ஜேர்மனியில் பாரிய படுகொலைகளுக்கு தயாராகும் பாசிச கொலைக் குழுக்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையின் முதல் பக்கத்தின்படி, ஜேர்மனியில் அரசியல் எதிரிகளை பாரிய படுகொலை செய்ய பாசிச கொலைக் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. "சடலத்தை எடுத்துச் செல்லும் பைகள் மற்றும் எதிரிகளின் பட்டியல்கள்: தீவிர வலதுசாரி பொலிஸ் அதிகாரிகளும் முன்னாள் படையினரும் 'நாள் X' இற்கு (“Day X”) எவ்வாறு தயாராகிறார்கள்" என்ற தலைப்பிலான கட்டுரை, பாரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்களை பதுக்கி வைப்பது, பாதுகாப்பான வீடுகளை அமைப்பது, அரசியல் எதிரிகளை அடையாளம் காண்பதற்கும், இறந்த உடல்களை இரகசியமாக அகற்றுவதற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது உள்ளடங்கலான ஒரு பரந்த சதியை ஆவணப்படுத்துகிறது.

வடகிழக்கு ஜேர்மனிய மாநிலமான மெக்லென்பேர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவில் முன்னாள் சிப்பாயும் தற்போதைய காவல்துறை அதிகாரியுமான மார்கோ குரோஸின் (Marko Gross) தலைமையில் வளர்ந்த தீவிர வலதுசாரி Northern Cross (Nordkreuz) குழு பற்றி இக்கட்டுரை முக்கிய கவனம்செலுத்துகின்றது. ஜேர்மன் சிறப்புப் படைகள் (KSK) சிப்பாய் ஆண்ட்ரே ஷிமித் நிறுவிய ஒரு பெரிய வலதுசாரி இணையகலந்துரையாடல் குழுவில் இருந்தே Northern Cross உருவாகியது. ஷிமித்திற்கு "ஹனிபால்" (“Hannibal.”) என்று புனைபெயரும் உண்டு. புலம்பெயர்ந்தோர் மீதான வெறுப்பு மற்றும் தற்போதைய சமூக அமைப்பை எதிர்ப்பதன் மூலம் தூண்டப்பட்ட குரோஸ், ஜேர்மனிக்கான நவ-பாசிச மாற்றீட்டு கட்சியின் (AfD) உறுப்பினராக உள்ளார். பிற உறுப்பினர்கள் காவல்துறை மற்றும் இராணுவத்தில் பாசிச வலைப்பின்னல் மூலம் 50,000 க்கும் மேற்பட்ட சுற்று வெடிமருந்துகள், 30 சடலத்தை எடுத்துச் செல்லும் பைகள் மற்றும் ஒரு Uzi தானியங்கி துப்பாக்கி உட்பட டஜன் கணக்கான ஆயுதங்கள்ளைப் பெற்றனர். பொலிஸ் கணினிகள் மூலம் அணுகப்பட்ட தனிப்பட்டவர்களின் தகவல்களை உள்ளடக்கிய எதிரிகளின் மரண பட்டியல்களை அவர்கள் வரைந்தனர். மேலும் சடலத்தை எடுத்துச் செல்லும் பைகள் மற்றும் உருக்குலையும் சடலங்களிலிருந்து எழும் மணத்தை மறைப்பதற்கான சுட்ட சுண்ணாம்பு ஆகியவற்றை விரைவாக வாங்குவதற்கான திட்டங்களும் இருந்தன.

