ஜேர்மனியின் இடது கட்சி அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடுடன் கை கோர்க்கிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் கூட்டாட்சி மாநிலமான தூரிங்கியாவில் ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்காக பெப்ரவரி 5 இல் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் (CDU) சுதந்திர ஜனநாயகவாதிகளும் (FDP) அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியுடன் கூட்டு சேர்ந்த போது, அது உலகெங்கிலும் ஒரு வெறுப்பலையைத் தூண்டிவிட்டது. ஹிட்லரைக் குற்றமற்றவராக காட்டும், இனவாதத்தைத் தூண்டுகின்ற, மற்றும் அதன் கட்சி பதவிகளில் நவ-நாஜிக்களைக் கொண்டுள்ள ஒரு கட்சியுடன் கரம் கோர்த்ததற்கு எதிராக ஜேர்மனி எங்கிலும் போராட்டங்கள் வெடித்தன. AfD ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தோமஸ் கெம்மரிச் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதுடன், நீண்ட நாட்களாக திரைக்குப் பின்னால் பேரம்பேசல்களை நடத்திய பின்னர், ஒரு சிறுபான்மை அரசாங்கத்தின் தலைவராக இடது கட்சியின் போடோ ராமலோவ்வை தேர்ந்தெடுக்க ஓர் உடன்படிக்கை எட்டப்பட்டது.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதிவலது தீவிரவாதிகளுடன் கூட்டுறவுக்கு கரம் நீட்ட ராமலோவ் முயன்றார். அவரின் வாக்குகளைக் கொண்டு, தூரிங்கியா மாநில சட்டமன்றத்தில் துணை தலைவர் பதவிகளில் ஒன்றை AfD

பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு அவர் உதவினார். மொத்தம் 89 வாக்குகளில் 45 வாக்குகளுடன் AfD பிரதிநிதி Michael Kaufmann தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமலோவ் பின்னர் ட்வீட்டரில் அறிவித்தவாறு, தீர்மானித்த வாக்கை அவர் வழங்கி இருந்தார். அவர் வாக்குகளை நியாயப்படுத்தி ராமலோவ் கூறுகையில், “ஒவ்வொரு நாடாளுமன்ற கட்சிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்ற விதத்தில், நாடாளுமன்ற பங்களிப்பிற்குப் பாதையைத் திறந்துவிடுவதற்காக எனது வாக்கைப் பயன்படுத்த மிகவும் கோட்பாட்டுரீதியிலான ஒரு முடிவை" எடுத்ததாக தெரிவித்தார்.

இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பது ஜேர்மன் வரலாற்றுடன் பரிச்சயமான எவரொருவருக்கும் நன்றாக தெரியும். நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர்களின் பயங்கர ஆட்சிமுறையை ஸ்தாபிக்கவும் திட்டமிட்டு அவர்களின் "நாடாளுமன்ற பங்களிப்பை" பயன்படுத்தினார்கள். ஜனவரி 1930 இல் இதே தூரிங்கியாவில் தான் NSDAP முதல்முறையாக ஒரு மாநில அரசாங்கத்தில் பங்கெடுத்தது. இது தாராளவாத மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் உதவியுடன் ஜேர்மனி எங்கிலும் "சட்டபூர்வமாக அதிகாரத்தை எடுப்பதற்கான" வெள்ளோட்டமாக சேவையாற்றியது.

குறிப்பாக AfD இன் பாசிசவாத குணாம்சம் தூரிங்கியாவில் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. அக்கட்சி அங்கே மக்கள்வாத-தேசியவாத "கன்னையின்" முன்னணி நபர் பியோர்ன் ஹோக்க தலைமையில் உள்ளது, "புதிய வலது" மற்றும் போர்குணமிக்க நவ-நாஜிக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ள இவரை, ஒரு நீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரு "பாசிசவாதியாக" விவரிக்க முடியும்.

ஹோக்க வரலாற்று திருத்தல்வாத, இனவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத நிலைப்பாடுகளுக்கு ஆக்ரோஷமாக வக்காலத்து வாங்குகிறார். நாஜி ஆட்சியைக் குறைத்துக் காட்டும் அவர், நினைவுச்சின்னங்கள் சம்பந்தமான ஜேர்மனியின் கொள்கையில் 180 பாகை திருப்பத்தைக் கோருவதுடன், பேர்லினில் யூத இன ஒழிப்பு நினைவுச் சின்னத்தை "வெட்கக்கேடான ஒரு நினைவுச்சின்னம்" என்று விவரித்துள்ளார். ஹோக்க, செப்டம்பர் 1, 2018 இல், கெம்னிட்ஸ் நகரில் புலம்பெயர்ந்தோர்-விரோத அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தார், அதில் அவர் பெஹிடா ஸ்தாபகர் Lutz Bachmann, வலதுசாரி தீவிரவாத அடையாளவாத இயக்கத்தின் தலைவர் Martin Sellner மற்றும் தடை செய்யப்பட்ட வலதுசாரி தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தலைமை கொடுத்தார். அந்த பேரணியின் அதில் பங்கெடுத்திருந்தவர்கள் புலம்பெயர்ந்தோரை இலக்கில் வைத்ததுடன், ஒரு யூத உணவு விடுதியையும் தாக்கினர்.

