தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 11 அன்று மக்ரோனின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதை நிர்ப்பந்திக்கும் முயற்சிகளுக்கு எதிராக வேலை புறக்கணிப்பு உரிமையை அத்தியாவசியமற்ற பொருட்களை உற்பத்திசெய்யும் தொழிலாளர்கள் கூட்டாகப் பயன்படுத்தவும், பரந்த மட்டத்தில் செயல்படுத்தவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

COVID-19 பெரும் தொற்றுக்கு மத்தியில், பாதுகாப்பாக வேலைக்கு திரும்புவதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமலே, ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருகின்றன. பல ஐரோப்பிய நாடுகளில் நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமைப்படுத்தல் புதிய தொற்றுக்களின் பரவலை குறைத்திருந்தாலும், ஐரோப்பாவில் ஒவ்வொரு நாளும் 20,000 பேருக்கு புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்படுகின்றன, இதில் நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் பெரும்பாலும் ஆயிரக்கணக்கானோர் பிரான்சில் உள்ளனர். அமெரிக்காவில், தினமும் 30,000 பேர் தொற்றுக்குள்ளாகிறார்கள். தனிமைப்படுத்தலை முடிவுக்கொண்டுவரும் அதேநேரம், ட்ரம்ப் நிர்வாகம் தனது உள் ஆவணங்களில் ஒரு நாளைக்கு 3,000 அமெரிக்கர்களின் இறப்புகளுக்கு கையெழுத்திட்டாக வேண்டும் என்று கூறுகிறது.

மனித உயிர்களை அவமதிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதை ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய அளவில் நூற்றுக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் அச்சுறுத்தப்படுகின்றன. மக்ரோன் தனது சொந்த ஆலோசகர்களின் தொற்றுநோயியல் கணிப்புகளுக்கு எதிராக கண்களை மூடிக்கொள்கிறார், தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதானது, பிரான்சில் இறப்புகளின் எண்ணிக்கையை 25,000 முதல் 60,000 வரை அல்லது 2020 இறுதிக்குள் 110,000 ஆக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர்.

சமுதாயத்தினை தனிமைப்படுத்தி வைக்கவும், COVID-19 இலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறை வளர்ச்சியடையும் வரை காத்திருக்கவும், போதுமான பணம் இல்லாததால், மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டியது அவசியமானது என்ற பொய்யை சோசலிச சமத்துவக் கட்சி (PES) நிராகரிக்கிறது. மத்திய வங்கிகளும் அரசுகளும் ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் மற்றும் யூரோக்களை பொதுப் பணத்தில் இருந்து எடுத்து நிதிச் சந்தைகளுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் தண்ணீராய் இறைக்கின்றனர். சிறு தொழில்கள் திவால்நிலைக்கு செல்ல அச்சுறுத்தப்படுவதும், தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை இழக்க நேரிடுவதும், மற்றும் வறிய மக்கள் பசியுடன் இருக்கும் அவலத்திற்கும் காரணமாக இருப்பது உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் ஏகபோக உரிமையுடன் பொதுச் செல்வத்தினை தமதாக்கிக்கொண்டிருப்பதால் ஆகும்.

வங்கிகளின் இலாபத்திற்காக தொழிலாளர்கள் வேலை செய்து இறக்கவேண்டிய அவசியமில்லை. 20 ஆம் நூற்றாண்டில் பல தலைமுறை புரட்சிகர போராட்டங்கள் மூலம், பிரான்சில் குறிப்பாக மே 68 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், வேலை புறக்கணிப்பு உரிமையை நிலைநாட்டினர்: உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சூழ்நிலைகளில் அத்தியாவசியமற்ற பண்டங்களை உற்பத்தி செய்யும் துறைகளில் பணியாற்ற முதலாளிகள் தொழிலாளர்களை கட்டாயப்படுத்த முடியாது. இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது எந்தவிதமான சம்பள இழப்பும் ஏற்படக்கூடாது. COVID-19 தொற்றினால் இறக்கும் எண்ணிக்கையானது, வேலையை புறக்கணிப்பதற்கான உரிமையைப் பயன்படுத்துவது முற்றிலும் நியாயமானது என்பதைக் காட்டுகிறது.

உலகளாவிய பெரும் தொற்றினை எதிர்கொள்ளும்போது, இது பிரெஞ்சு தொழிற்சங்க சட்டத்தின் கட்டமைப்புக்குள்ளோ அல்லது பிரான்சின் எல்லைகளுக்குளோ மேற்கொள்ளும் ஒரு போராட்டமாக இருக்க முடியாது. COVID-19 பெரும் தொற்றுக்கு எதிர்வினையானது, திவால்நிலை மற்றும் சட்டவிரோதத்தை வெளிப்படுத்திய ஒரு ஆளும் வர்க்கத்தினது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான, ஒரு புரட்சிகர அரசியல் போராட்டத்திற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனைத்து வலிமையையும் ஐக்கியப்படுத்துவது பற்றிய கேள்வியாகும்.

