COVID-19 க்கும் பட்டினிக்கும் இடையில் தேர்வு செய்வதற்கான கோரிக்கைகளை பிரேசில் தொழிலாளர்கள் நிராகரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் பிரேசிலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசில் ஆதரவாளர்கள் குழு சார்பாக தோமாஸ் காஸ்டன்ஹிரா பின்வரும் உரையை நிகழ்த்தினார்.

பிரேசிலிலும் இலத்தீன் அமெரிக்கா முழுமையிலும் 2020 மே தினமானது, அதீத சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்கப் போராட்ட வன்முறை ஆகிய வியாபித்த போக்குகள் COVID-19 பெருந்தொற்றால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுசரிக்கப்படுகிறது.

The speech by Thomas Scripps begins at 1:23:27 in the video.

பூமியின் வேறெங்கிலும் போலவே, தொழிலாளர்கள் COVID-19 இல்லையேல் பட்டினி ஆகிய இரண்டுக்கு இடையில் எதையாவது தெரிவுசெய்து கொள்ளக் கோரும் கோரிக்கையை நிராகரித்துக் கொண்டிருக்கின்றனர், வாழ்வதற்கான உரிமையைக் காட்டிலும் இலாபங்களையே மேலாய் கொண்டிருக்கின்ற ஒரு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணிக்கு வருகின்றனர்.

கண்டத்தின் மிகப்பெரிய, மிக அதிக மக்கள் தொகை கொண்ட, மிகவும் சமத்துவமின்மை நிரம்பிய நாடான பிரேசில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான ஒரு உலகளாவிய கருமையமாக துரிதமாய் ஆகிக் கொண்டிருக்கிறது.

பிரேசிலின் Amazonas மாநிலத்தின் தலைநகரான Manaus இல், COVID-19 நோயாளிகள் புதைக்க வழியற்றிருக்கும் சடலங்களது மத்தியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மொத்தமாய் சவங்களைப் புதைக்கும் பெரும் சவக்குழிகள் நூற்றுக்கணக்கில் தோண்டப்படுகின்றதான புகைப்படங்கள் பிரேசிலையும் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. தங்களது சகாக்கள் நோயால் பீடிக்கப்பட்டதை அல்லது மரணித்ததைக் கண்ட செவிலியர்கள் அரசாங்கத்திடம் மிக அடிப்படையான பாதுகாப்பு சாதனங்களுக்குக் கோரிக்கை வைத்து வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த ஒரேயடியான நிலைமை துரிதமாக நாட்டின் எஞ்சிய பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. வீடுகள் குறைந்தபட்ச சுகாதார கட்டமைப்பைக் கூட கொண்டிராதிருக்கின்ற ஆபத்தான நிலையையும், ஒட்டுமொத்த குடும்பங்களும் ஒரே அறையைப் பயன்படுத்துகின்றதுமான நிலையையும் கொண்ட பிரேசிலின் ஜனநெரிசல்மிக்க சேரிப்பகுதிகளில் இந்த நோய் இப்போது தான் தொற்றத் தொடங்குகிறது.

உலக முதலாளித்துவ உயரடுக்கின் உதாசீனமும் குற்றவியல்தனமான அலட்சியமும் பிரேசிலின் பாசிச ஜனாதிபதியான ஜேர் போல்சனரோவின் வடிவில் அதிக கொடூர வெளிப்பாட்டை காண்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே அவர் நோயின் விளைவுகளைத் தணித்து காண்பித்ததோடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைத் திணித்த ஆளுநர்களுடன் மோதல் கொண்டார், அதேநேரத்தில் இராணுவத் தலையீட்டிற்கும் பொருளாதாரத்தை உடனடியாக மீண்டும் திறப்பதற்கும் அழைப்பு விடுத்து நடத்தப்பட்ட பாசிச ஆர்ப்பாட்டங்களை பகிரங்கமாக ஆதரித்தார்.

