, “தற்போது வழங்கப்படும் 855 ரூபாய் நாளாந்த சம்பளத்துக்கு” 145 ரூபாய் அதிகரிக்கப்படுவதே இராஜபக்க்ஷ வழங்கவிருக்கும் தினசரி ஊதியமான 1,000 ரூபாய் ஆகும். அதாவது 17 சதவீதத்தால் ஊதியம் அதிகரிக்கப்படுவதாக ஊடகங்கள் போலியாக பிரசுரித்துக்கொண்டு இருக்கின்றன.

இலங்கையின் 22 பெரிய பெருந்தோட்ட நிறுவனங்களும், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமர் சம்மேளனமும் உடனடியாக புதிய ஊதிய திட்டத்தை எதிர்த்தன. இது "நஷ்டத்தில் இயங்கும்" தேயிலைத் தொழிற்துறையில் “பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை" ஏற்படுத்தும் எனவும், இதற்காக ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் அவை கூறின.

எவ்வாறெனினும், ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜெயசுந்தர மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரானவுடன் முதலாளிமார் சம்மேளனம் தனித்தனியாக கலந்துரையாடியதை தொடர்ந்து, ஒரு "மாற்று" ஊதிய உயர்வு மாதிரியைக் கொண்டுவர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் களனிவலி தோட்டக் கம்பனியின் தலைவர் ரொஷான் இராஜதுரை, ஜனவரி 26 அன்று ஒரு கூட்டத்தில் பேசும்போது, சம்பள பிரச்சினை தொடர்பாக "தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருக்கவில்லை” எனவும், ஆனால் "உற்பத்தி திறன் அடிப்படையிலான முறையை" செயல்படுத்துவதன் மூலம் "தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு மேல்" சம்பாதிக்க முடியும் என்றும் கூறினார். "உற்பத்தி திறன் அடிப்படையிலான முறை" என்பது தேயிலைத் தொழில்துறையின் "வருவாய் பகிர்வு மாதிரியின்" விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். இதை கடந்த ஆண்டு ஊதிய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் அங்கீகரித்துள்ளன.

இந்த முறையின் கீழ், 1,000 அல்லது அதற்கு மேலான தேயிலை செடிகளை கொண்ட காணித் துண்டொன்று பராமரித்து அதிலிருந்து விளைச்சலைப் பெற ஒரு தொழிலாளிக்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும். இந்த முறையின் கீழ், கடுமையான போராட்டங்களால் தொழிலாளர்களால் வென்றெடுக்ப்பட்ட ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சலுகைகள் போன்ற சமூக உரிமைகள் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். தோட்டக் கம்பனிகள் தேயிலை செடிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் செலவுகளையும் இலாபத்தினையும் கழித்தபின் வரும் தொகையில் ஒரு பகுதி தொழிலாளிக்கும் அவரது குடும்பத்துக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்திய பல தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், இந்த சுரண்டல் மற்றும் செலவு வெட்டு முறையை எதிர்த்தனர்.

சில தோட்டக் கம்பனிகள் உற்பத்தியை அதிகரிக்க டிஜிட்டல் அடையாள அட்டைகள் மற்றும் தராசை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு இராஜபக்க்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நாட்களுக்குப் பின்பு, ஹட்டனுக்கு அருகிலுள்ள சாமிமலை பகுதியில் சுமார் 5,000 தோட்டத் தொழிலாளர்கள் இந்த முறைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் முதலாளித்துவ சுரண்டல்களின் சர்வதேச வலையமைப்பை எதிர்கொள்கின்றனர். உலக சந்தையில் கென்யா மற்றும் இந்தியா போன்ற தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் போட்டியிடுவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உற்பத்தி செலவுகளை குறைக்கவும் தீர்மாணித்துள்ளன.

இலங்கை தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற கூற்றுக்கள் போலியானவை. பல கம்பனிகள் தேயிலை ஏல விற்பனையாளராகவும் ஏற்றுமதியாளர்களாகவும் தொழிற்பட்டு பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன. உதாரணமாக, 2018 இல், தேயிலையின் சராசரி ஏலவிற்பனை விலை, ஒரு கிலோவுக்கு 580 ரூபாயாக இருந்தது, அதே நேரத்தில் ஏற்றுமதி விலை 850 ரூபாயாக இருந்தது.

