ட்ரொட்ஸ்கியின் இறுதி ஆண்டு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது ஒரு கட்டுரை தொடரின் முதல் மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. ஏனைய பகுதிகள் விரைவில் வெளிவரும்.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1940 ஆகஸ்ட் 20 அன்று, நாடுகடத்தப்பட்டு வாழ்ந்துவந்த 1917 அக்டோபர் புரட்சியின் இணைத் தலைவரும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தின் இரகசிய காவல்துறை ஜி.பீ.யு. (GPU) இன் ஒரு முகவரால் மரணம் விளைவிக்கும் தாக்குதலுக்குட்பட்டு, 26 மணித்தியாலங்களின் பின் 1940 ஆகஸ்டு 21ம் திகதி முன்மாலைப் பொழுதில், மெக்சிக்கோ நகர மருத்துவமனையில் அந்த புரட்சிகரத் தலைவர் மரணித்தார்.

ட்ரொட்ஸ்கியின் கொலையானது, எதிர்ப்புரட்சிகர துரோகம், காட்டிக்கொடுப்பு மற்றும் எண்ணிலடங்கா குற்றங்களுக்காக வரலாறு முழுவதும் நிலைத்துநிற்கும் ஸ்ராலினின் தலைமையிலான சர்வாதிபத்திய அதிகாரத்துவ ஆட்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பாரிய அரசியல் சதியின் விளைபொருளாக இருந்தது. போல்ஷிவிக் புரட்சிக்கு தயாரிப்பு செய்ததிலும் மற்றும் தலைமை வகித்ததிலும் அத்துடன் வரலாற்றின் முதல் தொழிலாளர்’ அரசை ஸ்தாபித்ததிலும் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்திருந்த மார்க்சிச புரட்சியாளர்கள் மற்றும் முன்னேறிய சோசலிசத் தொழிலாளர்களது ஒரு ஒட்டுமொத்த தலைமுறையை உருத்தெரியாமல் அழிக்கும் நோக்கத்துடன் கிரெம்ளினால் உத்தரவிடப்பட்ட அரசியல் படுகொலைப் பிரச்சாரத்தின் உச்சகட்டமாக ட்ரொட்ஸ்கியின் படுகொலை அமைந்திருந்தது. அக்டோபர் புரட்சியின் கிட்டத்தட்ட அத்தனை பிரதான தலைவர்களையும் கொலை செய்வதற்கான போலி-சட்டபூர்வ மறைப்பை வழங்கிய நீதித்துறை ரீதியான ஜோடிப்புகளாக இருந்த1936க்கும் 1938க்கும் இடையில் மாஸ்கோவில் நடைபெற்ற மூன்று கண்துடைப்பு விசாரணைகள், நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டதும் சோவியத் ஒன்றியத்தின் புத்திஜீவித மற்றும் கலாச்சார அபிவிருத்திக்கும் சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்திற்கும் ஒரு நிலைகுலையச் செய்கின்ற அடியைக் கொடுத்ததுமான பயங்கரவாத பிரச்சாரத்தினது பகிரங்கமான ஒரு வெளிப்பாடாக மட்டுமே இருந்தன.

லியோன் ட்ரொட்ஸ்கி, மெக்சிக்கோவின் கோயோகானில் உள்ள அவரது வீட்டின் தோட்டத்தில் (Image Credit: AP Images)

நாடுகடத்தப்பட்டு, சோவியத் ஒன்றிய குடியுரிமை பறிக்கப்பட்டு, “விசா இல்லாத ஒரு பூகோளத்தில்” வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், வழமையான அதிகாரத்திற்கான இயல்புத்தன்மையான எந்த அணுகலும் இன்றி, பேனா என்ற ஆயுதத்தை மட்டுமே ஏந்தி, உலகெங்கிலும் துன்புறுத்தலுக்கு இலக்காகியிருந்த ஒரு சிறு எண்ணிக்கையிலான தோழர்களது ஆதரவைச் சார்ந்திருந்தவராக இருந்த ட்ரொட்ஸ்கியைக் காட்டிலும் உலகில் அதிகாரத்திலிருந்த சக்திகள் மிகவும் அஞ்சி நடுங்கிய வேறொரு மனிதரும் இருக்கவில்லை. முதலாளித்துவ நாடுகளில் மட்டுமன்றி, சோவியத் ஒன்றியத்திலும் விட்டுக்கொடுக்காத எதிர்க்கட்சியாக இருந்த நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரும் தலைவருமான ட்ரொட்ஸ்கி அவரது சமகாலத்தவர் வேறெவரையும் விட அதிகமான அரசியல் மற்றும் புத்திஜீவித ஆதிக்கத்தை செலுத்தியவராய் இருந்தார். அச்சமகாலத்தவர்கள் அனைவரிலும் உச்சத்தில் அவர் இருந்தார். கரீபிய சோசலிச புத்திஜீவியும் வரலாற்றாசிரியருமான C.L.R. ஜேம்ஸ் “வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் இடம்” என்ற அவரது ஒரு கட்டுரையில், பின்வருமாறு எழுதினார்:

அவரது இறுதி தசாப்த காலத்தில், ட்ரொட்ஸ்கி ஒரு நாடுகடந்து வாழ்ந்தவராக, வெளிப்படையாக அதிகாரமற்றவராக இருந்தார். அதே பத்தாண்டுகளின் போது, அவரது எதிரியான ஸ்ராலின், ஐரோப்பாவில் நெப்போலியனுக்குப் பின்னர் வேறெவரொருவரும் கொண்டிராத அளவுக்கு அதிகாரத்தை கொண்டவராயிருந்தார். ஹிட்லர் உலகை உலுக்கியதுடன், அவர் இருந்தவரை ஒரு பெருமனிதனைப்போல் ஆதிக்கம் செலுத்துவதாக உறுதியளித்திருந்தார். ரூஸ்வெல்ட், உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவை ஆட்சி செய்திருப்பவர்களில் மிகவும் சக்திவாய்ந்த ஜனாதிபதியாக இருந்தார். ஆயினும் ட்ரொட்ஸ்கி பற்றிய மார்க்சிச மதிப்பீடானது, மார்க்ஸ் பற்றிய ஏங்கெல்ஸின் மதிப்பீட்டினளவிற்கு அத்தனை உறுதியானதாக இருக்கிறது. ட்ரொட்ஸ்கி, அவர் அதிகாரம் செலுத்திய காலத்திற்கு முன்பும் சரி, அதன்போதும் சரி, அதிலிருந்து வீழ்ச்சியடைந்த பின்பும் சரி, அவரது சமகாலத்தவர்களில் லெனினுக்கு மட்டுமே அடுத்தவராக இருந்தார், லெனின் இறந்த பின்னர் நமது காலத்தின் மிகச்சிறந்த தலைவராக இருந்தார். அந்தத் தீர்ப்பை நாம் வரலாற்றிற்கு விடுகிறோம். [1]

ட்ரொட்ஸ்கியின் புகழுருவானது அவர் உலகை உள்ளவிதத்தில் ஒப்பிலா மேதமையுடன் பகுப்பாய்வு செய்தார் என்ற உண்மையால் மட்டும் தீர்மானிக்கப்பட்டதில்லை. உலகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கவிருந்த புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் உருவடிவாகவும் அவர் இருந்தார். ட்ரொட்ஸ்கிக்கு எதிரான கிரெம்ளினின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 1937 ஏப்ரலில் விசாரணைகள் நடத்திய டுவி விசாரணை ஆணையத்தின் (மாஸ்கோ விசாரணைகள் ஒரு ஜோடிப்பு என்பதை அது அதன்பின் கண்டது) ஒரு அமர்வின் போது ட்ரொட்ஸ்கி கூறியவாறாக, “என்னுடைய அரசியல், இராஜதந்திர மரபுநெறிகளின் நோக்கங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டவையில்லை, அவை தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தின் அபிவிருத்திக்காக ஸ்தாபிக்கப்பட்டவை ஆகும்.” [2]

முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண வேதனையில் இருந்து எழுந்த தீவிரமான வரலாற்றுப் பிரச்சினைகளுக்கு புரட்சிகர வழியல்லாத எளிதான தீர்வுகள் இருப்பதாக நடிக்கும் அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் ட்ரொட்ஸ்கி இழிவாகக்கருதினார். புரட்சிகர அரசியலானது அதிசயங்களுக்கு வாக்குறுதியளிப்பதன் மூலம் அதன் நோக்கங்களை சாதித்ததில்லை. “வெகுஜனங்ளுக்கு கிளர்ச்சியின் மூலமாக கல்வியூட்டுவதன் மூலமாகவும், தொழிலாளர்கள் எதைப் பாதுகாக்க வேண்டும் எதைத் தூக்கியெறிய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்குவதன் மூலமும் மட்டுமே” மாபெரும் சமூக முன்னேற்றங்கள் வெற்றிகொள்ளப்பட முடியும் என்று அவர் வலியுறுத்தினார். புரட்சிகர அரசியலுக்கான இந்த ஆழ்ந்த கோட்பாடுமிக்க அணுகுமுறைதான் குணவியல்பு குறித்த ட்ரொட்ஸ்கியின் கருத்தாக்கத்திற்கும் அடிப்படையை உருவாக்கியிருந்தது. “புரட்சியின் நலன்களுடன் மோதல் கொள்ளாத வழிமுறைகள் மட்டுமே அனுமதிக்கத்தக்கவை” என்று அவர் எழுதினார். இந்த கோட்பாட்டை இறுக்கமாக பற்றியிருந்தமையே ட்ரொட்ஸ்கியை ஒரு அறநெறிக் கோணத்தில் இருந்து மட்டும் பரிசீலிக்கும்போதும் கூட, சோசலிசப் புரட்சியின் தேவைகளுக்கும், ஆகவே மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் முற்றிலும் அழிவுகரமான வழிமுறைகளைக் கொண்டிருந்த ஸ்ராலினிசத்திற்கு முற்றுமுதலான எதிர்ப்பில் நிறுத்தியது. [3]

சி.எல்.ஆர். ஜேம்ஸ்

1924 ஜனவரியில், லெனின் அவரது 53வது வயதில், அகால மரணமடைந்தமை ஒரு அரசியல் துன்பியலாக இருந்தது. ட்ரொட்ஸ்கி அவரது 60வது வயதில் படுகொலை செய்யப்பட்டமை ஒரு பேரழிவாக அமைந்தது. அவரது படுகொலையானது போல்ஷிவிசத்தின் கடைசியாக உயிர்வாழ்ந்த பிரதிநிதியையும் உலக சோசலிசப் புரட்சியின் மாபெரும் மூலோபாயவாதியையும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பறித்தெடுத்தது. ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகப் போரின் வெடிப்பினால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டதாக அவரது இறுதி ஆண்டில் முன்னெடுத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகளானவை, கடக்கமுடியாத சிரமங்களாக காணப்பட்டவற்றிலிருந்து நான்காம் அகிலம் உயிர்பிழைப்பதை உறுதிசெய்வதில் தீர்மானகரமானவையாக இருந்தன.

ட்ரொட்ஸ்கி அவரது புத்திஜீவித ஆற்றல்களின் உச்சத்தில் இருந்த ஒரு சமயத்தில் கொலைசெய்யப்பட்டிருந்தார். அவரது உடல்நலம் சரிவுகண்டு வருவதை அவர் உணர்ந்திருந்த போதிலும், அவரது அரசியல் ஆற்றலில் குறைவு உண்டானதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. அன்றாடம் அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் தர்க்கரீதியான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த போதிலும் கூட, ட்ரொட்ஸ்கி ஸ்ராலினின் வாழ்க்கைச்சரிதம் ஒன்றை எழுதுவதற்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார், நிறைவுறாத பணியாக இருந்த போதிலும், அது ஒரு இலக்கியரீதியாக மேதமையான படைப்பாக நியாயமாக விவரிக்கப்பட முடியும்.

ட்ரொட்ஸ்கி அவரது வாழ்வின் இறுதி ஆண்டின் போது எழுதியவை, ஆரம்ப காலகட்டங்களில் அவர் எழுதியவற்றின் அதே அளவுக்கு மிகச்சிறந்தவையாக இருந்தன என்பது மட்டுமல்ல; 1939-40 நிகழ்வுகள் குறித்த அவரது பகுப்பாய்வின் விரிவெல்லை, நிலைத்திருக்கும் முக்கியத்துவத்தை பொறுத்தவரையில் எதிர்காலத்தினுள்ளும் ஊடுருவிச் சென்றது. உலகின் நிலை எவ்வாறிருக்கின்றது மற்றும் அது எங்கே சென்று கொண்டிருந்தது என்பதை அவரது காலத்தின் வேறெந்தவொருவரும் அவரளவுக்கு புரிந்திருக்கவில்லை.

உதாரணமாக, இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு வெறும் ஆறு வார காலத்திற்கு முன்பாக1939 ஜூலை 23 அன்று ட்ரொட்ஸ்கி, அமெரிக்க பத்திரிகையாளர்கள் குழு ஒன்றினால் நேர்காணல் செய்யப்பட்டார். உலக நிலைமை குறித்த அவரது மதிப்பீட்டை அறிய அவர்கள் கவலைகலந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த பத்திரிகையாளர்களின் நலன்கருதி, ட்ரொட்ஸ்கி ஆங்கிலத்தில் பேசினார். அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அரசாங்கம் தனக்கு குடிவரவுஅனுமதி வழங்குமானால் தனது ஆங்கிலத்தை மேம்படுத்திக் கொள்வதாக தன்னைப் பார்வையிட வந்த ஒரு அமெரிக்க பேராசிரியரிடம் தான் வாக்குறுதியளித்ததை நினைவுகூர்ந்து கொண்டு அவர் ஆரம்பித்தார். வருந்தத்தக்கவிதத்தில், “எனது ஆங்கிலத்தில் அவர்களுக்கு ஆர்வமில்லை போல் தெரிகிறது” என்று ட்ரொட்ஸ்கி கூறினார்.