ஆயினும் பிரேசிலின் தொழிலாளர்கள் அறிவிப்பற்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அதிக காலம் எடுக்கவில்லை. இந்த நடவடிக்கைகள் மிகவும் சர்வதேசத் தன்மையைக் கொண்டிருந்ததும், அத்துடன் இருக்கின்ற தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டதாகவும் அவற்றுக்குக் குரோதம் கொண்டவையாகவும் இருந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாய் இருந்திருக்கின்றன.

பிரேசிலில் முதல் COVID-19 மரணங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதற்கு சில நாட்களின் பின்னர், மரணகரமான வேலைநிலைமைகளை எதிர்த்து Santa Catarina வில் உள்ள JBS இறைச்சிப்பொட்டல ஆலை ஒன்றில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அமெரிக்கா மற்றும் கனடாவில், பிரேசிலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தால் இயக்கப்படும் நிறுவனங்களில் இதே வேலைநிலைமைகள் தான் நோய்த் தொற்றுக்கு குவியப் புள்ளிகளாக மாறி, நோய்வாய்ப்படலுக்கும் மரணங்களுக்கும் இட்டுச்சென்றன.

மார்ச்சில், அழைப்பு மைய பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவர்களது பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக தேசியளவில் ஒரு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இத்தாலியை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு நாடுகடந்த பெருநிறுவனமான AlmaViva ஆல் இயக்கப்படுகின்ற மையங்களில் முதலில் இது நடந்தது, இதேபோன்றதொரு வேலைநிறுத்தத்தினால் AlmaViva அதன் Palermo ஆலையை மூட நிர்ப்பந்தம் பெற்றது என்ற செய்தியால் இதற்கு உத்வேகம் உண்டாகியிருந்தது.

சென்ற வாரத்தில், உலகளாவிய ஆப் வழி விநியோக நிறுவனங்களால் திணிக்கப்பட்ட குறைந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக ஸ்பெயினில் உள்ள விநியோகத் தொழிலாளர்களால் தொடக்கமளிக்கப்பட்ட ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது பிரேசில், ஆர்ஜெண்டினா மற்றும் ஈக்வடோரில் ஒரு வேலைநிறுத்தமாக மாறியது.

மெக்சிகோவின் மத்தாமோரஸ் (Matamoros) இல் ஓராண்டுக்கு முன்பாக நடைபெற்ற தொழிலாளர்களது கிளர்ச்சியில் கண்டதைப் போல, பிரேசிலின் சமீபத்திய வர்க்கப் போராட்ட அத்தியாயங்கள் தேசியவாத மற்றும் பெருநிறுவனவாத தொழிற்சங்கங்களுக்கு வெளியிலும் அவற்றிற்கு குரோதமான விதத்திலும் நடந்தேறியிருக்கின்றன என்ற உண்மையானது கடந்த 30 ஆண்டுகளாக அனைத்துலகக் குழு போராடி வந்திருக்கும் அரசியல் முன்னோக்கு சரியானது என்பதை முக்கியவிதத்தில் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் உறுதிப்படக் கூறியதைப் போல, முதலாளித்துவ உற்பத்தி உலகமயமாக்கமானது வர்க்கப் போராட்டத்தின் மீது ஒரு சர்வதேச உள்ளடக்கத்தை மட்டும் சுமத்தவில்லை, ஒரு சர்வதேச வடிவத்தையும் சுமத்துகிறது, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதை அவசியமாக்குகிறது.

ஆயினும் தொழிலாளர்களது தொழிற்சாலை நடவடிக்கைகளது தீவிரப்படலானது கண்டத்திலான விரிந்த அபிவிருத்திகளுக்கான ஒரு பதிலிறுப்பாகவும் அமைந்துள்ளது. கடந்த ஆண்டின் காலத்தில், இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் அது ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் அதன் தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் நீடித்த பொருளாதார அபிவிருத்தியையும் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும் காப்பாற்றும் திறனற்றிருந்த நிலையில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்பான அபிவிருத்திக்கு இட்டுச்சென்ற வரலாற்றையும், ஒரு குவிக்கப்பட்ட வடிவத்தில், மீண்டும் வாழ்ந்துள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிராந்தியமெங்கிலும் வியாபித்த முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களின் “இளஞ்சிவப்பு கொந்தளிப்பு” ("pink tide") சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையுடன் ஏற்பட்டதொரு முறிவாகவும் இன்னும் “சோசலிசத்திற்கான ஒரு புதிய பாதை”யாகவும் கூட பப்லோவாத அமைப்புகள் மற்றும் போலி-இடதுகளால் கொண்டாடப்பட்டது. இன்று அந்த அரசாங்கங்களின் மிகப் பெரும்பாலானவை பொறிவு கண்ட நிலையில், “இளஞ்சிவப்பு கொந்தளிப்பு” ஒரு மோசடியாக அம்பலப்பட்டிருக்கிறது.

