"சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கையை தூதரகம் விமர்சித்த பின்னர் பிரான்ஸ் சீன தூதரை சமூகமளிக்குமாறு கோருகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் (Jean-Yves Le Drian) திங்களன்று பிரான்சிற்கான சீனத் தூதர் லு ஷே (Lu Shaye) ஐ அழைத்து, COVID-19 தொற்றுநோய்களில் சீனாவின் சாதனையை பாதுகாக்கும் அவரது தூதரகத்தின் அறிக்கைகளை விமர்சித்தார்.

இந்த இராஜதந்திர சம்பவம், ஐரோப்பாவிற்கும் தற்போது தொற்றுநோய் கட்டுக்குள் உள்ளதும் மற்றும் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் ஒரு சில டஜன் தினசரி புதிய தொற்றுக்கள் கொண்ட சீனாவுக்கு இடையிலான வேறுபாட்டை மையமாகக் கொண்டது. COVID-19 பிரான்சிலும் ஐரோப்பாவிலும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருகிறது. ஐரோப்பாவில் அரசாங்கங்கள் வீட்டில் தங்கியிருக்கும் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து, பயந்துபோன மக்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுகின்றது. அதே நேரத்தில், ஐரோப்பாவினுள் கட்டவிழ்ந்துவரும் அழிவிற்கு COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப மையப்பகுதியான சீனாவை குற்றம்சாட்ட பிரெஞ்சு ஊடகங்களில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் பரவி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, ஒரு அநாமதேய சீன தூதர் பிரெஞ்சு மொழியில் தூதரக வலைத் தளத்தில் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கை விமர்சித்து ஒரு நீண்ட குறிப்பை வெளியிட்டார். “தொற்றுநோய்க்கு எதிரான சீனாவின் வெற்றி அவர்களை கசப்பானதாக ஆக்குகிறது. சீனா ‘அதன் எதிர்வினையை தாமதப்படுத்தியது’ மற்றும் ‘உண்மையை மறைத்தது’ என்று கூறி அவர்களின் ஒருங்கிணைந்த வாதங்களுடன், அவர்கள் தொற்றுநோய்க்கு சீனாவை முக்கியமாக பொறுப்பேற்க செய்கின்றனர்.. … அதே நேரத்தில், மேற்கு நாடுகளில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் வாக்குகளுக்காக தம்முள் அடிபட்டுக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். சமூக நோய் எதிர்ப்பு சக்திக்கு அழைப்பு விடுத்து, தங்கள் குடிமக்களை தொற்றுநோயின் தாக்கத்தினை எதிர்கொள்ள முற்றாக கைவிட்டுவிட்டு, மருந்துப்பொருட்களை ஒருவரிடமிருந்து ஒருவர் களவெடுக்கின்றனர்” என்று அவர் அதில் குறிப்பிட்டும் இருந்தார்.

Chinese Embassy in Paris, 2009 (WIkipedia)

இதற்கு பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையுடன் பதிலளித்தது, "பிரான்சில் உள்ள சீன தூதரகத்தின் பிரதிநிதிகளால் எடுக்கப்பட்ட சில பொது நிலைப்பாடுகள் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் தரத்திற்கு ஒத்துப்போகவில்லை." COVID-19 பற்றிய சீன தூதரகத்தின் "சில சமீபத்திய கருத்துக்கள்" தொடர்பாக லு திரியோன் தனது “உடன்பாடின்மை” பற்றி தூதரிடம் தொடர்புகொள்வார் என்றும் அது கூறியது.

