துருக்கியுடனான போர் பதட்டங்களுக்கு மத்தியில் கிரீஸ் பிரெஞ்சு ஆயுதங்களுக்காக பில்லியன்களை செலவிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமையன்று, பிரெஞ்சு ஆயுதங்களை பில்லியன் கணக்கான யூரோக்களுக்கு வாங்குவதாகவும் கிரேக்க இராணுவத்தின் அளவு பெருமளவில் அதிகரிக்கப்படும் என்றும் பழமைவாத கிரேக்க பிரதம மந்திரி கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ், (Kyriakos Mitsotakis) அறிவித்தார். கடந்த தசாப்தத்தில் சமூகநலச் செலவுகளில் பில்லியன் கணக்கான யூரோக்களை கடுமையான வெட்டுக்களால் பேரழிவிற்குட்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஒரு நாட்டின், இராணுவச் செலவினங்களில் இந்த பாரிய அதிகரிப்பானது துருக்கியுடனான கிரேக்கத்தின் தற்போதைய இராணுவ முட்டுக்கட்டை நிலையில் ஒரு பெரிய விரிவாக்கத்தை குறிக்கிறது.

18 ரஃபால் போர் விமானங்களையும், கடற்படை ஹெலிகாப்டர்களுடன் கூடிய நான்கு பிரெஞ்சு பீரங்கி கடற்படைக் கப்பல்கள், பெருமளவு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், டோர்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவைகளையும் கிரேக்கம் வாங்கப் போவதாக மிட்சோடாகிஸ் குறிப்பிட்டார். ஏற்கனவே சேவையில் இருக்கும் நான்கு கிரேக்க பீரங்கி கடற்படைக் கப்பல்களை மேம்படுத்துமாறு பிரெஞ்சு நிறுவனங்களையும் அது கேட்டுக் கொள்ளும். இறுதியாக, இன்னும் 15,000 படையினர் கிரேக்க ஆயுதப்படைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் மிட்சோடாகிஸ் கூறினார்.

"நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கான நேரம் இது. ... இது ஒரு தேசிய கேடயத்தை உருவாக்கும் ஒரு முக்கியமான திட்டம்," என்று Thessaloniki இல் நிகழ்த்திய ஒரு உரையில் மிட்சோடாகிஸ் அறிவித்தார்.

ஏதென்ஸ் மற்றும் அங்காராவும் பிராந்திய கடல் மற்றும் எண்ணெய் வளம் மிக்க கடல் பகுதிகளுக்கு போட்டியாக உரிமை கோருகின்ற நிலையில், கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்க மற்றும் துருக்கிய போர்க் கப்பல்களுக்கு இடையே கடந்த மாதம் ஒரு நேரடி மோதலும், பல மாதங்களில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்குப் பின்னர் இந்த விற்பனை வந்துள்ளது. இந்த தகராறில், பாரிஸ் ஏதென்ஸை ஆக்ரோஷமாக ஆதரித்தது, கிரேக்கத்தின் மீது துருக்கியின் எண்ணிக்கையிலான மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக பல போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியது.

ஆபிரிக்காவிலும், குறிப்பாக லிபியாவிலும் துருக்கியின் நிலையை கீழறக்க பாரிஸ் முயல்கிறது, அங்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் போர் பிரபு கலீஃபா ஹப்தாரை ஆதரிக்கிறார், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தேசிய உடன்படிக்கை அரசாங்கத்தை (GNA) ஆதரிக்கிறார். லிபியாவின் தசாப்தகால உள்நாட்டு போரில் இரு முக்கிய பிரிவுகளில் ஒன்றை ஹப்தாரும் மற்றதை GNA உம் தற்போது வழிநடத்துகின்றன. நேட்டோவினால் 2011 இல் நாட்டிற்கு எதிராக தொடங்கிய போர் இந்த நிலைமைகளை உருவாக்கியது.

வியாழனன்று மக்ரோன் மற்றய தெற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை Med7 என்று அழைக்கப்படும் உச்சிமாநாட்டில் (இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ், மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகியவற்றுடன்) கோர்சிகன் நகரமான அஜசியோவில் சந்தித்தார். COVID-19 தொற்று பற்றிய கலந்துரையாடலுக்கு அப்பால், தெற்கு ஐரோப்பிய சக்திகள் புதிய ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதியை நாடுவது பற்றி விவாதிப்பர். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பேர்லினால் தடுப்பாணைக்கு அல்லது நிராகரிப்பிற்குள்ளான மத்தியதரைக்கடல் ஒன்றியத்திற்கான (Union of the Mediterranean) பிரான்சின் திட்டங்களை புதுப்பிக்க மெட் 7 உறுப்பினர்கள் உறுதிபூண்டனர். துருக்கியின் கடல் உரிமை கோரல்கள் குறித்தும், கிரேக்கம் அல்லது சைப்ரசினால் உரிமை கோரப்பட்ட அதே கடல் உரிமை கோரல் தொடர்பாக கூட்டு விமர்சனங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