1970கள் மற்றும் 1980களில் ஆயிரக்கணக்கான இடதுசாரி ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர்களை அழிப்பதற்காக இலத்தீன் அமெரிக்க இராணுவ சர்வாதிகாரங்களில் செயல்பட்ட பாசிச மரணக் குழுக்களை நினைவுபடுத்தும் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் விவரங்கள் குறித்த டைம்ஸ் அறிக்கை, ஜேர்மன் அரசு அமைப்பினுள் பாசிச ஊடுருவல் பற்றிய ஒரு மாதத்திற்குள் இரண்டாவது கட்டுரையாகும். ஜூலை 3 ஆம் திகதி வந்த ஒரு பரந்த அளவிலான செய்தித்தாள் அறிக்கை, காவல்துறை மற்றும் இராணுவத்தின் தீவிர வலதுசாரி ஊடுருவல், KSK இனை கிட்டத்தட்ட பாசிஸ்டுகளால் முழுமையாக கையகப்படுத்தியது மற்றும் “நாள் X. இல் வன்முறை எழுச்சியைத் தொடங்கவுள்ள தீவிர வலதுசாரி சக்திகளின் திட்டங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தியது.” முதல் உலகப் போரைத் தொடர்ந்து வைமார் குடியரசின் போது ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை நினைவு கூர்ந்த டைம்ஸ் கட்டுரை, பெயரளவிலான ஜனநாயக அரசு எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளிருந்தும் எவ்வாறு அனைத்து தரப்பிலும் தீவிர வலதுசாரி சதித்திட்டங்களை எதிர்கொள்கிறது என எழுதியது. (பார்க்க: ஜேர்மனியின் இராணுவத்தினுள்ளும் காவல்துறையினுள்ளும் மிகப்பெரிய நவ-நாஜி ஊடுருவல்)

"ஹனிபால்" நிறுவிய கலந்துரையாடல் வலைப்பின்னல் அரசியல் எதிரிகளை அழிக்கவும் உள்நாட்டுப் போர் போன்ற நிலைமைகளுக்குத் தயாராகவும் சதித்திட்டங்களுக்கு ஊக்கமளித்தது என்பதை சமீபத்திய கட்டுரை காட்டுகிறது. அதில் குரோஸும் சுமார் 30 சகாக்களும் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய அகதிகள் நெருக்கடியின் உச்சத்தில் இக்குழுவில் சேர்ந்தனர். "அவர்களின் பார்வையில், ஜேர்மனி பயங்கரவாதிகளிடமிருந்து ஒரு சாத்தியமான படையெடுப்பை எதிர்கொள்கின்றது, அதன் நலன்புரி அமைப்புமுறையின் முறிவு, ஒருவேளை அமைதியின்மை கூட உருவாகலாம்" என்று டைம்ஸ் எழுதியது. ஜனவரி 2016 க்குள், குரோஸ் ஒரு இணையான குழுவை நிறுவி அதை நோர்ட்க்ரூஸ் என்று அழைத்தார்.

பின்னர் 2016 ஆம் ஆண்டில், கிராஸ் மற்றும் பிற Nordkreuz உறுப்பினர்கள் நூரெம்பேர்க் நகரில் நடந்த ஒரு ஆயுத கண்காட்சிக்கு பயணம் செய்தனர், அங்கு அவர்கள் “ஹனிபாலை” நேருக்கு நேர் சந்தித்தனர். "உணவு, பெட்ரோல், கழிப்பறைவசதிகள், குறுந்தொலைதொடர்பு கருவிகள், மருந்து மற்றும் வெடிமருந்துகள் உட்பட 100 நாட்களுக்கு உயிர்வாழ போதுமான பொருட்களை அவர்கள் பதுக்கி வைக்கத் தொடங்கினர்" என்று டைம்ஸ் மேலும் கூறுகிறது. அதற்காக குரோஸ், குழுவின் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் 600 யூரோக்களை மொத்தமாக சேகரித்தார். மொத்தத்தில், அவர் 55,000 க்கும் மேற்பட்ட வெடிமருந்துகளை சேகரித்தார்… பயன்படுத்தப்படாத தீயணைப்பு நிலையத்தின் கோபுரத்தை எவ்வாறு வீழ்த்துவது என்பதை குழு உறுப்பினர்கள் கற்றுக்கொண்டனர். நாள் X இற்கான சந்திப்பு புள்ளிகளாக இரண்டு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முழுமையாக செயல்படக்கூடிய இரண்டு போர்முனை மருத்துவமனைகளாக ஒரு நிலக்கீழ் அடித்தளத்திலும் ஒரு இடம்பெயரக்கூடிய வீட்டிலும் கட்டப்பட்டுள்ளன.”

வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் அவர் எவ்வாறு வாங்கினார் என்பதை நினைவில் கொள்ள முடியவில்லை என்று குரோஸ் கூறினார். ஆனால் ஜேர்மன் இராணுவம் மற்றும் பிற அரசு துறைகளில் 2,000 வரையிலான ஒத்த கருத்தை கொண்ட நபர்களின் வலைப்பின்னல் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார். குரோஸ் இன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் ஜேர்மனி முழுவதும் இருந்து ஒரு டஜன் போலீஸ் மற்றும் இராணுவ களஞ்சியங்களில் இருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மோசமான தயாரிப்புகளின் நோக்கம் குறித்து குரோஸிற்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. "மோசமான ஒன்று நடக்கும் என்பதுதான் நோக்கம்" என்று அவர் டைம்ஸிடம் கூறினார். "நாங்கள் எதற்காக தயாராக விரும்பினோம் என்று நாங்கள் நம்மை நாமே கேட்டுக்கொண்டோம்? நாங்கள் இதைச் செய்யப் போகிறோம் என்றால், நாங்கள் எல்லா வழிகளிலும் செல்வோம் என்று முடிவு செய்தோம்” என்றார்.

டைம்ஸ் பார்த்த 2017 ஆம் ஆண்டின் பொலிஸ் சாட்சியத்தில், முன்னாள் விமானப்படை அதிகாரியும் Nordkreuz உறுப்பினருமான ஹார்ஸ்ட் ஷெல்ஸ்கி, குழு தனது தயாரிப்புகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவர விரும்புகிறது என்பதை விவரித்தார். "மக்கள் கூட்டமாக கூட்டப்பட்டு கொலை செய்யப்பட வேண்டும்," என்று அவர் கருத்து தெரிவித்தார். பயங்கரவாத குற்றங்களுக்காக இப்போது விசாரணையில் இருக்கும் Nordkreuz உறுப்பினர் ஜான் ஹென்ரிக் இனை சந்தித்த்தாக ஷெல்ஸ்கி கூறுகின்றார். அவரின் தகவலின்படி ஜான் ஹென்ரிக் தனது உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் புகைப்படங்களுடன் ஒரு தடித்த கட்டு ஒன்றை தனது வாகன இருப்பிடத்தில் வைத்திருந்தார். சில தகவல்கள் "பொலிஸ் கணினியிலிருந்து பெறப்பட்ட தகவல்களுடன் கையால் எழுதப்பட்ட குறிப்புகள்" வடிவத்தில் இருந்தன. ஒரு நெருக்கடிகாலத்தின் போது அமைக்கப்படக்கூடிய சோதனைச் சாவடிகளை கடந்து கைதிகளை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த ஆலோசனையையும் ஹென்ரிக் ஷெல்ஸ்கியிடம் கேட்டிருந்தார்.

காவல்துறையினரும் நீதித்துறை அதிகாரிகளும் தங்கள் கட்டமைப்புகளை கிட்டத்தட்ட அப்படியே இயங்காது விட்டுவிட்டார்கள் என்பது இக்கண்டு பிடிப்புக்களை விட ஆச்சரியமானதாக இருக்கிறது. அனைத்திற்குமாக இன்றுவரை குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே உறுப்பினர் குரோஸ் மட்டுமே. அவர் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 21 மாத தடுப்புக்காவல் தண்டனை வழங்கப்பட்டது. மற்ற இரண்டு Nordkreuz உறுப்பினர்களுக்கு எதிராக நடந்து வரும் பயங்கரவாத விசாரணையில், குரோஸ் ஒரு சாட்சியாக இருக்கின்றார். Nordkreuz இன் பாதுகாப்பான வீடு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என்று டைம்ஸுக்கு அவர் பெருமை பேசினார். "வலைப்பின்னலும் இன்னும் உள்ளது," என்று குரோஸ் அறிவித்தார்.

