கோவிட்-19 பெருந்தொற்றும் ஐரோப்பாவில் வர்க்கப் போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 2 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சி (பிரான்ஸ்) தேசிய செயலர்அலெக்ஸ் லான்ரியே பின்வரும் உரையை வழங்கினார்.

அன்புள்ள தோழர்களே, நண்பர்களே, இந்த சர்வதேச பேரணிக்கு பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் சகோதரத்துவ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

ஐரோப்பாவில் COVID-19 இன் முதல் நோயாளிகள் கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருக்கின்றன. இந்த நெருக்கடி ஏற்கனவே ஒரு நீடித்த அதிர்ச்சியை சமூகத்திற்கு கொடுத்திருக்கிறது. ஐரோப்பாவில் 1.5 மில்லியன் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது; பரிசோதிக்கப்படாத அல்லது கணக்கில் கொண்டுவரப்படாத நூறாயிரக்கணக்கான நோயாளிகள் வீடுகளிலேயே அல்லது ஓய்வு இல்லங்களிலேயே பாதிப்பால் வேதனைப்படும் நிலையில் அல்லது உயிரிழக்கும் நிலையில் உள்ளனர். 130,000 க்கும் அதிகமான ஐரோப்பியர்கள் இந்த நோயால் இறந்திருக்கின்றனர், மில்லியன் கணக்கான மக்கள் அவர்களுக்காக கவலைப்பட்டபடி உள்ளனர்.

சர்வதேச மேதின இணையவழி பேரணி 2020 – நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு.

COVID-19 இன் தொற்றுப்பரவலைத் தடுக்க அவசியமான நடமாட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஐரோப்பிய பொருளாதாரத்தை ஸ்தம்பித்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றன. பிரான்சில் 11 மில்லியனுக்கு அதிகமான, ஜேர்மனியில் 10 மில்லியனுக்கு அதிகமான, மற்றும் ஸ்பெயினில் 9 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையிலுள்ளனர். இது 2008 பொறிவுக்குப் பிந்தைய காலத்தினும் மிக அதிகமானதாகும். மில்லியன் கணக்கான சிறுவணிகங்களின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற 1930களின் பெருமந்தநிலை காலத்திற்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் வழியாக ஐரோப்பா பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வரலாற்று நெருக்கடியானது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மற்றும் அதில் மேலாதிக்கம் செலுத்துகின்ற நிதியப் பிரபுத்துவங்களின் இற்றுப்போன நிலையையே வெளிக்காட்டுகிறது. 2008 முதலாக, ஐரோப்பாவின் அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் பொது நிதியின் நான்கு டிரில்லியன் யூரோக்களுக்கு மேல் வங்கிகளுக்குள் பாய்ச்சியிருக்கின்றன, அதேவேளை தொழிலாளர்கள் மற்றும் பொதுச் சேவைகளின் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வந்திருக்கின்றன. இதன் விளைவுகள் தான் என்ன?

2002 சார்ஸ் (SARS) வெடிப்புக்கும் 2010 இல் H1N1 தொற்று வெடிப்புக்கும் பின்னர், அதன் சிகிச்சைக்காக 1 பில்லியன் யூரோக்கள் செலவிட வலியுறுத்தியதற்காக, உலக சுகாதார அமைப்பையும் (WHO), ஐரோப்பிய சுகாதார அதிகாரிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் செய்தது. “பெருந்தொகையான பொது நிதியை வீணடிப்பதற்காகவும் ஐரோப்பிய பொது ஜனங்களுக்கான சுகாதார ஆபத்துக்கள் குறித்த நியாயமற்ற பீதியை ஏற்படுத்தியதற்காகவும்” அவர்கள் மீது குற்றம் சுமத்தியது.

அதற்குப் பின்னால், பொதுப் பணம் பெரு முதலீட்டாளர்களின் நச்சுத்தனமான கடன்களை வாங்குவதற்கும் போர் நடத்துவதற்கும் போயிருக்கிறதே தவிர, முகக்கவசங்கள் அல்லது சுவாசக்கருவிகள் வாங்கவோ அல்லது ஆராய்ச்சிகளுக்கு நிதியாதாரமளிக்கவோ செலவிடப்படவில்லை.

