இலங்கை: பலபிட்டிய ஆதார வைத்தியசாலை தொழிலாளர்கள் ஏப்ரல் மாத மேலதிக நேர ஊதியத்தைக் கோரி போராடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் நேற்று காலை, பல துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், சாரதிகள், தொலைபேசி இயக்குனர்கள் மற்றும் தையல் தொழிலாளர்களும் இரண்டு மணி நேர மறியல் போராட்டத்தை நடத்தினர்.

பலபிடிய ஆதார வைத்தியசாலையில் மறியல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்

தெற்கு மாகாண சபையால் நிர்வகிக்கப்படும் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் தொழிலாளர்களது ஏப்ரல் மாத மேலதிக நேர கொடுப்பனவு எந்த அறிவிப்பும் இன்றி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மேலதிக நேர ஊதியத்தை மே மாத சம்பளத்தில் சேர்ப்பது வழக்கமான முறையாக இருந்து வந்துள்ளது. ஆனால் அது மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை அறிந்த உடன், தொழிலாளர்கள் மத்தியில் குழப்பமும் கோபமும் அதிகரித்தது.

வைத்தியசாலை உதவியாளர்களின் அடிப்படை சம்பளம் 24,500 ரூபா ஆகும். அனைத்து கொடுப்பனவுகளுடனும் 45,000 ரூபாவுக்கும் அதிகமான சம்பளத்தை சம்பாதிக்க அவர்கள் மேலதிக நேர வேலையின் மூலம் குறைந்தது பத்தாயிரம் ரூபாவையாவது சம்பாதிக்க வேண்டும். இதில், கிட்டத்தட்ட 3,000-4,000 ரூபா வரை, ஊழியர் சேமலாப நிதி மற்றும் இதுபோன்ற பிற தேவைகளுக்காக கழிக்கப்படும்.

பலபிட்டிய மருத்துவமனையின் தாதியான நிஷானி, தனது சம்பளத்தில் 3,000 ரூபாய் கடன்களுக்காக குறைக்கப்படும் என்றும், பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டுவசதி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடன் வாங்குவதால் மாதாந்தம் 20,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் கழிக்கப்படுகின்றது என்றும் கூறினார்.

ஏப்ரல் மாத மேலதிக நேர ஊதியம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளக்கி, ஒரு தொழிலாளி, “நாங்கள் வீட்டிற்கு செல்ல முடியாது. நாங்கள் கடைகளில் கடன் வாங்குகிறோம்; கடந்த மாத கடனையும் கூட என்னால் செலுத்த முடியமல் போனது,” என கூறினார்.

இந்த தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் 100 மணிநேரமும் மற்றொரு பகுதியினர் 150 மணிநேர வரையறையுடன் மேலதிக நேர வேலையைப் பெறலாம். “மேலதிக நேர உழைப்புடன் ஓரளவு சமாளிக்கிறோம். அடுத்த மாதம் 25ம் திகதி நிலுவைத் தொகையை தருவோம் என கூறுகின்றனர். அதுவும் நிதி கிடைத்தால் மட்டுமே கொடுப்பதாக கூறுகிறார்கள். நாங்கள் ஒரு சதம் கூட சும்மா கேட்கவில்லை. நாங்கள் உழைத்த பணம் இல்லாமல் வீட்டிற்கு செல்ல முடியாது,” என்று லசந்த கூறினார்.

"நாங்கள் ஒரு பயங்கரமான தொற்றுநோயின் கீழ் பணிபுரிந்தாலும், எங்கள் பாதுகாப்புக்கு எதுவும் கிடைக்க வில்லை" என்று வேலை மேற்பார்வையாளரான புத்திகா தெரிவித்தார். ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரும்போது, அவர்கள் முதலில் வைத்தியசாலை உதவியாளர்களையே சந்திக்கிறார்கள், என்று அவர் விளக்கினார். ஆனால் பாதுகாப்பு கவசங்களை அணிவது தேவையற்றது என்று நிர்வாகம் அவர்களுக்கு அறிவித்துள்ளது.