தனது ஆங்கில ஆளுமையில் ட்ரொட்ஸ்கிக்கு திருப்தியில்லாதிருந்த போதிலும், அவரது பதில்கள், சிக்கலான உலக நிலை பற்றிய அவரின் விளங்கங்களின் மேதமையான தன்மையில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாது செய்துவிடுகிறது. “முதலாளித்துவ அமைப்புமுறையானது ஒரு முட்டுச்சந்தில் இருக்கிறது” என்றார்:

என்னுடைய பார்வையில், இந்த முட்டுச்சந்தில் இருந்து சாதாரணமான, சட்டபூர்வமான, அமைதியான பாதை எதுவும் பிறக்கப்போவதில்லை. ஒரு மிகப்பெரும் வரலாற்று வெடிப்பினால் மட்டுமே அந்த பாதையை உருவாக்கப்படக்கூடியதாக இருக்கும். வரலாற்று வெடிப்புகள், போர்கள் மற்றும் புரட்சிகள் ஆகிய இரண்டு வகையானவை. நாம் அவை இரண்டையுமே காணவிருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன். இப்போதைய அரசாங்கங்களின், நல்ல அரசாங்கங்களாயினும் சரி கெட்ட அரசாங்கங்களாயினும் சரி —நல்ல அரசாங்கங்களும் இருப்பதாக நாம் அனுமானிக்கின்ற பட்சத்தில்— அவற்றின் வேலைத்திட்டங்கள், வெவ்வேறு கட்சிகளின் வேலைத்திட்டங்கள், அமைதிவாத வேலைத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்தவாத வேலைத்திட்டங்கள் அனைத்துமே, குறைந்தபட்சம் அவற்றை வெளியில் இருந்து பார்க்கின்ற ஒரு மனிதருக்கேனும், வெடிப்புக்கு முன்பாக எரிமலையின் குழம்புவிழும் அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை விளையாட்டாகவே காணப்படுகிறது. இதுவே இன்றைய உலகின் பொதுவான நிலைமையாகும். [4]

ட்ரொட்ஸ்கி அதன்பின் நியூ யோர்க்கில் நடந்து வந்த “நாளைய உலகம்” என்ற கருப்பொருளுடனான ஒரு உலகக் கண்காட்சி குறித்து குறிப்பிட்டார்.

நீங்கள் உலகக் கண்காட்சியை உருவாக்கினீர்கள். எனது ஆங்கிலம் மோசமானதாக இருப்பதற்கு என்ன காரணமோ அதேகாரணத்தினால் இதன் மீதும் நான் வெளியில் இருந்தே தான் கருத்து தெரிவிக்க முடியும், எனினும் நான் செய்தித்தாள்களில் இருந்து இந்த கண்காட்சி குறித்து அறிந்தவற்றில் இருந்து சொல்வதானால், இது “நாளைய உலக”த்தின் பார்வையில் ஒரு மகத்தான மனித படைப்பாக இருக்கிறது. இந்த குணாதிசயப்படுத்தலானது சற்று ஒருபக்க சார்பானது என்றே நான் நம்புகிறேன். தொழில்நுட்பரீதியான ஒரு பார்வையில் இருந்து மட்டுமே உங்களது உலகக் கண்காட்சியை “நாளைய உலகம்” என்று நீங்கள் பெயரிட முடியும், ஏனென்றால் நாளைய உண்மையான உலகத்தை நீங்கள் காண விரும்புவதாக இருந்தால், கண்காட்சிக்கு மேலே நூற்றுக்கணக்கான இராணுவ விமானங்கள் நுற்றுக்கணக்கில் குண்டுகள் சகிதமாக நாம் காண்பதாக இருக்க வேண்டும், அந்த நடவடிக்கையின் விளைவே நாளைய உலகமாய் இருக்கப்போகிறது. ஒருபக்கத்தில் பிரம்மாண்டமான மனித படைப்புத்திறனும், மறுபக்கத்தில் நமக்கு மிக முக்கியமானதான சமூகத் துறை என்ற துறையில் பாரிய பிற்போக்குத்தனமும், அதாவது தொழில்நுட்ப மேதமைத்தனமும் மற்றும் சமூக மடத்தனம் என்ற இந்த வார்த்தையை உச்சரிக்க அனுமதியுங்கள், இதுதான் இன்றைய உலகமாய் இருக்கிறது. [5]

சமகாலத்தின் “இன்றைய உலகம்” குறித்த ஒரு விவரிப்பிற்கு, இன்றைய தசாப்தத்தின் நெருக்கடிகளில் இருந்து எழவிருக்கும் “நாளைய உலகத்தை” பற்றிய ஒரு கணிப்பாகவும் இருக்கும் இதில் ஒரேயொரு வார்த்தையும் கூட மாற்றுவதற்கான தேவை அரிதாகவே இருக்கும். வரம்பற்ற பேராசையை எல்லையற்ற முட்டாள்தனத்துடன் இணைத்து உலகமெங்கிலும் அரசாங்கங்கள் திறமையுடனோ அல்லது மனிதாபிமானத்துடனோ பதிலிறுக்கத் திறனற்றதாக இருக்கின்ற நிலையில், கேட்கப்படுகின்ற கேள்வி இதுதான்: இந்த நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படவிருக்கிறது? ட்ரொட்ஸ்கி கொடுத்த அதே பதில் தான் நமது பதிலும்: தீர்வானது “ஒரு மகத்தான வரலாற்று வெடிப்பு” வடிவத்தில் தான் வந்துசேரும். மேலும், 1939 இல் ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, இத்தகைய வெடிப்புகள் போர்கள் மற்றும் புரட்சிகள் ஆகிய இருவகையானவை. இரண்டுமே நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றன.

1939 ஜூலையில் ட்ரொட்ஸ்கியை நேர்காணல் செய்த பத்திரிகையாளர்கள் அமெரிக்க அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையை நடத்துகின்ற விதம் தொடர்பாக அதற்கு ஏதேனும் அவரிடம் அறிவுரை இருக்கிறதா என்று அறிய பேராவலாய் இருந்தனர். நகைச்சுவையின் சுவடு ஏதும் இல்லாமல், ட்ரொட்ஸ்கி இவ்வாறு பதிலளித்தார்:

அமெரிக்க அரசாங்கம் என்ன அரசியல் காரணத்திற்காக எனக்கு விசா வழங்க அவசியமில்லை என்று காண்கிறதோ, அதே அரசியல் காரணத்தின் பொருட்டே வாஷிங்டனில் உள்ள அரசாங்கத்திற்கு அறிவுரை அளிக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக நான் நினைக்கவில்லை என்பதை நான் கூறியாக வேண்டும். வாஷிங்டனில் இருக்கும் அரசாங்கத்திடம் இருந்து மாறுபட்ட ஒரு சமூக நிலையில் நாம் இருக்கிறோம். என்னுடைய அதே இலக்குகளைக் கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கத்திற்குத் தான் என்னால் அறிவுரை கூற இயலுமே அன்றி, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அல்ல. அமெரிக்க அரசாங்கமானது, அதன் புதிய ஒப்பந்தம் (New Deal - சமூக நல உதவிகளை வழங்கிய திட்டம்) எல்லாம் இருந்தபோதிலும், எனது அபிப்ராயத்தில், அது ஒரு ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கமே ஆகும். அமெரிக்காவில் ஒரு புரட்சிகர அரசாங்கம் — ஒரு உண்மையான தொழிலாளர்’ அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே என்னால் கூற முடியும்.

அறுபது குடும்பங்களை பறிமுதல் செய்வது தான் முதல் விடயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது ஒரு மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும், ஒரு தேசியரீதியான கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமல்ல, உலக விவகாரங்களை தீர்க்கும் கண்ணோட்டத்திலும் கூட, இது மற்ற தேசங்களுக்கு ஒரு மிக நல்ல உதாரணமாக இருக்கும். [6]

இது உடனடியான எதிர்காலத்தில் சாதிக்கப்பட்டு விடப் போவதில்லை என்பதை ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார். ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளும் போரின் அண்மிப்பும் அமெரிக்காவில் புரட்சியை தாமதிக்கும். எதிர்வரவிருக்கும் போரில் அமெரிக்கா நுழைவது எப்போது என்பதே கேள்வி. “அமெரிக்க முதலாளித்துவம் உயிர்பிழைத்து, சில காலத்திற்கு அது வாழுமானால், அமெரிக்காவில் நாம் உலகின் மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்தியத்தையும் இராணுவவாதத்தையும் கொண்டிருப்போம்.” [7]

ஜூலை நேர்காணலில் ட்ரொட்ஸ்கி இன்னுமொரு முன்கணிப்பையும் வழங்கினார். உண்மையில், அது முந்தைய ஐந்து ஆண்டுகளாக அவர் முன்வைத்து வந்த சோவியத் வெளியுறவுக் கொள்கையின் மீதான ஒரு அரசியல் பகுப்பாய்வின் மறுஅறிக்கையாக இருந்தது. வெளியுறவு அமைச்சர் பதவியில் பழைய சோவியத் தூதுவரான மக்ஸிம் லிட்வினோவ் அகற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ராலினின் நெருங்கிய குற்ற உடந்தையான மோலோடோவ் அமர்த்தப்பட்டதைக் குறிப்பிட்டு, ட்ரொட்ஸ்கி, இந்த மாற்றமானது, “நாங்கள் [ஸ்ராலின்] எங்களது அரசியலை மாற்றிக் கொள்ள, அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் உங்களிடமும் ஹிட்லரிடமும் முன்வைத்த எங்களது இலக்குகளையும் நோக்கங்களையும் நிறைவேற்ற ஆயத்தமாக இருக்கிறோம் என்று கிரெம்ளினிடம் இருந்து ஹிட்லருக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பாக இருந்தது. ஏனென்றால் ஹிட்லருடன் ஒரு உடன்பாட்டிற்கு போவதே சர்வதேச அரசியலில் ஸ்ராலினின் இலக்காக இருந்தது” என்று தெரிவித்தார். [8]

நிகழ்வுகளின் இறுதியான நிலைமையிலும் கூட, சோவியத் ஒன்றியம் நாஜி ஜேர்மனியுடன் கூட்டணிசேரும் என்பதான கருத்து கிட்டத்தட்ட அத்தனை “நிபுணர்” கருத்துக்களின் படி முட்டாள்தனமாகக் கருதப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் நடந்திருந்ததைப் போலவே, நிகழ்வுகள் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை ஊர்ஜிதப்படுத்தின. ட்ரொட்ஸ்கியின் நேர்காணலுக்கு சரியாக ஒரு மாதத்திற்குப் பின்னர், ஆகஸ்டு 23, 1939 அன்று, ஸ்ராலின்-ஹிட்லர் இடையிலான வலிந்து தாக்காத ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது. ஹிட்லரின் போர்த் திட்டங்களுக்கு இருந்த இறுதி முட்டுக்கட்டை ஸ்ராலினால் அகற்றப்பட்டது. 1939 செப்டம்பர் 1 அன்று நாஜி ஆட்சி போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு இரண்டு நாட்களின் பின்னர் பிரிட்டனும் பிரான்சும் ஜேர்மனியின் மீது போரை அறிவித்தன. முதலாம் உலகப் போர் வெடித்து இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருந்தது.

கிரெம்ளின் ஹிட்லரை நோக்கித் திரும்பும் என்பதை தொடர்ந்து முன்கணித்து வந்திருந்ததால், ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினின் துரோகத்தினால் கொஞ்சமும் ஆச்சரியமடையவில்லை. ஸ்ராலினின் குறுநோக்கிற்கும் திறமையின்மைக்கும் சோவியத் ஒன்றியம் பயங்கர விலை கொடுக்க நேரும் என்று அவர் எச்சரித்தார். நாஜி ஜேர்மனியுடனான போரின் ஆபத்துகளில் இருந்து சோவியத் அதிகாரத்துவத்தை காப்பாற்றி விட்டிருந்ததான அந்த சர்வாதிகாரியின் நம்பிக்கை இன்னுமொரு அழிவுகரமான தப்புக்கணக்காக நிரூபணமானது.

* * * * *

போர் வெடிப்பானது நான்காம் அகிலத்திற்குள்ளாக ஒரு அரசியல் நெருக்கடியைத் தூண்டியது, இதுவே ட்ரொட்ஸ்கியின் வாழ்வின் இறுதி ஆண்டில் அவரது வேலைகளது முக்கிய கவனத்திற்குரியதானது. அந்த கவனக்குவிப்பு தொலைநோக்குடையதாக இருந்தது: அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) ஜேம்ஸ் பேர்ன்ஹாம், மக்ஸ் சாக்ட்மன் மற்றும் மார்ட்டின் அபேர்ன் தலைமையிலான சிறுபான்மை கன்னைக்கு அவர் வழங்கிய பதிலிறுப்பு, சோவியத் அதிகாரத்துவத்தின் குற்றங்களையும் கவனத்திற்கெடுக்காது அக்டோபர் புரட்சியின் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது அது பிரதிநிதித்துவம் செய்த மார்க்சிசத்தின் தத்துவார்த்த அடித்தளங்களையும் வரலாற்று முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போதும், அதன்பின்னரும் எழவிருந்த புரட்சிகர மூலோபாயம், வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு குறித்த பல மிகக் கடினமான பிரச்சினைகளை ட்ரொட்ஸ்கியின் தர்க்கவியல் முன்கணித்திருந்தது.

ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் கையெழுத்தானதும், அதனைத் தொடர்ந்து 1939 செப்டம்பரில் போலந்து மற்றும் பின்லாந்தின் மீதான சோவியத் படையெடுப்பும் (1939-40 குளிர்காலப் போர்), அமெரிக்காவில் குட்டி-முதலாளித்துவ தீவிரசிந்தனை புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களது பரந்த பிரிவுகள் மத்தியில் ஆவேசத்தைத் தூண்டியது. இந்த மிகப்பெரிய மற்றும் செல்வாக்கான சமூக வட்டத்தின் பல உறுப்பினர்களால், பெரும் பயங்கரத்தின்போது பழைய போல்ஷிவிக்குகளை ஸ்ராலின் அழித்தொழித்ததையும் ஸ்பானியப் புரட்சியை கழுத்துநெரித்ததையும் ஏற்றுக் கொள்ளவும், இன்னும் ஆதரிக்கவும் கூட முடிந்திருந்தது. சோவியத் ஒன்றியத்திற்கும் “மேற்கத்திய ஜனநாயகங்களுக்கும்” இடையில் ஒரு சர்வதேசக் கூட்டணிக்கு ஸ்ராலினிச ஆட்சி அப்போது ஆலோசனையளித்துக் கொண்டிருந்த அதேவேளையில் தான் 1936-39 குற்றங்கள் நடந்தேறின. இந்த நோக்குநிலையின் உள்நாட்டு செயல்படுத்தலாக, தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு கூட்டணியை (”மக்கள் முன்னணி”) ஸ்ராலினிசக் கட்சிகள் ஊக்குவித்தன. ஸ்ராலின் ஜேர்மனியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை, இந்த பிரத்தியேக வடிவிலான வர்க்க கூட்டுக்கு, முற்றிலும் சிடுமூஞ்சித்தனமான மற்றும் சந்தர்ப்பவாதமான விதத்தில், ஒரு பெரும் அடி கொடுத்தது. ஜனநாயகவாத குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் மனோநிலை சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகத் திரும்பியது. ஜனநாயகவாத புத்திஜீவித் தட்டு விமர்சனமற்ற வகையிலும் தவறான விதத்திலும் ஸ்ராலினிசத்தை சோசலிசத்துடன் அடையாளம் கண்டிருந்த அளவிற்கு, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான திருப்பமானது ஒரு பகிரங்கமான கம்யூனிச-விரோதத் தன்மையைப் பெற்றது.

ஜேம்ஸ் பேர்ன்ஹாம்

இந்த அரசியல் மாற்றமானது சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாகவும் நான்காம் அகிலத்தின் மற்ற பிரிவுகளுக்குள்ளாகவும் ஒரு எதிர்ப்புப் போக்கு அபிவிருத்தியாவதில் பிரதிபலித்தது. SWP க்குள் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு ஸ்தாபக உறுப்பினரும், SWP இன் மிக செல்வாக்கான ஆளுமையாக இருந்த ஜேம்ஸ் பி. கனனுக்கு அடுத்தநிலையில் இருந்த மக்ஸ் சாக்ட்மனும் நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக இருந்த ஜேம்ஸ் பேர்ன்ஹாமும் இந்தப் போக்கின் மிக முக்கிய தலைவர்களாக இருந்தனர். ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் மற்றும் சோவியத் ஒன்றியம் போலந்தின் மீது படையெடுத்தமை ஆகியவற்றின் ஒரு பின்விளைவாக சோவியத் ஒன்றியத்தை இனியும் ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக வரையறை செய்வது ஏற்றுக் கொள்ள இயலாதது என அவர்கள் வலியுறுத்தினர். மார்க்சிசத் தத்துவத்தினால் முன்னெதிர்பார்த்திராதவகையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு புதிய வடிவமாக அதிகாரத்துவம் செயல்படுகையில், சோவியத் ஒன்றியமானது ஒரு புதிய வடிவிலான சுரண்டல் சமூகமாக பரிணமித்திருந்தது என்று அவர்கள் கூறினர். “அதிகாரத்துவ கூட்டாண்மை” என்பது சோவியத் சமூகத்தை விவரிக்க சிறுபான்மையால் பயன்படுத்த வார்த்தைப் பிரயோகங்களில் ஒன்றாக இருந்தது. இந்த புதிய மதிப்பீட்டின் ஒரு துணைச்சேர்க்கையானது, ஏகாதிபத்திய அரசுடன் போர் ஏற்பட்டால், எதிரி நாஜி ஜேர்மனியாக இருந்தாலும் கூட, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பை நிராகரிப்பதாகும்.

ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரை, நான்காம் அகிலம் சோவியத் ஒன்றியத்தை ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக வரையறை செய்ததை திரும்பப்பெற வேண்டும் என சாகட்மனும் பேர்ன்ஹாமும் விடுத்த கோரிக்கையானது வெறுமனே வார்த்தைப்பிரயோகம் சம்பந்தப்பட்ட விடயமல்ல. சோவியத் ஒன்றியம் ஒரு தொழிலாளர்’ அரசாக இனியும் வரையறை செய்யப்படக் கூடாது என்ற கோரிக்கையின் நடைமுறை அரசியல் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என ட்ரொட்ஸ்கி வினவினார்?

அதிகாரத்துவம் ஒரு புதிய “வர்க்கம்” என்றும் சோவியத் ஒன்றியத்திலான இப்போதைய ஆட்சி, வர்க்க சுரண்டலின் ஒரு தனித்துவமான அமைப்புமுறை என்றும் ஒருகணம் ஒப்புக்கொள்வதாக வைப்போம். இந்த வரையறைகளில் இருந்து பிறக்கின்ற புதிய அரசியல் முடிவுகள் என்ன? உழைக்கும் மக்களது புரட்சிகர எழுச்சியின் மூலமாக அதிகாரத்துவத்தை தூக்கிவீசுவதற்கான அவசியத்தை நான்காம் அகிலம் வெகுகாலத்திற்கு முன்பே அடையாளம் கண்டுகொண்டது. அதிகாரத்துவத்தை ஒரு சுரண்டும் வர்க்கமாக பிரகடனம் செய்வோரால் வேறேதுவும் முன்வைக்கப்படுவதில்லை, முன்வைக்கப்பட இயலாது. [9]

ஆனால் SWP சிறுபான்மை கோரியவாறாக சோவியத் ஒன்றியத்தின் வரையறையில் மாற்றம் செய்வதென்பது வார்த்தைப்பிரயோக தெளிவுபடுத்தலுக்கு அப்பாற்பட்ட ஆழமான தாக்கங்களைக் கொண்டிருந்தது. ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்று சோவியத் ஒன்றியத்திற்கு ஸ்தாபிக்கப்பட்ட வரையறையானது சமூகப் புரட்சியைக் காட்டிலும் ஒரு அரசியல் புரட்சிக்கான கோரிக்கையுடன் பிணைக்கப்பட்டதாக இருந்தது. இந்த வேறுபடுத்தலின் அடித்தளத்தில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதில் அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட சொத்துறவுகளிலான எந்த மாற்றமும் இடம்பெறாது என்ற நம்பிக்கை இருந்தது. தொழிலாள வர்க்கமானது, அதிகாரத்துவ ஆட்சியை அழித்து சோவியத் ஜனநாயகத்தை மீள்ஸ்தாபித்த பின்னர், ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கிவீசுவதன் மூலமும் முதலாளித்துவ சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமும் சாதிக்கப்பட்ட சொத்துக்களின் தேசியமயமாக்கத்தின் அடிப்படையிலான பொருளாதார முறையைப் பாதுகாக்கும். அக்டோபர் புரட்சியின் அடிப்படை வெற்றியும், சோவியத் ஒன்றியத்தின் அதனை தொடர்ந்துவந்த பொருளாதார மற்றும் கலாச்சார அபிவிருத்திக்கான இன்றியமையாத பொருளாதார அடித்தளமுமான இது கைவிடப்படாது.

பாதுகாக்க தகுதியான அளவுக்கு அக்டோபர் புரட்சியில் எதுவும் மிச்சம் விட்டுவைக்கப்பட்டிருக்கவில்லை என்ற அனுமானத்தில் இருந்து, சிறுபான்மையின் நிலைப்பாடு முன்சென்றது. ஆகவே, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பைத் தக்கவைப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றது.

ட்ரொட்ஸ்கி வேறொரு அதிமுக்கிய பிரச்சினையை எழுப்பினார். அதிகாரத்துவமானது சோவியத் ஒன்றியத்தில் சுரண்டல் சமூகத்தின் ஒரு புதிய வடிவத்தை ஸ்தாபித்திருந்த ஒரு புதிய வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்தது என்றால், இந்த புதிய வர்க்கத்துடன் பிரத்தியேகமாக அடையாளம் காணத்தக்க சொத்துறவுகளின் புதிய வடிவங்கள் என்னவாய் இருந்தன? ”அதிகாரத்துவ கூட்டாண்மை” (bureaucratic collectivism) என்பது, முதலாளித்துவத்தையும் சோசலிசத்தையும் தாண்டி, பொருளாதார அபிவிருத்தியின் எந்த புதிய கட்டத்திற்கு வரலாற்றுரீதியாக நியாயப்படுத்தப்பட்ட மற்றும் இன்னும் அவசியமானதுமான, ஒரு வெளிப்பாடாக இருந்தது? அதிகாரத்துவமானது அரசியல் அதிகாரத்தைத் தட்டிப்பறித்து, 1917 தொழிலாளர்’ புரட்சியின் மூலமாக பெறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் தனிச்சலுகைகளை பெறுவதற்கு அவ் அதிகாரத்தை அது பயன்படுத்தியது என்ற, நிலைப்பாட்டை நான்காம் அகிலம் தொடர்ந்து பராமரித்தது. ஸ்ராலினின் தலைமையின் கீழ், அதிகாரத்துவத்தால் செலுத்தப்பட்ட சர்வாதிகார சக்தியானது குறிப்பிட்ட அரசியல் நிலைமைகளின் கீழ் சோவியத் அரசு உருக்குலைவுற்றதன் விளைபொருளாக இருந்தது. இந்த அரசியல் நிலைமைகளில் பிரதானமாக, போல்ஷிவிக்குகள் கையேற்றுக்கொண்ட 1917க்கு முந்திய ரஷ்ய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வரலாற்றுரீதியான பின்தங்கியநிலை, மற்றும் ரஷ்யாவில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை வென்றதன் பின்னர் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் புரட்சிகர இயக்கங்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்விளைவாக சோவியத் ஒன்றியம் நெடியதொரு அரசியல் தனிமைப்படலுக்கு உட்பட்டமை ஆகியவை இருந்தன.

இந்த நிலைமைகள், அதாவது தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளது விளைவாய் சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படல் நீடிப்பதும் ஏகாதிபத்தியத்தின் முக்கிய மையங்களில் முதலாளித்துவம் நீண்டகாலம் உயிர்வாழ்வதும் நீடிக்குமானால், தொழிலாளர்’ அரசு அழிந்து போகும். எனினும் இந்த நிகழ்ச்சிப்போக்கின் விளைவாக, தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களது கலைப்பு மற்றும் முதலாளித்துவ சொத்துறவுகளது மறுஸ்தாபிப்பு ஆகியவற்றின் வடிவத்தை எடுக்கும் என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். இந்த விளைவானது, அதிகாரத்துவத்தினரின் ஒரு சக்திவாய்ந்த பிரிவு, அரசு சொத்துகளைத் திருடுவதற்கு தமது அரசியல் அதிகாரத்தை சுரண்டிக் கொண்டு, ஒரு புதிதாக உருவமைக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கமாக உருமாறுவதைக் கொண்டதாயிருக்கும். இந்த முடிவு ஒரு உண்மையான சாத்தியமாக இருந்தது என்று எச்சரித்த ட்ரொட்ஸ்கி, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சியுடன் இணைந்து ஒரு அரசியல் புரட்சியின் மூலமாக மட்டுமே இது தடுத்து நிறுத்தப்பட முடியும் என்று வலியுறுத்தினார்.

சோவியத் ஒன்றியத்திற்கு பொருத்தமான சொற்பிரயோக வரையறை மீதான விவாதம் குறித்த இந்த கவனமான பகுப்பாய்வு, SWP எதிரணியால் எழுப்பப்பட்ட வேலைத்திட்டத்திலான மாற்றங்களது நீண்டகால வரலாற்று மற்றும் அரசியல் தாக்கங்களை ட்ரொட்ஸ்கி அடையாளம்காண வழிவகை தந்தது:

முடிவுவரை இட்டுச்செல்லப்படும் வரலாற்று மாற்றீடு பின்வரும் வகையில் உள்ளது: ஒன்று, ஸ்ராலினிச ஆட்சியானது முதலாளித்துவ சமூகத்தை ஒரு சோசலிச சமூகமாக உருமாற்றுகின்ற நிகழ்ச்சிப்போக்கில் வெறுக்கத்தக்க மறுபிறப்பாக இருக்க வேண்டும், இல்லையேல் ஸ்ராலின் ஆட்சியானது ஒரு புதிய சுரண்டல் சமூகத்தின் முதல் கட்டமாக இருக்க வேண்டும். இரண்டாவதே சரியென நிரூபணமாகுமானால், அப்போது, உண்மையாகவே, அதிகாரத்துவம் ஒரு புதிய சுரண்டல் வர்க்கமாக ஆகும். இரண்டாவது முன்னோக்கு எத்தனை கடினமானதாகவேனும் இருக்கட்டும், உலகப் பாட்டாளி வர்க்கமானது நிகழ்வுகளின் அபிவிருத்திப் பாதையில் அதன் மீது சுமத்தப்பட்ட இலட்சியத்தை நிறைவேற்றும் திறனற்றதாக உண்மையில் நிரூபணமாகுமேயானால், முதலாளித்துவ சமூகத்தின் உள்முக முரண்பாடுகளது அடிப்படையிலான சோசலிசப் புரட்சி என்பது ஒரு கற்பனாவாதமே என்பதை அங்கீகரிப்பதைத் தவிர வேறொன்றும் அங்கே இருக்காது. சர்வாதிபத்திய அதிகாரத்துவ சமூகத்தில் அடிமைகளது நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு புதிய “குறைந்தபட்ச” வேலைத்திட்டம் அவசியமாயிருக்கும் என்பது சுயமாகவே தெரிகின்றது.

