இலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது

By K. Ratnayake
13 August 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தேர்தல் வெற்றியைப் பற்றி பிரதிபலித்த இலங்கை ஊடகங்கள், இது "மக்களின் வெற்றி" என்று பொய்யாக பாராட்டின. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. 145 ஆசணங்களை வென்றுள்ள அதே வேளை, எதிர்க்கட்சிகள் வெறும் 74 ஆசணங்களையே வென்றன.

இதன் விளைவாக, அதன் அரசியல் கூட்டாளிகளின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுடன், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. 225 ஆசணங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும். அதனால் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசியலமைப்பை திருத்தும் இயலுமையைக் கொண்டிருக்கும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு அரசியலமைப்பில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்காக, ஜனாதிபதி ராஜபக்ஷ பகிரங்கமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அத்தகைய நீக்கம் அவருக்கு பாரதூரமான எதேச்சதிகார அதிகாரங்களை வழங்கும்.

தேர்தல் முடிவு ஒரு "மக்களின் வெற்றி" அல்ல, மாறாக, ஏற்கனவே தனது நிர்வாகத்திற்கு ஏராளமான தளபதிகளை நியமித்துள்ள ஜனாதிபதி இராஜபக்ஷவின் கீழ், சர்வாதிகார ஆட்சிக்குத் தயாராகும் ஒரு கட்சியின் தேர்தல் வெற்றி ஆகும். புதிய அமைச்சரவை நாளை அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 20 அன்று புதிய பாராளுமன்றம் கூட்டப்படும்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர் மஹிந்த இராஜபக்ஷ, ஞாயிற்றுக் கிழமை அவரது சகோதரர் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவால் பிரதமராக பதவிப் பிரமானம் செய்துவைக்கப்பட்டார். இந்த விழா, வடகிழக்கு கொழும்பில் உள்ள, புத்தர் வருகை தந்ததாக கூறிக்கொள்ளப்படும் களனி விஹாரையில் நடைபெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், ஜனாதிபதி ராஜபக்ஷ வட-மத்திய மாகாணத்தில் உள்ள பண்டைய சிங்கள தலைநகரான அனுராதபுரத்தில் பதவியேற்றார். இரு தலைவர்களும் தங்கள் ஆட்சியின் சிங்கள-பௌத்த மேலாதிக்க தன்மையைக் சமிக்ஞை செய்துள்ளனர்.

சிங்கள-பௌத்த மேலாதிக்க ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வின் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் பிரதான தொணிப்பொருளாக இருந்தது. அதன் நோக்கம் தீவின் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான விரோதத்தைத் தூண்டிவிடுவதும், சமூக பதட்டங்களைத் திசைதிருப்புவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்துவதும் ஆகும்.

இலங்கையின் ஆளும் உயரடுக்கு ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடி கொவிட்-19 தொற்றுநோயால் தீவிரமாகியுள்ளது. கொழும்பின் சிக்கனக் கொள்கைகள் மற்றும் வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கான தயார் நிலையை வெளிப்படுத்தும் வகையில், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. "வலுவான மற்றும் நிலையான ஆட்சிக்கு" உறுதியளித்ததால், இலங்கை ஆளும் வர்க்கம் அதற்கு ஆதரவளித்தது. சர்வதேச அளவில் அதன் சகாக்களைப் போலவே, இலங்கை பெருவணிகமும் பொருளாதாரத்தை மறுசீரமைக்க விரும்புவதுடன், தொழில்களை வெட்டுவதன் மூலமும், ஊதிய வெட்டுக்களை விதிப்பதன் மூலமும் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலமும் தனது இலாபத்தை அதிகரித்துக்கொள்ள முயல்கிறது.

இலங்கை முதலாளித்துவத்தின் இரண்டு பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகியவற்றின் வரலாற்று சரிவின் நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் அதன் சர்வாதிகார திட்டங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

நாட்டின் பழமையான அரசியல் கட்சியான ஐ.தே.க., ஒரு ஆசணத்தை மட்டுமே வென்றது. அதுவும் தேசிய ரீதியில் அதற்கு கிடைத்த வாக்குகளின் விளைவாக மட்டுமே கிடைத்ததாகும். அதன் வாக்கு வங்கி வெறும் 250,000 ஆக சரிந்து போனது. கசப்பான பிளவினால் பெப்ரவரி மாதம் அதன் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, சஜித் பிரேமதாச தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) என்ற கட்சியை ஸ்தாபித்தனர்.

