இலங்கை சாமிமலை கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வழிநடத்தல் குழுவை அமைத்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழிகாட்டுதலின் கீழ் சாமிமலை கிளனுகி பெருந்தோட்டத்தின் கிளனுகி பிரிவில் உள்ள தொழிலாளர்கள், ஜூன் 7 அன்று தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக ஒரு வழிநடத்தல் குழுவை அமைத்தனர். ஊதியக் குறைப்பு மற்றும் கடினமான வேலை நிலைமைகளுக்கு எதிராக ஜூன் 4 அன்று ஆரம்பித்த நான்கு நாள் வேலை நிறுத்தத்தின் மத்தியில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

கிளனுகி தோட்டத்தின் கிளனுகி மற்றும் டீசைட் ஆகிய இரு பிரிவுகளிலும் சுமார் 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவை மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியினால் நிர்வகிக்கப்படுகின்றன.

கிளனுகி பிரிவில் இருந்து டீசைட் பிரிவில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊர்வலமாக சென்ற வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளரை தங்கள் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு அழைத்தார்கள். தொழிற்சாலைக்குள் கலந்துரையாட வருமாறு தொழிலாளர்களை அழைத்த முகாமையாளர், பின்னர் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்காக தொலைபேசி மூலம் மஸ்கெலியா பொலிஸை அந்த இடத்திற்கு அழைத்தார்.

கொரொனா தொற்றுநோய் பரவுகின்ற காரணத்தினால் ஒன்று கூடலுக்கு இடமளிக்க முடியாது என்றும் கலைந்து செல்லுமாறு பொலிசார் தொழிலாளர்களுக்கு கூறினர். முகாமையாளருடன் எங்கள் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடிய பின்னர் கலைந்து செல்வதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர், ஆனால் பொலிசார் அதனை அனுமதிக்கவில்லை. பின்னர் கலைந்துபோன தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர முடிவு செய்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகிய தொழிற்சங்கங்களுக்கு வெளியே சுயாதீனமாக, கிளனுகி பிரிவைச் சேர்ந்த சுமார் 150 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலனோர் பெண்கள் ஆவர்.

ஆரம்பத்தில் இருந்தே தொழிலாளர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு இ.தொ.கா மற்றும் NUW தலைவர்கள் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட்டனர். ஊர்வலம் தொடங்கியபோது இ.தொ.கா. மற்றும் NUW தலைவர்கள் தலைமறைவாகி விட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

"எமது ஊதியங்களை வெட்டும் போது கூட, இந்த தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்தின் பக்கமே இருக்கிறார்கள். கொரோனா தொற்றுநோய் மற்றும் குளவிகள், சிறுத்தைகள், பாம்புகள் போன்ற ஆபத்து விளைவிக்கும் விலங்குகளுக்கு மத்தியில் நாங்கள் வேலை செய்கிறோம். ஆனால் இந்த சூழ்நிலையில் கூட நிர்வாகத்தினர் எங்கள் சம்பளத்தை குறைக்கிறார்கள். அத்துடன் தோட்ட நிர்வாகம் எமது தேயிலை தொழிற்சாலையை மூட முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் எமது தோட்டக் கொழுந்தின் ஒரு பகுதி வேறு தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு மூடப்பட்டால் சுமார் 60 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.”

வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அது ஏனைய பிரிவு தொழிலாளர்களுக்கும் பரவும் என தோட்ட நிர்வாகம் அஞ்சியது. ஜூன் 6 அன்று தோட்ட உதவி முகாமையாளர் NUW தொழிற்சங்கத் பிரதிநிதிகளுடன் தொழிலாளர்களை சந்தித்து, மூன்று இலை கொழுந்து பறிக்கும் நிபந்தனையை நீக்குவதாகவும், முகாமையாளர் கொழும்பிலிருந்து வந்தபின் மற்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்படும் எனவும் தொழிலாளர்களிடம் உறுதியளித்தார். பொலிசாரை அழைத்தமைக்கு முகாமையாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்தில் தருமாறும் தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையை அவர் மறுத்துவிட்டார். ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதிலேயே அக்கறை காட்டினார்கள்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் கடந்த ஐந்து மாதங்களில் தாம் மிகவும் கடினமான நிலைமைகளை எதிர்கொண்டதாக தொழிலாளர்கள் உலகசோசலிசவலைத்தளத்திடம் தெரிவித்தனர் .

