வீகர் துஷ்பிரயோகங்கள் குறித்து சீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவுடனான தனது மோதலை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக, சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள முஸ்லீம் வீகர் சிறுபான்மையினரது உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதாக கூறிய தமது குற்றச்சாட்டின் காரணமாக ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் சீன அதிகாரிகள் மற்றும் ஒரு நிறுவனத்தின் மீது மற்றொரு தொகுப்பு பொருளாதாரத் தடைகளை விதித்தது. பெய்ஜிங் ஆட்சி வீகர் பிரிவினைவாதத்தை முறியடிக்க முயற்சிக்கையில், மறுகல்வியூட்டும் முகாம்களில் வீகர்கள் பெருமளவில் தடுத்து வைக்கப்படுவதாக கூறப்படுவதே இந்த குற்றச்சாட்டுக்களில் முக்கியமானதாக உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க கருவூலம், ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானக் கழகம் (Xinjiang Production and Construction Corp), அத்துடன் இதனுடன் தொடர்புடைய பெங் ஜியாருய் (Peng Jiarui) மற்றும் சன் ஜின்லாங் (Sun Jinlong) ஆகிய இரு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் விளைவாக, அமெரிக்க நிதிய அமைப்பை அணுகுவதை தடைசெய்ய திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாக, அமெரிக்க நிறுவனங்களும் நபர்களும் அவர்களுடன் பொருளாதார பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் (Steven Mnuchin), “ஜின்ஜியாங்கிலும் மற்றும் உலகெங்கிலுமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை அதற்கு பொறுப்பேற்க செய்ய அமெரிக்கா தனது முழு அளவு நிதியியல் அதிகாரங்களை” பயன்படுத்தும் என்று அறிவித்து முற்றிலும் பாசாங்குத்தனமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உண்மையில், வாஷிங்டனால் பெரிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட “மனித உரிமைகள்” குறித்த பிரச்சாரங்களானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை மேலும் மேம்படுத்துவதையும், அதன் ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் போருக்கான போலிக்காரணங்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

சமீபத்திய பொருளாதாரத் தடைகள், இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் மற்றும் இராணுவத்தை கட்டியெழுப்புவதையும் உள்ளடக்கிய மிகப்பரந்த சீன எதிர்ப்பு பிரச்சாரமானது, திபெத் மற்றும் ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பெய்ஜிங்கை கண்டனம் செய்வது, மற்றும் உளவு பார்த்தல் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஆகியவற்றின் பகுதியாகவே உள்ளது.

சீன அதிகாரிகளுக்கும் ஜின்ஜியாங் நிறுவனங்களுக்கும் எதிரான தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளில் கடந்த வார நடவடிக்கைகள் சமீபத்தியவை.

* அக்டோபர் 2019 இல், ட்ரம்ப் நிர்வாகம் 28 சீன நிறுவனங்கள் மற்றும் காவல்துறைகளை ஒரு கறுப்பு பட்டியலில் வைத்து, அவற்றிற்கு ஒரு உரிமம் இல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய பொருட்களை விற்பனை செய்வதை தடைசெய்தது. மேலும், பல சீன அதிகாரிகளுக்கு வதிவிட அனுமதி தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்தது.

* ஜூலை 9 அன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 25 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் குழுவின் (Politburo) உறுப்பினரும், ஜின்ஜியாங் கட்சிச் செயலாளருமான சென் குவாங்குவோ (Chen Quanguo) உட்பட, நான்கு உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

* ஜூலை 20 அன்று, ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க பொருட்களை வாங்குவதை தடைசெய்யும் பட்டியலில் மேலும் புதிய 11 சீன நிறுவனங்களைச் சேர்த்துக் கொண்டது. இதில், ஆப்பிள் (Apple), ரால்ஃப் லாரன் (Ralph Lauren) மற்றும் டோமி ஹில்பிஜெர் (Tommy Hilfiger) போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்களுக்கான சீன விநியோக நிறுவனங்கள் அடங்கும்.

