கோவிட்-19 தொற்றுநோய் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மனித உயிர்கள் மீது கொண்டுள்ள அலட்சியம் மற்றும் இயலாமையை அம்பலப்படுத்தியதன் மூலமாக, கோவிட்-19 தொற்றுநோய் பரந்தளவில் வர்க்க மோதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இத்தாலியில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரேசில் வரையில் தொழிலாளர்கள், பாதுகாப்பு சாதனங்கள் கோருவதற்கும் மற்றும் வீட்டில் தங்குவதற்கான உரிமையைக் கோருவதற்காகவும் இந்த வசந்தகாலத்தில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புகளின் ஓர் அலையைத் தொடங்கினர். அரசாங்கங்களும், வங்கிகளும், தொழிற்சங்கங்களும் போதுமான பரிசோதனைகள் அல்லது பாதுகாப்பு இல்லாமலேயே தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்வதற்காக அரசியல்ரீதியில் குற்றகரமான ஒரு பிரச்சாரத்தை சர்வதேச அளவில் ஒழுங்கமைத்த நிலையில், இந்த தொற்றுநோய் நீண்ட காலமாக பொய்யாக "இடது" என்று ஆளும் வர்க்கம் சந்தைப்படுத்தி வந்துள்ள ஏகாதிபத்திய-சார்பு நடுத்தர வர்க்க குழுக்களின் முகத்திரைகளைக் கிழித்து வருகிறது.

பாரிய உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும் கொள்கைகளுக்கு உடந்தையாய் உள்ள இத்தகைய கட்சிகள் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களுடன் அரசியல்ரீதியிலும் அமைப்புரீதியிலும் முறித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே தொழிலாளர்களால் இந்த தொற்றுநோயை எதிர்த்து போராட முடியும். இது, பிரான்சின் பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA), ஸ்பெயினின் பொடேமோஸ் அரசாங்கத்தின் முதலாளித்துவ-எதிர்ப்பாளர்கள், டென்மார்க்கின் சிவப்பு-பச்சை கூட்டணி (RGA), பிரேசிலில் சோசலிச மற்றும் சுதந்திரக் கட்சி (PSOL), இலங்கையில் நவ சம சமாஜ கட்சி மற்றும் அமெரிக்காவில் சோசலிச நடவடிக்கை உட்பட குட்டி முதலாளித்துவ கட்சிகளின் ஒரு கூட்டணியால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட "இப்போது சுற்றுச்சூழல்-சோசலிசத்திற்கு மாறுவதை கட்டியெழுப்புவோம்" (Let’s build the transition to ecosocialism now) என்ற பிற்போக்குத்தனமான அறிக்கை உருவெடுத்துள்ளது.

அவர்கள் “நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக்குழு" (Executive Bureau of the Fourth International – EBFI) என்று தங்களை காட்டிக் கொள்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை, அதாவது மார்க்சிச சர்வதேசியவாதத்தை, நோக்கிய அவர்களின் விரோதம் நடைமுறையளவில் சுய-நிரூபணமாக வெளிப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிற்போக்குத்தனமான கொள்கை மீதும்; சீனாவுக்கு எதிரான போர் பிரச்சாரத்தின் மீதும் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள வெறுப்பூட்டும் அளவிலான வங்கி பிணையெடுப்பு மீதும்; அல்லது இந்த தொற்றுநோயால் தூண்டிவிடப்பட்ட பொருளாதார பொறிவுக்கு மத்தியில் பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கை திட்டங்களுக்கு செவிகொடாமல் மவுனம் காக்கிறது. அதற்கு பதிலாக, நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு பில்லியன் கணக்கானவர்களுக்கு உலகெங்கிலும் உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு சென்று கொண்டிருக்கும் உலகளாவிய வினியோக சங்கிலி மீது ஒரு தேசியவாத, பின்தங்கிய-பார்வை கொண்ட ஒரு தாக்குதலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

“கோவிட்-19 நவ-தாராளவாதத்தின் ஒரு தொற்றுநோய், முதலாளித்துவத்தின் இந்த பூகோளமயப்பட்ட கட்டத்தின் விளைபொருள். நவதாராளவாத பூகோளமயமாக்கலால் உந்தப்பட்ட முதலாளித்துவம் இந்த ஒட்டுமொத்த புவி மீதும் அதன் கவசத்தை விரிவாக்கி உள்ளது. அவற்றின் இலாபங்களை அதிகரித்துக் கொள்வதற்காக பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உலகளாவிய உற்பத்தி சங்கிலிகள், இந்த மிகச் சிறிய நெருக்கடிக்கு ஒவ்வொரு நாட்டையும் பாதிப்பதுடன், அவற்றை தாங்கிப் பிடித்துள்ள அதீத-இடம்பெயர்வுமுறை (hyper-mobility) எந்தவொரு மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயங்குமுறையையும் ஒன்றுமில்லாது செய்துவிடுகிறது. படிமான எரிபொருள்களின் பயன்பாடும் மிகப்பெரிய முதலாளித்துவ விவசாய முறையும் என இவற்றின் அடிப்படையில், இயற்கையுடன் கொண்டுள்ள ஒரு சூறையாடும் உறவுமுறை, அதன் பசுமை பாலைவனங்களுடன் சேர்ந்து, புவியின் அமைப்பு முறையினது அடிப்படை சுழற்சிகளின் சமநிலைமை (கார்பன், நீர், நைட்ரஜன்) மற்றும் நாம் வெறும் ஒரு பாகமாக இடம் பெற்றிருக்கும் இந்த உயிர்வாழ் வலையமான இந்த உயிர்கோளத்தில் மனித உயிர்களினது உறவுகள் இரண்டையும் அழித்து வருகிறது.” என அதில் குறிப்பிடுகின்றனர்.