புத்திகா

தொழிலாளர்கள் முக கவசங்களை பெற்றுக்கொள்ள நன்கொடையாளர்களைக் கண்டுபிடிக்கத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

“எங்களுக்கு ஓய்வு அறை இல்லை. நாங்கள் நோய்வாய்ப்பட்டால் ஓய்வெடுக்க இடமில்லை. நாங்கள் மலசல கூடங்களில் உடைகள் மாற்றுகிறோம்,” என்று ஒரு தாதியான சுமித் தெரிவித்தார். “ஆர்ப்பாட்டம் செய்வதற்கான முடிவை நாங்களே எடுத்தோம். அதுபற்றி மக்கள் அரச சுகாதார சேவைகள் சங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

பொது போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால் வேலைக்கு சமூகமளிப்பது எவ்வளவு கடினமானது என்பதை தொழிலாளர்கள் விளக்கினர். சில தொழிலாளர்கள், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையான பணி முறை மாறுவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாததால், வீடு திரும்ப முடியவில்லை. கடமைக்கு செல்வதற்கான மேலதிகமாக பணச் செலவைத் தாங்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர, அரசாங்க ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஜெயசுந்தேராவின் வேண்டுகோளையும் மற்றும் சில நிறுவனங்களில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள சம்பள வெட்டையும் மருத்துவமனை ஊழியர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

மே 13 அன்று, மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம், அதிகாரிகளுக்கு வழங்கிய சுற்றறிக்கையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், "மே மாத சம்பளத்தை தயாரிக்கும் போது, மேலதிக நேரம், சீருடை கொடுப்பனவுகள் மற்றும் நிலுவைத் தொகையை சேர்க்க வேண்டாம் என்று மாகாண திறைசேரி கேட்டுக் கொண்டுள்ளது.”

இதேபோன்ற சுற்றறிக்கை, மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக நாடெங்கிலும் வைத்தியசாலை ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் வெளிப்பாடாக, கம்பாஹாவில் உள்ள வதுபிட்டிவல மருத்துவமனையின் ஊழியர்கள் சமீபத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளை அகற்றுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

அதே போல், ஏப்ரல் மாத மேலதிக நேர ஊதியத்தை மே மாத சம்பளத்துடன் சேர்க்காததை எதிர்த்து வலஸ்முல்ல மருத்துவமனையின் தொழிலாளர்களும் எதிர்த்து நின்றனர்.

அரசாங்கத்தின் இந்த தாக்குதல்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்வது ஒருபுறம் இருக்க, தமது தலைமைகளுக்கு அப்பால் இந்த போராட்டம் அபிவிருத்தியடைந்திருப்பதால், மருத்துவ சேவை சார்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டங்களை கலைப்பதற்கு செயல்பட ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் ஊடாக தொழிலாளர்களை கட்டுப்படுத்தி இப் போராட்டங்களை கலைத்துவிடுவதே அவர்களின் போக்கு ஆகும்.

இலங்கை அரச சுகாதார சேவைகள் சங்கத்தின் பலபிட்டி மருத்துவமனை கிளையின் செயலாளர் தயானி கண்டம்பி, தொழிலாளர்களின் கோரிக்கையை தாய் சங்கத்துக்கு தெரிவித்துள்ளார். தொழிற்சங்கமோ போராட்டத்தை இரண்டு மணி நேர மறியல் போராட்டத்திற்கு மட்டுப்படுத்தியது. மேலதிக நேர நிலுவைத் தொகையை செலுத்துமாறு தாய் சங்கமானது தென் மாகாண சபைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தயானி கண்டம்பி தெரிவித்தார்.

தயானி கண்டம்பி

இது ஆட்சியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளைப் பெறும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போராட்டத்தையே தொழிலாளர்கள் கோரினர்.

இந்த அனுபவங்கள், ஒரு புதிய வேலைத்திட்டத்தின் அவசியத்தையும், தங்களின் நலன்களுக்காகப் போராட ஒரு புதிய வடிவிலான அமைப்பின் தேவையையும் சுட்டிக்காட்டுகின்றன. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்,

Loading