Nordkreuz தொடர்பான கண்டுபிடுப்புக்கள் குழப்பமானவையாக இருக்கையில், அவை வெறுமனே பனிப்பாறையின் நுனியை மட்டுமே குறிக்கின்றன. காவல்துறை, இராணுவம் அல்லது உளவுத்துறை சேவைகளுக்குள் புதிய தீவிர வலதுசாரி வலைப்பின்னல்களின் புதிய தகவல்கள் நாளாந்தம் வெளிச்சத்திற்கு வருகின்றன. சமீபத்திய வாரங்களில், இடதுசாரி கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அதிகரித்தளவில் "NSU 2.0," என்று கையெழுத்திட்ட மரண அச்சுறுத்தல்களைப் பெற்றுள்ளனர், இது நவ-நாஜி பயங்கரவாத அமைப்பான National Socialist Underground பற்றிய குறிப்பாகும், இது பத்து கொலைகளைச் செய்துள்ளது. இந்த கடிதங்களைப் பெற்ற பலரின் தனிப்பட்ட தகவல்கள், NSU இனால் பாதிக்கப்பட்டவர்களை விசாரணையில் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் Seda Başay-Yıldız உட்பட ஹெஸ்ஸ மாநிலத்தில் உள்ள போலீஸ் கணினிகளிலிருந்து பெறப்பட்டது. Seda Başay-Yıldız இன் தகவல்களைப் பெற பயன்படுத்தப்பட்ட கணினிக்கு உரிமையாளரான காவல்துறை அதிகாரி ஹெஸ்ஸவில் உள்ள டஜன் கணக்கான பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு தீவிர வலதுசாரி கலந்துரையாடல் குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். அடுத்தடுத்த ஊழல் தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் இராஜினாமா செய்துள்ளார்.

தீவிர வலதுசாரி வலைப்பின்னல்கள் ஜேர்மனியில் வெறுமனே பரவி இருப்பது மட்டுமல்லாது, ஆனால் வலதுசாரி தீவிரவாத குற்றவியல் நடவடிக்கைகளை விசாரிப்பதில் பெயரளவில் பணிபுரியும் அரசு நிறுவனங்களின் மீது தங்கள் கட்டுப்பாட்டை அதிகளவில் விரிவுபடுத்தியுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது. மெக்லென்பேர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவில் உள்ள ஒரு மாநில அரசியல்வாதியான Dirk Friedriszik டைம்ஸிடம் கூறியது போல், “இது KSK மட்டுமல்ல. இந்த குழுக்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதே உண்மையான கவலை. அதாவது இராணுவத்தில், காவல்துறையில், சேமப்படை பிரிவுகளிலும் இருக்கின்றன.”

ஜேர்மனியின் அரசு எந்திரத்திற்குள் பாசிச சக்திகளின் மீள் எழுச்சி என்பது, ஜேர்மன் குடியரசானது, மேலும் மேலும் நெருக்கமாகிவரும் ஐக்கிய ஐரோப்பாவின் மையத்தில் ஜனநாயகத்தின் கோட்டையாக சித்தரிக்கப்பட்ட போருக்குப் பிந்தைய பிரச்சாரத்தின் மோசடியை அம்பலப்படுத்திக் காட்டுகின்றது. யதார்த்தம் என்னவென்றால், 1930 களில் ஜேர்மன் முதலாளித்துவத்தை ஹிட்லரிச பாசிசத்துடன் இணைத்துக்கொள்ள ஊக்குவித்த முதலாளித்துவத்தின் அதே புறநிலை முரண்பாடுகள் அதன் சந்ததியினரை தீவிர வலதுசாரி அதிர்ச்சி துருப்புக்களை வளர்க்க தூண்டுகின்றன. பிரதான சக்திகளுக்கு இடையிலான இதில் சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கு ஆகியவற்றிற்கான போட்டிகள் தீவிரமடைகின்றபோது, ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு உலகெங்கிலும் அதன் நலன்களை மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுப்பதற்கு இத்தகைய சக்திகள் தேவையாக உள்ளது. அதே சமயம், ஆளும் உயரடுக்கு வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையையும், உள்நாட்டில் பெருகிவரும் மக்கள் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறது. இது அதிகரித்து வரும் தொற்றுநோய்க்கு மத்தியில் ஆளும் வர்க்கத்தின் படுகொலைக்கு ஒத்த வேலைக்கு திரும்பு என்ற உந்துதலால் துரிதப்படுத்தப்பட மட்டுமே செய்யும்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள் எழுச்சி 2013 இன் பிற்பகுதியிலும், 2014 ஆம் ஆண்டிலும் அனைத்து அரசியல் கட்சிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு அரசியல் சதித்திட்டத்தில் தயாரிக்கப்பட்டது. பிப்ரவரி 2014 இல் நடந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், அப்போதைய வெளியுறவு மந்திரி ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், ஜேர்மனி “உலக விவகாரங்கள் குறித்து வெறுமனே ஒதுங்கி நின்று கருத்துத் தெரிவிப்பதற்கு” மிகப் பெரியது என்று அறிவித்து, ஜேர்மன் இராணுவக் கட்டுப்பாட்டின் சகாப்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தார். அதே மாதத்தில், பேராசிரியர் ஜோர்ஜ் பாபெரோவ்ஸ்கி Der Spiegel செய்தித்தாளிடம், “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல. தனது மேஜையில் யூதர்களை அழிப்பதைப் பற்றி பேச அவர் விரும்பவில்லை” என்று கூறினார்.

