அகதிகளைச் சுடுவதற்குக் கிரேக்க பொலிஸ் உயிர்பறிக்கும் தோட்டாக்களை பயன்படுத்துகிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகளின் நிலைமை கடந்த சில நாட்களில் மிகவும் மோசமடைந்துள்ளது. 10,000 க்கும் அதிகமானவர்கள், முன்னும் நகர முடியாமல் பின்னுக்கும் செல்ல முடியாமல், எல்லை பகுதியில் சிக்கியுள்ளனர். கிரேக்க எல்லை பொலிஸூம் சிப்பாய்களும் அந்நாட்டிற்குள் அகதிகள் நுழைவதைத் தடுக்க உயிர்பறிக்கும் தோட்டாக்களை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் ஆறு அகதிகள் மிகக் கடுமையாக காயமடைந்துள்ளனர், ஒரு சிரிய அகதி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

உயிர்பறிக்கும் தோட்டாக்களை பயன்படுத்துவதென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்படையான ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகிறது. புதன்கிழமை புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்களின் சந்திப்பும், வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பும், அகதிகளின் கதியை நோக்கிய ஐரோப்பாவின் மனிதாபிமானமற்ற மனோபாவத்தை மீளஉறுதிப்படுத்தின.

ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்களின் அறிக்கை குறிப்பிடுகிறது, “சட்டவிரோதமாக எல்லைக் கடந்து வருவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 'அகதிகளுக்கு எதிராக எல்லைகளைப் 'பாதுகாக்க' ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சர்வதேச சட்டத்திற்கிணங்க அனைத்து அவசியமான நடவடிக்கைகளும்' எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டது. ஐரோப்பிய ஒன்றிய உள்துறை விவகாரங்களுக்கான ஆணையர் Ylva Johansson, “கிரேக்க அரசாங்கம் நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்று நான் கணக்கெடுத்து வருகிறேன்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

கிரேக்க அரசாங்கம் அதன் மொத்த பலத்துடன் அகதிகளைத் திருப்பி விரட்டியடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு அழைப்பு விடுத்து வருகிறது மற்றும் எல்லை பொலிஸூம் எல்லை பாதுகாப்புப் படைகளும் அகதிகளைச் சுட்டுக் கொல்வதன் மூலம் இந்த அழைப்பை நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது.

எல்லையில் உயிர்பறிக்கும் தோட்டாக்கள் பிரயோகிக்கப்படுவதைக் குறித்த அறிக்கைகளை "பொய்யான தகவல்கள்" என்று ஏதென்ஸ் அரசாங்கம் நிராகரிக்கின்ற போதினும், இணையத்தில் சுற்றி வரும் காணொளிகளோ பத்திரிகையாளர்களால் பரிசோதிக்கப்பட்ட தீர்க்கமான உண்மைகளாக உள்ளன. காயப்பட்ட அகதிகளைப் போர்வையில் சுற்றி எல்லையிலிருந்து கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் ஒரு காணொளியை ஸ்கை நியூஸ் செய்தியாளர் மார்க் ஸ்டோன் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் மட்டுமே, ஆறு அகதிகள் மார்பிலும், தலையிலும், காலிலும் மற்றும் மரண உறுப்பு பகுதியிலும் சுடப்பட்டு மிகக் கடுமையாக காயமடைந்திருந்தனர்.

ஏனைய விடயங்களுடன் சேர்ந்து இலண்டன் க்ரீன்ஃபெல் அடுக்குமாடி கட்டிட தீ விபத்து மற்றும் நவ-நாஜி தேசிய சோசலிச தலைமறைவு இயக்கத்தால் (NSU) காஸெல்லில் நடத்தப்பட்ட Halit Yozgat படுகொலையையும் புலனாய்வு செய்துள்ள, இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபல ஆராய்ச்சி நிறுவனம் Forensic Architecture, அகதி மொஹம்மத் அல்-அராபின் படுகொலை செய்யப்பட்டதையும் உறுதி செய்துள்ளது.

எவ்ரொஸ் ஆற்றங்கரையில் எல்லை பொலிஸால் சுடப்பட்ட இரப்பர் தோட்டாக்களால் பேராபத்தான விதத்தில் பாதிக்கப்பட்ட, சிரியா, அலெப்பொவைச் சேர்ந்த 22 வயதான ஒருவர் அவர் தலையில் அடிப்பட்டு பயங்கரமாக இரத்தம் ஒழுக கொண்டு செல்லப்படுவதை ஒரு காணொளி எடுத்துக் காட்டுகிறது. கிரேக்க அரசாங்கம் இதுவரையில் இத்தகைய சம்பவங்களைப் புலனாய்வு செய்ய மறுத்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக எல்லைக் கடந்து வரும் அகதிகளை வெளியேற்றுவதற்கு முயலும் போது கிரேக்க பொலிஸ் "வழமையான" கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துவதில்லை, மாறாக ஒரு கூரிய முனை கொண்ட தோட்டாக்களை பயன்படுத்துகிறது. புலனாய்வு இணையத்தளம் Bellingcat இன் ஒரு புகைப்படம், கிரேக்க எல்லை பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரின் கண்ணீர் புகைக்குண்டு துப்பாக்கியில் அதுபோன்றவொரு தோட்டாவை நிரப்புவதைக் காட்டுகிறது.

