இலங்கை: கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்கின்ற போது சி.வி. விக்னேஸ்வரன் இந்து மதவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றார்

Athiyan Silva
10 April 2020

இந்து மதவாதியான தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், அண்மையில் தினக்குரல் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு, பழமைவாத இந்துமத ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற பரிந்துரைத்தார். இது விக்னேஸ்வரனின் பிற்போக்குத்தனத்தை மட்டுன்றி மனித உயிர்கள் சம்பந்தாமன அவரது அலட்சியத்தையும் வெளிப்படுத்துவதாகும்.

இலங்கையிலும் உலகம் முழுதும் ஆட்சியாளர்களின் புறக்கணிப்பும் அரசாங்கங்கள் மருத்துவச் செலவுகளை வெட்டிக் குறைத்து, மக்களின் உயிரைவிட முதலாளித்துவ நிறுவனங்களின் இலாபத்துக்கு முன்னுரைமை கொடுப்பதாலுமே பல நாடுகளிலும் கொரோனா தொற்றாளர்களின் மரணம் அதிகரிக்கின்றன என்பது மேலும் மேலும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது. விக்னேஸ்வரனின் பேட்டியின் இலக்கு, இந்த ஆளும் தட்டுக்களின் குற்றவியல் நடவடிக்கைகளை மூடி மறைத்து, அப்பாவி வெகுஜனங்கள் மீது குற்றம் சாட்டுவதே ஆகும்.

இதுவரை 1.5 மில்லியன் மக்களை நோயாளர்களாக்கி 89,915 பேரை காவுகொண்டுள்ள கொவிட்-19 வைரஸை எதிர்கொள்வதற்காக, இந்து மத ஒழுக்கநெறிகளை விஞ்ஞானபூர்வமானதாக காட்டுவதற்கு வஞ்சத்தனமாக முயற்சித்த விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது: ‘’அந்த நாட்களில் காலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி, மஞ்சள் நீர் வீட்டுக்குத் தெளிப்பார்கள். மாட்டு சாணத்தால் முன் வாசலைப் பூசி மெழுகுவார்கள். பின்னர் எம் பெண்கள் கோலம் போடுவர். வாசலில் ஒரு மஞ்சள் நீர் கலந்து வைத்து பக்கத்தில் ஒரு பாத்திரத்தை வைப்பார்கள். கை, கால்களை அலம்பிய பின்னரே உள் நுழைவார்கள். எம் பெண்கள் மஞ்சள் பூசி குளித்த பின்னர், தலைவாரி, பூச்சூடி, வீபூதி பூசி, நெற்றிக்கு குங்குமம் சந்தனம் வைப்பார்கள். ஆண்களும் குளித்த பின்னர் வீபூதி பூசி சந்தனம் வைப்பார்கள், சிலர் குங்குமம் வைப்பார்கள். இவற்றையெல்லாம் எம் முன்னோர்கள் செய்து வந்ததை பாதி வழியில் நிறுத்திவிட்டார்கள்.’’

கொரோனா வைரஸைத் தடுப்பதைப் பற்றி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் இந்துமத மத்திய காலத்து பழக்க வழக்கங்களை கை விட்டு, நவீன வாழ்க்கை முறையை மேற்கொண்டதால்தான் தற்போது இந்த அவலத்துக்கு முகம் கொடுத்துள்ளீர்கள் என்பதாகும்.

மாட்டின் சாணம் மற்றும் அதன் கோமியத்திலும் (மூத்திரம்) கொரோனா வைரஸ் மற்றும் இதர தொற்றுநோய்க்கான நிவாரணிகள் இருப்பதாகக் கூறி, அப்பாவி மக்களை மாட்டு மூத்திரத்தை குடிக்க வைக்க தற்போது இந்தியாவில் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் பாசிச சங்க பரிவார அமைப்புக்களும் முன்னெடுத்து வரும் பிரச்சாரத்துடன் விக்னேஸ்வரனின் கருத்து சமாந்தரத்தைக் கொண்டுள்ளது. (பார்க்க: https://www.youtube.com/watch?v=Wi9OdFmHb9E ) இந்த பிரச்சாரத்தின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பூர்வீக மாநிலமான குஜராத்தில் மக்கள் தினமும் 6,000 லீட்டர் கோமியத்தை குடித்து வருவதோடு போத்தல்களில் விற்பனைக்கும் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த அருவருப்பான காட்சியை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=HVWbkQbcruI

