“கல்வியறிவு என்பது உலகினை காண்பதற்கான ஒரு தெளிவான சாளரம்…..”

கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான தனிச்சிறப்புடைய சோவியத் ஆணையம் உருவாகி 100 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 19, 1920 இல், விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான சோவியத் அரசாங்கம் கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான தனிச்சிறப்புடைய அனைத்து ரஷ்ய ஆணையத்தை நிறுவியது (Cheka Likbez).

சோவியத் ஒன்றியத்துக்குள் கல்வியறிவின்மையை துடைத்தொழிப்பதற்கான பிரச்சாரத்தை வழிநடத்துவதில் இந்த அமைப்பு ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததுடன், ஜாரிச பின்தங்கிய நிலை மற்றும் வறுமை ஆகியவற்றின் மிகவும் சேதப்படுத்தும் மரபுகளில் ஒன்றை நீக்கியது. சோவியத் கல்வியறிவு பிரச்சாரம் உலக வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிக வெற்றிகரமானதாக உள்ளது. வரலாற்றாசிரியர் பென் எக்லோஃப் குறிப்பிட்டார்: “பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் செய்ய குறைந்தபட்சம் நூறு வருடங்கள் எடுத்ததை 22 ஆண்டுகளில் (1917–39), சோவியத் ஒன்றியம் நிறைவேற்றியது என்பதற்கு அங்கு நல்ல காரணம் இருக்கிறது.[1]

சோவியத் கல்வியறிவு பிரச்சாரம் ஒரு திட்டமிட்ட, சோசலிச அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சமூகத்தை மறுசீரமைப்பதற்கான அசாதாரண சாத்தியக்கூறுகளின் நீடித்த நிரூபணமாக செயல்படுகிறது.

“ஒரு படிப்பறிவற்றவர் பார்வையற்றவரைப் போன்றவர். விபத்துக்கள், துரதிர்ஷ்டங்கள் எல்லா இடங்களிலும் அவருக்கு காத்திருக்கின்றன”

இந்தப் பிரச்சாரத்தின் சாதனைகள், 21 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலத்தை தொடர்ந்து பாதிக்கும் உலகளாவிய கல்வியறிவின்மைக்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தன. யுனெஸ்கோ புள்ளிவிவரங்களின்படி, குறைந்தது 750 மில்லியன் மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 100 மில்லியன் மக்கள் 5-24 வயதுக்குட்பட்டவர்கள். பெரும்பாலானவை துணை-சஹாரா ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவின் முந்தைய காலனித்துவ பகுதிகளில் உள்ளன. எவ்வாறாயினும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்குள், சிக்கன மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் போதுமான நிதியுதவி அளிக்கப்பட்ட, பொதுக் கல்வி பெறுவதைக் கட்டுப்படுத்துவதால், சரியான கல்வியறிவு கல்வி வாய்ப்புகள் கிடைத்தல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவில், கல்வியறிவுக்கான இன்னும் அங்கீகரிக்கப்படாத அரசியலமைப்பு உரிமையை ஸ்தாபிப்பதற்கு பல சட்டவழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

1917 ஆம் ஆண்டில், போல்ஷிவிக் கட்சி முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து உலகின் முதல் தொழிலாளர் அரசை நிறுவியபோது, புரட்சிகர அரசாங்கம் முன்னாள் ஜாரிச பேரரசு முழுவதும் பரந்த கல்வியறிவின்மையை எதிர்கொண்டது. 1897 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21 சதவிகித வயதானவர்கள் மட்டுமே வாசிக்க்கூடியவர்களாக இருந்தனர். ஆனால் இது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவலாக இருந்தாலும், அவர்களின் பெயரை கையெழுத்திடக்கூடிய மற்றும் வாசிக்ககூடியவர்கள் என்று கூறும் எவரும் கல்வியறிவு பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.[2] ஜாரிச ஆட்சியின் கடைசி இரண்டு தசாப்தங்களில் எழுத்தறிவு விகிதம் அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள்தொகைக்கு இணையாக ஓரளவு அதிகரித்தது. ஆனால் 1917 அளவில் நாட்டின் 150 மில்லியன் மக்களில் பெரும்பான்மையினர் வாசிக்கமுடியாதவர்களாக இருந்தனர்.

கல்வியறிவின் அதிகரிப்பை ஜாரிச அதிகாரிகள் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் கருதினர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், 1வது ஜார் அலெக்சாண்டர் இன் கல்வி மந்திரி பின்வருமாறு அறிவித்தார்: “அறிவு உப்பைப் போல மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இது மக்களின் சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறிய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் வழங்கப்படுகிறது. பரந்துபட்ட மக்களுக்கு அல்லது அவர்களில் பெரும்பாலோருக்கு எப்படி வாசிப்பது எனக் கற்பிப்பது நன்மையை விட தீங்கையே விளைவிக்கும்”.[3]

போல்ஷிவிக் கட்சி தலைமையிலான புரட்சிகர அரசாங்கத்தால் சரியாக இதற்கு எதிரான கருத்து முன்வைக்கப்பட்டது.

விளாடிமிர் லெனின்

கல்வியறிவின்மையை ஒழிப்பது என்பது, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கத் தொடங்க தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படும் கலாச்சாரம் மற்றும் அறிவை ஒருங்கிணைப்பதற்கான அத்தியாவசிய முன்நிபந்தனை என்று புரிந்து கொள்ளப்பட்டது. அக்டோபர் புரட்சிக்கு முன்னதாக எழுதப்பட்ட தனது உன்னதமான அரசும் புரட்சியும் என்ற படைப்பில் லெனின், அரச நிர்வாக செயல்பாடுகளில் பெரும்பான்மையானவை “எந்தவொரு கல்வியறிவுள்ள நபராலுமே” செய்யப்படமுடியும் (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது). அனைவருக்குமான கல்வியறிவானது, எனவே ஒரு தொழிலாளர் அரசுக்கான அடிப்படை முன்நிபந்தனையாகும். இதன் மூலம் “கம்யூனிச சமுதாயத்தின் முதல் கட்டத்திலிருந்து அதன் உயர் கட்டத்திற்கு மாறுவதற்கும், அதனுடன் அரசு முற்றிலுமாக உதிர்ந்து உலர்ந்து போவதற்குமான கதவு அகலமாக திறந்து விடப்படும்”. [4]

அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், லெனின் பின்வருமாறு வலியுறுத்தினார், “கல்வியறிவற்ற நபர் அரசியலுக்கு வெளியே நிற்கிறார். முதலில் அவருக்கு எழுத்துக்களை கற்பிக்க வேண்டியது அவசியம். அது இல்லாவிட்டால் வதந்திகளும், கட்டுக்கதைகளும் தப்பெண்ணங்களும் மட்டுமே இருக்கும், ஆனால் அரசியல் இருக்காது”.

உலகளாவிய கல்வியறிவை விரைவாகப் பெறுவது சோவியத் அரசாங்கத்திற்கு உடனடி கல்விகற்பித்தலுக்கான முன்னுரிமையாக இருந்தது. போல்ஷிவிக் தலைமையிலான புரட்சி முடிந்த மூன்று நாட்களுக்குப் பின்னர், அக்டோபர் 29, 1917 அன்று (புதிய நாட்காட்டியில் நவம்பர் 11), புதிதாக நியமிக்கப்பட்ட கல்விக்கான ஆணையாளர் அனத்தோலி லுனாச்சார்ஸ்க்கி (Anatoly Lunacharsky), “ரஷ்யாவின் குடிமக்களுக்கு ஒரு உரையை” வெளியிட்டார்:

"கல்வியறிவின்மை மற்றும் அறியாமை நிறைந்த ஒரு நாட்டின் கல்வித் துறையில் எந்தவொரு உண்மையான ஜனநாயக அதிகாரமும் இந்த இருண்ட சூழ்நிலையை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் பணியைச் செய்ய வேண்டும். இது, குறுகிய காலத்தில், சமகால கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்யும் பள்ளிகளின் வலையமைப்பை ஏற்பாடு செய்வதன் மூலமும், அனைவருக்குமான, கட்டாய, இலவசக் கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலமும் உலகளாவிய கல்வியறிவை அடைய முயற்சிக்க வேண்டும். கல்வியறிவு மற்றும் அறியாமைக்கு எதிரான போராட்டம் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு முறையான பள்ளி கற்பிப்பை ஏற்பாடு செய்வதுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியாது. வயதானவர்களும் படிக்கவோ எழுதவோ முடியாத அவமானத்திலிருந்து மீட்கப்பட விரும்புகின்றனர். கல்விக்கான பொதுத் திட்டத்தில் பெரியவர்களுக்கான பள்ளிகள் கட்டாயம் ஒரு முக்கிய இடத்தைப் பெற வேண்டும்”.[5]

டிசம்பர் 1919 இல், லெனின் "ரஷ்ய சோவியத் குடியரசின் மக்களிடையே கல்வியறிவின்மையை இல்லாதொழித்தல்" என்ற தலைப்பில் ஒன்பது அம்ச ஆணையில் கையெழுத்திட்டார்.

இந்த ஆணையின் இலட்சக்கணக்கான பிரதிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. "குடியரசின் ஒட்டுமொத்த மக்களுக்கும் நாட்டின் அரசியல் வாழ்க்கையில் நனவான பங்கேற்புக்கான வாய்ப்பை வழங்குவதற்காக" சோவியத் அரசாங்கம் 8 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதை கட்டாயமாக்குகிறது என்று அது விளக்கியது. இது ரஷ்ய அல்லது அவர்களின் சொந்த மொழியில், அவர்களின் விருப்பப்படி செய்யப்படலாம்.

