சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் கிரீஸ் எங்கிலுமாக பரவுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிரேக்கத்தில், மாணவர்களின் உயர்நிலைப் பள்ளி ஆக்கிரமிப்புக்களும் மற்றும் மருத்துவர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் நடந்து வரும் நிலையில், வியாழக்கிழமை அந்நாட்டின் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அரசாங்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கைக்கு எதிரான போராட்டங்களில் அணிவகுத்துச் சென்றனர். பல தசாப்தங்களாக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளால் பேரழிவிற்குள்ளான ஏதென்ஸ் மருத்துவமனைகள், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட 70 நோயாளிகள் உட்பட, குறைந்தபட்சமாக 17 வயதினர் வரையிலுமான 580 கோவிட்-19 நோயாளிகளுடன் தாமே அழிவுக்குள்ளாகியுள்ளன.

சர்வதேச ஊடகங்களின் ஒட்டுமொத்த இருட்டடிப்புக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் மற்றும் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளும், பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் (Kyriakos Mitsotakis) வலதுசாரி புதிய ஜனநாயக அரசாங்கத்தின் (New Democracy-ND) தலைமையில் ஏற்கபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இந்த மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் கொள்கை, தொழிற்சங்கங்கள் அல்லது பிரதான முதலாளித்துவ எதிர்க்கட்சியான சிக்கன-சார்பு சிரிசா கட்சி (“தீவிர இடதுகளின் கூட்டணி”) ஆகியவற்றின் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24, 2020 வியாழக்கிழமை ஏதென்ஸில் சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே அரசு மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய 24 மணி நேர தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் மருத்துவர்களும் பங்கேற்கின்றனர் (AP Photo / Thanassis Stavrakis)

மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது தொடர்பான ND அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. கடந்த வாரம் தொடங்கியதான பள்ளிகளை ஆக்கிரமிக்கும் இயக்கத்தில் திங்களன்று டசின் கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் இணைந்து கொண்டன, மேலும் செவ்வாய்க்கிழமைக்குள் 100 பள்ளிகள் வரை ஆக்கிரமிக்கப்பட்டன. கிரீஸ் முழுவதுமாக, முக்கியமாக ஏதென்ஸ், தெசலோகினி, கிரீட், அச்சாயா மற்றும் மெக்னீசியாவைச் சுற்றியுள்ள அட்டிக்கா பகுதியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நேற்று, Kathimerini தெரிவித்தது.

சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாத, மற்றும் வைரஸ் நோய்தொற்று பரவுவதை உறுதியாக்கும் மோசமான காற்றோட்ட வசதியுள்ள வகுப்பறைகளில் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையுடன் வகுப்புக்கள் நடத்தப்படுவது போன்ற நிலைமைகள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளில், வகுப்புக்களின் அளவை 15 ஆக கட்டுப்படுத்துவது, வகுப்புக்களின் குறைந்த எண்ணிக்கை வரம்பை பேணும் வகையில் நிரந்தர ஒப்பந்தங்களின் பேரில் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்களையும், அத்துடன் கூடுதல் துப்புரவுப் பணியாளர்களையும் வாடகைக்கு பணியமர்த்துவது ஆகியவை அடங்கும்.

தொழிலாளர்களின் பிரிவுகள் ஒற்றுமையுடன் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன, அதே நேரத்தில் ஊதிய உயர்வுக்கும் ஒப்பந்த திருத்தங்களுக்கும் கோரிக்கை விடுக்கின்றன. வியாழக்கிழமை, ஏதென்ஸூக்கு அருகிலுள்ள பைரஸ் துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு வேலைநிறுத்தம், வணிகக் கப்பல்கள் மற்றும் படகுகள் இரண்டும் உட்பட அனைத்து போக்குவரத்தையும் 24 மணி நேரத்திற்கு முடக்கியது. திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை ஏதென்ஸ் மற்றும் பல்வேறு கிரேக்க தீவுகளுக்கு இடையிலான 58 உள்நாட்டு விமான போக்குவரத்துக்களை இரத்து செய்யும்படி Olympic Air நிறுவனம் வேலைநிறுத்த நடவடிக்கையால் கட்டாயப்படுத்தப்பட்டது.