பெய்ஜிங் ஆட்சி, தனக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும், அதிலும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தினது எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ் அரசு நடவடிக்கைகளில் தங்கியிருக்கின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளின் ஹான் சீனர்களால் அதிகரித்தளவில் வீகர் இனத்தவர்கள் ஓரங்கட்டப்படுவதால் ஜின்ஜியாங்கில் நிலவும் அமைதியின்மைக்கான அதன் பதிலிறுப்பு சந்தேகத்திற்கு இடமின்றி அடக்குமுறையாக உள்ளது.

எவ்வாறாயினும், வாஷிங்டனின் பலத்த கூக்குரல் வீகர்களினதோ அல்லது அதே விடயத்திற்காக ஹாங்காங் மற்றும் திபெத் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதுடனோ தொடர்புபட்டதல்ல. மாறாக, இது பிரிவினைவாத உணர்வை ஊக்குவிப்பதையும் மற்றும் தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கருதும் சீனாவை கீழறுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.

அமெரிக்கா குறிப்பாக ஜின்ஜியாங்கை குறிவைக்கிறது, அதற்கு எண்ணெய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க இயற்கை வளங்களை இது கொண்டிருப்பதும், நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள பெய்ஜிங் முயன்று வரும் எரிசக்தி வளமிக்க மத்திய ஆசிய குடியரசுகளுக்கு அருகில் இது இருப்பதும் காரணமாகும். பெய்ஜிங்கின் இலட்சியமான யுரேஷிய நிலப்பரப்பை இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டமான ஒரே இணைப்பு ஒரே பாதை முன்னெடுப்பு (Belt and Road Initiative) ஜின்ஜியாங் ஊடாக செல்லும் முக்கியமான சாலை, இரயில் மற்றும் தகவல் தொடர்பு பாதைகளை உள்ளடக்கியது.

ஜின்ஜியாங்கில் சீன தடுப்பு முகாம்களை கண்டிக்கும் அமெரிக்க பிரச்சாரம், வீகர் நாடுகடந்த அமைப்புக்களால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தெளிவற்ற தனிப்பட்ட விபரங்களையும், தடுத்துவைக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கு மேலான வீகர் கைதிகள் பற்றிய எந்தவொரு முக்கிய ஆதாரங்களும் இல்லாமல் ஊதிப்பெருக்கப்பட்ட புள்ளிவிபரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. அதேபோல, சீனாவும் இந்த முகாம்கள் எந்தவித நம்பகத்தன்மையும் இல்லாமல் வெறுமனே தொழில் மையங்களைப் போல உள்ளன என்று பதிலிறுக்கிறது. சுயாதீன அறிக்கை எதுவும் இல்லாத நிலையில், தடுப்புக்காவல்கள் எந்தளவிற்கு செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றி இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

வீகர் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாயப்படுத்தப்பட்ட பிறப்பு கட்டுப்பாடு மற்றும் கருத்தடை செய்தல் பற்றிய கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு, வீகர்களுக்கு எதிரான “இனப்படுகொலை” குற்றச்சாட்டுக்களுடன் தற்போது அவர்களை தடுப்புக்காவலில் வைப்பதையும் சேர்த்து குற்றம்சாட்டி அமெரிக்கா கண்டனங்களை தெரிவிக்கின்றது. மீண்டும் கூறுவதானால், இந்த குற்றச்சாட்டுக்கள், தனிநபர்களின் உணர்ச்சிமிக்க அறிக்கைகள் மற்றும் ஜின்ஜியாங்கின் பரவலான சூழ்நிலை குறித்த ஒருதலைப்பட்சமான அறிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

