முன்னோக்கு

வணிகங்களை மீண்டும் திறப்பதற்கான ட்ரம்ப் பிரச்சாரம் நூறாயிரக்கணக்கானவர்களின் வாழ்வை ஆபத்திற்குட்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகம், கோவிட்-19 தொற்றுநோயால் 100,000 மரணங்கள் என்றவொரு கொடூரமான மைல்கல்லை வெள்ளிக்கிழமை கடந்தது. இத்தாலி மற்றும் ஸ்பெயினைக் கடந்து, 18,700 க்கும் அதிகமான மரணங்களுடன் அமெரிக்கா இப்போது வேறெந்த நாட்டையும் விட அதிக கொரொனா வைரஸ் உயிரிழப்புகளைக் கொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல்முறையாக அமெரிக்காவில் 2,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள். நியூ யோர்க்கின் டஜன் கணக்கான சடலங்கள் ஒவ்வொரு நாளும் பெருந்திரளான சடலங்களை எரிக்கும் Bronx இல் உள்ள ஹார்ட் தீவிலுள்ள போட்டர் தோட்டத்தில் அடையாளமில்லாத பாரிய புதைகுழிகளில் எரிக்கப்பட்டு வருகின்றன. குளிரூட்டப்பட்ட பாரவூர்திகள் அந்நகர மருத்துவமனைகளுக்கு வெளியே சடலங்களுடன் வரிசையாக நிற்கின்றன.

Workers wearing personal protective equipment bury bodies in a trench on Hart Island, April 9, 2020 [Credit: AP Photo/John Minchillo]

டெட்ராய்டில் சினாய் கிரேஸ் மருத்துவமனையோ, சடலங்களை மூடும்பைகளின் பற்றாக்குறையில் உள்ளது. “மொத்தம் உள்ள மூன்று குளிரூட்டிகளும் நிரம்பிவிட்டன,” என்று செவிலியர் Jeff Eichenlaub டெட்ராய்ட் நியூஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார். “பிணவறையும், பிணவறைக்கு அடுத்துள்ள பார்வையாளர் அறையும் நிரம்பிவிட்டன. இப்போதிருந்து நாங்கள் சடலங்களை வைப்பதற்காக தூக்க ஓய்வறை ஆய்வகங்களுக்கு எடுத்து சென்று கொண்டிருக்கிறோம்,” என்றார்.

மாசசூசெட்ஸில் (நேற்று 2,033 புதிய நோயாளிகள்; பென்சில்வேனியா (1,795 புதிய நோயாளிகள்); இலினோய் (1,465 புதிய நோயாளிகள்); புளோரிடா (1,142 புதிய நோயாளிகள்) உட்பட ஆரம்ப மையங்களைக் கடந்து இந்த வைரஸ் மாநிலங்களில் இன்னும் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. பலவிடயங்களில் நோய்வாய்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் எந்த வசதியும் இல்லாத புறநகர் பகுதிகளுக்கும் அது நகரத் தொடங்கி உள்ளது.

ஆனால் இவ்வார போக்கில் ஒவ்வொரு நாளும் அண்மித்து இரண்டாயிர புதிய மரணங்களுடன், ஊடக வார்த்தைப் பிரயோகங்களில் ஒரு குழப்பமூட்டும் திருப்பம் வடிவை எடுக்க தொடங்கியது. கட்டவிழ இருக்கும் பேரிடர் குறித்த கொடூர எச்சரிக்கைகளுடன் இந்த வாரம் தொடங்கியது என்றாலும், அதேவேளையில் “நம்பிக்கை ஒளி" என்றும் "கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது" என்றும் கூறப்படுவதன் மீது கவனத்தை குவித்த எண்ணற்ற கட்டுரைகளுக்குள் வந்து அது முடிந்தது.