ஆனால் சோசலிசப் புரட்சியின் சாத்தியப்பாட்டை கைகழுவ நம்மை இன்று நிர்ப்பந்திக்கக் கூடிய அளவுக்கு மறுக்கமுடியாத அல்லது அழுத்தம்மிக்க புறநிலைத் தரவுகள் ஏதும் அங்கே இருக்கிறதா? அதுதான் முழுமையான பிரச்சினை. [10]

ஆகவே, ஒட்டுமொத்த சோசலிச திட்டத்தின் வரலாற்றுரீதியான நியாயப்படுத்தலும் பணயத்தில் இருந்தது. ஹிட்லருடன் ஸ்ராலின் கூட்டணி சேர்ந்ததும், அதனுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் வெடிப்பும், தொழிலாள வர்க்கமானது மார்க்சிச தத்துவத்தில் அதற்கு கொடுக்கப்பட்டிருந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் திறனற்றதாக இருக்கின்றது என்பதற்கான மறுக்கமுடியாத நிரூபணமாய் இருந்ததா? இவ்வாறாக, பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மன் உடனான —உண்மையில் பார்த்தால், அவர்கள் யாருக்காக பேசிக் கொண்டிருந்தார்களோ அந்த விரக்தியடைந்த குட்டி-முதலாளித்துவ புத்தீஜீவி அடுக்குகள் பலவற்றுடனான— ஒட்டுமொத்த முரண்பாடும், தொழிலாள வர்க்கமானது, மார்க்ஸும் ஏங்கெல்சும் அவர்களது வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தில் அபிவிருத்தி செய்தவாறாக மற்றும் எடுத்துரைத்தவாறாக, ஒரு புரட்சிகர வர்க்கமாக இருந்ததா என்பது தொடர்பாகவே இருக்கின்றது. கடந்த எண்பது ஆண்டுகளாக அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்வில் மேலாதிக்கம் செலுத்தி வந்திருக்கும் இந்த வரலாற்றுப் பிரச்சினைக்கு ட்ரொட்ஸ்கி வழங்கிய பதில், கடந்த எண்பது ஆண்டுகளாக அரசியல் மற்றும் அறிவுசார் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய இந்த வரலாற்றுப் பிரச்சினைக்கு ட்ரொட்ஸ்கி அளித்த பதில், இருபதாம் நூற்றாண்டில் லெனினுக்கு மட்டுமே சமமான, மிக ஆழமான மற்றும் தொலைநோக்குடைய அரசியல் சிந்தனையாளராக அவரது அந்தஸ்தை நிலைநாட்ட போதுமானதாகும்:

1914 ஜூலையில் ஒரு பகிரங்க குணாதிசயத்தை பெற்றுவிட்டிருந்த முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடியானது, போரின் முதல் நாளில் இருந்தே, பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒரு கூர்மையான நெருக்கடியை உருவாக்கியது. அதன் பின்னரான 25 ஆண்டுகாலத்தில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளது பாட்டாளி வர்க்கமானது நமது சகாப்தத்தின் கடமைகளது மட்டத்திற்கு உயர்ந்து நிற்கத்தக்க ஒரு தலைமையை இன்னும் உருவாக்கியிருக்கவில்லை. எனினும், அப்படியொரு தலைமை உருவாக்கப்பட முடியும் என்பதற்கு ரஷ்யாவின் அனுபவம் சாட்சி பகிர்கிறது. (அதற்காக, அது உருக்குலைவுக்கு உட்படுவதிலிருந்து பாதுகாப்பானதாக இருக்கும் என்று அர்த்தமில்லை). அதனையடுத்து பிரச்சினை இவ்வாறானதாய் நிற்கிறது: புறநிலை வரலாற்று அவசியமானது நீண்டகாலப் போக்கில் தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையினது நனவில் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளுமா; அதாவது, இந்தப் போர் மற்றும் அதனைச் சூழவிருக்கும் ஆழமான அதிர்ச்சிகளது நிகழ்ச்சிப்போக்கில் பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தைக் கைப்பற்ற இட்டுச்செல்லும் திறன்படைத்த ஒரு உண்மையான புரட்சிகரத் தலைமை உருவாக்கப்படுமா?

இந்தக் கேள்விக்கு நான்காம் அகிலம், அதன் வேலைத்திட்ட எழுத்துவடிவத்தின் மூலமாக மட்டுமன்றி, அதன் இருப்பின் உண்மையின் ஊடாகவுமே கூட, ஆம் என்று திட்டவட்டமாக பதிலளித்திருக்கிறது. போலி-மார்க்சிசத்தின் அவநம்பிக்கைகொண்ட மற்றும் மிரட்சியடைந்த பிரதிநிதிகளது பல்வேறு வகையினர் அனைவரும், இதற்கு நேரெதிராக, தலைமையின் திவால்நிலையானது பாட்டளி வர்க்கம் அதன் புரட்சிகர இலட்சியத்தை நிறைவேற்றும் திறனற்றதாக இருப்பதையே “பிரதிபலிக்கிறது” என்பதான அனுமானத்தில் இருந்து, முன்செல்கின்றனர். நமது எதிரிகள் அனைவருமே இந்த சிந்தனையை தெளிவாக வெளிப்படுத்துவதில்லை என்றபோதிலும் அவர்கள் அனைவருமே (அதிஇடதுகள், அராஜகவாதிகள்; ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் பற்றி சொல்லவும் வேண்டாம்) தோல்விகளுக்கான பொறுப்பை அவர்களது தோள்களில் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்கு மாற்றுகின்றனர். துல்லியமாய் என்ன நிலைமைகளில் பாட்டாளி வர்க்கமானது சோசலிச புரட்சியை பூர்த்திசெய்யும் தகமையை பெற்றதாகும் என்பதை அவர்களில் எவரொருவரும் சுட்டிக்காட்டுவதில்லை.

தோல்விகளுக்கான காரணம் பாட்டாளி வர்க்கத்தின் சமூக பண்புகளில் தான் வேரூன்றியிருக்கிறது என்று நாம் ஒப்புக்கொள்வதானால், அதன்பின் நவீன சமுதாயத்தின் நிலை நம்பிக்கையற்றது என்று ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ சீரழிவின் நிலைமைகளின் கீழ், பாட்டாளி வர்க்கமானது எண்ணிக்கையளவிலும் வளரவில்லை கலாச்சாரரீதியாகவும் வளரவில்லை, ஆகவே அது ஒருநாள் புரட்சிகரக் கடமைகளின் மட்டத்திற்கு எழும் என்று எதிர்பார்ப்பதற்கு அங்கே எந்த அடிப்படையும் கிடையாது என்றாகிறது. மறுபக்கத்தில், இரத்தக்களரியான முதலாளித்துவக் குழப்பமான நிலையில் இருந்து தம்மை விடுதலை செய்து கொள்ள உழைக்கும் வெகுஜனங்கள் கொள்கின்ற உயிர்ப்பான, ஆழமான, மிகப்பாரிய உந்துதலுக்கும் காலாவதியாகிப்போன தொழிலாளர் தலைமையின் பழமைவாத, தேசியவாத, முற்றிலும் முதலாளித்துவத் தன்மைக்கும் இடையிலான ஆழமான முரண்பாடு குறித்து தெளிவு பெற்றுள்ள ஒருவருக்கு இதுதொடர்பான விடயம் முற்றிலும் வேறுவிதமாக தெரிகின்றது. பரஸ்பர இணக்கமற்ற இந்த இரண்டு போக்குகளில் இருந்து ஒன்றை நாம் தேர்வுசெய்தாக வேண்டும். [11]

சாக்ட்மனும் சரி பேர்ன்ஹாமும் சரி தமது முன்னோக்குகளின் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முயன்றிருக்கவில்லை. அவர்கள், உலக வரலாற்றின் பாதையை கணிப்பதெல்லாம் இருக்கட்டும், தமது சொந்த வலது-சாரி, ஏகாதிபத்திய-ஆதரவு அரசியல் பயணப்பாதையை முன்கணிக்கவும் கூட திறனற்றவர்களாய் இருந்தனர். அவர்களது அரசியல் சிந்தனையானது, தாங்கள் எதிர்வினையாற்றும் நிகழ்வுகளை அத்தியாவசியமான உலக வரலாற்று உள்ளடக்கத்தில் வைத்துக் காண முயற்சி செய்யாமல் “வாழும் நிகழ்வுகளது யதார்த்தத்தின்” அன்றாட படிமங்களது அடிப்படையில் அரசியல் எதிர்வினைகளை மேம்படுத்துவதைக் கொண்டதாய் இருந்த, மிகவும் மோசமான நடைமுறைவாதத்தினால் வழிநடத்தப்பட்டதாய் இருந்தது. ட்ரொட்ஸ்கி, அவர்களது அரசியல் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் கோட்பாட்டுவகை வாதத்திற்கு (eclecticism) கவனத்தை ஈர்த்தார்.

எதிரணித் தலைவர்கள் சமூகவியலை இயங்கியல் சடவாதத்தில் இருந்து பிரித்தனர். அரசியலை சமூகவியலில் இருந்து பிரித்தனர். அரசியல் வட்டத்தில், அவர்கள் போலந்திலான நமது கடமைகளை ஸ்பெயினிலான நமது அனுபவத்தில் இருந்து பிரித்தனர். பின்லாந்தில் நமது கடமைகளை போலந்திலான நமது நிலையில் இருந்து பிரித்தனர். வரலாறு ஒரு தொடர் விதிவிலக்கான நிகழ்வுகளாக உருமாற்றம் பெறுகிறது; அரசியல், ஒரு தொடர் மேம்படுத்தல்களாக உருமாற்றம் பெறுகிறது. இங்கே நாம், அந்த வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில், மார்க்சிசத்தின் சிதைவை, தத்துவார்த்த சிந்தனையின் சிதைவை, அரசியலை அதன் ஒவ்வொரு துகள்களாக பிரிக்கும் சிதைவை (disintegration) கொண்டிருக்கிறோம். அனுபவவாதமும் அதன் வளர்ப்பு-சகோதரனான, தோற்றப்பாட்டுவாதமும் மேலிருந்து கீழ் வரை மேலாதிக்கம் செலுத்துகின்றன. [12]

இந்த தர்க்கவிவாதத்தின் பாதையில், ட்ரொட்ஸ்கி, நிச்சயமாக பேர்ன்ஹாமையும் சாக்ட்மனையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதொரு விதத்தில், இயங்கியல் தர்க்கவியல் தொடர்பான கேள்வியை விவாதத்திற்குள்ளாக அறிமுகம் செய்தார். பேர்ன்ஹாம் இயங்கியலை அர்த்தமற்றது என்று கூறி நிராகரித்திருந்தார் என்பதையும், ஹேகலை “அவர் மனித சிந்தனையின் நூற்றாண்டு இறந்த பரம-குழப்பமானவர் என்று மடத்தனமாக விவரித்து அந்த பகட்டான பேராசிரியர் வெறுப்புமிழ்ந்தார் என்பதையும் ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார். [13] மக்ஸ் சாக்ட்மனை பொறுத்தவரை, அவருக்கு மெய்யியல் தொடர்பாக எந்த குறிப்பான ஆர்வமும் இருக்கவில்லை என்பதுடன் இயங்கியல் சடவாதத்திற்கும் புரட்சிகர அரசியலுக்குமான உறவு தொடர்பில் அவர் தன்னை இறுதியுண்மையறியாதவர் (agnostic) என்று அறிவித்துக் கொண்டார். இந்த பின்னணியில், ட்ரொட்ஸ்கியின் “மெய்யியல் திருப்பத்தை” நோக்கிய விடயத்தில் எந்தவிதமான சூழ்ச்சித்திட்டமோ அல்லது திடீர்மாற்றமோ அங்கே இருக்கவில்லை.

ஜேம்ஸ் பி. கனன், மார்ட்டின் அபேர்ன், மக்ஸ் சாக்ட்மன்

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலைக்கு அவசியமாயிருந்த ஒரு விஞ்ஞானபூர்வ முன்னோக்கின் அபிவிருத்திக்கு, ஒரு சிக்கலான, முரண்பாடான, ஆகவே துரிதமாக மாறிச்செல்கின்ற சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை மீதான பகுப்பாய்வின் ஒரு உயர்ந்தமட்டம் தேவையாக இருந்தது. இது நடைமுறைவாத தோற்றப்பாட்டுவாதத்தால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ தர்க்கத்தின் அடிப்படையில் பெறமுடியாததாக இருந்தது. தனக்கு மெய்யியல் நிபுணத்துவத்துவம் இருப்பதாக அவரது பாசாங்குகள் அத்தனையும் இருந்தாலும், விஞ்ஞானபூர்வமான வழிமுறை இல்லாதிருந்தமையானது, சோவியத் சமூகம் மற்றும் கொள்கைகள் மீதான பேர்ன்ஹாமின் பகுப்பாய்வு எந்த வரலாற்று உள்ளடக்கமும் இல்லாதிருந்தமை மற்றும் பெரும்பாலும் சமூகத்தின் மேற்பரப்பில் காணத்தக்கதாய் இருக்கின்ற நிகழ்ச்சிப்போக்குகள் குறித்த தோற்றப்பாட்டுவாத வருணனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் அதன் பக்குவப்படாத வெளிப்பாட்டைக் கண்டது. சிக்கலான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளுக்கு பேர்ன்ஹாமின் நடைமுறைவாத பொதுஅறிவுடனான அணுகுமுறையென்பது தத்துவார்த்தரீதியாக பிரயோசனமற்றதாய் இருந்தது. அவர், அப்போதிருந்த சோவியத் ஒன்றியத்தை, இலட்சியரீதியாக ஒரு உண்மையான தொழிலாளர்’அரசு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கருதினாரோ அதற்கு எதிராக நிறுத்திப்பார்த்தார். தேசியளவிலும் சர்வதேச அளவிலும் இருந்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கையும் சோவியத் ஒன்றியத்தின் சீரழிவிற்கு அடித்தளத்திலிருந்த சமூக மற்றும் அரசியல் சக்திகளது முரண்பாடுகளையும் விளக்குவதற்கு அவர் முனையவில்லை.

