ஏகாதிபத்திய சார்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க, தமிழ் தேசியவாதிகள் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரலை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷ அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால போரின் மே 18, 2009 இரத்தக்களரியில் முடிவடைந்த பதினோராம் ஆண்டு நிறைவை கடந்த மாதம் குறித்து நிற்கிறது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் 40,000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இறுதி வாரப் போரில் கொல்லப்பட்டனர்.

இராணுவத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் பெண்களையும் இன்னும் காணவில்லை. போரிலிருந்து தப்பிய 300,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வவுனியாவில் இராணுவ கட்டுப்பாட்டு முகாம்களில் பல மாதங்கள் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 11,000 இளைஞர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இந்த இரத்தக்களரிக்கு தனது சகோதரர் மஹிந்தாவுடன் இணைந்து தலைமை வகித்த ஜனாதிபதி கோடாபய இராஜபக்க்ஷ, இந்த ஆண்டு கொழும்பு புறநகரில் ஒரு போர் வெற்றி கொண்டாட்டத்தை நடத்தி, "போர் வீரர்களுக்கு" ஒரு அஞ்சலி செலுத்தினார். அதன்போது அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தலைவர்களைப் போன்றே போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை எதிர்ப்பதாக இராஜபக்க்ஷ அறிவித்தார். (பார்க்க: இலங்கை ஜனாதிபதி இராணுவத்திற்கு சட்ட விலக்களிப்பு கோருகிறார்)

தமிழ் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூரும் வகையில், போர் முடிவடைந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 பேரழிவை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு, எந்த நினைவுகூர்தலையும் அடக்குவதற்கு இராணுவமும் காவல்துறையும் தலையிட்டன. "பயங்கரவாதிகளை நினைவுகூரும்" நடவடிக்கையில் ஈடுபடும் எவரையும் கைது செய்வதாக இராணுவம் அச்சுறுத்திய நிலையில், காவல்துறையினர் இந்த நிகழ்வுகளை தடைசெய்து நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுக்கொண்டதுடன், கொரோனா வைரஸ் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடிவருவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர். தொழிலாளர்களிடமிருந்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் இருந்து வரும் போர் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு வெளிப்பாட்டிற்கும் அஞ்சி, வடக்கில் ஒடுக்குமுறையை கொழும்பு வழிநடத்தியது.

மே 18 அன்று, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் படையினரும் மற்றும் காவல்துறையினரும் பாரியளவில் நிலைநிறுத்தப்பட்டனர். முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்புகளில் ஆயுதங்கள், குண்டாந்தடிகள் மற்றும் கத்திகளோடு ஆயுதம் ஏந்திய சீருடைகள் மற்றும் சாதாரண உடைகளில் படையினர் காணப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பங்குபற்றியோரின் அளவு குறைவாகவே இருந்தது.

முன்னாள் மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸவரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் அங்கு செல்லாது தடுக்கப்பட்டனர்.

அதே நாளில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார், அவர் மேலும் கூறுகையில், ”ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஊடாக, முன்னெடுக்கப்பட்ட பொறுப்புக் கூறல் வேலைத்திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதனால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை குழுவில் இருந்து, இலங்கையின் உறுப்புரிமையை நீக்க வேண்டும்.” என்றார்.

இத்தகைய வேலைத்திட்டத்துக்காக, ஒரு குழுவை அமைக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் உட்பட “பூகோள ரீதியிலான ஆலோசனை சபையை” அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

"இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை உட்பட உலகெங்கிலும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கையாள சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்" என்று கோரி விக்கினேஸ்வரன் தனது வேண்டுகோளை முடித்தார்.

விக்கினேஸ்வரன் யாரிடமிருந்து போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கிறார்? அவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட பிராந்திய சக்தியான இந்தியாவையும் ஆகும். மேலும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" ஆதரிக்கும் போர்வையில் இலங்கை இராணுவத்திற்கு தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றை அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்களுக்கு வழங்கியவை இவையையாகும் என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

விக்கினேஸ்வரனும் பிற தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் குறிப்பிடுவதைப் போல இந்த சக்திகள் உலகில் எங்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. வாஷிங்டன் ஏனைய நாடுகளுடன் சேர்ந்து, மனித உரிமைகளை மீறி முன்னாள் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா உள்ளிட்ட இனப்படுகொலை போர்களில் ஈடுபட்டு மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளது. இவை பாரிய போர்க்குற்றங்களாகும். இந்த ஏகாதிபத்திய சக்திகள் உதவியற்ற புலம்பெயர்ந்தோர் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதுடன், மேலும் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குகின்றன.