இந்த கன்னை மோதல், நீண்டகால ஐ.தே.க. தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் செல்வாக்கின்மையை மையமாகக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த பிரச்சினை ஆளுமை பற்றியது அல்ல, மாறாக, அது இந்த ஏகாதிபத்திய சார்பு கட்சி மீதான வெகுஜன அதிருப்தியினதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களுக்கு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் காணப்படும் ஆழமான எதிர்ப்பினதும் விளைவாகும். கடந்த வாரம் நடந்த தேர்தலில் ஐ.ம.ச. வெறும் 54 ஆசணங்களையும் 24 சதவீத வாக்குகளையும் மட்டுமே வென்றது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. செயலிழந்து போய்விட்டது. பெரும்பான்மையான அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, 2016 இல் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அமைக்கப்பட்டபோது அதில் சேர்ந்தனர். சிறிசேனவும் மீதமுள்ள ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும், கடந்த புதன்கிழமை நடந்த தேர்தலில் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. உடன் கூட்டணியில் போட்டியிட்டனர்.

1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்தே ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. நிர்வாகங்கள் தொடர்ச்சியாக நாட்டை நிர்வகித்தன. ஐ.தே.க. 1946 இல் ஸ்தாபிக்கப்பட்ட அதே நேரம், 1951 இல் ஐ.தே.க.வுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு பிரதிபலிக்கும் விதமாக, அதில் இருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், S.W.R.D. பண்டாரநாயக்க தலைமையில் ஸ்ரீ.ல.சு.க.வை ஸ்தாபித்தனர். அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இரு கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கவும் தமிழர்-விரோத இனவாதத்தைப் பயன்படுத்தின. இந்த பிற்போக்கு திட்ட நிரல் 1983 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தில் உச்சகட்டத்தை எட்டியது. இந்த யுத்தம் தீவு முழுவதும் மக்களுக்கு சொல்லணாப் பேரழிவை உருவாக்கியது.

புதன்கிழமை நடந்த தேர்தல்கள் முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நெருக்கடியையும் அம்பலப்படுத்தியுள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 16 ஆசணங்களை வென்ற தமிழ் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் 10 ஆசணங்களை மட்டுமே வென்றது. அதன் மொத்த வாக்குகள் 2015 ஆகஸ்ட்டில் நடந்த தேர்தலில் 515,963 இலிருந்து இம்முறை 327,168 ஆக குறைந்தது.

கூட்டணியின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி., தமிழர்-விரோத இனவாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, 1949 இல் உருவாக்கப்பட்டது. கொழும்பு உயரடுக்கினருடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளைப் பெறுவதற்கான முயற்சியில் தமிழரசுக் கட்சி நீண்ட மற்றும் மோசமான வரலாற்றை கொண்டுள்ளது. இந்த அரசியல் சூழ்ச்சிகள் தமிழ் மக்களுக்கு அடுத்தடுத்து பேரழிவையே உருவாக்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2002 இல் உருவாக்கப்பட்டது. 2009 மே மாதம் புலிகளின் தோல்விக்கு பிரதிபலித்த தமிழ் கூட்டமைப்பு, மேலும் வலதிற்கு மாறியதுடன், கொழும்புடனான கொடுக்கல் வாங்கலுக்கு ஆதரவைப் பெற அமெரிக்கா உள்ளிட்ட பிரதான ஏகாதிபத்திய சக்திகளிடம் வேண்டுகோள் விடுத்தது.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றி, சிறிசேனவை பதவியில் அமர்த்த 2015 இல் வாஷிங்டனின் திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை தமிழ் கூட்டமைப்பு ஆதரித்தது. அது சிறிசேனவின் ஏகாதிபத்திய-சார்பு நிர்வாகத்தையும், போரின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை உட்பட, கொழும்பின் போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் அடக்குவதையும், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் ஆதரித்தது. (பார்க்க: “தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியின் எதேச்சதிகார ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது”).

தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) என்ற புதிய முன்னணியில் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஜனரஞ்சக கோரிக்கைகளை முன்வைத்து, “தூய்மையான” ஊழலற்ற பாராளுமன்றத்தை அமைக்க அழைப்பு விடுத்தது. முந்தைய பாராளுமன்றத்தில் 6 ஆசணங்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி., இந்த தேர்தலில் மூன்று ஆசணங்களை மட்டுமே வென்றது. 2004 இல், ஜே.வி.பி. 39 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

1960களின் பிற்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி., காஸ்றோவாதம், மாவோவாதம் மற்றும் சிங்கள தேசபக்தி ஆகியவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீவிரவாத குட்டி முதலாளித்துவக் கட்சியாகும். இது இப்போது முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு கட்சியாக இருப்பதோடு, 1994 முதல் கொழும்பில் உள்ள ஒவ்வொரு ஆட்சியுடனும் தன்னை இணைத்துக் கொண்டது. 2004 இல், ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவுடன் கூட்டணியில் சேர்ந்தமையும் இதில் அடங்கும். கொழும்பின் இனவாத போரை முழுமையாக ஆதரித்ததால், அது ஆரம்பத்தில் ஈர்த்துக்கொண்ட இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வெறுப்புக்கு உள்ளாகியது.

