உலக பெருந்தொற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளத்தின் லத்தீன் அமெரிக்க ஆசிரியர் பில் வான் ஆகென் பின்வரும் உரையை மே 2அன்று உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் நிகழ்த்தினார்.

அன்பிற்குரிய தோழர்களே நண்பர்களே:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களின் குற்றவியல் பதிலிறுப்புக்கு எதிராக உலகெங்குமான தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவுமான ஒரு பொதுவான போராட்டத்திற்கு முகம்கொடுத்திருக்கும் நிலைமைகளின் கீழ் நாம் இந்த 2020 மே தினத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.

COVID-19 மில்லியன் கணக்கான மக்களது வாழ்க்கைகளை பலிகொள்ள அச்சுறுத்துகின்ற வேளையிலும் கூட, பில்லியன் கணக்கான மக்களை துடைத்தழிக்கத்தக்க ஒரு புதிய உலகப் போருக்கான அச்சுறுத்தலானது, உலகளாவிய பெருந்தொற்று நோயினால் தணிக்கப்படுவதற்கெல்லாம் அப்பால் அதனை அதிகரிக்க மட்டுமே செய்திருக்கிறது.

The speech by Bill Van Auken begins at 1:37:58 in the video.

ஏகாதிபத்தியம் நோய் விடுப்போ, விடுமுறையோ எடுக்கவுமில்லை அல்லது அது தூங்கவுமில்லை. பெருந்தொற்றுக்கு எதிராய் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதான போலியான பேச்சுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இந்த பெருந்தொற்றை போருக்கான ஒரு சாதனமாகவே காண்கிறது. கொரோனா வைரஸ் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மூடத் தள்ளுவதற்கெல்லாம் முன்பாக அது பின்பற்றி வந்த அதே புவி-மூலோபாய இலக்குகளைச் சாதிப்பதற்கு இந்த வைரஸை ஆயுதமாக்கிக் கொள்ள அது தாட்சண்யமற்று முனைந்து வருகிறது.

இந்த வாரத்தில், அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான மூலோபாய அணுஆயுத குண்டுவீச்சு விமானங்களையும் ICBM ஏவுகணைகளையும் மேற்பார்வை செய்யும் அமெரிக்க விமானப் படையின் உலகளாவிய தாக்குதல் தளபதியான டிமோத்தி ரே அமெரிக்க மக்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய எதிரிகளையும் நோக்கி மின்வருமாறு அறிவித்தார்:

“எங்களது குண்டுவீச்சு விமானங்களும் ICBM படைகளும் எந்த நேரத்திலும் கிளம்பத் தயாரான நிலையிலும் எந்த நேரத்திலும் பூகோளத்தின் எந்த இலக்கையும் தாக்கக் கூடிய நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்பதை நிச்சயமாய் சொல்லமுடியும். நாங்கள் எந்த நடவடிக்கைக்கும் ஆயத்தமாய் இருக்கிறோம், COVID-19 அதை மாற்றிவிட முடியாது.”

முன்னதாக, சென்ற மாதத்தில், தளபதி ரே ஒரு நேர்காணலில் அவரது உத்தரவின் கீழான “அணுஆயுத விமானங்கள் இப்போதும் பறக்கத் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

அளவுக்கு அதிகமான நோயாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் அவசரசிகிச்சை அறைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிர்விடுவது, ஒட்டுமொத்தமாய் புதைக்கப்படும் கல்லறைகளில் சவப்பெட்டிகள் குவிக்கப்பட்டிருப்பது, நியூ யோர்க் நகரின் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாடகை பாரவூர்திகளில் அழுகும் பிணங்கள் குவிக்கப்பட்டுக் கிடப்பது என அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த சிதைவின் ஒரு காட்சியைக் கண்டு உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆனால், மன்ஹாட்டன் மீது போடப்படக் கூடிய ஒரேயொரு 40 கிலோ தொன் அணுகுண்டு கிட்டத்தட்ட கால் மில்லியன் பேர் மரணடைவதற்கும், எந்த அவசரசிகிச்சை அறைகள், மருத்துவமனைகள் அல்லது மருத்துவ ஊழியர்களும் சிகிச்சையளிக்க முடியாத வண்ணம் இன்னுமொரு கால் மில்லியன் பேர் படுகாயமடைவதற்கும் கொண்டுசெல்லும்.