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க அவசியமான வெகுஜனப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகம் முழுதும் மருத்துவ நிபுணர்கள் தினமும் எச்சரித்துக் கொண்டிருக்கும் போது, நவீன விஞ்ஞானத்திற்கும், ஆய்வு முடிவுகளுக்கும் விரோதமான விக்னேஸ்வரனின் கருத்தானது, அவரின் பிற்போக்கு தேசியவாத, மதவாத அரசியலின் தர்க்கவியலான வெளிப்பாடாகும்.

உலகம் முழுதும் வைத்தியர்களும் மருத்துவ ஊழியர்களும் உயிர்களைக் காக்க போராடிக்கொட்டிருக்கும் போது, கடவுள் நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கை என்ற மாயையில் இருந்து வெகுஜனங்கள் விழித்துக்கொள்கின்ற நிலைமையிலேயே விக்னேஸ்வரன் இந்து மதத்துக்கு முண்டுகொடுக்கும் பிற்போக்கு முயற்சியில் ஈடுபடுகின்றார்.

உலகம் பூராவும் அரசாங்கங்கள் மக்களின் உயிர்களைக் காப்பதற்கும் மருத்துவ சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிதி ஒதுக்குவதை விட, கொரோனா பரவலால் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து சந்தைகளையும் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பாதுகாப்பதற்காக பில்லியன் கணக்கான நிதியை உள்ளீடு செய்வதுடன், ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு அதிகளவான நிதியை ஒதுக்குவதன் மூலம், வெகுஜனங்களின் உயிர்வாழ்வை ஆபத்தில் தள்ளியுள்ளன. ஏற்கனவே மருத்துவ வசதிகள் அற்பமாக இருக்கின்ற இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில், இத்தகைய உயிராபத்தான தொற்றுக்களில் இருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முறையான மருத்துவ வசதிகளை தேடி அலைகின்ற சூழ்நிலையிலேயே, விக்னேஸ்வரன் போன்றோர் இத்தகயை மதவாத பிற்போக்குத்தனங்களின் பக்கம் வெகுஜனங்களை திசைதிருப்பி விடுகின்றனர்.

இப்படியான பொறுப்பற்று தவறாக பரப்பபட்டுவரும் கருத்துக்களை நிராகரிக்கும்படி உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். முதலில், விக்னேஸ்வரனின் சிடுமூஞ்சித்தனமான கூற்றுக்கு எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்களும் கிடையாது. அவரே தனது உடல்நல பராமரிப்புக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகளை அணுகுகையில், உழைக்கும் மக்களுக்கு அவை அவசியமில்லை, மத்தியகாலத்து வழிமுறைகளே போதும் என்கிறார்.

இந்துக்கள் அதிகமாக வாழும் இந்தியாவில் கொரோனா 5,865 பேரை பாதித்துள்ளதுடன் 169 பேர் பலியாகியுள்ள அதேவேளை, இலங்கை தீவில் இதுவரை 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் மரணித்துள்ளனர். வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இரண்டு மாதங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலங்கடத்திய ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், கடந்த மூன்று வாரங்களாக நாட்டை காலவரையறை இன்றி பூட்டி வைத்துள்ளதுடன் ஊரடங்கு உத்தரவை அமுலில் வைத்துள்ளது.

