பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் லெபனானில் சட்டம் வகுத்தளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 4 இல் சுமார் 190 பேர் கொல்லப்பட்ட படுமோசமான துறைமுக வெடிவிபத்துக்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பெய்ரூட்டுக்கு இரண்டாவது முறையாக விஜயம் செய்தார்.

லெபனானின் முன்னாள் காலனித்துவ எஜமானரின் அந்த பிரதிநிதி விஜயம் செய்திருந்த நேரம், முதலாம் உலக போருக்குப் பின்னர், தோற்கடிக்கப்பட்ட ஒட்டோமான் சாம்ராஜ்ஜியம் மீதான ஏகாதிபத்திய சுற்றி வளைப்பின் பாகமாக, அப்பிராந்திய மக்களை நசுக்கிக் கொண்டிருந்த, பிரெஞ்சு ஆட்சியின் கீழ் லெபனிய அரசு ஸ்தாபிக்கப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவுடன் பொருந்தி இருந்தது.

லெபனானின் பில்லியனிய பெருநிறுவன மற்றும் வங்கியியல் குடும்பங்களில் ஒன்றின் உறுப்பினரான சாத் ஹரிரியை (Sa’ad Hariri) பிரெஞ்சு கைப்பாவையாக மீண்டும் அதிகாரத்திற்கும் கொண்டு வருவதற்கான மற்றும் ஈரானிய ஆதரவிலான இஸ்லாமிய கட்சி ஹெஸ்பொல்லாவை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்கான நிலைமைகளை உருவாக்குவதே மக்ரோனின் நோக்கமாக இருந்தது.

எந்தவொரு சர்வதேச நிதிய கடன்களும் மற்றும் அந்நாட்டின் அதிசெல்வந்த சீமான்களால் தசாப்தங்களாக கொள்ளையடிக்கப்பட்ட லெபனிய அரசின் நிலுவையிலுள்ள திவால்நிலைமையைத் தடுப்பதற்கான உதவியும் "சீர்திருத்தங்களை" சார்ந்திருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார், இது ஹெஸ்பொல்லாவின் செல்வாக்கை இல்லாதொழிப்பது மற்றும் சிரியா மற்றும் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான ஒரு வழக்குச் சொல்லாகும்.

கிழக்கு மத்தியதரைக்கடலில் ஆறு மில்லியன் மக்கள்தொகையுடன் உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றுக்கு அவர் சென்றிருப்பது, ஒரு பினாமி போர் மூலமாக சிரியாவில் ஆட்சி மாற்றத்தைச் செய்வதில் அவர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அவர்களின் செல்வாக்கு மற்றும் நலன்களை மீளவலியுறுத்துவதற்கான பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பரந்த முயற்சியின் பாகமாக உள்ளது.

புதிதாக எரிவாயு கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றும் லேவண்ட் பேசினில் எரிவாயு குழாய் பதிக்க முன்மொழியப்பட்டுள்ளதற்கு மத்தியில் ஐரோப்பாவின் எரிசக்தி வினியோகத்தைப் பாதுகாக்க அவர்கள் முயன்று வருகிறார்கள், அதேவேளையில் துருக்கி அதன் சொந்த அகழ்வுப்பணிகளை மேற்கொண்டு வருவதுடன், துருக்கி, ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை கிழக்கு மத்தியதரைக்கடலில் சிரியா வழியாக தங்கள் நிலைகளை கட்டமைத்து வருகின்றன. அவர்களின் கணக்கீடுகளில் ஒரு முக்கிய காரணி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒருகால மேலாதிக்க நிலையை தொடர்ந்து பலவீனப்படுத்துவதாகும்.

குறிப்பாக பிரான்ஸ், தன்னை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்துடன் சேர்த்துக் கொண்டு, துருக்கி, கட்டார் மற்றும் இத்தாலியால் ஆதரிக்கப்படும் திரிப்போலியில் உள்ள ஐ.நா. அங்கீகரித்த ஃபயெஸ் அல்-சராஜ் அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு லிபியாவில் படைத்தளபதி கலிஃபா ஹாஃப்தரை ஆதரிப்பதில், மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாடு எடுத்து வருகிறது.