“அணுகுண்டு விமானங்கள் பறக்கத் தயாராய் உள்ளன”. இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இராணுவத் தளபதிகளும் அரசியல் தலைவர்களும் மறுபடியும் பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு மூன்றாம் உலகப் போரானது எப்போதாவது சாத்தியப்படலாம் என்பதற்கு மாறாக அதிக சாத்தியம் கொண்டது இன்னும் தவிர்க்கவியலாதது என்றும் கூட சொல்லலாம் என்கிறதான முன்னனுமானிப்பில் இருந்து தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்வந்த ஒரு உரையில் கூறப்பட்டதைப் போல, அமெரிக்க இராணுவவாதத்தின் முதலாவதும் முதன்மையானதுமான இலக்கு சீனா ஆகும். எனினும், வாஷிங்டன் உலகமெங்கிலுமே அதன் மூர்க்கத்தனத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த ஒரு நேரத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு போர்க்கப்பல் வரிசையை வெனிசூவேலாவின் கடல்பகுதிக்கு அனுப்பிக் கொண்டே, பாரசீக வளைகுடாவில் ஆத்திரமூட்டும் விதத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதைக் கண்காணிக்கும் ஈரானின் ரோந்துப் படகுகளை தாக்குவதற்கும் மூழ்கடிப்பதற்கும் அமெரிக்க கடற்படைக்கு உத்தரவை ட்வீட் செய்து கொண்டுமிருந்தார். அமெரிக்க நிர்வாகமானது இந்த பெருந்தொற்றை ஆயுதமாக்கவும், உலகில் COVID-19 இறப்பு விகிதம் அதிகமாய் கொண்ட நாடுகளில் ஒன்றான ஈரான், மற்றும் பொறிவின் விளிம்பில் நிற்கும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பைக் கொண்ட வெனிசூவேலா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் எதிராக தடைகளை இறுக்கவும் விழைந்திருக்கிறது.

இந்த திடீர் மற்றும் வலிந்த போர் அச்சுறுத்தல்களானது வெறித்தனம் மற்றும் விரக்தியின் சுவட்டைக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், இந்த கிறுக்குத்தனத்திற்கு ஒரு திட்டவட்டமான வழிமுறையும் இருக்கிறது. பாரிய நோய்வாய்ப்படல் மற்றும் இறப்பு எண்ணிக்கையை எண்ணெய்வளம் செறிந்த இந்த இரண்டு நாடுகளிலும் ஆட்சியை மாற்றுவதற்கான தனது மூர்க்கமான “அதிகப்பட்ச அழுத்த” பிரச்சாரங்களுக்கு ஏதுவாய் சுரண்டிக் கொள்வதற்கு வாஷிங்டன் நோக்கம் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானிலான மூன்று தசாப்த கால அமெரிக்கப் போர்கள் படுதோல்விகளது ஒரு வரிசையையே உண்டாக்கியிருக்கின்றன. அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் ஒப்பீட்டளவில் ஏற்பட்ட சரிவின் காரணத்தினால் வீழ்ச்சியடைந்த அதன் உலகளாவிய மேலாதிக்க நிலையை மீண்டும் கைவசப்படுத்துகின்ற வாஷிங்டனின் நோக்கங்கள் பூர்த்தியாவதற்கெல்லாம் வெகுதூரத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியமானது இன்று இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கையின் வார்த்தைகளில் “மூலோபாயப் போட்டி” எனக் குறிப்பிடப்படுகின்ற ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து எதிர்கொண்டு நிற்கிறது. அதேநேரத்தில், வாஷிங்டனுக்கும் இதுகாறும் அதன் நேட்டோ கூட்டாளிகளாக இருந்தவற்றுக்கும், குறிப்பாக இரண்டு உலகப் போர்களில் அமெரிக்கா எதிரணியில் நின்று சண்டையிட்ட ஜேர்மனிக்கும் இடையில் முன்னெப்போதினும் கூர்மையான மோதல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய மோதல்களுக்கான தயாரிப்புகள் வரும் ஆண்டில் 741 பில்லியன் டாலராக அதிகரிக்க மதிப்பிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான இராணுவ நிதி ஒதுக்கீட்டிற்கு எரியூட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் 50 பில்லியன் டாலர் அமெரிக்காவின் அணுஆயுத மூவகை படைஆயுதங்களது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் இதில் செலவிடப்பட இருக்கிறது.

இதனிடையில் பெருந்தொற்றுகளை எதிர்கொள்வதற்கான பிரதான அமெரிக்க முகமையான நோய்த் தடுப்புக்கான மையங்கள், அதற்கு ஒடுக்கப்படும் நிதி தாட்சண்யமற்று வெட்டப்பட்டு வந்துள்ளதைக் கண்டுள்ளது. இப்போது அதன் அளவு, பென்டகனுக்கு ஒதுக்கப்படுவதில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமேயாகும்.