விக்கினேஸ்வரன் இந்த சக்திகளிடம் நீதிக்காக முறையிடவில்லை, மாறாக அவர் அவர்களுக்கு பின்னால் நிற்கிறார் என்பதையே காட்டுகிறார். இந்த முன்னாள் முதலமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைவர்களில் ஒருவராக இருந்தவராவார். இந்த கட்சியானது, போர் குற்றவியல் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, 2015 அக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிற்கு ஒரு தீர்மானத்தினை கொண்டுவர கொழும்பு அரசாங்கமும் வாஷிங்டனும் சேர்ந்து தயாரித்தபோது அதனை ஆதரித்தது. இந்த தீர்மானமானது எவ்வித அதிகாரமுமற்ற உள்நாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுத்து, அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அதற்கான பொறுப்புகளிலிருந்து வெளியேற்ற அனுமதித்தது.

இது போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உட்பட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே யதார்த்தமாக்கப்பட முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியதை அது உறுதிப்படுத்தியது.

விக்கினேஸ்வரனினதும் பிற தமிழ் முதலாளித்துவக் கட்சிகளினதும் பிற்போக்கான நிலைப்பாடுகளுக்கு மாறாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (RCL) அப்போது தனது இலக்கை அடைவதற்கு பயங்கரவாத வழிமுறைகளைப் பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத முதலாளித்துவ அரசியலுக்கு ஒரு கொள்கை ரீதியான எதிர்ப்பை மேற்கொண்டு வந்தன. அமெரிக்காவின் மூலோபாய புறக்காவல் நிலையமாக சேவையாற்றக்கூடிய ஒரு இனரீதியான தமிழ் அரசை உருவாக்க சர்வதேச சக்திகளின் ஆதரவை நாடுவதை அடிப்படையாகக் கொண்டதே அதன் பிரிவினைவாத நிலைப்பாடாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது ஒரு இராணுவ கேள்வி மட்டுமல்ல மாறாக இந்த பிரிவினைவாத முன்னோக்கின் திவால்தன்மையின் விளைவாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி மே 21, 2019 அன்று ஒரு முன்னோக்கு கட்டுரையில் பின்வருமாறு எழுதியது:

“இந்த இயக்கம், சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் ரீதியில் அழைப்பு விடுக்கவோ அல்லது தமிழர் விரோத பேரினவாதத்தை தூண்டுவதற்கு இடைவிடாது முயற்சிக்கும் சிங்கள முதலாளித்துவத்தை எதிர்க்கவோ முற்றிலும் இலாயக்கற்றதாக இருந்தது. அதன் பிரிவினைவாத நோக்கத்தின் காரணமாக, இந்தியாவில் உள்ள தமிழ் தொழிலாளர்களுக்கு கூட அத்தகைய அழைப்பை விடுக்க அதனால் முடியாமல் போனது. மற்றும், தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்து எழும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்குவதில் வெளிப்பாட்டைக் கொண்டிருந்த புலிகளின் ஜனநாயக-விரோத பண்பு, இலங்கை தமிழ் வெகுஜனங்களின் பரந்த தட்டினரின் மத்தியிலேயே அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது.”

அது தொடர்ந்தது: “இலங்கையிலான துன்பகரமான நிகழ்வுகள், ஒரு முழு காலகட்டத்தினதும் முடிவைக் குறித்த போதிலும், நாட்டின் ஆழமான முரண்பாடுகளில் எதையும் தீர்த்து வைக்கவில்லை. இப்போது திறக்கும் புதிய காலத்தில், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் சகல விதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிராக தமிழ், சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம், தீவில் உள்ள வெகுஜனங்களுக்கு ஒரு முன்னணிப் பாதையை காட்டும். அது உலக மட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பாகமாக, தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சர்வதேச ஈர்ப்புத் துருவமாகவும் சேவை செய்யும்”.

எவ்வாறாயினும், இலங்கைப் போருக்கான பிரதான பொறுப்பு, கொழும்பு ஆளும் உயரடுக்கு மற்றும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்க எதிர்ப்பை இனரீதியில் வடிகால் அமைக்க தமிழ் எதிர்ப்பு பாகுபாட்டைப் பயன்படுத்திய அடுத்தடுத்த அரசாங்கங்கள் மீதே உள்ளது. இந்த இனவெறி பாகுபாடும் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்களும் 1983 ல் ஆரம்பித்து பல தசாப்தங்களாக நீடித்த ஒரு போரின் வெடிப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தன. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ந்து போரை எதிர்த்தது. இந்த போர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது மட்டுமல்லாது, அதன் முக்கிய நோக்கம் முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்குவதாகும் என அது விளக்கியது.