லெபனானின் தலைவர்கள் கருணைக்காக மண்டியிட்ட போது அவர்களுக்கு புகலிடம் வழங்கி, பிரான்ஸ் நீண்டகாலமாக லெபனானின் உள்நாட்டு அரசியலில் மத்தியஸ்தம் செய்துள்ளது. மிகவும் சமீபத்தில், சாத் ஹரிரி இன் அப்போதைய பிரதான ஆதரவாளராக இருந்த சவூதி அரச குடும்பம் அவரை ரியாத்திற்கு வர உத்தரவிட்டு, அவரின் ஆட்டங்கண்டு போன அரசாங்கம் ஹெஸ்பொல்லாவிடமிருந்து விலகி இருக்க திராணியற்று இருந்ததற்காக, அவரைக் கைது செய்து தொலைக்காட்சியிலேயே அவரின் பிரதம மந்திரி பதவி இராஜினாமாவை அறிவிக்க நிர்பந்தித்ததற்குப் பின்னர், 2017 இல், அவரை மீண்டும் பதவிக்குக் கொண்டு வர பாரீஸ் தான் ஏற்பாடு செய்தது.

திங்கட்கிழமை மக்ரோன் அங்கே வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான், லெபனானின் அரசியல் கட்சிகள் சில மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்த ஹாசன் தயப்பின் (Hassan Diab) அரசாங்கம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பில்லியனிய முன்னாள்-பிரதான தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இராஜாங்க தூதர் முஸ்தபா அதிப்பை புதிய பிரதம மந்திரியாக முன் நகர்த்த உடன்பட்டிருந்தன. பெய்ரூட் துறைமுக பயங்கர வெடி விபத்திற்கு ஆறு நாட்களுக்குப் பின்னர் தயப் இராஜினாமா செய்திருந்தார். குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் முறையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் அமோனியம் நைட்ரேட்டைத் தேக்கி வைக்கும் அபாயங்கள் குறித்து மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணித்திருந்த அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் பல ஆண்டுகால குற்றகரமான அலட்சியம் மற்றும் ஈவிரக்கமற்ற அசட்டைத்தனத்திற்கு அவர் பலிக்கடா ஆக்கப்பட்டார் என்பது அவருக்குத் தெளிவாக தெரிந்திருந்தது.

2013 இல் இருந்து ஜேர்மனிக்கான லெபனானின் தூதரும் ஒரு வழக்குரைஞருமான அதிப் பெரிதும் வெளியில் தெரியாத நபராவார். 2011-13 இல் பிரதம மந்திரியாக இருந்த லெபனானின் மிகப்பெரும் செல்வந்தர் நாஜிப் மிகாதின் ஒரு நெருங்கிய கூட்டாளியாக, அவரின் மந்திரிசபை தலைவராக சேவையாற்றியுள்ள அதிப், விரைவாக ஓர் அரசாங்கம் அமைக்க அழைப்புவிடுத்ததுடன், சர்வதேச நாணய நிதியத்துடன் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்த வெகுவிரைவிலேயே சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த உறுதியளித்தார். அடிப்படை சாராம்சத்தில், உடனடியாக பதவியேற்பதற்கு ஹரிரி மிகவும் மதிப்பிழந்துள்ள நிலைமைகளின் கீழ் —அந்த துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு ஆண்டுகளில் நான்காண்டுகள் அவர் தான் அந்நாட்டை ஆட்சி செய்திருந்தார் என்ற நிலைமைகளின் கீழ்— ஹரிரி தலைமையிலான அரசாங்கத்திற்கு வழி வகுத்துக் கொடுக்க அதிப் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற லெபனானின் பாடகரும் தேசிய பிரபலமுமான 85 வயதான Fairuz ஐ அவர் வீட்டில் சென்று சந்தித்து, அங்கே அவருக்கு பிரான்சின் Légion d’Honneur விருதை வழங்கி, மக்ரோன் ஒரு விளம்பர சாகசத்துடன் அவர் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவரின் அரசியல் முன்னுரிமைகளைத் தெளிவுபடுத்திய அவர், பெய்ரூட்டில் உள்ள பிரெஞ்சு தூதரின் உத்தியோகபூர்வ மாளிகையான Pine Residence இல் அவரை வந்து சந்திக்குமாறு ஹரிரிக்கு அழைப்பு விடுத்தார். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 1, 1920 இல், பிரெஞ்சு தளபதி ஹென்றி கௌரத் (Henri Gouraud) இதே மாடமுகப்பில் இருந்து தான், சிரியா மற்றும் லெபனான் மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அதிகாரம் வழங்கிய சர்வதேச தேச சங்கத்தின் வரையறைகளின் கீழ், மேதகு லெபனான் அரசின் உருவாக்கத்தை அறிவித்தார். அந்த அரச மாளிகை 1943 இல் அந்நாடு சுதந்திரம் அடையும் வரையில் அந்நாட்டை நிர்வகிப்பதற்கு பிரான்சின் அடித்தளமாக சேவையாற்றியது.