உரியவிதத்தில் ட்ரொட்ஸ்கியால் அவர் கடுமையாக தண்டிக்கப்பட்டார்:

பொதுவான சிந்தனையானது, முதலாளித்துவம், ஒழுக்கநெறிகள், சுதந்திரம், தொழிலாளர்' அரசு, போன்றவற்றை மாற்றத்திற்குட்படாத கருத்துக்களாக கொண்டு இயங்குகின்றது. அது முதலாளித்துவம் முதலாளித்துவத்திற்கு சமம், ஒழுக்கநெறிகள் ஒழுக்கநெறிகளுக்கு சமம், மற்றும் இதுபோல கருதிக்கொள்கின்றது. இயங்கியல் சிந்தனைமுறையானது அனைத்து விடயங்களையும் நிகழ்வுப்போக்குகளையும் அவற்றின் தொடர்ச்சியான மாற்றத்தின் ஊடாக ஆராய்கின்ற அதேவேளையில், ''A' என்பது 'A' ஆக இல்லாமல் போகின்ற, ஒரு தொழிலாளர் அரசு தொழிலாளர் அரசாக இல்லாமல் போகின்ற அந்த பொருளாதாய நிலைமைகளில் ஏற்படும் அந்த மாற்றங்களின் முக்கியமான வரம்பு எல்லையைக் கண்டறிகின்றது.

பொதுவான சிந்தனையின் அடிப்படையான பிழையானது, நிரந்தரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு யதார்த்தத்தின் இயங்கமற்றிருக்கும் வெளிப்பாட்டைக் கொண்டு அது தன்னை திருப்திப்படுத்திக் கொள்ள விரும்புகின்றது என்பதிலேயே தங்கியிருக்கிறது. இயங்கியல் சிந்தனையானது மிக நெருக்கமான அணுகுமுறைகள், திருத்தங்கள், ஸ்தூலப்படுத்தல்கள் மூலம் கருத்துருக்களுக்கு செழுமையையும் நெகிழ்வையும் கொடுக்கின்றது; உயிர்வாழும் நிகழ்வுபோக்குக்கு மிகவும் நெருக்கமாக அவற்றைக் கொண்டு வரும் 'ஒரு சதைப்பற்றுள்ள செறிவை' அது கொடுக்கிறது என்று கூட சொல்வேன். பொதுப்படையாக முதலாளித்துவம் இல்லை, மாறாக குறிப்பிட்டதொரு அபிவிருத்திக் கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு முதலாளித்துவம் உள்ளது. பொதுப்படையாக ஒரு தொழிலாளர் அரசு அல்ல, மாறாக ஏகாதிபத்திய சுற்றிவளைப்புக்கு ஆளான ஒரு பின்தங்கிய நாட்டில் ஒரு தொழிலாளர் அரசு உள்ளது. இவைபோன்று பலவும் உள்ளன.

இயங்கியல் சிந்தனைக்கு பொதுவான சிந்தனையுடன் (Vulgar thought) உள்ள தொடர்பு ஒரு அசையும் படத்திற்கும் அசைவற்ற நிழற்படத்திற்கும் உள்ள அதே வகையான தொடர்புதான். அசையும் படமானது ஒரு அசைவில்லா நிழற்படத்தை மதிப்பற்றதாக ஆக்கவில்லை, மாறாக அவற்றின் தொடர்ச்சியை அசையும் விதிகளின் படி தொகுத்துக் காட்டுகிறது. இயங்கியல், முக்கூற்று முடிபுகளை (syllogism) மறுப்பதில்லை, மாறாக நமது புரிதலை முடிவில்லாமல் மாறிக் கொண்டிருக்கும் உண்மையுடன் மிக நெருக்கமாகக் கொண்டு வரத்தக்க வகையில் முக்கூற்று முடிபுகளை தொகுப்பதற்கு நமக்கு கற்பிக்கிறது. ஹேகல் தனது ‘தருக்கவியல்’ (Logic) விதிகளின் ஒரு வரிசையை ஸ்தாபித்தார்: அளவு பண்பாக மாறுவது (change of quantity into quality), முரண்பாடுகளின் வழியான அபிவிருத்தி (development through contradictions), உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமிடையிலான மோதல் (conflict of content and form), தொடர்ச்சியில் இடையூறு (interruption of continuity), சாத்தியக்கூறு தவிர்க்கவியலாத்தன்மையாக மாறுதல் (change of possibility into inevitability) போன்றவை. ஆரம்பநிலைப் பணிகளுக்கு எளிய முக்கூற்று முடிபு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இவை தத்துவார்த்த சிந்தனைக்கு முக்கியமானவை. [14]

மிக ஆழமான சிந்தனைகளை விளங்கக்கூடிய மொழியில் வெளிப்படுத்தக்கூடிய, உண்மையாகவே மகத்தான எழுத்தாளர்கள் என்னும் அபூர்வ வகையை சேர்ந்தவராக ட்ரொட்ஸ்கி இருந்தார். ஆயினும் தெளிவைக் கொண்டுவர புத்திஜீவித ஆழத்தை அவர் விலைகொடுக்கவில்லை. மாறாக, அந்தத் தெளிவானது அத்தியாவசிய தத்துவார்த்தப் பிரச்சினைகளிலான அவரது நிபுணத்துவத்தின் ஒரு வெளிப்பாடாய் இருந்தது. இந்தப் பத்தி இயங்கியல் தர்க்கம் குறித்த ட்ரொட்ஸ்கி மற்றும் லெனினின் கருத்தாக்கங்களது மலைப்பூட்டும் ஒன்றிணைந்ததன்மையை வெளிப்படுத்துவதை கவனத்தில் கொள்வதும் பயனுள்ளதாகும். ஹேகலின் தர்க்க விஞ்ஞானத்தின் சாரம் (Conspectus of Hegel’s Science of Logic - போல்ஷிவிக் தலைவரது எழுத்து தேர்வுநூல் தொகுதி 38 இல் வெளியான மெய்யியல் குறித்த லெனினின் குறிப்புப் புத்தகங்கள் இன் ஒரு பகுதியைக் கொண்டது) இல், லெனின், ஹேகல் குறித்து இவ்வாறு கூறுகிறார்:

தருக்கமானது அறிகை பற்றிய விஞ்ஞானமாகும். அது அறிவின் தத்துவம். அறிவு என்பது மனிதனின் ஊடாக இயற்கையின் பிரதிபலிப்பு ஆகும். ஆயினும் இது ஒரு எளிமையான, உடனடியான, முழுமையான பிரதிபலிப்பாக இருப்பதில்லை, மாறாக தொடரான பொதுப்படைகளது, கருத்தாக்கங்கள், சட்டங்கள் மற்றும் இன்னபிறவற்றின் உருவாக்கம் மற்றும் அபிவிருத்தியினது ஒரு நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது. இந்த கருத்தாக்கங்கள், சட்டங்கள் இன்னபிற (சிந்தனை, விஞ்ஞானம் = “தருக்க சிந்தனை”) நிபந்தனைக்குட்பட்டும், தோராயமாகவும், எப்போதும் இயங்கிக் கொண்டும் வளர்ச்சியடைந்து கொண்டும் இருக்கும் இயற்கையின் சர்வசகல நியதியால்-ஆளப்படுகின்ற தன்மையைத் தழுவியிருக்கின்றன. இங்கே உண்மையில், புறநிலையாக, மூன்று உள்ளடங்கங்கள் இருக்கின்றன: 1) இயற்கை 2) மனித அறிகை = மனித மூளை (அதே இயற்கையின் மிக உயரிய விளைபொருளாக) மற்றும் 3) மனித அறிகையில் இயற்கையின் பிரதிபலிப்பின் வடிவம், இந்த வடிவம் தான் துல்லியமாக கருத்தாக்கங்கள், சட்டங்கள், வகைப்பாட்டுவகைகள் இன்னபிறவற்றைக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையை, அதனை முழுமையடைந்ததாக, அதன் “உடனடி ஒட்டுமொத்த தன்மையை” புரிந்துகொள்ள =பிரதிபலிக்க= முடியாது, பொதுப்படைகள், கருத்தாக்கங்கள், சட்டங்கள், உலகின் ஒரு விஞ்ஞானபூர்வமாக விளக்கம், மற்றும் பிறவற்றை உருவாக்கி, அவன் நிரந்தரமாக இதற்கு நெருக்கமாக மட்டுமே வர முடியும். [15]

1940 ஏப்ரலில், சிறுபான்மையானது, SWP இல் இருந்து முறித்துக்கொண்டு அதன் “தொழிலாளர் கட்சி”யை உருவாக்கியது. பேர்ன்ஹாம் ஒரு மாதத்திற்கும் சற்று அதிக காலம்தான் அதில் பதவி வகித்தார். மே 21 அன்று, சாக்ட்மன் உடன் இணைந்து அவர் ஸ்தாபித்திருந்த அந்த அமைப்பில் இருந்து விலக இராஜினாமா கடிதம் அனுப்பினார். அதில் அவர் சோசலிசத்தின் மீதான அவரது முற்றுமுழுதான மறுதலிப்பை அறிவித்தார். இயங்கியல் சடவாதத்தின் மீதான தனது நிராகரிப்பில் இருந்தான இறுதி முடிவுகளைத் தேற்றம் செய்து பேர்ன்ஹாம் பின்வருமாறு எழுதினார்: “சீர்திருத்தவாத, லெனினிச, ஸ்ராலினிச அல்லது ட்ரொட்ஸ்கிச வகைப்பட்ட எதுவாக இருந்தாலும் மார்க்சிச இயக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்திருக்கின்ற அத்தனை முக்கியமான நம்பிக்கைகளிலும், அதன் பாரம்பரிய வடிவத்தில் நான் ஏற்றுக்கொள்வதான எதுவொன்றும் கிட்டத்தட்ட இல்லை.” [16] எதிரணியின் தத்துவாசிரியர் விட்டோடியதை அறிந்து ட்ரொட்ஸ்கி அவரது வழக்கறிஞரான (மற்றும் SWP இன் உறுப்பினர்) ஆல்பேர்ட் கோல்ட்மனுக்கு எழுதினார், “பேர்ன்ஹாம் இயங்கியலை அங்கீகரிக்கவில்லை என்றாலும் இயங்கியல் தனது வலையிலிருந்து அவரைத் தப்பவிட்டு விடவில்லை. சிலந்தி வலையில் சிக்கிய ஒரு பூச்சியைப் போல அவர் மாட்டியிருக்கிறார்.” [17]

தொழிலாளர் கட்சியைக் கைகழுவிய பின்னர், பேர்ன்ஹாம் முதலாளித்துவ அரசியலின் அதிவலதுக்கு துரிதமாக நகர்ந்தார், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக முன்கூட்டிய அணுஆயுதப் போருக்கான வக்காலத்துவாதியாக ஆனார், 1987 இல் அவர் இறப்பதற்கு சற்று முன்பான காலத்தில், ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் சுதந்திரப் பதக்கம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். சாக்ட்மனின் பரிணாமவளர்ச்சி சற்று கூடுதல் காலம் எடுத்ததாக இருந்தது. அவரது ”மூன்றாவது முகாம்” “வாஷிங்டனும் வேண்டாம் மாஸ்கோவும் வேண்டாம்” என்ற சுலோகத்தால் வரையறுக்கப்பட்டதாய் இருந்தது. இறுதியாக, சாக்ட்மன் வாஷிங்டன் ஆதரவுக்கு அவர் போட்டிருந்த தடையைக் கைவிட்டார், அமெரிக்காவினால் நடத்தப்பட்ட பனிப்போருக்கு வக்காலத்துவாதியாக ஆனார். இது இறுதியில் 1961 இல் கியூபாவின் Pigs விரிகுடா படையெடுப்புக்கும் அந்த தசாப்தத்தின் பிந்தைய காலத்தில், வடக்கு வியட்நாமின் மீதான குண்டுவீச்சுக்கும் முழுமையான ஆதரவளிப்பதையும் சூழ்ந்திருந்தது.

SWP சிறுபான்மையுடனான உடைவுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி, மேற்கு ஐரோப்பாவில் போரின் திடீர் விரிவாக்கத்திற்கு பதிலிறுக்க அழைக்கப்பட்டிருந்த நான்காம் அகிலத்தின் அவசரகால மாநாட்டிற்கான அறிக்கை (Manifesto) எழுதுவதை நோக்கி தனது கவனத்தை திருப்ப கூடியதாக இருந்தது. 1939 இலையுதிர் காலத்தில் போலந்து நாஜி ஜேர்மனியால் துரிதமாகக் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து “Sitzkrieg” (இருப்பு யுத்தம்) என்று அழைக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ மோதலில் ஒரு நெடிய இடைவேளை பின்தொடர்ந்தது. ஆனால் 1940 ஏப்ரலில் ஹிட்லர் போரை ஒரு புதிய கட்டத்திற்குத் முன்னெடுத்தார். ஜேர்மனியின் படைகள் மேற்கு நோக்கி நகர்ந்து, முதலில் மே மாதத்தில் நோர்வே மற்றும் டென்மார்க்கைக் கைப்பற்றின, அதன்பின் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸை ஆக்கிரமித்தன.

ட்ரொட்ஸ்கியின் அறிக்கை முதலாளித்துவ-ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான ஒரு தட்டியெழுப்பும் அழைப்புடன் தொடங்கியது.

நான்காம் அகிலம், மக்களை படுகொலை செய்ய இராணுவப் படைகளை ஏவிவிட்டிருக்கும் அரசாங்கங்களை நோக்கித் திரும்பவில்லை அல்லது இந்த அரசாங்கங்களுக்குப் பொறுப்பான முதலாளித்துவ அரசியல்வாதிகளை நோக்கித் திரும்பவில்லை அல்லது போரில் ஈடுபட்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் அதிகாரத்துவத்தை நோக்கித் திரும்பவில்லை. நான்காம் அகிலம், உழைக்கும் ஆண்கள் பெண்கள், சிப்பாய்கள் மற்றும் மாலுமிகள், அழிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற காலனித்துவ நாடுகளின் மக்கள் ஆகியோரை நோக்கித் திரும்புகிறது. ஒடுக்குமுறையாளர்கள், சுரண்டல்காரர்கள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளுடன் நான்காம் அகிலத்திற்கு எந்தவிதமான ஒட்டுமில்லை உறவுமில்லை. இது உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், மற்றும் சுரண்டப்படுகின்ற மக்களது உலகக் கட்சியாகும். இந்த அறிக்கை அவர்களுக்கானதாகும். [18]

அந்த அறிக்கை போர் வெடிப்புக்கான உத்தியோகபூர்வ விளக்கங்கள் அத்தனையையும் நிராகரித்தது. “மக்களை போதையூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற அத்தனைவிதமான கட்டுக்கதைகளுக்கும் நேரெதிராய்”, ட்ரொட்ஸ்கி எழுதினார், “வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு, பாசிசம், காலனித்துவ ஒடுக்குமுறை ஆகிய மற்ற அனைத்து சமூகத் தீமைகளையும் போலவே போருக்கும் முக்கிய காரணமாக இருப்பது உற்பத்தி சாதனங்கள் மீதான தனியார் உடைமையும் அதனுடன் சேர்ந்து இந்த அடித்தளத்தின் மீது தங்கியிருக்கின்ற முதலாளித்துவ அரசுமே ஆகும்.” [19] முதலாம் உலகப் போரில் போலவே, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான போட்டியே இராணுவ மோதலின் வெடிப்பிற்கு அடித்தளமாக இருக்கின்றது.

