ஐரோப்பாவில் கோவிட்-19 வைரஸின் மீளெழுச்சியை தடுத்துநிறுத்த ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 வைரஸின் தடையின்றி பரவும் தற்போதைய மீளெழுச்சியைத் தடுக்க ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக அணிதிரட்டுவது அவசரமானதாகவுள்ளது. இந்த வசந்த காலத்தில் விதிக்கப்பட்ட பொது முடக்க அடைத்தல்களை (lockdowns) முன்கூட்டியே நீக்கிய பின்னர், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் பொது ஒன்றுகூடல் இடங்களை முழுமையாக மீண்டும் திறக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் மேற்கொண்ட செயலானது வைரஸின் பேரழிவு தரும் மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது.

ஆரம்ப எதிர்ப்புப் போராட்டங்கள் ஏற்கனவே வெடித்திருக்கின்றன, பள்ளிகள் ஆக்கிரப்புகளுடன் கிரேக்கம் முழுவதிலும் மருத்துவர்கள், துறைமுக மற்றும் விமானத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர், இவர்களுடன் சேர்ந்து மாட்ரிட்டிலும் வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வைரஸ் எல்லைகளை பொருட்படுத்துவதில்லை மற்றும் அதற்கு கடவுச்சீட்டு தேவையில்லை, எனினும், இந்த வைரஸின் பண்பு போல, அதற்கு எதிரான நடவடிக்கையும் உள்ளூர் அல்லது தேசிய வடிவத்தில் இருக்க முடியாது. ஒரு சர்வதேச பொது வேலைநிறுத்தத்தில் ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டினால் மட்டுமே, ஐரோப்பிய ஒன்றியம் (EU) தொடங்கிய பள்ளிக்கு மீண்டும் செல்லுதல் மற்றும் வேலைக்கு மீண்டும் திரும்புதல் உந்துதல்களை நிறுத்தவும், சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்த பொது முடக்க அடைத்தல்களை கொண்டுவரவும் மற்றும் ஒரு கொடூரமான உயிர் இழப்புகளைத் தடுக்கவும் முடியும்.

ஏற்கனவே ஜூலை மாதம் உணரக்கூடியதாக இருந்த வைரஸின் மீளெழுச்சி இப்போது முழு வீச்சில் உள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில், ஒவ்வொரு நாளும் COVID-19 இனால் பாதிக்கப்பட்ட 10,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர், வசந்த காலத்தில் பெருந்தொற்று நோயின் உச்சத்தில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்களை இது விஞ்சிவிட்டது - செக் குடியரசிலுள்ளதைப் போல. இந்தப் பெருந்தொற்று நோய் அதிகரித்து வரும் துருக்கியில், மே மாதத் தொடக்கத்திலிருந்து முதல் முறையாக 70 பேர் தினசரி இறக்கின்றனர். ஒவ்வொரு முக்கிய ஐரோப்பிய நாட்டிலும், நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த அளவு கொரோனா வைரஸ் பரவுவது ஒரு பாரிய உயிர் இழப்பை அச்சுறுத்தும் என்பதை அரச அதிகாரிகள் நன்கு அறிவர். ஒவ்வொரு வாரமும் தொற்றுநோய் இருமடங்காகி உள்ளது என்றும், அக்டோபர் நடுப் பகுதியில் பிரிட்டனில் ஒரு நாளைக்கு 50,000 தொற்றுக்கள் இருக்கும் என்றும் திங்களன்று பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 50,000 மக்களும் உள்வளர்ச்சி காலத்தை (incubation period) கடந்து சென்ற பின்னர், வாரங்கள் கடந்து பின், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கத் தொடங்குவார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுக்கு உட்படுவார்கள், பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு முக்கிய ஐரோப்பிய நாட்டிலும் இறந்துவிடுவார்கள், இது ஒரு உடனடியான ஆபத்தாக இருக்கிறது. ஐரோப்பாவில் ஏற்கனவே COVID-19 வைரஸினால் 218,000 க்கும் அதிகமான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன. மார்ச் 18 ம் தேதி ஜேர்மனிய உள்துறை அமைச்சரகத்தின் அறிக்கை ஒன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது, அதில் பெரும்பாலான விஞ்ஞானிகளிடம், எதுவும் செய்யப்படாவிட்டால் என்ன நடக்கும் என்று கேட்கப்பட்டபோது, “2020 ல் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஜேர்மனியில் மட்டும் உயிரிழக்கும் ஒரு படுமோசமான எதிர்காலச் சூழ்நிலை சாத்தியமாகும்” என்பது பதிலாக இருந்தது.