முதலாளித்துவ அமைப்புமுறையின் பகுத்தறிவற்ற மற்றும் குற்றவியல் தன்மையை இதனை விட வேறொன்றும் சுருங்கக் கூறிவிட இயலாது. வோல் ஸ்ட்ரீட்டில் பாய்ச்சப்படுகின்ற டிரில்லியன் கணக்கான பணத்தைப் போலவே, பாரிய அழிவாயுதங்கள் கட்டுவதற்காக இறைக்கப்படுகின்ற டிரில்லியன் கணக்கான பணமும், தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் பிரதான பங்குரிமையாளர்களுக்கும் வெட்கம்கெட்ட இலாபங்களைக் கொடுக்கின்றது. அதேநேரத்தில், மில்லியன் கணக்கான மக்கள் கொரோனா வைரஸ், பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சமூகத்திடம் இருந்து திருடப்பட்ட ஆதாரவளங்களை இவர்கள் தம்மகத்தே கொண்டிருக்கின்றனர்.

ஆயினும் அமெரிக்க இராணுவவாதம், சர்வவல்லமை பெற்றநிலைக்கெல்லாம் வெகுதூரத்தில் இருக்கிறது. அமெரிக்க சக்தியின் ஒரு அடையாளமாக காட்டப்படும் நிலை கொண்டிருந்த அணுதாங்கி விமானங்கள் சுமந்து செல்கிற USS தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் நடந்த நிகழ்வுகளில் இது தெளிவாக வெளிப்படுகிறது. அதன் ஊழியர் நெரிசல்மிக்க தளங்களில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி, இப்போது அதன் ஊழியர்களில் குறைந்தபட்சம் 900 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது. “நாங்கள் போரில் ஈடுபட்டிருக்கவில்லை. மாலுமிகள் இறக்க அவசியமில்லை” என்று வலியுறுத்தி கப்பலின் தளபதி, கப்பலை துறைமுகத்துக்குக் கொண்டுவந்து அதன் ஊழியர்களை கரைக்குக் கொண்டுசென்று தனிமைப்படுத்தும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

பெருந்தொற்றின் அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டுவதற்கு முனைந்து கொண்டிருந்ததும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு போரில், தான் ஈடுபட்டிருக்கிறது மாலுமிகள் இறக்க வேண்டியிருந்தால் இறந்துதான் ஆக வேண்டும் என்று நம்புகிறதுமான ட்ரம்ப்பின் நிர்வாகத்திற்கு இந்த செயல் கோபமூட்டியது. கப்பலின் ஊழியர்படையும் அதன் பங்கிற்கு, பணிநீக்கம் செய்யப்பட்ட தமது தளபதிக்கு ஒரு கலகத்தின் விளிம்பைத் தொட்ட ஒரு கொந்தளிப்பான வழியனுப்பலை வழங்கியது. அவர்களது வாழ்க்கையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அன்றாடம் கொல்கின்ற ஈரானியர்கள், வெனிசூவேலியர்கள், ஏமன் நாட்டினர், ஆப்கன்கள், ஈராக்கியர்கள் அல்லது சோமாலியர்களைக் காட்டிலும் எந்தவித அதிக முக்கியத்துவமும் கொண்டிராததாய் இருக்கின்ற இராணுவ மூர்க்கத்தனத்தின் ஒரு கொள்கைக்கு மாறானவையாக அவரது நடவடிக்கைகள் தோன்றி விட்டிருந்தன.

அமெரிக்க ஆயுத தொழிற்சாலைகளுக்கான இன்றியமையாத விநியோகங்களைத் துண்டித்து மெக்சிகோவின் மக்கில்லடோரா தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. எனினும் அமெரிக்காவின் எல்லையோரம் அமைந்திருக்கும் ஆயுதத் தொழிற்சாலைகள் எங்கிலும் தொழிலாளர்கள் தமது ஆரோக்கியத்திற்கும் உயிர்வாழ்விற்கும் அச்சுறுத்தலாய் அமைந்திருக்கும் நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்திருக்கின்றனர் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

உலக முதலாளித்துவத்தை போரை நோக்கித் துரத்திக் கொண்டிருக்கின்ற அதே தீர்க்கமுடியாத நெருக்கடிதான், உலகின் உழைக்கும் மக்களை புரட்சியை நோக்கி இட்டுச்சென்று கொண்டிருக்கிறது.

போரை நோக்கிய குற்றவியல் உந்துதலுக்கான ஒரே பதில் முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதில் தான் அமைந்திருக்கிறது. மிகப்பரந்த ஆயுத உற்பத்தித்துறை எந்த இழப்பீடும் கொடுக்கப்படாமல் கைப்பற்றப்படுவதுடன், அதன் பிரதான பங்குதாரர்களது ஆபாச இலாபங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த ஆதாரவளங்கள் உலகளாவிய பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் மக்களின் மிகப்பரந்த பெரும்பான்மையினரது சமூகத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்குமாய் வைக்கப்பட தொழிலாளர்கள் போராடியாக வேண்டும். இந்த தவிர்க்கமுடியாத கோரிக்கைகள், அதிகாரம் தொழிலாள வர்க்கத்துக்கு மாற்றப்படுவதற்கும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளன.

Loading