கொரோனா வைரஸ் தொற்றுநோயானது “ஆபத்தான கட்டத்திற்குள்” நுழைவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தொற்றுநோய், ஒரு நாளில் அதிகபட்சமாக 150,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களை உறுதி செய்துள்ளதாக வியாழக்கிழமை உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் தரவுத் தளத்தின் படி, அந்த எண்ணிக்கை மொத்தம் 166,099 தொற்றுக்களாகும். Worldometer ஆல் பராமரிக்கப்படும் ஒரு தனி கண்காணிப்பு தரவுத்தளம், வெள்ளிக்கிழமை மொத்தம் 181,000 புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களுடன் இன்னும் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது.

மே 2 முதல், உலகெங்கிலும் உள்ள COVID-19 இன் மொத்த தினசரி தொற்றுக்களுக்கான ஏழு நாள் சராசரி, படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது ஏறக்குறைய 81,000 ல் இருந்து நேற்று 136,956 ஆக உயர்ந்து 70 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. தினசரி இறப்புகளில் ஏழு நாள் உலகளாவிய சராசரி 4,079 இறப்புகளுடன் மே 26 அன்று அதன் வேகத்தை எட்டி, பின்னர் மெதுவாக 4,649 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாள் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை நேற்று 5,000 க்கு மேல் உயர்ந்தது.

அனைத்து கணக்குகளின்படி, பில்லியன் கணக்கான மக்களை பாதித்த மற்றும் பூகோள முதலாளித்துவ பொருளாதாரத்தை சரிவுக்கு கொண்டு வந்த பாரிய பூட்டுதல்கள் இருந்தபோதிலும், சந்தைகளை திறப்பதற்கான கொள்கை முடிவு, எச்சரிக்கைகள் காற்றில் ஊதிவிடப்பட்டு தொற்றுநோய் வெல்லப்பட்டு அனைத்து வர்த்தக மற்றும் சமூக நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டும் மற்றும் தொற்றுநோய் வெறும் வரலாற்று குறிப்பு புள்ளியாக மாறியது என்பது சுத்த பைத்தியகாரத்தனமாகும். தொற்றுநோயின் விஞ்ஞான யதார்த்தத்தை சுற்றிவளைக்கவோ புறக்கணிக்கவோ முடியாது என்றாலும், சந்தைகளில் இலாபத்தை பாதுகாப்பதற்கான கோரிக்கைகளும் மற்றும் ஒவ்வொரு நாட்டின் ஆளும் உயரடுக்கும் முனிவர்களிடம் ஆலோசனைக்கு செல்வதும் தடுக்கமுடியாதுள்ளது.

பாதுகாப்பு உடைகள் மற்றும் சுவாசக் கருவிகளை அணிந்த ஒரு Servpro பேரழிவு மீட்புக் குழுவின் தொழிலாளர்கள், கிர்க்லாண்ட், வாஷிங்டனில் ஒரு நிலையத்தை சுத்தப்படுத்தி கிருமிநீக்கம் செய்கின்றனர். [Credit: AP Photo/Ted S. Warren]

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் Tedros Adhanom Ghebreyesus வெள்ளிக்கிழமை வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பில் பின்வருமாறு அறிவித்தார்: “உலகம் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. பலர் வீட்டிலேயே இருப்பதால் வெறுப்படைவதை புரிந்துகொள்ள முடிகிறது. நாடுகள் தங்கள் சேவைகளையும் வணிகங்களையும் திறக்க ஆர்வமாக உள்ளன என்பதை விளங்கிக்கொள்ளகூடியதாக உள்ளது. ஆனால் வைரஸ் இன்னும் வேகமாக பரவி வருகிறது. இது இன்னும் ஆபத்தானது, பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியா, சிலி, துருக்கி, மெக்சிக்கோ, பாக்கிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் உட்பட 81 க்கும் மேற்பட்ட நாடுகள் கடந்த இரண்டு வாரங்களில் COVID-19 தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் உலகின் பாதிக்கும் குறைவான நாடுகளே தொற்று குறைந்து வருவதாக தெரிவித்துள்ளன.