வார்த்தைப் பிரயோகங்களில் ஏற்பட்டுள்ள இந்த திருப்பம், காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்புவதற்கான கோரிக்கைகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மிகவும் பகிரங்கமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வக்காலத்து வாங்குகிறார். அமெரிக்கா "பெரும் வெடிப்புடன் செயல்பட வேண்டும்" என்பதை அறிவுறுத்த அவரின் அன்றாட பத்திரிகையாளர் கூட்டத்தை அவர் பயன்படுத்துகிறார்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலுமான விஞ்ஞானிகளோ, காலத்திற்கு முந்தியே வணிகங்கள் மற்றும் வேலையிடங்களைத் திறப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கு எதிராகவும் எச்சரித்துள்ளனர். வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் சொந்த உள்அலுவலக புள்ளிவிபரங்களே சமூக விலகல் நடவடிக்கைகளை முன்கூட்டியே திரும்ப பெறுவது அண்மித்து 140,000 நபர்களின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்று குறிப்பிடுவதாக அறிவித்தது.

“30 நாட்கள் வீட்டிலேயே இருக்கும் உத்தரவுகளை நிர்வாகம் நீக்கினால், கோடை வரையில் பள்ளிகள் மூடி இருந்தாலும் கூட மரண எண்ணிக்கை 200,000 ஐ எட்டுமென மதிப்பிடப்படுகிறது,” என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது. இது, மே மாத இறுதி வரையில் தற்போதைய கட்டுப்பாடுகளை வைத்திருந்தாலும் கூட, 60,400 மரணங்கள் ஏற்படுமென்ற அரசாங்கத்தின் தற்போதைய மதிப்பீட்டுடன் முரண்படுகிறது.

அமெரிக்காவில் இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறும் ஒரேயொரு நம்பத்தகுந்த விஞ்ஞானியோ, மருத்துவரோ அல்லது தொற்றுநோய் நிபுணரோ இல்லை. சமூக விலகல் நடவடிக்கைகள் நீக்கப்பட்டால் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான மருத்துவ உள்கட்டமைப்பு அமெரிக்காவிடம் இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மிகவும் கடுமையான நோய் அறிகுறிகளைக் கொண்டவர்களை மட்டுமே பரிசோதித்து வருகிறது என்பதுடன், அந்நாட்டின் பெரும்பகுதிகளில் திட்டமிட்ட தனிமைப்படுத்தலோ மற்றும் தொடர்பின் சுவடுகளைப் பின்தொடரும் நடவடிக்கைகளோ இல்லை.

உண்மையில் ட்ரம்ப் நிர்வாகம் இந்த வாரம் பரிசோதனை வசதிகளுக்குச் செல்லும் பெடரல் நிதிக்களை வெட்டுவதன் மூலமாக, இதனால் அவற்றில் சிலவற்றை மூட வேண்டியிருக்கும் என்ற நிலையிலும், பரிசோதனைகள் சிலவற்றை நிறுத்த நகர்ந்து வருகிறது.

வேலைக்குத் திரும்புதல் என்பது என்ன அர்த்தப்படுத்தும்? இந்த தொற்றுநோயை "வழமையானதாக" ஆக்குவது, அதாவது வரவிருக்கும் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் இறப்பார்கள் என்ற உண்மைக்கு மக்களைப் பழக்கப்படுத்துவதே, ஒட்டுமொத்தமாக ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக உள்ளது. மரண எண்ணிக்கை குறித்து செய்திகளில் மிகவும் மிகவும் குறைவான கவனம் கொடுக்கப்படும் என்பதுடன், தொழிலாளர்கள் ஏதோ இது தவிர்க்கவியலாத ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த கோரிக்கைக்குப் பின்னால் ஓர் ஆழ்ந்த எரிச்சலூட்டும் வர்க்க தர்க்கம் செயல்படுகிறது. தொழிலாளர்கள் இழக்கத்தவர்களாக கையாளப்பட இருக்கிறார்கள். அவர்கள் உயிரிழந்தால், அது வெறுமனே வியாபாரத்திற்கு கொடுக்கப்படும் விலையாக இருக்கும், அவர்களில் சிலர் அந்நோயால் பாதிக்கப்பட்டால் அந்த இடம் வேறொருவரால் பிரதியீடு செய்யப்படும்.

