பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்தது குறித்த அமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை அணிதிரட்டப் போவதாக கூறும் ட்ரம்பின் அரசியலமைப்பிற்கு முரணான அச்சுறுத்தலுக்கு எதிராக ஐரோப்பா எங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவி வரும் நிலையில், பொலிஸின் மாவாட்ட அளவிலான தடையை மீறி, பாரிஸில் செவ்வாய்க்கிழமை இரவு குறைந்தது 20,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்களன்று, இலண்டன், பேர்லின், முனீச், டப்ளின் மற்றும் போர்தோ ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். செவ்வாயன்று, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தின் பெரும்பாலான நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. நெதர்லாந்தில், ஹாக், குரோனிங்கென் ஆகிய நகரங்களிலும் மற்றும் பிரான்சில் லில், மார்சைய் மற்றும் லியோன் ஆகிய நகரங்களிலும் நூறாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரிஸில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு Adama Traoré (அடாமா டறவுரே) க்கான குழு அழைப்பு விடுத்திருந்தது, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை போல Adama Traoré உம் பொலிஸால் கொல்லப்பட்ட ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒரு பிரெஞ்சு இளைஞராவார், இவரும் பொலிஸ் தடுப்புக்காவலின் போது அடித்து மூச்சுத் திணறவைத்து கொல்லப்பட்டார். 2016 ஆம் ஆண்டில் Beaumont-sur-Oise இல் அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் தயாரிக்கப்பட்ட ஒரு நிபுணர் அறிக்கை, மார்பில் அடிபட்டதே அவரது மரணத்திற்கான காரணம் என்று கூறியது.

பிரான்ஸின் பாரிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் (Twitter/@KenzaHadjMoussa)

நேற்று, மொன்ட்பெலியே நகரில் Traoré மற்றும் ஃபுளோய்ட்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 5,000 பேர் அணிவகுத்துச் சென்றனர், மேலும் “துலூஸ்-மினியாபொலிஸ்-போமோ” என்ற பேரணியின் போது துலூஸில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Traoré இன் கொலைக்குப் பின்னர், பொலிஸ் அச்சுறுத்தல்களை மீறி, பாரிஸில் எண்ணிலடங்கா ஆர்ப்பாட்டங்களை Adama Traoré குழு ஒழுங்கமைத்துள்ளது, இவரது கொலையை தொடர்ச்சியான பல முரண்பாடான கூற்றுக்களால் பொலிசார் மூடிமறைத்தனர். தற்போது பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன, மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் சமீபத்திய முறையீட்டிற்கு பெரும் ஆதரவு கிடைக்கப்பெற்ற நிலையில், அவர்களை சட்டவிரோதமாக வலுக்கட்டாயமாக அடக்கப் போவதாக ட்ரம்ப் பகிரங்கமாக அச்சுறுத்துகிறார்.

பல்வேறு இன மற்றும் இன பின்னணிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் (பொலிசாரின் கூற்றுப்படி 20,000 பேர்) அணிதிரண்ட காரணத்தால், ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிஸ் நீதிமன்றத்தின் முன்புற சதுக்கத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு விரைவாக நிரம்பி வழிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் அதிகாரியான Didier Lallement இன் தடையை மீறினர், “மஞ்சள் சீருடையாளர்கள்” மீது இவர் காட்டிய மிருகத்தனமும் தனிப்பட்ட விரோதமும் ஏற்கனவே நன்கு அறியப்பட்டதே. “சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதான எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தொனி, சிக்கலான பகுதிகளில் அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அச்சங்களை அதிகரித்ததாக” Lallement அறிவித்திருந்தார்.

Adama இன் மூத்த சகோதரியும் Adama Traoré குழுவின் செய்தித் தொடர்பாளருமான Assa Traoré கூட்டத்தில் பேசினார்: “இது நமது எழுச்சியை வெளிப்படுத்துவதாகும். இன்று முதல் இது Traoré குடும்பத்திற்கான போராட்டம் அல்ல. இது உங்கள் அனைவருக்குமான போராட்டமாகும்! அமெரிக்காவில் உள்ள ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்காகவும், மேலும் அவர் நமது சகோதரர் என்பதற்காகவும் இன்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.”