எவ்ரொஸ் பிராந்தியம், காஸ்டனிஸில் கிரேக்க-துருக்கிய எல்லையில் நடந்த மோதலின் போது, சனிக்கிழமை, மார்ச் 7, 2020 இல், புலம்பெயர்ந்தோர் துருக்கி பக்கத்தில் எல்லை வேலியருகில் ஒன்றுகூடிய நிலையில் கிரேக்க பொலிஸூம் ஆயுதப் படையும் பாதுகாப்பிற்கு நிற்கின்றன. (படம்: அசோசியேடெட் பிரஸ்/ கியானிஸ் பபானிகொஸ்)

Bellingcat செய்தியின்படி, “வழமையான கண்ணீர் புகைக்குண்டுகளின் தூரம் மட்டுப்பட்டு இருக்கும்,” ஆனால் எல்லையில் கிரேக்க பொலிஸ் பயன்படுத்திய கையெறி குண்டுகள் "குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிக சக்தி" வாய்ந்தவை என்பதுடன், கூர்மையான முனையுடன் சேர்ந்து "சாத்தியமானளவுக்கு உயிருக்கு ஆபத்தானவை." ஏறத்தாழ கண்ணீர் புகைக்குண்டுகள் போலிருக்கும் அந்த குண்டுகள் ஈராக்கில் சமீபத்திய போராட்டங்கள் மற்றும் கலகங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் அல்லது உயிரும் இழந்தனர் என்று Bellingcat குறிப்பிடுகிறது.

அகதிகளுக்கு எதிரான வன்முறை, கிரீஸ் மற்றும் துருக்கிக்கு இடையிலான எல்லை நிலத்தில் மட்டுமல்ல, ஏகியன் கடலிலும் கூட, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது, ஒரு கிரேக்க தீவு நிலத்திலிருந்து அகதிகள் மூர்க்கமாக தடுக்கப்பட்டு வருகிறார்கள்.

மத்திய தரைக்கடலில் தவித்து கொண்டிருக்கும் அகதிகளை மீட்டெடுக்கும் அகதிகளுக்கான உதவி நடவடிக்கை அமைப்பான Alarmphone, மார்ச் 1 மற்றும் 3 இடையே நடந்த பல சம்பவங்களை அறிவிக்கிறது, இதில் அகதிகள் படகுகள் மீது முகந்தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டன அல்லது தாக்கப்பட்டன மற்றும் கொள்ளையடிக்கப்பட்டன. சில சம்பவங்களில், படகுகளின் எஞ்சின்கள் திருடப்பட்டு, அகதிகள் இடைவெளியிலேயே நிராயுதபாணியாக கடலில் விடப்பட்டனர். ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு முகமை Frontex மற்றும் கிரேக்க கடல் ரோந்துப்படைகளின் அவசரகால படைகள் மிக அருகாமையில் இருந்த போதினும், அவை எந்த தலையீடும் செய்யவில்லை.

ஹங்கேரிய எல்லையில் நடத்தப்பட்டு வருகின்ற துப்பாக்கிச் சூடுகள் குறித்து சமீபத்தில் அறிவித்த, ஜேர்மன் அகதிகள் உதவி அமைப்பு Pro-Asyl, இரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்துவது குறித்தும் கிரேக்க-துருக்கிய எல்லையில் உயிர்பறிக்கும் தோட்டாக்கள் பயன்படுத்துவது குறித்தும் கூர்மையாக விமர்சித்திருந்தது. "கிரேக்க எல்லையில் தப்பி ஓடுபவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு அங்கே பல செய்திகள் உள்ளன. AfD [அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு] இன் கோரிக்கைகளுக்கு நான்காண்டுகளுக்குப் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவு ஓர் ஐரோப்பிய யதார்த்தமாகி உள்ளது.” பெடரல் பொலிஸ் "சட்டவிரோதமாக" எல்லைகளைக் கடக்க முயல்பவர்களை எதிர்கொள்கையில், "அவசியமானால், சுடும் ஆயுதங்களையும் பிரயோகிக்க" வேண்டும் என்று 2016 இல் அறிவித்த அப்போதைய AfD தலைவர் Frauke Petry இன் கருத்துக்களை Pro-Asyl குறிப்பிட்டுக் காட்டி வருகிறது.