கல்வி ஆணையாளரகத்திற்கு, "கல்வியறிவற்றவர்களுக்கு கற்பிப்பதற்காக போருக்கு அழைக்கப்படாத, நாட்டின் முழு கல்வியறிவுள்ள மக்களையும் வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது." குறைந்தபட்சம் ஒரு கல்வியறிவற்றவருக்காவது எவ்வாறு வாசிப்பது என்பதை கற்பிக்காதுவிடும் ஒரு கல்வியறிவுடையவருக்கு அது ஒரு குற்றவியல் தண்டனைக்குரியதாகும் (இதற்காக யாரும் இதுவரை வழக்குத் தொடரப்படவில்லை என்றாலும்). கல்வியறிவற்ற தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு முழு ஊதியத்துடன் இரண்டு மணிநேர வேலை விடுப்பு, படிப்பதற்காக வழங்கப்பட்டது.

1919 ஆம் ஆண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்காகன மேலதிக ஆணையம் ஜூன் 1920 உருவாக்கப்பட்டது.

ஒரு வரலாற்றாசிரியர் அதன் பங்கை பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்:

“இது அரசாங்கத்தின் மற்ற அமைப்புகள் மற்றும் [கம்யூனிஸ்ட்] கட்சி, பொது அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பைக் கையாளும் ஒரு அமைப்புரீதியான பொறிமுறையாகும். ஆணைக்குழு பல்வேறு மாநில மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது மற்றும் விரிவான அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் கொண்டிருந்தது; மக்களிடையே ஊக்கமளிக்கும் பணிகள், கல்வியறிவற்றவர்களை பதிவு செய்தல், முதல் பாடப்புத்தகம் மற்றும் பிற பாடப்புத்தகங்களின் அறிவுறுத்தல் மற்றும் உற்பத்தி முறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் திட்டத்தை செயல்படுத்த ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியமித்தல் ஆகியவை இதில் அடங்கும்”.[6]

இந்த அமைப்பின் முடிவுகளுக்கு அனைத்து அரசு நிறுவனங்களும் பொது ஊழியர்களும் கட்டுப்பட்டவை. இது சுருக்கமான வடிவத்தில் Cheka Likbez என்று அறியப்பட்டது. இது எதிர்ப்புரட்சி மற்றும் நாசவேலைகளை எதிர்ப்பதற்கான மேலதிக ஆணையத்தின் பெயரின் எதிரொலியாகும். இதன் மூலம் புரட்சிக்கான அதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Cheka எனப்படுவது சோவியத் அரசாங்கத்தை கவிழ்க்கும் எதிர்ப் புரட்சிகர முயற்சிகளை தோற்கடிக்க ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு அமைப்பாகும்.

கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான மேலதிக ஆணையம், கல்வி ஆணையகத்தின் அரசியல் கல்விக்கான முதன்மை நிர்வாகத்தின் (Glavpolitprosvet) கீழ் நடேஷ்டா குருப்ஸ்கயா (Nadezhda Krupskaya) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சில சமயங்களில் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களால் லெனினின் மனைவியைத் தவிர வேறொன்றுமில்லை என்று நிராகரிக்கப்பட்ட குருப்ஸ்காயா உண்மையில் தனது சொந்த உரிமையுடனேயே ஒரு முக்கியமான புரட்சியாளராக இருந்தார். புரட்சிக்கு முன்னர், அவர் ஆசிரியராக பணியாற்றுவதில் நேரத்தை செலவிட்டார் மற்றும் கல்வி கோட்பாட்டாளர்களைப் பற்றி விரிவான ஆய்வை செய்தார். அவரது கல்வித்துறை எழுத்துக்கள் பல தொகுதிகளை உள்ளடக்கியது. அவற்றில் ஒரு சிறிய பகுதியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1920 களில் லெனின் மற்றும் லுனாச்சார்ஸ்கியுடன் நெருக்கமாக ஒத்துழைத்த குருப்ஸ்காயா, பள்ளிக்கல்வி மற்றும் வயது வந்தோருக்கான கல்வியில் பல அசாதாரண முயற்சிகளை உருவாக்கினார். இது சர்வதேச அளவில் கல்வியாளர்களிடையே புகழ்பெற்றது.

செம்படையின் கல்வியறிவுப் பிரச்சாரங்கள்

கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான மேலதிக ஆணையம் 1920 ல் புதிதாக தனது பணியைத் தொடங்கவில்லை. உள்நாட்டுப் போரின் நிலைமைகளுக்கு மத்தியில் வளர்ந்த கல்வியறிவின்மையை ஒழிப்பதற்கான ஆரம்பகால போல்ஷிவிக் முயற்சிகளை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன் எதிர் புரட்சிகர சக்திகள் சோவியத் அரசாங்கத்தை தாக்கின. இந்த பிரச்சாரத்தின் மத்தியில் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் 1918 மற்றும் 1921 க்கு இடையில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை புரட்சியைப் பாதுகாப்பதற்காக அணிதிரட்டிய செம்படை இருந்தது.

லியோன் ட்ரொட்ஸ்கி

கல்வியறிவு என்பது எல்லாவற்றிலிருந்தும் மேலாக, பார்க்க, புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ளும் சாத்தியமான உலகினை காண்பதற்கான ஒரு சுத்தமான சாளரம் மட்டுமே” என்று 1922 ஆம் ஆண்டு மாஸ்கோ சோவியத்தில் நடந்த உரையில் ட்ரொட்ஸ்கி விளக்கினார். "இந்த சாத்தியத்தை நாம் எல்லாவற்றிற்கும் முன் அவர்களுக்கு [செம்படை வீரர்களுக்கு] கொடுக்க வேண்டும்."

அவர் தொடர்ந்தார்:

“எங்கள் தயாரிப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக சிப்பாய்களை புரட்சிகர குடிமக்களாக்குவதாகும். இராணுவத்தில் உள்ள எங்கள் இளைஞர்களை நாம் ஒரு உயர் மட்டத்திற்கு உயர்த்த வேண்டும். முதலும்முக்கியமாக, அவர்களை தீர்க்கமாகவும் இறுதியாகவும் கல்வியறிவின்மையின் வெட்கக்கேடான கறையிலிருந்து விடுவிக்க வேண்டும். […] நீங்கள், மாஸ்கோ சோவியத், நீங்கள், மாவட்ட படைப்பிரிவுகள் மற்றும் பள்ளிகள் - நீங்கள் ஏற்றுக்கொண்ட பெரிய குடும்பத்தில் உங்கள் ‘மகன்களில்’ யாரையும் கல்வியறிவற்றவர்களாக இருக்க விடமாட்டீர்கள் என்று செம்படை உங்களிடம் கேட்கிறது. நீங்கள் அவர்களுக்கு ஆசிரியர்களைக் கொடுப்பீர்கள், ஒரு மனிதன் ஒரு நனவான குடிமகனாக மாறக்கூடிய அடிப்படை தொழில்நுட்ப வழிமுறைகளில் பாண்டித்தியம் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுவீர்கள்”.[7]

செம்படையில் உள்ள கல்வியறிவு பிரச்சாரத்தின் சில விவரங்கள் மட்டுமே ட்ரொட்ஸ்கியின் ஆய்வில் இருந்து தப்பித்தன. உதாரணமாக, 1919 இன் முற்பகுதியில், உள்நாட்டுப் போரின் சில கடுமையான பிரச்சாரங்களுக்கு மத்தியில், இலக்கியம் மற்றும் அரசியல் பத்திரங்கள் பற்றி கடுமையான மதிப்பாய்வை எழுத அவர் நேரம் எடுத்துக் கொண்டார். "மத்திய செயற்குழுவின் இராணுவத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள பொதுக் கல்விப் பிரிவு, படையினரின் பயன்பாட்டிற்காக முதல் வாசிப்பு புத்தகத்தை வெளியிட்டுள்ளது" அவர் எழுதினார். "இந்த புத்தகத்தை தொகுத்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் யாரோ ஒருவர், தான் முதலில் அதைத் தொகுத்த நபர்களை அறிந்திருக்கவில்லை என்பதை நான் தெளிவாகக் காணமுடியும்; இரண்டாவதாக, அவர் எழுதும் விஷயங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாதவர்; மூன்றாவதாக, ரஷ்ய மொழியில் நன்கு பரீட்சயமற்றவர். எங்கள் வீரர்களுக்கான முதல் வாசிப்பு புத்தகத்தை தொகுப்பதற்கு இந்த தகமைகள் போதுமானதாக இல்லை”.[8]

ஏப்ரல் 1918 இல் அனைத்து அணிகளுக்கும் கட்டாய கற்பித்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. [9] போர்முனைகளில் எழுத்தறிவு பிரச்சாரத்திற்கு முன்வந்த ஆசிரியர்கள் புரட்சிக்கு முந்தைய கற்பித்தல் முறைகளை கைவிட வேண்டும் என்பதை விரைவாக கண்டுகொண்டனர். புரட்சிக்குப் பின்னர் போல்ஷிவிக்குகளில் சேர்ந்த முன்னாள் சோசலிச புரட்சியாளர்களை சேர்ந்த டோரா எல்கினா என்ற ஆசிரியரின் அனுபவத்தைப் பற்றி குருப்ஸ்கயா எழுதினார்: பகுப்பாய்வு-செயற்கை [phonics] முறையின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடப் புத்தகங்களிலிருந்து வழக்கம்போல எல்'கினா அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்: ‘மாஷா காஷா சாப்பிட்டார். மாஷா ஜன்னலைக் கழுவினார்’. ‘நீங்கள் எங்களுக்கு எப்படி கற்பிக்கிறீர்கள்?’ என்று எதிர்ப்பு தெரிவித்த செம்படை வீரர்கள், ‘காஷாவைப் பற்றி இதெல்லாம் என்ன? யார் இந்த மாஷா? நாங்கள் அதைப் படிக்க விரும்பவில்லை’” என்றனர்.[10] [மாஷா ரஷ்ய பெண் பெயரை குறிக்கின்றது, காஷா அவர்களால் விரும்பி உண்ணப்படும் தானியவகை]

எல்'கினா ஆரம்பத்தில், வீரர்கள், தங்கள் மாஷாக்களுடன் ஏன் இருக்க முடியாது, ஏன் காஷாவின் பற்றாக்குறை உள்ளது என்று விவாதித்து தொடர முயன்றார். ஆனால் பின்னர் அவர் தனது சொந்த ஒரு புதிய வாக்கியத்தை எழுதினார், பின்னர் அது ஒரு புதிய கல்வியறிவு புத்தகத்தின் தொடக்க வரியாக வெளியிடப்பட்டது, சோவியத் ரஷ்யாவில் பிரபலமானது, மில்லியன் கணக்கான புதிதாக எழுத்தறிவுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வாசித்த முதல் சொற்கள் - “நாங்கள் அடிமைகள் இல்லை; அடிமைகள் நாங்கள் அல்ல" என்பதாகும்.