மேலும் அவர், “இன்று இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். ஒரு தூக்கியெறியும் நிகழ்வில் நீங்கள் அனைவரும் பங்கேற்றீர்கள் என்று உங்களால் கூறிக் கொள்ள முடியும்… இது வெறும் ஆரம்பமே!” என்றும் கூறினார்.

அமெரிக்காவிலுள்ள அனைத்து பூர்வீகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் இந்த எழுச்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச ரீதியிலான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகையில், அவர், “அமெரிக்காவில் நடந்து கொண்டிருப்பது இன்று பிரான்சில் நடந்து கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது” என்று கூறினார்.

கடந்த தசாப்தத்தில் பிரான்சில் பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட பலரைப் பற்றி குறிப்பிடுவதற்கு அவர் முற்பட்டார்: “இன்று, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்காக நாம் போராடும் போது, அடாமாவுக்காக நாம் போராடுகிறோம், இப்ராஹிமா பா க்காக (Ibrahima Bah) நாம் போராடுகிறோம் [2019 இல் கொல்லப்பட்டார்], கயே கமாராவுக்காக (Gaye Camara) நாம் போராடுகிறோம் [2018 இல் கொல்லப்பட்டார்], பாபக்கர் கியூயே க்காக (Babacar Gueye) நாம் போராடுகிறோம் [2015 இல் கொல்லப்பட்டார்], ஆஞ்சலோ கரோண்டிற்காக (Angelo Garand) நாம் போராடுகிறோம் [2017 இல் கொல்லப்பட்டார்]; இவ்வாறாக இவர்களது பட்டியல் மிக நீளமானது.”

அமெரிக்காவில் எழுச்சி பெற்றுள்ள சமூக போராட்டங்கள் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி குறிப்பிடுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்: “இன்று காவல்துறை, தண்டனைகள் எதுவுமில்லாமல் முழு சுதந்திரத்துடன் செயல்படுகின்றது. பிரான்சில் தன்னை ஒரு மாஃபியா கிளர்ச்சிக் குழுவாக கருதும் ஒரு காவல் படையை நாம் கொண்டிருக்கிறோம். அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்கிறார்கள். என்றாலும் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது. இன்று ஒரு புதிய அதிகார சமநிலை நிறுவப்பட்டுள்ளது.”

“மஞ்சள் சீருடையாளர்களுக்கு” எதிராக பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை மீண்டும் பின்பற்றும் வகையில், அங்கு பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்ட பொலிசார், கண்ணீர்புகை குண்டுகளை வீசி, அமைதியாக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பாரிஸ் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள Porte de Clichy பகுதியில் பாரிஸ் சுற்றுவழி சாலையை அவர்கள் தடுத்தனர், மேலும் அங்கு நடந்த மோதல்களும் குப்பைத் தொட்டி எரிப்புக்களும் சுற்றியுள்ள பகுதியை வெடிப்புறச் செய்தது. 18 பேர் கைது செய்யப்பட்டனர். மாலை நேரத்தில், Television France ஊடகம், பொலிஸ் “பாரிஸ் நீதிமன்ற மாவட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்தது, என்றாலும் “அங்கு சூழ்நிலை தொடர்ந்து பதட்டமாகவே இருந்தது.”

லியோனில், நீதிமன்றத்திற்கு முன்பாக 2,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பழைய லியோனுக்குள் அவர்கள் நுழைவதை தடுப்பதற்காக பொலிசார் அவர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசுகையில், அவர்கள் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கடைசியாக கூறிய வார்த்தைகளான “என்னால் மூச்சுவிட முடியவில்லை!” என்பதை அவர்கள் முழங்கினர்.