அனைத்திற்கும் மேலாக நடைமுறை அர்த்தத்தில், அபாயத்தைக் கருத்தில் கொண்டு வேலை செய்ய மறுக்கும் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதே இதன் அர்த்தமாகும், இது அவர்களை வேலைவாய்ப்பின்மை காப்பீட்டைப் பெற தகுதியற்றவர்களாக ஆக்கிவிடும். வெறும் கடந்த மூன்று வாரங்களிலேயே 16.8 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்மை கொடுப்பனவுகளுக்கு கோரியுள்ள நிலையில், பெருந்திரளான மக்களின் இந்த வேலைவாய்ப்பற்ற நிலைமை அவர்களின் உயிர்களை ஆபத்திற்குட்படுத்தி அவர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்க ஒரு குண்டாந்தடியாக பயன்படுத்தப்படும். இந்த தொற்றுநோய்க்கு முன்னர் தொழிலாளர் பற்றாக்குறையை முகங்கொடுத்து வந்த பெருநிறுவனங்கள் அவர்களின் தொழிலாளர் சக்தியை நெறிப்படுத்த மீண்டுமொருமுறை அவர்களின் கரங்களில் சாட்டையை எடுக்கும்.

இந்த தொற்றுநோய் பொருத்தமற்ற விகிதத்தில் வயதானவர்களையும் மிகவும் பலவீனமானவர்களையும் கொல்கிறது என்பதைப் பொறுத்த வரையில், இதன் அர்த்தம் வெகுசில சமூக ஆதாரவளங்களே வயதானவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்க திருப்பி விடப்படும் என்பதாகும், அதற்கு பதிலாக அந்த நிதி பங்கு வாங்கிவிற்பதிலும் பங்கு ஆதாய தொகைளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்புவதற்கான கோரிக்கை, இந்த தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னர் இருந்து ஆளும் வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்ட "தீங்கான அலட்சியத்தின்" தொடர்ச்சியாகும்.

ஆரம்பத்தில் இந்த தொற்றுநோயின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்டிய ட்ரம்ப், அதை பயணத் தடைகளைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டிய ஒரு வெளிநாட்டு எதிரியாக முன்நிறுத்தினார். அமெரிக்கா பல மாதங்களாக பரிசோதனை நடத்துவதற்கு எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. முதலில் இத்தாலியில் இருந்தும், பின்னர் வாஷிங்டன் மற்றும் நியூ யோர்க்கில் இருந்தும், பயங்கர செய்திகள் வெளியான பின்னர் தான், மக்களின் அழுத்தங்கள் மற்றும் தொழிலாளர்களின் தன்னிச்சையான வெளிநடப்புகளுக்கு மத்தியில், பரந்த சமூக விலகலை நடைமுறைப்படுத்த மாநில அரசாங்கங்களும் இறுதியில் வெள்ளை மாளிகையும் நிர்பந்திக்கப்பட்டன.

அந்த தொற்றுநோய் பரவ தொடங்கியதும், பின்னர் இருகட்சிகளிது கருத்தொற்றுமையுடன் ஆளும் வர்க்கம் வரலாற்றில் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குச் செல்வவளத்தை மிகப் பெரியளவில் கைமாற்றுவதற்கு அந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தியது. நேற்று அறிவிக்கப்பட்ட 2.3 ட்ரில்லியன் டாலர் கூடுதல் திட்டம் உட்பட நிதித்துறையும் பெடரல் ரிசர்வும் வோல் ஸ்ட்ரீட்டுக்கு வழங்கிய பிணையெடுப்பு, 2008 நெருக்கடிக்குப் பின்னர் செய்யப்பட்டதையே மிகப் பெரியளவில் விஞ்சிவிட்டது. இம்முறை இது ஒரு சில நாட்களிலேயே முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பாரியளவில் திருட்டுத்தனமான சூறையாடும் தன்மையிலான இந்த நடைமுறை நடந்து கொண்டிருந்த போதே, வேலைக்குத் திரும்புவதற்கான இந்த அழுத்தம் ஏறத்தாழ உடனடியாக தொடங்கியது. இது வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து மட்டும் வரவில்லை. உண்மையில் இந்த பிரச்சாரம் ஜனநாயகக் கட்சியுடன் அணிசேர்ந்த நியூ யோர்க் டைம்ஸால் தொடங்கப்பட்டது, இதன் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன், குறுகிய காலத்திற்காக இருந்தாலும் "குணப்படுத்தல் நோயை விட மோசமாக இருக்கும்" என்று எச்சரித்தார்.

