இலங்கை ஜனாதிபதி இராணுவத்திற்கு சட்ட விலக்களிப்பு கோருகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

செவ்வாயன்று ஒரு வெற்றி கொண்டாட்டத்தில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, கொழும்பின் 30 ஆண்டுகால இனவாத போரில் இராணுவத்தின் பங்களிப்புக்காக அதைப் பாராட்டியதோடு ஆயுதப்படைகளுக்கு எதிரான அனைத்து போர்க்குற்ற குற்றச்சாட்டுகளையும் தான் தொடர்ந்து எதிர்ப்பதாக அறிவித்தார். கொழும்பு புறநகரில் உள்ள பத்தரமுல்லவில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட 11 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவுச்சின்னத்திற்கு அருகே இந்த நிகழ்வு நடைபெற்றது.

பல வாரங்கள் நீடித்த ஒரு இரத்தக்களரி தாக்குதலில் 2009 மே 19 அன்று போர் முடிவுக்கு வந்தது. மோதலின் இறுதி வாரங்களில் சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது. புலி போராளிகள் உட்பட சரணடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் வெறுமனே காணாமல் போயுள்ளதுடன் சுமார் 300,000 பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டனர். சுமார் 11,000 இளைஞர்கள் மற்றும் பெண்கள் புனர்வாழ்வு நிலையங்கள் என்று அழைக்கப்பட்டவற்றுக்கு அனுப்பப்பட்டனர்.

ஜனாதிபதியின் சகோதரரும் பிரதமருமான மஹிந்த இராஜபக்ஷ மற்றும் இலங்கையின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளும் செவ்வாய்க்கிழமை நிகழ்வில் பங்கேற்ற ஏனையவர்களில் அடங்குவர். மஹிந்த ஜனாதிபதியாகவும், கோடாபய அவரது பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றிய நிலையில், இராஜபக்ஷக்கள் நேரடியாக இரத்தக் களரியை மேற்பார்வையிட்டனர். இராணுவத் தளபதிகளுடன், அவர்களும் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளனர்.

இந்த ஆண்டின் “கொண்டாட்டம்” கடுமையான கொவிட்-19 நெருக்கடி மற்றும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் வர்க்க பதட்டங்களுக்கும் மத்தியில் நடைபெற்றது. ராஜபக்ஷ "பொருளாதாரத்தை மீண்டும் திறந்து" மக்களை வேலைக்குத் திரும்பக் கோருகையில், அவரது அரசாங்கமும் பெருவணிக ஆதரவாளர்களும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பாரிய தொழில் மற்றும் ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஏனைய உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைப் பற்றி அச்சமடைந்துள்ளனர்.

செவ்வாயன்று ஜனாதிபதி இராணுவத்தை தூக்கிப் பிடித்ததன் பின்னணியில் இருந்தது இதுவே ஆகும். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் பதாகையின் கீழ், கொழும்பில் "சமூக இடைவெளியை தக்கவைக்க" "போர் கால" படை நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார். ராஜபக்ஷவும் இலங்கை ஆளும் கும்பலும் மற்றொரு போருக்கு தயாராகி வருகின்றன – இம்முறை அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போராகும்.

"எங்களது போர் வீரர்களின் கௌரவத்தை இழிவுபடுத்துவதற்கும் அழிப்பதற்கும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு தேசிய பொறுப்பாகும்,” என்று அவர் செவ்வாயன்று அறிவித்தார். "சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தங்கள் போர்வீரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்."

"எந்தவொரு சர்வதேச அமைப்போ அல்லது சபையோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி எமது நாட்டையும் நமது போர்வீரர்களையும் இலக்கு வைத்தால், இலங்கை அந்த அமைப்புகளில் இருந்து விலகிக்கொள்ளும் என்று அவர் கூறினார்.

ராஜபக்ஷவின் அச்சுறுத்தல்கள் அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் பயன்படுத்தப்படும் குண்டர் வழி முறைகளை எதிரொலிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூனில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) இருந்து விலகிக்கொண்டதோடு கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்க இராணுவம் செய்த எண்ணிலடங்கா போர்க் குற்றங்களுக்கு சட்ட விலக்கலிப்பை அறிவித்தார்.