அதற்கடுத்த நாள், அந்நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகளில் பங்குபற்றிய மக்ரோன், லெபனிய தேசியக்கொடி வர்ணங்களான சிவப்பு, வெள்ளை, பச்சை நிற புகைகளைக் கக்கியவாறு, தலைக்கு மேல் பிரெஞ்சு விமானப்படை விமானங்கள் பறக்க, பெய்ரூட்டின் வடகிழக்கு மலைகளின் வனப்பகுதியில் லெபனானின் தேசிய அடையாளமான சிடார் மரக்கன்றுகளை நட்டார்.

செவ்வாய்கிழமை மதியம், ஏகாதிபத்திய பைன் மாளிகையில் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான ஒரு கூட்டத்தில், பொருளாதாரத்தை மீட்பதற்கான சர்வதேச நாணய நிதிய கடனுக்கு வழி வகுக்கும் விதத்தில், இரண்டு வாரங்களுக்குள் ஒரு புதிய அரசாங்கம், சீர்திருத்தத்திற்கு "நம்பகமான பொறுப்புறுதிகள்", இரண்டு மாதங்களுக்குள் வெளிப்படைத்தன்மை, 12 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தல்கள் என மக்ரோன் அவரின் கோரிக்கைகளை வெளியிட்டார்.

செவ்வாய்கிழமை மாலை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில் மக்ரோன் கூறினார், “வரவிருக்கும் நாட்களில் உருவாக்கப்பட உள்ள இலக்குகளை நோக்கி நோக்குநிலை கொண்ட ஓர் அரசாங்கத்திற்கு, விதிவிலக்கின்றி, அவர்கள் அனைவரும், பொறுபேற்றுள்ளனர், மேலும் அந்த புதிய அரசாங்கம் "திறமையான" சார்பு நிலைப்பாடற்றவர்களை முறைப்படி கொண்டிருக்கும். "அங்கே வெற்று காசோலை கிடைக்காது,” என்று எச்சரித்த அவர், “உங்களின் அரசியல் வர்க்கம் தோல்வியடைந்தால், பின்னர் லெபனானின் உதவிக்கு நாங்கள் வர மாட்டோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

லெபனானின் பொருளாதார நெருக்கடியானது, உலகின் மிக அதிகளவில் கடன்பட்ட நாடுகளில் ஒன்றை உருவாக்கி உள்ள ஆளும் உயரடுக்கால் பல தசாப்தகால ஊழல் மற்றும் கொள்ளையடிப்பில் வேரூன்றி உள்ளது. அதன் இறையாண்மை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 170 சதவீதத்ததிற்கு சமமாக உள்ளது, இந்த கடன்களைப் பிரதானமாக முன்னணி சுன்னி மற்றும் கிறிஸ்துவ அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான லெபனிய வங்கிகள் பெற்றுள்ளன. செலாவணி பொறிந்து போயுள்ளது, சேமிப்பு மதிப்புகள் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும் கூட சிறு சேமிப்பாளர்கள் அவர்களின் சேமிப்புகளில் இருந்து பணம் எடுப்பதை வங்கிகள் தடுத்துள்ளன. ஏற்கனவே உச்சத்தில் இருந்த வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை, இந்த தொற்றுநோயை அடுத்தும் மற்றும் தனிநபர் அகதிகள் எண்ணிக்கையில் உலகிலேயே மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் ஏற்பட்ட துறைமுக வெடிவிபத்தை அடுத்தும் இன்னும் அதிகமாக அதிகரித்துள்ளன.

