முன்னோக்கு

அமெரிக்கா எங்கிலும் துணைஇராணுவ பொலிஸை அனுப்புவதற்கான ட்ரம்பின் திட்டம்: ஆளும் வர்க்கம் உள்நாட்டு போருக்குத் தயாரிப்பு செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா எங்கிலுமான பிரதான நகரங்களில் மத்திய அரசின் துணைஇராணுவ பொலிஸ் படைகளை அனுப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலிலும் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களை எழுப்புவதிலும் ஒரு மிகப்பெரிய தீவிரப்பாடாகும்.

போர்ட்லாந்தில், இந்த படைகளை அணித்திரட்டியமை ஏற்கனவே இலத்தீன் அமெரிக்க கொலைப்படைகளின் பழைய காட்சிகளை நினைவூட்டி உள்ளது. அங்கே துறைசார் அடையாளங்களோ அல்லது பெயர் அடையாளமோ இல்லாமல் உருமறைக்கும் உடையணிந்த கும்பல்கள், போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து, அவர்களை அடையாளமில்லாத வேன்களிலும் கார்களிலும் ஏற்றி, விசாரணைக்காக அல்லது அதை விட மோசமான நடவடிக்கைக்காகவோ கூட்டிச் சென்றுள்ளது.

நியூ யோர்க் நகரம், சிகாகோ, பிலடெல்பியா, டெட்ராய்ட், பால்டிமோர், ஆக்லாந்து இன்னும் இதர பிற நகரங்களிலும் இதே போன்ற நடவடிக்கை எடுக்க திங்களன்று ட்ரம்ப் அச்சுறுத்தினார். பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராடிய அவர்களைக் குறிப்பிட்டு ட்ரம்ப் கூறுகையில், “இவர்கள் அராஜகவாதிகள், இவர்கள் நம் நாட்டை வெறுப்பவர்கள், இவர்கள் முன்நகர்வதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை” என்றார்.

இந்த மத்திய அரசு அதிகாரிகளைக் கொண்டு அமெரிக்க நகரங்களில் படையெடுப்பதற்கு அங்கே எந்த சட்டபூர்வ அடித்தளமோ அல்லது அரசியலமைப்பு சார்ந்த அடித்தளமோ இருக்கவில்லை. அவர்களை நிலைநிறுத்த நாடாளுமன்ற காங்கிரஸ் ஒப்புதல் அளித்திருக்கவில்லை, அவர்கள் விடையிறுக்கும் அளவுக்கு அங்கே உண்மையில் எந்த அவசரநிலைமையும் இல்லை. வன்முறை மற்றும் அராஜகம் குறித்த ட்ரம்பின் எல்லா வாதங்களையும் பொறுத்த வரையில், அந்த மிகப்பெரிய வன்முறையே அவரின் குண்டர்களால் தான் நடத்தப்பட்டு வருகிறது.

போர்ட்லாந்தில், மத்திய அரசின் அந்த தாக்குதல் எல்லையில் போதைமருந்து கடத்துபவர்களை எதிர்த்து போராடவும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான அமெரிக்க தடுப்புக்காவல் முகாம்களில் எழும் தொந்தரவுகளை களையவும் பயன்படுத்தப்படும் கனரக ஆயுதமேந்திய சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளாலும் (CBP), அதன் உட்பிரிவான BORTAC என்றழைக்கப்படும் SWAT குழு உறுப்பினர்களாலும் முன்நின்று நடத்தப்பட்டுள்ளது. ஆனால் போர்ட்லாந்தோ அமெரிக்க எல்லையின் மிக அருகில் 400 மைல்கள் தூரத்தில் உள்ளது. BORTAC படைப்பிரிவு, போதை மருந்து வினியோகஸ்தர்களையோ அல்லது புலம்பெயர்ந்தவர்களையோ இலக்கில் வைத்திருக்கவில்லை மாறாக பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டக்காரர்களை இலக்கில் வைத்திருந்தது.

புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையம் (ICE) மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அமைப்பு (TSA) உட்பட மற்ற அமைப்புகளில் இருந்தும் ஆயுதமேந்தியவர்களின் குழுக்கள் CBP அதிகாரிகளுடன் இணைந்திருந்தனர். CBP ஐ போலவே, இவையும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் (DHS) கூறுபாடுகளாக இருப்பதுடன், அதன் உயர்மட்ட அதிகாரிகளான ட்ரம்பின் நாகரீக சேவகர்கள் Chad Wolf மற்றும் Ken Cuccinelli இன் வழிகாட்டுதல் கீழ் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. நாடெங்கிலும் பின்புலத்தில் தயாராக வைத்திருப்பதற்காக DHS மொத்தம் 2,000 அதிகாரிகளை நிறுத்தி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடிப்படையில், ட்ரம்ப் அவரின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் செயல்படும் வகையில், உள்ளூர் பொலிஸ் படைகளுடன் சேர்ந்து புலம்பெயர்வு சார்ந்த பாசிசவாத SWAT படைப்பிரிவை உள்ளடக்கிய ஓர் துணைஇராணுவப் படைப்பிரிவை முன்நிறுத்த முயன்று வருகிறார்.

இங்கே அச்சுறுத்தும் வகையில் வரலாற்று சமாந்தரங்கள் உள்ளன. முதலாம் உலக போரில் ஜேர்மனியின் தோல்விக்குப் பின்னர், ஆளும் வர்க்கம் கனரக ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பில் அல்லாத சிப்பாய்களின் குழுவான Freikorps ஐ உருவாக்க ஆதரவளித்தது, இவர்கள் தான் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிரடிப்படை துருப்புகளாக செயல்பட்டவர்கள், புரட்சிகர தலைவர்களான ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லைப்னெக்டைப் படுகொலை செய்த துருப்புகளாக இருந்தவர்கள். இந்த Freikorps குண்டர்களில் இருந்துதான் ஹிட்லரின் அதிரடித் துருப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

ஆர்ஜென்டினா, சிலி, பிரேசில் மற்றும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளில், 1970 களில் சிஐஏ-ஆதரவிலான இராணுவ ஆட்சிகள் ஆலைகளில் போர்குணமிக்கவர்களை வெளியேற்ற ஆர்ஜென்டைன் கம்யூனிச-எதிர்ப்பு கூட்டணி (Triple A) போன்ற பாசிசவாத துணைஇராணுவப் படை அமைப்புகளைப் பயன்படுத்தின. அவர்களின் தாக்குதல்களுக்கு உட்படுபவர்களை புருனொஸ் ஏர்ஸ் மற்றும் பிற நகரங்களில் சுற்றி வலம் வந்த அடையாளம் குறிப்பிடப்படாத ஃபோர்டு ஃபால்கன் (Ford Falcons) வாகனங்களைக் கொண்டு இழுத்துச் செல்வதே Triple A இன் தனிப்பெரும் முத்திரையாக இருந்தது. நீடித்த சித்திரவதைக்குப் பின்னர், அந்த உடல்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் வீசப்பட்டன.

போர்ட்லாந்தில் ட்ரம்ப் முகவர்களால் கடத்தப்பட்டுள்ளவர்கள், இப்போது வரையில், அவர்களின் கதைகளைக் கூறுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளனர். வெறும் ஏழு பேர் மட்டுமே, பெரும்பாலும் அற்ப நாசவேலைகளுக்காக, பெடரல் முகவர்களால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளும் "உயிராபத்தில்லாத" கையெறி பொருட்களுமே பயன்படுத்தப்பட்டுள்ளன, உயிர்பறிக்கும் நிஜமான வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் முன்மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இராணுவம் பின்புலத்தில் இருந்து மத்தியஸ்தராக குறுக்கீடு செய்யும் அல்லது நடவடிக்கை எடுக்கும் என்கின்ற நிலையில், துணைஇராணுவப்படை பிரிவுகளின் நிலைநிறுத்தத்திற்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

ட்ரம்பின் எதேச்சதிகார முயற்சிகளின் பிரதான இலக்கு தொழிலாள வர்க்கமாகும். ஆளும் வர்க்கம் சமூக மோதல் மற்றும் எதிர்ப்பின் மிகப் பிரமாண்டமான அதிகரிப்பை எதிர்பார்க்கின்ற நிலையில் தான் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

தங்களுக்கு தாங்களே ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைக் கையளித்துக் கொண்ட பின்னர், பெருநிறுவனங்களும் வங்கிகளும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான ஆட்கொலை பிரச்சாரத்தைப் பலவந்தமாக திணித்து வருகின்றன, இது ஏற்கனவே கொரோனா வைரஸ் நோயாளிகளின் மற்றும் உயிரிழப்புகளின் பெரும் வெடிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்காலிக கடன் இடைநிறுத்த காலத்திற்குப் பின்னர் மீண்டும் கடன் வசூலிப்பு நடவடிக்கைகள் (Foreclosures) மேற்கொள்ளப்பட உள்ளன, அத்துடன் மத்திய அரசின் வேலைவாய்ப்பின்மை மானியமாக வழங்கப்பட்டு வந்த வாரத்திற்கு 600 டாலர் தொகை இவ்வாரயிறுதியில் முடிவுக்கு வர உள்ளது.

