சிரிய போருக்கு மத்தியில், சிரிய அகதிகள் ஐரோப்பாவிற்கு செல்ல அனுமதிக்க துருக்கி தனது எல்லைகளை திறந்து வைக்கிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சிரியாவின் வடக்கு இடலிப் மாகாணத்தில் சுமார் மூன்று டசின் சிப்பாய்களின் உயிர்களை பலிகொண்ட துருக்கி இராணுவ நிலையின் மீதான கடந்த வியாழக்கிழமை தாக்குதல், துருக்கியின் மேற்கு எல்லையில் ஒரு புதிய அகதிகள் நெருக்கடிக்கு ஏற்கனவே வழிவகுத்துள்ளது.

தாக்குதலுக்கு பின்னர் உடனே, சிரியாவில் அங்காராவின் போர் நோக்கங்களை ஆதரிப்பதற்காக ஐரோப்பிய நேட்டோ சக்திகளை அச்சறுத்தும் முயற்சியில், சுமார் 3.5 மில்லியன் அகதிகள் நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பாவிற்கு பயணிப்பதை இனிமேல் அங்காரா தடுக்காது என்பதை துருக்கிய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தாக்குதலுக்கு முன்னர், இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இட்லிப்பில் இருந்து புறப்பட்டதாக அங்காரா மீண்டும் மீண்டும் தெரிவித்தது.

வெள்ளியன்று, துருக்கிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹமி அக்சோய் (Hami Aksoy), இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த இட்லிப்பின் நிகழ்வுகள், துருக்கி மீதான அழுத்தத்தை அதிகரித்தது என்றும், “எங்கள் நாட்டிலுள்ள சில புகலிடம் கோருவோர் நிலைமைகளை கருத்தில் கொண்டு எங்களது மேற்கு எல்லைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்” என்றும் கூறினார். அவர் மேலும், “நிலைமை மோசமடையுமானால், இந்த ஆபத்து தொடர்ந்து அதிகரிக்கும்” என்றும் கூறினார்.

சிரிய அகதிகள், 2015 இல் துருக்கியிலிருந்து கிரீஸில் உள்ள லெஸ்போஸ் தீவிற்கு கடந்து சென்ற பின்னர் ஒரு இரப்பர் படகை வந்தடைகின்றனர் [SourceL Flickr.com]

அடுத்த சில நாட்களில், அகதிகள் ஏஜியன் கடலில் படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டு கிரீஸ் மற்றும் பல்கேரிய எல்லைகளை நோக்கி அணிவகுத்துச் செல்லும் காணொளிகளை அரசு ஊடகங்கள் ஒளிபரப்பின. கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான எல்லை மண்டலத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான அகதிகள் மீது கிரேக்க பொலிசார் “தடுப்பு” கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர், அதே நேரத்தில் பல்கேரியா 1,000 துருப்புக்களை எல்லைக்கு அனுப்பப் போவதாக அறிவித்தது.

துருக்கியின் உள்துறை அமைச்சரான சுலைய்மான் சோய்லு (Süleyman Soylu), 76,358 புலம்பெயர்ந்தோர் கிரேக்கத்தின் எல்லையை கடப்பதற்கு செல்லும் வழியில் ஞாயிறன்று காலை எல்லை நகரமான எடிர்னே வழியாகச் சென்றனர் என்று ட்வீட் செய்தார்.

Kathimerini நாளிதழின் படி, துருக்கியிலிருந்து கிரேக்க பிராந்தியத்திற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறித்து துருக்கி ஒரு தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது என்று கிரேக்க வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. மேலும் அமைச்சகம், “கிரேக்க எல்லையை எவரும் கடக்க முடியாது. சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் அனைவரும் நுழைய விடாமல் தீவிரமாக தடுக்கப்படுவர். துருக்கிய அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகள் முற்றிலும் தவறானவை என்பதுடன் தவறான வழிநடத்தலுக்குட்பட்டவை” என்று கூறியது. இந்த அறிக்கை மேலும், “10,000 புலம்பெயர்ந்தோர் கிரேக்கத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது என்பதுடன், சனிக்கிழமை அதிகாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நுழைய முயன்ற 73 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் எவரும் சிரிய நகரமான இட்லிப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது” என்றும் தெரிவித்தது.