கோவிட்-19 தொற்றுநோய், பூகோளமயமாக்கலுக்கும் மற்றும் இயற்கையுடனான தொழில்துறையின் அநீதியான உறவுக்குமான தண்டனை என்ற வாதம் ஒரு பொய்யாகும். SARS-COV-2 கொரொனா வைரஸ் இந்த தொற்றுநோயை ஏற்படுத்தியது என்றாலும் அதன் வீச்செல்லை மற்றும் பாதிப்புக்கான பொறுப்பு முதலாளித்துவ அரசாங்கங்களையே சாரும், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களையே சாரும். அவை வீட்டிலேயே தங்கி இருப்பதற்கான கொள்கைகளுக்கு உரிய நேரத்தில் நிதி வழங்கவில்லை, அதற்கு பதிலாக அவை ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் யூரோக்களை வங்கிகளுக்குப் பிணையெடுப்புகள் வழங்க கையளித்தன. இது நூறாயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கும் அந்த வைரஸ் இன்னும் அதிகமாக பரவுவதிலும் போய் முடிந்தது. உரிய காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்புவது இன்னும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கும்.

சர்வதேச தொழில்துறையும் விஞ்ஞானமும் இந்த தொற்றுநோய்க்குக் காரணமல்ல. மாறாக அவை தொழிலாள வர்க்கம் இதை எதிர்த்து போராடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளாகும். 1970 களுக்குப் பின்னர் இருந்து சர்வதேச பயணம் என்பது பரந்தளவில் அதிகரித்துள்ளது, கம்பியூட்டர், சரக்கு நிரப்பும் கொள்கலன் மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பத்தால் நாடுகடந்த தொழில்துறை உற்பத்தியின் எழுச்சி சாத்தியமானது. இது நோய்கள் பரவுவதை ஆரம்பத்தில் தீவிரப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் பூகோளமயமாக்கல் தான் இந்த தொற்றுநோய்க்குக் காரணம் என்று முடிவு செய்வது அர்த்தமற்றதாகும். SARS-COV-2 போன்ற மிகவும் வேகமாக தொற்று ஏற்படுத்தும் வைரஸ், நவீன பயணங்கள் மற்றும் வர்த்தகம் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் கூட சர்வதேச அளவில் பரவக்கூடும். 1918 சளிக்காய்ச்சல் தொற்றுநோய், மத்திய காலங்கள் அல்லது ரோமன் சாம்ராஜ்ஜியம் வரையிலும் கூட பின்னால் சென்று பார்த்தால், சின்னம்மை, சளிக்காய்ச்சல், காலரா அல்லது பிளேக் போன்ற தொற்றுநோய்கள் சர்வதேச அளவில் பரவி, மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளன.

இத்தகைய முந்தைய சகாப்தங்களுடன் ஒப்பிடுகையில், 21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு ஆச்சரியமூட்டும் அளவுக்கு ஒரு தொற்றுநோய்க்கு எதிராக ஒன்றுதிரட்டுவதற்கு விஞ்ஞான மற்றும் உற்பத்தி ஆற்றல்களை வழங்குகிறது. ஒரு சில வாரங்களிலேயே, விஞ்ஞானிகளின் சர்வதேச குழுக்கள் SARS-COV-2 ஐ அடையாளம் கண்டு, அதன் மரபணு வடிவத்தைப் பிரசுரித்து கோவிட்-19 க்கான சிகிச்சை பரிசோதனைகளை வழங்கினர். அது பரவும் விதங்கள் கண்டறியப்பட்டன. பூகோளமயப்பட்ட தொழில்துறை என்பது டஜன் கணக்கான நாடுகள் பாதுகாப்பு சாதனங்களையும், செயற்கை சுவாச கருவிகள் மற்றும் மருந்துகளை உருவாக்க முடியும் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது, இதற்கு முன்னர் ஏகாதிபத்திய மையங்களுக்கு வெளியே பாரியளவில் உற்பத்தி செய்வதென்பது சிரமமானதாக இருந்தது. பில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு அதுபோன்ற ஆதார வளங்களை திரட்ட வேண்டுமென நியாயபூர்வமாக எதிர்பார்க்கின்றனர் மற்றும் கோருகின்றனர்.

சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொருளாதார ஆதார வளங்களைப் பயன்படுத்தும் பணியை நேரடியாகவும் அவசரமாகவும் முன்னிறுத்தியதன் மூலமாக, இந்த தொற்றுநோய் இப்போதிருக்கும் சமூக ஒழுங்குமுறையைச் சோதனைக்கு உட்படுத்தி உள்ளது. சமூக தேவைகளுக்கு அல்லாமல் தனியார் இலாபத்திற்காக பொருளாதாரத்தை ஒழுங்கமைக்கும் முதலாளித்துவம் வெறுக்கத்தக்களவில் தோல்வி அடைந்துவிட்டது. 2002 SARS தொற்றுநோய்க்குப் பின்னர் அண்மித்து இரண்டு தசாப்தங்களாகவே இதுபோன்றவொரு உயிர்கொல்லி நோயின் அபாயம் குறித்து ஆளும் வட்டாரங்களில் நன்கறியப்பட்டிருந்தது. இருந்தும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளுக்கான வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு பெரிதும் கைவிடப்பட்டிருந்தது. இந்தாண்டு, செல்வந்த நாடுகளிலேயே கூட, மக்களுக்கான பரிசோதனை, சுவாசக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாராக வைத்திருக்கவில்லை. இந்த போராட்டத்தில் முன்னிலையில் நின்ற மருத்துவப் பணியாளர்கள் உட்பட பெரும்பாலும் முகக்கவசங்கள் கூட கிடைக்கவில்லை.