Worldometer இன் COVID-19 பின்தொடர்வின் கூற்றுப்படி, இந்த கட்டுரை எழுதும்போது COVID-19 இன் 8.75 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்குகள் உள்ளன. 462,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இது ஒவ்வொரு கணக்கிலும் இறப்புகளின் உண்மையான அளவைக் குறைத்து மதிப்பிடுவதாகும். புதிய தொற்றுக்குகளில் பாரிய பங்கை பிரேசில் வெள்ளிக்கிழமை கொண்டிருந்தது. இங்கு ஒரே நாளில் 55,209 நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது இன்றுவரை அதிகபட்ச ஒரு நாள் மொத்த தொகையாகும். மொத்தம் 1 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்குகளைத் தாண்டி இது அமெரிக்காவுடன் இணைந்தது. பிரேசில் 1,221 புதிய இறப்புகளை குறித்தது. இது யூன் 19 இல் வேறெந்த நாட்டையும் விட அதிகமானதுடன், அதனது மொத்த இறப்பை 49000 ஆக்குகின்றது.

ஜனாதிபதி ட்ரம்பும் அவரது நிர்வாகமும் பிரேசிலின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ போன்றவர்களுடன் பொது பாதுகாப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை முற்றிலும் புறக்கணிப்பதில் மிகவும் பொதுவான தன்மையை கொண்டுள்ளன.

எவ்வாறாயினும், நிதிய தன்னலக்குழுக்களின் கட்டளைகளை வெளிப்படுத்தும் ட்ரம்பின் நிராகரிக்கும் அணுகுமுறை மிகவும் மோசமான மற்றும் கணக்கிடப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளது. கிரே தொலைக்காட்சியின் ஜாக்குலின் பாலிகாஸ்ட்ரோவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்று ஒரு பெரிய பேரணியை நடத்த அவர் திட்டமிட்டுள்ள ஓக்லஹோமா உட்பட 22 மாநிலங்களில் புதிய தொற்றுக்கள் அதிகரிப்பது குறித்து ட்ரம்ப் இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாறு கூறினார், “நீங்கள் பார்த்தால், இருப்பதுடன் ஒப்பிடும்போது எண்கள் மிகக் குறைவு. அது குறைந்து கொண்டிருக்கிறது. மேலும், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். எதிர்காலத்தில் வெகு விரைவில் சில பெரிய அறிவிப்புகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால், நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை”.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இந்த வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு முன்பக்க கட்டுரையில் பின்வருமாறு எழுதினார்: “செய்திகளில் கவனம் செலுத்தப்படாது போனது என்னவென்றால், இன்று ஒவ்வொரு வாரமும் பரிசோதிக்கப்பட்ட அமெரிக்கர்களில் 6 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பதே… உண்மை என்னவென்றால் கடந்த நான்கு மாதங்களில் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டோம், இது ஜனாதிபதி ட்ரம்பின் தலைமைக்கு ஒரு சான்றாகும்”.

இந்த துணிவான கூற்றுக்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான புள்ளிவிவரங்கள் மிகவும் மாறுபட்ட விளக்கத்தை கொடுக்கின்றன. எவ்வாறாயினும், இந்த அறிக்கைகளின் பொருள் எளிதானது: வெடிப்பின் மீள் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக மேலும் அடைத்தல்கள் அல்லது பிற நடவடிக்கைகள் இருக்காது என்பதுதான்.

