கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிகாரிகளுக்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க பிரெஞ்சு சட்டசபை வாக்களிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 11 அன்று நாடு தழுவிய தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிக்கும் நிமித்தம் இந்த வாரம் பிரெஞ்சு செனட் சபை வாக்களித்தபோது, கொரோனா வைரஸ் சுகாதார அவசரகாலநிலை நீடிக்கும் காலம் முழுவதும் குற்றவியல் பொறுப்பேற்பினை மட்டுப்படுத்தும் விதிகளை ஏற்றுக்கொண்டது. முந்தைய சுகாதார நெருக்கடியை அடுத்து 2000 ஆம் ஆண்டில் அரசாங்கம் நிறைவேற்றிய ஏற்கனவே இருக்கும் பொறுப்பேற்புக்கான மட்டுப்படுத்தல்களை செனட் சபையின் வாக்குகள் விரிவாக்கம் செய்கின்றன. தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதானது ஆயிரக்கணக்கான புதிய COVID-19 தொற்றுக்களை ஏற்படுத்தும் என்பதால் ஆளும் வர்க்கம் தனக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த முயல்கிறது.

குடியரசுக் கட்சியினரால் (LR) முன்மொழியப்பட்ட செனட் சபையின் திருத்தம் கூறுவது என்னவெனில், "நிர்வாக பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் உள்ளார்ந்த தன்மை மற்றும் அலட்சியம் மூலம்" அல்லது ஒரு பொலிஸ் நடவடிக்கையின் பாதுகாப்பு அல்லது பாதுகாப்பின் ஒரு குறிப்பிட்ட கடமையை "வெளிப்படையாக வேண்டுமென்றே மீறும்". செயல் செய்யப்படாதவரை "இன்னொரு நபரை நோய்த்தொற்று ஏற்படுத்தும் அபாயத்தில் இருத்தியதற்கோ அல்லது அத்தகைய நோய்த்தொற்று ஏற்படுத்தியதற்கோ அல்லது நோய்த்தொற்று ஏற்பட காரணமாக இருந்ததற்கோ யாரும் பொறுப்பேற்கமுடியாது" என்று கூறுகிறது.

மார்ச் மாதத்தில் அரசு ஒரு தேசிய சுகாதார அவசரகாலநிலையை அறிவித்ததிலிருந்து முழு காலமும் இந்த விதிமுறைகளை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, அரசு ஊழியர்களுக்கும் தனியார் முதலாளிகளுக்கும் இது பொருந்தும், அவர்கள் தங்கள் ஊழியர்களை ஆபத்தில் ஆழ்த்தினால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்கான குறிப்பிட்ட உத்தரவாதங்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட நிர்வாக பொலிஸ் நடவடிக்கைகளில் தவறான நடத்தை இப்போது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே தேட முடியும் என்பதால் "கடுமையான தவறான நடத்தை" என்ற முந்தைய தேவையை அவை இரத்து செய்கின்றன.

COVID-19 தொற்றி இறந்தவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பங்களின் சட்ட வழக்குகள், அமைச்சர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் முதலாளிகள் உள்ளிட்டவர்களை இலக்காக கொண்டு ஒரு அலையாக போடப்பட்டதன் தொடர்ச்சியை அடுத்துத்தான் செனட் சபை வாக்களிப்பு இடம்பெறுகிறது. மேலும் வழக்குகள் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மக்ரோன், அரசின் தலைவராக தனது கடமைகளின் போது செய்த குற்றங்களுக்கு குற்றவாளியாக பொறுப்பேற்க மாட்டார், ஆனால் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு பிரதமருடன் இணைந்து பொறுப்பேற்பவராவார், அரசாங்கம் தனது கொள்கையைச் சுற்றி முன்வைக்க விரும்பும் தேசிய ஒற்றுமையின் முகப்பில் இது சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் வழக்குகளுக்கு தனது எதிர்ப்பினை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை.

அரசாங்க அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச பணியின் நிமித்தம் செய்த நடவடிக்கைகளில் தவறுகள் இருந்தால் தீர்ப்பளிக்கும் ஒரே நிறுவனம் குடியரசின் நீதிமன்றம் மட்டுமே. படுகொலை, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முனைந்தது அல்லது ஒரு பேரழிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றே தவறியது போன்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் ஏற்கனவே ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப், முன்னாள் சுகாதார மந்திரி அநியேஸ் புஸன் மற்றும் அவரது தொடர்ச்சியாளரான தற்போதைய சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் ஆகியோர் வழக்குகளால் குறிவைக்கப்பட்ட அமைச்சர்களில் அடங்குவர்.

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான உந்துதலின் பின்னணியில், பிரதம மந்திரி பிலிப் ஏப்ரல் 28 அன்று சட்டசபையில் அறிவித்தார்: “நமது பொருளாதாரத்தின் முழுப் பிரிவுகளின் உற்பத்திகளின் நிறுத்தம் நீடித்திருப்பதும்… பொது அல்லது தனியார் முதலீடுகளில் ஏற்பட்டுள்ள தடைகள் என்பன… நீடித்த முடக்கத்தின் பிரச்சனைகளாக மட்டும் இருக்கவில்லை, ஆனால் மிகவும் மோசமான ஒரு வீழ்ச்சியின் ஆபத்தினை கொண்டிருக்கிறது”.