இந்த போராட்டம் அவசியமாக சர்வதேசிய தன்மை கொண்டதாக இருக்கிறது. வைரஸின் உலகளாவிய பரவலைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், காலத்திற்கு முன்கூட்டியே தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதலும், ஒரு நாட்டுக்குள்ளான வைரஸ் இன் மீளுருவாக்கமும் மற்ற எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களையும் அச்சுறுத்துகிறது. பிரான்சில் வேலையை புறக்கணிக்கும் உரிமையைப் பயன்படுத்த அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் உலகெங்கும் தொடங்கப்பட்ட தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு பிரச்சாரத்தினை தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தின் மையத்தில் வைத்தால் மட்டுமே தேவையான விளைவினை இது ஏற்படுத்தும்.

இந்த உரிமையை கூட்டாகப் பயன்படுத்த வேண்டுமானால் தொழிலாளர்கள் தம்மை ஒழுங்கமைக்க வேண்டும், ஆனால் அவர்கள் இந்த நோக்கத்திற்காக தொழிற்சங்க எந்திரங்களை பயன்படுத்த முடியாது. வேலை புறக்கணிப்பு உரிமையைப் பயன்படுத்துவதை பொதுமைப்படுத்தவும், மக்ரோன் மற்றும் பிற ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கவும், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். அத்தகைய அமைப்புகளால் மட்டுமே பணியிடத்தின் பாதுகாப்பை சரிபார்க்க முடியும் மற்றும் மக்ரோனுக்கும் நிதிய பிரபுத்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க முடியும்.

தொழிற்சங்க எந்திரங்களும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளும் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவரும் பிரச்சாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதலாளிகளின் அமைப்பான Medef சம்பளத்துடனான விடுமுறைகளை நீக்குவதற்கும் கூடுதல் நேரம் பணிபுரிந்தால் மேலதிகமாக சம்பள கொடுப்புமுறையை ஒழிப்பதற்கும் அழைப்புவிடுக்கும் அதே நேரத்தில், அவர்கள் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கூட, தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதை எதிர்க்க மாட்டோம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. வேலைப் புறக்கணிப்பு உரிமையைப் பயன்படுத்த அழைப்பு விடுப்பீர்களா என கேட்டதற்கு, CGT இன் தலைவர் பிலிப் மார்டினேஸ் கூறினார்: “இல்லை, இல்லை, நான் உங்களுக்கு நன்றாக தெளிவுபடுத்தியுள்ளேன் என நான் நம்புகிறேன்; பாதுகாப்பிற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுமானால் நாங்கள் வேலை செய்வதற்கே அழைப்புவிடுக்கிறோம்".

அதேபோல் அடிபணியா பிரான்ஸ் (LFI), முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) அல்லது தொழிலாளர் போராட்டம் (LO) போன்ற குட்டி முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் இதற்குள் அடங்கும். "எங்களை ஆள்பவர்களைத் தாக்குவதில் எந்த கேள்விக்கும் இடமில்லை" என்று LFI-அடிபணியா பிரான்சின் தலைவர் ஜோன் லூக் மெலோன்சோன் கூறினார், அவரது கட்சி அறிவித்ததாவது: "நேரடித் தாக்குதலை நாங்கள் ஆதரிக்கவில்லை."

தொழிற்சங்க எந்திரங்கள் மற்றும் அவர்களின் போலி இடது அரசியல் கூட்டாளிகளிடமிருந்து சுயாதீனமான தொழிலாளர்களின் முன்முயற்சியால் மட்டுமே ஒரு பேரழிவைத் தடுக்க முடியும். இப்போது குறைந்தது 4 மில்லியன் மக்களை தொற்றுக்குள்ளாக்கி, உலகளவில் கால் மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் நிகழ்த்திய இந்த பெரும் தொற்றானது, முதலாளித்துவ சமுதாயத்தின் ஊடாக இடம்பெற்று வரும் வரலாற்று நெருக்கடியை வெளிப்படுத்தும் ஒரு தூண்டுதல் நிகழ்வாக இருக்கிறது.