எல்‘கினா மற்றும் அவரது நூலின் இணை ஆசிரியர்கள், கல்வியறிவின்மையை இல்லாதொழித்தல் என்ற தலைப்பில், தங்கள் முன்னுரையில் படிக்கும் திறனைப் பெறுவதற்கும் சோசலிச நனவின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை விளக்கினர்: “அரசியல் பணிகள் கோஷங்களை தெளிவுபடுத்துவதற்கு மட்டுமல்ல என்பதுபோல் கற்பித்தல் என்பது வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கான அறிவுறுத்தலுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த நூல், மாணவருக்கு இரண்டையும் அறிமுகப்படுத்த அனுமதிக்கிறது. அரசியல் கல்வியறிவைப் பெறுவதையும், எவ்வாறு படிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதையும் பின்னிப்பிணைந்த குறிக்கோள்களாக நாங்கள் கருதுகிறோம். மாணவர்களுக்கு கல்வித் திறன் கற்பிக்கப்படுவது மட்டுமல்லாமல், பொது வாழ்வில் அவர்களின் ஆர்வத்தையும் நாம் தூண்ட வேண்டும். மாணவர்கள் படித்தவர்களாக சமூகத்தில் தங்களின் இடத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவர்கள் சோவியத் ரஷ்யாவின் போராளிகள் மற்றும் கட்டுபவர்களின் அணிகளிலும் சேர வேண்டும்”.[11]

பிற ஆரம்ப எழுத்தறிவு முயற்சிகளில் விளாடிமிர் மாயகோவ்ஸ்கி உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை எளிமையாகவும், ஈர்க்கக்கூடிய முதல் வாசகர்கள் மற்றும் எழுத்துக்கள் புத்தகங்களை உருவாக்குவதற்கும் அடங்கும்.

மில்லியன் கணக்கான செம்படை வீரர்களின் புதிய கல்வியறிவு திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, காகிதம், மை மற்றும் நூல்களை வெளியிடுவதற்கான வழிமுறைகளில் நீண்டகால சிரமங்கள் இருந்தபோதிலும் சோவியத் அரசாங்கம் விலைமதிப்பற்ற வெளிநாட்டு நாணய இருப்புக்கள் உட்பட கணிசமான வளங்களை வாசிப்புப் பொருட்களை வழங்குவதற்காக அர்ப்பணித்தது. செம்படையின் ஒரு கணக்கெடுப்பின்படி, 1920 ஆம் ஆண்டில் படையினருக்கு 20 மில்லியன் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள், 5.6 மில்லியன் புத்தகங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 300,000 முதல் 400,000 செய்தித்தாள்கள் வழங்கப்பட்டன. [12]

தொழிலாள வர்க்கத்திலும் விவசாயிகளிலும் கல்வியறிவின்மையை நீக்குதல்

கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான மேலதிக ஆணையம் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் ஒரு தொடர் முயற்சிகளை உருவாக்கி, கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் வாசிக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறது.

1920 களில் சோவியத் யூனியன் முழுவதும் எழுத்தறிவு மையங்கள் அல்லது பள்ளிகள் (likpunkty, “கலைப்பு புள்ளிகள்”) நிறுவப்பட்டன. பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் அவற்றின் சொந்த கல்வியறிவு மையங்களையும் நூலகங்களையும் கொண்டிருந்தன. நவம்பர் 1920 ஆரம்பத்தில், மேலதிக ஆணையம் 12,067 கல்வியறிவு மையங்களை நிறுவி, 278,637 மாணவர்களுக்கு கற்பித்தது. [13] 1920 மற்றும் 1928 க்கு இடையில், மொத்தம் 8.2 மில்லியன் மக்கள் கல்வியறிவு பள்ளிகளில் பயின்றனர். [14]

லெனினின் 1919 ஆம் ஆண்டு ஆணைக்கு இணங்க, படிக்கவும் எழுதவும் முடியாத தொழிலாளர்களுக்கு தினசரி படிப்புக்காக முழு ஊதியத்துடன் குறைக்கப்பட்ட வேலைநேரங்கள் வழங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை தன்னார்வலர்கள் கற்பிக்கும் வகுப்புகளில் கலந்து கொள்ள தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். எழுத்தறிவு வகுப்புகள் பெரும்பாலும் புரட்சிகர ஆண்டுவிழாக்களுடன் இணைந்த பொது கொண்டாட்டங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தன. சில தொழிலாளர்களின் படிப்புக்கள் முதல் தவணை ஜனவரி 21 அன்று முடிவடைந்தது (1924 இல் லெனின் இறந்த திகதி) மற்றும் மே 1 (மே தினம்) இரண்டாவது தவணை முடிவடைந்தது. [15]

“புத்தகங்கள் (தயவுசெய்து)! அறிவின் அனைத்து பகுதிகளிலும்”, அரசு வெளியீட்டாளர்களுக்கான சுவரொட்டி (அலெக்சாண்டர் ரோட்சென்கோ, 1924)

எழுத்தறிவு வகுப்புகளில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு கல்வியறிவுள்ள நபர் அவரின் பெயரை மட்டுமே கையெழுத்திடக்கூடியதாக இருந்த பழைய ஜாரிச தரத்திலிருந்து வெகு தொலைவில், கல்வியறிவின்மையின்மையை இல்லாதொழிப்பதற்கான மேலதிக ஆணையம் 3-4 மாத கல்வியறிவு மைய பாடநெறி கல்வியறிவுக்கு ஒரு "ஆரம்ப திறவுகோலை" மட்டுமே வழங்குகின்றது என்றும், ஒவ்வொரு வேலை நாளும் இரண்டு மணி நேரம் அத்தகைய பாடத்திட்டத்தில் பங்கேற்ற ஒரு தொழிலாளி "அரை கல்வியறிவு" மட்டுமே கருதப்படலாம். உண்மையான கல்வியறிவுக்கான ஒரு முன்நிபந்தனையாக ஒவ்வொரு வாரமும் குறைந்தது 6-8 மணிநேர ஆய்வை உள்ளடக்கிய நீண்ட, 6-8 மாத படிப்பு அவசியம். எனக்குறிப்பிட்டது. [16]

1923 ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஒரு வெகுஜன அமைப்பான “கல்வியறிவின்மையை இல்லாதொழித்தல்” சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மேலதிக ஆணையத்தின் பணி விரிவாக்கப்பட்டது. அக்டோபர் 1924 வாக்கில், 1.6 மில்லியன் சோவியத் குடிமக்கள் அதில் இணைந்தனர்.[17] சமூகம் தன்னார்வ கல்வியறிவு ஆசிரியர்களை ஒழுங்கமைத்தது, கல்வியறிவின்மைக்கு எதிரான பிரச்சார சுவரொட்டிகளை விநியோகித்து, மற்றும் துண்டு பிரசுரங்கள் மற்றும் புத்தகங்களை வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் பணம் திரட்டியது. ஒழுங்கான கல்வியறிவு விழாக்கள் மற்றும் பிரச்சாரங்களையும் ஏற்பாடு செய்தது. 1925 மே தினத்தில் தொடங்கி மூன்று நாள் பிரச்சாரத்தில், பொது நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் பிற பொதுக் கலைகள், கல்வியறிவு மையப் படிப்புகளிலிருந்து வெகுஜன பட்டப்படிப்புகள் மற்றும் “கிளர்ச்சியூட்டும் தெருப்பவனிகள்”, பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் லெனினின் கோஷங்களான (“எங்களுக்கு மூன்று பணிகள் உள்ளன: முதலாவதாக, படிப்பது, இரண்டாவது, படிப்பது, மூன்றாவது, படிப்பது”) மற்றும் ட்ரொட்ஸ்கியின் (“ரஷ்யாவில் எல்லா இடங்களிலும் பள்ளிகளின் நெருக்கமான வலையமைப்பை உருவாக்குவோம். கல்வியறிவின்மை இருக்கக்கூடாது. அறிவற்ற தொழிலாளர்கள் இருக்கக்கூடாது) போன்றவற்றை பிரபலப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

1920 களில் இதன் முடிவுகள் வெவ்வேறு தொழிற்துறைகளில் மாறுபட்டதாக இருந்தன. நகரங்களுக்கு சென்ற முன்னாள் விவசாயிகளை, குறிப்பாக ஜவுளித் தொழில் போன்ற பெண்களை உள்ளிழுத்த பணியிடங்களில் கல்வியறிவின்மை நீடித்தது. உலோகம், அச்சு மற்றும் இரயில் தொழிலாளர்கள் உட்பட பிற துறைகளில் இது அழிக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டின் இறுதியில், இரயில் தொழிலாளர்களிடையே கல்வியறிவு விகிதம் 99 சதவிகிதம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள கல்வியறிவு இல்லாதவர்கள் அனைவரும் கல்வியறிவு மையப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 1928 ஆம் ஆண்டில், இரயில் தொழிலாளர் சங்கம் அவர்களது தொழிலாளர் உறுப்பினர்களின் 93,000 வாழ்க்கை துணையினரதும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே கல்வியறிவை அகற்றுவதற்கான திட்டங்களை உருவாக்கியது. [19]