இந்த குறிப்பு பாரிஸை வருத்தப்படுத்துகின்றதெனில், அது, ஐரோப்பிய சக்திகள் COVID-19 பற்றி தமது நாட்டில் உள்ள தொழிலாளர்களிடம் சொல்லும் பொய்கள் வெடிப்பதே காரணமாகும். ஐரோப்பாவில் ஏராளமான இறப்பு எண்ணிக்கை தவிர்க்க முடியாதது அல்ல. பெரும்பான்மையான மக்கள் COVID-19 ஐ பெற்று "சமூக நோய் எதிர்ப்பு சக்தியை" பெறுவதால் அவர்கள் உயிர் பிழைத்தால், ஒருவேளை வைரஸிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறக்கூடும். ஆனால் இது மட்டுமே நோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே மூலோபாயமல்ல. இவை தொழிலாளர்களை பாதுகாப்பற்ற வேலைகளில் வைத்திருப்பது, வங்கிகளுக்கு இலாபத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல் வைரஸை பரப்புவதையும் நியாயப்படுத்த கூறப்படும் பொய்களாகும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் COVID-19 பரவுவதற்கான பொறுப்பு சீனாவினது அல்ல, மாறாக முதலாளித்துவத்தில்தான் உள்ளது. நிச்சயமாக, சீனாவின் ஸ்ராலினிச சர்வாதிகாரம் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தை மேற்பார்வையிடுகிறது. இது 1989 ஆம் ஆண்டில் தன்னை உலகப் பொருளாதாரத்திற்கு திறந்ததுடன் முதலாளித்துவத்தை மீட்டெடுத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) கொள்கைகளுக்கு எதிராக தியானன்மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை படுகொலை செய்தது. எவ்வாறாயினும், வளர்ச்சிகுறைந்த திட்டமிட்ட அரச பொருளாதாரத்தின் தப்பிப்பிழைத்த பிரிவுகளும், வெகுஜன தனிமைப்படுத்தல்கள் மற்றும் தொழிற்துறையை அணிதிரட்டுதல் ஆகியவற்றின் மூலம் ஐரோப்பாவை விட சீனாவில் COVID-19 இற்கு எதிராக மிகவும் திறமையாக கையாள அனுமதித்தது.

COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமாக சர்வதேச அளவில் இத்தகைய கொள்கைகளை ஒத்திசைவான, ஜனநாயகரீதியாக ஏற்றுக்கொள்வதற்கு, சோசலிசத்திற்கான மாற்றம் தேவையாகும். இதற்கு சீனா உட்பட தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகப் புரட்சி தேவைப்படுகிறது. சீன-எதிர்ப்பு இனவெறிக்கான முறையீடுகளுடன் கம்யூனிச எதிர்ப்புடன் பின்னிப் பிணைந்திருக்கும் பிரெஞ்சு முதலாளித்துவ ஊடகங்களின் சீனா மீதான வெறித்தனமான தாக்குதல்களை படித்தால், இந்த பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் முக்கிய சக்தியாக இருப்பது சோசலிசம் மற்றும் புரட்சி பற்றிய முதலாளித்துவத்தின் அச்சம் என்பது தெளிவாகிறது.

ருவாண்டா நாட்டின் ஹுட்டு ஆட்சியினால் ருட்ஸி மக்களின் மீதான இரத்தக்களரி இனப்படுகொலைக்கு பிரான்ஸ் ஆதரவளித்தபோது, 1994 ஆம் ஆண்டில் Le Figaro இதழுக்காக ருவாண்டாவிலிருந்து தனது பத்திரிகைத் தொழிலைத் தொடங்கிய வர்ணனையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான Renaud Girard, COVID-19, மார்க்சிசம் மற்றும் கம்யூனிசத்தின் தோல்விக்கு சான்று என்று அறிவிக்கின்றார். அவர் எழுதினார், “தொற்றுநோயானது கம்யூனிசம், ஐரோப்பியவாதம் மற்றும் பூகோளவாதம் ஆகிய மூன்று சித்தாந்தங்களின் திவால்நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கடுமையான தொற்றும்தன்மையை கொண்ட நோயின் பிறப்பிற்கும் மற்றும் இதன் ஆரம்ப பரவலுக்கான மிகப்பெரிய பொறுப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ளது.

"வர்த்தகம் தடைசெய்யப்பட்ட ஒரு காட்டு விலங்கினத்தால் பரவும் இந்த தொற்றுநோய்க்கு சீனா கடும் பொறுப்பைக் கொண்டுள்ளது" என்று Le Monde எழுதிய ஒரு கட்டுரையில், பாங்கோலினை (pangolin) சாப்பிட்ட சீனர்கள் மீது உலகளாவிய தொற்றுநோயைக் குற்றம் சாட்டியது. இதன் மூலம் கொரோனா வைரஸ் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு குடிபெயர்ந்திருக்கலாம். ஒரு பெரிய கம்யூனிஸ்ட் சுத்தி மற்றும் அரிவாள் சின்னத்தைத் தாங்கிய ஒரு இடுகையில், அந்தக் கட்டுரை பாசாங்குத்தனமாக: “சீன சர்வாதிகாரம் ஊடகங்களைத் தணிக்கை செய்கிறது, எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியாது” எனக் குறிப்பிட்டது.

