கொரோனா வைரஸிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க நீதிமன்றம் கோரியதை அடுத்து அமசன் தனது பிரெஞ்சு விநியோக மையங்களை மூடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விநியோகங்களை மட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி கடந்த வாரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பதிலடியாக அமசன் நேற்று பிரான்சில் அதன் விநியோக மையங்களை மூடியுள்ளது.

ஏப்ரல் 14 அன்று, அமசனுக்கு எதிரான வழக்கில் SUD தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக நந்தேரில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டுமே தொடர்ந்து விநியோகிக்கும்படி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது, மேலும் சமூக விலக்கல் மற்றும் தொற்றுநோய்க்கான பிற பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்றவகையில் SUD உடன் முறையான கொள்கை வழிகாட்டுதல்களை இறுதி செய்ய வேண்டும்.

அமசன் 3,700 தற்காலிக தொழிலாளர்கள் உட்பட பிரான்ஸ் முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பயன்படுத்துகிறது. உலகளாவிய விநியோக ஒருங்கிணைப்பு நிறுவனத்தால் பாதுகாப்பற்ற முறையில் வேலை நிலைமைகளைப் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கொடிய வைரஸின் தாக்குதலுக்குள்ளாக விடுவதற்கும் எதிராக, சர்வதேச அளவிலும் கடந்த இரண்டு மாதங்களாக பிரான்சிலும் அமசன் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

அதன் நடவடிக்கைகளில் எந்தவொரு கட்டுப்பாட்டையும் நிராகரித்த அமசன் வியாழக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதில், "நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பற்றி நாங்கள் குழப்பத்தில் உள்ளோம்", மற்றும் "பிரான்சில் உள்ள விநியோக மையங்களில் எங்கள் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியுள்ளோம்." என குறிப்பிட்டது. அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக முன்னர் உறுதியளித்த போதிலும், அமசன் "எங்கள் செயல்பாடுகளின் உள்ளார்ந்த சிக்கலான தன்மை" காரணமாக அத்தகைய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியது.

சற்று மறைக்கப்பட்ட அச்சுறுத்தலுடன், அமசன் குறிப்பிட்டதாவது "நீதிமன்றத் தீர்ப்பானது நம் நாட்டில் பலருக்கு விளைவுகளை ஏற்படுத்த இருக்கிறது, குறிப்பாக முன்பை விட இப்போது நம்மை சார்ந்திருக்கும் எங்களது ஆயிரக்கணக்கான ஒத்துழைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்," மற்றும் "வளர்வதற்கு அமசனை நம்பியுள்ள" பல சிறு வணிகங்கள்.

அமசன் ஏற்கனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது, மேலும் அதன் மேல்முறையீடு வேர்சாய்யின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. ஆரம்பத்தில் திங்கள் வரை நீடிக்கத் திட்டமிட்டிருந்த நாடு தழுவிய பணிநிறுத்தம், விசாரணையின் பின்னர் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டது, ஆனால் அமசன் அதை காலவரையின்றி நீட்டிக்க முடியும் என்று அறிவித்தது.

ஏறக்குறைய 8,000 ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் புதன் வரை தங்களுக்கு முழு ஊதியத்தையும் தொடர்ந்து வழங்குவதாகவும், தொற்றுநோயால் கட்டுப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு வேலையின்மை கொடுப்பனவுகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நிறுவனம் கூறுகிறது. அமசனின் சர்வதேச விநியோக வலையமைப்பு வழியாக குறைந்தது சில விநியோகங்கள் பிரான்சில் தொடர்கின்றன.

அமேசானின் அறிவிப்பு ஒரு வெளிப்படையான பொருளாதார அச்சுறுத்தலாகும், இது ஒரு ஆபத்தான உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் பொருட்களின் முக்கியமான விநியோக ஒருங்கிணைப்பு உள்கட்டமைப்பு மீதான அதன் ஏகபோக கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி விநியோகத்தை நாசப்படுத்த அச்சுறுத்துகிறது. நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் தமது ஊழியர்களை சுரண்டுவதன் மூலமும், அவர்களது வாழ்க்கையை பெரும் ஆபத்தில் வைப்பதன் மூலமும் பில்லியன் கணக்கான டாலர்களை இலாபம் ஈட்டுவதற்கான "உரிமை" மீதான எந்தவொரு கட்டுப்பாட்டையும் ஏற்க மாட்டார்கள்.