வேலைக்குப் பலவந்தமாக இழுத்து அவர்களின் உயிர்களையும் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களின் உயிர்களையும் அபாயத்திற்குட்படுத்துவதை தொழிலாளர்கள் எதிர்க்கத் தொடங்கி உள்ளதுடன், வேலையிடங்களிலும் ஆலைகளிலும் அங்கே கோபம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் ஒருசில வாரங்களில் அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு அங்கே ஆழ்ந்த எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நடவடிக்கை குழந்தைகள், அவர்களின் குடும்பங்கள், அவர்களின் ஆசிரியர்கள், எல்லா பள்ளி பணியாளர்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது.

ட்ரம்பின் நடவடிக்கைகள் ஒரு மிகப்பெரிய தீவிரப்பாடு என்றாலும், அவை அமெரிக்க ஜனநாயகத்தின் ஒரு நீடித்த நெருக்கடியின் விளைவாகும். ட்ரம்ப் நிர்வாகம் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” ஒட்டுமொத்த எந்திரத்தையும் உள்நாட்டு எதிர்ப்புக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார். உண்மையில் ஆரம்பத்திலேயே WSWS எச்சரித்ததைப் போல, இதுவே அதன் உத்தேசிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது.

இவை அனைத்திலும் ஜனநாயகக் கட்சி உடந்தையாய் உள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அவர்கள் தான் பொலிஸ் அரசு எந்திரத்தை உருவாக்க உதவினார்கள்: அதாவது, தேசபாதுகாப்புச் சட்டம் (PATRIOT Act), உள்நாட்டு பாதுகாப்புத்துறை, உள்நாட்டு உளவுபார்ப்பு, அமெரிக்காவுக்குள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை இயக்கும் வடக்கு கட்டளையக மையம் ஆகியவை.

2013 இல், ஒபாமா நிர்வாகம்தான் போஸ்டன் தொலைதூர ஓட்டப்பந்தய வேளை குண்டுவெடிப்பை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி, போஸ்டன் மக்களுக்கு எதிராக இராணுவ முற்றுகையை நடத்தியது. அப்போது WSWS எழுதியவாறு, அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மீறும் வகையில் இராணுவமும் பொலிஸூம் வீட்டு வீட்டுக்கு சோதனை நடத்துகின்ற நிலையில்,

… அமெரிக்க ஆளும் வர்க்கம் வரலாற்றுரீதியிலும், சட்டரீதியிலும், அரசியல்ரீதியிலும் வரம்பை மீறிவிட்டது. வார்ப்புரு வடிவமைக்கப்படுகிறது, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் நிலவிய ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அந்தி நேரத்தை நாங்கள் காண்கிறோம்”.

பாஸ்டன் சம்பவங்கள் குறித்து மிக முக்கியமாக வரலாறு எதை நினைவில் வைத்திருக்கும் என்றால், தொலைதூர ஓட்டப்பந்தயத்தின் முடிவெல்லைக்கு அருகே குண்டுவெடிப்பையோ அல்லது குற்றமிழைத்தவர்களையோ அல்லது அவர்களின் நோக்கங்களையோ அல்ல. அதற்கு பதிலாக என்ன நினைவில் இருக்குமென்றால் வீதிகளில் இராணுவ வாகனங்கள் இறங்கியிருக்க, கனரக ஆயுதமேந்திய சிப்பாய்கள் வீட்டு வீட்டுச் சென்று வரவேற்பறையிலும், படுக்கையறைகளிலும், சமையலறைகளிலும் தரை அதிர நடந்து சென்று, பீதியுற்ற செருப்பு கூட அணிந்திராமல் வீட்டுடையில் இருந்த குடும்பத்தினரை தங்களின் தாக்கும் துப்பாக்கிகளுடன் முறைத்து பார்த்து, ஒரு மிகப்பெரிய அமெரிக்க நகரை முற்றிலும் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் இராணுவ முடக்கத்திற்குள் கொண்டு வந்ததை நினைவில் வைத்திருக்கும்.

