அடிபணியா பிரான்ஸ் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் பாரியளவில் பிரெஞ்சு இராணுவத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட Journal de Dimanche உடனான ஒரு போர் வெறி பிரச்சார நோக்குடைய நேர்காணலில், அடிபணியா பிரான்சின் (LFI) தலைவரான ஜோன்-லூக் மெலோன்சோன், பாரியளவில் இராணுவத்தினை கட்டியெழுப்பவும், பெரிய போர்களுக்கு பிரான்சினை தயாரிக்கவும் அழைப்பு விடுத்தார்.

"தேசிய பாதுகாப்பு குறித்த எங்கள் கருத்துப்பாட்டை கேள்விக்குட்படுத்துவோம்" என அவர் கூறியதுடன். "எங்கள் பிரதேசத்தின் பாதுகாப்புகள் உத்தரவாதப்படுத்தபட்டுள்ளனவா? “பிரான்சின் முழுக்கடல் பகுதிகளையும் ஒரு கடற்படையினை பயன்படுத்துவதன் ஊடாக தொடர முடியுமா? இது பிரெஞ்சு முழுதேசத்தினையும் இரண்டு பொலீஸ் கார்களை கொண்டு கண்காணிப்பது போலல்லவா இருக்கிறது?”

இணையவழி தாக்குதல் மற்றும் விண்வெளியில் எதிராளியின் தகவல் தொலைதொடர்புகள் ஊடுருவல் செய்யப்படும்போது [பிரெஞ்சு] அணு ஆயுதங்களின் தடுப்பு செயல்பாடுகளின் தன்மை என்னவாக இருக்கிறது?" பிரெஞ்சு ஆயுதங்கள் போதுமானதாக இல்லை என்று கூறப்படும் கோபத்தை அடக்க முடியாமல், மெலோன்சோன் கூறினார், “இது, துப்பாக்கிகளின் காலத்தில் நாங்கள் அம்பு வில்லுகளை ஆயுதமாக ஏந்தி முன்னால் செல்வது போலாகும். 21 ஆம் நூற்றாண்டில், மூன்று புதிய மோதல் களங்கள் திறக்கப்பட்டுள்ளன: கடல், விண்வெளி மற்றும் மின்வெளி (cyberspace). வல்லரசுகளின் நிலைமைகள் இனி ஒரே மாதிரியாக இருக்காது. இந்த பகுதிகளில் பிரான்ஸ் தீவிரமாக இருக்க வேண்டும். எங்களுக்கு எல்லா மனித மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளும் உள்ளன. இது, கண்டுபிடிப்பு மற்றும் உற்சாகத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கூட்டு ஊக்கமாக இருக்கும்".

இராணுவ சக்தியின் வளர்ச்சிக்கு "கூட்டு உற்சாகம்" என்ற அவரது அழைப்பின் எந்தவொரு தாக்கத்தையும் பற்றி மெலோன்சோன் குறிப்பிடவில்லை. எந்த நாடுகளுக்கு எதிராக அணுசக்தித் தாக்குதல்களை நடத்த அல்லது செயலிழக்கும் சைபர் தாக்குதல்களை நடத்த பிரான்ஸ் தயாராக இருக்க வேண்டும்? இத்தகைய தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள்?

மெலோன்சோன் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான ஆதரவாளராகப் பேசுகிறார், செயல்படுகிறார், ஏனென்றால் அப்படியான ஒருவராகவே அவர் இருக்கிறார். புவிசார் மூலோபாய வளங்கள் மற்றும் சந்தைகளின் மீதான கட்டுப்பாட்டை "தேசிய பாதுகாப்பு" என்று உறுதிப்படுத்துவதனூடாக பிரெஞ்சு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நோக்கங்களை அவர் முன்வைக்கிறார். மக்ரோன் நிர்வாகத்தின் மீதான அவரது விமர்சனம் வலதுசாரித்தனமாக உள்ளது: உலக வளங்களை கொள்ளையடிக்கும் நலன்களைப் பின்தொடர்வதில் அது போதுமான அளவு ஆக்கிரோஷமாக இல்லை என்பதாகும்.