போலிசும் இராணுவமும் ரோந்துவரும் ஒரு கடுமையான நிலைமையில் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி, பட்டினி நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். தொற்றுநோயினால் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியை, இராஜபக்ஷ தனது இராணுவ-பொலிஸ் ஆட்சியை பலப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். இது குறித்து வாய்திறக்காத விக்னேஸ்வரன், மத்தியகால இந்துமத பழைமைவாத வாழ்வுமுறைக்கு பரந்துபட்ட தமிழ் மக்கள் திரும்ப வேண்டும் எனக் கூறுவதன் மூலம், இராஜபக்ஷவின் பொலிஸ்-அரச வழிமுறைகளுக்கு மௌனமாக ஆதரவளிக்கின்றார்.

கடந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு, கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், சக்திவாய்ந்த அரசாங்கத்தை அமைக்க ஒரு பலம்வாய்ந்த மனிதராக கோடாபய இராஜபக்ஷவை இலங்கை முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றது முதலே நாளாந்தம் பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் எதிர்கொண்டு வருகின்ற இராஜபக்ஷ, அவற்றை நசுக்குவதற்காக ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக்கொள்ளவும் இராணுவம் மற்றும் பொலிஸைப் பலப்படுத்தவும் எல்லா வாய்ப்புகளையும் பற்றிக்கொள்கின்றார்.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒரு பங்காளியான விக்னேஸ்வரன், சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்கத்தின் மறு எழுச்சியின் பாகமாக இலங்கையிலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு போராட்டத்திற்கு வந்துகொண்டிருப்பதையிட்டு கவலைகொண்டுள்ளார். இதனால் வரவிருக்கும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் இருந்து இலங்கை முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, இராஜபக்ஷவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு அவர் இந்துமத ஒழுக்க நெறிகளை தூக்கிப் பிடிக்கின்றார்.

1938-1950 வரையிலான காலப்பகுதியில், லங்கா சம சமாஜ கட்சியின் தலைமையின் கீழ் தீவு முழுவதுமுள்ள உழைக்கும் மக்கள் நடத்திய தீரமான போராட்டத்தின் பெறுபேறாகவே, இலங்கை ஆளும் வர்க்கம் பொதுச்சுகாதார சேவையை ஸ்தாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இத்தகைய வெகுஜனப் போராட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட மருத்துவ சேவை வெட்டிக் குறைக்கப்படுவதனால் வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் விளைவுகளைப் பற்றி மௌனம் காத்துவந்துள்ள விக்னேஸ்வரன், தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமகாண முதலமைச்சராக இருந்த போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி சத்தியாகிரகம் இருந்த சுகாதாரத் தொண்டர்களை கண்டும் காணாதது போல் கடந்து போய் சிகிச்சை பெற்று திரும்பியதன் மூலம், கொழும்பு ஆளும் தட்டின் சிக்கன நடவடிக்கைகளுக்கு தனது ஒப்புதலை வெளிப்படுத்தினார்.

சிங்கள பேரினனவாத ஒற்றையாட்சி முறைக்கு முண்டுகொடுத்து, கொழும்பு ஆளும் வர்க்கத்துடனான கொடுக்கல் வாங்கல் மூலம் தமது நலன்களை தொடர்ந்து பாதுகாத்துவரும் எந்தவொரு தமிழ் தேசியவாதக் கட்சிகளிடமும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கோ அல்லது பரந்தபட்ட உழைக்கும் மக்கள் முகம் கொடுக்கும் எந்தவொரு அடிப்படையான பிரச்சனைகளுக்கோ எந்த தீர்வும் கிடையாது. இவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் இந்திய முதலாளித்துவத்தினதும் நலன்களை இலங்கையில் செயல்படுத்தும் கருவிகளாக செயற்பட்டு, தமது நலன்களைத் தக்கவைத்துக்கொள்ளவே விழைகின்றன.

பிரிவனைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த கால போரில் வாழ்வாரங்களை இழந்த வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் அன்றாட உழைப்பாளர்களும் ஏழை விவசாயிகளும் ஊரடங்குக்கு மத்தியில் வருமானமோ நிவாரணங்களோ இன்றி பட்டினியை எதிர்நோக்கத் தள்ளப்பட்டுள்ளனர். பல வறிய குடும்பங்கள் பலாக்காயையே நம்பி வாழத் தள்ளப்பட்டுள்ளனர். வடக்கில் கிளிநோச்சி போன்ற இடங்களில் ஒரு கிலோ அரிசி 80 ரூபாயிலிருந்து 140 ருபாவிற்கு விற்கப்படுவதாக கூறப்படுகின்றது.