கடந்த வாரம் ஐரோப்பாவில் 300,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்ட போது, உலக சுகாதார அமைப்பானது (WHO) செப்டம்பர் 17 அன்று ஐரோப்பிய நாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தன. ஆயினும்கூட, ஐரோப்பிய அரசுகள் அதை ஒதுக்கித்தள்ளி இருக்கிறது. மாறாக, பிரான்ஸ் "வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறிய பிரான்சின் வங்கியாளரும் ஜனாதிபதியுமான இமானுவல் மக்ரோனை அவர்கள் பின்பற்றுகிறார்கள். மாட்ரிட் மற்றும் வடக்கு இங்கிலாந்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறுக்கப்பட்ட உள்ளூர் "கட்டுப்பாடு" நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற தொழிற்துறையில் அல்லது பள்ளிகளில் நேரில் சென்று கற்றல் செய்யும் வேலையை நிறுத்தாது. இந்த நடவடிக்கைகள், பின்னிரவு நேரத்தில் பூங்காக்களிலும் மதுவகங்ளிலும் தொழிலாளர்கள் நுழைவை மட்டுப்படுத்தும், சமூக இடைவெளியையோ அல்லது குறிப்பிடத்தக்க அளவில் மெதுவான தொற்றுக்களையோ ஏற்படுத்தும் நிலையையோ அடையப்போவதில்லை.

இதற்கு மாறாக, ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுவர மறுக்கும் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்தோடு தொழிலாளர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும் அல்லது வீட்டில் தங்க குறைந்த நாட்களைத்தான் செலவழிக்க முடியும்.

COVID-19 க்கு எதிராக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சர்வதேச அரசியல் போராட்டமும் மற்றும் நிதியப் பிரபுவத்தால் வேண்டுமென்றே பின்பற்றப்படும் ஒரு பாரிய மரணங்களை விளைவிக்கும் கொள்கையுமாகும். ஐரோப்பிய அதிகாரிகள் COVID-19 வைரஸைப் பரப்பும் ஒரு கொள்கையைக் கோரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். மார்ச் மாதம், இங்கிலாந்து தலைமை விஞ்ஞான ஆலோசகர் சேர் பாட்ரிக் வலன்ஸ், "எல்லோரும் அதனால் பாதிக்கப்படுவதை நிறுத்த முடியாது, எதிர்காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் தொகையில் சில நோயெதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது, அது விரும்பத்தக்கதல்ல", என்றார்.

கிரேக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் தொடருவதில் இழிபுகழ் பெற்றவரான ஜேர்மனிய பாராளுமன்றத்தின் ஜனாதிபதி வொல்ஃப்காங் சொய்பிள (Wolfgang Schäuble) ஆல் மரணத்திற்குள்ளாவதற்கான நிலைமை அப்பட்டமாக கொண்டுவரப்பட்டது. வேலைக்கு மீண்டும் திரும்புவதற்காக ஏப்ரல் மாதம் வாதிட்ட அவர், பொது முடக்க அடைப்புகளை "பயங்கரமான விளைவுகளாக" கண்டித்தார்: அதாவது நமது அரசியல் சட்டத்தில் ஒரு முழுமையான மதிப்பு இருந்தால், அது மனித கெளரவம். இது புனிதமானது. ஆனால் அது நம்மை சாக வேண்டியதிலிருந்து விலக்கி வைக்கவில்லை.”