விவசாயிகளுக்குள், உலகளாவிய கல்வியறிவுக்கான பிரச்சாரம் மிகவும் நீடித்த மற்றும் கடினமாக இருந்தது. அக்டோபர் புரட்சிக்கு 56 ஆண்டுகளுக்கு முன்புதான் ரஷ்யாவில் அடிமை உடைமை முறை ஒழிக்கப்பட்டது, மத மூடநம்பிக்கை மற்றும் பல்வேறு வகையான பின்தங்கிய நிலை ஆகியவை விவசாயிகளை இன்னும் பாதித்தன. பெண்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் முன்னாள் ஜாரிச பேரரசு முழுவதும் ஆண்களை விட கணிசமாக கல்வியறிவற்றவர்களாக இருந்தனர். கிராமங்களில், சிறுவர்கள் பொதுவாக சிறுமிகளை விட கல்வி கற்றவர்களாக இருந்தனர். ட்ரொட்ஸ்கி 1924 இல் குறிப்பிட்டார்: "இங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் முற்றுமுழுதான சம உரிமை உள்ளது. இப்போது நம் வறுமையில் கூட ஒரு ஆணுக்கு உள்ள உண்மையான வாய்ப்புகள் ஒரு பெண்ணுக்கும் கிடைக்கவேண்டும். பெண்கள் கல்வியறிவில் ஆண்களுக்கு சமமாக இருக்க வேண்டும். இங்கே ‘பெண்ணுக்குள்ள பிரச்சினை’ என்றால், முதலில் பெண் கல்வியறிவின்மைக்கு எதிரான போராட்டம் என்று பொருள்”.[20]

துருப்புக்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனிலிருந்து 800,000 ஆகக் குறைக்கப்பட்டு, உள்நாட்டுப் போரின் முடிவில் செம்படைக்கு அணிதிரட்டல் குறைக்கப்பட்டமை இந்த பிரச்சாரத்திற்கு ஆரம்ப ஊக்கமளித்தது. மில்லியன் கணக்கான புதிதாக எழுத்தறிவுள்ள விவசாயிகள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்.[21]

இருள் மறைந்து, சூரியன் நீடூழி வாழ்க!

1920 களில் பரந்த ரஷ்ய கிராமப்புறங்களில், சோவியத் அரசாங்கம் கிராம வாசிகசாலைகளின் வலையமைப்பை நிறுவியது (izba-chital’nia, அதாவது “வாசிப்பு குடிசை”). உள்நாட்டுப் போரின்போது, ஒவ்வொரு ஐந்து கிராமங்களுக்கும் ஏறத்தாழ ஒன்று என்றவகையில் 20,000 க்கும் மேற்பட்ட வாசிகசாலைககள் நிறுவப்பட்டன. புதிய பொருளாதாரக் கொள்கை அரசாங்க செலவினங்களை குறைக்க கட்டாயப்படுத்தியபோது, இந்த எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைந்தது. வரையறுக்கப்பட்ட வளங்கள் கல்வியறிவுக்கு எதிரான போராட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்தன. எடுத்துக்காட்டாக, 1923 ஆம் ஆண்டில் Tambov பிராந்தியத்தில் நிறுவப்பட்ட ஒரு வாசிகசாலையில் பிராந்திய செய்தித்தாள், அரசியல் பொருளாதாரம் குறித்த ஒரு துண்டுப்பிரசுரம் மற்றும் புக்காரின் மற்றும் பிரியோபிரஷென்ஸ்கியின் கம்யூனிசத்தின் ஆரம்ப ஏட்டறிவு ஆகியவை மட்டுமே இருந்தன.[22] வாசிகசாலைகளை இயக்குவதற்கு போதுமான படித்த தொழிலாளர்களை கண்டிபிடிப்பதிலும் நீடித்த சிரமங்களும் இருந்தன.

"வாசிகசாலைகளின் குறிக்கோள், ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் செய்தித்தாளை வாசிப்பதை மிகவும் ஆர்வமாக உணர வைப்பதாகும்" என்று குருப்ஸ்காயா விளக்கினார். “குடிகாரன் மதுவுக்கு இழுக்கப்படுவதிலிருந்து அவர்கள் செய்தித்தாளுக்கு இழுக்கப்பட வேண்டும். வாசிகசாலையால் இதைச் செய்ய முடிந்தால், அது ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கும்”[23].

எவ்வாறாயினும், அறைகள் வெறுமனே செய்தித்தாள்களைக் கிடைக்கச் செய்வதை விட அதிகம் செய்தன. பாரம்பரிய கல்வியாளர் வாழ்க்கையின் தனிமை மற்றும் பின்தங்கிய தன்மையை உடைத்து, அவை கல்வியறிவு மற்றும் கலாச்சாரத்தின் வாகனங்களாக வளர்ந்தன. டிசம்பர் 1925 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 6,392 “சமூக-அரசியல் வட்டங்கள்” 123,000 உறுப்பினர்களைக் கொண்ட வாசிகசாலைகளில் கூட்டப்பட்டுள்ளன. இன்னும் பெரியவை “வேளாண்மை பொருளாதார வட்டங்கள்” (136,000 உறுப்பினர்களைக் கொண்ட 7,000 வட்டங்கள்) மற்றும் “நாடகம் / நாட்டிய வட்டங்கள்” (185,000 உறுப்பினர்களைக் கொண்ட 9,400 வட்டங்கள்) இருந்தன.[24]

படிக்கவும் எழுதவும் கற்றலின் மதிப்பை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. கிராம வாசிகசாலைகளுக்கு வானொலிப் பெட்டிகளை வாங்கக்கூடிய இடங்களில், வருகை கடுமையாக அதிகரித்தது மற்றும் சில பிராந்தியங்களில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு குழுக்களுக்கு மட்டுமே எனக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.[25] கூடுதலாக, ஏப்ரல் 1926 க்குள், 976 பயணத் திரைப்படக் குழுக்கள் தலா ஒரு மாதத்திற்கு 20 கிராமங்களுக்கு வருகை தந்தன. ஒரு வரலாற்றாசிரியர் பின்வருமாறு விளக்கினார்: “எழுத்தறிவுள்ள விவசாயிகள் படங்களை அறிமுகப்படுத்தினர், அவற்றைப்பற்றி மேலதிக தகவல்களை புத்தகங்கள் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக தூண்டுதலாக உருவாக்க அவற்றைப் பயன்படுத்தினர்”.[26]

குழந்தைகளின் கல்வியறிவை பயிற்றுவித்தல்

சோவியத் கல்வியறிவு பிரச்சாரம், எப்போதுமே மட்டுப்படுத்தப்பட்ட நிதி ஆதாரங்களால் பாதிக்கப்பட்டது. போல்ஷிவிக்குகள் அக்டோபர் 1917 இல் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபித்தனர். இது உலகப் புரட்சியின் முதல் தொடக்கமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடனாகும். ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய மையங்களில் தொடங்கி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு புரட்சியின் பரவல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. இது நிதி ஆதாரங்களைப் பகிர்வதன் மூலமும் தொழிற்துறை தொழில்நுட்பத்தின் மூலமும் ரஷ்யாவின் பொருளாதார பின்தங்கிய நிலையை தணிக்கலாம் என்ற வாய்ப்பின் காரணமாக மட்டும் எதிர்பார்க்கப்படவில்லை. எவ்வாறாயினும் ஜேர்மனியில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் தொழிலாள வர்க்க எழுச்சிகளைப் போலவே 1918-1919 மற்றும் மீண்டும் 1923 இல், புரட்சிகர எழுச்சிகள் முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சியில் சென்று முடிவடைந்தன.

உள்நாட்டுப் போர் மற்றும் ஏகாதிபத்திய தாக்குதலின் தாக்கத்தால் ரஷ்யாவின் பாரிய பொருளாதார பின்தங்கிய தன்மை அதிகரித்தது. 1921 ஆம் ஆண்டில், கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான மேலதிக ஆணையம் குறுகிய கால கல்வியறிவு வகுப்புகளை கோடிட்டுக் காட்டும் ஒரு துண்டுப்பிரதியை வெளியிட்டது. அதில் “காகிதம், பென்சில்கள் அல்லது பேனாக்கள் இல்லாமல் எப்படி செல்வது” என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் இடம்பெற்றது. [27]

அனத்தோலி லுனாச்சார்ஸ்க்கி

வறுமை மற்றும் பற்றாக்குறை குறிப்பாக இந்த காலகட்டத்தில் சோவியத் பள்ளி அமைப்பின் வளர்ச்சியை பாதித்தது. 1925 இல் சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் செய்த ஒரு அமெரிக்க கல்வியாளர் நிலைமையை பின்வருமாறு விவரித்தார்: “சோவியத் அமைப்புகளில் பலவற்றில் இருந்ததை விட தரமற்ற உபகரணங்களைக் கண்டுபிடிப்பது கடினம். கட்டிடங்கள் பழையவை. இருக்கைகள் தேய்ந்து போகின்றன. கரும்பலகைகள் மற்றும் புத்தகங்கள் குறைவு. ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வித் தொழிலாளர்கள் மோசமாக சம்பளம் பெறுகிறார்கள், சில நேரங்களில், மாதங்களாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. சோவியத் ஒன்றியத்தில் பள்ளி வயதின் பாதிக் குழந்தைகள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இப்போது 25,000 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக கல்விக்கான மக்கள் ஆணையர் லுனாச்சார்ஸ்கி மதிப்பிடுகிறார். அவர்கள் இந்த ஆசிரியர்களைக் கொண்டிருந்தாலும், அவர்களை இருத்துவதற்கு எந்த அறைகளும் இருக்காது. சோவியத் ஒன்றியத்தில் இருந்ததை விட கல்வி நிலைமைகள் கட்டுமானரீதியாக மோசமாக இருக்கும் பெரிய நாடு ஐரோப்பாவில் இல்லை”.[28]

இந்த மகத்தான சவால்கள் இருந்தபோதிலும், ஆரம்பகால சோவியத் ஒன்றியம் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான உலகின் மிகவும் புதுமையான மற்றும் முற்போக்கான அணுகுமுறைகளை உருவாக்கியது.[28]