“எனவே நாம் COVID-19 உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார். வேறு வார்த்தைகளில் இதை நாம் கூறவேண்டுமானால், அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க முயற்சிக்காமல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு கொல்லப்படும் நிலை வந்தாலும், பொருளாதாரத்தினை என்னவிலை கொடுத்தாவது புத்துயிர் பெற வைக்க வேண்டும் என்பதாகும்.

ஐரோப்பாவில், ஜேர்மன் அரசாங்கம் பெரும் தொற்றினை அதன் பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்தும் வாய்ப்பாக பார்க்கிறது. ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சீனாவுக்கு எதிராக தன்னை பலப்படுத்துவதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது கவனத்தினை மையப்படுத்தி வருகிறது.

தேசிய முடக்கம் முழுவதும் தொடர்ந்து பணியாற்றிய தொழிலாளர்கள் தங்கள் உடல்நலத்திற்கு பெரும் விலை கொடுத்துள்ளனர், மேலும் பலர் இறந்துள்ளனர். இது பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறப்பதன் மூலம் தீவிரமடையும். இந்த செனட் சபை வாக்களிப்புக்கு பின்னால் உள்ளது என்னவெனில், அரசியல் மற்றும் பொருளாதார முடிவெடுப்பாளர்கள் தங்கள் சொந்த செயல்களின் விளைவுகளிலிருந்து தாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளாகும்.

மே 11 ம் தேதி முடக்கம் முடிவடைந்த பின்னர் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கருதப்படும் அரச அதிகாரிகள் அறிவித்த பெரும்பாலான விதிகள் சாதரணமாக நடைமுறைக்கிட்டு மதிப்பீடு செய்யப்படவில்லை. மே 11 க்குப் பின்னர் அவற்றை நடமுறைக்கு இடுவது இன்னும் கடினமாக இருக்கும்.

பொது போக்குவரத்து அமைப்புகளில், சமூக விலகல் வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளித்து நடமுறைப்டுத்தும்போது, எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு செல்ல முடியாது என்று தேசிய மற்றும் பாரிஸ் இரயில்வே அமைப்பு ஏற்கனவே பத்திரிகைகளில் அறிவித்துள்ளது. குழந்தைகள் மீதான வைரஸின் தாக்கம் என்ன, அவை எவ்வாறு பரவுகின்றன, மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மேயர்கள் உத்தியோகபூர்வ பரிந்துரைகளுக்கு ஏற்ப தங்கள் வகுப்பறைகளை சரியான நேரத்தில் தயார்படுத்த முடியாத சூழ்நிலைகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன.

2000 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஃபோசோன் சட்டம் (La loi Fauchon), அரசாங்கத்தின் கொள்கைகளின் சட்ட விளைவுகளிலிருந்து உள்ளூர் மேயர்களைப் பாதுகாக்கும் பதாகையின் கீழ், சட்டத்திற்கு ஒரு மாதிரியாக முன்வைக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல, இந்தச் சட்டம், மேயர்களைப் பாதுகாக்கும் போலிக்காரணத்தின் கீழ், மிகப்பெரும் பொது சுகாதார ஊழல்கள் மற்றும் முறைகேடுகளால் ஏற்படும் பொறுப்பேற்பில் இருந்து மூத்த, பொது மற்றும் தனியார் அதிகாரிகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.

1980 களில், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் எய்ட்ஸ் வைரஸ் தொற்றிய இரத்தங்களை இரத்தப்போக்கு நோயாளர்கள் பயன்படுத்த சுகாதார அதிகாரிகளை அனுமதித்த கறைபடிந்த இரத்த ஊழலும் இதில் அடங்கும்; இதன் விளைவாக பிரான்சில் இரத்தப்போக்கு நோயாளர்கள் பலர் இறந்தனர், 2003 வெப்ப அலையுடன் மிகப்பெரிய அதிகப்படியான இறப்புகள் மற்றும் ஏனைய எண்ணற்ற மரணங்கள் புற்றுநோயினை உண்டாக்குபவையும் இணைந்துள்ளன.

சோசலிஸ்ட் கட்சியின் நலனுக்காக குடியரசுக் கட்சியினர் நிறைவேற்றிய ஃபோசோன் சட்டத்தைப் போலவே, அரசியல் அமைப்பு ஒரு மிகப்பெரிய நெருக்கடியால் ஆட்டம் கண்டு வருவதால் ஆளும் வர்க்கம் ஐக்கியப்பட்டுவருகிறது.

இந்த சட்ட திருத்தத்தினை அரசாங்கம் எதிர்க்கிறது என்று பிரதமர் பிலிப் கூறியுள்ளபோதும், உண்மையில் சட்ட வரைவானது முதலில் 138 பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க கட்சியான குடியரசின் 19 செனட்டர்கள் ஆகியோரின் முறையீட்டால் தான் முன்தள்ளப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் செனட்டரியல் வரைவை நிறைவேற்ற முயற்சிக்கவும் அல்லது வேறு சில வழிகளில் இதேபோன்ற முடிவை அடையும் ஒரு ஏற்பாட்டினைக் கண்டறிய கட்சிகளுக்கு இடையே தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

பிரதான கட்சிகளால் திரைக்குப் பின்னால் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளின் முடிவு என்னவாக இருந்தாலும், வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள், அது தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கான தனது சொந்த பாதுகாப்பினை உறுதி செய்வதில் அக்கறை கொண்டுள்ளது.

Loading