2015 இல் யு.என்.எச்.ஆர்.சி. இல் யுத்தக் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்த தீர்மானத்தையும், முந்தைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தினால் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்துவதாக அறிவகிக்கப்பட்ட பயனற்ற “உள்நாட்டு விசாரணைகளையும்” ராஜபக்ஷ நிராகரித்தார்.

தனது சிங்கள-பௌத்த பேரினவாத அடித்தளத்திற்கு நேரடியா அழைப்புவிடுத்த ஜனாதிபதி ராஜபக்ஷ, "பௌத்த தத்துவத்தால் ஊட்டமளிக்கப்பட்ட இலங்கை… அனைத்து மதங்களுக்கும் மற்றும் அனைத்து தேசிய இனங்களுக்கும் ஒரு பாலவனசோலையாக இருக்கும் ஒரு நிர்வாக வடிவத்தைக் கொண்டுள்ளது" என்று அறிவித்தார். நாட்டின் வரலாற்றில் "சிங்கள, தமிழ், முஸ்லீம், மலாய் மற்றும் பரங்கியருக்கும் சம உரிமை உண்டு" என்று அவர் பொய்யாக வலியுறுத்தினார்.

ராஜபக்சேவின் கூற்றுக்கள் வரலாற்றை தலைகீழாக மாற்றுகின்றன. 1948 இல் பிரிட்டனிடம் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதன் மூலம் முதலாளித்துவத்தை பாதுகாக்க தமிழர்-விரோத இனவாதத்தை திட்டமிட்டு பயன்படுத்தின.

1948 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை உரிமைகளை ஒழித்த இலங்கை ஆளும் வர்க்கம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான வகுப்புவாத நடவடிக்கைகளுடனேயே தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் பதிலிறுத்து வருகிறது. சிங்களத்தை உத்தியோகபூர்வ தேசிய மொழியாகவும், பௌத்த மதத்தை அரச மதமாகவும் ஆக்கியமையும் இதில் அடங்கும்.

லங்கா சம சமாஜ கட்சியானது 1964 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டு தொழிலாள வர்க்கத் அரசியல் ரீதியில் காட்டிக்கொடுத்தமை, சிங்கள உயரடுக்கின் இனவாத தாக்குதலை வலுப்படுத்தியதுடன் தனது சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள தமிழ் முதலாளித்துவ வர்க்கம் தேசியவாத பிரதிபலிப்பை விதைக்கவும் வழியமைத்தது. இந்த அபிவிருத்திகள் புலிகள் உட்பட ஆயுதமேந்திய பிரிவினைவாத தமிழ் குழுக்கள் தோன்றுவதற்கும், உச்சக்கட்ட தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களுக்கும் 1983 இல் முழு அளவிலான போர் வெடிப்பதற்கும் வழிவகுத்தன.

எவ்வாறாயினும், யுத்தம் தமிழ் மக்களை அடக்குவதற்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். இது உழைக்கும் மக்களின் எந்தவொரு சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பூர்த்தி செய்ய இலங்கை ஆளும் உயரடுக்கின் இயலாமையின் வெளிப்பாடாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் முடிவானது "மக்கள் அச்சமோ கவலையோ இன்றி வாழவும், அவர்களின் மனித உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கவும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது" என்றும் ராஜபக்ஷ செவ்வாயன்று கூறிக்கொண்டார். இலவச மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான சூழ்நிலையை நாங்கள் கட்டியெழுப்பினோம் ”மற்றும்“ எந்த தடையும் இல்லாமல் மக்கள் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய இடம். “நாங்கள் சுதந்திரமான நீதியான தேர்தலுக்கான சூழலை கட்டியெழுப்புவதோடு மக்கள் எந்த தடையும் இல்லாமல் சுதந்திரமாக பயணிக்க முடியும்,” என அவர் மேலும் கூறிக்கொண்டார்.