வடக்கில் நிலைமையை விவரித்த காரைநகரைச் சேர்ந்த ஒரு பஸ் சாரதி, 21 நாட்களாக ஊரடங்கினால் அடைபட்டு கிடக்கின்றோம். எந்த நிவாரணமோ அத்தியாவசியப் பொருட்கள் விநியோகமோ கிடையாது, என்றார். “நிவராணம் என்ற பெயரில் அரசாங்கம் 3 கிலோ அரிசியும் 2 கிலோ கோதுமை மாவும் கொடுத்துள்ளது. ஒவ்வொரு அரிசியாகவா சாப்பிட வேண்டும்? உதவியும் இன்றி, பொருள் விநியோகமும் இன்றி, வேலைக்கும் போக விடமால் தடுத்து வைத்துள்ளனர். ஏதாவது வாழ்வாதரத்தை தேட வெளியில் இறங்கினால் கடற்படை அடிக்கின்றது. ஏற்கனவே இந்த அரசாங்கம் முன்னெடுத்த யுத்தத்தினால் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளோம். கொரோனாவில் சாகிறோமோ இல்லையோ. பட்டினியில் சாகப் போகின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.

‘’வாழ்க்கை கஷ்டமாக இருக்கின்றது. தோட்டத்தில் வேலையுமில்லை, ஏதாவது கூலி வேலைக்கு போவதற்கு ஊரடங்கு சட்டத்தால் போக முடியவுமில்லை, சாப்பாட்டிற்கு வழியுமில்லை,” என்று மலையகத்தில் வாழும் ஒரு தாயார் தனது கஷ்டத்தை கூறுகின்றார். “ஒரு அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு போக வழியில்லை. நாங்கள் எப்படி பிழைப்பது? தோட்டத்தில் எங்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. எங்களிடம் ஒன்றுமே இல்லை.’’ இவர் பேசும் போது அவரைச் சுற்றி பல குழைந்தைகள் மற்றும் பெரியோர்கள் பட்டினியில் இருப்பதை பார்க்க கூடியதாக இருந்தது.

இந்த உணவுப் பற்றாக்குறைக்கு விக்னேஸ்வரனின் தீர்வு கொழும்பு அரசாங்கம் சகலருக்கும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, பக்தர்கள் கோவிலுக்கு பூஜைக்காக வைத்திருக்கும் நிதிகளை கொண்டு மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக் வேண்டும் என்பதாகும்.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களும், இலங்கை ஆளும் தட்டின் தமிழ் பிரதிநிதிகளில் ஒருவரான விக்னேஸ்வரனின் பழைமைவாத பிற்போக்கு கருத்தை மட்டமல்ல, அவர் பிரநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியவாதத்தின் அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு வங்குரோத்து அரசியலையும் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

மனித குலம் இன்று எதிர்கொண்டிருக்கும் துன்பத்துக்கு பிரதான காரணம் முதாலளித்துவ அமைப்பு முறையின் உள்ளார்ந்த நெருக்கடியும் இத்தகயை தொற்று நோய் பரவலில் இருந்து மனிதர்ளைக் காப்பதற்கு அதன் இலாயக்கின்மையுமே ஆகும். மனித குலத்தை தொற்று நோய்களில் இருந்தும் யுத்தங்களில் இருந்தும் காப்பாற்றுதவற்கான ஒரே வழி காலங்கடந்த முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசி மனிதனின் தேவைக்காக உற்பத்தி செய்யும் சோசலிச அரசுகளை உருவாக்குவதே ஆகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு பூகோள பொறிமுறையை பிரேரிக்கின்றன.

பார்க்க: இலங்கையில் கொரோனா வைரஸ் நெருக்கடி: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வேலைத்திட்டம்