முதலாளித்துவத்தின் உற்பத்தி சக்திகளினது அபிவிருத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது என்ற உண்மை, ஐயத்திற்கிடமின்றி, மற்றொரு முக்கிய முதலாளித்துவ தோல்வியாகும். வேளாண்மைவணிகம் நாசகரமான வெளிப்பாடுகளின் விடயமாக உள்ளது மற்றும் எரிசக்தியை உருவாக்குவதற்காக படிமான எரிபொருட்களை (fossil fuels) எரிப்பது முன்னொருபோதும் இல்லாதளவில் பூகோள வெப்பமயமாதலை தூண்டிவிட்டுள்ளது. ஆனால் இவை உலகளாவிய பிரச்சினைகள், ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யவும், மாசுபாட்டை தவிர்க்கவும் மற்றும் பூகோள வெப்பமயமாதலை தடுக்கவும் சர்வதேச அளவில் விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆதாரவளங்களை அணிதிரட்டுவது அவசியமாகும். பூகோளமயமாக்கலுக்கு முந்தைய சகாப்தத்திற்கு கடிகாரத்தை திருப்புவதற்கு அழைப்பு விடுப்பதன் மூலமாகவோ, பெரியளவில் விவசாயத்தை நிறுத்துவது அல்லது தேசிய அரசு எல்லைகளுக்குள் பொருளாதார பரிவர்த்தனைகளை மட்டுப்படுத்தற்கு அழைப்பு விடுப்பதன் மூலமாகவோ இதுபோன்ற பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது.

உலகளாவிய தொழில்துறையை ஒரு திட்டமிட்ட, விஞ்ஞானபூர்வமாக வழிநடத்தும் விதத்தில் பயன்படுத்துவதற்காக அணித்திரட்டக்கூடிய சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். தங்களின் வேலையிடங்களிலும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைப்பதன் மூலமாகவும், அவை வேலையிட பாதுகாப்பை மட்டுமல்ல, மாறாக தொழில்துறையைக் கட்டுப்பாட்டில் எடுத்து இலாபங்களுக்காக அல்லாமல் மருத்துவத்துறை விஞ்ஞானத்திற்காக என்ற அடிப்படையில் இந்த வைரஸிற்கு எதிராக ஓர் உலகளாவிய போராட்டத்தைத் தொடங்குவதற்காக அதை பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்தும். ஆனால் நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து, அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசத்தைக் ஸ்தாபிப்பதற்கான ஒரு சர்வதேச போராட்டமே இதன் அர்த்தமாகும். இதற்கு, குறிப்பாக, நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நடுத்தர வர்க்க கல்வியாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் ஊடக செயல்பாட்டாளர்களின் பிற்போக்குத்தனமான அடுக்குகளுடன் நனவுபூர்வமாக அரசியல்ரீதியில் உடைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் "சுற்றுச்சூழல் சோசலிசம்" என்பது வேறொன்றுமில்லை வங்கி பிணையெடுப்புகளுக்கான அதன் ஆதரவையும் ஆளும் வர்க்கத்தின் ஏனைய வலதுசாரி கொள்கைகளையும் மூடிமறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பசுமை மூடுதிரையாகும். அது குறிப்பிடுகிறது, “இந்த சூழ்நிலையில், பெரும் பெரும்பான்மை அரசாங்கங்கள் அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளன. நவதாராளவாதம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் வடிவம் மற்றும் சாராம்சத்தைத் தாக்கும் நடவடிக்கைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.” பாரிய வேலைநீக்கங்களுக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் கூட, அது தொழில்துறையை பின்வருமாறு கூறி கண்டிக்கிறது: “முதலாளித்துவ உற்பத்தியின் கணிசமான பகுதி கடுமையாக கொள்ளையடிப்பதையும், முற்றிலும் மிதமிஞ்சியும், வீணாகவும் உள்ளது என்பதை இந்த தற்போதைய நெருக்கடி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.” “அரசியல் விருப்பத்தை பொறுத்து ஒப்பீட்டளவில் குறுகியகால அளவில் பாரிய தொழில்துறை மறுசீரமைப்பை செய்ய முடியும்,” என்றது சேர்த்துக் கொள்கிறது.

முதலாளித்துவ அரசுகளின் பிணையெடுப்புகளும் வேலைவாய்ப்பின்மைக்காக வழங்கப்படும் காப்பீட்டுத் தொகைகளும் முதலாளித்துவத்தின் சாராம்சத்தையே தாக்குவதாக இத்தகைய பாசாங்குக்காரர்கள் சூசகமாக குறிப்பிடுகின்றனர். இந்த தொற்றுநோய் "கணிசமானளவுக்கு குறைக்கப்பட்ட வேலை நேரங்களிலேயே அத்தியாவசிய பண்டங்களை உருவாக்க முடியும், கூலிகள் மற்றும் வருவாய் உத்தரவாதங்களும், மருத்துவ மற்றும் அனைவருக்கும் கல்வியும் ஒரு இடைமருவு ஆட்சியில் முற்றிலும் சாத்தியமே, இதில் எரிசக்தியும் உற்பத்தி முறைகளும் முற்றிலும் பிரதியீடு செய்யப்படுகின்றன, தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரிவுகள் ஒரு சுற்றுச்சூழல் சோசலிச பரிமாற்றத்திற்கு பொருந்திய வித்தியாசமான பொருளாதார துறைகளுக்கு மாற்றப்படுகின்றன... என்பதை [இந்த தொற்றுநோய்] எடுத்துக்காட்டுகிறது" என்றவர்கள் வாதிடுகின்றனர்.

என்னவொரு மோசடி. இந்த தொற்றுநோய், இப்போதிருக்கும் இந்த ஒழுங்கமைப்பானது முற்போக்கான மாற்றத்திற்குச் சாத்தியமானது என்பதை எடுத்துக்காட்டவில்லை, மாறாக அதன் திவால்நிலைமையை, அதன் மனிதாபிமானமற்றத்தன்மையை மற்றும் அது தூக்கியெறியப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டி உள்ளது.