அக்டோபர் 1918 இன் கல்விச் சட்டம், பழைய, தேவாலயம் ஆதிக்கம் செலுத்தும் ஜாரிச உயரடுக்கிற்கு ஏற்ற கல்வி நிர்வாக முறையை இரத்து செய்தது. அது மேலும் சுதந்திரமாக அணுகக்கூடிய, மதசார்பற்ற கல்வியை ஆரம்பகட்டத்திலிருந்து மூன்றாம் நிலை வரை மேம்படுத்தி, “ஐக்கிய தொழிலாளர் பள்ளியாக” உருவாக்கியது. இந்தச் சட்டம் கல்வி ஆணையத்திற்குள் “பின்வரும் அம்சங்களைக் கொண்ட பள்ளி முறை ஒன்றிற்கான ஒரு ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கிறது என்று ஒரு வரலாற்றாசிரியர் பின்வருமாறு விளக்கினார்: ஒரே மாதிரியான பள்ளி, ஐக்கியப்பட்ட தொழிலாளர் பள்ளி, ஒன்பது வருடங்களுக்கு தொழில்நுட்பவியல் கல்வி, பாலினம் அல்லது சமூக மூலம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து குழந்தைகளுக்கும் காலணிகள், சூடான காலை உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் கல்விப் பொருட்கள் இலவசமாக வழங்கல்; குறைவான அல்லது வீட்டுப்பாடமே கொடுக்காதுவிடுவது; ஒரு தரத்தையுடையயான பாடப்புத்தகங்கள் இல்லை, பதவி உயர்வோ அல்லது பட்டப்படிப்பு தேர்வுகள் அல்லது தரங்கள் (மதிப்பெண்கள்) வழங்காதுவிடுவது, நிலையான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சமூக பயனுள்ள பயிற்சிகள் (பொது பூங்காக்களை கவனித்தல், கல்வியறிவின்மையிலிருந்து மதம் மற்றும் மதுபானம் தொடர்பான தீமைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள்); ஆரம்ப தரங்களில் தேர்ந்தெடுத்து ஒரு பள்ளி கடையில் அல்லது பள்ளி தோட்டங்களில் பின்னர் மேல்தர மாணவர்கள் வேலை செய்வதற்கேற்ப கற்றலையும் தொழிற்பயிற்சியையும் மாதிரியாக்குதல்களில், ஒருவேளை மூத்த மாணவர்களுக்கான தொழிற்சாலையில் ஒரு பயிற்சி கூட; பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் பள்ளியில் கற்பிப்பதற்கான சுயநிர்வாகத்தை உருவாக்கல்”.[29] ஆகியவை இத்திட்டத்தில் உள்ளடங்கியிருந்தன.

பொருள் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, இந்த கடமைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும், சோவியத் ஒன்றியம் கல்விகற்பியல் பரிசோதனையின் ஆய்வகமாக மாறியது.

"எங்கள் சோசலிச நாடு உடல் மற்றும் மன உழைப்பின் நல்லிணக்கத்திற்காக பாடுபடுகிறது. இது மனிதனின் இணக்கமான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஒரே விஷயமாகும்" என்று ட்ரொட்ஸ்கி 1924 உரையில் விளக்கினார். அவர் தொடர்ந்தார்: "ஒரு மனிதனை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த சில வார்த்தைகள். இதுதான் எங்கள் திட்டம். இத்திட்டம் இதற்கான பொதுவான திசைகளை மட்டுமே தருகிறது: ‘இதோ இதுதான் உங்கள் பாதையின் பொதுவான திசை!’ எனச்சுட்டிக்காட்டுகின்றது ஆனால் இந்த ஒன்றிணைவை நடைமுறையில் எவ்வாறு அடைவது என்று திட்டம் கூறவில்லை… இந்த துறையில், பலரைப் போலவே, நாங்களும் அனுபவம், ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் மூலம் ஏற்கனவே சென்று கொண்டிருக்கிறோம். இலக்கை அடைவதற்கான சாலையின் பொதுவான திசையை மட்டுமே அறிவோம்: உடல் மற்றும் சிந்தனைரீதியான உழைப்பின் ஒரு சரியான சாத்தியமான கூட்டின் மூலம்”.[30]

புரட்சிக்குப் பின்னர் பல பள்ளிகளில் குழந்தைகளின் கல்வியறிவு கற்றல் கணிசமாக மாறியது. குழந்தைகளின் ஒரு சிறுபான்மையானவர்களுக்கே இதை அணுகக்கூடிய ஜாரிச அமைப்பு, சர்வாதிகார, சொற்பொழிவு-கற்றல் முறைகளைக் கொண்டிருந்தது. குழந்தையின் சூழல் மற்றும் ஆர்வங்கள் கருத்திலெடுக்கப்படாதும் பாடத்திட்டத்தின் பிற அம்சங்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வாசிப்பு மற்றும் எழுதும் செயல்முறை மற்றும் இலக்கணம் கற்பிக்கப்பட்டது.

மறுபுறம், சோவியத் பள்ளிகள் ஒரு ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை பின்பற்றவும், சமூகம் மற்றும் இயற்கை உலகத்துடன் ஈடுபாடு மற்றும் ஆய்வு மூலம் வாசிப்பு மற்றும் எழுத்தை கற்பிக்கவும் ஊக்குவிக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் முற்போக்கான அமெரிக்க கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட அணுகுமுறைகளை குருப்ஸ்காயா இணைத்து, மனித சமுதாயத்தையும் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கு பற்றிய ஒரு மார்க்சிச புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை வளர்த்துக் கொண்டார். இது "சிக்கலான முறை" என்று அறியப்பட்டது. ஆசிரியர்கள் குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் எண் கற்றலை இயற்கை, உழைப்பு மற்றும் சமூகம் என்ற மூன்று "சிக்கலான" கட்டமைப்பிற்குள் திட்டமிடுகிறார்கள். பள்ளிகளுக்கும் அவற்றின் சமூகங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் ஊக்குவிக்கப்பட்டன, அண்டை தொழிற்சாலைகள் அல்லது பண்ணைகள் குறித்த அடிக்கடி சுற்றுலாப்பயணம் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன.

குருப்ஸ்கயா பின்வருமாறு விளக்கினார்: “முதல் கட்டம் [பள்ளியின்] வேலை தொடர்பான மற்றும் கலாச்சார வாழ்க்கைக்கு குழந்தைகளுக்கு மிகவும் தேவையான திறன்களையும் அறிவையும் வழங்குவதையும் அவர்களின் சுற்றுப்புறங்கள் தொடர்பாக அவர்களின் ஆர்வத்தை எழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது… முதல் கட்டத்தில் மொழியும் கணிதமும் முற்றிலும் செயல்பாடு தொடர்பான பங்கையை கொண்டிருக்கவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. முதல் கட்டத்தில் அறிவின் தனித்த துறைகளில் அவர்களின் அறிவு காலத்திற்கு முந்திய ஒன்றாகும். எனவே, அவர்களின் தாய்மொழி மற்றும் கணிதத்தின் படிப்பு ஒரு நவீன தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், இது ஒரு குழந்தையின் அவதானிப்புக்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.

நடேஷ்டா குருப்ஸ்காயா (ஜாரிச போலீஸ் படங்கள், 1896)

1920 களில் சோவியத் கல்வியின் வளர்ச்சியைப் பற்றி எழுதுகையில், அமெரிக்க பத்திரிகையாளர் வில்லியம் ஹென்றி சேம்பர்லின் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“மிகக் குறிப்பிடத்தக்க மற்றும் புதுமையான கல்வி சோதனைகள், கீழ் மற்றும் நடுத்தர சோவியத் பள்ளிகளில் காணப்படுகின்றன… ஒவ்வொரு பாடமும் நீர்-இறுக்கமான பெட்டியில் வைக்கப்பட்டதுபோல் தனித்தனியாக கற்பிக்கப்பட்ட பழைய கால கற்பித்தல் முறைகள் இப்போது முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளன… மாஸ்கோவில் தலைவர் கலினின் பெயரிடப்பட்ட பள்ளியில் இந்த [சிக்கலான] முறையின் நடைமுறை பயன்பாட்டை நான் கண்டேன். அங்கு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கருப்பொருள் ‘மாஸ்கோ நகரம் என்பதாகும்.’ வரலாற்று தொடர்பான பாடம் நகரின் வாழ்க்கையின் கடந்த கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அங்கு குழந்தைகளை மாஸ்கோ நதிக்கு அழைத்துச் சென்று தீவுகள், கரையோரங்கள் மற்றும் தீபகற்பங்கள் போன்றவற்றைக் காண்பிப்பதன் மூலம் சில புவியியல் கருத்துக்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு அருகிலுள்ள தொகுதிக்கட்டிடத்தை அளவிடுவதற்கும் ஒட்டுமொத்தமாக நகரத்துடனான அதன் உறவைப் பற்றி பல்வேறு கணக்கீடுகளை செய்வதற்கும் குழந்தைகளின் எண்கணித பாடம் கவனம் செலுத்தியது. … அவ்வப்போது அவர்கள் தொழிற்சாலைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் வரலாற்றுப் பயணங்களை பார்வையிட்டனர். சோவியத் கற்பிதத்தில் தூய புலமைசார் முறை என்பது வெறுப்புக்குரியதாக இருந்தது. மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் விடயங்கள் பற்றி உறுதியான மற்றும் புலப்படத்தக்க பார்வையை வழங்க ஒவ்வொரு முயற்சியும் செய்யப்படுகிறது.[32]

1930 கள் மற்றும் ஸ்ராலினிசத்தின் தாக்கம்

முதலாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் சந்தித்த தோல்விகளின் விளைவாக சோவியத் அரசின் தனிமைப்படலுடன், நாட்டின் பாரிய வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையும் சேர்ந்து, ஒரு புதிய அதிகாரத்துவ சாதியின் எழுச்சிக்கு வழிவகுத்தது. 1920 களின் முற்பகுதியில், இந்த சலுகை பெற்ற சமூக அடுக்கு பெருகிய முறையில் சுய திருப்தி மற்றும் பழமைவாதமுடையதாக மாறியது. ஜோசப் ஸ்ராலின் 1924 இல் "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற தேசியவாத முன்னோக்கை வெளியிட்ட பின்னர் அவரின் பின்னால் இத்தட்டு அணிவகுத்து நின்றது.