சர்வதேச விசாரணை என்று அழைக்கப்படுவதற்கு, பிரதான சக்திகளுக்கு விக்கினேஸ்வரன் விடுத்த வேண்டுகோள், TNA, TNPF மற்றும் இதே போன்ற சிறிய அமைப்புகள் உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிற்போக்குத்தனமான அரசியலை அம்பலப்படுத்துகிறது. இந்த கட்சிகள் முக்கியமாக வாஷிங்டனின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளை ஆதரிக்கின்றன. COVID-19 ஆல் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு மத்தியில், வாஷிங்டன் சீனாவுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் கட்சிகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றன.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது மே 18 உரையில் மீண்டும் வெளிப்படையாக வெளிப்படுத்தினார். தென்னாசிய பிராந்தியத்தில் நடைபெறும் அமெரிக்கா தலமையிலான பூகோள மூலோபாய போட்டியில், தமிழ் முதலாளித்துவம், “இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கும் கன்னைக்கு எதிராக” நிற்பதன் மூலமே தங்களுக்கான சலுகைகளை அடைய முடியும் என்று கூறுகின்றார். அதாவது இராஜபக்ஷ அரசாங்கம் சீன சார்பு கொள்கையுடன் நிற்பதால், தாங்கள் அமெரிக்க – இந்திய சார்பு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அவரது கொள்கையாகும்.

தமிழ் கட்சிகள் “இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள சர்வதேச அரசியலையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைத் தீவு தொடர்பான வல்லரசு நாடுகளுடைய போட்டிகளையும் அவதானிக்க வேண்டும். இதன் ஊடாகத் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள், இழப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தித்தான் நாங்கள் எங்கள் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.” என மேலும் சேர்த்தார்.

இலங்கை, இந்து சமுத்திரத்தில் ஒரு மூலோபாய முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. தொடர்ந்து வாஷிங்டனிடம் முறையிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பில் உள்ள இராஜபக்க்ஷ ஆட்சி சீன சார்பு நிலைப்பாட்டை எடுத்து வருவதால், அவர்கள் அமெரிக்காவுடன் பேரம் பேசலாம் என்றும் குறிப்பிட்டார். அவர் எதற்காக பேரம் பேசுவார்? சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளை ஆதரிப்பதற்கு ஈடாக, தமிழ் முதலாளித்துவ உயரடுக்கினருக்கான ஒரு தொகை சலுகைகளுக்காகவே அவர் பேரம்பேசுவார்.

இந்த பிற்போக்குத்தனமான பாதையிலேயே, 2015 ஆம் ஆண்டில் வாஷிங்டனின் ஆட்சிமாற்ற நடவடிக்கையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணிவகுத்து, இது பெய்ஜிங்கை நோக்கி அதிகம் சாய்ந்திருந்த மஹிந்த இராஜபக்கஷவை வெளியேற்றி, மேலும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்தது. வாஷிங்டனுக்கு ஆதரவாக இலங்கை வெளியுறவுக் கொள்கையை மாற்றுவதற்கும், போர்க்குற்ற விசாரணைகளை ஒடுக்குவதற்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் உண்மையான பங்காளியாக மாறியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் வடக்கு மாகாண முதல்வராக 2013 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கினேஸ்வரன் இந்த சூழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே மிகவும் மதிப்பிழந்துபோனதால் அவர் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு, பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலின் பின்னால் வெகுஜன கோபத்தை சிக்க வைக்க தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்கள் கூட்டணி (TPA) மற்றும் எழுக தமிழ் ஆகியவற்றை ஏற்பாடு செய்தார்.

வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சிக்கு மத்தியில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க அமைதியின்மையால் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தங்களது புறநிலைரீதியான ஒற்றுமையைக் காட்டும் இந்த போராட்டங்களில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

கோட்டாபய இராஜபக்க்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, TNA மற்றும் TPA ஆகியவை அதனுடன் இணைந்தன. தொற்றுநோய் இலங்கையில் முன்னோடியில்லாத வகையில் நெருக்கடியை உருவாக்கியதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு முறை அனைத்து கட்சி மாநாடுகளிலும் பங்கேற்று பிரதமர் மஹிந்த இராஜபக்க்ஷவுடன் இரகசிய சந்திப்புகளையும் நடத்தியது. (பார்க்க: கொரோனா தொற்றின் வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜபக்க்ஷ ஆட்சியை ஆதரிக்கிறது)

தமிழ், சிங்கள ஆளும் உயரடுக்கின் பொதுவான அச்சம், தீவின் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களுக்காக அபிவிருத்தியடையும் புறநிலை நிலைமைகளாகும்.

தமிழ் பேசும் தொழிலாளர்களும் இளைஞர்களும் தமிழ் கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு வேலைத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் இனப்பிளவுகளை கடந்து தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதில் தங்கியுள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது.

Loading