லியோன் ட்ரொட்ஸ்கி

முதலில் இருந்தே, அந்த உலகளாவிய மோதலின் பிரதான காரணகர்த்தாக்களாக பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை இருக்கையில், ஜப்பான் ஆசியாவில் அதன் நலன்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. எனினும் பின்புலத்தில் அமெரிக்காவின் நிழல் பதுங்கிக்கொண்டிருந்தது. அது, “தனது உலக மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த பிரம்மாண்டமான மோதலில் தலையீடு செய்யும் என ட்ரொட்ஸ்கி முன்கணித்தார். அமெரிக்க முதலாளித்துவத்திற்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான மோதலின் வடிவமும் நேரமும் இன்னும் தெரியாதிருக்கலாம், வாஷிங்டனுக்கே கூட அது தெரியாது. ஜப்பானுடனான போரானது பசிபிக் பெருங்கடலில் “உயிர்வாழும் இடத்திற்கான” ஒரு மோதலாக இருக்கும். அட்லாண்டிக்கிலான போர், உடனடியாக ஜேர்மனிக்கு எதிராக திருப்பப்பட்டிருந்தாலும் கூட, அது பிரிட்டனின் பாரம்பரியத்திற்கான ஒரு மோதலாக இருந்திருக்கும்.” [20]

ஆளும் உயரடுக்கினர் “தந்தைநாட்டை பாதுகாக்க” போர் நடத்திக் கொண்டிருந்தனர் என்பதான கூற்றை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். முதலாளித்துவ வர்க்கம், ”ஒருபோதும் தனது தந்தைநாட்டிற்காக தந்தைநாட்டைப் பாதுகாப்பதில்லை. தனியார் சொத்து, தனிச்சலுகைகள், இலாபங்கள் ஆகியவற்றையே அவர்கள் பாதுகாக்கின்றனர்... உத்தியோகபூர்வ தேசப்பக்தி என்பது சுரண்டும் நலன்களுக்கான ஒரு முகமூடி ஆகும். வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள் இந்த முகமூடியை அலட்சியத்துடன் தூக்கியெறிகிறார்கள்.” என்று அவர் எழுதினார், [21] ஜனநாயகக் கொள்கைகளுக்கான பாசாங்குத்தனமான அழைப்பைப் பொறுத்தவரை, இவை தேசப்பக்தி அறிவிப்புகளைக் காட்டிலும் குறைவான மோசடியானவை அல்ல. அனைத்து ஜனநாயகங்களும், இதில் முதலிடத்தில் இருந்தது பிரிட்டன், ஹிட்லரை அதிகாரத்துக்கு உயர்த்த உதவின. அவையனைத்துமே, தமது செல்வத்தில் ஒரு கணிசமான பகுதியை காலனித்துவ மக்களை மிருகத்தனமாக சுரண்டுவதின் மூலமாக ஈட்டின.

ஹிட்லரின் ஆட்சியானது “ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தின் ஒரு தெளிந்த இரசாயன வடித்தெடுப்பு” என்பதைதவிர வேறில்லை. ஜனநாயக சக்திகள் பாசிசத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தன என்பதான கபடமான கூற்று வரலாற்றின் மற்றும் யதார்த்தத்தின் ஒரு அப்பட்டமான அரசியல் திரிப்பாக இருந்தது.

தமது நாளில் ஹிட்லரை போல்ஷிவிசத்திற்கு எதிரான ஒரு புனிதப் போராளியாக போற்றிய அதே ஜனநாயக அரசாங்கங்கள்தான், இப்போது நரகத்தின் அடிபாதாளத்தில் இருந்து எதிர்பாராத விதமாய் அவிழ்த்து விடப்பட்டு வந்திருந்த ஒருவகை சாத்தானாய், ஒப்பந்தங்கள், எல்லைக் கோடுகள், விதிகள் மற்றும் நெறிமுறைகளின் புனிதத்தை மீறுகின்றவராய், அவரைக் காட்டுகின்றன. ஹிட்லர் இல்லாவிட்டால் முதலாளித்துவ உலகம் ஒரு பூந்தோட்டத்தைப் போல பூத்துக் குலுங்கியிருக்குமாம். என்ன ஒரு கொடுமையான பொய்! தனது மண்டையில் ஒரு கணக்கு எந்திரத்தையும் கைகளில் எல்லையற்ற அதிகாரத்தையும் கொண்டிருந்த இந்த ஜேர்மன் வலிப்புநோய்க்காரர் ஆகாயத்தில் இருந்து விழுந்தவருமில்லை, அல்லது நரகத்தில் இருந்து எழுந்தவருமில்லை: அவர் ஏகாதிபத்தியத்தின் அத்தனை அழிவுசக்திகளது உருவடிவேயன்றி வேறொன்றுமில்லை. [22]

அதன்பின் ட்ரொட்ஸ்கி, போர் வெடிப்புக்கு உடந்தையாக இருப்பதில் ஸ்ராலினிச ஆட்சி வகித்த பங்கினைக் குறித்த ஆய்வை நோக்கித் திரும்பினார்.

உலகப் போருக்கு ஆரம்ப சமிக்கை காட்டியதும், நேரடியாக போலந்து மக்கள் அடிமைப்படுவதற்கு இட்டுச் சென்றதுமான, ஹிட்லருடனான ஸ்ராலினின் கூட்டணியானது, சோவியத் ஒன்றியத்தின் பலவீனத்தில் இருந்தும் ஜேர்மனியை எதிர்த்துநிற்க கிரெம்ளின் பீதி கொண்டிருந்ததில் இருந்தும் விளைந்ததாகும். இந்த பலவீனத்திற்கான பொறுப்பும் அதே கிரெம்ளினுக்கே உரியதாகும், ஆளும்சாதிக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பெரும் பாதாளத்தை திறந்து விட்டிருந்த அதன் உள்நாட்டுக் கொள்கை; உலகப் புரட்சியின் நலன்களை ஸ்ராலினிசக் கூட்டத்தின் நலன்களுக்காய் தியாகம் செய்த அதன் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றால் விளைந்ததாகும். [23]

ஸ்ராலினின் குற்றங்கள் ஒருபக்கம் இருந்தாலும், தவிர்க்கமுடியாததாக நடக்கும் என்று ட்ரொட்ஸ்கி நம்பிய சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜிக்களின் படையெடுப்பு கிரெம்ளின் சர்வாதிகாரத்தின் உயிர்பிழைப்பை மட்டுமல்ல சோவியத் ஒன்றியத்தின் உயிர்பிழைப்பையே கேள்விக்குறியாக்கியது. புரட்சியின் வெற்றிகள், அவை ஸ்ராலினிசத்தால் எவ்வளவு உருத்திரிபு செய்யப்பட்டிருந்தாலும் சிதைக்கப்பட்டிருந்தாலும், அவை ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட விடமுடியாது. “மாஸ்கோ சிலவராட்சிக்கு எதிராக ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்தை நடத்துகின்ற அதேவேளையில்” “சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஏகாதிபத்தியத்திற்கு உதவும் எந்தக் கொள்கையையும் நான்காம் அகிலம் தீர்மானகரமாக நிராகரிக்கிறது.” என ட்ரொட்ஸ்கி பிரகடனம் செய்தார். அவர் தொடர்ந்தார்:

சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பானது, கோட்பாடளவில் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்புடன் ஒன்றிணைகின்றது. அறியாமையுடனான பிற்போக்குத்தனத்துடனான ஸ்ராலினிசத்தின் மூளையில் உற்பத்தியான தனியொரு நாட்டில் சோசலிசம் தத்துவத்தை நாங்கள் முற்றுமுதலாய் நிராகரிக்கிறோம். உலகப் புரட்சி மட்டுமே சோசலிசத்தின் நலன்களின் பொருட்டு சோவியத் ஒன்றியத்தை காப்பாற்ற முடியும். ஆனால் உலகப் புரட்சியானது கிரெம்ளின் சிலவராட்சியையும் தப்பிக்கவியலாமல் இல்லாதொழிப்பதையும் உடன் கொண்டுள்ளது. [24]

போர் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வானது, உலகப் புரட்சிகரப் போராட்டங்களுக்கான ஒரு பாரிய அரங்காகும் என்று அவர் உறுதியாக நம்பிய, காலனித்துவ பிராந்தியங்களிலான நிகழ்வுகளையும் சூழ்ந்ததாய் இருந்தது. அவர் எழுதினார், “இப்போதைய போர் ஒட்டுமொத்தமாக காலனிகள் தொடர்பான ஒரு போராகும். அவை சிலரால் வேட்டையாடப்படுகின்றன; அவற்றை விட்டுக்கொடுக்க மறுக்கின்ற மற்றவர்களால் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு தரப்புக்குமே அவற்றை மனமுவந்து விடுதலை செய்யும் எண்ணம் கொஞ்சமுமில்லை. வீழ்ச்சி கண்டுவருகின்ற பெருநகர மையங்கள் காலனிகளில் இருந்து எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவையும் கறந்து கொண்டு, பதிலுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு குறைவாக திருப்பித்தருகின்ற உந்துதலில் இருக்கின்றன. அடிமைப்பட்ட மக்களின் நேரடியான மற்றும் பகிரங்கமான புரட்சிகரப் போராட்டம் மட்டுமே அவர்களது விடுதலைக்கான பாதையை உருவாக்கித்தர முடியும்.” [25]

ஜேர்மன்-சோவியத் உடன்படிக்கைக்கு பின்னர் ஸ்ராலினும் ரிப்பென்ட்டோர்ப்பும் கைகுலுக்கிறார்கள்

சீனா, இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலான பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளை ட்ரொட்ஸ்கி மதிப்பீடு செய்தார். ஒவ்வொரு சூழ்நிலையிலும், குறிப்பான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தபோது, ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியானது ஊழலடைந்த மற்றும் சமரசப்பட்ட தேசிய ஆளும் உயரடுக்கிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவதை சார்ந்ததாய் இருந்தது. 1917 இல் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துக்கு வழிநடத்திய நிரந்தரப் புரட்சி தத்துவம் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த அத்தனை நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்திற்கு முழுமையான செல்தகைமையை தக்கவைத்துக் கொண்டிருந்த தத்துவமாக இருந்தது. ஏகாதிபத்திய ஆட்சியைத் தூக்கியெறிவதானது தொழிலாளர்’ அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் விலக்கமுடியாமலும் பிரிக்கமுடியாததாகவும் பிணைந்ததாக இருந்தது. மேலும் ரஷ்ய உதாரணம் நிரூபணம் செய்திருந்தவாறாக, ஒரு நாடு, தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிக்கும் நிலைமைகளை எப்போது கொண்டிருக்கும் என்பதை முன்கூட்டித் தீர்மானிக்கின்றதான சிறப்பு ஒழுங்கு ஏதும் கிடையாது. ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

நிரந்தரப் புரட்சி முன்னோக்கானது எந்தவிதத்திலும், பின்தங்கிய நாடுகள் முன்னேறிய நாடுகளில் இருந்தான சமிக்கைக்கு காத்திருக்க வேண்டும் என்றோ, அல்லது பெருநகர மையங்களது பாட்டாளி வர்க்கம் தம்மை விடுவிக்கும் வரை காலனித்துவ மக்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றோ அர்த்தப்படுத்தவில்லை. தனக்கு உதவுபவனுக்கே உதவி வந்துசேருகிறது. சாதகமான நிலைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நாட்டிலும், அது காலனித்துவ நாடாக இருந்தாலும் சரி ஏகாதிபத்திய நாடாக இருந்தாலும் சரி, தொழிலாளர்கள் புரட்சிகரப் போராட்டத்தை அபிவிருத்தி செய்தாக வேண்டும்; அதன்மூலமாக பிற நாடுகளது தொழிலாளர்களுக்கு ஒரு உதாரணத்தை அமைத்துத்தர வேண்டும். முன்முயற்சி, செயல்பாடு, தீர்க்கமான உறுதி மற்றும் துணிச்சல் ஆகியவை மட்டுமே “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற சுலோகத்தை உண்மையாகவே நனவாக்க முடியும். [26]

அறிக்கையின் நிறைவுப் பகுதிகளில் ட்ரொட்ஸ்கி, குட்டி-முதலாளித்துவ சிறுபான்மைக்கு எதிரான கன்னைப் போராட்டத்தின் தொடக்கக் கட்டத்தில் அவர் எழுப்பியிருந்ததும், அவரது வாழ்வின் இறுதி வாரங்களில் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்திருந்ததுமான மையமான தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்குத் திரும்பினார். இரண்டாம் உலகப் போரின் வெடிப்பானது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்த பாரிய அமைப்புகள் --அவை சமூக ஜனநாயக அமைப்புகளோ, ஸ்ராலினிச அமைப்புகளோ, அராஜகவாத அமைப்புகளோ அல்லது வேறேதேனும் சீர்திருத்தவாத வகை அமைப்புகளோ-- அனைத்தின் காட்டிக்கொடுப்புகளின் மூலமாகத் தயாரிப்பு செய்யப்பட்டதாக இருந்தது. அப்படியானால், தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கான பாதையை எவ்வாறு கண்டுகொள்வது?

ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அத்தியாவசியமான நிலைமைகளைத் திறனாய்ந்தார்: ஆளும் வர்க்கத்தை நோக்குநிலை பிறழச் செய்கின்ற ஒரு அரசியல் முட்டுசந்து நிலையை உருவாக்கும் ஒரு நெருக்கடி; பெரும் முதலாளிகளுக்கு அவற்றின் ஆதரவை கொடுப்பதை இல்லாது செய்கிறபடியாய், நிலவும் நிலைமைகள் குறித்த நடுத்தர வர்க்கத்தின் மிகப்பெரும் பிரிவுகள் மத்தியிலான தீவிர அதிருப்தி; நிலைமை சகிக்க முடியாதிருக்கின்றது என்ற தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக மனஉறுதி மற்றும் தீவிரப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான விருப்பம்; மற்றும் இறுதியாக, தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுக்குள்ளாக ஒரு வேலைத்திட்டமும் தீர்மானகரமான தலைமையும் இருப்பது. ஆயினும் இந்த நிலைமைகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு வேகத்தில் அபிவிருத்தி காணலாம். முதலாளித்துவ வர்க்கம் தான் ஒரு அரசியல் முட்டுசந்தில் இருக்கையில், நடுத்தர வர்க்கம் நிலவும் நிலைமைகளுக்கு மாற்றுகளைத் தேடுகின்ற அதேவேளையில், கடந்த தோல்விகளது பாதிப்பினால் தொழிலாள வர்க்கமானது தீர்மானகரமான போராட்டங்களுக்குள் நுழைவதற்கு தயக்கத்தை வெளிப்படுத்தக் கூடும். போர் வெடிப்புக்கு முன்னைய ஆண்டுகளின் போதான காட்டிக்கொடுப்புகள் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு ஊக்கமற்ற மனோநிலையை உருவாக்கியிருந்தன என்பதை ட்ரொட்ஸ்கி ஒப்புக்கொண்டார். “ஆயினும், அத்தகைய மனோநிலைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மை குறித்து ஒருவர் மிகைமதிப்பீடு செய்யக் கூடாது” என்று ட்ரொட்ஸ்கி அறிவுறுத்தினார். “நிகழ்வுகள் தான் அவற்றை உருவாக்கின. நிகழ்வுகளே அவற்றை அகற்றி விடும்.” [27]

இறுதி ஆய்வில், ஒரு அடிப்படையான சமூக நெருக்கடியின் முரண்பாடான கூறுகள் இடையிலான சிக்கலான இடையுறவைக் கணக்கிலெடுக்கின்ற போது, புரட்சியின் தலைவிதியானது தலைமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் தங்கியிருக்கின்றது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கையில், ட்ரொட்ஸ்கி இரண்டு சாத்தியப்படக்கூடிய கேள்விகளை முன்வைத்தார்: “இரண்டு அகிலங்கள் [சமூக ஜனநாயக இரண்டாம் அகிலம் மற்றும் கோமின்டேர்ன் என்று அறியப்பட்ட ஸ்ராலினிச கம்யூனிச அகிலம்] ஏகாதிபத்தியத்திற்கு சேவையாற்றுகையில் உண்மையான புரட்சிகரக் கூறுகள் ஒரு சிறிய சிறுபான்மையாக இருக்கின்ற மட்டத்திற்கு, இந்த முறையும் புரட்சி காட்டிக்கொடுக்கப்படும் நிலை ஏற்படாதா? வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தலைமைகொடுக்கும் திறன்படைத்த ஒரு கட்சியை சரியான காலத்தே தயாரிப்புசெய்வதில் நாம் வெற்றியடைவோமா?” [28]

எட்டு மாதங்களுக்கு முன்பாக 1939 செப்டம்பரில் அவர் எழுதிய “சோவியத் ஒன்றியமும் போரும்” என்ற கட்டுரையில், ட்ரொட்ஸ்கி, இரண்டாம் உலகப் போரின் இறுதிவிளைவானது சோசலிசப் புரட்சி முன்னோக்கின் செல்தகைமையை தீர்மானிப்பதில் தீர்மானகரமானதாக நிரூபணமாகும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். “இந்த சோதனையின் முடிவுகள்”, “நவீன சகாப்தத்தை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தமாக நாம் செய்திருக்கும் மதிப்பீட்டிற்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டிருக்கும்”. என அவர் எழுதியிருந்தார். [29] எனினும் இந்த வசனமானது, காரணகாரியமற்ற விதத்தில், உலக நிலைமையின் விசையழுத்தத்தையும் அது தொழிலாள வர்க்கத்திற்கு முன்நிறுத்திய அபாயங்களையும் வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு அப்போதைய அபிப்பிராயத்தின், ஒரு தற்செயலாக கூறப்பட்ட கருத்தின் தன்மையைக் கொண்டதாய் இருந்தது. ஒரு மாற்றமில்லாத வரலாற்று கால அட்டவணையாக கருத்திலெடுக்கும் நோக்கத்திற்காக அது கூறப்பட்டிருக்கவில்லை. 1940 ஏப்ரலில், இதனை தொடர்ந்து எழுதப்பட்ட ஒரு ஆவணத்தில், ட்ரொட்ஸ்கி மார்க்சிச பகுப்பாய்வின் வழிமுறை குறித்த ஒரு இன்றியமையாத புள்ளியை எடுத்துரைத்தார்:

ஒவ்வொரு வரலாற்று முற்கணிப்புகளும் (prognosis) எப்போதும் நிபந்தனைக்குட்பட்டதாகவே இருக்கிறது, முற்கணிப்புகள் எவ்வளவிற்கு அதிக ஸ்தூலமானதாக இருக்கிறதோ, அவ்வளவிற்கு அதிக நிபந்தனைக்குட்பட்டதாக அது இருக்கும். ஒரு முற்கணிப்பானது குறிப்பிட்டதொரு தேதியில் பணமாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பணவாக்குறுதிச் சீட்டாக இருப்பதில்லை. முற்கணிப்புகள் நிகழ்வுகளின் குறிப்பிட்ட போக்குகளை மட்டுமே வரையறை செய்து காட்டுகிறது. எனினும், இந்த நிகழ்ச்சிப்போக்குகளுடன் சேர்ந்து, வேறுபட்ட சக்திகளும் மற்றும் போக்குகளும் கூட இயங்குகின்றன, அவை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கும். ஸ்தூலமான நிகழ்வுகள் குறித்த துல்லியமான கணிப்புகளைத் தேடும் அனைவரும் ஜோதிடர்களிடம் தான் ஆலோசனை பெற வேண்டும். மார்க்சிச முற்கணிப்பானது நோக்குநிலையை வழங்க மட்டுமே உதவுகிறது. [30]

மே மாதத்திற்குள்ளாக, போர் மற்றும் அதன் உடனடி இறுதிவிளைவைத் தாண்டி விரிகின்ற பகுப்பாய்வுடனான ஒரு முன்னோக்கின் அடிப்படையில் நான்காம் அகிலத்தை நோக்குநிலைகொள்ள ட்ரொட்ஸ்கி விழைந்து கொண்டிருந்தார் என்பது தெளிவானது. போரானது முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் நெருக்கடியின் உச்சமாக மட்டும் இருக்கவில்லை; முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி மற்றும் உலகப் புரட்சியில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கமாகவும் அது இருந்தது. நான்காம் அகிலத்தின் காரியாளர்கள் ஒரு நீண்ட போராட்ட காலகட்டத்திற்கு தயாரிப்பு செய்ய வேண்டியிருந்தது. “புரட்சிகரத் தலைமையின் முதிர்ச்சியின்மையின் காரணத்தால் இந்த அல்லது அந்த எழுச்சி தோல்வியில் முடியலாம், நிச்சயமாக அப்படி முடியும். ஆனால் இது ஒரேயொரு எழுச்சி குறித்த பிரச்சினையல்ல. இது ஒரு ஒட்டுமொத்த புரட்சிகர சகாப்தத்தைக் குறித்த பிரச்சினையாகும்.” என்பதை அவர் நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையான போரின் இந்த மதிப்பீட்டிலிருந்து என்ன முடிவு வந்தது?

இதனை ஒரு நீண்டகால மரண வேதனை என்று கருதாதுவிட்டால், முதலாளித்துவ உலகிற்கு வெளியேற வழியேதும் இல்லை. பல தசாப்தங்களாக இல்லாவிட்டாலும் நீண்ட காலமாக, போர்கள், எழுச்சிகள், சண்டையின் சுருக்கமான இடைவெளிகள், புதிய போர்கள் மற்றும் புதிய எழுச்சிகள் ஆகியவற்றிற்கு தயாரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஒரு இளம் புரட்சிகரக் கட்சியானது இந்த முன்னோக்கிலேயே தனக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டாக வேண்டும். அது தன்னை சோதித்துக் கொள்வதற்கும், அனுபவத்தைத் திரட்டுவதற்கும், முதிர்ச்சியடைவதற்கும் போதுமான சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் வரலாறு அதற்கு வழங்கும். முன்னணிப்படையின் வரிசைகள் எத்தனை துரிதமாக ஒன்றிணைகிறதோ, அத்தனையளவுக்கு இரத்தக்களரியான கொந்தளிப்புகளது சகாப்தத்தின் காலம் சுருங்கும், நமது கோளம் குறைவான அழிவுக்கு உட்படும். ஆயினும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புரட்சிகரக் கட்சி அமர்கின்ற வரையில் மாபெரும் வரலாற்றுப் பிரச்சினை தீர்க்கப்படப் போவதில்லை. வேகங்கள் மற்றும் கால இடைவெளிகளது கேள்வி பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டது தான்; என்றாலும் அது பொதுவான வரலாற்று முன்னோக்கையோ அல்லது நமது கொள்கையின் திசையையோ மாற்றிவிடாது. முடிவு எளிமையான ஒன்று: பாட்டாளி வர்க்க முன்னணிப்படைக்கு கல்வியூட்டுகின்ற மற்றும் அதனை ஒழுங்கமைக்கின்ற வேலையானது பத்துமடங்கு ஆற்றலுடன் செய்யப்பட அவசியமாக உள்ளது. துல்லியமாக இதில் தான் நான்காம் அகிலத்தின் பணி அமைந்திருக்கிறது. [31]

நான்காம் அகிலத்தின் அவசர மாநாட்டிற்கான அறிக்கையை நிறைவுசெய்த பின்னர், ட்ரொட்ஸ்கியின் சளைக்காத, உடல் வருத்துகின்ற, நெருக்கமான வேலை அட்டவணையானது, துல்லியமான தேதி தெரியாவிட்டாலும் கூட அவர் வெகுகாலத்திற்கு முன்பே எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வினால், தடைப்பட்டது. 1940 மே 24 அன்று அதிகாலை, மெக்சிகோவின் ஓவியரும் வெறிகொண்ட ஸ்ராலினிஸ்டுமான டாவிட் அல்ஃபாரோ சிக்கேய்ரோஸ் தலைமையில் படுகொலையாளர்களின் குழு ஒன்று, 45-காலிபர் தாம்ஸன் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 30-காலிபர் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் எரி குண்டுகள் சகிதமாக, நான்காம் அகிலத்தின் தலைவருக்கு எதிராக ஒரு தாக்குதல் நடத்தியது.

டாவிட் அல்ஃபாரோ சிக்கேய்ரோஸ்

படுகொலையாளர்கள் Avenida Viena இல் இருந்த கிராமப்புற வீட்டை, உடைத்து உள்ளே நுழைய வேண்டியிருக்கவில்லை. காவலாளி, ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட், இரும்பு வாசல்கதவை திறந்து அவர்களை உள்ளே நுழைய விட்டிருந்தார். அந்த துப்பாக்கிதாரிகளுக்கு வளாகத்தின் ஒட்டுமொத்த வரைபடமும் பரிச்சயமாய் இருந்தது. ஒரு குழு வில்லாவில் ட்ரொட்ஸ்கி, அவரது மனைவி நத்தாலியா மற்றும் அவர்களது பேரன் ஸெவா ஆகியோர் இருந்த படுக்கை அறை இருந்த பகுதியை நோக்கி நகர்ந்தது. மற்றொரு குழு உள்முற்றத்தின் எதிர்ப்பக்கத்தில் துரிதமாக நகர்ந்து ட்ரொட்ஸ்கியின் பாதுகாவலர்கள் தங்கியிருந்த வளாகப் பகுதிக்கு வெளியில் நின்று கொண்டது. இந்த இரண்டாவது குழு பாதுகாவலர்களின் அறைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அதன்மூலம் அவர்களை அங்கிருந்து அசையவிடாமல் நிறுத்தி வைத்து முற்றிலும் செயலற்றவர்களாக அவர்களை ஆக்கிவிட, படுகொலையாளர்களின் பிரதான குழு, ட்ரொட்ஸ்கியின் படுக்கையறைக்குள் நுழைந்தது.