தென் கரோலினா மே மாத இறுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக 200 க்கும் குறைவான தொற்றுக்களில் இருந்து வெள்ளிக்கிழமை 1,083 தொற்றுக்களின் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த உயர்வுக்கு காரணம், குறிப்பாக பிரபலமான சுற்றுலா நகரமான மார்டில் கடற்கரையில் சில சமீபத்திய சுற்றுலாக்கள் ஆகும். மே மாத நடுப்பகுதியில், ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் முன்பதிவுகளை எடுத்துக்கொள்வதை மீண்டும் தொடங்க ஹோட்டல்களை அனுமதித்தார் மற்றும் உணவகங்களை திறக்க அனுமதித்தார். ஜூன் 1 ம் தேதி, மார்டில் பீச் அமைந்துள்ள ஹொரி கவுண்டியில் 22 புதிய தொற்றுக்குகள் இருந்தன. ஜூன் 17 க்குள், புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. இது மூன்று வாரங்களுக்கு முன்பு நினைவு நாள் வார இறுதி நாட்களுடன் இணைந்து நிகழ்ந்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தற்போது 660 மருத்துவமனை படுக்கைகளில் உள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவல்தரவின் படி, புளோரிடா இரண்டு நாட்களில் சாதனையை முறியடித்து வெள்ளிக்கிழமை 3,822 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது. அந்த மாநிலத்தின் குடியரசுக் கட்சியின் ஆளுநர் Ron DeSantis, அதிகமான சோதனைகள் நடந்திருப்பதாகவும், இளைய, ஆரோக்கியமான மக்களிடையே நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் அறிவுறுத்துவதன் மூலம் விமர்சனங்களை திசைதிருப்ப முயன்றார். பின்னர் அவர் "அதிகப்படியான ஹிஸ்பானிக்" நாளாந்த தொழிலாளர்களின் மத்தியில் அதிகரித்து வரும் எண்ணிக்கையை முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினார்.

"இவர்களில் சிலர் பள்ளி பேருந்தில் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் மீன்களைப்போல் நிரம்பியிருக்கிறார்கள், பாம் பீச் கவுண்டி அல்லது வேறு சில இடங்களுக்குச் செல்கிறார்கள். மேலும் இந்த வாய்ப்புகள் அனைத்தும் பரவுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளன," என்று அவர் கூறினார். இருப்பினும், புளோரிடா வேளாண்மை ஆணையர் Nikki Fried ஆளுநரின் கூற்றுக்கு சவால் விடுத்து, அறுவடை முடிந்த பின்னர் பெரும்பாலான விவசாயிகள் பல வாரங்களுக்கு முன்பு வெளியேறிவிட்டனர் என்றார்.

டெக்சாஸில் வியாழக்கிழமை 3,516 புதிய தொற்றுக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய நாளை விட 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். வெள்ளிக்கிழமை மேலும் 4,497 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அதிகரிப்புகள் அதிக சோதனைக்கு மட்டுமே காரணம் என்று கூறப்பட்ட போதிலும், பொது சுகாதார வல்லுநர்கள் நேர்மறையாக திரும்பி வரும் சோதனைகளின் சதவீதமும் உயர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து வரும் வெடிப்பைக் குறிக்கிறது.

Greater Houston பகுதியில் 26,000 தொற்றுக்குகள் காணப்படுகின்றன. இது முந்தைய வாரத்தை விட 1.2 மடங்கு அதிகமாக உள்ளது. ஹாரிஸ் கவுண்டி நீதிபதி லினா ஹிடால்கோ ஜூன் 22 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அனைத்து வணிகங்களிலும் முகமூடி அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும். இதனை "ஒரு சட்டை இல்லை, காலணிகள் இல்லை, முகமூடி இல்லை, சேவை இல்லை" என்ற ஒரு கொள்கையாக பார்க்க வேண்டும், என்று ஹிடல்கோ உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அரிசோனா வியாழக்கிழமை 2,519 தொற்றுக்குகளில் இருந்து வெள்ளிக்கிழமை 3,246 புதிய தொற்றுக்குகளில் ஒரு பெரிய அதிகரிப்பை கண்டது. இது 25 சதவீதத்திற்கும் அதிகமாகும். அவசர சேவைப் பிரிவு படுக்கைகளின் இருப்பு குறைந்து வருவதைக் காணும் மருத்துவ சமூகங்களின் அழுத்தம் இருந்தபோதிலும், குடியரசுக் கட்சி ஆளுநர் Doug Ducey மாநிலம் தழுவிய முகமூடி ஆணைகளை வழங்குவதை நிறுத்திவிட்டார். இதுபோன்ற கொள்கைகளைச் செயல்படுத்த நகரங்களையும் மாவட்டங்களையும் அனுமதிக்க விரும்புகிறார். இது ஒரு வகையான குற்றவியல் அலட்சியமாகும்.