"கூட்டு உற்சாகத்தின்" ஆதாரமாக, ஆயுதப் பந்தயத்திற்கான அழைப்பு என்பது, போர் காய்ச்சலுக்கான ஒரு தேசியவாத அழைப்பாகும், குறைந்த பட்சம் இது மார்க்சிச அரசியலுடனோ அல்லது இடதுசாரி அரசியலுடனோ எந்த தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை. மறுபுறம், 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் வலதுசாரி மற்றும் பாசிச ஆட்சிகள் நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல் கருத்தாகும், ஏனெனில் அவர்கள் வர்க்க பதட்டங்களை போரின் மூலம் வெளிப்புறமாக திசை திருப்ப முயன்றனர். இருப்பினும் இதுதான் கொரோனா வைரஸ் பெரும்தொற்றுக்கான மெலோன்சோனின் பதிலளிப்பின் மைய புள்ளியாகும்.

கடந்த மாதம், ஸ்பானிஷ், சுவிஸ், இத்தாலியன் மற்றும் ஜேர்மன் ஊடக குழுவுக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸுக்கு அதன் பதிலை வகுப்பதில், முதலாம் உலகப் போரின்போது பிரெஞ்சு ஆளும் வர்க்கம் பின்பற்றிய கொள்கைகளை அடிபணியா பிரான்ஸ் (LFI) கவனமாக பரிசீலித்ததாக மெலோன்சோன் அறிவித்தார்.

"அங்கே என்ன இடம்பெற்றது என்பதைப் பார்க்க 1915-16 களின் விதிகளின் ஊடாக நாம் பார்த்தோம், அன்று பிரெஞ்சு சமுதாயம் ஒரு விவசாய சமூகமாக இருந்தது; எல்லா ஆண்களும் களத்தின் முன்னணியில் இருந்தார்கள், அங்கே மில்லியன் கணக்கானவர்கள் இறந்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சமூக ஒத்திசைவு எவ்வாறு உறுதி செய்யப்பட்டது என்பதைப் பார்க்க நாங்கள் ஆர்வமாக இருந்தோம்” என்று அவர் விளக்கினார். முதலாம் உலகப் போரின் படுகொலையின் போது "சமூக ஒத்திசைவை" நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் போர் எதிர்ப்பு மற்றும் சோசலிச எதிர்ப்பை அடக்குவதற்கும் ஆளும் வர்க்கம் இராணுவவாத, இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு பிரச்சாரங்களைப் பயன்படுத்திய ஒரு காலகட்டம் அது. இந்த எதிர்ப்பு இறுதியாக 1917 ரஷ்ய புரட்சியில் வெடித்தது.

முதலாம் உலகப் போரைப் போலவே, கொரோனா வைரஸ் தொற்றுநோய் முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களுக்கும் அதன் இலாபங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் இடையிலான உள்ளார்ந்த மோதலை நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இது முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான அவசியத்தை முன்வைத்திருக்கிறது. முதலாளித்துவத்தை தூக்கியெறிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முற்படும் ஒரு புரட்சியாளராக அல்ல, மாறாக அத்தகைய இயக்கத்தை எல்லா செலவிலும் தடுக்க முற்படும் முதலாளித்துவ அமைப்பின் எதிர் புரட்சிகர பாதுகாவலராக மெலோன்சோன் பேசுகிறார்.

மெலன்சோனும் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியும் மக்ரோன் நிர்வாகத்தின் தன்னார்வ அடிப்படையிலான அனைவருக்குமான இளைஞர் சேவையை (service national universel - SNU) அறிமுகப்படுத்துவதற்கான முன்னணி வக்கீல்களாக இருந்து வருகின்றன. இந்த திட்டம் விருப்ப இராணுவ சேவையை உள்ளடக்கியிருப்பதுடன் மற்றும் கட்டாயப்படுத்தப்படுவதற்கு வழி வகுக்கும் நோக்கம் கொண்டது. பிப்ரவரி 2018 பத்திரிகையாளர் சந்திப்பில், LFI இன் துணைத்தலைவர் அலெக்சிஸ் கோர்பியேர் (Alexis Corbière) இன்னும் விரிவாக்கப்பட்ட தேசிய சேவைக்கு அழைப்பு விடுத்தார், “நாங்கள் ஒன்பது மாத கட்டாய குடிமக்கள் சேவைக்கு ஆதரவாக இருக்கிறோம், இது ஒரு குடிமக்களின் தேசிய காவல் படைக்கு அடிப்படையாக இருக்கும், இது இராணுவத்திற்கும் தேசத்திற்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உருவாக்க எங்களை அனுமதிக்கும்.”

