50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை பிற்பகல் மருத்துவமனைக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என நடைபெற்ற தேசிய போராட்டங்களில் கலந்துகொண்ட 50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை பொலீசார் மோசமாக தாக்கி கைது செய்தனர், இது உலகம் முழுவதும் நியாயமான சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

பல கலவர பொலிஸ் அதிகாரிகளால் ஃபரிடா கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோ 2.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இது, மத்திய பாரிஸில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியான Invalides இல் நடந்தது. நாட்டில் 29,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான சுகாதாரத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, மேலதிக பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கான மேலதிக நிதி ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றனர்.

50 வயதான செவிலியர் ஃபரிடா சி செவ்வாய்க்கிழமை கலகப் பிரிவு போலீசாரால் அடித்து கைது செய்யப்பட்டார்

செவிலியர் பொலிஸாரால் கொடூரமாக கையாளப்பட்டு, அவர் வென்டலின் மருந்துக்கு மன்றாடுகையில், மூன்று ஆயுதமேந்திய கலக பொலிஸ் குழு, முகத்தில் இரத்தப்போக்குடன் இழுத்துச் செல்வதற்கு முன், அவரை உதைத்து விழுத்தி முகத்தை தரையில் உரசுவதைக் காணலாம். மற்றொரு வீடியோவில், ஏற்கனவே இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் பிடித்து வைத்திருக்கப்பட்டிருக்கும் அவரின் முகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி முழங்காலால் அழுத்துவதைக் காணலாம். தொழிலாளர்களை நோக்கிய பொலிஸாரின் வழமையான நடைமுறையின் எடுத்துக்காட்டாக, "வன்முறை இல்லை, நாங்கள் படமாக்கப்படுகிறோம்" என்று வீடியோவில் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்கலாம்.

பின்னர், மற்றொரு வீடியோவில் ஃபரிடா இழுத்துச் செல்லப்படும் வேளையில் கூச்சலிடுகையில் ஒரு பொலிஸ் அதிகாரி அவரது வாயை தன் கையால் மூடி பேசுவதைத் தடுக்கிறார். அப்போது ஒரு எதிர்ப்பாளர் கத்துவதைக் கேட்கலாம், “அவர் பேசுவதை அவர்கள் தடுக்கிறார்கள்! நீங்கள் காவல்துறையாக இருக்க வேண்டும், [பாசிச] குடிப்படையாக அல்ல!”

செவ்வாய்க்கிழமை மாலை ஃபரிடா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார், அந்த உள்ளூர் பொலிஸ் வளாகத்திற்கு வெளியே சமூக ஊடகங்களால் அழைக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. #LiberezFarida (“Free Farida”) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பரவலாக பகிரப்படுகிறது.

இந்த வீடியோக்கள் சில நிமிடங்களில் இணையத்தில் பரவியதால், பல்வேறு வலதுசாரி வர்ணனையாளர்கள், சுகாதார ஊழியராக ஆள்மாறாட்டம் செய்வதற்காக ஃபரிடா ஒரு வெள்ளை கோட் மட்டுமே அணிந்திருந்ததாகக் கூற முயன்றனர். இந்த பொய் விரைவிலேயே அகற்றப்பட்டது. France24 மற்றும் BFM-TV இன் பத்திரிகையாளரான அவரது மகள், அந்த வீடியோவை மறு டுவீட் செய்துள்ளார். அதில் “இந்த பெண், அவர் எனது அம்மா. ஐம்பது வயது, ஒரு செவிலியர், அவர் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை மூன்று மாதங்கள் பணியாற்றியுள்ளார். அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று, அவர் தனது ஊதியத்தை சரியாக மதிப்பிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார். அவர் ஆஸ்துமா நோயாளி. அவர் தன்னுடைய செவிலியர் மேலாடையை அணிந்திருந்தார். அவர் 1 மீ 55 செ.மீ [5'1 ”] உயரம் கொண்டவர்” என சேர்த்துள்ளார்.

பொலிஸ் தடுப்புக்காவலில் தனது தாயார் மேலும் தாக்கப்படலாம் அல்லது மோசமாக இருக்கக்கூடும் என்ற ஆபத்தைக் குறிப்பிட்டு, 2016 ஆம் ஆண்டில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட 24 வயதான பிரெஞ்சு இளைஞரான அடாமா ட்றவுரே இன் உதாரணத்தை மேற்கோள் காட்டினார், அவரது மரணம் கடந்த இரண்டு வாரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஊக்கமளித்திருந்தது. அவர் மேலும் கூறுகையில், “அவர்கள் தொலைபேசியில் என்னிடம் சொல்லத் துணிந்தார்கள், ‘வீடியோக்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் எங்களை நம்புங்கள், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால், அவர் விடுவிக்கப்படுவார்’. ஆமாம், உதாரணமாக, அடாமா ட்றவுரே போல? அவர் இன்னும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தகைய கைதை எந்தவொரு வழியிலும் எதையும் நியாயப்படுத்த முடியாது. ஒருவர் ஆயுதம் ஏந்தாதபோது, மருத்துவமனை கோட் அணிந்து, ஆயுதம்தரித்த பொலிசுக்கு எதிராக” என்றார்.

அன்று மாலை ஃபரிடா விடுவிக்கப்பட்டார், ஆனால் "கிளர்ச்சி," "பொலிஸை அவமதித்தல்" மற்றும் வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்படுவதற்கு முன்னர் பலத்த கவசக் கலவர காவல்துறையினரிடம் சிறிய எறிபொருள்களை வீசியதாக அவர் ஒப்புக் கொண்டார், அரசாங்கத்தின் நடத்தை குறித்து அவர் கோபமடைந்ததாகக் கூறினார்.