சமூக நோயெதிர்ப்பு சக்திக் கொள்கைகள் மற்றும் பிரான்சுடன் கூட்டு சேர்ந்து துருக்கிக்கு எதிரான இராணுவ கட்டமைப்பில் மிட்சோடாகிஸ் அரசாங்கம் ஈடுபட்டு வருவது இரண்டையும் விமர்சிக்கும் மாணவர்களுடன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து கொண்டு கிரேக்கத்தின் இரண்டு பெரிய நகரங்களான ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகியில் அணிவகுப்பு நடத்தினர்.

ஏதென்ஸில் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், மிட்சோடாகிஸ் வந்திருந்தால் அவருடன் அவர்கள் எப்படிப் பேசுவார்கள் என்று கிரீஸின் Press Project ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தனர்: “நாங்கள் பள்ளிகளை மூடச் செய்கிறோம் என்று எங்களிடம் நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் உங்களது கொள்கையோ அவற்றை சுகாதார குண்டுகளாக மாற்றிவிட்டன என்பதுடன், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக பள்ளிகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடுவதற்கு அது வழிவகுக்கும்! நாங்கள் சொல்வது சரிதான் என்று நீங்கள் கூறுகிறீர்கள், என்றாலும் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு எங்களது உரிமைகளை விட்டுவிட வேண்டும் என்கிறீர்கள். நாங்கள் பின்வாங்கினால் எங்களது கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று எங்களுக்கு உறுதியளிக்கும் துணிவு உங்களிடம் உள்ளதா, அதே நேரத்தில் பள்ளிகளை பாதுகாக்க நாங்கள் கோரினால், நாங்கள் அதிகமாக கேட்கிறோம் என்று கூறி, எதையும் தீர்க்க முடியாது என்றும் கூறுகிறீர்கள்.”

18 வயதில் தொடங்கும் இராணுவ சேவையை மேலும் 10 மாதங்கள் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்தும், துருக்கியை குறிவைத்து பாரிஸ் மற்றும் ஏதென்ஸூக்கு இடையில் சமீபத்தில் எட்டப்பட்ட பாரிய ஆயுத ஒப்பந்தம் குறித்தும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஏதென்ஸ் பகுதியில் மாணவர் போராட்டங்களையும் பள்ளி ஆக்கிரமிப்புக்களையும் மேற்பார்வையிடும் ஒரு குடை அமைப்பான, ஏதென்ஸ் மாணவர்களின் ஒருங்கிணைப்புக் குழு (Coordination Committee of Athens Students), மிட்சோடாகிஸ் அரசாங்கத்தின் இராணுவவாத வரவு -செலவுத் திட்டத்தை விமர்சிக்கும் ஒரு அறிக்கையில் இந்த உணர்வை எதிரொலித்தது. அது “இந்த ஆண்டு பிரான்சிலிருந்து 16 ரஃபேல் போர் விமானங்களை அண்ணளவாக 4 பில்லியன் யூரோ செலவில் வாங்கப்போவதாக ND அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், ஒரு வகுப்பறைக்கான மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க தேவைப்படும் குறைந்த எண்ணிக்கை ஆசிரியர்களை பணியமர்த்துவதற்குக் கூட பணம் இல்லை என்று எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” என்பதாகும்.