2014 செப்டம்பரில் நடைபெற்ற ஒரு அவசரக் கட்சி மாநாட்டில், சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜேர்மனிய பெரும் அதிகார அபிலாஷைகளின் புத்துயிர் பெறுவதற்கும் தீவிர வலதுசாரி மற்றும் நாஜி சார்பு கருத்துக்களின் மீள் எழுச்சிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை அடையாளம் கண்டனர். "வரலாறு ஒரு பழிவாங்கலுடன் திரும்புகிறது" என்ற அதன் தீர்மானம் பின்வருமாறு அறிவித்தது. "நாஜிக்களின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் கைசர் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய பெரும் அதிகார அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளது."

இந்த பகுப்பாய்வின் அடிப்படையில் செயல்பட்டு, SGP இராணுவவாதம் மற்றும் போருக்கும் தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கும் எதிரான போராட்டத்தை தொடங்கியது, இதில் நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டுவதற்கு ஜேர்மன் வரலாற்றை தவறாக திருத்தி எழுத பாபெரோவ்ஸ்கி மற்றும் பிற கல்வியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.

பாபெரோவ்ஸ்கியின் வரலாற்றை மீண்டும் தவறாக திருத்தி எழுதுவது ஒரு ஆதரவு ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள் எழுச்சிக்கான பரவலான மக்கள் எதிர்ப்பை உடைப்பதற்கான அதன் கருத்தியல் போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. பாபெரோவ்ஸ்கி சர்வதேச கல்வி நிறுவனங்களிடமிருந்து தாராள ஆதரவைப் பெற்றார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தால் சர்வாதிகாரங்களை ஜனநாயகத்திற்கான ஒரு "மாற்று அரசியல் ஒழுங்காக" கற்பிக்க 300,000 டாலர் ஆராய்ச்சி மானியம் வழங்கப்பட்டது.

அனைத்து விமர்சனங்களுக்கும் எதிராக பாபெரோவ்ஸ்கி பாதுகாக்கப்பட்டு வரும் கட்டத்தில், பாசிஸ்டுகள் மற்றும் பிற தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் காவல்துறை, இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினருக்குள் ஊடுருவி, அரசியல் எதிரிகளை ஒழிக்க கொலைக் குழுக்களை நிறுவ உறுதியான தயாரிப்புகளை மேற்கொண்டனர் என்பதை டைம்ஸின் வெளிப்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன. அதே நேரத்தில், ஜேர்மன் இராணுவம் ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு ஏகாதிபத்திய தலையீடுகளில் தொடர்ந்து அதிகரித்தளவில் ஈடுபட்டு வருகிறது.

அரசியல் ஸ்தாபகம் மற்றும் அரச எந்திரத்திற்குள் உள்ள சதித்திட்டங்களாலேயை பாசிஸ்டுகளுக்கு முக்கிய ஆதரவு தளம் வழங்கப்பட்டுவது எடுத்துக்காட்டப்படுகையில், ஆளும் வர்க்கம் இராணுவவாதத்திற்கு எதிராகப் போராடும் மற்றும் பாசிச அச்சுறுத்தலை எச்சரிக்கும் அந்த அரசியல் சக்திகள மீது ஒரு கொடூரமான துன்புறுத்தலைத் தொடங்கியது. 2018 ஆம் ஆண்டில், ஜேர்மனியின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான அரசியலமைப்பிற்கான பாதுகாப்பு அலுவலகம், அதன் வருடாந்திர அறிக்கையில் SGP இனை “இடதுசாரி தீவிரவாத” அமைப்பாக சேர்த்து அதை அறிவித்தது. "ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்கான போராட்டம்" மற்றும் "ஏகாதிபத்தியம்" மற்றும் "இராணுவவாதத்திற்கு" எதிரான போராட்டம் ஆகியவை அரசியலமைப்புக்கு எதிரானவை, அதாவது சட்டவிரோதமானது என்று கூறி ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலை நிறுவனம் நியாயப்படுத்தியது. அந்த நேரத்தில் உளவு அமைப்பிற்கு தலைமை தாங்கிய ஹான்ஸ்-ஜோர்ஜ் மாஸன், கெம்னிட்ஸ் நகரத்தின் ஊடாக ஒரு பாசிச வெறியாட்டத்திற்கு தனது ஆதரவை அறிவித்ததற்காக தனது வேலையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், AfD இன் பகிரங்க ஆதரவாளராக உருவெடுத்தார்.