இட்லிப்பில் தனது பிரசன்னத்தை நியாயப்படுத்த, சிரியர்களை அசாத் ஆட்சியிலிருந்து பாதுகாக்கும் மற்றும் புகலிடம் கோருவோரின் வருகையை தடுக்கும் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை அது உருவாக்கிக் கொண்டிருப்பதாக துருக்கி கூறுகிறது. உண்மையில், பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய போரினால் எரியூட்டப்பட்ட இன மற்றும் வர்க்க மோதல்களுக்கு, இராணுவ தீர்வை நாடுவதற்கே அங்காரா முயன்று கொண்டிருக்கிறது. இது, துருக்கியில் வசித்து வரும் மில்லியன் கணக்கான சிரிய அரபு அகதிகளை வலுக்கட்டாயமாக வடக்கு சிரியாவிற்கு இடம்பெயரச் செய்து, அதை கைப்பற்றுவதையும், அதன்மூலம் துருக்கிய-சிரிய எல்லையில் ஒரு குர்திஷ் அரசு பலமடைவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிரிய அகதிகள், தங்கள் நாட்டில் நடக்கும் நேட்டோ தலைமையிலான பினாமி போரிலிருந்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள நாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் நிலையில், அதிகரித்துவரும் சமூக துயரங்களுக்கு மேலதிகமாக இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். துருக்கியில், ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகமும் அவர்களை நிராகரிப்பதுடன், அதேவேளை கிரேக்கத்தில் தீவிர வலதுசாரி குழுக்களால் அவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். போரிலிருந்து தப்பித்து துருக்கிக்கு தப்பியோட நிர்பந்திக்கப்பட்ட அண்மித்து 3.5 மில்லியன் சிரிய அகதிகள், தற்போது மிகஅதிக வாடகையிலான நெரிசலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர், பூங்காக்களில் தூங்குகின்றனர், மேலும் மிக கொடிய வறுமையிலிருந்து தப்பிக்க துருக்கிய முதலாளிகளுக்கு ஆகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர்.

கிரேக்கத்தில் உள்ள நிலைமைகளும் கொடூரத்தில் குறைந்தவை அல்ல. இலட்சக்கணக்கான அகதிகள் கிரீஸ் முழுவதிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சியோஸ், சமோஸ், லெஸ்போஸ், கோஸ் மற்றும் லெரோஸ் ஆகிய தீவுகளில் நிலவும் துயரம் மிக்க நிலைமைகளினால் அவர்கள் துன்பத்திற்குள்ளாவதுடன், உண்மையான சித்திரவதை முகாம்களாக உள்ள அந்த தடுப்பு மையங்களில் அவர்கள் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். அகதிகளது தற்போதைய மொத்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியினரை மட்டும் தடுத்து வைத்திருப்பதற்காகவே அந்த மையங்கள் வடிவமைக்கப்பட்டவை. லெஸ்போஸில் உள்ள மோரியா முகாம் BBC ஆல் “உலகின் மிக மோசமான அகதிகள் முகாம்” என்று விவரிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிருகத்தனமான கொள்கைகளின் விளைவாக; புலம்பெயர்வோர் நாட்டிற்குள் நுழைவது குறித்து ஒன்றோடொன்று மோதிக்கொள்வதும் மற்றும் துருக்கியிலும் கிரேக்கத்திலும் தஞ்சம் கோருபவர்கள் துன்புறுத்தப்படுவதும் உள்ளது. இரண்டு நாடுகளுமே அகதிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய புறக்காவல் நிலையங்களாக உள்ளன.

மார்ச் 2016 இல் ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி மற்றும் கிரீஸூக்கு இடையில் எட்டப்பட்ட ஒரு அழுகிப் போன ஒப்பந்தம், கிரேக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகளுக்கான சிறைச்சாலையாக உருவாக்கியதுடன், மேலும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள போர் மண்டலங்களிலிருந்து அகதிகள் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல மாட்டார்கள் என்பதை எர்டோகன் ஆட்சி உறுதிப்படுத்துவதற்கும் நிர்பந்தித்தது.

இந்த ஒப்பந்தம், “வழமைக்குமாறான” வழிகளின் ஊடாக கிரேக்கத்திற்குள் நுழையும், அதாவது, துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு படகு வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் அனைத்து அகதிகளையும் துருக்கிக்கு திரும்ப நாடுகடத்த உத்தியோகபூர்வ ஆணையிடுகிறது. ஆனால், துருக்கியில் துன்புறுத்தப்படுவார்கள் என்பதை நிரூபிக்க முடிந்தவர்கள் மட்டுமே கிரேக்கத்தில் அடைக்கலம் கோர முடியும். ஒருமுறை கிரேக்கத்தில், அவர்களது தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள், பின்னர் பெரும்பாலானோருக்கு நிராகரிக்கப்பட்டு துருக்கிக்கே திருப்பி அனுப்பப்படுவர்.

