இலங்கை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய இன்னொரு முன்நகர்வாக இராணுவ செயலணியை ஸ்தாபித்துள்ளார்

By the Socialist Equality Party (Sri Lanka)
11 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, ஜூன் 2 அன்று வெளியிட்ட ஒரு விசேட வர்த்தமானியில், பாரதூரமான அதிகாரங்கள் கொண்ட, அவருக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டுள்ள, இராணுவத் தலைமையிலான செயலணி ஒன்றை ஸ்தாபிப்பதாக அறிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான 13 பேர் கொண்ட இந்த செயலணி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளான முறையே லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் ஏயார் மார்ஷல் சுமங்கல டயஸ் ஆகியோரை உள்ளடக்கியதாகும். மூன்று ஆயுதப் படைகளைச் சேர்ந்த புலனாய்வுத்துறைத் தலைவர்கள், அண்மையில் இராஜபக்ஷவால் பிரதான அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதேபோல் பதில் பொலிஸ் மா அதிபர், இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த செயலணியில் அடங்குயுள்ள ஏனையவர்களாவர்.

ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள சமூக பதட்டங்களுக்கு மத்தியில், இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த செயலணியானது தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு பிரதான முன்நகர்வாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது.

கோடாபய ராஜபக்ஷ (AP Photo/Eranga Jayawardena)

"தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதும், சட்டம் மற்றும் நீதித்துறையின் விதிகளை மதிக்கின்ற ஒரு நற்பண்புள்ள, ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான சமூகத்தை உருவாக்குவதே" அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பு என இராஜபக்ஷ அறிவித்துள்ளார். புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணி, இந்த கொடிய பிற்போக்கு செயல் திட்டத்தை திணிப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

இந்த நோக்கங்களை அடைவதற்கு, இந்த செயலணியானது "சட்டத்தை மீறுகின்ற மற்றும் சமூகத்தின் சுதந்திரமான அமைதியான இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் சமூக குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும்" என்று இராஜபக்ஷ அறிவித்தார். இது "வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையில் நடக்கும் சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள” முன்நடவடிக்கை எடுக்கும்.

இந்த செயலணி, இப்போது தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் சோ.ச.க. உட்பட அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதை இலக்காகக் கொண்டிருக்கும். அரசாங்கம் அவர்களின் நடவடிக்கைகளை "சட்டவிரோத, சமூக விரோத மற்றும் சமூகத்தின் அமைதியான சகவாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதாக" முத்திரை குத்தும்.

"போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள்" மற்றும் "சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் அதைச் சூழவும் எந்தவொரு சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளையும் விசாரித்துத் தடுப்பதற்கான" நடவடிக்கைகளை இந்த செயலணி முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி கூறிக்கொள்கின்றார்.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த இராஜபக்ஷவின் தோரணையை முதலாளித்துவ ஊடகங்கள் விமர்சனமின்றி ஊக்குவித்துள்ளன. இது ஒரு மூடிமறைப்பு ஆகும். இந்த செயலணிக்கும் போதைப்பொருள் மற்றும் பிற குற்றச் செயல்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாறாக, அது எதேச்சதிகார அதிகாரங்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவாகும்.

இராணுவத் தலைமையிலான இந்த செயலணியால், எந்தவொரு அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனம் அல்லது இதே போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளிடம் “சேவைகள் விதியின்படி உதவி பெறுவதற்காக” “அறிவுறுத்தல்கள் அல்லது கோரிக்கைகளை” முன்வைக்க முடியும்.

இந்த அரச அதிகாரிகள், செயலணியின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயற்பட கடமைப்பட்டவர்களாவர். ஜனாதிபதியிடம் புகாரளிக்கப்பட வேண்டிய மற்றும் கீழ்ப்படியாமையாகக் கருதப்படுகின்ற, தாமதம் அல்லது கடமை தவறுதல் தொடர்பான மற்றும் சாத்தியமான தண்டனைகள் சம்பந்தமான அனைத்து விடயங்களும் இதில் அடங்கும்.