மேலும் அமெரிக்காவில் என்ன நடந்து வருகிறதோ அது மேற்கு ஐரோப்பா எங்கிலும் நடத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய அடுத்த வாரத்திற்கு முன்னதாக வேலைக்குத் திரும்புவதற்கான திட்டங்களை ஆஸ்திரிய அரசாங்கம் அறிவித்துள்ளது, அதேவேளையில் ஸ்பெயின் ஏப்ரல் 20 இல் வாகனத்துறை ஆலைகளை மீண்டும் திறக்க உத்தேசிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய குழு அதன் மார்ச் 17 அறிக்கையில் எழுதியது, “இரண்டு வர்க்கங்களின் விட்டுகொடுக்கவியலாத இரண்டு நலன்கள் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிற்கின்றன. முதலாளித்துவாதிகளைப் பொறுத்தவரையில், இது அவர்களின் இலாப நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது மற்றும் அவர்களின் சொத்துக்களும் செல்வவளமும் தீண்டப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். அவர்களின் நலன்களுடன் மோதும் எந்த நடவடிக்கைகளும் அவர்கள் எடுக்க மாட்டார்கள். தொழிலாள வர்க்கமோ, தனியார் இலாபத்திலிருந்து அல்ல மாறாக சமூக தேவையிலிருந்து தொடங்கி, மனிதகுலத்தின் பெருந்திரளான மக்களின் நலன்களைக் குறித்து அக்கறை கொண்டுள்ளனர்.”

பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலைக்குத் திரும்புதல் இருக்கக்கூடாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது! ஒவ்வொரு தொழில்துறையிலும் எழுந்துள்ள வேலைநிறுத்தங்களின் அலையில், பாதுகாப்பான வேலையிட நிலைமைகளுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகள், பாதுகாப்பு சாதனங்களை வழங்குதல், அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடுதல் ஆகியவை இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான விஞ்ஞானிகளின் கோரிக்கைகளுடன் ஒத்திருக்கின்றன.

இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும். கடன், அடமானக் கடன் மற்றும் பயன்பாட்டு சேவைக் கட்டணங்கள் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்.

மருத்துவக் கவனிப்புக்கு பாரியளவில் முதலீடு செய்வதன் மூலமாக இப்போதும் கூட இந்த COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும், இல்லாதொழிக்க முடியும். உலகெங்கிலும் நூறாயிரக் கணக்கானவர்கள், அல்லது மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்!

வோல் ஸ்ட்ரீட்டுக்கு கையளிக்கப்பட்ட ட்ரில்லியன்கள் இரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு பதிலாக அவசர மருத்துவக் கவனிப்பு உள்கட்டமைப்பை உருவாக்கவும், உயிர்காக்கும் மருத்துவச் சாதனங்களை உற்பத்தி செய்யவும், COVID-19 ஐ தடுப்பதற்கு இன்றியமையாத மிகப் பெரியளவில் பரிசோதனைகளுக்கான மற்றும் சுவடுகளைப் பின்தொடர்வதற்கான முறைகளை உருவாக்கவும் பாரியளவில் பொதுத்துறை வேலைகளுக்கான திட்டம் தொடங்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளைக் கைவரப்பெறுவதற்கு, அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் சமூகத்தின் அனைத்து முற்போக்கு சக்திகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். சமூக மற்றும் பொருளாதார வாழ்வு தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்ல மாறாக சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்யப்பட வேண்டும். முதலாளித்துவம் மற்றும் மரணமா, அல்லது சோசலிசமும் உயிர்வாழ்வா என்பதே மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் மாற்றீடாகும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

கொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்
[24 March 2020]

மாயையும், யதார்த்தமும், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியும்
[7 April 2020]

தொழிலாள வர்க்கமும், சோசலிசமும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமும்
[1 April 2020]

COVID-19 இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கையில், ஆளும் வர்க்கம் காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப விரைவுபடுத்துகிறது
[6 April 2020]

Loading