அரசியல் ஸ்தாபகமும் இந்த காலகட்டத்தில் AfD இன் வளர்ச்சியை ஊக்குவித்ததுடன், அதை அரசின் கட்டமைப்புகளில் முழுமையாக ஒருங்கிணைத்தது. இப்போக்கானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகள் துரிங்கியா மாநிலத்தில் AfD வாக்குகளை நம்பியிருந்தபோது, தாராளவாத ஜனநாயக் கட்சியின் அரசியல்வாதி தோமஸ் கெம்மெரிக்கை முதலமைச்சராக தேர்வு செய்தபோது உச்சகட்டத்தை அடைந்தது. கெம்மெரிச் போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் ஒரு பாசிச கட்சியின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநில பிரதம மந்திரியானார். (பார்க்கவும்: Sound the alarm! Political conspiracy and the resurgence of fascism in Germany)

கொரோனா வைரஸ் தொற்று ஆளும் உயரடுக்கின் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பெரும் கூட்டணி தனது குற்றவியல் வேலைக்கு திரும்பு என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதால், கூட்டாட்சி நாடாளுமன்றத் தலைவர் வொல்ப்காங் ஷொய்பிள, ஜேர்மனியின் அடிப்படை சட்டம் உயிர் வாழ்வதற்கான உரிமையை பாதுகாக்காது என்ற பாசிச ஆய்வறிக்கையை முன்வைத்தார். பதுங்கு குழியில் ஹிட்லர் தற்கொலை செய்த 75 வது ஆண்டு நினைவு நாளில் “பயனற்ற உயிர்கள்” பற்றிய விவாதத்தைத் தூண்டிய ஷொய்பிள, “எங்கள் அடிப்படைச் சட்டத்தில் ஒரு முழுமையான மதிப்பு இருந்தால், அது ஒரு நபரின் கெளரவம் தான் … ஆனால் அது நமக்கு இறக்க வேண்டியதிலிருந்து விலக்கழிக்கவில்லை".

வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் ஆழ்ந்த செல்வாக்கற்ற கொள்கைகளை திணிக்க உதவுவதற்காக, வலதுசாரி தீவிரவாத மற்றும் வெளிப்படையாக நாஜி சார்பு சக்திகளை உள்ளடக்கிய தீவிர வலதுசாரி கொரோனா வைரஸ் எதிர்ஆர்ப்பாட்டங்களை அதிகாரிகள் உதவியளித்தனர். கடந்த வார இறுதியில் பேர்லினில் சுமார் 20,000 பேரின் ஆர்ப்பாட்டத்தில், முக்கியமாக தீவிர வலதுசாரி சக்திகளால் காவல்துறை, புலனாய்வு அமைப்புகள் மற்றும் AfD ஆகியவற்றுடன் பிணைப்புடன் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களின் ஜேர்மன் மூன்றாம் குடியரசு மற்றும் பிற அரசியலமைப்பு விரோத அடையாளங்களின் கொடியை காவல்துறையினர் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அரசியல்வாதிகள் பதிலளிக்க வேண்டிய "சம்பந்தப்பட்ட குடிமக்களின்" மக்கள் கருத்தின் நியாயமான வெளிப்பாடாக முன்வைக்கப்படுகின்றன.