அரசு மற்றும் நிதிய அமைப்புமுறையில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அவர்களின் சொந்த "வழியை" அவர்கள் பின்தொடர தவறினால் சர்வதேச உதவி கிடைக்காது என்று மக்ரோன் வலியுறுத்தினார். அவசியமான மாற்றங்களைச் செய்ய அக்டோபர் இறுதி வரையில் அவர் அவர்களுக்கு அவகாசம் வழங்கினார். அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால், டொனால்ட் ட்ரம்பைப் போலவே இந்த அடாவடித்தனமான ஏகாதிபத்தியவாதியும், ஜனாதிபதி Michel Aoun இன் மருமகனும் முக்கிய கிறிஸ்துவ சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜிப்ரான் பாசில், மற்றும் நாடாளுமன்றத்தில் மிகப்பெரும் அணியாக உள்ள ஹெஸ்பொல்லா போன்ற அரசியல்வாதிகளைப் பழக்கமான பாதைக்குக் கொண்டு வருவதற்கான தடியாக தடையாணைகளின் அச்சுறுத்தலை முன்வைத்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் நவம்பரில் விஜயம் செய்த பின்னர் டிசம்பரில் மீண்டும் அவர் லெபனானுக்கு வரவிருப்பதாகவும், அக்டோபர் மத்தியில் லெபனான் சம்பந்தமான இரண்டு மாநாடுகளை பிரான்ஸ் ஒழுங்கமைக்கும் என்றும் மக்ரோன் அறிவித்தார். அந்த மாநாடுகளில் ஒன்று மறுகட்டமைப்பு உதவிகள் மீது ஒருமுனைப்படும், மற்றொன்று லெபனானின் சீர்திருத்த திட்டநிரலுக்காகவும் மற்றும் "பிராந்திய அதிகார விளையாட்டுக்களில் இருந்து லெபனானைப் பாதுகாப்பதற்காகவும்" பிரான்சில் நடத்தப்படும்.

ஊழலை ஒழிப்பது மீதான மக்ரோனின் எல்லா பேச்சுக்களைப் பொறுத்த வரையில், அவர் உண்மையில் ஹெஸ்பொல்லாவின் அதிகாரத்திற்குக் கடிவாளமிடுவதை அர்த்தப்படுத்தினார். அடுத்த சுற்று "சீர்திருத்த" பேச்சுவார்த்தைகள் லெபனிய இராணுவத்துடன் போட்டியிடும் குழுக்களின் ஆயுத களஞ்சியத்தின் மீது ஒருமுனைப்பட்டிருக்கும் என்றார்.

மக்ரோன் பெய்ரூட்டிலிருந்து வெளியேறும்போது, நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதல்களுடன் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். “[ஜனாதிபதி] மிக்கெல் ஆவுன் ஒழிக" என்றும், “புரட்சி" என்றும் சிலர் கூச்சலிட்டனர், அதேவேளையில் மற்றவர்கள் வெளிநாட்டு தலையீட்டையும் மக்ரோனின் விஜயத்தையும் எதிர்ப்பதாக கூறினர்.

அப்பிராந்தியத்தில் பிரான்சின் புவிசார்-மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதில் இன்னும் அதிக முக்கிய பாத்திரம் வகிக்கும் மக்ரோனின் பரந்த நோக்கத்தின் பாகமாக, அவர் ஈராக்கிய தலைநகர் பாக்தாத்திற்குச் சென்றார். அங்கே மே மாதம் முஸ்தாபா அல்-காதிமி பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், அந்நாட்டிற்கு விஜயம் செய்யும் முதல் சர்வதேச தலைவர் மக்ரோன் ஆவார்—இது பிரெஞ்சு அதிகாரிகளின் மூன்றாவது விஜயமாக இருந்தது.

குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (PKK) போராளிகளைத் தொந்தரவூட்டும் நோக்கில் ஜூனில் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்குள் நடத்தப்பட்ட துருக்கிய இராணுவத் தலையீடு பாக்தாத் மற்றும் எர்பிலைக் கோபமூட்டிய நிலையில், துருக்கிக்கு எதிராக ஒரு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதத்தில், “இறையாண்மைக்கான ஒரு செயல்முறையை ஆதரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து ஒரு முனைவைத் தொடங்குவதே" அவரின் நோக்கமாக இருந்தது.

Loading