இந்த அதிவலது பாசிச கும்பலைத் ராமலோ தழுவும் நடவடிக்கைகளில் இருந்து அவரின் சொந்த கட்சியே கூட தூர விலகி நிற்க நிர்பந்திக்கப்பட்டது. தூரிங்கியாவில் இடது கட்சி தலைவர் Susanne Hennig-Wellsow ட்வீட்டரில் குறிப்பிடுகையில், “AfD க்கு வாக்களிக்க வேண்டாம்,” என்று குறிப்பிட்டு அப்பெண்மணி வேறொரு நிலைப்பாட்டை அறிவுறுத்தியதாக எழுதினார். ஆனால் தானும் ராமலோவ்வும் "பாசிச எதிர்ப்பு மீதான எங்களின் கண்ணோட்டங்களில் ஒருங்கிணைந்து நிற்பதில்" அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். இடது கட்சியின் தற்காலிக கூட்டாட்சி நிர்வாகியும் ராமலோவ்வின் நடத்தை "தவறானது" என்று அறிவித்தார்.

இது, அவர்களின் தடங்களை மூடிமறைப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியன்றி வேறொன்றுமில்லை. AfD க்கு ராமலோவ்வின் ஆதரவு ஏதோ தவறுதலாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையோ அல்லது ஒரு தனிப்பட்ட முடிவோ இல்லை; மாறாக அது நேரடியாக இடது கட்சியின் அரசியல் மற்றும் சமூக நோக்குநிலையில் இருந்து எழுகிறது. இடது கட்சி, அதன் பெயருக்குப் பொருத்தமற்ற வகையில், AfD உடனான கூட்டணிகள் உட்பட அவசியமான அனைத்து வழிவகைகள் மூலமாகவும் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பேற்றுள்ள ஒரு முதலாளித்துவக் கட்சியாகும்.

இடது கட்சியும் அதன் சர்வதேச சக-சிந்தனையாளர்களும் அதிவலதுடன் அணிவகுத்து நடை போட்டுள்ளனர் என்பது இதுவொன்றும் முதல்முறையல்ல.

இடது கட்சியின் பல கூட்டங்களில் பின்பற்றுவதற்குரிய ஓர் உதாரணமாக புகழப்பட்ட கிரீஸில் சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ், அதிதீவிர-தேசியவாத சுதந்திர கிரேக்கர்கள் (Anel) கட்சியுடனான கூட்டணியில் நான்காண்டுகள் ஆட்சி செலுத்தி உள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வங்கிகள் கோரிய நாசகரமான சிக்கன நடவடிக்கைகளைத் தொழிலாள வர்க்கம் மீது திணிக்க அவருக்கு வலதுசாரி தீவிரவாதிகள் அவசியப்பட்டார்கள். சிப்ராஸ் இப்போது அவருக்குப் பின் பதவிக்கு வந்த பழமைவாத ஆட்சியாளர் Kyriakos Mitsutakis இன் கொள்கைகளை ஆதரிக்கிறார், இவர் உயிர்பறிக்கும் தோட்டாக்கள், கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் பாசிசவாத குண்டர்களைக் கொண்டு கிரேக்க-துருக்கிய எல்லையில் மோசமான நிலையில் உள்ள அகதிகளைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கி வருகிறார். இதில் எதுவுமே சிப்ராஸூடன் தனது நெருக்கமான கூட்டுறவை முடிவுக்குக் கொண்டு வருவதை அவசியப்படுத்துவதாக இடது கட்சியால் கருதிப் பார்க்கப்படவில்லை.

