இலங்கை: கொரோனா தொற்றுநோய் பரவுவதை அலட்சியம் செய்து தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா தொற்றுநோய் விரைவாக பரவுகின்ற நிலைமைகளை அலட்சியம் செய்து கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகளாலும் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், விவசாயிகள் பயிர்ச்செய்கள் மற்றும் அறுவடை நடவடிக்கைகளைத் தொடரவும், தோட்டங்கள், ஆடைகள் உட்பட ஏற்றுமதித் தொழில்களைத் தொடரவும் அரசாங்கம் அனுமதித்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார். உடனடியாக அதனை பற்றிக்கொண்ட கம்பனி உரிமையாளர்கள் தொழிலாளர்களை வேலைக்கு அழத்துள்ளனர். பெருந்தோட்டக் கம்பனிகள் மட்டுமன்றி, இலங்கையின் ஆடை மற்றும் ஏனைய முதலாளித்துவ வர்த்தகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களினதும் கொள்கை இதுவேயாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் வேலைசெய்வதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பல்ல எனவும், தாமாகவே விருப்பத்துடன் வேலைக்கு வருவதாக கடிதம் எழுதி தருமாறு தொழிலாளர்களை நிர்வாகம் கேட்டுள்ளது. ஆயினும் தொழிலாளர்கள் அதை நிராகரித்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) உட்பட தோட்ட தொழிற்சங்கங்களின் முழு ஆதரவோடு, அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இந்த பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான கொள்கையை செயல்படுத்தியுள்ளன.

இ.தொ.கா. ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஒரு பங்காளியாகும், அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அதன் பிரதான அமைச்சர்களில் ஒருவராவார். NUW மற்றும் ம.ம.மு. முந்தைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தன. இந்த தொழிற்சங்கங்கள், தம்மிடையே அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும், தோட்டத் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ அரசாங்கங்களும் தோட்டக் கம்பனிகளும் கொடூரமான கொள்கைகளை திணிப்பதை அவர்கள் கூட்டாக ஆதரிக்கின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் தினசரி ஊதியமாக ஆயிரம் ரூபா கோரி கடந்ந வருடம் நடத்திய வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்து, தோட்டக் கம்பனிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டங்களை ஆதரித்த இந்த தொழிற்சங்கங்கள், இப்பொழுது கொரோனா தொற்று நோயினால் பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்கொள்ளும் நெருக்கடியை தொழிலாளர்கள் மேல் சுமத்துகின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் முகக் கவசம் இல்லாமல் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். மார்ச் 25 அன்று, டிக்கோயா என்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய மறுத்த போதிலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் ஆபத்து இருந்தபோதிலும், தினசரி 750 ரூபா என்ற அற்ப ஊதியத்தில் தொழிலாளர்கள் தமது பசியைப் போக்க தோட்டக் கம்பனிகளின் நிர்ப்தங்களின் கீழ் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. "நாங்கள் வேலை செய்ய தயங்கினோம், ஏனென்றால் மிக அடிப்படையான உணவை வாங்குவதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. எங்கள் சம்பளம் கடந்த மாதம் 2000 ரூபா மட்டுமே, நாங்கள் முகக்கவசம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும். தோட்ட நிர்வாகம் அதனை எங்களுக்கு வழங்குவதில்லை. யாரும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை’’ என்று அக்கரப்பத்தனையை சேர்ந்த ஒரு தோட்டத் தொழிலாளி க்தி தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

என்பீல்ட் தோட்ட பெண் தொழிலாளி ஒருவர் மார்ச் 24 இரவு வேலைக்குத் திரும்பும்படி தோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக உலக சோசலிச வலைத்தள நிருபர்களிடம் கூறினார்: “நான் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். நிர்வாகம் இன்று என்னை இரவு வேலைக்கு வருமாறு கூறியது. ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், கொரோனா வைரஸிலிருந்து எந்த பாதுகாப்பும் இல்லாமல் நாங்கள் பணியாற்ற வேண்டும். எங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு கோருகின்றன. எந்த தொழிற்சங்கமும் இதனை எதிர்க்கவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, ஆனால் எங்களை வேலைக்கு போகச் செல்கிறார்கள்”.

