இலங்கை வைத்தியசாலை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பது எவ்வாறு?

By Socialist Equality Party
29 June 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வெட்டப்படுவதற்கும், மோசமான வேலை நிலைமைகளுக்கும் எதிராக, மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பு தோன்றியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மேலதிக நேர கொடுப்பனவை இதுவரை செலுத்தாமல் இருப்பதற்கு எதிராக, தென் மாகாண சபையால் நிர்வகிக்கப்படும் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் 197 பேர் ஜூன் 11 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

அல்பிட்டிய மற்றும் வலஸ்முல்ல மருத்துவமனைகளின் கனிஷ்ட ஊழியர்கள், ஜூன் 15 அன்று வேலைநிறுத்தத்தில் சேர்ந்துகொண்டதோடு அன்று காலை மறியல் போராட்டத்தையும் நடத்தினர். அதே நாளில், ஹம்பந்தொட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தாதி ஊழியர்கள் நான்கு மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேல் மாகாண சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் உட்பட அனைத்து மருத்துவமனை நிர்வாகமும் ஜூன் 16 முதல் கருப்பு பட்டிகளைக் அணிந்து வேலை செய்யும் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக, வதுபிட்டிவல, பலபிட்டிய, வலஸ்முல்ல, கண்டி, கம்பாஹா மற்றும் தம்புல்லா மருத்துவமனைகளில் உள்ள தொழிலாளர்கள் இதே கோரிக்கைகளின் அடிப்படையில் மே 20 முதல் 26ம் வரையான நாட்களில் மறியல் போராட்டங்களை நடத்தினர்.

இந்த போராட்டங்களுக்கான உடனடி காரணம், ஏப்ரல் மாதத்தில் மேலதிக நேர ஊதியம் வழங்கப்படாமையாக இருந்த போதிலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் நீண்டகாலமாக நடமுறைப்படுத்தப்பட்டு வந்த சிக்கன நடவடிக்கைகள் ஊடாக, தமது தொழில்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்பட்ட பாரிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டு வந்த கோபம் வெடிப்பு நிலையை அடைந்திருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற கடுமையாக உழைக்கும் அதே வேளை, வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கூட வழங்காமல் தங்களது சொந்த வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் விரோதப் போக்கு இந்த வெடிப்பை துரிதப்படுத்தியுள்ளது.

மருத்துவமனை ஊழியர்களுக்கு "சுகப்படுத்தும் வீரர்கள்" என்று ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கியுள்ள கௌரவப் பெயரின் மோசடி தன்மை, இந்த வெட்டுக்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் சம்பந்தமாக காட்டும் அலட்சியத்தின் மூலம் நன்கு வெளிப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், "தொடர்ச்சியாக சேவையில் இருப்பதன் காரணமாக சுகாதார ஊழியர்களின் மத்தியில் நிலவும் பதட்ட நிலைமையை குறைப்பதாக" கூறி, அவர்களது குடும்பங்கள் ஆடம்பர ஹோட்டல்களில் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுப்பதாக அரசாங்கம் கூறுகிறது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிக மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அவர்களிடையே போட்டியை உருவாக்கி, ஒருவருக்கொருவரை பிளவுபடுத்துவது, போலி வசதிகளை வழங்கி தொழிலாளர்களை “ஊக்குவிப்பதன்” மூலம் வேலையை விரைவுபடுத்துவது, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பைத் திசை திருப்புவதுமே அரசாங்கத்தின் இந்த மோசடி தாராள மனப்பான்மை நடவடிக்கையின் உண்மையான நோக்கம் ஆகும்.

சுகாதார ஊழியர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள், கொரோனா தொற்றுநோயால் ஆழப்படுத்தப்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதை இலக்காகக் கொண்டு, உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களால் தொடங்கப்பட்டுள்ள உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

இராஜபக்ஷ அரசாங்கமும் முதலாளித்துவ எஜமானர்களும், கொரோனா தொற்றுநோயிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறை என்பதை தூக்கிப் பிடித்து, அரசாங்க மற்றும் தனியார் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினரை மட்டும் மீண்டும் வேலைக்கு சேர்ப்பதன் மூலமும், சாதாரண மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதன் மூலமும் வேலை வெட்டுக்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சமாந்தரமாக தனியார் மருத்துவமனைகளிலும் மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் வெட்டப்பட்டுள்ளன. டர்டன்ஸ், லங்கா மற்றும் ஆசிரி போன்ற பெரிய தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் உட்பட பிற தொழிலாளர்கள், நாடு மூடப்பட்டிருந்த காலத்தில் இந்த மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த கொடுப்பனவு வெட்டுக்கள், நாடு மீண்டும் திறக்கப்பட்டு பெரும் வருமானத்தை ஈட்டியுள்ள நேரத்திலும் கூட தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சுகாதார சேவை உட்பட அனைத்து அரசாங்க மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களும், தொழிலாளர்கள் மத்தியில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களை தனிமைப்படுத்தி பயனற்ற போராட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி, கருக்கலைப்பு செய்யும் ஒரு நனவான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தென் மாகாணத்தில் பலபிட்டிய, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம மருத்துவமனைகளில், சிற்றூழியர்களின் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் ஜூன் 16 அன்று நிறுத்தின.