தோட்டத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியம் பெறுகையில், தேயிலைத் தொழிற் துறையின் நிர்வாகிகள் பெரும் சம்பளத்தைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, 2017 இல் களனிவலி பெருந்தோட்டக் கம்பனியின் மூன்று நிர்வாக இயக்குனர்களின் மொத்த ஆண்டு சம்பளம் 35 மில்லியன் ரூபாய், அதாவது 200,000 டாலர் ஆகும் (பார்க்க: இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகளை வெட்டும் அதே வேளை பாரிய இலாபத்தினை குவிக்கின்றன)

அதே நேரத்தில், சர்வதேச தேயிலை சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் யூனிலிவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நுகர்வோர் ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து தேயிலையை வாங்கிய பின்னர் பெரும் இலாபம் ஈட்டுகின்றன.

இ.தொ.கா. வுடன் இணைந்தவாறு ஏனைய தோட்ட தொழிற்சங்கங்களும் இராஜபக்க்ஷவின் ஊதிய உயர்வு என்று அழைக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் ஏனய போலி இடது குழுக்களால் தொடங்கப்பட்ட "1,000 ரூபாய் இயக்கம்", ஜனாதிபதியின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான போலி யோசனையை நல்லதொரு வாய்ப்பு என வருணிக்கின்றன.

ஊடகங்களுக்குப் பேசிய 1,000 ரூபா இயக்கத்தின் ஊடக தொடர்பாளர் சிந்தக இராஜபக்க்ஷ, “தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலமாக தேயிலைத் தொழிலின் ஸ்திரத் தன்மையைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கமே பொறுப்பு, அதனால் அதற்காக அது பல தலையீடுகளைச் செய்ய வேண்டும்," என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழில்துறையை உறுதிப்படுத்தவும் பராமரிக்கவும் அரசாங்கம் தலையிட்டால் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும், என்பதாகும். தொழிலாளர்களின் உழைப்பை கறக்கும் முதலாளித்துவ அமைப்பின் கீழ் இது சாத்தியமில்லை.

அனைத்து நிறுவனங்களையும் போலவே தேயிலைத் தொழிற்துறையும், அதன் உலகளாவிய போட்டியாளர்களுக்கு எதிராக இலாபங்களை அதிகரிக்கவும் மற்றும் சந்தையில் தனது பங்கைத் தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறது. ஊதியங்கள் மற்றும் கடின போராட்டங்களின் மூலம் வென்ற நன்மைகள் உட்பட அனைத்து தொழிலாளர் உழைப்பையும் இரக்கமின்றி சுரண்டும் நிறுவனங்கள் மிகவும் வெற்றிகரமானவையாக இருக்கின்றன. (பார்க்க: How giant tea companies exploit Kenyan plantation workers).

இராஜபக்க்ஷவின் ஊதிய முன்மொழிவு பற்றிய அனைத்து உத்தியோகபூர்வ பிரச்சாரங்களுக்கும் பின்னால், நீண்டகாலமாக உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக இலங்கையின் தேயிலைத் துறையில் ஒரு பாரிய மறுசீரமைப்பிற்கான திட்டம் இருத்துகொண்டுள்ளது. இது அடிப்படையில் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் மீது முழு அளவிலான தாக்குதலுக்கான தயாரிப்பாகும்.

சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் தொழிற் சங்கங்களிலிருந்து பிரிந்து சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியும்.

இந்த முன்னோக்கின் அடிப்படையில் போராடும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மட்டுமே ஆகும். தோட்டத் தொழிலாளர்கள் 2018 டிசம்பர் வேலைநிறுத்தத்தின் போது, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க சோ.ச.க. தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. எபோட்சிலி தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் அதற்கு செவிமடுத்து வேலை நிறுத்தத்தின் போது ஒரு நவடிக்கை குழுவை அமைத்தனர்.

வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தயாராவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனய பிரிவுகள் தங்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்

இலங்கை தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம்

(17 டிசம்பர் 2018)

Loading