முன்னோக்கு

பிலிப்பைன்ஸ் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் ஜோஸ் மரியா சிசனின் ஸ்ராலினிச அவதூறுகளை எதிர்ப்போம்! ஜோசப் ஸ்காலிஸை ஆதரிப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிலிப்பைன்ஸ் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகரும் சித்தாந்த தலைவர் ஜோஸ் மரியா சிசன், ஆகஸ்ட் 18 இல் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு வக்கிரமான அச்சுறுத்தும் விதமான அவதூறில், பிலிப்பைன்ஸின் முன்னணி கல்வியாளர் ஜோசப் ஸ்காலிஸை "ஒரு கல்வித்துறைச்சார் ட்ரொட்ஸ்கிசவாதியாக காட்டிக்கொள்ளும் கம்யூனிச-விரோத வெறி நோய்பிடித்த மற்றும் சிஐஏ உளவியல்போர்முறை முகவர்" என்பதாக தாக்கியுள்ளார்.

அவர் முதுநிலை முனைவர் (postdoctoral) ஆராய்ச்சியாளராக இருக்கும் நன்யாங் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 26 இல் ஏற்பாடு செய்துள்ள ஓர் இணையவழி நிகழ்வில் ஸ்காலிஸ் ஓர் உரை வழங்க உள்ளார் என்ற அறிவிப்புக்கு விடையிறுப்பாக சிசனின் இந்த அசாதாரண வெடிப்பு இருந்தது. அந்த சொற்பொழிவு, 2016 இல் பாசிசவாத பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுரேற்ற க்கான CPP இன் ஆதரவுக்கும் "ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியால் மார்கோஸ் சர்வாதிகாரம் ஆமோதிக்கப்பட்டதற்கும்" இடையே "வரலாற்று சமாந்தரங்களை ஆய்வுக்குட்படுத்தும்".

தயலாக் மொழியைச் சரளமாக பேசக்கூடியவரும், பேர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றவருமான ஸ்காலிஸ் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு சிறந்த கல்வியாளராக பரவலாக அறியப்படுவதுடன் மதிக்கப்படுகிறார். CPP இன் வரலாறு மீதான அவரின் முனைவர் பட்ட ஆய்வு, பிலிப்பைன்ஸில் அக்கட்சி மீண்டும் மீண்டும் செய்த காட்டிக்கொடுப்புகளின் அடியிலுள்ள வேர்களைத் தொழிலாளர்களும், இளைஞர்கள், அத்துடன் கல்வியாளர்களும் புரிந்து கொள்ள முயன்று வருகின்ற நிலையில், அங்கே ஒரு குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்த்துள்ளது. ஸ்காலிஸ், பிலிப்பைன்ஸ் வரலாறு, அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்த கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளத்திற்கும் பங்களிப்பு செய்துள்ளார்.

CPP இன் அரசியல் பாத்திரத்தைப் பாதுகாப்பதற்கு முற்றிலும் தகைமையற்றுள்ள சீசன், ஸ்காலிசை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முகவர் என்று முத்திரைக் குத்தி, நீண்டகாலமாக தனிப்பட்டரீதியில் அவர் ஈடுபட்டிருந்த ஸ்ராலினிச மற்றும் மாவோயிச கண்டனங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறையை மீண்டும் தொடங்கி உள்ளார். “தற்போதைய துரோகத்தனமான, கொடுங்கோலான, ஆட்கொலை புரியும், சூறையாடும், மோசடித்தனம் நிறைந்த டுரேற்ற இன் குற்றகரமான ஆட்சிக்காகவும், அது அதிகாரத்திற்கு மேலுயர்ந்ததற்கும்" CPP மற்றும் அதன் முன்னணி அமைப்புகள் மீது பழிசுமத்தும் "ட்ரொட்ஸ்கிஸ்டுகளின்" “பிரயோசனமற்ற முயற்சிகளை" அவர் கண்டிக்கிறார்.