“நாங்கள் கடனில் வாழ்கிறோம். அன்றாட சாப்பாட்டு சாமான்களை வாங்குவதற்கு எல்லா நகைகளையும் அடகு வைத்துவிட்டோம். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை நான்கு மாதங்களும் வரட்சிக் காலம். இதனால் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருந்தன. கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க தோட்ட நிர்வாகம் எந்த வசதிகளையும் வழங்கவில்லை. மாஸ்க் கூட எங்கள் பணத்தில்தான் வாங்கினோம். தினசரி வேலை இலக்கான 16 கிலோ தேயிலைக் கொழுந்தை பறிக்கத் தவறியதால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அரை நாள் சம்பளத்தையே பெற்றார்கள். 12 கிலோவுக்கும் குறைவாக கொழுந்து பறித்த தொழிலாளரின் சம்பளம் அரைவாசியாக வெட்டப்பட்டது. தொற்றுநோய்க்கு மத்தியில் வேலை செய்ததால் எங்களுக்கு அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரண நிதியும் கிடைக்கவில்லை.

“இப்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், தேயிலை கொழுந்து வளர்ந்து வருகின்றன, ஆனால் தோட்ட நிர்வாகம் மூன்று இலை மட்டுமே எடுக்க வேண்டும் என வற்புறுத்தியது. இதன் விளைவாக, தொழிலாளர்கள் தங்கள் அன்றாட இலக்கை அடைந்த பின்னர் மேலதிக கொழுந்தை அறுவடை செய்வதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வருமானத்தை இழக்கின்றனர்.

“மேலதிக கொழுந்து ஒரு கிலோவுக்கு 40 ரூபா வழங்கப்படுகின்து. நாளொன்றுக்கு ஐந்து கிலோ கொழுந்து கூடுதலாக எடுத்தால் 200 ரூபாய் மேலதிகமாக பெறமுடியும், புதிய நிபந்தனையின் அடிப்படையில் தொழிலாளர்கள் தமது நாளாந்த இலக்கை அடையமுடியாது. இதனால் மேலதிக வருமான வாய்ப்பை இழக்கின்றனர். கொழுந்து பருவ காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பதன் மூலம் கடனை அடைக்க எதிர்பார்த்தோம் ஆனால் இப்போது அது சாத்தியமற்றது. தோட்ட நிர்வாகம் இந்த புதிய நிபந்தனைகளை தொழிற்சங்கங்களின் ஆதரவுடனேயே நடைமுறைப்படுத்தியது. அதனால் தான் நாங்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம்,” என வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

1,000 ரூபா நாள் சம்பள உயர்வு கோரி நடந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்த தோட்ட தொழிற்சங்கங்கள், வேலை இலக்குகளை அதிகரிக்கவும், தினசரி ஊதியம் மற்றும் ஓய்வூதிய நிதியை அகற்றவும், வருமான விநியோக முறையை அமல்படுத்தவும் தோட்ட நிறுவனங்களுடன் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த நிலைமைகளுக்கு எதிராக பல தோட்டங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களும் எழுந்தன. இது தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக, கிளனுகி தோட்டம் மற்றும் சாமிமலைப் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தலையிட்டு வருகின்றது. பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கும் தொழிற்சங்கங்களின் துரோகங்களுக்கும் எதிராக ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க வேலைத்திட்டத்துடனும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குடனும் தோட்டத் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்க சோ.ச.க. எடுத்த நடவடிக்கையின் விளைவாக, கிளனுகி தொழிலாளர்களிடையே ஒரு வழிநடத்தல் குழுவை அமைக்க முடிந்தது.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, “அத்தகைய செயற்குழு என்பது தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஆயுதம், இது தொழிற்சங்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் அதன் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுகப்படுவதோடு அவர்களின் முடிவுகள் ஜனநாயக வழிமுறையில் எடுக்கப்படுகின்றன என்றும் விளக்கினார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் ஆயுதமாகும்" என்று அவர் கூறினார்.

வழிநடத்தல் குழுவின் செயலாளராக சோ.ச.க உறுப்பினர் கே. காண்டீபனும் தலைவராக எம். ரவிச்சந்திரனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

சோ.ச.க.வின் தலையீட்டால், 2018 ஊதிய போராட்டத்தின் போது ஹட்டனில் உள்ள எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக சோ.ச.க. முன்னெடுக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் நடவடிக்கைக் குழுக்களை ஒழுங்கமைத்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த சோ.ச.க. போராடும்.

Loading