2018 முதல், பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிராக முன்னோடியில்லாத வகையில் அணிதிரண்டு பெருக்கெடுக்கும் அலைகள் உலகை உலுக்கி வருகின்றன. வர்க்கப் போராட்டத்தின் இந்த சர்வதேச எழுச்சியில் "மஞ்சள் சீருடை" இயக்கம் மற்றும் பிரான்சில் மே 68க்குப் பின்னர் மிக நீண்ட போக்குவரத்து வேலைநிறுத்த இயக்கம் ஆகியவை இடம்பெற்றன. 1970 களின் பின்னரான அமெரிக்காவில் ஆசிரியர் மற்றும் வாகனத்துறை வேலைநிறுத்தங்களின் முதல் அலை; சமூக ஊடகங்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போர்த்துகீசிய செவிலியர்களின் வேலைநிறுத்தம்; 1989 ல் ஸ்ராலினிசத்தினால் முதலாளித்துவத்துவ புனருத்தாரணம் செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற போலந்து ஆசிரியர்களின் முதல் தேசிய வேலைநிறுத்தம்; அல்ஜீரியா, லெபனான், ஈராக், இந்தியா, பொலிவியா அல்லது சிலியில் இடம்பெற்ற வெகுஜன எழுச்சிகள் ஒரு புதிய சகாப்தத்தை முன்னறிவித்தன.

1989 மற்றும் 1991 க்கு இடையில் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளால் முதலாளித்துவத்தினை புனருத்தாரணம் செய்த நிகழ்வுகளுடனும், 1992 இல் மாஸ்ட்ரிச் உடன்படிக்கையினாலும் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் திவால்நிலையை இந்த பெரும்தொற்று வெளிப்படுத்திக்காட்டியது. 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் நடமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கை மற்றும் வங்கிகளின் மீட்பு நடவடிக்கைகளால் சுகாதார அமைப்புகள் அழிக்கப்பட்டதன் விளைவு, மருத்துவ ஊழியர்களுக்கு போதுமான முகமூடிகளைக் கூட வழங்க முடியவில்லை. தொழிலாளர்களின் பெரிய அடுக்குகள் -செவிலியர்கள், பருவகால விவசாயிகள், சாலை ஊழியர்கள், பொருட்களை விநியோகம் செய்பவர்கள், காசாளர்கள்- போன்றவர்கள் "அத்தியாவசியமானவர்கள்" ஆக இருப்பதுடன் மற்றும் மிக குறைந்த சம்பளம் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதை எதிர்ப்பதென்பது ஒரு சோசலிசப் புரட்சிக்கான முதல் படியாகும், அது மட்டுமே தொழிலாளர்களுக்கு அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், COVID-19 இல் இருந்து மனித குலத்தினை பாதுகாக்கவும் அவசியமான அரசியல் சக்தியை வழங்கும். ஆகையால் PES பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

• முதியவர்கள், கைதிகள் மற்றும் அகதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, அனைவருக்கும் தரமான பராமரிப்பு மற்றும் உணவுக்கான வேறுபாடு இல்லாமல் அணுகல் இருக்கவேண்டும். அனைத்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு வசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியையும் விடுவிக்கப்டவேண்டும்.

• வேலை இழப்பினை இல்லாமல் செய்யவேண்டும் அல்லது சிறு வணிகங்களின் மூடலை தடுக்க வேண்டும், பெரும் தொற்றின்போது ஊதியக் குறைப்புக்கள் இருக்கக்கூடாது அல்லது எந்த சமூக உரிமைகளும் கைவிடப்படக்கூடாது.

• பணியிடங்கள் மற்றும் தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைத்தல் வேண்டும்.

• அனைத்து பெரிய நிறுவனங்களையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கல் மற்றும் 2008 க்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட அல்லது 2020 இல் தொடங்கப்பட்ட மீட்புத் திட்டங்களால் சேமிக்கப்பட்ட மிகப்பெரும் செல்வங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

நிதி ஆளும்தட்டின் நலன்களுக்காக மில்லியன் கணக்கான மக்களின் இறப்புகளுடன் விளையாடும் ஒரு சமூக ஒழுங்கு பேணப்படுவது கண்டனத்திற்குரியதாகும். மக்ரோன் மற்றும் முதலாளித்துவ சம்மேளனமான Medef அல்லது முதலாளித்துவ பிரபுத்துவத்துடன் சமரசம் செய்வதற்கு எதுவும் இல்லை. பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எதிர்ப்பை தொழிலாளர்கள் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச அரசியல் இயக்கத்துடன் இணைக்கவும் இலாபத்திற்காக அல்லாமல் பொருளாதார வாழ்க்கையை சமூக தேவைகளின் அடிப்படையில் மறுசீரமைக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும் PES போராடுகிறது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கியெறிந்து, அதை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளால் பதிலீடு செய்வது அவசிமான ஒன்றாக இருக்கிறது.

Loading