இன்று, மெலோன்சோன் தொழிலாள வர்க்கத்தின் இடதுபுற இயக்கத்திற்கு விரோதத்துடனும் அச்சத்துடனும் பதிலளித்து வருகிறார். இரண்டு வருட "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்கள், பிரான்ஸ் முழுவதும் இரயில்வே வேலைநிறுத்தங்கள் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றின் பின்னர், பெரும் தொற்றுக்கான ஆளும் வர்க்கத்தின் பதிலளிப்புகள் உலகெங்கும் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பினை அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி பிணை எடுப்புகளில் டிரில்லியன் கணக்கான பணத்தினை வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஒப்படைத்ததுடன், வேலைக்குத் திரும்பும் கொள்கையையும் அமல்படுத்தியுள்ளது, இந்த கொள்கை ஏற்கனவே வைரஸ் மேலும் பரவ வழிவகுத்திருக்கிறது. முக்கியமான சமூக உதவித் திட்டங்களை குறைப்பதற்கும், அதன் ட்ரில்லியன் கணக்கான பணத்தினை பெருநிறுவன கையேடுகளுக்கு செலுத்துவதற்கும் சிக்கன நடவடிக்கைகளை இப்போது தீவிரப்படுத்திவருகிறது.

பிரான்சில், மக்ரோனின் புதிதாக நிறுவப்பட்ட பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் (Jean Castex) ஓய்வூதியத்தில் தீவிர வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பாரிய வேலை அழிப்புகள் மற்றும் பிற சமூக உரிமைகளில் பெரும் வெட்டுக்களை இறுதி செய்வதற்கான விரைவான நிகழ்ச்சி நிரலை வகுத்துள்ளார். வெட்டுக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எவ்வாறு அடக்குவது என்பதில் உடன்படுவதற்கு அவர் தொழிற்சங்க “சமூக பங்காளிகளுடன்” நெருக்கமான சந்திப்புக்களை செய்துவருகிறார்.

மெலன்சோன் இந்தக் கொள்கையை ஆதரிக்கிறார். பெரும் தொற்றுக்கு மக்ரோனின் பிரதிபலிப்பு குறித்த அவரது விமர்சனங்கள் பெரும்பாலும், பிரெஞ்சு பெருநிறுவனங்களின் நலன்களை அதன் போட்டியாளர்களுக்கு எதிராகப் பாதுகாக்க போதுமான அளவு பொருளாதாரத் திட்டத்தை பின்பற்றத் தவறியதன் நிலைப்பாட்டில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நேர்காணலில், "சுகாதார நெருக்கடியின் போது, எங்கள் நாடு அவமானப்படுத்தப்பட்டது: வெறுமனே துணி முகமூடிகள், சோதனைகள் மற்றும் அடிப்படை மருந்து தயாரிப்புகளுக்காக நாங்கள் சீனாவை நம்பியிருந்தோம். திட்டமிடல் என்பது, நாளைய இறையாண்மையை உருவாக்குவதற்கான எதிர்காலத்திற்கான திறவுகோலாகும்”. திட்டமிடல் மற்றும் "இறையாண்மை பொருளாதார நடவடிக்கைகளை மறுசீரமைக்க அனுமதிக்கிறது." என மெலோன்சோன் முறைப்பாடு செய்தார்.

மக்ரோன் நிர்வாகத்தின் சிக்கனக் கொள்கையின் ஒன்று அல்லது மற்றொரு அம்சத்தை மெலோன்சோன் தவறாமல் விமர்சிக்கிறார் மற்றும் ஒன்று அல்லது மற்றொரு மட்டுப்படுத்தப்பட்ட சமூக செலவின அதிகரிப்புக்கு அழைப்பு விடுக்கிறார், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதைச் செயல்படுத்தும் எண்ணம் அவருக்கு இருக்காது. ஆனால் அவரது தேசியவாத பொருளாதாரக் கொள்கைகள் என்பது, பிரெஞ்சு ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கு எதிரான வர்த்தக போருக்கான திட்டங்களை ஏற்றுக்கொள்வதோடு, தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூகத் தாக்குதல்களின் பரவலான விரிவாக்கத்தையும் குறித்து நிக்கிறது.