டொனால்ட் ட்ரம்ப் கூறுவதுபோல "சீனா, உலக சுகாதார அமைப்பின் மீது கட்டுப்பாட்டை கொண்டுள்ளது" என்று கூறுவதன் மூலம் வலதுசாரி Le Figaro வின் நிருபர் Isabelle Lasserre, சீன சர்வாதிகாரத்தை விட மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயகம் மேலானது என்பதை COVID-19 நிரூபிக்கிறது என்று வலியுறுத்தினார்: “சர்வாதிகாரங்கள் எதிர்பாராத விதமாக ஸ்திரமின்மைக்குள்ளாகும் நிலையில், ஜனநாயகங்கள் அமைதியாக, வெளிப்படையாக, பகுத்தறிவுடன் செயல்பட்டன. அவர்களால் எதிர்பார்த்து விளக்க முடியும். அவர்களின் திறந்த மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அமைப்புகள் விரைவாக செயல்பட்டன. … ஜனநாயக நாடுகள் அவற்றின் அமைப்பு முறைதான் திறமையானது என்பதை நிரூபித்துள்ளன” என்று எழுதினார்.

வைரஸை எதிர்த்துப் போராடுவதில் ஐரோப்பிய ஆட்சிகள் மிகவும் பயனுள்ளவை என்ற கூற்றுக்கள், ஐரோப்பிய முதலாளித்துவத்தின், மனித வாழ்க்கையை அவமதிப்பதை மட்டுமே அம்பலப்படுத்துகின்றன. COVID-19 இன் ஆரம்ப மையப்பகுதியான சீனா 82,295 தொற்றுக்களையும் 3,342 இறப்புகளையும் கண்டுள்ளது. இருப்பினும், ஐரோப்பாவில் குறைந்தது 935,338 தொற்றுக்களும் 74,662 இறப்புகளும் உள்ளன. மேலும், சீனாவின் COVID-19 புள்ளிவிவரங்களை WHO சுயாதீனமாக உறுதிப்படுத்திய அதேவேளையில், ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கானோர் வீட்டிலோ அல்லது உள்ள ஓய்வூதிய இல்லங்களிலோ பதிவு செய்யப்படாமல் இறந்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஐரோப்பிய அதிகாரிகள் யூரோப்பாவில் COVID-19 தொற்றுக்களின் எண்ணிக்கை இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளதை விட இரண்டிலிருந்து பத்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என ஒப்புக்கொள்கிறார்கள்.

ஐரோப்பாவில் நடந்த பாரிய மரணங்களை சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் உற்சாகதுடன் எதிர்கொள்வது நிதிப்பிரபுத்துவத்தின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையின் வர்க்க மிருகத்தனத்தை பிரதிபலிக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கம் ஒரு மந்தைக்கூட்டம், அதன் கழுத்துக்கள் வெட்டப்படக்கூடியனவும் ஆகும். பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கானவர்களின் ஆரம்பகால மரணங்கள், அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கையில், இந்த நபர்களுக்கான உடல்நலம் மற்றும் ஓய்வூதிய செலவினங்களுக்காக வீணடிக்கப்பட்டிருக்கும் பில்லியன் கணக்கான யூரோக்கள் பங்குச் சந்தைகளுக்கும், பணக்கார ஒட்டுண்ணிகளின் செல்வத்திற்கும் திருப்பி விடப்படலாம் என்பதாகும்.

COVID-19 இனால் ஏற்படும் இறப்புகளுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுப்பேற்க செய்ய முயற்சிப்பது அரசியல் பொய்களாகும். பாரிஸில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட குறிப்பால் அவை மறுக்கப்பட்டன. COVID-19 க்கு ஐரோப்பாவை தயார் செய்ய சீனா போதுமான எச்சரிக்கையை அளித்தது என்பதை தெளிவுபடுத்தியது.