மத்தியதரைக் கடல் நாடுகள் ஒரு அறிக்கையை ஏற்றுக்கொண்டன, அதாவது "ஐரோப்பிய ஒன்றியம், அதன் உறுப்பு நாடுகள் மற்றும் நமது தெற்கு அண்டை நாடுகள் இடையே தெற்கு கூட்டைப் புதுப்பிக்க வேண்டும். மத்தியதரைக்கடல் ஒன்றியத்தின் (Union of the Mediterranean) நவம்பர் 27 பிராந்திய அரங்கை நாங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்." அவர்கள் சாஹெலில் தமது கொள்கையை ஒருங்கிணைப்பதாக உறுதியளித்தனர், அங்கு ஆபிரிக்க அகதிகள் ஐரோப்பாவை அடைவதைத் தடுக்கவும், மாலியில் பிரான்சின் தற்போதைய இரத்தம் தோய்ந்த போருக்கு உதவவும் அவர்கள் நோக்கம் கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கான பல டிரில்லியன் யூரோ பிணை எடுப்பு திட்டங்களை அவர்கள் "பாராட்டினர்". இந்த திட்டங்களின் குறிக்கோள், COVID-19 தொற்றுநோய்களின் போது நிதிய பிரபுத்துவத்தை வளப்படுத்துவதாகும். Med7 நாடுகள் துருக்கியை விமர்சித்தன. அவர்கள்: "சைப்ரஸ் மற்றும் கிரேக்கத்திற்கான எங்கள் முழு ஆதரவையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், ஏனெனில் அவர்களின் இறையாண்மை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுகிறது மற்றும் துருக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது" என கூறினர்.

உச்சிமாநாட்டின் போது ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மக்ரோன், "இன்று துருக்கி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடந்துகொண்டிருக்கிறது" என்றும் "அதன் நோக்கங்களை தெளிவுபடுத்த வேண்டும்" என்றும் அறிவித்தார். "மத்தியதரைக்கடல் பகுதியில் துருக்கி இனி ஒரு பங்காளியாக இல்லை" என்று Med7 இன் நிலைப்பாட்டில் இருந்து அவர் மேலும் கூறினார்.

சனிக்கிழமையன்று எர்டோகன் இப்பிராந்தியத்தில் பிரான்சின் நவ-காலனித்துவ கொள்கைகளை விமர்சித்தார். அவர் பிரெஞ்சு ஜனாதிபதியை வாய்மொழியாக தாக்கினார்: "மக்ரோன், மக்ரோன், இது என்னுடன் உங்களுக்கு இருக்கும் கடைசி பிரச்சினை அல்ல. உங்களுக்கு வரலாறு தெரியாது. பிரான்சின் வரலாறு கூட உங்களுக்குத் தெரியாது. என்னை கேலிசெய்ய வேண்டாம். துருக்கியுடன் விளையாட வேண்டாம்." அல்ஜீரியாவில் 1954-1962 ல் பிரான்சின் இரத்தம் தோய்ந்த காலனித்துவ போரையும், 1994 ருவாண்டா இனப்படுகொலையில் 800,000 பேர் கொல்லப்பட்டதற்கு உடந்தையாக இருந்தமையையும் மேற்கோளிட்டு எர்டோகன் மேலும் கூறினார்: "நீங்கள் மனிதநேயத்தைப் பற்றி எங்களுக்கு விரிவுரை அளிக்க முடியாது."

பிரெஞ்சு கொள்கையை பின்பற்ற வேண்டாம் என்று எர்டோகன் கிரேக்கத்தை அறிவுறுத்தினார், "இந்த பாதைகளை எடுக்க வேண்டாம். நீங்கள் தனியாக விடப்படுவீர்கள். "நல்ல அண்டை நாடு" என்பதை கிரேக்கம் நிரூபிக்க வேண்டும் என்று அவர் சேர்த்துக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுக்கிறோம். தேவைப்பட்டால் துருக்கி எந்த போரையும் எதிர்த்துப் போராட முடியும்."

இந்த அறிக்கைகள் அனைத்தும், நேட்டோ கூட்டணியில் ஆழமான உடைவு மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் பெருகிவரும் இராணுவ பதட்டங்களுக்கு மத்தியில், போரின் அவசர மற்றும் வளர்ந்து வரும் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது.

பிரான்சானது கிரேக்கத்தை ஆயுதமயமாக்குவதும், துருக்கியுடனான வளர்ந்து வரும் பதட்டங்களும் சோவியத் ஒன்றியத்தில் 1991 ஸ்ராலினிசம் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததிலிருந்து பால்கன் மற்றும் மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக நடந்த போரின் விளைவுகளாகும். லிபியா மற்றும் சிரியாவில் 2011 நேட்டோ போர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு இலாபங்களுக்காகவும் மற்றும் வர்த்தக பாதைகளை அணுகுவதற்கானதுமான கடுமையான போராட்டமானது வெடிக்கும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கிரேக்கம், சைப்ரஸ், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஒரு கூட்டணியை பிரான்ஸ் ஒன்று திரட்டி அதன் வெளிப்படையான நேட்டோ “நட்பு நாடான” துருக்கியை தனிமைப்படுத்தி அச்சுறுத்துகிறது.