அனைவரும் மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதை உறுதிப்படுத்துவதில் இருந்து வெகுதூரம் விலகி, முதலாளித்துவ அரசாங்கங்கள் மில்லியன் கணக்கானவர்களை கவனிப்பின்றி வீடுகளில் விட்டுள்ளதுடன், காட்டுமிராண்டித்தனமான வயது காரணியை அடிப்படையாக காட்டி வயதானவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை வழங்க மறுத்துள்ளது. இப்போது அவை இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்ய நிர்பந்தித்து வருகிறது. செல்வ செழிப்பான ஐரோப்பிய நாடுகளில், ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் வங்கி பிணையெடுப்புகளுக்கு வாரியிறைக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்களோ அற்பமான சில சலுகைகளில் உயிர் வாழ்கிறார்கள், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியில் உள்ளனர் அல்லது தொழிலாள வர்க்க மாவட்டங்களின் பிரதான நகரங்களில் அறக்கட்டளைகளைச் சார்ந்துள்ளனர். சர்வதேச அளவில், ஒரு கால் பில்லியன் மனித உயிர்கள் உலகளாவிய விவசாயம் மற்றும் வர்த்தகம் தொந்தரவுக்கு உள்ளானதாலும் மற்றும் நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழக்கும் ஆபத்தில் இருப்பதாலும் பட்டினியில் விடப்படும் ஆபத்தில் உள்ளனர்.

இந்த தொற்றுநோய் நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் சுற்றுச்சூழல் சோசலிசத்தையும் மற்றும் அதுபோன்ற போலி-இடது குழுக்களின் ஒட்டுமொத்த பரிவாரங்களையும் அம்பலப்படுத்தி உள்ளது. அது வர்க்க அரசியல், சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தை மறுத்துரைக்க சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைச் சாதகமாக்கி கொள்கிறது. குட்டி முதலாளித்துவ, மார்க்சிச-விரோத குழுக்களால் "முதலாளித்துவ எதிர்ப்பு" மூலோபாயம் என்று இன்னமும் அது மோசடியாக சந்தைப்படுத்தப்படுகிறது என்றால், சோசலிச அரசியல் அல்லது தொழிலாள வர்க்க அரசியல் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அதற்கும் இடது சாரி அரசியலுக்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை.

1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) இருந்து உடைத்துக் கொண்டும் மற்றும் நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் அரசியல் முன்னோடிகள் ட்ரொட்கிசத்திலிருந்து முறித்துக் கொண்டும் 75 வருடங்களாகி விட்டது. பாசிசவாதம் அல்லது காலனித்துவத்திற்கு எதிராக 1940 களின் பாரிய புரட்சிகர இயக்கங்களில் மேலோங்கி இருந்த ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளுக்குள் நான்காம் அகிலத்தை அரசியல்ரீதியில் கலைத்து விடுவதற்கு, மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில், அவர்கள் கோரினர். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து அவ்விதத்தில் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் தீர்க்கமான பகுதிகளில் முதலாளித்துவ ஆட்சியை இத்தகைய கட்சிகள் காப்பாற்றிய இந்த பப்லோவாதிகள், போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கமைப்புக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டனர்.

அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டத்தைப் பப்லோவாதிகள் நிராகரித்ததால், வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் மற்றும் 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு முன்னர் 1960 களில் மேலெழுந்த இளைஞர் இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ அடுக்குகளிடையே ஆதரவாளர்களை அவர்கள் வென்றெடுத்தார்கள். நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் கட்சிகளின் முன்னணி பிரமுகர்கள் பெரிதும் இந்த தலைமுறையின் உறுப்பினர்களாவர், அவர்கள் பாலின, இனவாத மற்றும் வம்சாவழி சார்ந்த அடையாள அரசியலை அடிப்படையாக கொண்ட பப்லோவாத இயக்கத்தால் நியமிக்கப்பட்டவராவர். இந்த கண்ணோட்டம் பசுமை கட்சி அரசியலின் பல்வேறு வடிவங்களை அபிவிருத்தி செய்து வரும் மார்க்சிச-விரோத குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகளுடன் அணி சேர்ந்து கொள்ள அவர்களைத் தள்ளி சென்றது.

ஆண்ட்ரே கோர்ஸ் (André Gorz) இன் 1964 படைப்பான, தொழிலாளர்கள் மூலோபாயமும் நவ-முதலாளித்துவமும் என்பதில் இத்தகைய கருத்துருக்கள் வெளியிடப்பட்டிருந்தன. பாட்டாளி வர்க்கத்திற்குப் பிரியாவிடை (Farewell to the Proletariat) என்று தலைப்பிட்டு மார்க்சிசம் மீதான ஒரு தாக்குதலை 1980 இல் பிரசுரித்த பிரெஞ்சு-ஆஸ்திரிய பின்நவீனத்துவவாதியான கோர்ஸ், சுற்றுச்சூழல் அரசியலுக்கு ஓர் ஆதரவாளராக இருந்தார். “முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் இருந்து" கொண்டே சுற்றுச்சூழல் கொள்கை போன்ற "கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன்… சமூகத்தைத் தீவிரமாக மாற்றுவதற்கு" இடது முன்மொழிவுகளை வைக்க வேண்டுமென அவர் எழுதினார். முதலாளித்துவத்தின் கீழ் வெளிப்படையாக சீர்திருத்தங்களுக்கு வக்காலத்துவாங்குகின்ற நிலையில், அவை புரட்சிகரமானவை என்றும், அல்லது சோசலிச நடவடிக்கை என்றுமே கூட கோர்ஸ் வாதிட்டார்: “இது அவசியமாக சீர்திருத்தவாதம் அல்ல ... அப்போது நடைமுறையிலுள்ள சமூக அல்லது நிர்வாக அமைப்பினுள் சாத்தியமானதை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தங்களைக் கோருவது அல்ல, ஆனால் மனித தேவைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் என்ன சாத்தியமாக்கப்பட வேண்டும் என்பதே" என்றார்.