அமசனின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களும் மக்ரோன் அரசாங்கமும் எந்த விமர்சனமும் செய்யவில்லை. கடந்த மாதம் சுகாதார மற்றும் பிற பொது நிர்வாக ஊழியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க தேவையான கையுறைகள் மற்றும் பிற அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் இல்லாததைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்யக்கூடும் என்று அறிக்கைகள் வெளிவந்தபோது, இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை சுயநலமாக நாசப்படுத்தும் என்று அரசாங்கமும் ஊடகங்களும் தங்களது தார்மீக சீற்றத்தை வெளிப்படுத்தின.

அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது குறித்து கடந்த ஒரு சில மாதமாக அமசன் தொழிலாளர்களின் எண்ணற்ற அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 18 அன்று வடக்கு நகரமான லில்லில் பெயரிடப்படாத ஒரு ஊழியரை லு பாரிசியன் பத்திரிக்கை மேற்கோள் காட்டியது: “நாங்கள் சிக்கிக்கொண்டோம். முகமூடிகள் இல்லை. ஜெல் எல்லா இடங்களிலும் கிடைக்காது, மாதத்திற்கு இரண்டு ஜோடி கையுறைகளை மட்டுமே பெறுகிறோம். வியாழக்கிழமை, சாதாரணமாக 700 பேரைக் கொண்டிருக்கும் கேண்டீனில் மதிய உணவுக்கான நேரங்கள் பிரிக்கப்படும் என்று எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, ஆனால் பெட்டிகள், வண்டிகள் மற்றும் ஸ்கேனர்கள் கிருமி நீக்கம் செய்யப்படாமல் கைகளுக்கு இடையில் தொடர்ந்து செல்கின்றன”.

மற்றொரு அமசன் தொழிலாளி பிரான்ஸ் 3 இடம் கூறினார், “நாங்கள்தான் பரப்புகிறோம் என்று அவர்கள் சொன்னாலும், நாங்கள் ஒருவரையொருவர் கடந்துபோக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், குறிப்பாக ஆடை மாற்றும் அறைகளில், ஒரு மீட்டர் விலகல் கூட இல்லை. கையுறைகள் இல்லாமல் மற்றும் எதுவும் இல்லாமல் எல்லோரும் உடுப்புவைக்கும் தட்டுக்களை தொடுகிறார்கள். எனவே வைரஸைப் பரப்புவதற்கும் ஏற்கனவே அதைப் பிடித்திருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, நாங்கள் பலரைக் கடந்து செல்வதால், எங்களால் எங்கள் குடும்பங்களும் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது”.

COVID-19 தொற்றுடைய ஒருவர், ஏனைய ஊழியருடன் தொடர்பு கொண்டிருந்தால் ஊழியர்களை எச்சரிக்க எந்த முறையும் இல்லை என்று கடந்த வாரம் நந்தேரில் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தெளிவான அறிகுறிகளை முன்வைக்கும்போது கூட, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் சோதிக்கக் கூடாது என்ற மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கையின் காரணமாக, தொழிலாளர்கள் தங்களது சக ஊழியர்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடியாதுள்ளது.

150 முதல் 450 ஊழியர்கள் ஒரே நேரத்தில் தொடர்ந்து மையத்திற்கு வருவதுடன், ஒரே பாதை வழியாக நுழைகிறார்கள், அங்கு ஊழியர்கள் தங்கள் கைகளால் கதவைத் தொட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது நேரடித் தொடர்பைத் தவிர்ப்பதற்காக தங்கள் துணிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைமாற்றும் அறைகளுக்கு அமசன் கட்டுப்பாடுகளை விதித்த பின்னர், ஊழியர்கள் தங்கள் மேலாடைகளை குவியலாக விட்டுவிட்டு, ஒருவருக்கொருவர் தொட்டு, மேலும் மாசுபடுத்தும் அபாயங்களை உருவாக்கினர்.

அமசன் ஊழியர்களின் ஏற்கனவே வளர்ந்து வரும் தொழிற்சங்கங்களை மீறிய திடீர் நடவடிக்கைகளால் முற்றிலுமாக மூழ்கிவிடாமல் இருக்க ஒரு சட்ட நடவடிக்கையை தொடங்க SUD தொழிற்சங்கம் எடுத்த முடிவு ஒரு மறுசீரமைப்பு பதிலாகும். நந்தேர் தீர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெரிய வெற்றியைப் பிரதிபலிக்கிறது என்ற கூற்றுக்கள் சிடுமூச்சித்தனமானவை அல்லது இழிவானதாகும், எவ்வாறாயினும், தொற்றுநோய்களுக்கு மத்தியில், கார் உற்பத்தி மற்றும் விமான விண்வெளித்துறை தொழிற்துறைகள் உட்பட பல தொழில்துறைகளில் மே 11 அன்று வேலைக்கு திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு மக்ரோனுடனான நெருக்கமான தமது ஒத்துழைப்பினை மறைப்பதைதான் தொழிற்சங்கங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