மார்சைய் நகரில், “பொலிஸ் கொலைகாரர்கள்” மற்றும் “நாங்கள் ஸினெப்பை மறக்கவில்லை, நாங்கள் மன்னிக்க மாட்டோம்,” என 500 பேர் ஒன்றுகூடி கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர், அதாவது “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்திற்கு வெளியே, 84 வயதான ஸினெப் ரெடோவான் (Zineb Redouane) என்பவர் அவரது வீட்டில் இருந்தபோது அவரது முகத்தின் மீது பொலிசாரின் கண்ணீர்புகை குண்டு தாக்கியதால் இறந்து போனதை நினைவுகூரும் வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு பதிலிறுக்கும் விதமாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளித்த ஒரு “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர் இவ்வாறு தெரிவித்தார்: “நாம் எங்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலேயே இருக்கிறோம். அமெரிக்க இராணுவத்தில் ஆபத்தான நபர்கள் உள்ளனர்… சமூகம் மற்றும் இனத்திற்கு எதிரான போராட்டத்தில் எப்போதும் நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம். நாம் வெகு தொலைவில் இருப்பதுதான் மோசமானது!”

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியான உரிமைகளை ட்ரம்ப் இடைநிறுத்தியதன் சர்வதேச முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். “இந்த இடைநிறுத்தம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை, மாறாக உலகம் முழுவதும் நிகழ்கிறது. அநேகமாக அரசியலமைப்பு இருக்கும் அனைத்து நாடுகளிலும், இது மீறப்படுகிறது. இது ஒரு புதிய வளர்ச்சி அல்ல, மாறாக இது மேலும் மேலும் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.”

அமெரிக்க அரசியலமைப்பை மீறி ஒரு சதித்திட்டத்தை செயல்படுத்துவதில் ட்ரம்பின் பிரதிபலிப்பு அரசியல் ஸ்தாபகத்தின் காலடிக்கு கீழிருந்து குழி பறித்துள்ள நிலையில், அமெரிக்க இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் மத்தியில் பாரிய இயக்கம் எழுச்சி பெற்றுள்ளது. சிக்கன நடவடிக்கை, சமூக சமத்துவமின்மை மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான கோபம் ஏற்கனவே பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் ஏராளமான வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் வெடிக்கச் செய்தது. ட்ரம்பின் சட்டவிரோதமான பிரச்சாரம், கிளர்ச்சியின் போது தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ உயரடுக்கின் அதிகாரங்களை திணிப்பதற்காக இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை நோக்கி அனைத்து ஆளும் வர்க்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை அம்பலப்படுத்துகின்றது.

அரசியல் ஸ்தாபகம், “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் பொலிஸ் படைகளை கட்டமைத்தது. விச்சி ஆட்சியின் தலைவரான மார்ஷல் பெத்தான் (Marshall Petain) ஒரு “சிறந்த சிப்பாய்” என்ற மக்ரோனின் அறிவிப்பால் நிரூபிக்கப்பட்டது போல, பிரெஞ்சு ஆளும் வர்க்கமும் ட்ரம்பின் வெகுஜன அடக்குமுறை மூலோபாயத்துக்கு ஒத்தூதுகிறது.

ஆர்பாட்டங்களுக்கு பதிலிறுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும், “நியாயமற்ற அதிகப்படியான நடவடிக்கைகளை” உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனெர் வெறித்தனமாகக் கண்டித்ததுடன், “பொது வீதி பேரணிகள் தடைசெய்யப்பட்டுள்ளன” என்றும் அறிவித்தார்.

அரசாங்கத்தின் பிற பிரிவுகள், தாம் எதிர்பார்க்காத அணிதிரள்வைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோபத்தை தடுத்து நிறுத்த முயற்சித்து வருகின்றன. விவசாய அமைச்சரான டிடியே கிய்யோம் (Didier Guillaume) பேரணியை “நம்பமுடியாததாக” உள்ளது என்று பாராட்டியதுடன், அவர் “புரிந்துகொண்டதாகவும்” தெரிவித்தார். வெளியுறவுச் செயலரான இளைஞர் காப்ரியல் அட்டல் (Gabriel Attal), “பெரும்பான்மை பலத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் 15,000 இளைஞர்கள் பங்கேற்று வன்முறை எதிலும் ஈடுபடவில்லை என்பது பொலிஸூடன் இளைஞர் பிரிவுகள் கொண்டுள்ள உறவுகள் பற்றியும் மற்றும் தாம் பாதுகாக்கப்படுவதில்லை என்ற அவர்களது உணர்வு பற்றியும் எதையோ கூறுகிறது என்பதே உண்மை.”

ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியும் மற்றும் மரின் லூ பென்னின் அதிவலது தேசிய பேரணி (RN) கட்சியும் வாய்வீச்சு சொல்லாடலில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவிருந்து “வந்த ஊக்கத்தின் நேரடி எதிரொலியாக நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள், அமைதியான மற்றும் அமைதியான உறுதிப்பாடு” என்று மெலோன்சோன் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பாராட்டினார். “உள்நாட்டு யுத்தம், கொலைகள் மற்றும் கொள்ளைகள் நிரம்பிய இந்த காட்சிகளை” மெலோன்சோன் பாராட்டினார் என்றும், அமெரிக்காவிலிருந்து “இந்த இனப் போர்களை தேசிய மண்ணிற்கு இறக்குமதி செய்யவே” அவர் விரும்பினார் என்றும் கூறி மரின் லூ பென் அவரை கண்டனம் செய்தார்.

உண்மையில், LFI பொலிஸை பாராட்டுவதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை நிராயுதபாணியாக்க முயற்சிக்கிறது, அதேவேளை RN பொலிஸை தூண்டி வருகிறது. பிரான்சின் உள்நாட்டு வானொலி ஒலிபரப்பில், LFI இன் துணைத் தலைவர் பிரான்சுவா ரூஃபான் (Francois Ruffin), வன்முறை ஒருபுறம் நிகழ்ந்தாலும், மக்களை காவல்துறையினருடன் சமரசம் செய்வதே தனது குறிக்கோளாக இருந்தது என்று வலியுறுத்தினார்: “எனது குறிக்கோள் பொலிஸூக்கும் மக்களுக்கும் இடையிலான போரை, அல்லது சண்டையை தவிர்ப்பதாகும். [அவர்களுக்கு இடையிலான] நம்பிக்கை மீறல், புள்ளிவிபரங்களிலிருந்து தெளிவாகிறது. அதை எவ்வாறு நாம் மீட்டெடுப்பது?”

உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்.

ஆளும் உயரடுக்கு மற்றும் பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் வெவ்வேறு பூர்வீகத்தை கொண்ட தொழிலாளர்களை ஒன்றிணைக்கக்கூடிய பிரான்சில் நிலவும் பரவலான நிலை குறித்து அஞ்சுவதாக பிரெஞ்சு உளவுத்துறை கூறுகிறது. பாரிஸ் ஆர்ப்பாட்டங்கள் குறித்த உள்நாட்டு உளவுத்துறையின் அறிக்கையை மதிப்பாய்வு செய்த நிதி இதழான L’Opinion, “‘மஞ்சள் சீருடையாளர்களில்’ இருந்து சிறுபான்மையினர் தனித்து வைக்கப்பட்டிருந்தாலும், ‘சமூக நெருக்கடி மற்றும் இன நெருக்கடிக்கு இடையிலான போராட்டங்களின் ஒருங்கிணைப்பு” குறித்து உள்நாட்டு உளவுத்துறை கவலைப்படுவதாகக் கூறுகிறது.

இராணுவ சர்வாதிகாரம் மற்றும் பொலிஸ் அடக்குமுறையின் ஆபத்தை எதிர்கொண்டு, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தைக் கட்டியெழுப்பும் வகையிலான ஒரு சர்வதேச போராட்டத்திற்குள் நுழைய, தேசிய எல்லைகளைக் கடந்தும் மற்றும் இன மற்றும் பாலின எல்லைகளைக் கடந்தும், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய பணியாகும்.

Loading