கோர்ஸ் தத்துவார்த்தரீதியில் நனவுபூர்வமான அரசியல் எரிச்சலூட்டும் ஒரு வடிவத்தை உருவாக்கி வந்தார்: முதலாளித்துவ ஆட்சியை தொடர்வதற்கு ஆதரித்த அதேவேளையில், அவர் முன்மொழிந்த கோரிக்கைகளை இந்த சமூக அமைப்புமுறைக்கு உள்ளேயே நிறைவேற்ற முடியும் என்றவர் முன்னெடுத்தார். அவரது தத்துவத்தை "தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு முற்போக்கு மூலோபாயம் என்றும், அது பிந்தைய கட்டத்தில் அதிகாரத்தைப் புரட்சிகரமாக கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறை அல்லது அனேகமாக அவசியத்தை விட்டுவிடவில்லை என்றும்" அவர் தெளிவற்ற முறையில் குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தொலைதூரத்திற்கு, காலவரையற்ற எதிர்காலத்திற்குப் புறக்கணிக்க அவர் உத்தேசித்திருப்பதற்கு இது கோர்ஸின் சமிக்ஞை அளிக்கும் விதமாக இருந்தது. நடைமுறையில், இது என்ன அர்த்தப்படுத்தியது என்றால் பல்வேறு முதலாளித்துவ வர்க்க அல்லது குட்டி முதலாளித்துவ வர்க்க கட்சிகள் தீவிரமான கோரிக்கைகளுக்காக போராடும் எந்த உத்தேசமும் இல்லாமல் அத்தகைய கோரிக்கைகளை முன்னெடுப்பது போன்ற முழக்கங்கள் மூலமாக அவற்றின் பிற்போக்குத்தனமான அரசியலை மூடிமறைக்க அவற்றுக்கு பச்சைக் கொடி காட்டுவதாக இருந்தது.

1968 க்குப் பின்னர், இதுபோன்ற மோசடி எழுத்துக்கள் பப்லோவாத அமைப்புகளுக்கும் 1971 இல் ஸ்தாபிக்கப்பட்ட பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி, 1974 இல் ஸ்தாபிக்கப்பட்ட கிரீஸின் பான்ஹெல்லெனிக் சோசலிச இயக்கம் (PASOK) மற்றும் 1980 இல் ஸ்தாபிக்கப்பட்ட பிரேசிலின் தொழிலாளர் கட்சி போன்ற புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்க கட்சிகளின் ஒரு தொகுப்புக்கும் இடையிலான கூட்டணிகளுக்கு தத்துவார்த்தரீதியிலான நியாயப்பாடுகளை வழங்கியது. இத்தகைய முதலாளித்துவ கட்சிகள் ஆதரவை வென்றெடுப்பதற்காக தீவிர, “சோசலிச" அல்லது சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு வாக்குறுதி அளித்தன. ஆனால் பின்னர் அதிகாரத்திற்கு வந்ததும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றின் வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்தன. எவ்வாறிருப்பினும் ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத கட்சிகளால் முட்டுக் கொடுக்கப்பட்ட அவை, தசாப்தங்களாக முதலாளித்துவ அரசியலில் முன்னணி பாத்திரம் வகித்தன.

ஆனால் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கத்திற்கும் இந்த ஊழல்பீடித்த அரசியல் அமைப்புக்கும் இடையிலான விரோதம் ஒடுக்குவதைச் சாத்தியமற்றதாக ஆக்கி உள்ளது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டமை அதன் எதிர்புரட்சிகர பாத்திரம் குறித்து லியோன் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளை முழுமையாக நிரூபித்துக் காட்டின. சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சமூக கோபம் மற்றும் அரசியல் ஏமாற்றத்திற்கு மத்தியில், சம்பவங்கள் பப்லோவாத அமைப்புகளின் போலி-இடது அரசியலுக்கு ICFI இன் கோட்பாட்டுரீதியிலான எதிர்ப்பையும் முழுமையாக நிரூபித்துக் காட்டியது.

அதன் 2009 ஸ்தாபக மாநாட்டில், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ட்ரொட்ஸ்கிசத்துடனான ஓர் அடையாள தொடர்பைக் கூட உத்தியோகபூர்வமாக கைவிட்டு, சோசலிஸ்ட் கட்சியுடன் ஏற்கனவே இருந்த அதன் நெருக்கமான நீண்டகால தொடர்புகளைப் புகழ்ந்துரைத்தது. இது வலதுசாரி கொள்கைகளை உத்வேகத்துடன் NPA தழுவுவதற்கு இருந்த கடைசி சித்தாந்தரீதியிலான தளைகளையும் நீக்கியது. முன்னணி NPA உறுப்பினர் பிரான்சுவா சபாடோ, வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், 2009 இல் வெறுப்பூட்டும் அளவிற்கான ஐரோப்பிய வங்கி பிணையெடுப்புகளை அதிகரிக்குமாறு அழைப்பு விடுத்து, அதற்கு விடையிறுத்தார்: “நோபல் விருது வென்ற பொருளாதார நிபுணர் போல் குரூக்மன் கருத்துப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு அதிகமாக பிணையெடுப்பு வழங்கும் ஒபாமாவின் திட்டம் பின்னடைவால் ஏற்படக்கூடிய பாதிப்பில் பாதியை மட்டுமே கையாளும். … அதை மென்மையாக கூறுவதானால், ஐரோப்பிய பிணையெடுப்புகள் அளவில் மிகவும் குறைவாக உள்ளன: பிரிட்டனில் GDP இல் 1.3 சதவீதம், பிரான்சில் 1 சதவீதம், ஜேர்மனியில் 0.8 சதவீதம், இத்தாலியில் 0.1 சதவீதம்.”