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமையில் ஹட்டனில் எபோட்சிலி தோட்டத்தில் அமைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது: “அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளன. எந்தவொரு தொழிற்சங்கமும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. கொரோனா வைரஸ் காரணமாக தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மிக அடிப்படையான உணவைக் கூட வாங்க அவர்களிடம் பணம் இல்லை. தொண்டமான் தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்துகிறார். கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு திகாம்பரம் அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும் தொழிலாளர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வேலைக்குச் செல்லும்படி இவர்கள் கூறுகிறார்கள். உலக சோசலிச வலைதைதளம் வலியுறுத்தியவாறு கொரோனா தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் வழங்குவதுடன், ஊதியத்துடன் கூடிய லீவும் வழங்கப்பட வேண்டும்.’’

அரசாங்க மருத்துவர்கள் சங்கம் இலங்கை இப்போது கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தில் உள்ளது எனவும், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டால் அது அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மார்ச் 24 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது,

.இந்த நிலைமைகளின் கீழ், சுமார் 200,000 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பெரும் ஆபத்தில் உள்ளனர். ஆனால் ராஜபக்ஷ அரசாங்கமும், பெருந்தோட்ட கம்பனிகளும் தொழிலாளர்களின் உயிரைப் பணயம் வைத்து, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் பெருந்தோட்டத் தொழிலைக் காப்பாற்றுவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளன.

அவர்கள் தொற்றுநோய்க்கு உட்பட்ட காலத்தில் மாத்திரமல்ல, சாதாரண சூழ்நிலைகளிலிலும் ஆரோக்கியமான மற்றும் தார்மீக வாழ்க்கையை வாழ்வதற்கான குறைந்தபட்ச தரத்தில் கூட இல்லாத லயன் அறைகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை ஒரு நூற்றாண்டு பழமையான, சிறிய அறை மற்றும் ஒரு சமயலறை கொண்ட சரியான காற்றோட்டம் இல்லாத 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொடர் அறைகளைக் கொண்ட லயன்களாகும். அதாவது தொற்றுநோய் பரவக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையியே அவர்கள் வாழ்கின்றனர்.

அவர்களுக்கு போதுமான குடிநீர் அல்லது கழிப்பறை வசதிகள் இல்லை. சீரழிந்த சிறு மருந்தகத்தைத் தவிர வேறு எந்த மருத்துவ வசதியும் தோட்டங்களில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சமூக நிலைமைகளில் ஒரு தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலோருக்கு இருக்க முடியாது என்பதை ஒருவர் புரிந்துகொள்வது கடினம் அல்ல.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வேலையின்மை மற்றும் வறுமை பொதுவானது. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான தோட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர். கடைகள், ஹோட்டல்கள், கட்டிடங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களில் அவர்கள் பெற்ற சாதாரண வருமானத்தை கூட கொரோனா தொற்று நோயினால் இழந்துவிட்டனர். இருப்பினும், அவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொரோனா வைரஸ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பரவினால், ஏற்படக்கூடிய பேரழிவு மிகவும் ஆபத்தானது. ஆனால் அது முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் ஒரு பிரச்சினை அல்ல. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கள், முதலாளிகளைப் போலவே, இலங்கையின் பெருவணிகர்களும் தொழிலதிபர்களும் "எங்கள் லாபத்திற்காக பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இறக்க வேண்டுமென்றால், அப்படியே நடக்க வேண்டும்" என்ற கருதுகின்றனர்.

ஆனால் தொழிலாளர்கள் முதலாளித்துவ தொழில்வழங்குனரின் லாபத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியதில்லை. முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கொடிய கொள்கைகளுக்கு எதிராக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. முதலாளிகள் மற்றும் அரசாங்கங்களின் நேரடி கருவியாக செயல்படும் தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் இந்த சர்வதேச புரட்சிகர சமூக நீரோட்டத்துடன் ஒன்றுபட வேண்டும். அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தொழிற்சங்கங்களின் மீதான வெறும் விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் அப்பால் நகர்ந்து, அவற்றிலிருந்து பிரிந்து தொழிலாள வர்க்கத்தின் ஏனய பிரிவுகளுடனும், சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுடனும் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் உலகத் தொழிலாளர்களுடன் ஒன்றிணைவதற்கு, சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைத்து கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதே ஆகும்.

இறுதியில், இது இலாப அடிப்படையிலான முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதை பாதுகாக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் சக்தியையும் தூக்கியெறிகின்ற சர்வதேச சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தின் மூலமே வெற்றியீட்டப்பட முடியும்.

Loading