இது, 1905 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிகர எழுச்சிகளுக்கு மத்தியில் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு நேர் எதிராக இருந்தது. இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே 1917 இல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ட்ரொட்ஸ்கி ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சியின் பணிகளை ஆராய்ந்து ஜாரிசத்தை நீக்குதல் மற்றும் நிலப்பிரபுத்துவ பின்தங்கிய நிலையின் அனைத்து எச்சங்களும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இல்லாதொழிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். தொழிலாளர்கள் புரட்சியை வழிநடத்துவார்கள், அதிகாரத்திற்கு வந்தவுடன் ட்ரொட்ஸ்கி சரியாக எதிர்பார்த்தபடி பொது உடமையை பொருளாதாரத்தின் கட்டளையிடும் உயரத்திற்கு எடுத்துச் செல்ல நிர்பந்திக்கப்படுவார். மேலும் அரசு திட்டமிடல் உள்ளிட்ட சோசலிச நடவடிக்கைகளை ஏற்படுத்துவார். எவ்வாறாயினும், ரஷ்யாவின் பாரிய பொருளாதார பின்தங்கிய தன்மையைக் கருத்தில் கொண்டு, புரட்சியின் வெற்றி இறுதியில் சர்வதேச அளவில் எல்லாவற்றிற்கும் மேலாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தங்கியுள்ளது.

நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தையும் அதிகாரத்துவம் அதன் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டது. ட்ரொட்ஸ்கி தனது சுயசரிதையில் இவ்வாறு நினைவு கூர்ந்தார்: “'அனைத்தும் புரட்சிக்காக இல்லை, ஆனால் தனக்கும் ஏதாவது ஒன்று' என்ற உணர்வு 'நிரந்தர புரட்சியை தோற்கடி' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மார்க்சிசத்தின் துல்லியமான தத்துவார்த்த கோரிக்கைகளுக்கும், புரட்சியின் துல்லியமான அரசியல் கோரிக்கைகளுக்கும் எதிரான கிளர்ச்சி படிப்படியாக மக்களின் பார்வையில், ட்ரொஸ்கிசத்திற்கு எதிரான போராட்டம் என்ற வடிவத்தை எடுத்தது”.[33]

ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பினரும் புரட்சியையும் அதன் சர்வதேச முன்னோக்கையும் பாதுகாப்பதில் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான பிரச்சாரத்தை மேற்கொண்டன. ஸ்ராலினிச அதிகாரத்துவம் அவதூறு, வரலாற்று பொய்மைப்படுத்தல், பிரிவு சூழ்ச்சிகள் மற்றும் வன்முறை அரச அடக்குமுறை ஆகியவற்றின் கடுமையான பிரச்சாரத்துடன் இதற்கு எதிராக பதிலளித்தது. ஸ்ராலினிடம் சரணடைவதற்கு முன்னர் சிறுகாலம் எதிர்த்தரப்பினருடன் சேர்ந்த குருப்ஸ்கயா, 1926 இல் லெனின் உயிருடன் இருந்திருந்தால் அவர் புதிய ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்று குறிப்பிட்டார். சோவியத் ஜனநாயகம் மற்றும் சர்வதேசியவாதத்தை பாதுகாப்பதற்காக பதாகைகளுடன் மாஸ்கோ மற்றும் லெனின்கிராட்டில் அக்டோபர் புரட்சியின் 10 வது ஆண்டுவிழாவிற்காக இடது எதிர்க்கட்சி 1927 இல் உத்தியோகபூர்வ பேரணிகளுக்குள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் ட்ரொட்ஸ்கியையும் பிற எதிர்ப்பாளர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றி உள்நாட்டில் நாடுகடத்தப்பட்டனர். ட்ரொட்ஸ்கி 1929 இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் நான்காம் அகிலத்தை நிறுவிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1940 இல் மெக்சிகோவில் நாடுகடத்தப்பட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

ஸ்ராலினிச எதிர்ப்புரட்சி, கலாச்சாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் செய்தது போலவே கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

லுனாச்சார்ஸ்கி (Lunacharsky) 1929 ஆம் ஆண்டில் கல்வி ஆணையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். Marx-Engels Institute of Marxist Pedagogy 1932 இல் கலைக்கப்பட்டது. மேலும் அந்த ஆண்டு, ஸ்ரானிஸ்லாவ் ஷாட்ஸ்கி (Stanislav Shatsky) முற்போக்கான குழந்தை மற்றும் வயது வந்தோர் கல்வி மையங்களின் வலைப்பின்னலாகவும் ஆசிரியர் மற்றும் பயிற்சி மையமாகவும் இருந்த “முதல் பரிசோதனை நிலையத்தின்” தலைவராக இருந்து நீக்கப்பட்டார். ஷாட்ஸ்கி 1920 களில் குருப்ஸ்காயாவுடன் நெருக்கமாக ஒத்துழைத்துவந்திருந்தார். மேலும் அவரது பள்ளி வலையமைப்பை அமெரிக்க தத்துவஞானியும் மற்றும் கல்வியாளருமான ஜோன் டுவி உட்பட பல பாராட்டுக்குரிய மேற்கத்திய கல்வியாளர்கள் பார்வையிட்டனர். 1930 களில் ஸ்ராலினிச ஆட்சி, அனாதை மற்றும் வீடற்ற குழந்தைகளுக்காக ஜி.பி.யூ இரகசிய பொலிஸால் இயக்கப்பட்ட “குடியிருப்புகளுக்கு” பொறுப்பான முன்னர் அறிமுகமற்ற நிர்வாகியாக இருந்த அன்டன் மகரென்கோவை தேசிய கல்வியாளர்-தலைவராக உயர்த்தியது. இந்த குடியிருப்புக்கள் இராணுவ பாணி பயிற்சி முகாம்கள் போல் நடத்தப்பட்டன. மாணவர்கள் வகுப்பறைகளில் செலவிட்ட நேரத்தைப் போலவே துளையிடும் கருவிகளையும் ஒளிப்பதிவுக்கருரவிகளையும் தயாரிக்கும் பட்டறைகளில் அதிக நேரம் செலவிட்டனர்.

1930 களின் முற்பகுதியில், தொடர்ச்சியான மத்திய குழு தீர்மானங்கள் மற்றும் அரசாங்க கட்டளைகள் கல்வித்துறை "பரிசோதனையை" கண்டனம் செய்து, சிக்கலான இம்முறையை தடைசெய்தன. பல்தொழில்நுட்பவியலுக்கான எந்தவொரு அர்ப்பணிப்பையும் முற்றாக குறைத்து, அதிபர் மற்றும் ஆசிரியர் அதிகாரத்திற்கு ஆதரவாக மாணவர் ஜனநாயகத்தை ஒழித்து, கட்டாய பள்ளி சீருடைகள் அணியுமாறு விதித்து மற்றும் பள்ளி சுயாட்சிமுறை பின்வாங்கப்பட்டு மத்தியப்படுத்தப்பட்ட அரச கட்டுப்பாடுக்கு சார்பானதாக உருவாக்கப்பட்டது. [34] ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் தனிப்பட்ட பரிசோதனை மதிப்பெண்களை அதிகரித்ததற்காக வெகுமதி பெற்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நுழைந்த மாணவர்களுக்கு தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வாதிகாரமானது கல்வி முறையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊறியது. ஒவ்வொரு தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கும் ஒரு “நடத்தைக்கான விதிகள்” வழங்கப்பட்டன. அவை “பள்ளி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களுக்கு கேள்வியின்றி கீழ்ப்படிய வேண்டும்”, “ஆசிரியர் அல்லது அதிபர் வகுப்பு அறைக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது எழுந்திருக்க வேண்டும்” என்ற கட்டளைகளை உள்ளடக்கியது. ஆசிரியருக்கு பதிலளிக்கும்போது எப்போது எழுந்து நிற்க வேண்டும் ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே உட்கார்ந்து கொள்ளுங்கள்; மாணவர் ஒரு கேள்விக்கு பதிலளிக்க விரும்பினால் கையை உயர்த்த வேண்டும்". என்பவை புகுத்தப்பட்டன.

1937 ஆம் ஆண்டில் ட்ரொட்ஸ்கி தனது தலைசிறந்த பகுப்பாய்வான காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில், சோவியத் ஒன்றியத்தில் புதிய தலைமுறை "சகிக்கமுடியாத மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் அடக்குமுறையின் கீழ்" உருவாகி வருவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: “தொழிற்சாலையில், கூட்டுப் பண்ணை, இராணுவமுகாம்கள், பல்கலைக்கழகம், பள்ளி அறை, சிறுவர் பள்ளியில் கூட, இன்னும் மழலைகளில் பள்ளிகளில் இல்லாவிடினும் மனிதனின் முக்கிய மகிமை இவ்வாறு அறிவிக்கப்படுகிறது: தலைவருக்கு தனிப்பட்ட விசுவாசம் மற்றும் நிபந்தனையற்ற கீழ்ப்படிதல், ஸ்ராலினின் ஒத்துழைப்பாளர்களிடமிருந்து நகலெடுக்கப்படவில்லை என்றாலும், கோயபெல்ஸிடமிருந்து நகலெடுக்கப்பட்டதாக தோன்றும் பல கல்விசார் மணிமொழிகளும் பழமொழிகளும் சமீபத்திய காலங்களில் அதிகபட்சம் தெரிகின்றன”.[35]