“வங்கிகளைக் காப்பாற்றுவதற்கும், தொழில்துறை மற்றும் நிதியியல் ஒருமுனைப்புக்காகவும், மறுகட்டமைப்புக்கும், பொருளாதாரத்தில் அரசின் அதிக தலையீடாக" 2009 பிணையெடுப்புகளை சபோடா வரவேற்றார். “ரீகன் மற்றும் தாட்சரின் 'இன்னும் குறைவாக ஆட்சிபுரியும்' சுதந்திர சந்தை கொள்கையை ஒப்பிடுகையில் அதுவொரு மாற்றமாகும்,” என்றார்.

உண்மையில், ட்ரில்லியன் கணக்கிலான டாலரும் யூரோவும் பெருஞ்செல்வந்தர்களுக்கு கையளிக்கப்பட்டமை தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னொருபோதும் இல்லாத மூர்க்கத்தனத்துடன் ஒரு சர்வதேச தாக்குதலைச் சமிக்ஞை செய்வதாக இருந்தது. சர்வதேச அளவில், நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் கட்சிகள் தங்களை அணி சேர்த்துக் கொண்டுள்ள சமூக-ஜனநாயக அல்லது தேசியவாத கட்சிகள், அவற்றின் சிக்கன கொள்கைகளால் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் சீற்றத்திற்கு மத்தியில் பொறிந்து போயிருந்தன. பசோக் (PASOK) 2015 இல் வாக்காளர்களை இழந்து ஒரு சிறிய தொங்குதசையாக ஆகிவிட்டது, இதை 2017 இல் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பின்தொடர்ந்தது, பிரேசிலில் தொழிலாளர் கட்சி பொறிந்து போன பின்னர் 2016 இல் ஒரு வலதுசாரி ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அது அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டது.

அதற்குப் பின்னர் இருந்து, ஆளும் வர்க்கம் தொழிலாளர்களுக்கு எதிராக கூலிகள் மீது போர் தொடுக்கவும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகரித்தளவில் பப்லோவாத நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் கட்சிகள் போன்ற போலி-இடது கட்சிகளை அரசு எந்திரத்திற்குள் ஒருங்கிணைத்து கொண்டுள்ளது. அவை லிபியாவுக்கு எதிரான 2011 நேட்டோ போரையும், சிரியாவில் "கிளர்ச்சி" குழுக்களை ஆயுதமேந்த செய்வதிலும், 2014 இல் உக்ரேனில் உள்நாட்டு போரை விளைவித்த நேட்டோ-தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையையும் ஆதரித்தன. 2015 இல், நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழு அதன் கிரேக்க கூட்டாளியான சிரிசா (“தீவிர இடதின் கூட்டணி”) தேர்ந்தெடுக்கப்பட்டதைப் புகழ்ந்து பாராட்டியது, அதுவோ கடுமையான சமூக வெட்டுக்களைத் திணித்ததுடன், பாரிய அகதிகள் தடுப்பு முகாம்களை அமைத்தது. ஐரோப்பாவில் இரண்டு நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் கட்சிகள் சிக்கன நடவடிக்கை அரசாங்கங்களாக உள்ளன: ஸ்பானிஷ் Anticapitalistas கட்சி, பொடேமோஸ்-ஸ்பானிஷ் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் இணைந்தது, அதேவேளையில் RGA டேனிஷ் அரசாங்கத்தின் நாடாளுமன்ற கூட்டணியின் பாகமாக உள்ளது.

வலதுசாரி கொள்கைகளைப் புகழ்ந்துரைத்து நடைமுறைப்படுத்துவதில் நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழு வகிக்கும் பாத்திரம், மார்க்சிசம் மீதான அதன் வன்முறையான விரோதத்தை முன்பினும் அதிக கூர்மையாக அது தெரிந்து வைத்திருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சில் பப்லோவாதத்தால் வென்றெடுக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் பிரான்சு-பிரேசிலிய NPA உறுப்பினரும் 2001 “சுற்றுச்சூழல் சோசலிச அறிக்கையின்" துணை ஆசிரியருமான பேராசிரியர் மிக்கேல் லோவி (Michael Löwy). முன்னாள் ஸ்ராலினிச பத்திரிகையான Mouvements உடனான 2012 நேர்காணல் ஒன்றில் சுற்றுச்சூழல் சோசலிசம் குறித்து விவாதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபோது, லோவி பதிலளித்தார்: “நிச்சயமாக, சுற்றுச்சூழல் சோசலிசம் 20 ஆம் நூற்றாண்டின் சோசலிசங்கள் என்றழைக்கப்படுவதுடனும், சமூக-ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்துடனும் ஐக்கியம் கொண்டதில்லை. அது மார்க்சிசத்தின் மட்டுப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தவும் விமர்சனத்திற்குட்படுத்தவும் அழைப்பு விடுக்கிறது.”

மார்க்சிசத்தின் "மட்டுப்படுத்தல்கள்" என்று அவர் காண்பனவற்றில் ஒன்றை லோவி வலியுறுத்துகையில், ஒரு புரட்சிகர நெருக்கடி பற்றிய அதன் கருத்துருவும், மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகளது வளர்ச்சியிலிருந்து எழும் சோசலிச புரட்சியின் தவிர்க்கவியலாததன்மையே அது என்றார்: “'உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி' பற்றிய கருத்துரு மற்றும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அவற்றின் அபிவிருத்தியை முடக்கும் 'தடைகள்' அல்லது 'சங்கிலிகளாக' ஆகிவிடுகின்றன என்பதால் சோசலிசம் அதை ஒடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் மிக முக்கியமான மட்டுப்படுத்தல்களாக உள்ளன. சுற்றுச்சூழல் சோசலிசம், நிச்சயமாக இந்த கருத்துருவுடன் முறித்துக் கொள்கிறது,” என்றார்.