அவரது அரசாங்கம் COVID-19 க்கு எதிராக இன்னும் விரைவாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: "உண்மை என்னவென்றால், அது மிகவும் மோசமாக இருக்காது என்று நாம் அனைவரும் நம்புகிறோம்." ஆனால் இது ஒரு பொய். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜேர்மனியில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்கள் ஏற்படும் என்று ஒரு மாதத்திற்கு முன்னர்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

COVID-19 பெருந்தொற்றுநோய் ஒரு தூண்டுதல் நிகழ்வாகும், இது சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிஸ்டுக்கள் முதலாளித்துவத்தை மீட்டெடுத்து சோவியத் ஒன்றியத்தை கலைத்த பின்னர் 1992 இல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றியமானது வங்கிகளின் மிருகத்தனமான சர்வாதிகாரமாகும். ஆக்கிரமிப்பு வணிக மற்றும் இராணுவக் கொள்கையுடன் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் பூகோள செல்வாக்கை பலப்படுத்துவதற்காக கட்டப்பட்ட இது, தொழிலாள வர்க்கத்துடன் ஈவிரக்கமின்றி நடந்ததோடு, முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சந்தை உறவுகளை சுமத்தியதுடன், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இடைவிடாமல் குறைத்தது.

ஒரு பெருந்தொற்று நோயின் பெரும் பரவலுக்கான ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் ஆதரவானது ஓய்வு பெற்றவர்களிடையே குறிப்பாக ஆபத்தாகவுள்ளமையும் ஓய்வூதிய செலவினங்களைக் வெட்டுவதற்கான அவர்களுடைய தசாப்த கால தாக்குதலிருந்தும் இது பிரிக்கப்பட முடியாது. லண்டனிலுள்ள XPS என்ற ஓய்வூதிய ஆலோசனை குழு ஜூலை அறிக்கையில், ஓய்வூதிய திட்டங்களை நடத்தும் நிதி நிறுவனங்கள் "COVID-19 எவ்வாறு தங்கள் திட்டத்தை பாதிக்கும் என்பது பற்றிய தகவல்களுக்கு ஆர்வத்துடன்" உள்ளன என்று குறிப்பிட்டது. COVID-19 "ஓய்வூதிய திட்ட பொறுப்புகளை 90 பில்லியன் பவுண்டுகள் வரை குறைக்கக்கூடும்" என்று XPS அறிக்கையானது கண்டறிந்தது.

COVID-19 இன் நிதிய இறைதூதர்கள் எவ்வாறு ஓய்வுபெறுபவர்களைக் கொல்லுமென்பதையும், இதனால் ஓய்வூதியச் செலவுகளைக் எவ்வாறு கடுமையாகக் குறைக்கும் என்பதையும் ஐயத்திற்கிடமின்றி ஐரோப்பா முழுவதிலுமுள்ள வங்கியாளர்களும் நிதி அமைச்சக அதிகாரிகளும் கணக்கிடுகின்றனர். விஞ்ஞானிகள் "சமூக நோயெதிர்ப்பு பெருக்க" சக்தி (“herd immunity”) மக்கள் தொகையில் 60 -70 சதவீதம் குறைந்து COVID-19 வைரஸிற்கு நோயெதிர்ப்பு ஆக வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளனர். "சராசரி ஆயுட்காலம் மீது COVID-19 இன் சாத்தியமான தாக்கத்தின் மதிப்பீடு," என்ற தலைப்பில் ஒரு விஞ்ஞான ஆய்வானது, 70 சதவிகித ஐரோப்பியர்கள் COVID-19 வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானால், சராசரி ஆயுட்காலம் பாரிய அளவில் குறையும் என்று கணக்கிட்டுள்ளது, சுமார் 6.5 ஆண்டுகள் ஆகலாம், ஆனால் 10.9 ஆண்டுகள் வரை சாத்தியமாகும்.