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிகளுக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு பாசாங்குத்தனமாகவும், நேர்மையின்றியும் உள்ளது. ஒரேகனில், உள்ளாட்சி மற்றும் மாநில ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் நடவடிக்கைகளை "அரசியல் நாடகம்" என்று உதறித்தள்ள முனைந்தனர். ஆளுநர் கேட் பிரௌன் கூறுகையில், “ஓஹியோ அல்லது லோவாவில் அரசியல் புள்ளிகளை ஜெயிக்கும் நம்பிக்கையில் ட்ரம்ப் ஒரேகனில் ஒரு மோதலை எதிர்பார்க்கிறார்,” என்றார். சபாநாயகர் நான்சி பிலோசி "ஜனாதிபதி ட்ரம்பின் அரசியல் விளையாட்டுக்கள்" என்று குறை கூறி ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதே நேரத்தில், அடுத்த வாரம் உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கான புதிய வரவு-செலவு திட்டக்கணக்கை முன்னெடுக்க பெலோசி உடன்பட்டார். ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும் புலம்பெயர்ந்தவர்களையும் தாக்குவதில் ஈடுபட்டுள்ள துணைஇராணுவப் படைப்பிரிவுகளை கொண்டுள்ள CBP, ICE மற்றும் ஏனைய முகமைகளுக்கு நிதி ஒதுக்குவதும் இதில் உள்ளடங்கும்.

ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான நகரங்களில் படைகளை அனுப்புவதற்கான திட்டங்களுக்காக, ட்ரம்ப் மீது பதவிநீக்க குற்றவிசாரணைக்கு எந்த ஜனநாயகக் கட்சியாளரும் அழைப்பு விடுக்கவில்லை.

கலகம் ஒடுக்கும் சட்டம் 1807 ஐ கையிலெடுப்பதற்கான விருப்பத்தையும் மற்றும் ஜோர்ஜ் ஃபுளோய்டின் பொலிஸ் படுகொலைக்குப் பின்னர் வெடித்த பாரிய போராட்டங்களை ஒடுக்க இராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்குமான அவரது அறிவிப்பை தேசிய தொலைக்காட்சியில் அவர் வெளியிட்டு இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களில் ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் வருகின்றன.

ட்ரம்பின் முயற்சிக்கப்பட்ட அரசு சதிக்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் ஜனநாயகக் கட்சியினர் இராணுவத்திடமும் ஓய்வுபெற்ற தளபதிகளிடமும் விட்டுக்கொடுத்திருந்தனர், அவர்கள் அரசியல்ரீதியில் தயாரிப்பு இல்லை என்பதால் அது பின்விளைவுகளை ஏற்படுத்துமென அஞ்சி அந்த நடவடிக்கையை எதிர்த்தனர். அதுபோன்றவொரு மிகப்பெரிய நடவடிக்கை இப்போதைக்கு அவசியமில்லை என்றவர்கள் கருதினர். ட்ரம்ப் தற்காலிகமாக பின்வாங்கி, கலகம் தடுப்பு சட்டத்தை கையிலெடுக்கவில்லை.

ஜூன் 8 இல் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கையில், “ஆபத்துக்கள் மிகவும் நிஜமானவை. வெள்ளை மாளிகையிலுள்ள சதிகாரர்கள் அவர்களின் சதித்திட்டத்தை கைவிட்டு விடவில்லை. இராணுவம் அதன் நேரத்திற்காக காத்திருக்கிறது, அதன் வாய்ப்புகளைப் பரிசீலித்து வருகிறது. பொலிஸ், அடி முதல் தலை வரை ஆயுதமேந்தி நிற்கிறது,” என்று குறிப்பிட்டது.

இத்தகைய எச்சரிக்கைகள் இப்போது நிரூபணமாகி வருகின்றன. வரவிருக்கும் தேர்தல்கள் வெடிப்பார்ந்த சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் நடத்தப்படும். அவர் தோற்றுவிட்டால் அந்த தேர்தல்களின் முடிவை அவர் ஏற்காமல் போகலாம் என்பதை ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினர் அவரை பலவந்தமாக வெளியேற்ற இராணுவத்தைக் கணக்கில் கொண்டுள்ளனர். ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டு போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன.

ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள் மற்றும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அவரின் முனைவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் முழுப்பலமும் அணித்திரட்டப்பட வேண்டும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அழைப்பு! ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்!

[4 June 2020]

அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டன் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும் அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டன் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்
[13 June 2017]

Loading