2016 அதிபர் பதவியைப் பாசிசவாத டுரேற்ற ஜெயித்த போது CPP மற்றும் அதன் முன்னணி அமைப்புகள் அவரை ஆதரித்ததுடன் அவருக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தி இருந்தன என்பது, பிலிப்பைன்சில் நன்கறியப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட விடயமாகும். டுரேற்ற தேசத்திற்கு வழங்கிய அவரின் முதல் உரை வழங்கிய அந்த தருணத்தில், CPP குடையின் கீழ் இருக்கும் முன்னணி குழுவான BAYAN அண்மித்து 40,000 பேருடன் ஒரு பேரணி நடத்தியது, டுரேற்ற புதிதாக நியமித்திருந்த பொலிஸ் துறை தலைவர் ரோனால்ட் டெலா ரோசா அந்த பேரணியில் அழைக்கப்பட்டிருந்ததுடன் அதில் உரையாற்றினார். CPP இன் இளைஞர் முன்னணியான அனக்பயான் (Anakbayan) டுரேற்ற இன் உரையை "புதிய சுவாச காற்று" என்று வரவேற்றிருந்தது.

CPP ஆல் நியமிக்கப்பட்டிருந்த பல முக்கிய பிரமுகர்கள் டுரேற்ற இன் நிர்வாகத்தில் பதவிகளை ஏற்றிருந்தனர். CPP இன் அரசியல் போக்குடன் தொடர்புபட்டிருந்த இரண்டு அமைப்புகளின் தலைவர்களும் இதில் உள்ளடங்குவர். விவசாய அமைப்பான Kilusang Magbubukid sa Pilipinas (KMP) இன் நீண்டகால தலைவர் ரபேல் மரீயானோ (Rafael Mariano) வேளாண் சீர்திருத்தத்துறைக்கு (DAR) பொறுப்பில் நிறுத்தப்பட்டார். Kilusang Mayo Uno (KMU) குடையின் கீழ் இருந்த மின்டானோ தீவு (Mindanao) தொழிற்சங்கத்தின் துணை தலைவர் Joel Maglungsod தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் (DOLE) இணை செயலராக ஆக்கப்பட்டார்.

டுரேற்ற "போதை மருந்துகள் மீதான போரை" தொடங்கிய நிலையில் அவரிடமிருந்து முறித்துக் கொள்ளாமல், CPP மக்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்த அந்த நீதி விசாரணையற்ற படுகொலை நடவடிக்கையை வரவேற்றதுடன், அதன் உத்தியோகபூர்வ பத்திரிகை Ang Bayan இல் அதற்கு ஒத்துழைக்குமாறு "புரட்சிகர சக்திகளுக்கு" அழைப்பு விடுத்தது. போதை மருந்துகளுக்கு எதிரான போர் பாரிய படுகொலை நடவடிக்கையாக ஆகியிருந்தது, அதில் பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகளால் கடந்த நான்காண்டுகளில் 30,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஸ்காலிஸ் அவரின் எழுத்துக்களில் CPP மற்றும் அதிலிருந்து உடைத்துக் கொண்டு சென்ற பல்வேறு அமைப்புகளின் அடுத்தடுத்த காட்டிக்கொடுப்புகளை மட்டும் ஆவணப்படுத்தவில்லை, மாறாக அவை ஸ்ராலினிசம் மற்றும் அதன் மாவோயிச வகையறாக்களின் பிற்போக்குத்தனமான தேசியவாத சித்தாந்தத்தில் அவர்கள் வேரூன்றி இருந்ததையும் விளங்கப்படுத்தினார். பிலிப்பைன்ஸ் போன்று காலங்கடந்த முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், சோசலிசம் திட்டநிரலிலேயே இல்லை என்றும், தொழிலாள வர்க்கமும் விவசாய பெருமக்களும் முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கான அணியை" ஆதரிக்க வேண்டுமென்றும் அதன் "இரண்டு கட்ட தத்துவ" முன்னோக்கு அறிவிக்கிறது.

பிலிப்பைன்சில் பெர்டினான்ட் மார்கோஸ் (Ferdinand Marcos) முதலாளித்துவ வர்க்கத்தின் முற்போக்கான அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக வாதிட்ட ஸ்ராலினிச Partido Komunista ng Pilipinas (PKP) கட்சி, அவர் 1965 அதிபர் பதவியை ஜெயிப்பதற்காக அவரை ஆதரித்ததுடன், 1972 இல் இராணுவச் சட்ட பிரகடனம் மூலமாக மார்கோஸ் சர்வாதிகார அதிகாரங்களை ஏற்க தயாரிப்பு செய்த போதினும், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அவருக்கு அடிபணிய செய்ய அது செயற்பட்டது.