துருக்கிக்கு எதிரான ஒரு சகோதரத்துவப் போருக்கு தயாரிப்பு செய்ய பிரெஞ்சு ஆயுதங்களின் கொள்முதலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையான 4 பில்லியன் யூரோ என்பது, வகுப்பின் அளவு வரம்பை 15 ஆக பராமரிக்க தேவைப்படும் 300,000 ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு போதுமானதாக இருக்கும் என பல மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிச கட்சியுடன் (Stalinist Greek Communist Party-KKE) இணைந்த, கிரேக்க கம்யூனிஸ்ட் இளைஞர்கள் (Greek Communist Youth-KNE), சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அதிகாரிகளும், ஆக்கிரமிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை முற்றுகையிட முயற்சிக்கிறார்கள் என்பதுடன், தொற்றுநோயின் போது பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் மறுக்கின்றனர் என்று கூறி, அவர்களை “‘முகக்கவச எதிர்ப்பாளர்கள்’ போன்ற அபவாத எதிர்ப்பாளர்கள்” என்றழைத்ததாகவும் கூறினர். மேலும், ஒரே வகுப்பறைக்குள்ளாக நீண்ட நேரத்தைச் செலவிடும் மாணவர்களிடையே வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்கள் அணிவது மட்டும் போதுமானதாக இருக்காது என்று மாணவர்கள் சாதாரணமாக சுட்டிக்காட்டுவதாக KNE தெரிவித்தது.

வியாழக்கிழமை, மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு மேலதிகமாக, கிரேக்க மருத்துவமனை மருத்துவர்கள், கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தவும், நோய்தொற்றை எதிர்த்துப் போராட விஞ்ஞான அணுகுமுறையை நாடவும் கோரிக்கை விடுத்து ஏதென்ஸில் சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். “நாங்கள் இங்கே நிற்பதற்கு காரணம் தேசிய சுகாதார அமைப்புமுறைக்கு உதவ அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே,” என்று கிரீஸின் Press Project ஊடகத்திற்குத் தெரிவித்தனர். மேலும், “வேலைப்பளு தீவிரமடைவதாலும், எங்களது சோர்வினாலும் நமது நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதாவது மருத்துவமனைகளில் நிரந்தர ஊழியர்கள் உடனடியாக அதிகளவில் பணியமர்த்தப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.

மருத்துவர்கள், தற்காலிக செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது குறித்து தங்களது எதிர்ப்பை வலியுறுத்தியதுடன், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உடனடியாக, நிபந்தனைகள் எதுவுமில்லாத நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரினர். மேலும், புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கும் ஒரு மருத்துவர் மற்றும் நான்கு செவிலியர்கள் வீதம் பணியாளர்களை வாடகைக்கு பணியமர்த்துவதற்கும் அழைப்பு விடுத்தனர்.

“நாங்கள் இங்கே நிற்கிறோம் என்றால் அதற்கு காரணம், முந்தைய காலங்களைப் போலவே அரசாங்கம் அதன் கொள்கை எதுவாக இருந்தாலும், விஞ்ஞானிகள் பரிந்துரைப்பர் என்றாலும் அரசாங்கம் தான் சட்டமியற்றும் என்கிறது,” என்று மருத்துவர்கள் Press Project க்கு தெரிவித்தனர். கிரேக்கத்தில் கோவிட்-19 மறுவெடிப்புக் கண்டதால் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, “உணவுவிடுதிகள் மற்றும் சுற்றுலாத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எழுதப்பட்ட சுகாதார நெறிமுறைகளை அவர்கள் கண்டித்தனர்… மேலும், சந்தையின் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்கு விஞ்ஞானத்தை அடிபணிய வைக்கும் கொள்கையின் முடிவையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் கூறினர்.