தென் அமெரிக்காவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து பகிரங்கமான சதிகளில் ஈடுபடுகின்றனர், கொலம்பியாவின் Ivan Duque ம் பிரேசிலின் ஜேர் பொல்சனரோவும் வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளில் முக்கிய பாத்திரங்களாக செயலாற்றி வருகின்றனர்.

பொலிவியாவில் சென்ற நவம்பரிலான ஆட்சிக்கவிழ்ப்பு கண்டத்தின் மிகவும் ஊழலடைந்த இராணுவ சக்திகள் மீண்டும் அதிகார மையத்துக்குத் திரும்புவதை முன்னெதிர்பார்த்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக வீதிகளில் திரண்ட வெகுஜனங்களைக் கைவிட்ட ஜனாதிபதி எவோ மொரலெஸ் மூலம் அவற்றுக்குப் பாதை திறந்து விடப்பட்டது. பொலிவியத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு குற்றவியல் காட்டிக்கொடுப்பில், நாட்டின் மிகப்பெரும் தொழிற்சங்க கூட்டமைப்பான COB, கவிழ்ப்பு ஆட்சியில் பங்குபெற உடன்பட்டது.

சென்ற ஆண்டில், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான மில்லியன் கணக்கானோரின் ஒரு எழுச்சி சிலியை உலுக்கியது. “இது 30 சென்ட்கள் குறித்ததல்ல, 30 ஆண்டுகள் குறித்தது” என்று முழங்கிய தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் குருதிகொட்டிய பினோசே சகாப்தத்தின் போலிஸ் அரசு வழிமுறைகள் மீண்டும் உயிர்பெறும் நிலைக்கு முகம்கொடுத்தன, சர்வாதிகாரத்தின் முடிவில் அமர்த்தபப்ட்டிருந்த ஆட்சியின் ஜனநாயக நடிப்புகள் எதுவும் தகர்ந்து போயிருந்தன.

சிலியிலான பாரிய ஆர்ப்பாட்டங்கள் பிரேசிலின் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக மனக்கலக்கத்தையும் மிரட்சியையும் உண்டு பண்ணி, ஒழுங்கைப் பராமரிப்பதற்கு இராணுவ சர்வாதிகாரத்தின் ஒடுக்குமுறைச் சட்டங்களை மீண்டும் திணிப்பதற்கும் இராணுவத்தை வரைமுறையற்று பயன்படுத்துவதற்கும் போல்சனரோ அழைப்பு விடும் நிலைக்கு இட்டுச் சென்றது.

பிரேசில் தொழிலாளர் கட்சியும் அதன் போலி-இடது சுற்றுவட்டங்களும், ஒருபக்கத்தில் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பான அபிவிருத்திக்கும் மறுபக்கத்தில் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கும் அவை முகம்கொடுத்திருந்த நிலையில், அவற்றின் பங்காக அவை, தம்மை முதலாளித்துவ வர்க்கத்தின் கன்னைகளின் பின்னால் இன்னும் இராணுவத்தின் பின்னாலும் கூட --பொல்சனரோவின் அமைச்சரவையில் உள்ள ”அறையின் வயதுமுதிர்ச்சியுடையவர்கள்” என்று இவற்றை அவை அழைக்கின்றன-- அணிநிறுத்திக் கொள்ள முனைந்து வந்திருக்கின்றன. பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கென தத்தமது சொந்த தேதிகளை நிர்ணயம் செய்திருக்கின்ற மிக வலது-சாரி ஆளுநர்களை பொல்சனரோவின் பாசிச வாய்வீச்சுக்கு எதிராய் “விஞ்ஞானத்தை” பாதுகாத்து நிற்பவர்களாக அவை பாராட்டியிருக்கின்றன. பாரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு பட்டினி நிவாரணத்திற்கும் குறைவாகவே வழங்கிய அதேநேரத்தில் வங்கிகள் மற்றும் நிதிச் சந்தைகளை பிணையெடுக்க பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கு நிகராய் செலவிடப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் இன்றியமையாததாய் இருந்த வாக்கெடுப்பில் அவை அரசாங்கத்துடன் கைகோர்த்துக் கொண்டன.