வியாழக்கிழமை நிலவரப்படி, தென்மேற்கு மாநிலத்தின் உள்நோயாளிகள் படுக்கைகளில் 85 சதவீதம் நிரம்பியுள்ளன. COVID-19 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை புதன்கிழமை 1,667 ஆக இருந்து 24 மணி நேரத்தில் 1,832 ஆக உயர்ந்தது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுடன் புதன்கிழமை ஒரு நேர்காணலில், ஜனாதிபதி ட்ரம்ப், "வரலாற்றில் மிகப் பெரிய சோதனை இயந்திரத்தை நான் உருவாக்கியிருந்தாலும், சோதனை மிகைப்படுத்தப்பட்டதாக நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்," ஆனாலும், உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களின் அதிகரிப்பு பற்றி பார்க்கும்போது, "பலவழிகளில், இது நம்மை மோசமாக பார்க்க வைக்கிறது" என்றார்.

அத்தகைய நிராகரிக்கும் உணர்வை ஹார்வர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் டாக்டர் ஆஷிஷ் ஜா சமீபத்தில் சி.என்.என் இடம் "நாங்கள் தொற்றுநோயை முடித்துவிட்டதாக கருதலாம், ஆனால் தொற்றுநோய் எங்களை இன்னும் விட்டுவிடவில்லை." என்று கூறினார்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதைத் தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், தேவையற்ற இறப்புகளுக்கும் காரணமானது மட்டுமல்லாமல், எல்லா விதத்திலும் ட்ரம்ப் கோரிய நாட்டை முன்கூட்டியே மீண்டும் திறப்பது இத்தகைய மரணங்கள் முடுக்கிவிடப்படுவதற்கும் பாரிய அதிர்ச்சியடைந்த சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பிற்கும் மீண்டும் வழிவகுக்கும்.

இந்த மோசமான புறக்கணிப்பின் பாரிய அளவைப் பற்றிய ஒரு தன்மையை வழங்க, தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளின் தொற்றுநோயுடன் அமெரிக்காவின் பிரதிபலிப்பை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு சமீபத்திய ஆய்வில், 70 முதல் 99 சதவீத வைரஸால் இறந்த அமெரிக்கர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றது.

ஸ்டேட் நியூஸில் ஒரு ஆசிரிய கருத்தில், ஆராய்ச்சியாளர்கள் ஐசக் மற்றும் ஜேம்ஸ் செபினியஸ் பின்வருமாறு குறிப்பிட்டனர்: “அதிவேக வைரஸ் பரவல் காரணமாக, எங்கள் தாமதமான நடவடிக்கை பேரழிவை விளைவாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் பிரதிபலிப்பை அடுத்து, முதலில் 15 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களை தொடர்ந்து நான்கு மாதங்களில் 117,858 அமெரிக்கர்கள் இறந்தனர். இதேபோன்ற சமமான காலத்திற்கு பின்னர்… ஜேர்மனிய மக்கள் தொகையான 83.7 மில்லியனை அமெரிக்காவின் 331 மில்லியனாக உயர்த்தினால், அமெரிக்க அளவிலான ஜேர்மனியின் கோவிட் -19 ஆனது 35,049 இறப்புகளை சந்தித்திருக்கும்”.

பதினைந்தாவது உறுதிப்படுத்தப்பட்ட தொற்றின் முதல் 14 நாட்களில் அமெரிக்காவின் பிரதிபலிப்பு குறிப்பிடப்பட்ட நாடுகளை விட “மைல்கள்” பின்தங்கியிருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த வெடிப்பை அமெரிக்கா மற்ற நாடுகளைப் போலவே திறம்பட கையாண்டிருந்தால் 120,000 COVID-19 இறப்புகளில் 99 சதவீதம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று அது மதிப்பிடுகிறது.

Loading