இக்குறிப்பு மேலும், “கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னரே, முன்அறியப்படாத நிமோனியா நோய்களை பற்றி நாங்கள் பகிரங்கமாக தெரிவித்தோம். ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் முழு உலகிற்கும் நோயின் பரவல் குறித்து நாங்கள் தவறாமல் தெரிவித்தோம். மேலும் விரைவாக நாம் நோய் காவியை அடையாளம் காண்பதில் வெற்றி பெற்றோம். ஜனவரி 11 அன்று, வைரஸின் மரபணுவின் முழு வரிசையையும் WHO உடன் பகிர்ந்து கொண்டோம். ஜனவரி 23 அன்று, வூஹான் மூடப்பட்ட நிலையில், 800 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியிருந்தனர், அவர்களில் 9 பேர் மட்டுமே வெளிநாட்டில் இருந்தனர். ஒரு மாதத்திற்கு பின்னரே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொற்றுநோய் பரவ ஆரம்பித்தது”.

உலகளாவிய ஊடகங்களினால் நிராகரிக்கப்படாத பகிரங்கமாக கிடைக்கக்கூடிய அறிக்கைகளில் உள்ள இந்த கூற்றுக்களை யாரும் மறுக்க முயற்சிக்கவில்லை. COVID-19 இன் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலமும், அதை பருவகால காய்ச்சலுடன் ஒப்பிடுவதன் மூலமும், சமூக விலக்கல் நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலமும், தொழிலாளர்கள் பணியில் இருக்கக் கோருவதன் மூலமும் ஐரோப்பிய அரசாங்கங்கள் பதிலளித்தன என்பதும் பொதுவாகவே தெரிந்ததாகும்.

இக்குறிப்பு ஐரோப்பிய மற்றும் சீனக் கொள்கைகளை சாதகமற்றவிதத்தில் ஒன்றுக்கொன்று எதிராக முன்வைக்கின்றது: “சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து டிரில்லியன் கணக்கான யுவான்களை வெட்டுவதிலிருந்தும், நூற்றுக்கணக்கான பில்லியன் யுவான்களை சுகாதார வளங்களுக்குள் செலுத்துவதிலிருந்தும், நாடு முழுவதிலுமிருந்து 40,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களை அணிதிரட்டுவதிலிருந்தும் வூஹான் மற்றும் ஹூபே மாகாணத்தை ஆதரிக்கவும், இறுதியாக இரண்டு மாதங்களில் தொற்றுநோயைத் தோற்கடிக்கவும் பின்வாங்கவில்லை”.

எவ்வாறாயினும், பரந்த நிதி ஆதாரங்கள் மற்றும் அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களுடன், ஐரோப்பிய ஆளும் வர்க்கம் இந்தக் கொள்கைகளை நிராகரித்து, அதற்கு பதிலாக பாரிய வங்கி பிணை எடுப்பை கோரியது. "சில மேற்கத்திய அரசியல் மற்றும் கலாச்சார உயரடுக்கினரை" பற்றி கண்டிப்புடன் குறிப்பிடுகையில், குறிப்பு மேலும் கூறுகிறது: "மேற்கத்திய நாடுகள் வைரஸின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டன, மேலும் உடனடி பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதமாகிவிட்டன. இது தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாததாக ஆக்கியது. இது அவர்களின் மனசாட்சியை பாதிக்கவோ அல்லது இரவுகளில் அவர்களை விழித்திருக்கவோ செய்யவில்லை”.

சீனகம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச மூலோபாயத்தின் அபாயகரமான முரண்பாடு என்னவென்றால், உலகப் பொருளாதாரத்தினுள் அதன் ஏற்றுமதியால் உந்தப்படும் ஒருங்கிணைப்புக்கு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மூலதனத்துடனான வணிக மற்றும் அரசியல் ஒப்பந்தங்கள் வேண்டும், ஆனால் COVID-19 தொற்றுநோய் அம்பலப்படுத்திய அதன் காட்டுமிராண்டித்தனம் என்னவெனில் சீனத் தொழிலாளர்களை மலிவான உழைப்பாளர்களாக அவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என்பதே.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் கோபம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றொரு அரசியல் திசையில் செல்கின்றன: தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் செல்வந்தர்களின் செல்வத்தை அபகரித்து, இந்த வளங்களை உலகளாவிய தொற்றுநோயைத் தடுக்கவும் பயன்படுத்தவேண்டும்.

Loading