ஆனால் 2016 க்கு முரண்பட்ட விதத்தில், ஐரோப்பிய எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவு உத்தியோகபூர்வ ஜேர்மன் அரசாங்க கொள்கையாக ஆகியுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், அகதிகளை நோக்கிய கிரேக்க பொலிஸின் மூர்க்கமான நடவடிக்கையை நிபந்தனையின்றி ஆதரிக்கிறார். அவர் Deutschlandfunk க்குத் தெரிவிக்கையில், “இவை அனைத்தும் மிகவும் உரிய முறையில் பொருத்தமான விதத்தில் செய்யப்பட்டு வருவதாக நாங்கள் நினைக்கிறோம், மேலும் இந்த சிக்கலான நிலைமையில் நிதிகள் கிடைக்குமாறு செய்வது உட்பட கிரேக்கர்களுக்கு உதவவும் நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.

அகதிகளுக்கு எதிராக எல்லை கண்காணிப்பை இன்னும் கூடுதலாக பலப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 700 மில்லியன் யூரோ நிதியுதவியும் இந்த ஆதரவில் உள்ளடங்கும். ஏழு கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிக்க உதவும் கேமராக்கள் பொருத்திய வாகனங்களும் கிரேக்க அரசாங்கத்திற்கு வழங்கப்பட இருக்கின்றன. Frontex தலையீட்டு படை எல்லைக்கு அனுப்பப்பட உள்ளது.

ஜேர்மன் நலன்களுக்கு சேவையாற்றும்பட்சத்தில் எப்போதும் சர்வதேச சட்டத்துடன் இணக்கமாக இருக்க கோரும் ஹெய்கோ மாஸ், சர்வதேச சட்டத்திற்கு முரணான வகையில், தஞ்சம் கோருவோரின் உரிமையை இடைநிறுத்தம் செய்வதற்கும், கிரேக்க அதிகாரிகள் அகதிகளைச் சட்டவிரோதமாக நாடு கடத்துவதற்கும் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரின் வலியுறுத்தலின் பேரில் குரோஷியா ஜாக்ரெப்பில் வியாழனன்று மாலை அவர்களின் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஐரோப்பிய ஒன்றியம்-துருக்கி அகதிகள் உடன்படிக்கையைச் செயல்படுத்துமாறு துருக்கி அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்தனர். நிதியுதவிகளுக்குக் கைமாறாகவும் மற்றும் துருக்கியில் அகதிகளைத் தங்க வைப்பதை உத்தரவாதப்படுத்தவும் துருக்கி இந்த பிரகடனத்திற்கு இணங்கி செயல்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாக மாஸ் தெரிவித்தார்.

இந்த மனோபாவம் எரிச்சலூட்டுவதும், நேர்மையற்றதுமாகும். துருக்கி, ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உறுப்பு நாடுகளை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக, சிரியாவில் இருந்து மொத்தம் 3.6 மில்லியன் அகதிகளை உள்வாங்கி உள்ளது. அனைத்திற்கும் மேலாக 2016 வசந்தத்தின் போது சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு இடையிலான அருவருக்கத்தக்க உடன்படிக்கை ஓர் அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கை இல்லை, மாறாக அதுவொரு கருத்தொருமித்த பிரகடனம் மட்டுமே என்பதால் அதை கொண்டு எந்தவிதத்திலும் சட்டபூர்வமாக நிர்பந்திக்க முடியாது. இவ்விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கூடுதலாக அகதிகள் உள்நுழைவதைப் பலவந்தமாக தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிய அரசாங்கத்தை ஒரு கைப்பாவையாக ஈடுபடுத்துகிறது.

இந்த வெட்கக்கேடான உடன்படிக்கையை வலியுறுத்துவது, நூறாயிரக் கணக்கான அகதிகள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு தவிக்க விடப்பட்டிருக்கும் இட்லிப் மாகாணத்தில் சிரிய-துருக்கிய எல்லையிலும் மற்றும் துருக்கிய-கிரேக்க எல்லையிலும் இப்போது ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