உலகளாவிய கல்வியறிவுக்கான பிரச்சாரம், தவிர்க்க முடியாமல் ஸ்ராலினிச எதிர் புரட்சியால் மோசமாக பாதிக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் கல்வியறிவின்மையை துடைத்தழிக்கும் விளிம்பில் இருந்த அதே தருணத்தில், ஸ்ராலின் ஆட்சி இடைவிடாமல் பொய்களையும் வரலாற்று பொய்யையும் பரப்பியது. லெனினின் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் தொடர்ச்சியை ஸ்ராலின் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதும் மற்றும் ட்ரொட்ஸ்கியும் நிரந்தரப் புரட்சி தத்துவமும் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகள் என்ற ஸ்ராலினிசத்தின் "பெரிய பொய்" (“big lie”) 1936-1938 களையெடுப்பிலும் போலி சோடிப்புவழக்குகளின் போது பயங்கரமான வடிவத்தை எடுத்தது. ஸ்ராலினை தவிர்த்து, லெனினின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தோழர்கள் ஒவ்வொருவரும் ஒரு உளவாளி, பாசிசவாதி அல்லது ஆத்திரமூட்டல் செய்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வரலாற்று பொய்மைப்படுத்தல்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கட்சிக் கல்வி ஸ்தாபனங்களில் நிறுவனமயப்படுத்தப்பட்டது. மேலும் ஆட்சியின் மோசமான பொய்களை எதிர்த்த எந்தவொரு ஆசிரியரும் அல்லது மாணவரும் சிறைத்தண்டனை அல்லது மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஒரு வரலாற்றாசிரியர் 1930களின் பிரச்சாரங்கள் "தேசிய கல்வியறிவு விகிதத்தில் கூர்மையான உயர்வை ஏற்படுத்தின, ஆனால் இது லெனின் புரிந்து கொண்ட உண்மையான கல்வியின் இழப்பிலாகும். ஐந்தாண்டு திட்டங்களில் வேலைவாய்ப்புக்கு முடிந்தவரை விரைவாக எழுத்தறிவுள்ள பரந்த தொழிலாளர் சக்தியை வழங்குவதன் முக்கிய நோக்கம் பொருளாதாரத்திற்கானதே தவிர கலாச்சார நோக்கத்திற்கானதல்ல” என குறிப்பிட்டார்.[36]

குருப்ஸ்காயா, ஸ்ராலினிச ஆட்சியுடன் தன்னை சமரசப்படுத்திக்கொண்ட போதிலும், 1920 களின் பிற்பகுதியிலும் 1930 களின் முற்பகுதியிலும் எழுத்தறிவு பிரச்சாரப் பணிகள், "மில்லியன் கணக்கான மக்களுக்கு வாசிக்கவும் எழுதவும் உதவியது. ஆனால் பெறப்பட்ட அறிவு மிகவும் அடிப்படை வகையானது" என்று ஒப்புக் கொண்டார். [37] ஆய்வு ஒன்று, 1930 களில் தொழிலாளர்கள் வாசிக்க செலவழித்த நேரத்தின் கணிசமானளவு குறைந்ததை சுட்டிக்காட்டியது. 1923 மற்றும் 1939 க்கு இடையில், ஒவ்வொரு வாரமும் நகரத் தொழிலாளர்கள் செய்தித்தாள்களை வாசிக்க அர்ப்பணித்த சராசரி நேரம் 2.3 இலிருந்து 1.8 மணி வரை குறைந்தது. மற்றும் அக்காலத்தில் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்க செலவழித்த நேரம் 2.1 இலிருந்து 1.0 மணித்தியாலமாக குறைந்தது.[38]

சோவியத் ஒன்றியத்தின் பாதி மக்கள்தொகையை உள்ளடக்கிய ரஷ்யரல்லாத தேசிய மக்களிடையே எழுத்தறிவு பிரச்சாரப் பணிகளையும் ஸ்ராலினிசம் பாதித்தது. அக்டோபர் புரட்சியின் போது சில தேசிய இனங்கள் கல்வியறிவற்ற சமூகங்களாக இருந்தன. மற்றவற்றின் கல்வியறிவு விகிதம் மிகக் குறைவாக இருந்தது. 1920 களில், மக்கள் தங்கள் சொந்த மொழியில் கல்வியறிவு பெற அனுமதிக்க, சோவியத் மொழியியலாளர்கள் வடக்கு Caucasus, Turkic, Finno-Ugric மக்களுக்கு “இலக்கணங்கள் மற்றும் சொற்களஞ்சியங்களுக்கு வரைபடம் மற்றும் குறியிடப்பட்ட எழுத்துக்கள் உருவாக்கியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. “Narkompros [கல்வி ஆணையம்] டஜன் கணக்கான கல்வி நிறுவனங்களை மீட்டெடுத்து, புதியவற்றை உருவாக்கியது (the Central Institute of Living Eastern Languages, the Institute of Orientology, the All-Union Association of Orientology, the Communist University of the Workers of the East) இவை மூலம் மொழியியல் ஆய்வுகள், எழுத்துக்கள், அகராதிகள், பள்ளி நூல்கள் மற்றும் கிழக்கில் வேலை செய்வதற்கு பூர்வீக மொழி பணியாளர்களை தயார் செய்தது”.[39]

ஸ்ராலின் பெரும் ரஷ்ய பேரினவாதத்தை ஊக்குவித்தமையானது இந்த முயற்சிகளுக்கு தடையாக இருந்தது. முன்னர் இலத்தீன் எழுத்துக்களின் பயன்பாட்டை உருவாக்கிய அந்த தேசிய இனங்களுக்கு 1930 களில் கிரிலிக் எழுத்துக்கள் திணிக்கப்பட்டன. புதிதாக எழுத்தறிவு பெற்ற சில தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் சொந்த மொழியை கிரிலிக் மொழியில் எவ்வாறு படிக்க வேண்டும் என்பதை திரும்பபடிக்க வேண்டியிருந்தது. மேலதிகமாக, 1938 முதல் பள்ளிகளில் ரஷ்ய மொழி கட்டாயமாக்கப்பட்டது.

கல்வியறிவு பிரச்சாரத்தில் இந்த ஸ்ராலினிச தடைகள் இருந்தபோதிலும், 1930 களில் படிக்கவும் எழுதவும் கூடியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. ட்ரொட்ஸ்கி பகுப்பாய்வு செய்தபடி, அதிகாரத்துவ சாதி சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை அபகரித்தது, ஆனால் அது வெளிநாட்டு வர்த்தகத்தின் அரசு ஏகபோகத்தையும் உற்பத்தி சாதனங்களில் பொது உடமையையும் தக்க வைத்துக் கொண்டது. சோவியத் ஒன்றியம் தொடர்ந்தும் ஒரு தொழிலாளர் அரசாகவே இருந்தது, இருப்பினும் கடுமையாக உருக்குலைந்த ஒன்றாவே இருந்தது. ஆகையால், அதனூடாக கல்வியறிவு பிரச்சாரத்தின் ஒரு பாகமாக பரந்த வளங்களைத் திட்டமிடவும் விநியோகிக்கவும் அரசுக்கு இயலுமானதாக இருந்தது.

இன்னும் பல தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் படிக்கவும் எழுதவும் கூடியதாக இருந்தமை தொழில்மயமாக்கல் உந்துதலின் இன்றியமையாத தேவையாகும். ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்களால் அதன் தேவையில்லாமல் வன்முறை மற்றும் பொறுப்பற்ற தன்மைக்காக கடுமையாக கண்டனம் செய்யப்பட்ட ஸ்ராலினின் தொழிற்துறைமயமாக்கல் மற்றும் விவசாயிகளை கட்டாய கூட்டுபண்ணை முறையாக்கியமையால் சோவியத் யூனியனின் நகர்ப்புற மக்கள்தொகையில் கூர்மையான அதிகரிப்பு காணப்பட்டது. கட்டாய கூட்டுபண்ணை முறையாக்கியமை, பேரழிவு தரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளையில், இப்போது அதிக அளவில் குவிந்துள்ள விவசாய மக்களுக்குள் கல்வியறிவு கற்பிப்பதை அனுமதித்தது. கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பான Komsomol கிராமப்புறங்களில் எழுத்தறிவு பிரச்சாரத்திற்கு உதவுவதற்காக அணிதிரட்டப்பட்டது. 1931 மற்றும் 1933 க்கு இடையில், 50,000 Komsomol உறுப்பினர்கள் பள்ளிகளில் கற்பித்தனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலோருக்கும் மற்றும் பிற இளம் ஆசிரியர்களுக்கு முறையான தகுதிகள் இருக்கவில்லை.[40]

கல்வியறிவு நிலைய வகுப்புகளுக்கு தொழிலாளர் சேர்க்கை அதிகரித்தது. 1930 களில் அனைத்து குழந்தைகளுக்கான பள்ளிப்படிப்பை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க வளங்கள் அர்ப்பணிக்கப்பட்டன. 1927 மற்றும் 1932 க்கு இடையில், பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 230,000 ஆக அதிகரித்துள்ளது. 1-7 தரங்களுக்கான மாணவர் எண்ணிக்கை 1927-1928 இல் 11 மில்லியனிலிருந்து 1932-1933 இல் 21 மில்லியனாக அதிகரித்தது, இதில் 8 மில்லியனுக்கும் அதிகமான சேர்க்கை கிராமப்புற பள்ளிகளின் ஆரம்ப தர மட்டங்களில் இருந்தது. ஒரு வரலாற்றாசிரியர் “கிராமப்புற பள்ளிகளில் இந்த 8 மில்லியனின் அதிகரிப்பு 1914 இல் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் முழு ஆரம்ப பள்ளிகளில் இருந்த அனுமதிகளை விட அதிகமாக இருந்தது” எனக் குறிப்பிட்டார்.[41]

முடிவுரை

1939 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, அக்டோபர் புரட்சியின் 22 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்வியறிவின்மை முற்றிலுமாக அழிக்கப்படுவதாக நிரூபித்தது. 9 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 87.4 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். கல்வியறிவு விகிதம் கிராமப்புறங்களை விட நகரங்களில் அதிகமாகவும், பெண்களை விட ஆண்களிடையே அதிகமாகவும் இருந்தது. நகர்ப்புற ஆண்களின் கல்வியறிவு விகிதம் 97.1 சதவீதமாகவும், நகர்ப்புற பெண்களின் விகிதம் 90.7 சதவீதமாகவும் இருந்தது.[42] கிராமப்புற ஆண்களின் கல்வியறிவு விகிதம் 97.1 சதவீதமாகவும், பெண்களின் விகிதம் 90.7 சதவீதமாகவும் இருந்தது.[42] ரஷ்ய மொழிபேசாத சோவியத் குடியரசுகளில் கல்வியறிவில் மிகவும் அசாதாரணமான அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக, மத்திய ஆசிய பிராந்தியமான துர்க்மேனியாவில், கல்வியறிவு விகிதம் 1897 இன் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டபோது 8 சதவீதத்திற்கும் குறைவாக இருந்து, 1939 இல் 78 சதவீதமாக அதிகரித்தது.[43]