சமீபத்திய கூற்றுக்கள் ஜேர்மன் கம்யூனிச எதிர்ப்பு கல்வியாளர் ஆட்ரியான் ஜென்ஸ் (Adrian Zenz) தயாரித்த மற்றொரு அறிக்கையையும் சார்ந்தது. இவர், ஜின்ஜியாங் தடுப்புக்காவல் முகாம்களின் அளவையும் நோக்கத்தையும் காட்டும் நோக்கம் கொண்டதான கடந்த ஆண்டு கசியவிடப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆவணங்களை வெளியிடுவதிலும் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார். ஜென்ஸ், ஜேர்மனியிலுள்ள ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் இறையியல் பள்ளி (European School of Culture and Theology) மற்றும் வாஷிங்டனிலுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கான கம்யூனிச நினைவு அறக்கட்டளை (Victims of Communism Memorial Foundation) உள்ளிட்ட வலதுசாரி சிந்தனைக் குழாமின் வலைப்பின்னலுடன் தொடர்புடையவர்.

“கருத்தடை, IUD கருத்தடைமுறை மற்றும் கட்டாய பிறப்பு கட்டுப்பாடு: ஜின்ஜியாங்கில் வீகர் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) பிரச்சாரம்” என்ற ஜென்ஸின் சமீபத்திய ஆவணத்தை வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை (Jamestown Foundation) வெளியிட்டது. வீகர் பகுதிகளில் பிறப்பு கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு தடுப்புக்காவல் தண்டனை வழங்கப்படுவதாலும், மேலும் “மூன்று அல்லது அதற்கு மேலாக குழந்தைகள் உள்ள கிராமப்புற சிறுபான்மையின பெண்களை, அத்துடன் சில பெண்களை இரண்டு குழந்தைகளுடன் கருத்தடை செய்ய கட்டாயப்படுத்தும்” பிரச்சாரம் நடந்து வருவதாலும், முக்கியமாக அங்கு மக்கள்தொகை பெருக்கம் குறைந்து வருகிறது என்பதே அவரது வாதங்களாக உள்ளன.

1970 களின் பிற்பகுதியில் சீனத் தலைவர் டெங் சியாவோபிங் (Deng Xiaoping) அறிமுகப்படுத்தியதும் மற்றும் பரவலாக மக்கள் எதிர்ப்பை தூண்டியதுமான ஒரு குழந்தைக் கொள்கை உட்பட, சீனாவின் பிறப்புக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் சூழலிலிருந்து அது நீக்கப்பட்டுவிட்டது என்பது ஜென்ஸ் ஆராய்ச்சியின் மையக் குறைபாடாக உள்ளது. கட்டாய கருக்கலைப்பு மற்றும் கருத்தடை உள்ளிட்டவை பொலிஸ் அரசு நடவடிக்கைகளுடன் செயல்படுத்தப்பட்டது.

இந்த கொள்கை, கிராமப்புற குடும்பங்களுக்கான, மேலும் குறிப்பிடத்தக்க வகையில், வீகர் கள் உட்பட சீனாவின் சிறுபான்மையினருக்கான விதிவிலக்குகளுடன், குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்பட்டதாகும். மேலும், பணம் மற்றும்/அல்லது செல்வாக்கு உள்ளவர்களில் ஒரு ஜோடிக்கு ஒரு குழந்தை என்ற வரம்பை மீறுவதற்கான வழிகள் இருந்தன. தொழிலாளர்கள் மூப்படைவது பற்றி ஆளும் வட்டாரங்களில் உள்ள கவலைகள் உட்பட, கொள்கைக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பு இருந்த நிலையில், ஒரு குழந்தை வரம்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியில் 2016 இல் கைவிடப்பட்டது. அப்போதிருந்து அனைத்து ஜோடிகளும் இரண்டு குழந்தைகளைப் பெற அனுமதிக்கப்பட்டது.