பொலிஸ் தாக்குதல் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் சில அடிப்படை உண்மைகளை அடிக்கோடிட்டுக் காட்ட உதவுகிறது.

எல்லாவற்றுக்கும் முதலாவதாக இச்சம்பவம், இரவு 8:00 மணிக்கு சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டுகையில், தொற்றுநோய் முழு நாட்டையும் முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கு பின்னால் "ஒன்றிணைத்துள்ளது" என்ற மக்ரோன் அரசாங்கத்தின் ஏற்கெனவே இழிவுபடுத்தப்பட்ட பாசாங்கை சிதைக்கிறது. பல தசாப்தங்களாக சுகாதார நிதியை குறைத்துள்ள அதிகாரிகளின் குமட்டல் கருத்துதெரிவிப்புக்கள், உண்மையில், தேசிய ஒற்றுமையின் இந்த முகப்பின் பின்னால் இருக்கும் வர்க்க நலன்களை முற்றிலும் அம்பலப்படுத்துகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கும் மருத்துவமனைகளுக்கான வளங்களை அதிகரிப்பதற்கும் அதே சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார நிபுணர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளுக்கு ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் முதல் பதிலிறுப்பு வெளிப்படையான அடக்குமுறையாகும்.

மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைகள் நோயை எதிர்த்துப் போராடுவது அல்ல, ஆனால் பிரெஞ்சு பெரு வணிகங்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும், இதில் கிட்டத்தட்ட 400 பில்லியன் யூரோக்கள் பிரெஞ்சு நிறுவனங்களின் கடன்களுக்கான உத்தரவாதம் உள்ளது. ஆபத்தான வைரஸ் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும் வேலை கொள்கைக்கு திரும்புவதை அரசாங்கம் இப்போது பின்பற்றுகிறது. இந்தக் கொள்கைக்கு எதிரான எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் அடக்குவேன் என்பதை அவர் திமிர்த்தனமாக தெளிவுபடுத்தியுள்ளார். நூற்றுக்கணக்கான கனரக ஆயுதம் ஏந்திய கலகம் அடக்கும் பொலிஸை, செவிலியர்களின் ஒரு தேசிய ஆர்ப்பாட்டத்திற்கு அனுப்ப அவர் எடுத்த முடிவை இந்த சூழலில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

சுகாதார ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மருத்துவமனைகளுக்கு அதிகரித்த நிதி ஆகியவற்றிற்கு பாரிய ஆதரவு இருந்தபோதிலும், செவிலியர்களின் ஊதியத்தில் ஏதேனும் அதிகரிப்பு, சுகாதாரத் துறையில் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களால் ஈடுசெய்யப்படுவதை விட அதிகமாக இருக்கும் என்று மக்ரோன் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரான் கடந்த மாதம், சுகாதார ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றுவதைத் தடுக்கும் "straitjackets" என்று அவர் அழைத்ததை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கும் என்று கூறினார், அதாவது வாரத்திற்கு 35 மணி நேர வேலை என்பதற்கு முடிவு என்று அர்த்தமாகும். சுகாதார செலவினங்களைக் குறைப்பது, ஆளும் வர்க்கத்தால் செல்வந்தர்களின் பிணை எடுப்புக்கு நிதியளிப்பதற்காக சமூக சேவைகளிலிருந்து பெருமளவில் செல்வத்தை மாற்றுவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டதன் மூலம் தூண்டப்பட்ட பொலிஸ் வன்முறைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய இயக்கத்தின் பின்னணியில் ஃபரிடாவின் கைது நடைபெறுகிறது. பொலிஸ் வன்முறை ஒரு உலகளாவிய நிகழ்வு என்பதால் ஆர்ப்பாட்டங்கள் ஒரு உலகளாவிய இயக்கத்தைத் தூண்டின. முதலாளித்துவ சமுதாயத்தில் பிரேசில் முதல் பிரான்ஸ், நியூசிலாந்து வரை, உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க காவல்துறையினர் அடிப்படையில் அதே சமூக செயல்பாட்டைச் செய்கிறார்கள்.

அரபு வம்சாவளி பிண்ணணியை சேர்ந்த வெள்ளைத் தொழிலாளி ஃபரிடா மீதான தாக்குதல், பொலிஸ் வன்முறையின் இலக்குகள், அனைத்து இனத்தினதும், அனைத்து தோல் நிறங்களினதும் தொழிலாளர்கள் என்பதற்கு மற்றொரு நிரூபணம் ஆகும். பிரான்சில், அடாமா ட்ரொரேவின் கொலையின் வேளையில் நடந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்ட அதே பொலிஸ் படைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியான "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக வெகுஜன அடக்குமுறையை நடத்தியுள்ளன. டஜன் கணக்கான தொழிலாளர்கள் ஸ்டன் கையெறி குண்டுகளால் துண்டிக்கப்பட்டு தங்கள் கைகளை இழந்தனர், இரப்பர் தோட்டாக்களால் தாக்கப்பட்டு கண்களை இழந்தனர். சர்வதேச மட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில், ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் பொலிஸ் வன்முறைகளை மேற்கொண்டு அடக்குமுறை சக்திகளை கட்டமைத்து வருகிறது.

Loading