“ஐரோப்பிய கோட்டையை" ஐரோப்பிய ஒன்றியம் சமரசத்திற்கிடமின்றி வன்முறையாக பாதுகாப்பதன் மூலமாக, கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகள் நேரடியான அர்த்தத்தில் இரண்டுங்கெட்ட நிலையில் சிக்கி உள்ளனர். ஒருபுறம், அகதிகளை "சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள்" என்று கிரேக்க எல்லை பொலிஸ் உயிர்பறிக்கும் தோட்டாக்களை பிரயோகித்து சுட்டுத்தள்ளி, வேட்டையாடி வருகிறது, மறுபுறமோ, அவர்கள் துருக்கிய பொலிஸின் சிறப்புப் படைகளால் துருக்கிக்கு மீண்டும் திரும்புவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 10,000 க்கும் அதிகமானவர்கள் மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலத்தில் சிக்கி உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வு கொள்கை மீது தீர்க்கமாக மேலாளுமை கொண்டுள்ள ஜேர்மன் அரசாங்கமும், கிரேக்க ஏகியன் தீவுகளில் நெரிசல் மிக்க நாசகரமான தடுப்புக்காவல் முகாம்களில் இருந்தோ அல்லது கிரேக்க-துருக்கிய எல்லை பகுதியில் இருந்தோ கேட்பாரற்றுத் திரியும் ஒரு குழந்தையைக் கூட ஏற்க மறுப்பதன் மூலமாக, அதன் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து அது மாறப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. கிரேக்க முகாம்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் வெறும் 5,000 தனிக் குழந்தைகளை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கும் விதத்தில், ஜேர்மன் கூட்டாட்சி நாடாளுமன்ற கீழ் அவையில் (Bundestag) பசுமைக் கட்சி குழுவின் ஒரு தீர்மானம், AfD இன் வாக்குகளுடன் சேர்ந்து, கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர் (SPD) இன் மகா கூட்டணியால் கடுமையாக நிராகரிக்கப்பட்டது.

அகதிகள் மற்றும் அகதிகளுக்கு அனுதாபம் காட்டுபவர்கள் அனைவருக்கும் எதிராக மூர்க்கமான தாக்குதல் பேர்லின் மற்றும் பாரீஸ் அரசாங்கங்களாலும், புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஆதரிக்கப்படுகின்ற அதேவேளையில், மக்கள் தொகையில் முன்பினும் பரந்த பிரிவுகள் உதவி கோரி வரும் இந்த நிராயுதபாணியான மக்களை விலையாக கொடுக்கும் மனிதாபிமானமற்ற இக்கொள்கைக்கு எதிராக திரும்பி வருகின்றனர். தஞ்சம் கோருவோருக்கு எதிரான ஒட்டுமொத்த அகதிகள்-விரோத பிரச்சாரத்திற்கு மத்தியிலும், கருத்துக்கணிப்பு ஆய்வு அமைப்பான Infratest dimap நடத்திய ஒரு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டவர்களில் அரைவாசி பேர் கிரீஸ் மற்றும் துருக்கியில் இருந்து அகதிகளை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இன்னமும் ஆதரிக்கின்றனர்.

பொலிஸின் தடையேதுமின்றி, ஒரு பாசிசவாத கும்பல் அகதிகளை விரட்டி, அவர்களைக் கடலுக்கே திருப்பி அனுப்பி இருந்த லெஸ்பொஸ் மற்றும் சியோஸ் தீவுகளிலும் கிரேக்க எல்லையிலும் அகதிகள் மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை எதிர்த்து ஏதென்ஸ் மற்றும் தெஸ்லலோனிகியில் ஆயிரக் கணக்கானவர்கள் போராடினர். “சுரண்டல், போர், தேசியவாதம் மற்றும் இனவாதத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து போராட முடியும்,” என்று அந்த போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

சமீபத்தில் ஜேர்மனியின் ஹானோ மற்றும் ஹாலே நகரங்களில் நடத்தப்பட்ட பாசிசவாத பயங்கரவாத தாக்குதல்களில் கண்டதைப் போல, ஐரோப்பாவின் வெளி எல்லைகளில் அகதிகளுக்கு எதிரான போரானது, புலம்பெயர்ந்தோர் அல்லது யூத பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக உள் எல்லைகளில் அதிகரித்து வரும் வலதுசாரி தீவிரவாத பயங்கரங்களின் மறுபக்கமாகும். இவ்விரண்டையும் பிரித்து பார்க்க முடியாது. ஆளும் வர்க்கம் அதன் நலன்கள் மற்றும் செல்வவளத்தைப் பாதுகாப்பதற்காக இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக்களின் அதன் கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது. எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதற்காக, அது பகிரங்கமாக தேசியவாதத்தை ஊக்குவிப்பதுடன், இனரீதியில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது. இவ்விதத்தில், அது பாசிசவாத வன்முறை மற்றும் சர்வாதிகாரத்திற்கு அடித்தளம் அமைக்க தயாரிப்பு செய்து வருகிறது என்பது மட்டுமல்ல, மாறாக இது ஏற்கனவே நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

The author also recommends:

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

கிரேக்க-துருக்கிய எல்லையில் அகதிகள் மீதான போரை நிறுத்து!

[3 March 2020]

பெருந்திரளானவர்கள் லிபியா அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும், அகதிகள் பாதுகாப்புக்கான போராட்டமும்

[27 July 2019]

அகதிகள் மீதான உலகளாவிய போர்

[3 July 2019]