ஐரோப்பா முழுவதும் இத்தகைய ஆயுள்காலத்தில் வீழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை, நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிரில்லியன்-யூரோ பெருநிறுவன பிணையெடுப்புக்கள் மற்றும் இராணுவச்செலவு அதிகரிப்புகளுக்கு நிதியளிப்பதற்கு வங்கிகள் திருப்பிவிட அனுமதிக்கும். ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) வாஷிங்டனிடமிருந்து ஒரு சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கிறது. இந்த உந்துதல்கள் பத்திரிகைகளில் விவாதிக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதம் மீண்டும் வேலைக்குத் திரும்புதல் கொள்கை தொடர்பாக "பூகோள அரசியல் நலன்களை" பற்றி, Der Spiegel எழுதுகிறது: அதாவது "பெருநிறுவன நிறைவேற்று அதிகாரிகள் சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார சக்திக்கு ஒரு எதிர் எடையாக செயற்பட ஐரோப்பிய சந்தையை வலுப்படுத்த விரும்புகின்றனர்."

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களுக்கும் அடிப்படை சமூக உரிமைகளுக்கும் எதிரான புதுப்பிக்கப்பட்ட ஒரு கடுந்தாக்குதலுக்கு இது உட்படுத்துகிறது. மில்லியன் கணக்கான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர், ஐரோப்பா முழுவதிலுமுள்ள மில்லியன் கணக்கான வேலையற்ற அல்லது போதியளவு வேலையில்லாத தொழிலாளர்களுக்கு வேலையின்மைக்கான சலுகைகள் குறைக்கப்படுகின்றன, மேலும் பெருந்தொற்று நோயைப் பின்தொடர்ந்து முதலாளித்துவ நெருக்கடியின் போது 59 மில்லியன்கள் வரை ஐரோப்பிய ஒன்றிய (EU) வேலைகளை வங்கிகள் அழிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

சர்வதேச அளவில், சமூக சமத்துவமின்மையானது ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் இணக்கமற்ற மட்டங்களை அடைந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் பதவி விலகப்போவதில்லை என்று அறிவித்து, தேர்தலை ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியாக மாற்றுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவமானது இறுதி ஆய்வில் ட்ரம்பை விட குறைந்த பாசிச ஆட்சியாக இருக்கவில்லை. பொது நிதிகளில் டிரில்லியன் கணக்கான யூரோக்களை நிதியச் சந்தைகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் கொடுத்துவரும் அதே நேரத்தில், பாரிய தொற்றையும் மற்றும் வேலையின்மை மட்டங்களையும் தயாரித்துக் கொண்டிருப்பது என்பது ஒரு எதேச்சாதிகார ஆட்சியை மட்டுமே தொழிலாளர்கள் மீது திணிக்க அது முயற்சி செய்யமுடியும்.

தொழிலாள வர்க்கமானது ஆளும் உயரடுக்கின் குற்றவியல் கொள்கைகளை நிறுத்த முடியும். இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள முக்கிய கார், இயந்திர மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளில் தன்னெழுச்சியான வேலைநிறுத்தங்களின் அலைதான் இந்த வசந்த காலத்தில் தொடக்க நிலை பொது முடக்க அடைப்புகளை ஏற்படுத்தியது.

ஆயினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அதனுடன் கூட்டிணைந்த "இடது ஜனரஞ்சகவாத" கட்சிகளிலிருந்து சுயாதீனமான ஒரு நனவான அரசியல் போராட்டமாக இந்தப் போராட்டம் சர்வதேச அடிப்படையில் மட்டும்தான் முன்னெடுக்கமுடியும். இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே சுயாதீனமான பணியிட பாதுகாப்பு குழுக்களை ஒழுங்கமைப்பதன் அவசியமும் மற்றும் COVID-19 க்கு எதிரான போராட்டமானது ஒரு பகுத்தறிவான, விஞ்ஞான ரீதியான நிர்ப்பந்தத்தையும் எழுச்சி பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் எழுப்புகின்றன. இந்தக் கொள்கையானது ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தமுடியாது, ஆனால் பொது வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்கும் போராட்டத்தின் மூலம் மட்டுமே இந்த அரசாங்கங்களை தூக்கியெறிவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு முன்னேற முடியும்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அவைகளின் அரசியல் கூட்டாளிகளும் பள்ளிக்கு மீண்டும் செல்லுதல் மற்றும் பணிக்கு மீண்டும் திரும்புதல் கொள்கைகளில் முழுமையாக உடந்தையாக உள்ளனர், அவைகள் சில சிறிய தந்திரோபாய விமர்சனங்களை எழுப்பி அவற்றை செயல்படுத்த உதவுகின்றன. ஜேர்மனிய தொழிற்சங்க கூட்டமைப்பும் (DGB) பிரான்சின் பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பேர்லின் மற்றும் பாரிஸ் உடன்பட்ட சமீபத்திய 750 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிணையெடுப்பு ஆதரவு அறிக்கையில் வெளிப்படையாக கையெழுத்திட்டன. ஸ்பானிய தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சமூக நோயெதிர்ப்பு பெருக்க கொள்கைக்கு (herd immunity policy) எந்த எதிர்ப்பு அணிதிரட்டலையும் செய்யவில்லை; அவைகளின் கூட்டாளியான "இடது ஜனரஞ்சகவாத" பொடேமோஸ் (Podemos) கட்சி அரசாங்கத்தில் இதைச் செயற்படுத்த உதவி வருகிறது.

எந்த குறைத்துமதிப்பிடல் போக்கும் இருக்கக் கூடாது: ஐரோப்பிய ஒன்றிய (EU) கொள்கைக்கான தொழிற்சங்கங்கள் மற்றும் "இடது ஜனரஞ்சகவாத" கட்சிகளின் ஆதரவானது, "சமூக நோயெதிர்ப்பு பெருக்க" சக்தி (“herd immunity”) பாதுகாப்பானது என்பதைக் காட்டவில்லை, மாறாக வங்கிகளின் குட்டி-முதலாளித்துவ கருவிகளான அவைகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுகின்றன. பெருநிறுவன முகாமைத்துவம் (corporate management) மற்றும் தொழில் சபை அலுவலகங்களின் (works council offices) ஊடாக பில்லியன் கணக்கான பிணையெடுப்பு ஊதியங்களில் வெட்டவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) எச்சரிக்கைகளை நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்துவிட்டன. ஐரோப்பாவில் பொது முடக்க அடைப்புக்கள் ஏற்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது (ICFI) பெருந்தொற்று நோய்க்கு உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரநிலை விடையிறுப்புக்கு அழைப்பு விடுத்தது. பேர்லின், லண்டன், பாரிஸ் மற்றும் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள அரசாங்கங்களின் பிற்போக்குத்தனமான திட்டங்களை அம்பலப்படுத்தியது. அது ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் கார்த் தொழிலாளர்களில் முக்கிய பிரிவுகளுடன் இணைந்து சுயாதீனமான பணியிட பாதுகாப்பு குழுக்களை நிறுவியது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஐரோப்பிய பிரிவுகளும் துருக்கியிலுள்ள அதன் ஆதரவுக் குழுவும் வேலைக்கு மீண்டும் திரும்பும் மற்றும் பள்ளிக்கு மீண்டும் செல்லும் கொலைகார கொள்கைகளுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அவை விடுத்த அழைப்புக்களை மீண்டும் வலியுறுத்துகின்றன. ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் பெருகிய அணிதிரள்வு மற்றும் அரசியல் தீவிரமயப்படலானது எதிர்கொள்ளும் இப்போதைய பணி, பல ஆண்டுகளாக பிணையெடுப்புகளின் மூலம் அப்பட்டமாக ஆளும் வர்க்கத்தால் திருடப்பட்ட வளங்களை கைப்பற்றுவதும், ஐரோப்பிய ஒன்றிய (EU) அரசாங்கங்களை தூக்கியெவதும், முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்றுவதும் மற்றும் பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றியத்தை, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தால் பதிலீடு செய்வதுமாகும்.

Loading