கிரேக்க அதிகாரிகள் போராட்டங்களை புறக்கணிக்கவும், ஐரோப்பிய ஒன்றிய சமூக நோயெதிர்ப்பு சக்திக் கொள்கைகளை தொடரவும் நோக்கம் கொண்டுள்ளதை தெளிவுபடுத்தியுள்ளனர். வியாழக்கிழமை 342 நோய்தொற்றுக்களும் ஒன்பது இறப்புக்களும் பதிவாகியிருந்தாலும் கூட, வளர்ச்சி மற்றும் முதலீட்டு அமைச்சர் (Development and Investment Minister) அடோனிஸ் ஜியார்ஜியாடிஸ் (Adonis Georgiadis) வைரஸ் நோய்தொற்று பரவலைத் தடுக்க எந்தவிதமான அடைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறினார். “நாளையோ அல்லது நாளை மறுநாளோ அடைப்பு இருக்காது,” என்றும், “அதைத் தவிர்க்க நாங்கள் போராடுகிறோம். இது கடைசி உதவியாகும். தொற்றுநோய் தொடர்பான ஆலோசனைக் குழு இங்கு ஆட்சி செய்யவில்லை, மாறாக அரசாங்கமே ஆட்சி செய்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று கோரி நேற்று தொலைக்காட்சியில் முறையிட்ட ஜியார்ஜியாடிஸின் கருத்துக்களை மிட்சோடாகிஸ் அப்படியே எதிரொலித்தார். “சுய பாதுகாப்பு மற்றும் அடைப்பு” ஏதோவொன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். மேலும், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்காக என்பதைக் காட்டிலும், வங்கிகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் மட்டுமாக பில்லியன் கணக்கிலான யூரோக்களை பிணையெடுப்பு நிதியாக வழங்குவதற்கான அவரது திட்டங்களை அடிப்படையாக வைத்து “அடைப்பு என்பது மூடப்பட்ட வணிகங்களையும் வேலையின்மையையும் குறிப்பதாகும்,” என்றும் அவர் கூறினார்.

சிரிசாவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான அலெக்சிஸ் சிப்ராஸை பொறுத்தவரை, “தங்களையும் நாட்டையும் கொண்டு நிறுத்தியுள்ள கடினமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அரசாங்கத்திற்கும் திரு மிட்சோடாகிஸூக்கும் எந்தவித வாய்ப்பையும்” சிரிசா வழங்கக்கூடாது என்று அவர் கூறினார்.

உண்மையில், கிரேக்கத்தில் தற்போது கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் நெருக்கடிக்கு சிப்ராஸ் தாமே முக்கிய அரசியல் பொறுப்பேற்கிறார். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதிகளை வழங்கியதன் அடிப்படையில் 2015 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் இந்த வாக்குறுதிகளை காட்டிக் கொடுத்ததுடன், கோவிட்-19 ஆல் தற்போது அச்சுறுத்தலுக்குள்ளான கிரேக்க மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களை பேரழிவிற்கு உட்படுத்திய சமூக வெட்டுக்களுக்காக செலவிட பல பில்லியன் யூரோ திட்டங்களை அமல்படுத்தினார். சிரிசாவும் மற்றும் KKE இல் உள்ள அதன் கூட்டணிகளும் மற்றும் கிரேக்க தொழிற்சங்க அதிகாரத்துவமும், தற்போதைய பேரழிவில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன.

கிரேக்க இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்குமான மாற்று என்பது ஐரோப்பிய மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதாகும். நிதியப் பிரபுத்துவத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கை குறித்து ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் வெடிக்கும் கோபம் பெருகி வருகிறது, மேலும் ஏற்கனவே மாட்ரிட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

தொழிலாள வர்க்கம் தற்போது எதிர்கொள்ளும் அரசியல் பணி என்னவென்றால், வைரஸை எதிர்த்துப் போராட தேவையான வழிவகைகளை கட்டுப்படுத்துவதான சமூக நோயெதிர்ப்பு சக்திக் கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பா எங்கிலுமான பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வதும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான பொதுவான போராட்டத்தின் பாகமாக ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்க எதிர்ப்பு அரசாங்கங்களை வீழ்த்துவதுமாகும்.

மேலதிக வாசிப்புக்களுக்கு:

பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்த்து கிரீஸ் எங்கிலுமுள்ள பள்ளிகளை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்

[23 September 2020]

Loading