இது மற்றொரு புரளியாகும். வடக்கு மற்றும் கிழக்கில் ஏறத்தாழ ஒரு இராணுவ ஆட்சியே நடக்கின்றது. 100,000 க்கும் மேற்பட்ட படையினர், ஒவ்வொரு மூலோபாய இடத்திலும் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருப்பதோடு மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

யுத்தத்தில் 100,000க்கும் அதிகமானவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1988-90இல் நாட்டின் தெற்கில் கிராமப்புற கிளர்ச்சியை அடக்க இலங்கை அரசாங்கம் தனது ஆயுதப் படைகளை கட்டவிழ்த்துவிட்டு விட்டதில் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் தரமற்ற, தற்காலிக வீடுகளில் மிகவும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்கின்ற அதே நேரம், போரின் போது ஆயுதப்படைகளால் கைப்பற்றப்பட்ட சில நிலங்கள் அதன் முந்தைய உரிமையாளர்களுக்கு இன்னும் திருப்பித் தரப்படவில்லை. சுமார் 90,000 போர் விதவைகள் நிரந்தர வருமானம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் தங்கள் குடும்பங்களை பராமரிக்க போராடுகிறார்கள்.

நாட்டின் தெற்கில், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூகப் போராட்டங்களை அடக்குவதற்கு பெருமளவில் இலங்கை இராணுவமும் பொலிசும் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த நவம்பரில் ஜனாதிபதியான பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ, விரைவாக தனது நிர்வாகத்தை இராணுவமயமாக்க நடவடிக்கை எடுத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தினார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே பாதுகாப்பு செயலாளராகவும், இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட்-19 தடுப்புக்கான நாட்டின் தேசிய செயலணிக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பாடசாலைகளில் ஏராளமான ஆயுதப்படையினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான இராணுவ தளபதிகள், பிரிகேடியர்கள், லெப்டினன்ட் கர்னல்கள் மற்றும் மேஜர்கள் உட்பட 177 இராணுவ அதிகாரிகளின் பதவி நிலைகளை உயர்த்துவதற்கு ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை வெற்றி கொண்டாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டார். இராணுவத் தளபதி சில்வா, கீழ்மட்டத்தில் உள்ள 14,600 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இராணுவ அதிகாரிகளாக உயர்வு பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வெற்றி கொண்டாட்ட அறிக்கையில் இன்னும் வெளிப்படையாக பேசினார். இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையில் இடைவெளி வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் அழைப்புகளை "செயற்கையானது" என்று அவர் கண்டித்தார்: "எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போது, பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர்கள் தவிர்க்க முடியாமல் அரசாங்கத்திற்குள் பல்வேறு பதவிகளை வகிப்பார்கள்," என்று அவர் பிரகடனம் செய்தார்.

மீண்டும், அரசாங்கமும் அதன் சிங்கள-பேரினவாத கூட்டாளிகளும் பெருகிவரும் சமூக எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாதத்தைத் தூண்டுகின்றன.

கொழும்பு, செவ்வாயன்று போர் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, பொலிசும் இராணுவமும் போரின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூறுவதை வடக்கு மற்றும் கிழக்கில் தடை செய்தன.

பொலிஸ், கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் சாக்குப்போக்கில் வெகுஜனக் கூட்டங்களைத் தடைசெய்வதற்கு நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றதுடன் மக்கள் "பயங்கரவாதிகளை" நினைவுகூருவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் அறிவித்தது.

எந்தவொரு நிகழ்விலும் தமிழர்கள் பங்கேற்கவிடாமல் தடுக்க ஆயுதமேந்திய போலீசாரும் இராணுவமும் நிறுத்தப்பட்டன. போரின் இறுதி கட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட முல்லைத்திவு முல்லிவைக்கலில் நடந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க முயன்ற மக்களை விரட்டிக் கலைப்பதும் இதில் அடங்கும்.

வீதித் தடைகளில் படையினர் கத்தி மற்றும் பொல்லுகளுடன் நின்றதாகவும், பத்திரிகையாளர்கள் மற்றும் பலர் விசாரிக்கப்பட்டு பல இடங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் சோதனைச் சாவடிகளில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் வெற்றி கொண்டாட்ட உரையை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும், அவை அவரும் அவரது சகோதரரும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களைத் தயாரித்து வருகின்றமை பற்றிய மற்றொரு அறிகுறியாகும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

இலங்கை ஜனாதிபதி தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையின் கீழ் ஒரு சதியைத் திட்டமிடுகின்றாரா?

[29 ஏப்பிரல் 2020]

கொவிட் 19: யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வட இலங்கையில் இராணுவம் அடக்குமுறைகளை முன்னெடுக்கின்றது

[16 மே 2020]

Loading