இதே தேசியவாத நிலைப்பாடுகள் இடது கட்சிக்குள்ளும் நிலவுகிறது. கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் இடது கட்சியின் நீண்டகால தலைவர் சாரா வாகன்கினெக்ட் (Sahra Wagenknecht) அவரின் புலம்பெயர்ந்தோர்-விரோத நிலைப்பாடுகளுக்காக மீண்டும் மீண்டும் AfD ஆல் பாராட்டப்பட்டுள்ளார். அகதிகளுக்கு கிரேக்க எல்லையை வன்முறையுடன் மூடுவதை ஆதரித்து வாகன்கினெக்ட் இவ்வாரயிறுதியில் பேசி இருந்தார். எல்லைகளைத் திறந்து விடுவது எந்த தீர்வும் வழங்காது என்றவர் தொலைக்காட்சியிலும் அவரின் யூ-டியூப் சானலிலும் குறிப்பிட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கான பசுமைக் கட்சியினரின் தற்காலிக முன்மொழிவுகளில் "உண்மைத்தன்மை இல்லை" மற்றும் "நேர்மையற்றது" என்றார். AfD கூறுவதுபோல், வாகன்கினெக்ட் தொடர்ந்து கூறுகையில், “2015 இல் போலவே மொத்த கட்டுப்பாட்டை இழப்பதை" அனுமதிக்க முடியாது என்றார்.

ராமலோவ் அவர் அரசாங்கத்தில் இருந்த நேரத்தில், தூரிங்கியா ஜேர்மன் கூட்டாட்சி மாநிலங்களிலேயே அதிகபட்ச நாடுகடத்தும் விகிதங்களைக் கொண்டிருந்தது என்ற உண்மைக்காக பெருமைப்படுகிறார். கிழக்கு ஜேர்மனியின் மாநில அரசாங்கங்களில் உள்ள மற்றும் பேர்லின் மாநில செனட்டில் உள்ள ஏனைய இடது கட்சி உறுப்பினர்கள் போலவே, அவர் இந்த மகா கூட்டணியின் பரிந்துரைகளை, அகதிகள் விடயத்தில் மட்டுமல்ல, மாறாக சமூக செலவின வெட்டுக்கள் மற்றும் மாநிலத்தின் வரவுசெலவு கணக்குத் திட்டத்தில் கடன் இல்லாமல் செய்வதை பேணுவதையும் பின்பற்றுகிறார்.

பெப்ரவரி 5 தேர்தலில் தோற்றதற்குப் பின்னர், ராமலோவ் AfD க்கு சிவப்புக் கம்பளம் விரிக்க அனைத்தும் செய்துள்ளார். வலதுசாரி தீவிரவாதிகளுடன் CDU மற்றும் FDP உடன்படிக்கை தூண்டிவிட்ட பாரிய மக்கள் எதிர்ப்பு எழுச்சி மீது அவர் அதிர்ச்சி அடைந்ததை விட அந்த உடன்படிக்கை குறித்து அவர் குறைவாகவே அதிர்ச்சி அடைந்தார். அப்போதிருந்து, அவர் இந்த எதிர்ப்பை நசுக்கவும் நிலைதடுமாற செய்யவும் ஒவ்வொரு படியையும் கணக்கிட்டு எடுத்து வைத்துள்ளார்.

தூரிங்கியாவின் CDU இல் பெருமளவிலான பிரிவுகள் AfD இக்கு அனுதாபமாக உள்ளன என்றபோதினும், ஓர் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை வழங்க அவர் CDU இற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியதுடன், புதிய தேர்தல்கள் CDU இக்கு அழிவுகரமாக இருக்கும் என்பதால் உடனடியாக புதிய தேர்தல்கள் நடத்துவதை நிராகரித்தார். இடது கட்சியுடன் அதன் அனைத்து கூட்டுறவையும் நிராகரிக்கும் அதன் கொள்கையை CDU கைவிட மறுத்ததும், ராமலோவ் அவர் அரசாங்கத்தின் அனைத்து கொள்கைகள் மீதும் தடுப்பதிகார உரிமையை (வீட்டோ உரிமை) CDU க்கு—மறைமுகமாக AfD க்கு—வழங்கும் ஒரு "ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையின்" அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருக்க உடன்பட்டார்.

இப்போதிருக்கும் ஒழுங்கமைப்பு மற்றும் அரசைப் பாதுகாப்பது அரசியல் நலன்களை விட மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தியதன் மூலம் இதை ராமலோவ் மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தினார்: “முதலில் அரசு, பின்னர் கட்சி, பின்னர் தான் தனிநபர்,” என்றார். இவ்விதத்தில் அவர், 1918 நவம்பர் புரட்சியின் போது முதலாளித்துவ ஒழுங்குமுறைக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்காக ஜேர்மன் இராணுவத்துடனும் அதிவலது Freikorps ஆயுதப்பிரிவுடனும் கூட்டு சேர்ந்த Friedrich Ebert மற்றும் Gustav Nosske போன்ற வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகளின் பாரம்பரியத்தில் நிற்கிறார்.

