இலங்கையில் சோ.ச.க. இணையவழி பொதுக் கூட்டம்: கொவிட்-19 தொற்றுநோயும் முதலாளித்துவ மிலேச்சத்தனமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஏப்ரல் 5 ஞாயிற்றுக் கிழமை, உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு “கொவிட்-19 தொற்று நோயும் முதலாளித்துவ மிலேச்சத்தனம்” என்ற தலைப்பில் இணையவழி பகிரங்க கூட்டமொன்றை நடத்துகிறது.

கொவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கு ஆபத்தான அச்சுறுத்தலை விடுத்துள்ள சூழ்நிலையிலேயே சோ.ச.க. இந்த கூட்டத்தை நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் மனித வாழ்க்கை சம்பந்தமாக இழிந்த புறக்கணிப்பையும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உள்ளார்ந்த இயலாமையையும் வெளிப்படுத்தியுள்ளன. உலகின் பிற அரசாங்கங்களைப் போலவே இலங்கை அரசாங்கமும், பெரிய அளவிலான பரிசோதனைகள் உட்பட பொதுமக்களுக்கு போதுமான சுகாதார சேவைகளை வழங்கத் தவறியதன் மூலம் வெகுஜனங்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. அதன் பிரிதிபலிப்பு, பிரதானமாக காலவரையற்று ஊரடங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எதேச்சதிகார ஆட்சி முறைகளை அபிவிருத்தி செய்வதற்கான தனது திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த துயரத்தைப் பயன்படுத்துகிறது. கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிப்பதை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ள ராஜபக்ஷ, தேர்தலில் தெரிவுசெய்யப்படாத தனது சகோதரரான பசில் ராஜபக்ஷவை கொவிட்-19 சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக நியமித்துள்ளார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவற்கு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் இலாயக்கற்று இருக்கின்றமை, உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை சமூகத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முதலாளித்துவத்தின் இயலாமையை அம்பலப்படுத்துகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும், இந்த தொற்று நோய்க்கும் உலக மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிராகப் போராடக் கூடிய ஒரே வழி, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டமே என தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவுபடுத்துகின்றது.

இந்த முக்கியமான கூட்டத்தில் பங்குபற்றி மேற்கூறிய வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாட இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலகசோசலிசவலைத்தள வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். https://www.facebook.com/sep.lk/

Loading