அவரின் சுற்றுச்சூழல் சோசலிசமானது "நேசமான முதலாளித்துவ எதிர்ப்புக்கான" அவரின் ஆதரவுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது என்பதையும் லோவி சேர்த்துக் கொள்கிறார். இதை அவர் "நவீன முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு கலாச்சார போராட்டம் என்றும் கடந்த காலத்தின் குறிப்பிட்ட மதிப்புகளின் பெயரில் தொழில்துறை நாகரீகமயமாக்கல்" என்றும் வரையறுக்கிறார். “இயந்திரமயமாக்கல் மீதான காதல்கொண்ட எதிர்ப்பு, கருவிகளைப் பகுத்தறிவார்ந்து பயன்படுத்துதல், திடமாக்குதல், சமூக உறவுகள் மற்றும் சமூக உறவுகளை பண்புமயப்படுத்துதலைக் கலைப்பது ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறது.”

இந்த தொற்றுநோய் இத்தகைய பின்தங்கிய-பார்வை கொண்ட, ஏகாதிபத்திய-சார்பு குட்டி முதலாளித்துவத்தின் அவநம்பிக்கையான அரசியலின் வரலாற்று திவால்நிலைமையை அம்பலப்படுத்துகிறது. தசாப்தங்களாக, தொற்றுநோய்களின் அபாயமும், பூகோள வெப்பமயமாதல் மற்றும் ஏனைய அவசர சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் அச்சுறுத்தலும் நன்கறியப்பட்டிருந்தன, இருப்பினும் நடைமுறையளவில் ஒன்றும் செய்யப்படவில்லை; கோவிட்-19 தொற்றுநோயினால் விலை கொடுக்கப்பட்ட மனித உயிர்கள் மட்டுமே சுலபமாக மில்லியன்களைக் கடந்து விடக்கூடும். இந்த முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கு எதிராக முதலில் சர்வதேச தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் உண்மையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது. ஆனால் அதுபோன்றவொரு போராட்டத்தைத் தொடுக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கம், நடுத்தர வர்க்கங்களின் போலி-இடது அமைப்புகளது "சுற்றுச்சூழல் சோசலிச" அரசியலில் இருந்து புரட்சிகர மார்க்சிசத்தைப் பிரிக்கும் வர்க்க இடைவெளியைத் தெளிவாக புரிந்து கொள்வதைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே இந்த தொற்றுநோய்க்கு முன்னரே, சமூக சமத்துவத்திற்கு எதிராக முன்னொருபோதும் இல்லாதளவில் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஓர் அலை கட்டவிழ்ந்து வந்தது. 2018 ஆம் ஆண்டு அமெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் பெருந்திரளான ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களையும், பிரான்சில் சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட "மஞ்சள் சீருடை" போராட்டங்களையும் கண்டது. 1989 இல் ஸ்ராலினிச ஆட்சி முதலாளித்துவத்தை மீட்டமைத்ததற்குப் பின்னர் போலாந்தில் தேசியளவில் ஆசிரியர்களின் முதல் வேலைநிறுத்தத்தைக் கடந்தாண்டு கண்டது, போர்ச்சுக்கீசிய செவிலியர்களால் சமூக ஊடகங்கள் மூலமாக வேலைநிறுத்தங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன, சூடான், அல்ஜீரியா, லெபனான், ஈராக், ஈக்வடோர், பொலிவியா, சிலி மற்றும் அதற்கு அங்காலும் பாரிய போராட்டங்கள் இருந்தன. ஸ்ராலினிச ஆட்சி சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்டமைத்ததன் தாக்கம் சர்வதேச வர்க்க போராட்டத்தையும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தையும் ஒடுக்க போதுமானதாக இருந்தது என்ற சகாப்தம் முடிந்துவிட்டது.

இப்போது, இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் வேலைக்குத் திரும்புவதற்கான கொள்கை சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டி சக்தி வாய்ந்த புதிய போராட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது. 2017 இல், அங்கே தொழில்துறையில் மட்டுமே அண்மித்து 1 பில்லியன் தொழிலாளர்கள் இருந்தனர். ஆசியா மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் பெருந்திரளான விவசாயிகள் வேலையைத் தேடி நகரங்களுக்குள் பயணித்ததால், தொழிலாள வர்க்கமானது 1980 க்கும் 2010 க்கும் இடையே 1.2 பில்லியன் அளவுக்கு அதிகரித்தது. இந்த தொற்றுநோய்க்கு எதிராக பகுத்தறிவார்ந்த, விஞ்ஞானபூர்வ திட்டத்தைத் திணிப்பதற்கான போராட்டம் நிதியியல் எதிரான விட்டுக்கொடுப்பற்ற எதிர்ப்பில் இனம், தேசியம் மற்றும் பாலினம் என்ற நிலைப்பாட்டைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகிறது.