1967 இல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும் 1968 இல் CPP ஐ ஸ்தாபித்தவருமான சிசன் PKP இளைஞர் அணியின் ஓர் உறுப்பினராக இருந்தார். மாஸ்கோவை ஆதரித்த PKP ஐ சிசன் எதிர்த்த போதினும், CPP உம் சரி அவரும் சரி PKP இன் துரோகத்தனத்தின் தத்துவார்த்த வேர்களை மீளஆய்வு செய்யவில்லை அல்லது ஸ்ராலினிசத்திலிருந்து உடைத்துக் கொள்ளவில்லை. அவர் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதோவொரு கன்னையை "முற்போக்கானதாக" சித்தரிப்பதற்குப் பொறுப்பாக இருந்த இரண்டு அடுக்கு தத்துவத்தின் மாவோயிச பதிப்பைப் பரப்பிக் கொண்டிருந்தார். CPP இன் உதவியுடன் அதன் ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கம் அதன் கூட்டாளிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக திரும்பும் வரையில் அந்த கட்டம் வரையில் அவர் அதைத்தான் செய்து கொண்டிருந்தார்.

“துரோகத்தனமான, கொடுங்கோலான, ஆட்கொலை புரியும், சூறையாடும், மோசடித்தனமான டுரேற்ற ஆட்சி", CPP மற்றும்/அல்லது போட்டி ஸ்ராலினிச கட்சிகளின் உதவியுடன் தொடர்ச்சியாக அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட பிலிப்பைன்ஸ் அரசாங்கங்களில் மிகவும் சமீபத்தியது மட்டுமே ஆகும்.

ஸ்காலிஸ் மீதான சிசனின் அவதூறு தாக்குதலில் உள்ள கேடு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஆழமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் சொந்த கட்சியின் அதிருப்தி உறுப்பினர்கள் உட்பட அவற்றின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக உடலைக் காயப்படுத்தும் வன்முறை மற்றும் படுகொலையின் ஒரு நீண்ட முன்வரலாறை சிசன் மற்றும் CPP கொண்டுள்ளனர். “ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" மீதான அவரின் கண்டனம், ஆகஸ்ட் 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் உச்சத்தை அடைந்த 1930 களின் களையெடுப்பில் புரட்சியாளர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும் படுகொலை செய்த ஸ்ராலின் மற்றும் அவரின் குண்டர் ஆட்சியின் அவதூறுகளை நினைவூட்டுகிறது.

ஜோசப் ஸ்காலிஸிற்கு எதிராக சிசனின் அவதூறை எதிர்க்குமாறு நாங்கள் எங்கள் வாசகர்களுக்கு அழைப்பு விடுகிறோம். எதிர்ப்பு அறிக்கைகள் சமூக ஊடகங்களில் பதியப்பட்டு பரப்பப்பட வேண்டும். புதன்கிழமை வழங்கப்பட இருக்கும் அந்த சொற்பொழிவில் (இங்கே பதிவு செய்யவும்) பரந்தளவில் பங்குபற்றுமாறும் WSWS வலியுறுத்துகிறது. பிலிப்பைன்ஸிலும் ஆசியா எங்கிலும் 1,000 க்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. டாக்டர். ஸ்காலிஸ் கல்வியாளர்கள் மத்தியிலும் கோட்பாட்டுரீதியில் ஆதரவைப் பெற்றுள்ளார்.

1970 கள் மற்றும் 1980 களில் இருந்ததைப் போல, பிலிப்பைன்சில் CPP க்கு உழைக்கும் மக்களின் பரந்த அடுக்களின் ஆதரவோ மதிப்போ இப்போது இல்லை. அது போட்டி கட்சிகளாக உடைந்து போயிருப்பதுடன், அவை ஒவ்வொன்றும் தனிச்சலுகைகள் மற்றும் அதிகாரத்தைப் பெறுவதற்காக பிலிப்பைன்ஸ் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதோவொரு கன்னையுடன் தங்களைக் கூட்டுச் சேர்த்துக் கொள்ள போட்டியிடுகின்றன. ஆனால் ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்தின் மடத்தனமான மரபியம், பிலிப்பைன்சில் மட்டுமல்ல மாறாக அப்பிராந்தியம் எங்கிலும் இன்னமும் இருக்கிறது.

CPP இன் காட்டிக்கொடுப்புகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைப் புரிந்து கொள்ள விரும்பும், பிலிப்பைன்சில் எதேச்சதிகாரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அடித்தளம் அமைக்கும் ஓர் அரசியல் முன்னோக்கை எதிர்நோக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு ஸ்காலிசின் சொற்பொழிவு ஓர் அறிமுகத்தை வழங்கும்.

Loading