அரசாங்க சேவை தாதிமார் சங்கமானது ஹம்பந்தொட்ட மாவட்டத்தில் மருத்துவமனைகளில் அதுவே அழைப்பு விடுத்த, செவிலியர்களின் வேலைநிறுத்தத்தை, நான்கு மணி நேரத்துக்கு மட்டுப்படுத்தியது. தொழிலாளர்களோ அதைத் தொடர வேண்டும் என்று கோரினர்.

மேல் மாகாண சபைக்கு உரிய வைத்தியசாலைகளில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அழைப்புவிடுத்த தொழிலாளர்களின் பிரச்சாரத்தை, கறுப்பு பட்டி கட்டுதல் மற்றும் எதிர்ப்பு பதாகைகளை காட்சிப்படுத்துதல் போன்ற வெற்று எதிர்ப்பாக அந்த சங்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு மாகாணத்தில் மட்டுமன்றி, எல்லா மாகாணங்களிலும் மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள சில மருத்துவமனைகளிலும் இந்த வெட்டுக்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் கடந்த பல தசாப்தங்களாக இலவச சுகாதார சேவையை திட்டமிட்டு அழிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும், கொரோனா தொற்றுநோயின் மத்தியில் மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கும் எதிராக, இந்த தொழிற்சங்கங்கள் எந்தவொரு போராட்டத்தையும் ஒழுங்கமைக்க மறுத்துவிட்டன.

முதலாளிகளின் இலாபம் ஈட்டும் நடவடிக்கையை மீட்டெடுப்பதற்கான அவசியத்தை, அதாவது "பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு" ராஜபக்ஷ அரசாங்கம் அமுல்படுத்தி இருக்கும் கொள்கைக்கு தோள் கொடுக்கும் இந்த தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திற்கு எதிராக மருத்துவமனை ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் ஒன்று வெடிக்கும் சாத்தியத்தை பற்றி பீதியடைந்துள்ளது.

மேல் மாகாணத்தில் பிரச்சாரம் சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கையில், குறித்த கொடுப்பனவுகளை அரசாங்கம் செலுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை “பாரதூரமாக” இருக்கும் என்று, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அரசாங்கத்துக்கு “எச்சரித்துள்ளது”. கொடுப்பனவை செலுத்தாவிட்டால், “அதிருப்தி நிலைமை” ஒன்று ஏற்படும் என்று, மே 23 அன்று சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.எஸ். முணசிங்கவுக்கு எழுதிய கடிதத்தின் மூலம், அரச சேவைகள் ஐக்கிய செவிலியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த பிக்குவும் இதேபோன்ற போலி எச்சரிக்கையை அரசுக்கு விடுத்திருந்தார்.

மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினத்தில் ஆற்றிய ஒரு உரையில், கொரோனா வைரஸால் செவிலியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை பற்றி ஒரு வசனத்தில் கூட ராஜபக்ஷ அரசாங்கத்தை குற்றம் சாட்டாத, அரசாங்க தாதிமார் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, செவிலியர்கள் கஷ்டங்களை எதிர்கொண்டு சேவையில் ஈடுபடுவதாக போலி வருணனைகளை செய்தார்.

"உபகரணங்கள் இல்லை, முகமூடிகள் இல்லை, கொகைஸ் இல்லை, துணி இல்லை அல்லது பூட்ஸ் இல்லை என்று நாங்கள் எந்த கடமையையும் மறுத்ததாக எந்த செய்தியும் இல்லை. எல்லா சிரமங்களும் இருந்தபோதிலும், அவர்கள் இன்னும் இந்த கடமைகளைச் செய்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டு, செவிலியர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டத்திற்கு வரமால் இருப்பதையிட்டு பாராட்டினர். இது, அவரும் அவரது தொழிற்சங்கமும் ஒருபோதும் இதுபோன்ற போராட்டத்துக்கு தலைமை கொடுக்காது என ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியாகும்.