இது முன்பினும் அதிகமான நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழு கட்சிகளுடன் தொழிலாள வர்க்கத்தை நேரடியான மோதலுக்குக் கொண்டு வருகிறது. அவை தொழிலாளர்களின் போராட்டங்களை ஆதரிக்கப்போவதில்லை, மாறாக அதற்கு அஞ்சுகின்றன — உண்மையில் இது "மஞ்சள் சீருடையாளர்களை" பிரெஞ்சு NPA ஆரம்பத்தில் “அதிவலது கும்பல்கள்" என்று கண்டித்ததில் பிரதிபலித்தது. ஆகவே தான் நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் அறிக்கை ஓர் இயக்கத்தை முன்மொழிகையில், அது தொழிலாள வர்க்கத்தை, எந்த விதமான தொழில்துறை நடவடிக்கையை, அல்லது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எந்த போராட்டத்தையும் கைவிட்டு விடுகிறது. அதற்கு பதிலாக, அவை "பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல்" சம்பந்தப்பட்ட முனைவுகளைப் பாராட்டி அது பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“விவசாயிகள், பழங்குடி மக்கள், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் உள்ள சமூகங்கள், பெண்ணிய நல்லிணக்க வலையமைப்புகள் போன்ற மக்களிடம் இருந்தும் மற்றும் இதுபோன்ற ஏனையவர்களிடம் இருந்தும் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் இருந்தும் வரும் இத்தகைய முனைவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. தொற்றுநோய் பரவாமல் தடுப்பதை உறுதிப்படுத்துவதற்காக மக்களுக்கு வழங்கும் பொருட்டு முகக்கவசங்களைக் கூட்டாக உற்பத்தி செய்வது, நன்கொடை மற்றும் உணவு உற்பத்திக்கான மாற்றீடு, பொது மருத்துவ முறையைப் பாதுகாப்பது மற்றும் அனைவரும் அதை பெறுமாறு கோருவது, தொழிலாளர் உரிமைகள் மற்றும் கூலிகளை உத்தரவாதப்படுத்துவதற்கான அவசியம், பெண்களுக்கு எதிரான வன்முறையின் தீவிரப்பாடு அதிகரிப்பதைக் கண்டிப்பது மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது மற்றவர்களுடன் சேர்ந்து கடுமையான கவனிப்பு வேலையைச் செய்வது போன்ற மிகவும் ஆர்வமான மாற்றீடுகளை இத்தகைய முனைவுகள் செய்து வருகின்றன.”

விவசாயிகள் கூட்டமைப்புகள், இனவாத அல்லது வம்சாவழி அடையாளம் சார்ந்த அமைப்புகள், பெண்ணிய குழுக்களை தொழிலாள வர்க்கத்திற்கான மாற்றீடுகளாக அணித்திரட்டும் இதுபோன்ற கொள்கைகள், இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கு அவர்களுக்கு போதுமானதில்லை. உணவை தொழிலாள வர்க்கம்தான் கொண்டு செல்கிறது, செயல்படுத்துகிறது, பிரதான தொழில்துறை உணவு சங்கிலியில் உணவைச் சந்தைப்படுத்துகிறது என்கின்ற நிலையில், உணவு "மாற்றீடுக்காக" அறக்கட்டளை நன்கொடைகளுக்காக தொழிலாளர்கள் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்? விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் குழுக்களின் உள்ளாட்சி இயக்கத்தின் மூலமாக மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கையையும் பொது சுகாதார முறை மீதான அதன் நாசகரமான தாக்கத்தையும் எவ்வாறு நிறுத்த முடியும்? பாதுகாப்பான, மிகவும் அருமையான முகக்கவசங்களையும் ஏனைய பாதுகாப்பு சாதனங்களையும் ஆலைகளில் இன்னும் துல்லியமாக உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற நிலையில், மக்கள் ஏன் கைகளால் தைக்கப்பட்ட முகக்கவசங்களுடன் திருப்தி அடைய வேண்டும்?

நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவை நடத்தும் அரசியல் செயல்பாட்டாளர்கள் நேர்மையாக பேசினால் அவர்கள் பின்வருமாறு தான் பதிலளிப்பார்கள்: கைகளால் தைக்கப்பட்ட முகக் கவசங்களை மக்கள் ஏற்க வேண்டும், அதன் மூலமாக ஆலைகளை, வங்கிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிடலாம், அவ்விதத்தில் பங்கு ஆதாயங்கள் தொடர்ந்து நமது சொந்த தரப்பில் பாய்ந்து கொண்டிருக்கும். இதற்காக மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை விலையாக கொடுக்க வேண்டியிருந்தால், அதுவும் நடக்கட்டும் என்பதையும் அவர்கள் சேர்த்துக் கொள்வார்கள்.

பில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை அச்சுறுத்தும் இந்த தொற்றுநோய், உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் குட்டி முதலாளித்துவ போலி-இடது பிரதிநிதித்துவம் செய்யும் நலன்களுக்கும் இடையிலான சமரசமற்ற மோதலை அம்பலப்படுத்துகிறது. இந்த மோதலானது, நான்காம் அகிலத்தின் நிறைவேற்றுக் குழு போன்ற அமைப்புகளுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் மற்றும் அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தைத் தசாப்தங்களாக கோட்பாட்டுரீதியில் ICFI பாதுகாத்து வருவதற்கு அடித்தளமாக உள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைகையில், இத்தகைய நடுத்தர வர்க்க சக்திகளிடம் இருந்து அதன் அரசியல் சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் போராட்டத்திற்குள் அது நுழைகிறது என்பதே அது முகங்கொடுக்கும் தீர்க்கமான கேள்வியாகும். தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடிக்கு வெளியே தொழிலாளர்கள் பாதுகாப்பு குழுக்களையும், நடவடிக்கை குழு மற்றும் போராட்டத்திற்கான ஏனைய அமைப்புகளையும் ஏற்படுத்தி வருவதை அவர்கள் பார்க்கையில், அவர்கள் குறுக்கீடு செய்ய முயல்வார்கள். போலி-இடதுக்கு எதிராக மார்க்சிச சர்வதேசியவாதத்தை ICFI பாதுகாத்து வருவதே, தங்களின் உயிரையும், தங்களின் வாழ்விட நிலைமைகளையும் மற்றும் போராட்டத்திற்கான தங்களின் அமைப்புகளையும் பாதுகாக்க முயலும் தொழிலாளர்களுக்கான புரட்சிகரமான மாற்றீடாகும்.

Loading