இலங்கையில், அரச அதிகாரிகள் சிவில் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்கள். ஆனால் இப்போது, அமைச்சரவை அமைச்சர்களையும் பாராளுமன்றத்தையும் கடந்து செயலாற்றும் அதிகாரம் கொண்ட இராணுவ செயலணியின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களை கொண்டு வர முடியும்.

இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பை மீறுவதுடன், குறிப்பாக, முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சில அதிகாரங்களை அகற்றிய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீறுகின்றன.

சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கி இருந்தாலும், அதன் 19வது திருத்தமானது, ஜனாதிபதியானவர் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையுடனேயே செயல்பட வேண்டும், அமைச்சர் பதவியை வகிக்க முடியாது மற்றும் அவர் பாராளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும் என ஸ்தாபிக்கின்றது.

இராஜபக்ஷ தனது வர்த்தமானி அறிவிக்கப்பட்ட நாளில் இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன் உரையாற்றியதோடு பின்னர் ஒரு ட்வீட் செய்தியையும் வெளியிட்டார்: "ஒரு சிறந்த நாட்டிற்கு தேவையான முடிவுகளை எடுக்க மக்களால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்த நான் தயங்க மாட்டேன்," என அவர் பிரகடனம் செய்துள்ளார். ஜனாதிபதியின் கூற்றுக்கள் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாகும்.

சர்வாதிகாரத்தை நோக்கிய இராஜபக்ஷனின் விரைவான நடவடிக்கையானது ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்களின் நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக உள்ளது.

உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாசிச சக்திகளை ஊக்குவிப்பதோடு, பொலிஸ் வன்முறைக்கும் ஜோர்ஜ் ஃபுளோயிட்டின் பொலிஸ் கொலைக்கும் எதிராக வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்க இராணுவத்தை அணிதிரட்டுகிறார்.

எமது சகோதர கட்சியான அமெரிக்காவில் சோ.ச.க. வெளியிட்ட “தொழிலாள வர்க்கத்திற்கு ஒர் அழைப்பு! ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்!” என்ற அறிக்கையில் விளக்கியதாவது:

வெள்ளை மாளிகை சதியின் இலக்கு தொழிலாள வர்க்கமாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு மற்றும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான ஆட்கொலை பிரச்சாரத்தினதும் விளைவாக, மிகப் பெரியளவில் தீவிரமடைந்துள்ள சமூக சமத்துவமின்மை சம்பந்தமாக, தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் அளப்பரிய சமூக கோபத்துடன் பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பும் ஒருங்கிணைந்து விடுமோ என்று பெருநிறுவன-நிதியியல் அதிசெல்வந்த தன்னலக் குழுக்கள் பீதியடைந்துள்ளன.

