மெக்சிகோவின் தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புங்கள் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் உரையை கோஸ்டாரிகாவில் வசிக்கும் நான்காவம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர் ஆண்ட்ரியா லோபோ நிகழ்த்தினார். இவர் இலத்தீன் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். மே 2 அன்று உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அனைத்துலகக் குழு நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் அவரது பேச்சை கீழே காணலாம்.

வேலைக்குத் திரும்புங்கள் பிரச்சாரமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குறிப்பாக மெக்சிகோ உற்பத்தி ஆலைகளில் ஒரு அவசர பண்பை எடுத்துள்ளது, அமெரிக்க உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு இவை அத்தியாவசியமானவையாக உள்ளன. மெக்சிகோ கிட்டத்தட்ட நாள்தோறும் முன்னினும் அதிக COVID-19 தொற்றுகளையும் மரணங்களையும் இப்போதும் பதிவுசெய்து கொண்டிருக்கிறது.

The speech by Andrea Lobo begins at 1:56:44 in the video.

பெருந்தொற்று குறித்த செய்திகள் முன்னரே சொல்லப்பட்ட ஒரு மரணத்தின் காலவரிசை (Chronicle of a Death Foretold) என்ற காப்ரியல் கார்சியா மார்கேஸின் துப்பறியும் நாவலை நினைவுக்குக் கொண்டுவருவதாக WSWS சமீபத்தில் நேர்காணல் செய்த ஹோண்டுரான் மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டார். அந்த நாவலில் ஒரு கொலைச் சதிக்கு இலக்காகவிருக்கும் மனிதரை எச்சரிக்க, கதையில் வரும் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் தமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை வீணடிக்கிறார்கள், காலம் கடந்து விடுகிறது. இன்றைய அரசாங்கங்களும் பெருந்தொற்று குறித்த பொதுப்பட்ட எச்சரிக்கைகளின் மத்தியில் அலட்சியத்தையும் பொய்களையும் கொண்டு பதிலிறுத்துக் கொண்டிருக்கின்றன. என்றாலும், ஆளும் வர்க்கத்தையும் அதன் அரசியல் பிரதிநிதிகளையும் “எதுவும் சொல்ல விரும்பாத” நடுநிலை பார்வையாளர்களாக பார்ப்பதும் பிழையாக இருக்கும். அவர்கள் செயல்படுத்துவதிலும் மூடிமறைப்பதிலும் பிரத்யேக நலன்களைக் கொண்ட பிரதான பாத்திரங்களாவர்.

பெருந்தொற்றின் விடயத்தில், பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பாரிய உயிரிழப்புகளுக்கும் பொருளாதார வறுமைப்படலுக்கும் முகம்கொடுக்கின்ற நிலையில், அவர்கள் தங்கள் கண் முன்னால் விரிகின்ற குற்றத்தைக் காண முடியும் என்பதோடு சம்பவத்தின் வரவிருக்கும் பகுதியை ஊகிக்கவும் முடியும். சிலவராட்சியினரையும் அவ்ர்களது அரசுகளையும் எதிர்த்து நிற்கவும் நடந்து கொண்டிருக்கும் குற்றத்தைத் தடுத்துநிறுத்தவும் வலிமை கொண்ட சமூக சக்தியாக இருக்கும் இந்த பிரதான பாத்திரம் தொழிலாள வர்க்கமாகும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதேபோன்ற தொழிலக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், மாக்கிலாடோராஸ் (maquiladoras ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்கள்) என்று அழைக்கப்படும் மெக்சிகோ எங்கிலுமான உற்பத்தி ஆலைகளிலும் தொழிலாளர்கள், அத்தியாவசிய தயாரிப்பில் இல்லாத ஆலைகளை மூடுவதற்கும் அத்தியாவசிய தயாரிப்பு ஆலைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் கோரியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மெக்சிகோவில் வேலைநிறுத்தங்கள் டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் நகரில் இருந்து எல்லை தாண்டி மத்தாமோரஸ் நகரில் இருந்து தொடங்கின. அத்தியாவசிய தயாரிப்பில் இல்லாத ஆலைகளை மூடுவதற்கு ஜனாதிபதி Andrés Manuel López Obrador (AMLO) இன் அரசாங்கம் உத்தரவிட்டும், உத்தியோகபூர்வ உத்தரவு திட்டமிட்ட விதத்தில் தெளிவற்று இருந்ததை மேற்கோள் காட்டி ஆலைகள் மூடுவதற்கு மறுத்ததை அடுத்து, ஒருநாள் தள்ளி தொழிலாளர்கள் வேலைப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடக்கினர்.