ஜேர்மன் வெளியுறவுக் கொள்கைக்கும் நவ-பாசிச சக்திகளுக்கும் இடையிலான கூட்டுறவு மறைப்பதும் பெருகிய முறையில் கடினமாகி வருகிறது. அண்மையில் புடாபெஸ்டில் நடந்த ஒரு நிகழ்வில், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் தங்கள் ஹங்கேரிய சகாக்களுடன் கொண்டாடினர். ஜேர்மன் தயாரிப்பான சுமார் 50 “Leopard 2” தாங்கிகளை சர்வாதிகார ஓர்பானின் ஆட்சிக்கு வழங்கினர். தாங்கிகளின் வருகை Kárpátia என்ற பாசிச இசைக்குழுவின் “Tank March” பாடலுடன் இடபெற்றது. Der Spiegel பின்வருமாறு தொடர்கிது," அதன் பாடல்களில், மேற்கு உக்ரேனில் இருந்து குரோஷிய அட்ரியாடிக் கடற்கரை வரை ஒரு இனரீதியான தூய்மையான பாரிய ஹங்கேரி இசைக்குழுவுக்கு அழைப்புவிடுகின்றது.

ஜேர்மன் ஆளும் உயரடுக்கு தீவிர வலதுசாரிகளைத் தழுவுவது என்பது முதலாளித்துவத்தின் ஆழ்ந்த உலகளாவிய நெருக்கடியால் உந்தப்படும் ஒரு சர்வதேச நிகழ்வின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவில், ஜூன் மாதத்தில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இராணுவ சதித்திட்டத்தை நடத்த முயன்ற ட்ரம்ப் நிர்வாகம், இராணுவ உடைகளை அணிந்திருந்த கூட்டாட்சி முகவர்களை அனுப்பியுள்ளது. அமைதியான எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கும் சாத்தியமான காரணமின்றி அவர்களை தடுத்து வைப்பதற்கும் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு பயன்படுத்தப்பட்டது. (பார்க்கவும்: Stop Trump’s coup d’etat! Mobilize the working class against authoritarianism and dictatorship)

பயங்கரவாத செல்கள் மற்றும் கொலைக் குழுக்களின் செயல்பாடுகளால் காட்டப்பட்டுள்ளபடி இப்போது மிகவும் குழப்பமான வடிவங்களை எடுத்துக்கொண்டிருக்கும் ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதத்தின் மீள் எழுச்சி வெகுஜன ஆதரவைப் பெறவில்லை. மாறாக, இது முக்கிய கட்சிகள், ஊடகங்கள், முன்னணி கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் சதித்திட்டத்தின் விளைவாகும். SGP துணை தேசிய செயலாளர் கிறிஸ்தோஃப் வான்ட்ரையர் அவர்கள் ஏன் திரும்பி வருகிறார்கள்? என்ற தனது புத்தகத்தில் இது தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கு எதிரான SGP இன் போராட்டத்தை ஆவணப்படுத்துகின்றார். “ஆளும் உயரடுக்கு 1933 இல் ஏற்கனவே இருந்த பாசிச இயக்கத்தின் மீது தனது சதியை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இன்று அது நேர்மாறாக உள்ளது. AfD இன் உயர்வு இதேபோன்ற சதித்திட்டத்தின் விளைவாகும். அரசாங்கம், அரசு அமைப்புகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள சித்தாந்தவாதிகள் ஆகியோரின் பாத்திரங்களை ஆராயாமல் இதை புரிந்து கொள்ள முடியாது. அவை AfD க்கு வழி வகுத்துள்ளன.”

AfD இன் வளர்ச்சிக்கும் ஜேர்மனியில் பாசிசம் மற்றும் இராணுவவாதம் திரும்புவதற்கும் எதிராக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி ஆகும். அதன் எச்சரிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவவாதம், போர் மற்றும் தீவிர வலதுசாரிகளின் எழுச்சி ஆகியவற்றிற்கு உழைக்கும் மக்களிடையே பெருகிவரும் எதிர்ப்பிற்கு ஒரு சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்தினால் வழிநடத்தப்படும் ஒரு நனவான அரசியல் தலைமையை வழங்குவதற்காக ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை உருவாக்குவதே இப்போது முன்வைக்கப்பட்டுள்ள அவசர பணியாகும்.

Loading