கடந்த புதன்கிழமை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த ஜே.வி.பி. தலைவர் அனுரா குமார திசாநாயக, “இந்த முடிவு நாம் திருப்தி அடையக்கூடிய ஒன்றல்ல”, ஆனால் “பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிக்கும் ஒரு பங்கு உள்ளது” என்று கூறியதுடன், இந்த அமைப்பு விவசாயிகளையும், வேலையில்லாதவர்களையும் அணிதிரட்டும் என்றார். அதன் முந்தைய வரலாறு நிரூபிக்கின்றவாறு, கிராமப்புற ஏழைகளும் இளைஞர்களும் சோசலிசத்தையும் தொழிலாள வர்க்கத்தையும் நோக்கி திரும்ப விடாமல் அவர்களை தடம்புறளச் செய்வதற்கு ஜே.வி.பி. ஆளும் உயரடுக்கினருடன் இணைந்து செயல்படும்.

அரசியல் ஸ்தாபனத்திலிருந்து வெகுஜனங்கள் தீவிரமாக அந்நியப்படுவதும் தேர்தலில் பங்கேற்க மறுத்த மில்லியன் கணக்கான இலங்கை குடிமக்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் 16 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 11 மில்லியனுக்கும் அதிகமானோரே வாக்களித்தனர் -அதாவது, சுமார் 4.7 மில்லியன் பேர் வாக்களிக்கவில்லை. இது 2015sல் நடந்த முந்தைய தேர்தலை நிராகரித்தவர்களை விட சுமார் ஒரு மில்லியன் அதிகம் ஆகும். புதன்கிழமை தேர்தலில் பங்கேற்றவர்களில் 700,000 பேர் தங்கள் வாக்குகளை ரத்து செய்தனர்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வெற்றியைப் பற்றி ஊடகங்கள் மகிழ்ச்சியடைவதானது, எதிர்காலத்தில் உழைக்கும் மக்கள் மீதான அரசாங்கத்தின் அனைத்து சமூக தாக்குதலுக்கும் அவை ஆதரவளிக்க உள்ளதன் வெளிப்பாடு ஆகும். ஆகஸ்ட் 6 அன்று, ஐலண்ட் பத்திரிகை, "உண்மையான போர் முன்னுள்ளது" என்ற தலைப்பில் ஆசிரியர் உரை, "ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதியான அரசாங்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும், நாட்டின் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு முன்நிபந்தனையாகும்," என எழுதியிருந்தது.

கட்சிகள் "கடுமையான நடவடிக்கைகளுக்கு" அழைப்பு விடுப்பது போதாது, எனத் தொடர்ந்த அந்த ஆசிரியர் உரை, "நரகத்தில் இடைவெளி போன்று இருந்த, கடந்த மாதங்களில் நாங்கள் அனுபவித்து வந்த அனைத்தும் விரைவில் முடிந்துவிடும்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மீது விரைவில் அரசாங்கத்தின் பாரிய தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படும்.

கடந்த புதன்கிழமை தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிட்ட மூன்று மாவட்டங்களில் அதன் மொத்த வாக்குகளை 780 ஆக உயர்த்திக்கொண்டுள்ளது -யாழ்ப்பாணம் 146, கொழும்பு 303 மற்றும் நுவரெலியா 331. நாட்டின் முக்கிய தொழிலாள வர்க்க மையமான கொழும்பிலும், இலங்கையின் பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் நுவரெலியாவிலும் கட்சியின் வாக்குகள் இரட்டிப்பாகின. கொவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் கட்சியின் பிரச்சாரங்கள் இணையவழி கூட்டங்கள் மற்றும் பேஸ்புக் பகிர்வு சோ.ச.க. அறிக்கைகள் மற்றும் உலக சோசலிச வலைத்தள தள கட்டுரைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நனவான வாக்குகள் இலங்கையில் சோசலிசத்திற்கு வளர்ந்து வரும் ஆதரவைக் குறிக்கின்றன. தொழிலாளர்களைப் பிளவுபடுத்த முற்படும் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான சிங்கள பேரினவாத ஆத்திரமூட்டல்களை சோ.ச.க. தொடர்ந்து அம்பலப்படுத்தும். புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாத போரை எதிர்த்த மற்றும் நாட்டின் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரும் ஒரே ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும்.

எமது கட்சி ஏகாதிபத்திய போருக்கு, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான ஒரு சோசலிச கொள்கையை அபிவிருத்தி செய்கின்றது. சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப போராடுவதற்கு, தொழிலாள வர்க்கமானது ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் பிரிந்து, கிராமப்புற ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தம் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் மட்டுமே அழைப்பு விடுக்கிறோம்.