மத்தாமோரஸ் இல் சென்ற ஆண்டில் தொழிலாளர்கள், 12 மணி நேர வேலைக்கு 8 டாலர் ஊதியமளிப்பதையும் தமக்கு கொடுக்கப்படவேண்டிய போனஸ்களை திருடுவதற்கு நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் எதிர்த்து, வட அமெரிக்காவில் பல தசாப்தங்களின் மிகப்பெரும் வேலைநிறுத்த அலையை முன்னெடுத்தனர். உள்ளூர் மற்றும் பெடரல் அதிகாரிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் பெருநிறுவனங்களை நிபந்தனையற்று ஆதரித்தன என்ற முடிவுக்கும், தொழிலாளர்கள் தத்தமது சொந்த முன்முயற்சியை மட்டுமே நம்பியிருக்க முடியும் என்பதான முடிவுக்கும் இந்த அனுபவத்தில் இருந்து பலரும் வந்தடைந்தனர்.

COVID-19 வெடிப்புகளும் மரணங்களும் பரவிய நிலையில், Ciudad Juarez, Tijuana, Mexicali மற்றும் Reynosa போன்ற நகரங்களின் தொழிலாளர்களுக்கும் இது தெளிவானது, அவர்களும் வேலைநிறுத்த அலையில் இணைந்தனர்.

சர்வதேச வேலைநிறுத்த அலைகளானவை தொழிலாள வர்க்கத்தின் பாரிய புரட்சிகர ஆற்றல்வளத்தையும் தொழிலாளர்கள் அனைவரும் ஒரே நலன்களையே பகிர்ந்து கொள்கின்றனர் என்பதால் இனம், பாலினம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து அவர்களது பரந்த ஆற்றலை ஐக்கியப்படுத்துவதற்கான அவசியத்தையும் காட்டத் தொடங்க மட்டுமே செய்திருக்கின்றன.

ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தையான ஜோர்ஜி வலென்டினோவிச் பிளெக்ஹானோவ் எழுதினார், “மருத்துவர் நோயாளியின் நிலையைக் கண்டு அனுதாபப்படுவது போதாது: அந்த நுண்ணுயிரின் உருவியல் நிதர்சனத்தை கணக்கிட்டு, அதனை எதிர்த்துப் போராட அதிலிருந்து தொடங்க வேண்டும். நோய்க்கு எதிரான அறச்சீற்றத்துடன் மருத்துவர் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள எண்ணுவாரேயானால், அவர் மிக மோசமான கேலிக்குரியவராகி விடுவார்.”

தொழிலாளர்கள் அவர்கள் முகம்கொடுக்கும் சூழ்நிலையின் உருவியல் எதார்த்தத்தை புரிந்து கொள்வது அவசியமாகும். வெறும் மூன்று தசாப்தங்களில், மெக்சிகோ அதன் வர்க்க தொகுப்பமைவில் ஒரு பாரிய உருமாற்றத்திற்குள் சென்றிருக்கிறது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான ஐநா பொருளாதார ஆணையம் கூறுவதன் படி, 1986 இல் ஏற்றுமதியில் 70 சதவீத பங்கினை விவசாய, தாது மற்றும் குறைந்த-நுட்ப தயாரிப்புகள் கொண்டிருந்தன. அதன்பின் ஏற்றுமதி வருடத்திற்கு 10.4 சதவீதம் அதிகரித்துச் சென்றிருக்கிறது, அத்துடன் இப்போது உயர்-மற்றும்-நடுத்தர-தொழில்நுட்ப தயாரிப்புகள் ஏற்றுமதியில் 75 சதவீத பங்கைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலானவை அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் செல்கின்றன.