நீங்கள் புத்தகங்களை வாசிக்கவில்லை என்றால், எப்படி வாசிப்பது மற்றும் எழுதுவது என்பதை விரைவில் மறந்துவிடுவீர்கள்

கல்வியறிவு பிரச்சாரம், சோவியத் சமுதாயத்தின் ஆழமான கலாச்சார தன்மைக்கு அடிப்படையாக அமைந்தது. ஸ்ராலினிச ஆட்சியின் தணிக்கை மற்றும் அடக்குமுறை இருந்தபோதிலும், சோவியத் மக்கள் இலக்கியம், கவிதை மற்றும் கலைகளை மதித்தனர். 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்த1941-1945 க்கு இடையிலான நாஜி ஜேர்மனிக்கு எதிரான இராணுவ பிரச்சாரத்தில் எழுத்தறிவு பிரச்சாரம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பங்கைக் கொண்டிருந்தது. 1941 மற்றும் 1945 க்கு இடையில் இராணுவத்திற்குள் நுழைந்த பல்லாயிரக்கணக்கான சோவியத் ஆண்கள், மற்றும் ஆயுத தொழிற்சாலைகளில் பணியாற்றிய ஆண்களும் பெண்களும் எழுத்துபூர்வ வழிமுறைகளைப் பின்பற்றி வழங்குவதில் வல்லவராக இருந்தனர். பரந்த கல்வியறிவு இல்லாதிருந்தால், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்காக ஒட்டுமொத்த மக்களையும் பெருமளவில் அணிதிரட்டுவதற்கு இன்னும் கூடுதல் விலையை கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.

இன்றைய கண்ணோட்டத்திலும், சோவியத் கல்வியறிவு பிரச்சாரம் ஒரு அசாதாரண சாதனையாகவே உள்ளது. முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி, பொதுக் கல்வி மீதும் தொழிலாள வர்க்கத்தின் கலாச்சாரத்தை அணுகும் சாத்தியத்தின் மீதும் ஒரு தீவிரமான தாக்குதலை கொண்டுவருகிறது. அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும், பொதுக் கல்விக்கான செலவினங்களைக் குறைப்பதற்கான ஒரு போலிச்சாட்டாக கொரோனா வைரஸ் தொற்று பயன்படுத்தப்படுகிறது. அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள பொதுப் பள்ளிகளில் வசதிகளின் நீண்டகால பற்றாக்குறை, ஆசிரியர்களுக்கான திகிலூட்டும் வேலை நிலைமைகள் மற்றும் கட்டாய பிற்போக்குத்தனமான கல்வி வழிமுறைகள் ஆகியவற்றுடன், இளைய தலைமுறையினருக்கு உண்மையான, விமர்சன கல்வியறிவை பெறுவதற்கான உரிமையை மறுக்க அச்சுறுத்தப்படுகின்றது. நிதிய தன்னலக்குழுக்கள் மற்றும் அவர்களின் அரசியல் பணியாளர்களும் இடையே 19 ஆம் நூற்றாண்டின் ஜாரிச கல்வி மந்திரி வெளிப்படுத்தியதைப் போன்ற பின்வரும் ஒரு மனநிலையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதாவது தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கான கல்வியறிவு மற்றும் அறிவு என்பது ஒரு ஆபத்தான விஷயமாகவும் எனவே இதை கட்டுப்படுத்துவதே சிறந்தது என்று நம்பப்படுகிறது.

மனித கலாச்சாரத்தின் மற்ற எல்லா அம்சங்களையும் பாதுகாப்பதைப் போலவே உலகளாவிய, உயர்தர கல்வியறிவின் பாதுகாப்பும் மீண்டும் சோசலிச இயக்கத்தின் தோள்களின் மீது விழுகிறது.

பிற்குறிப்புகள்:

[1] Ben Eklof, “Russian Literacy Campaigns 1861-1939,” in R.F. Arnove and H.J. Graff (eds.) National Literacy Campaigns: Historical and Comparative Perspectives (p. 141). Springer, 1987.

[2] Roger Pethybridge, The Social Prelude to Stalinism. Palgrave Macmillan, 1974, p. 134.

[3] Cited in Theresa Bach, Educational Changes in Russia. US Government Printing Office, 1919, p. 4.

[4] Vladimir Lenin, The State and Revolution: the Marxist Theory of the State and the Tasks of the Proletariat in the Revolution (p. 479), in Collected Works (vol. 25). Progress Publishers, 1974.

[5] Cited in K. Nozhko et al., Educational Planning in the USSR. UNESCO, 1968, p. 26.

[6] H.S. Bhola, Campaigning for Literacy: Eight National Experiences of the Twentieth Century. UNESCO, 1984, pp. 44-45.

[7] Leon Trotsky, “Listen and Get Ready, Red Army!,” in How the Revolution Armed: The Military Writings and Speeches of Leon Trotsky (vol. 5). New Park Publishers, 1979.

[8] Leon Trotsky, “First Reading Book—Is it Worth Reading?,” in How the Revolution Armed: The Military Writings and Speeches of Leon Trotsky (vol. 2). New Park Publishers, 1979.

[9] Pethybridge, The Social Prelude to Stalinism, op. cit., p. 110.

[10] Cited in V. Protsenko, “Lenin’s Decrees on Public Education.” Soviet Education, vol. 3 no. 3, 1961, p. 59.

[11] Cited in I.V. Glushchenko, “The Soviet Educational Project: The Eradication of Adult Illiteracy in the 1920s–1930s.” Russian Social Science Review, vol. 57 no. 5, September–October 2016, p. 389.

[12] Jeffrey Brooks, “Studies of the Reader in the 1920s.” Russian History, vol. 9 nos. 2/3, 1982, p. 189.

[13] Peter Kenez, The Birth of the Propaganda State: Soviet Methods of Mass Mobilisation, 1917-1929. Cambridge University Press, 1985, p. 82.

[14] Ibid., p. 157.

[15] Charles E. Clark, “Literacy and Labour: The Russian Literacy Campaign within the Trade Unions, 1923-27.” Europe-Asia Studies, vol. 47 no. 8, December 1995, p. 1,332.

[16] Ibid., p. 1,328.

[17] Kenez, The Birth of the Propaganda State, op. cit., p. 154.

[18] Ibid., p. 161.

[19] Clark, “Literacy and Labour,” op. cit., p. 1,330.

[20] Leon Trotsky, “Leninism and Library Work,” in Problems of Everyday Life. Pathfinder Press, 1973, p.153

[21] Eklof, “Russian Literacy Campaigns 1861-1939,” op. cit., p. 133.

[22] Alexandre Sumpf, “Confronting the Countryside: The Training of Political Educators in 1920s Russia.” History of Education, vol. 35 nos. 4-5, p. 479.

[23] Cited in Bradley Owen Jordan, Subject(s) to Change: Revolution as Pedagogy, or Representations of Education and the Formation of the Russian Revolutionary. PhD thesis, University of Pennsylvania, 1993, p. 211.

[24] Charles E. Clark, “Uprooting Otherness—Bolshevik Attempts to Refashion Rural Russia via the Reading Rooms of the 1920s.” Canadian Slavonic Papers, vol. 38 nos. 3/4, September-December 1996, p. 328.

[25] Ibid., p. 324.

[26] Pethybridge, The Social Prelude to Stalinism, op. cit., p. 159.

[27] Eklof, “Russian Literacy Campaigns 1861-1939,” op. cit., p. 133.

[28] Scott Nearing, Education in Soviet Russia. International Publishers, 1926, p. 13.

[29] Larry E. Holmes, “Soviet Schools: Policy Pursues Practice, 1921-1928.” Slavic Review, vol. 48 no. 2, Summer 1989, p. 235.

[30] Leon Trotsky, “A Few Words on How to Raise a Human Being,” in Problems of Everyday Life. Pathfinder Press, 1973, pp. 136-137.

[31] Cited in John T. Zepper, “N. K. Krupskaya on Complex Themes in Soviet Education.” Comparative Education Review, vol. 9 no. 1, February 1965, p. 34.

[32] William Henry Chamberlin, Soviet Russia: A Living Record and a History. 1930, available here: https://www.marxists.org/archive/chamberlin-william/1929/soviet-russia/ch12.htm

[33] Leon Trotsky, My Life: An Attempt at an Autobiography. Charles Scribner’s Sons, 1931, p. 505.

[34] Jon Lauglo, “Soviet Education Policy 1917-1935: From Ideology to Bureaucratic Control.” Oxford Review of Education, vol. 14 no. 3, 1988, pp. 294-295.

[35] Leon Trotsky,The Revolution Betrayed: What is the Soviet Union and Where is it Going. Labor Publications, 1991, p. 137.

[36] Cited in Pethybridge, The Social Prelude to Stalinism, op. cit., p. 176.

[37] Ibid.

[38] Eklof, “Russian Literacy Campaigns 1861-1939,” op. cit., p. 143.

[39] Michael G. Smith, Language and Power in the Creation of the USSR, 1917-1953. Mouton de Gruyter, 1998, p. 71.

[40] Sheila Fitzpatrick, Education and Social Mobility in the Soviet Union 1921-1934. Cambridge University Press, 1979, p. 174.

[41] Eklof, “Russian Literacy Campaigns 1861-1939,” op. cit., p. 142.

[42] Ibid.

[43] John Dunstan, Soviet Schooling in the Second World War. Macmillan Press, 1997, p. 19.

The author also recommends:

Leon Trotsky - Culture and Socialism - 1927
[23 October 2008]

What the Russian Revolution meant for modern art and culture
[28 February 2018]

One Hundred and Fifty Years Since the Birth of Lenin
[22 April 2020]

Loading