அவர் இடது கட்சி எதிலிருந்து எழுந்து வந்ததோ அந்த ஸ்ராலினிச பாரம்பரியத்தையும் தழுவுகிறார். 1930 களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் இருந்து, 1973 இல் சிலி வரையில், ஸ்ராலினிசம் "ஜனநாயக" கட்சிகள் என்றழைக்கப்பட்டவைகளுடன் கூட்டணிகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் தொழிலாள வர்க்கத்தின் எல்லா புரட்சிகர போராட்டங்களையும் நசுக்கியதன் மூலமாக எண்ணற்ற வலதுசாரி சர்வாதிகாரங்களுக்கு வழி வகுத்தது. மாஸ்கோ விசாரணைகள் மற்றும் மாபெரும் பயங்கரம் ஆகியவை இந்த "மக்கள் முன்னணி" கொள்கையின் மற்றொரு அம்சம் இருந்தன, இவை லெனினின் போல்ஷிவிக்குகளின் ஏறத்தாழ ஒட்டுமொத்த தலைமை, பத்தாயிரக் கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் நூறாயிரக் கணக்கான புரட்சிகர தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களின் உயிர்களைப் பறித்தன.

பரந்த மக்கள் எதிர்ப்பின் முன்னால் ஆளும் வர்க்கம் அவர்களின் இராணுவவாதம் மற்றும் சமூக செலவின வெட்டுக்களைத் திணிப்பதற்காக அது AfD ஐ நனவுபூர்வமாக ஊக்குவித்து கட்டமைத்து வருகிறது என்பதை ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) நீண்டகாலமாக எச்சரித்து வருகிறது. SGP இன் துணை தலைவர் கிறிஸ்தோப் வாண்ட்ரியர் "அவர்கள்ஏன்திரும்பவந்திருக்கிறார்கள்? என்ற அவரது நூலில், AfD இன் வளர்ச்சியை "அரசாங்கம், அரசு எந்திரம், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் சித்தாந்தவாதிகள் வகிக்கும் பாத்திரத்தை பகுத்தாராயாமல் விளங்கப்படுத்த முடியாது,” என்பதை எடுத்துக்காட்டினார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்: “1933 இல் ஆளும் உயரடுக்கின் சதி அப்போதைய பாசிசவாத இயக்கத்தை அடித்தளமாக கொண்டிருந்தது என்றால், இன்றைய உண்மையோ இதற்கு தலைகீழாக உள்ளது. AfD இன் வளர்ச்சி அதுபோன்றவொரு சதியின் விளைவாகும்.”

இடது கட்சி இந்த சதியின் பாகமாக உள்ளது என்பதேயே AfD க்கு ராமலோவ்வின் ஆதரவு எடுத்துக்காட்டுகிறது. அது இராணுவவாதம், பாசிசவாதம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒவ்வொரு அணித்திரள்வையும் விரோதத்துடன் பார்க்கிறது என்பதோடு, அதை அவநம்பிக்கையான முட்டுச்சந்துக்குள் திசைதிருப்பி விட முயன்று வருகிறது. இடது கட்சி கூட்டாட்சி மட்டத்திலும் மற்ற கட்சிகளால் அரசாங்கத்தில் ஒரு பங்காளியாக ஏற்றுக் கொள்ளப்பட வேட்கை கொண்டுள்ளது, மேலும் பெரும்பாலும் AfD உள்ளடங்கலாக அவற்றுடன் வெறும் தந்திரோபாய அளவிலான கருத்து வேறுபாடுகளே கொண்டுள்ளது.

இடது கட்சி தூரிங்கியா தேர்தலில் "வலதை நோக்கிய மற்றொரு கோழைத்தனமான திருப்பத்துடன்" விடையிறுத்ததைக் குறித்து உலகசோசலிசவலைத்தளம் (WSWS) பெப்ரவரி 14 முன்னோக்கில் எச்சரித்தது. "அது கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைத் தாஜா செய்து வருகிறது என்பது மட்டுமல்ல, மாறாக அது AfD உடன் ஒத்துழைக்கவும் தயாராக இருப்பதை எடுத்துக்காட்டி வருகிறது,” என்று குறிப்பிட்டது. இது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. AfD இன் வளர்ச்சிக்கு எதிராகவும், ஜேர்மனி மற்றும் சர்வதேச அளவில் இராணுவவாதத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் அரசியல் கட்சியும் போக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே ஆகும்.

கட்டுரையாளர்பரிந்துரைக்கும்ஏனையகட்டுரைகள்:

1930 களின் பேராபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கட்டும்! ஜேர்மனியில் அரசியல் சதித்திட்டமும், பாசிசத்தின் எழுச்சியும்

[14 February 2020]

Loading