ஏற்றுமதி உற்பத்தி மண்டல (maquiladora) தொழிலாளர்படை சுமார் மூன்று மில்லியன் தொழிலாளர்களாக வளர்ந்திருந்தது, இவர்கள் உலக விநியோகச் சங்கிலிகளின் பல்வேறு முக்கியமான மற்றும் இலாபகரமான புள்ளிகளிலும் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்கு ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட தொழிற்சாலைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். வட அமெரிக்க தொழிற்துறைக் களமானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆரம்பத்தில் ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு எதிராகவும், இப்போது சீனாவுக்கு எதிராகவும், போட்டிபோடுகையில் அதன் பொருளாதார நிலை வீழ்ச்சி காண்பதற்கான பதிலிறுப்பாக மேற்கொள்கின்ற ஒரு முயற்சியில் மேலதிகமாக ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டுள்ளது.

மிக உடனடிக் காலத்தில், பெடரல் ரிசர்விடம் இருந்தான டிரில்லியன் கணக்கான பணத்தைக் கொண்டு நிதிச் சந்தைகள் மீட்கப்படுகின்ற நிலையில், சிலவராட்சியினர் சுரண்டல் மூலமாக உண்மையான மதிப்பைப் பிழிந்தெடுக்க பிரயாசை கொண்டிருக்கின்றனர், அதற்கு மெக்சிகோவின் ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்கள் (maquiladoras) அத்தியாவசியமானதாய் இருக்கின்றன. மறுபக்கத்தில், மெக்சிகோவின் மலிவூதியங்களது இலாபமீட்டும் தன்மையானது போர்-தொடர்பான உற்பத்தியை அமெரிக்காவின் சாத்தியமான போட்டிநாடுகளிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள ஒரு மிகப்பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது.

Ciudad Juarez இல் உள்ள Amphenol தொழிற்சாலையில் --வாகன உற்பத்தித் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் பயன்படுகிற ஒயர்கள் மற்றும் கனெக்டர்களை தயாரிக்க்கிறது-- பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 17 அன்று தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிறுவனம் அந்த ஆலையை மூடத் தள்ளப்பட்டது, ஆயினும் தொழிலாளர்களை ஆபத்தான விதத்தில் வேலையில் ஈடுபடுத்துவதற்கு மெக்சிகோ அரசாங்கத்தின் அறிவிப்பில்லாத அனுமதியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவும் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், ஒருவாரத்தில் அது மீண்டும் திறக்கப்பட்டது. Amphenol பங்குகள் அந்த வாரத்தில் சுமார் 15 சதவீதமும் அந்த மாதத்தில் சுமார் 19 சதவீதமும் உயர்ந்தது. தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சார்ட் நோர்விட், 2018 இல், பெரும்பாலும் பங்கு ஆப்ஷன்களில் இருந்து 10 மில்லியன் டாலர் பெற்றிருந்தார்.

வாகன இருக்கையமைப்பு மற்றும் எலெக்ட்ரிக்கல் அமைப்புகள் தயாரிப்பாளரான Lear Corp இன் --Ciudad இல் உள்ள இதன் ஆலையிலும் தாமதமான மூடலின் காரணத்தால் COVID-19 ஆல் குறைந்தபட்சம் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்-- தலைமை நிர்வாக அதிகாரி சுமார் 10 மில்லியன் டாலர்கள் பெற்றார், இது அங்கு ஒரு ஆபரேட்டரின் பட்டியலிடப்பட்ட வருடாந்திர சம்பளத்தைக் காட்டிலும் 3,500 மடங்கிற்கும் அதிகமானதாகும்.

டொனால்ட் ட்ரம்ப் “அமெரிக்காவை மீண்டும் திறப்பதற்கு” அவரது திட்டத்தை வெளியிட்ட சில நாட்களின் பின்னர், அவர் நேரடியாக மெக்சிகோ ஜனாதிபதி López Obrador ஐ அழைத்துப் பேசி, அமெரிக்க நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கு அவரிடம் அழுத்தமளித்தார். பென்டகன், மெக்சிகோவுக்கான அமெரிக்க தூதர், இருகட்சிகளையும் சேர்ந்த செனட்டர்களின் ஒரு குழு மற்றும் பல்வேறு வணிகக் குழுக்களும் இந்த அழுத்தமளிக்கும் பிரச்சாரத்தில் இணைந்தன.