துருக்கியில் தொழிலாளர்களை இலக்கு வைக்கும் அதன் கடுமையான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையினால் (herd immunity policy) மதிப்பிழந்த எர்டோகன் ஆட்சியை பொறுத்தவரை, உள்நாட்டில் வளர்ந்து வரும் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஜனரஞ்சக, "ஏகாதிபத்திய எதிர்ப்பு" தாக்குதல் நிலைப்பாடும், அதே நேரத்தில் எண்ணெய் உரிமை கோரல்களை ஆக்ரோஷமாக முன்வைக்கிறார். எவ்வாறாயினும், இந்த தோரணை அர்த்தமற்றது: லிபியாவில் துருக்கியின் பினாமியான GNA யானது, நேட்டோவின் நவ-காலனித்துவ 2011 போரில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாகும், இவர்களைத்தான் எர்டோகன் அவரே இறுதியில் ஆதரித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கிரேக்கம் அதனுடைய இராணுவ தளவாடங்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிகரிப்பிற்கு பில்லியன் கணக்கான யூரோக்களை செலவிடப்போகிறது என்கின்ற உண்மையானது, இந்த பிற்போக்கு யுத்த அச்சுறுத்தல்களுக்கான செலவுகளை தொழிலாள வர்க்கமே செலுத்த வேண்டும். 2008ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் பல பில்லியன் கணக்கான யூரோக்களை சிக்கன நடவடிக்கைகளில் திணித்துள்ள நிலையில், உண்மையான வருமான அளவுகளை சராசரியாக 30-40 சதவிகிதம் குறைத்துள்ளது. இருந்தும்கூட, ஏதென்ஸ் ஒரு முழுமையான பிராந்திய யுத்தத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களுக்காக பில்லியன்களைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்துள்ளது.

சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் அச்சுறுத்தல்கள் மற்றும் COVID-19 தொற்றுநோய் தொடர்பான பூகோள அரசியல் பதட்டங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அத்தகைய மோதலுக்கான ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பதட்டங்கள் இப்பிராந்தியத்தில் மிகவும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன, ஏனெனில் ரஷ்ய போர்க்கப்பல்களும் விமானங்களும் சிரியாவுக்கு வெளியே இயங்குகின்றன, இது கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அருகில் ஒரு கடற்கரையையும் கொண்டுள்ளது.

சீனத் துருப்புக்கள் ரஷ்யா, ஈரான், பாக்கிஸ்தான், மியான்மர், ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகியவைகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் இணைவார்கள் என்ற வெள்ளிக்கிழமை அறிவிப்பு, இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பெரும் சக்திகளுக்கிடையிலான பதட்டங்களின் ஒரு அறிகுறியாக இருந்தது. இந்த ஒத்திகைகளில் 80,000 துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு கட்டாரில் இருந்து அமெரிக்கா திரும்பும் வழியில் பொம்பியோ, சைப்ரஸில் சனிக்கிழமையன்று சைப்ரஸ் குடியரசு ஜனாதிபதி நிகோஸ் அனஸ்டாசியாடஸ் ஐ சந்தித்தார். "கிழக்கு மத்தியதரைக்கடலில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டு, "கிழக்கு மத்தியதரைக்கடல் மீது கிரேக்கம் மற்றும் சைப்ரஸ் அதிகார எல்லை வரம்பை வலியுறுத்தும் பகுதிகளில் இயற்கை வளங்களை ஆய்வு செய்யும் துருக்கியின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

வாஷிங்டனும் பாரிசும் இப்பொழுது அப்பிராந்தியத்தில் வேறுபட்ட மற்றும் முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுகின்றன என்பதற்கான ஒரு அறிகுறியாக, பொம்பியோ நேட்டோவிற்குள் பதட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்: "இராணுவ பதட்டங்களின் அதிகரிப்பு அட்லாண்டிக் கடந்த ஒற்றுமையில் பிளவுகாண விரும்பும் விரோதிகளைத் தவிர வேறு யாருக்கும் உதவாது."

ஆனால் இது சமாதானக் கொள்கைக்கான வேண்டுகோள் அல்ல. அருகிலுள்ள சிரியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய துருப்புக்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் இருந்து வரும் நிலையில், சைப்ரஸ் ரஷ்யாவுடனான அதன் நீண்டகால உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று கோருவதற்கே பொம்பியோ அங்கு சென்றார். அவர் அனஸ்டாசியாடெஸிடம் கூறினார்: "சைப்ரஸ் துறைமுகங்களில் நிறுத்தப்படும் அனைத்து ரஷ்ய இராணுவக் கப்பல்களும் சிரியாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை நடத்துவதில்லை என்பதை நாங்கள் அறிவோம், மேலும் எங்கள் கவலைகளை பரிசீலிக்குமாறு சைப்ரஸ் மற்றும் ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்."

முக்கிய பிராந்திய மற்றும் உலக சக்திகளுக்கு இடையிலான அதிகரித்துவரும் பெரும் குழப்பங்களும் பிளவுகளும், ஒரு சோசலிச, போர்-எதிர்ப்பு இயக்கத்தில் சர்வதேச ரீதியில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Loading