இதன் விளைவு என்ன? பாரிய இறப்புக்களாகும். இவை தவிர்க்கப்படக்கூடியது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்க சமுதாயத்தின் விளைபொருளாகும். இன்று ஐரோப்பாவெங்கிலும், உலகின் மிகச் செல்வந்த நாடுகளாக இருப்பனவற்றில், முகக் கவசங்களுக்கும் மற்ற அடிப்படை சாதனங்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவ ஊழியர்களும் சுகாதாரத் தொழிலாளர்களும் இதற்கு பெரும் விலைகொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நோய் தொற்றியவர்களில் ஸ்பெயினில் இவர்கள் 20 சதவீதமாகவும், இத்தாலியில் 10 சதவீதமாகவும் அல்லது இந்த இரண்டு நாடுகளில் மட்டும் சுமார் 60,000 க்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்குள்ளேயான மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளான நாடுகளை கைவிட்டது: பேர்லின் மற்றும் பாரிஸ் முகமூடிகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை இத்தாலிக்கு அல்லது பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டன.

கொரானா வைரஸ் தடுப்பூசியைப் பொறுத்தவரை, 2002 SARS சார்ஸ் வெடித்தது முதலாகவே விஞ்ஞானிகள் இது தொடர்பில் ஆராய்ச்சிகளை செய்ய விரும்பியிருந்தார்கள் என்றாலும், வேலை இப்போது தான் தொடங்கியிருக்கிறது. நிதியாதாரம் இல்லாததால் “வைரஸ் தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட அநேக திட்டப்பணிகள் பாதியில் நின்றிருந்தன” என்று ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி தெரிவித்தார். அது இப்போது முடிவு ஆயிரக்கணக்கான யூரோக்கள் அல்ல, மாறாக ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க வைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய முதலாளித்துவமும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் திவாலாகிப் போயுள்ளன. தொழிலாள வர்க்கம் இப்போது இரண்டு முனைகளில் போராட்டத்தை எதிர்கொள்கிறது: ஒன்று COVID-19 க்கு எதிரான போர், மற்றது வர்க்கப் போர்.

முதலாவதாய், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் தான் நோய்க்கு எதிரான முன்வரிசையில் உள்ளனர். தலைவர்கள் மற்றும் மேலாளர்கள் எல்லாம் தத்தமது கிராமப்புற இல்லங்களில் அல்லது அழகுமிளிரும் அண்டைப்பகுதிகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கையில், கனரக வாகன சாதிகளும், விநியோகிப்பு பணியாளர்களும், செவிலியர்களும், மற்றும் சேவைப்பணியாளர்களும் இப்போதும் வேலைசெய்து கொண்டிருக்கின்றனர். இந்த அத்தியாவசிய சேவை தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வழியில்லாத சிறிய வீடுகளிலும், தொற்று தாக்கியுள்ள பெரும் எண்ணிக்கையிலானோர் கூடி வாழுகின்ற “சிவப்பு” வகையிடப்பட்ட தொழிலாள-வர்க்க அண்டைப்பகுதிகளிலும் தான் வாழ்கின்றனர் என்பதால், நோய்த் தொற்றின் ஆபத்துக்கு முகம்கொடுத்தபடி தான் அவர்கள் வெளியில் சென்றுவர வேண்டியுள்ளது.

அதேநேரத்தில், இந்த பெருந்தொற்றானது வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்புக்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, மார்ச் தொடக்கத்தில் இத்தாலியில் உலோகத் தொழிலாளர்களும், கார் தயாரிப்புத் தொழிலாளர்களும் மற்றும் பிற தொழிலாளர்களும் நடத்திய வேலைநிறுத்தங்களால் மட்டுமே சுகாதார அதிகாரிகள் கோரிய நடமாட்டக்கட்டுப்பாடு அரசுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் முதலாளித்துவம் இடைவிடாமல் ஒரு குற்றவியல் கொள்கையை பின்பற்றுகிறது. பேர்லினில் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் பேசுகையில், கூட்டு நோயெதிர்ப்புசக்திக்கான அவரது நம்பிக்கைக்கு மக்கள்தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேர் COVID-19 ஆல் நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும் என்றார். பிரிட்டிஷ் அரசாங்கம் மக்கள் ‘சமூக நோயெதிர்ப்புசக்தி”யை வளர்த்துக் கொள்ள விரும்புகிறது.