துருக்கிக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகளுக்கு மீண்டும் ஐரோப்பாவை சென்றடையமுடியும் என்று சிறிதும் நம்பிக்கையில்லை. ஏனென்றால், இந்த ஒப்பந்தம், முன்னர் “சட்டவிரோதமாக” ஐரோப்பாவிற்குள் நுழைந்தவர்களின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை புகலிடப் பட்டியலின் கடைசியில் இடம்பெறச் செய்வதற்கான முன்னேற்ப்பாட்டை உள்ளடக்கியது.

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளினது தலைமையில், அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும், முள்வேலி அமைத்தும், இயந்திர துப்பாக்கிகளுடனும் ஐரோப்பிய எல்லைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஒரு “ஐரோப்பிய கோட்டையை” உருவாக்குவதற்கும், மேலும் மத்தியதரைக் கடலில் மீட்புப் பணிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரக்கமற்ற பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கும் ஒத்துழைக்கின்றன.

கடந்த மாதம், அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஜனவரியில் பேர்லினில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயுதத் தடையை அமல்படுத்தும் பொருட்டு லிபியாவில் ஒரு புதிய இராணுவப் பணியைத் தொடங்குவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் அகதிகளை மீட்க வேண்டிய நிலையில் போர்க்கப்பல்கள் இருக்குமானால், உடனடியாக இந்த பணியை நிறுத்திவிட முடியும். ஒப்பந்தத்தை பொறுத்தவரை, “புலம்பெயர்வு தொடர்பான காரணிகள் (அதாவது, மீட்கப்பட்டு ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் புலம்பெயர்ந்தோரை கடலுக்கு அழைத்துச் செல்ல ஊக்குவிக்கும் காரணிகள்) அடையாளம் காணப்பட்டால், கடல்சார் படைகள் திரும்பப் பெறப்படும்.

துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் பொறியில் சிக்கியுள்ள சிரிய போர் அகதிகள், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் நடக்கும் போர்களிலிருந்தும், அத்துடன் உலக மக்களை அதிகரித்தளவில் பீடிக்கும் வறுமை மற்றும் பசியிலிருந்தும் தப்பிக்க முனையும் 70 மில்லியன் பூகோள அளவிலான ஒட்டுமொத்த அகதிகளில் மிகக் குறைந்த விகிதத்தினரேயாவர். அகதிகளுக்கான சித்திரவதை முகாம்களின் வலைப்பின்னல், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் அதற்கு அப்பாற்ப்பட்ட ஏகாதிபத்திய போர்களிலிருந்து, இப்போது மத்திய கிழக்கு, மத்தியதரைக் கடல் மற்றும் வட ஆபிரிக்காவின் பெரும்பகுதிகளுக்கு பரவியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பெருமளவில் நிதியளிக்கப்பட்ட இந்த முகாம்கள், மில்லியன் கணக்கான அகதிகளை, துஷ்பிரயோகம், கற்பழிப்பு, அடிமைத்தனம் மற்றும் கொலைக்கு கூட உட்படுத்தும் கொடூரமான சூழ்நிலைகளில் தடுத்து வைத்துள்ளன.

துருக்கியில் உள்ள சிரிய அகதிகளின் தலைவிதி, புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பதற்கான போராட்டம் ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கான போராட்டத்திலிருந்து எவ்வாறு பிரிக்க முடியாதது என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஏகாதிபத்தியத்தின் இரத்தக்களரியான நடவடிக்கைகளால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த அகதிகளின் பரிதாபகரமான நிலை, வாஷிங்டன், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் மற்றும் அங்காராவின் பழிவாங்கும் கொள்கைகளை அம்பலப்படுத்துகிறது. அவர்களது கைகளிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பேரினவாத வெறுப்பின் இலக்குகளாகவே அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர். சிரிய அகதிகள், அவர்கள் விரும்பும் நாட்டில் குடியேறவும், படிக்கவும், வாழவும், அவர்கள் விரும்பிய வேலையைச் செய்யவும் உரிமை உள்ளவர்களாக தாம் தஞ்சம் கோருவதற்கு நோக்கம் கொண்டுள்ள துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களின் வர்க்க சகோதர சகோதரிகளாவர்.

Loading