பெருந்தொற்றுக்கு மத்தியில், PT மற்றும் மாவோயிச PCdoB ஆல் தலைமை கொடுக்கப்பட்ட தொழிற்சங்கங்களும், அவற்றுடன் மொரேனோவாதிகள் (Morenoite) தலைமையிலான CSP-Conlutas ம் “வேலைகளை காப்பாற்றும்” சாக்கில் பெருநிறுவனங்களின் இலாபத்தை காக்கின்ற ஊதிய வெட்டுக்கள் மற்றும் பாரிய வேலையிழப்புகளுக்கு நெருக்கி வந்திருக்கின்றன.

இந்தக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், போலி-இடதுகளும் இந்த ஆண்டின் மே தினத்தை எவ்வாறு அனுசரித்திருக்கின்றன? பொல்சனரோவுக்கு எதிரான தேசிய ஐக்கியம் என்ற சாக்கின் கீழ், இவை தமது மேடைகளுக்கு பிரேசிலின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் தலைவர்களையும் --இருவருமே இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஆட்சி செய்த கட்சியின் வாரிசான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்-- அத்துடன் வலது-சாரி ஆளுநர்களான ரியோ டின் ஜெனிரோவின் ஆளுநரான வில்சன் விட்சேல் மற்றும் ஸாவ் பவுலோவின் ஆளுநரான ஜோவ் டோரியா --இவர்கள் இருவருமே 2018 இல் பொல்சனரோ தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்தவர்கள்-- ஆகியோரையும் அழைத்திருந்தன.

இந்த “அகன்ற முன்னணி” குறித்த அவற்றின் வெற்று விமர்சனங்கள் என்னவாய் இருந்தபோதிலும், PSOL இல் உள்ள பப்லோவாதிகள் தொடங்கி PSTU இல் உள்ள மொரேனோவாதிகள் வரையிலும் போலி-இடது போக்குகள் அனைத்துமே பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தை பெருநிறுவன-ஆதரவு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் வாயிலாக முதலாளித்துவ அரசுக்கும் கீழ்ப்படியச் செய்வதற்காய் உறுதிபூண்டவையாக இருக்கின்றன.

”இளஞ்சிவப்பு கொந்தளிப்பு” இன் பொறிவு மற்றும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கும் பெருநிறுவன-ஆதரவு தொழிற்சங்கங்களுக்கும் கீழ்ப்படியச் செய்யப்பட்டமை ஆகியவற்றில் இருந்தான படிப்பினைகளைத் தேற்றம் செய்வதே பிரேசில் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள அரசியல்ரீதியாக முன்னேறிய தொழிலாளர்கள் இப்போது முகம்கொடுக்கின்ற மையமான கடமையாகும்.

ஒரு தேசியவாத முன்னோக்கின் அடிப்படையிலும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு நனவான புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பாமலேயே சோசலிசம் சாதிக்கப்பட்டு விட முடியும் என்பதான கூற்றின் அடிப்படையிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து முறித்துக் கொண்டு சென்ற திருத்தல்வாதப் போக்குகளுக்கு எதிரான ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்தை இது அவசியமாக்குகிறது.

இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் கட்டியெழுப்பப்பட இருக்கின்ற இந்த சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியின் பிரிவுகளுடன் சேர்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசிலியப் பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் கைகோர்ப்பதற்கு இதனைக் கேட்டுக் கொண்டிருக்கிற அனைவருக்கும் நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

Loading