மருத்துவமனை ஊழியர்களிடையே நீண்டகாலமாக செயல்பட்டு வந்த இந்த பழைய தொழிற்சங்கம் சீரழிந்து போயுள்ள நிலைமையின் கீழ், போலி போர்க்குணத்தை காட்டி அந்த நிலைமையை சுரண்டிக்கொள்வதற்கு அரச தாதிமார் சங்கம் மிக விரைவாக முன்வந்துள்ளது. போலி-இடது அமைப்பான முன்நிலை சோசலிஸ்ட் கட்சி சார்ந்த தொழிற்சங்கமும், அதன் தீவிர வாய்ச்சவடால்களில் மட்டுமே ஏனைய தொழிற்சங்கங்களில் இருந்து வேறுபடுகிறது.

இன்றும் முற்றிலும் சீரழிந்துள்ள ரத்னபிரியவின் அரச தாதிமார் சங்கம், இதேபோன்ற தீவிரப் போக்கைக் காட்டிக்கொண்டே 1990 களில் தலைநீட்டியது. உற்பத்தியின் உலகமயமாக்கலுடன், தொழிற்சங்கங்கள் என்ற இந்த தேசியவாத எந்திரத்தின் செல்லுபடியாகும் தன்மை, வரலாற்று ரீதியாக இல்லாமல் போய், அது முதலாளித்துவத்தின் நேரடி அங்கமாக ஆகியுள்ளதன் காரணமாக, முந்தைய தொழிற்சங்கங்களில் இருந்து வேறுபட்ட வகிபாகம் ஒன்றை முன்னிலை சோசலிசக் கட்சியின் தொழிற்சங்கத்துக்கும் இட்டு நிரப்ப முடியாது என்பது மேலும் மேலும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த தாக்குதல்கள், உலக முதலாளித்துவ அமைப்பு வரலாற்று ரீதியாக எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்தே ஊற்றெடுக்கின்றன. இந்த நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலம், சுகாதாரப் பணியாளர்களுக்கு அல்லது தொழிலாள வர்க்கத்தின் வேறு எந்தப் பிரிவினருக்கும், தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களுக்கு தள்ளப்படும் தொழிலாள வர்க்கம் சம்பந்தமாக, இராஜபக்ஷ அரசாங்கத்தின் பதிலிறுப்பு கொடூரமான அடக்குமுறையே ஆகும்.

இராணுவத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சிக்கு மாறுவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுத்து வரும் இராஜபக்ஷ அரசாங்கம், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வென்று, அதற்குத் தேவையான அரசியலமைப்பு மற்றும் சட்ட அதிகாரத்தைப் பெறுவதற்கே முயல்கிறது.

சுகாதார ஊழியர்கள் உட்பட அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு, ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தங்கள் உரிமைகளை வெல்ல முடியும். தங்களது உரிமைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு ஆர்வமுள்ள சுகாதார ஊழியர்களுக்கு, பின்வரும் பரிந்துரைகளை நாங்கள் வழங்குகிறோம்.

* வேலைகள், ஊதியங்கள், பாதுகாப்பான தொழில் நிலைமைகள் மற்றும் இலவச சுகாதார சேவைகளைப் பாதுகாப்பதற்காகப் போராட வேண்டுமெனில், பயனற்ற பிரச்சாரங்களுக்குள் தொழிலாளர்களின் போராட்டங்களை சிறைப்டுத்தி, அரசாங்கத்தின் தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் தொழிற்சங்கங்களிலிருந்து வெளியேறி, தங்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்துகொள்ளப்படும் சுகாதாரத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றும் சுகாதார சேவைகளிலும் ஸ்தாபிக்க வேண்டும்.

* அதன் மூலம் தொழிற்சங்கவாத மற்றும் தராதரவாதத்துக்கும் எதிராக, அனைத்து மருத்துவர்களையும் ஏனைய மருத்துவமனை ஊழியர்களையும் ஒன்றிணைக்கவும், உள்நாட்டில் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினருடனும், உலகின் ஏனைய சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டம் ஆகும். அதாவது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கி வீசி, சோசலிச முறையில் திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும்.

இந்த போராட்டத்தை வழிநடத்துவதற்கும் அதை மேம்படுத்துவதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தில், சுகாதாரஊழியர்களுக்கான சோ.ச.க. செய்தி என்ற செய்திமடலைத் தொடங்க சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) முடிவு செய்துள்ளது. அதற்கு பங்களிப்பு செய்யுமாறும் உங்கள் கருத்துக்களையும் பிரச்சினைகளையும் அதற்கு அனுப்பி வைக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கின்றது.