துல்லியமாக இருந்தாலும், ஹான் சீனர்களுடன் ஒப்பிடுகையில் 2010 முதல் வீகர் மக்கள்தொகை பெருக்கம் குறைந்து வருவது குறித்த ஜென்ஸின் புள்ளிவிபரங்கள், வீகர்களின் குடி பெயர்ச்சி போன்ற ஏனைய காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், கொள்கையின் மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. தற்போதைய இரண்டு குழந்தைக் கொள்கை வீகர்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஹான் சீனர்கள் உட்பட பரந்தளவில் மக்களுக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது என்பதையும் அவரது அறிக்கை கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வெளியுறவுக் கொள்கை (Foreign Policy) போன்ற அமெரிக்க ஊடகங்கள் வீகர் “இனப்படுகொலை” பற்றிய பரபரப்பான கதைகளைத் தூண்டுவதை இது எதுவும் நிறுத்தவில்லை.

கடந்த மாதம் சீனாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இனப்படுகொலை செய்ததாக வழக்கு பதிவு செய்ய அமெரிக்காவை தளமாகக் கொண்டதான, நாடுகடந்த கிழக்கு துருக்கிஸ்தான் அரசாங்கம் (East Turkistan Government in Exile) மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் (East Turkistan National Awakening Movement) ஆகிய இரண்டு வீகர் நாடுகடந்த அமைப்புக்கள் முடிவெடுத்ததை இது குறிக்கிறது.

சீனாவிலிருந்து மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா வரையிலான பட்டுப்பாதை நில வழிகளில் அவர்களது பூர்வீகத்தைக் கண்டுபிடிக்கும் துருக்கிய மொழி பேசும் குழுவினரில் வீகர்களும் அடங்குவர். வீகர் பிரிவினைவாதக் குழுக்கள் ஜின்ஜியாங்கின் பகுதிகளை தமது கிழக்கு துருக்கிஸ்தான் தாயகம் என்று கூறுகின்றன.

பணக்கார மற்றும் நன்கு இணைக்கப்பட்ட நாடுகடந்தவர்களால் வழிநடத்தப்படும் இந்த வீகர் அமைப்புக்களுக்கு அமெரிக்க அரசு எந்திரத்துடனும் மற்றும் அதன் உளவுத்துறை அமைப்புக்களுடனும் நெருங்கிய தொடர்புள்ளது. சிஐஏ உம் மற்றும் ஜனநாயகத்திற்கான தேசிய நன்கொடை அமைப்பு (National Endowment for Democracy-NED) போன்ற அதன் முன்னணி அமைப்புகளும், ஜின்ஜியாங்கில் பிரிவினைவாத உணர்வை வளர்ப்பதற்கான வழியாகவுள்ள ஐரோப்பாவை தளமாகக் கொண்ட உலக வீகர் காங்கிரஸ் (World Uyghur Congress) மற்றும் அமெரிக்க வீகர் சங்கம் (American Uyghur Association) உட்பட, நீண்டகாலமாக நிதி வழங்கி ஊக்குவித்து வரும் வீகர் நாடுகடந்த அமைப்புக்களைக் கொண்டுள்ளன.

சீனாவில் உள்ள வீகர் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலம் பாதுகாக்க முடியாது, இது "மனித உரிமைகள்" என்ற கோசத்தை யுத்தத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் ஒரு வழிமுறையாக அப்பட்டமாக பயன்படுத்தியுள்ளது. சீனாவில் வீகர் மற்றும் பிற இன சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் பெய்ஜிங்கில் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக சீனத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்துடன் முற்றிலும் பிணைந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்ராலினிசத்திற்கு எதிரான மற்றும் ஸ்ராலினிசத்தின் சீன மாதிரியான மாவோயிசத்திற்கும் எதிரான அதன் நீடித்த போராட்டத்திலிருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினால் பெறப்பட்ட வரலாற்றுப் படிப்பினைகளை அவர்கள் அறிந்துகொள்வது அவசியமாகும்.

மேலதிக வாசிப்புகளுக்கு:

அமெரிக்க ஊடகங்கள் வீகர் "மனித உரிமைகள்" தொடர்பாக சீன-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றன

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

Loading