பூகோளமயமான முதலாளித்துவ உற்பத்தியின் நிலைமைகளின் கீழ், வெளிநாட்டிலிருந்து மூலதனத்தை பிரான்சுக்கு ஈர்ப்பதற்கான அவரது கோரிக்கைக்கு பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள் மற்றும் வேலை நிபந்தனைகளை அழித்தல், பெருநிறுவன வரிகளை குறைத்தல் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கு தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைத்தல் ஆகியவை அவசியமானதாக உள்ளது. முதலாம் உலகப் போரின்போது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் "புனித ஒன்றியத்தின்" கொள்கையும், இராணுவத்துக்கான அவரது புகழ்ச்சிப்பாடல்களும் ஒரு பொலிஸ் அரசை பெருமளவில் கட்டியெழுப்புவதோடு இணைக்கப்படும் என்பதைக் காட்டுகிறது.

உண்மையில், மெலோன்சோனின் கூட்டாளிகள் அவர்கள் ஆட்சிக்கு வந்த இடமெல்லாம் ஏற்கனவே செயல்படுத்தியிருப்பது இதுதான். ஸ்பெயினில், மெலோன்சோனின் கூட்டாளியான பொடெமோஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் (PSOE) இணைந்து ஆட்சி செய்கிறது. அங்கு அது 100 பில்லியன் யூரோ வங்கி பிணை எடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது, அத்துடன் ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளையும் தயாரித்து வருகிறது. வேலைநிறுத்தம் செய்யும் எஃகு தொழிலாளர்களுக்கு எதிராக கலகப் பிரிவு போலீஸை கட்டவிழ்த்துவிட்டிருந்தது, பெரும்தொற்றினால் வைரஸ் மேலும் பரவிக்கொண்டிகுக்கும்போது மீண்டும் பொருளாதாரத்தினை திறந்துவிட்டிருக்கிறது.

கிரேக்கத்தில், மெலோன்சோனின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் சிரிசா அரசாங்கம், பல தசாப்தங்களாக கண்டிராத மிகக் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது, சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கலகப் பிரிவு போலீஸைப் பயன்படுத்தியிருந்ததுடன் மற்றும் அகதிகள் மீதான ஒடுக்குமுறைகளையும் தீவிரப்படுத்தியதுயிருந்தது.

மெலோன்சோன் அவற்றை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது நேர்காணல் மத்தியதரைக் கடலில் நடந்து வரும் பிராங்கோ-துருக்கிய மோதல் குறித்து ஆளும் வட்டங்களில் நடந்த விவாதங்களுடன் தொடர்புடையது. 2011 இல் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தலைமையிலான ஆட்சி மாற்றப் போரினால் உருவாக்கப்பட்ட லிபியாவின் போட்டி போராளிகளின் பிரிவுகளுக்கு பிரான்சும் துருக்கியும் ஆதரவளிக்கின்றன. பிரெஞ்சு நவ-காலனித்துவ போருக்கு மெலோன்சோன் ஆதரவளித்திருந்ததுடன், மேலும் அது ஜனநாயகத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாக மோசடியான முறையில் அறிவித்திருந்தார். இன்று, பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்த அதன் போட்டியாளர்களுக்கு எதிராக நாட்டையும் பிராந்தியத்தையும் துண்டாட இன்னும் கூடுதலான இராணுவ ஆயுதமயமாக்கத்தினை அவர் கோருகிறார்.

ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தால் பின்பற்றப்படும் சிக்கன நடவடிக்கை, பொலிஸ்-அரசு சர்வாதிகாரம் மற்றும் இராணுவவாதம் ஆகிய கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எந்த ஆதரவும் இல்லை. தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தின் வளர்ச்சிக்கு, ஜோன்-லுக் மெலோன்சோன் போன்ற வாய்வீச்சாளர்களை அம்பலப்படுத்தி, அவர்களுடன் அரசியல்ரீதியாக உடைத்துக்கொள்வது அவசியமானதாக உள்ளது.

Loading