அமசன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஏற்கனவே இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பல விநியோக மையங்களில் பரவியுள்ளன. பிரான்சில், மார்ச் மாத இறுதியில் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே லில்லில் வேலை செய்ய மறுத்துவிட்டனர், இதேபோன்ற நடவடிக்கைகள் ஏனைய மையங்களிலும் இருந்தன. லில்லில் இரண்டு தற்காலிக தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸுக்கு தொற்று உள்ளான நிலையில் சோதிக்கப்பட்டனர் மற்றும் அவர்கள் வேலை இடத்தில்தான் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அறியப்படாத எண்ணிக்கையிலான அமசன் ஊழியர்கள் ஏற்கெனவே வைரஸை சுமந்து திரிகின்றனர் அல்லது கொண்டிருக்கின்றனர்.

அமசன் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், ஏற்கனவே பிரான்சில் 20,200 க்கும் மேற்பட்டவர்களையும் உலகெங்கிலும் 170,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பெருமளவில் அமசன் மற்றும் அதன் பங்குதாரர்களும் பெரும் இலாபத்தினை ஈட்டுயிருக்கின்றனர். தனிமைப்படுத்தல் உத்தரவு காரணமாக ஏனைய கடைகள் மூடப்பட்டுள்ளதால், அமசன் விற்பனையின் மீதான பிடியை இறுக்கிக் கொள்ள முடிந்த நிலையில், அந்த நிறுவனத்தின் பங்கு விலைகள் உயர்ந்துள்ளன.

இந்த நிறுவனத்தின் தலைவரும், 11 சதவீத பங்குகளை வைத்திருக்கும் உலகின் பணக்காரரான Jeff Bezos, பங்கு விலைகள் அதிகரித்ததன் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவரது செல்வம் 24 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும், ஒரு நூற்றாண்டில் மிகப் பெரிய உலகளாவிய தொற்றுநோய்களுக்கு மத்தியில், சராசரியாக, பெசோஸுக்கு மற்றொரு 195 மில்லியன் டாலர் பரிசளிக்கப்பட்டுள்ளது.

நந்தேர் தீர்ப்பிற்கு அமசன் அளித்த பதிலானது, தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் நாசகர வேலைக்கான ஒரு வெளிப்பாடு மட்டுமே. பல தசாப்தங்களாக, முக்கியமான மருத்துவ உபகரணங்களுக்கான செலவுகள் புறக்கணிக்கப்பட்டதானது, சுகாதார உள்கட்டமைப்பிற்கான சமூக செலவினங்கள் அனைத்தும் நிதிய பிரபுத்துவத்தின் பைகளுக்குள் பெரும் செல்வமாக திரண்டுள்ளன. ஆளும் வர்க்கத்தின் தொற்றுநோய்க்கான பதிலளிப்பு, இது ஒரு சுகாதார நெருக்கடி என்ற அர்த்தத்தில் இருக்கவில்லை மாறாக பங்குச் சந்தைகளுக்குள் பெருமளவில் செல்வத்தை கொட்டும் நிதி நிகழ்வாகவே இருக்கிறது. இப்போது மக்ரோன் நிர்வாகமும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள பிற அரசாங்கங்களும் பாதுகாப்பற்ற நிலையில் தொழிலாளர்களை வேலைக்குள் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றன.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு நேரடி மற்றும் முக்கிய தேவையாக, அமசன் மற்றும் பிற பிரம்மாண்டமான நிறுவனங்கள் தனியார் கைகளில் இருந்து பறித்தெடுத்து தொழிலாள வர்க்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டவரப்பட வேண்டும், மேலும் முக்கியமான உள்கட்டமைப்பு ஒரு பகுத்தறிவான மற்றும் விஞ்ஞானபூர்வமான முறையில் ஒழுங்கமைக்கப் பயன்படுத்தப்படும் வேண்டும். சுருக்கமாக Bezos போன்ற நிதி தன்னலக்குழுவின் செல்வம் பறிமுதல் செய்யப்பட்டு முழு மக்களுக்கும் சுகாதாரமான தரமான உயர்ந்த வாழ்க்கை நிலைமைகளை வழங்க பயன்படுத்தப்பட வேண்டும்.

Loading