இலங்கை பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளது. சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலமும் வந்த வருமானமும் வறண்டுவிட்டது, நாட்டின் இறைமை பத்திரங்கள் மீதான சர்வதேச முதலீடுகள் திரும்பப் பெறப்படுகின்றன, மேலும் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 1 சதவீதமாக அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய இருப்புக்கள் குறைந்துவருகின்றமை, வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியா நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த நெருக்கடியின் சுமையை மக்களின் முதுகில் திணிக்க இராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிடுகின்ற அதேவேளை, இலட்சக் கணக்கான தொழில்கள் அழிக்கப்படுவதற்கும், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய உரிமைகள் மீதான முதலாளிகளின் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்து வருகிறது. ஆடைத் தொழிற்துறையிலும் சுகாதாரம் மற்றும் சமுர்தி நலத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக ஏற்கனவே ஆர்ப்பாட்டம் செய்துள்ளதோடு தொழிற்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சியை சிதைத்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எழுச்சியைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் இராஜபக்ஷ ஜனாதிபதியானார். பெருவணிகத்திற்கு “வலுவான மற்றும் நிலையான” ஆட்சியை அமைப்பதாக இராஜபக்ஷ உறுதியளித்த போதிலும், அவரும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைமையிலான சிறுபான்மை அரசாங்கமும் ஒரு அரசியல் வெடிகுண்டின் மீது அமர்ந்திருப்பதை நன்கு அறிந்திருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இராஜபக்ஷவின் எதிர்வினையானது ஜனநாயக உரிமைகளை மேலும் அழிப்பதோடு இராணுவ அதிகாரத்தை விரிவுபடுத்தி வருவதை இலக்காகக் கொண்டுள்ளது. அவர் கோவிட்-19 வைரஸைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை நியமித்ததுடன், கொழும்பில் இராணுவத்தையும் அதன் உளவுத்துறையையும் பெருமளவில் அணிதிரட்டினார். துறைமுக அதிகார சபை, சுங்க திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறுப்பாளர்களாகவும் பல மாகாணங்களின் ஆளுநர்களாகவும் இராணுவ தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பைப் பிளவுபடுத்துவதற்கும் தடம் புரட்டுவதற்கும் தமிழ்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாத பதட்டங்களை அரசாங்கம் வேண்டுமென்றே தூண்டி விடுகின்றது.

இராஜபக்ஷவின் இராணுவத் தலைமையிலான செயலணி மற்றும் அதன் சர்வாதிகார செயல்திட்டத்தை எந்தவொரு எதிர்க்கட்சியும் எதிர்க்கவில்லை. கடந்த மூன்று மாதங்களில், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ) மற்றும் முஸ்லிம் கட்சிகளும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுடன் இரண்டு அனைத்து கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு, அவரது நிர்வாகத்தின் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் எனப்படுவதற்கு ஆதரவு தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளன.

கடந்த மாதம், ஐ.தே.க., ஐ.ம.ச., தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும், இராஜபக்ஷவை பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்திய கடிதத்தில் கையெழுத்திட்டன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசாங்கத்தை வீழ்த்த மாட்டோம், அரசாங்கத்திற்குத் தேவையான எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற உதவுவோம் என்று உறுதியளித்தனர். இலங்கையின் எதிர்க் கட்சிகள் எதுவும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை.

அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த ஏகாதிபத்திய-சார்பு கட்சிகள், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளதுடன், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளை நசுக்கியுள்ளதோடு, எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு இராணுவத்தையும் பொலிஸையும் அணிதிரட்டியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாதப் போரையும், மேலும் பல குற்றங்களையும் ஆதரித்து வந்துள்ள ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு அரசியல் கன்னையும் இரத்தத்தில் நனைந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் அமைதியின்மை சம்பந்தமான அச்சத்தில் ஆளும் உயரடுக்கினர் ஒன்றுபட்டுள்ளதுடன் அனைவரும் முதலாளித்துவ ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இராணுவத்தை நம்பியுள்ளனர்.

அனைத்து இன மற்றும் மத பிளவுகளையும் கடந்து, தனது சுயாதீன புரட்சிகர வலிமையை அணிதிரட்டுவதன் மூலமும், இப்போது ஒவ்வொரு நாட்டிலும் போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றுபடுவதன் மூலமும் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் வளர்ந்து வரும் சர்வாதிகார அச்சுறுத்தலை தோற்கடிக்க முடியும்.

இதற்கு, தொழிலாளர் வர்க்கம், தங்கள் தொழில்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவதற்காக வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். இந்த போராட்டத்தை, முதலாளித்துவ சொத்துக்களைக் கைப்பற்றி ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தின் ஊடாக மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும். அதன் கீழேயே சமூகத்தை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச அடிப்படையில் பகுத்தறிவுடன் மறுசீரமைக்க முடியும்.

இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டமாகும். எமது கட்சியில் இணைந்துகொண்டு அதைக் கட்டியெழுப்புமாறு எமது வாசகர்களை கேட்டுக்கொள்கின்றோம்.