ஐரோப்பா முழுவதும் ஒவ்வொரு நாளும் 20,000க்கும் அதிகமான புதிய நோயாளிகள் பதிவாக, பெருந்தொற்று இப்போதும் உக்கிரமாய் நீடித்து வருகின்றதொரு நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தத்தை தொடக்கி, அது இப்போது அத்தனை ஐரோப்பிய அரசுகளாலும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்க முடியாமல் புதிய நோய்த்தொற்று உண்டானவர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை எந்திரத்தனமாக அதிகரிக்க வழிவகுக்கும்.

அதேநேரத்தில், ஐரோப்பிய மத்திய வங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்காக பல்லாயிரம் பில்லியன் யூரோக்கள் மீட்புத் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த கற்பனை மூலதனப் பாய்வுகளுக்கு சொந்தக்காரர்களான முதலீட்டாளர்களுக்கு இலாபங்களை உருவாக்கித் தருவதற்காக, தொழிலாளர்களுக்கு எதிராக பெரும் தாக்குதல்கள் திட்டமிடப்படுகின்றன. பிரெஞ்சு முதலாளிகளின் கூட்டமைப்பான Medef, ஏற்கனவே ஊதிய விடுப்புகள் மற்றும் கூடுதல் நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் வரலாறு கண்டிராத வெட்டுக்களைக் கோருகிறது, அதே நேரத்தில் ஐரோப்பிய விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறையிலான பல்லாயிரக்கணக்கான வேலையின்மைகள், பணிநீக்கங்கள் ஒரு பெருந்தொகை வேலை வெட்டுக்களுக்கு கட்டியம் கூறுகின்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் ஸ்பெயினில் உள்ள பொடேமோஸ் போன்ற குட்டி முதலாளித்துவ ஜனரஞ்சகக் கட்சிகளும் இந்த குற்றவியல் கொள்கைக்கு உடந்தையாக உள்ளன. ஸ்பெயினில், பொடேமோஸ் அரசாங்கம், தொற்றுநோய்களுக்கு மத்தியில் வீட்டில் தங்குவதற்கான உரிமைக்காக வேலைநிறுத்தம் செய்யும் எஃகுத் தொழிலாளர்களைத் தாக்க போலீஸை அனுப்புகிறது.

ஆனால் தொழிலாள வர்க்கம் ஆட்டுமந்தை அல்ல, அமைதியாக வெட்டத் தலைகொடுப்பதற்கு.

2018 முதலாக, தொழிலாளர்களின் கோபம் ஐரோப்பாவை உலுக்கி வந்திருக்கிறது. பிரான்சில் “மஞ்சள் சீருடை”களது எழுச்சி; போர்ச்சுகீசிய செவிலியர்கள், போலந்தின் ஆசிரியர்கள் மற்றும் ஜேர்மன் உலோகத் தொழிலாளர்களின் தேசியளவிலான வேலைநிறுத்தங்கள்; கட்டலோனியாவில் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்; பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் ஆகியவை வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய வரலாற்றுக் கட்டத்தைக் குறித்து நின்றிருப்பவையாகும். 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டமை ஆகியவற்றின் மூலமாக கட்டியெழுப்பப்பட்டிருந்த முதலாளித்துவ ஐரோப்பாவின் திவால்நிலையானது பெருகிச் செல்லும் எதிர்ப்பை தூண்டிக் கொண்டிருக்கிறது.

இந்த பெருந்தொற்றானது வர்க்க மோதலை குறைக்கவில்லை ஆனால் மேலும் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பெருந்தொற்றுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கும் சமூகத்தின் அத்தனை ஆதாரவளங்களையும் வாழ்க்கைக்கான போராட்டத்தின் சேவைக்காய் வைப்பதற்கும் எதிராய் நிற்கின்ற முதலாளித்துவ எதிர்ப்பை முறியடிக்கும் அவசியத்திற்கு தொழிலாளர்கள் முகம்கொடுத்திருக்கின்றனர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியில் தொடங்கப்பட்ட போராட்டமான, தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுகின்ற போராட்டத்தைத் தொடர்வதே தொழிலாளர்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு சாத்தியமான மூலோபாயமாகும்.

சர்வதேசத் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கான தினமான இன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது உலகெங்கும் உள்ள தொழிலாளர்களை வாழ்த்துவதோடு, இந்தப் புரட்சிகரப் போராட்டத்தை நடத்தும் திறன் கொண்ட ஒரு சோசலிச இயக்கத்தை அவர்கள் மத்தியில் கட்டியெழுப்பவும் உறுதியெடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுக்கமுடியாத திவால்நிலையை எதிர்கொள்கையில், இது ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறது.

Loading