மே 16 தொடங்கி மீண்டும் திறப்பது தொடங்கவிருப்பதாக AMLO இப்போது அறிவித்திருக்கிறார். “மெக்சிகோவின் பக்கத்திலிருந்து அமெரிக்க விநியோகச் சங்கிலிகளுடன் பிணைப்பு கொண்ட நிறுவனங்கள் விரைவாகத் திறக்கப்படுவதற்கான சில பொறிமுறைகளை” அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொருளாதார அமைச்சரான Arturo Herrera, El Pais யிடம் தெரிவித்தார். “தொற்றினைக் கொல்வது தொற்றின் பரவலைத் தடுப்பதில்லை” என்பதால் “மந்தை நோயெதிர்ப்புசக்தி”யை அடைவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் விளக்கினார். மறுமுறை தொற்றாமல் இருப்பதற்கான ஒரு முக்கியமான பாதுகாப்பை வழங்கும் என்று அனுமானித்தாலும் கூட --COVID-19 விடயத்தில் அதற்கு எந்த விஞ்ஞானபூர்வ அடிப்படையும் இல்லை-- “மந்தை நோயெதிர்ப்புசக்திக்கு” 135 மில்லியன் மெக்சிகோ மக்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உண்டாக வேண்டியிருக்கும். மில்லியன் கணக்கில் இல்லையென்றால் நூறாயிரக்கணக்கிலேனும் மரணங்கள் உண்டாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவைசெய்வதற்காக எத்தனையோ தியாகம் செய்யத் துடிக்கும் ஒரு அரசாங்கம், அமெரிக்க ஆதரவுடன் பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் ஆயுதபாணியக்கப்பட்ட துருப்புகளையும் சிறப்புப் படைகளையும் வேலைக்குத் திரும்புவதைப் பலவந்தப்படுத்த பயன்படுத்தாது என்று நினைப்பது அப்பாவித்தனமானதாய் இருக்கும். AMLO ஆல் உருவாக்கப்பட்ட தேசிய காவற்படையின் (National Guard) சமீபத்திய உள்முக சுற்றறிக்கையானது, “சமூக அமைதியின்மை”க்கு எதிராக நிறுத்தப்பட அது தயாரித்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியது.

ஒவ்வொரு நாட்டின் ஊழலடைந்த மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களும் அவற்றின் வக்காலத்துவாதிகளும் தத்தமது அரசாங்கங்களின் வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தின் பின்னால் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் எப்போது என்ன நிலைமைகளின் கீழ் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டு ஜனநாயகரீதியில் முடிவுசெய்வதற்கும் அத்துடன் துறைகள் மற்றும் எல்லைகள் கடந்து தமது போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் புதிய அமைப்புகளையும், சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளையும் தொழிலாளர்கள் கட்ட வேண்டும்.

எண்பது வருடங்களுக்கு முன்பாக, மெக்சிகோ நகருக்கு அருகில் ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்படுவதற்கு சிறிது காலம் முன்பாக, லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “தனது சொந்த புரட்சிகர வழிநடத்தலில் மட்டுமே காலனிகள் மற்றும் அரைக்காலனிகளின் பாட்டாளி வர்க்கமானது மெட்ரோபொலிட்டன் மையங்களது பாட்டாளி வர்க்கத்துடன் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகத் தொழிலாள வர்க்கத்துடன் அசைக்கமுடியாத ஒத்துழைப்பைச் சாதிக்கும் திறம்பெற்றிருக்கிறது. இந்த ஒத்துழைப்பு மட்டுமே உலகெங்கிலும் ஏகாதிபத்தியம் தூக்கிவீசப்படுவதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களை பூரணமான மற்றும் இறுதி விடுதலைக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.”

Loading