அறை இருட்டாக இருந்தது, படுகொலையாளர்கள் காட்டுத்தனமாக அத்தனை திசைகளிலும் சுட்டனர். ட்ரொட்ஸ்கி இரவு தூங்கச் செல்கையில் தூக்க மாத்திரை சாப்பிட்டிருந்தார் என்பதால் துப்பாக்கிச்சத்தத்தில் முழிப்பு வந்தபோது அவர் தூக்கக்கலக்கத்தில் இருந்தார். நத்தாலியா மிகத் துரிதமாக செயல்பட்டு ட்ரொட்ஸ்கியின் உயிரைக் காப்பாற்றினார். 1940 ஜூன் முதல் வாரத்தில், “ஸ்ராலின் எனது மரணத்தை எதிர்பார்க்கிறார்” என்ற கட்டுரையில் இந்தத் தாக்குதல் குறித்த ஒரு விவரிப்பில் ட்ரொட்ஸ்கி இவ்வாறு நினைவுகூர்ந்தார்:

என் மனைவி ஏற்கனவே படுக்கையில் இருந்து குதித்து விட்டிருந்தார். துப்பாக்கிச்சூடு இடைவிடாது பொழிந்தது. என் மனைவி என்னைத் தரையில் தள்ளி படுக்கைக்கும் சுவருக்கும் இடையிலான இடைவெளிப்பகுதிக்கு என்னை உருட்டி விட்டிருந்தார் என்பதை அவர் கூறி பின்னர் அறிந்து கொண்டேன். அது உண்மை தான். அவர் சுவற்றை ஒட்டி, தனது உடலைக் கொண்டு என்னை மறைத்து நின்றபடி நின்றுகொண்டு இருந்தார். ஆனால் சத்தமில்லாத குரல் மூலமும் சைகை மூலமும் அவரை தரையில் படுக்கும்படி நான் கூறினேன். துப்பாக்கி குண்டுகள் எங்கிருந்து வந்தன எனக் கூறுவது கடினமானளவிற்கு சகல திசைகளில் இருந்தும் பாய்ந்து வந்தன. ஒரு புள்ளியில், ஒரு துப்பாக்கியில் இருந்து குண்டுபொறியை கூட தன்னால் தெளிவாக காண முடிந்ததாக, எனது மனைவி பின்னர் என்னிடம் தெரிவித்தார்; அதன்பின் இந்த அறைக்குள்ளும் சுடப்பட்டபோதிலும் எங்களால் எவரையும் காண முடியவில்லை. சுமார் இருநூறு முறை சுட்டிருப்பார்கள், அதில் நூறு குண்டுகளாவது எங்களுக்கு அருகாமையால் சென்றிருக்கும் என்பதே என் மதிப்பீடு. உடைந்த சன்னல்களின் கண்ணாடிச் சிதறல்களும் சுவர்களில் இருந்தான தெறிப்புகளும் சகல திசைகளிலும் விழுந்தன. எனது வலது காலில் இரண்டு இடங்களில் இலேசாகக் காயம்பட்டிருப்பதை சற்றுநேரத்தில் என்னால் உணர முடிந்தது. [32]

அந்த துப்பாக்கிதாரிகள் அறையில் இருந்து திரும்பிச்சென்ற வேளையில், ட்ரொட்ஸ்கி, அவரது 14 வயது பேரன் ஸேவாவின் அழுகுரலைக் கேட்டார். அந்த பயங்கர தருணத்தை ட்ரொட்ஸ்கி இவ்வாறு நினைவுகூர்ந்தார்:

இருட்டில் துப்பாக்கிச்சூட்டின் சமயத்தில் குழந்தை அழும் குரல்தான் அந்த இரவின் மிகவும் சோகமான நினைவாகவே உள்ளது. முதல் குண்டு அவரது படுக்கையை மூலைவிட்ட திசையில் வெட்டியிருந்ததை கதவு மற்றும் சுவரில் காணப்பட்ட தடங்கள் அடையாளம் காட்டின. அந்த பிள்ளை தன்னை படுக்கைக்கு கீழே ஒழித்துக்கொண்டார். தாக்குதல்தாரிகளில் ஒருவர், ஒரு பீதியின் காரணமாக, படுக்கையை நோக்கி சுட, குண்டு படுக்கைமெத்தை வழியாக எங்களது பேரனின் கால் நுனியில் தாக்கி தரையில் பாய்ந்தது. தாக்குதல்தாரிகள் இரண்டு எரிகுண்டுகளை வீசிவிட்டு எங்களது பேரனின் படுக்கையறையில் இருந்து அகன்றனர். நடக்கும் பாதையெங்கும் இரத்தம் வடிய, “தாத்தா” என்று அழுதபடி பின்னால் உள் முற்றம் நோக்கி ஓடிய அந்தச் சிறுவன், துப்பாக்கிச் சூட்டின் கீழ், காவலர்களில் ஒருவரின் அறைக்குள் ஓடினார். [33]

ட்ரொட்ஸ்கி ”ஒரு அதிர்ஷ்டவசமான விபத்தின்” காரணத்தால் தான் அவன் உயிர்தப்பியதாய் தெரிவித்தார்.

படுக்கைகள் எதிரெதிர் திசையிலான துப்பாக்கிச்சூடுகளுக்கு இலக்காகியிருந்தன. தாக்குதல்தாரிகள் ஒருவருக்கொருவர் தம்மீதே தாக்கிக் கொள்ளும் ஆபத்திற்கு அஞ்சி வேண்டுமென்றே அவர்கள் சற்று உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சுட்டிருக்க வேண்டும். ஆனால் அது ஒரு உளவியல் அனுமானம் மட்டுமே. நானும் எனது மனைவியும் எதையும் சிந்திக்காது, அறையைச் சுற்றி ஓடாமல், பயனற்று கூக்குரலிடவோ அல்லது உதவிக்கு அழைக்காமல், அர்த்தமற்ற விதத்தில் திருப்பிச் சுடாமல், மாறாக, சத்தமின்றி தரையில் இறந்து விட்டவர்களைப் போல கிடந்ததன் எதிர்பாராத பயனாகவும் கூட அது இருக்கலாம். [34]

படுகொலைப் படை தங்களது நடவடிக்கை தோல்வியில் முடிந்ததை அறியாமலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ட்ரொட்ஸ்கி அவரது அறையில் இருந்து வெளியில் வந்து உள் முற்றத்திற்கு வந்தார், அப்பகுதியில் துப்பாக்கிப் புகை இன்னும் மூட்டமாக இருந்தது. காவலர்களில் எவரேனும் தென்படுகின்றனரா என்று பார்த்தார், அவர்கள் இன்னும் தமது அறையை விட்டு வெளியேவந்திருக்கவில்லை. அவர்களில் எவருமே இந்தவகையான தாக்குதலுக்கு பதில்நடவடிக்கை கொடுக்க பயிற்சி பெற்றவர்களாயிருக்கவில்லை. திருப்பிச் சுடும் அவர்களது முனைப்புகள் எல்லாம் தொடர்ச்சியற்றதாகவும் பயனற்றதாகவும் இருந்தது. ஹரோல்ட் ரோபினின் எந்திரத் துப்பாக்கி முதல் சுற்றிலேயே இயங்காமல் தடைப்பட்டு விட்டிருந்தது. தவறான குண்டுகள் துப்பாக்கியில் ஏற்றப்பட்டிருந்ததை அவர் அதன் பின்னர்தான் தெரிந்து கொண்டார். ட்ரொட்ஸ்கி குறிப்பிடத்தக்க விதத்தில் நிதானத்துடன் இருந்தார் என்று ரோபின் நினைவுகூர்ந்தார். 1918-21 காலத்தின் மிருகத்தனமான ரஷ்ய உள்நாட்டுப் போரின் சமயத்தில் ஏராளமான யுத்தக்களங்களை அனுபவத்தில் கண்டிருந்த, செம்படையின் இந்த முன்னாள் அதியுயர்தளபதி, துப்பாக்கிச் சூட்டிற்கு பரிச்சயம் இல்லாதவரல்லர். ஆயினும் தனது காவலர்களின் முற்றிலும் திறனற்ற பதிலடி குறித்து ட்ரொட்ஸ்கி ஏமாற்றமடைந்திருந்தார் என்பதையும் ரோபின் உணர்ந்திருந்தார். [35]

வீட்டுக்கு வெளியே சோதனைச்சாவடியில் சிறப்புப்பணிக்காக இருத்தப்பட்டிருந்த மெக்சிகோ போலிஸ் குழுவினர் கட்டிப்போடப்பட்டிருந்ததை காவலர்கள் கண்டறிந்தனர். ட்ரொட்ஸ்கியின் வழிகாட்டுதலின் படி, அவர்கள் உடனடியாக கட்டுக்கள் அவிழ்த்து விடப்பட்டனர். மிகவும் குழப்பமான கண்டுபிடிப்பாக இருந்தது என்னவென்றால், ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட்டும் கொலையாளிகளுடன் சேர்ந்து சென்றிருந்தார். அவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பதான உடனடியான சந்தேகங்களை அது எழுப்பியது. ஹார்ட் இதில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதற்கான திட்டவட்டமான ஆதாரம் இல்லாதநிலையில், அவர் அப்பாவி என்று ட்ரொட்ஸ்கி உறுதியாக நினைத்தார், பல வாரங்களுக்குப் பின்னர் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது ட்ரொட்ஸ்கி எடுத்த நிலைப்பாடு சரியானதாகவே தெரிந்தது.

நன்கு புரிந்துகொள்ளத்தக்க காரணங்களுக்காக, ட்ரொட்ஸ்கி, தாக்குதல் நடந்த உடனேயே, ஹார்ட்டுக்கு எதிராய் குற்றம்சாட்டுவதற்கு தயக்கம் காட்டினார். எனினும் ஹார்ட் GPU வுடன் கூட்டுச் சேர்ந்து வேலைசெய்திருக்கக் கூடிய சாத்தியத்தை அவர் ஒதுக்கிவிடவில்லை. “அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி, GPUவின் ஒரு முகவர் காவலர்களுக்குள் ஊடுருவியிருக்க முடியும் என்பதற்கான சாத்தியத்தை முற்றிலுமாய் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். [36] ஹார்ட், அவர் காணாமல் போனதால்தான், சந்தேக வளையத்திற்குள் வந்திருந்தார் என்பதை அவர் குறிப்பிட்டார். ஆயினும் கிடைக்கத்தக்கதாக இருந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஹார்ட்டை குற்றவாளியாக முடிவு செய்வதற்கு ட்ரொட்ஸ்கி தயாராக இருந்திருக்கவில்லை. புதிய தகவல்கள் ஏதேனும் ஹார்ட்டின் பாத்திரத்தை மறுமதிப்பீடு செய்வதை அவசியமாக்கலாம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இறுதியான முடிவு என்னவாக ஆகவிருந்தாலும், அவர் தொடர்ந்தார், “எனது அனைத்து அனுமானங்களுக்கும் மாறான விதத்தில் அத்தகையதொரு சம்பந்தம் ஊர்ஜிதப்பட்டாலுமே கூட, அது இந்தத் தாக்குதலின் தன்மையில் அடிப்படையான எதனையும் மாற்றி விடவில்லை. காவலர்களில் ஒருவரின் உதவியுடனோ அல்லது உதவி இல்லாமலேயோ, GPU என்னைக் கொல்வதற்கும் என்னுடைய எழுத்து ஆவணக்காப்பகங்களை எரிப்பதற்குமான ஒரு சதியை ஒழுங்கமைத்தது.” [37]

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இன் காவலர் தேர்வில் ட்ரொட்ஸ்கி நம்பிக்கை வெளிப்படுத்தினார். “எனது அனுபவமிக்க பழைய நண்பர்களின் தனித்துவமான தெரிவுக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் இங்கே அனுப்பப்பட்டிருந்தனர்.” [38] சோசலிச தொழிலாளர் கட்சி அமெரிக்காவிலிருந்து கோயோகானுக்கு அது அனுப்பியிருந்த நபர்களின் முழுவிவரங்களை தீவிரத்துடன் அலசி ஆராய்ந்திருக்கவில்லை என்பதை ட்ரொட்ஸ்கி அறியவில்லை. ஹார்ட் விடயத்தில், நியூ யோர்க்கை சேர்ந்த அந்த 25 வயது இளைஞர் SWP இல் எந்த அரசியல் வரலாறும் கிட்டத்தட்ட கொண்டவரில்லை. மகன் காணாமல் போனதை அறிந்து ஒரு வசதியான தொழிலதிபரும் ஜே.எட்கர் ஹூவரின் நண்பருமான தந்தை ஜெஸி ஹார்ட் மெக்சிகோவுக்கு விமானத்தில் வந்தார். மெக்சிகோ போலிசுடனான சந்திப்புகளின் போது, அவர் தனது மகனின் நியூ யோர்க் குடியிருப்பில் ஸ்ராலினின் ஒரு புகைப்படம் இருந்த தகவலை அவர்களிடம் தெரிவித்தார். இந்த தகவல் சிலகாலம் கடந்து பத்திரிகைகளில் கசிந்தபோது, இந்த தகவல் குறித்து ஊர்ஜிதப்படுத்தும்படி ட்ரொட்ஸ்கி ஜெஸி ஹார்ட்டுக்கு தந்தி அனுப்பினார். ஹார்ட் ஒரு திட்டவட்டமான மற்றும் நேர்மையற்ற மறுப்பாக: “நிச்சயமாக ஸ்ராலினின் படம் ஷெல்டனின் அறையில் கிடையாது.” என்பதை பதிலாகத் தந்தார். [39]

ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 1975 ஆம் ஆண்டில் அது முன்னெடுத்த ட்ரொட்ஸ்கி படுகொலை குறித்த விசாரணையின் பகுதியாக மே 24 தாக்குதலின் போது ஷெல்டன் ஹார்ட்டின் பாத்திரம் தொடர்பான ஆதாரங்களை மீளாய்வு செய்தது. அதில், ஹார்ட்டும் அந்த சதியில் ஒரு பங்குவகித்தவராக இருந்திருந்தார் என்ற முடிவுக்கு ICFI வந்தது. இந்த கண்டறிவை ஜோசப் ஹான்சன் தலைமையிலான சோசலிச தொழிலாளர் கட்சியும் (SWP) உலகெங்குமிருந்த ட்ரொட்ஸ்கிச-விரோத பப்லோவாத அமைப்புகளில் இருந்த அதன் கூட்டாளிகளும் கண்டனம் செய்து, நான்காம் அகிலத்திற்குள்ளாக இருந்த ஸ்ராலினிச மற்றும் பிற போலிஸ் முகவர்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் கடுமையான எதிர்ப்புக் காட்டினர். ட்ரொட்ஸ்கி படுகொலை குறித்த விசாரணையை “முகவர் எதிர்ப்பு” என்று அவர்கள் கண்டனம் செய்தனர். SWP மற்றும் அதன் சர்வதேசக் கூட்டாளிகள் விடுத்த ஒரு பகிரங்க அறிக்கையில், “ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட்டின் கல்லறையை அவமதிப்பதாக” ICFI மீது குற்றம்சாட்டப்பட்டது. [40]

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், வெளியான GPU காப்பக ஆவணங்கள் ஹார்ட் ஒரு ஸ்ராலினிச முகவராக இருந்தார் என்பதையும், ட்ரொட்ஸ்கி மீதான மே 24 கொலைமுயற்சியில் ஒரு வெகுமுக்கிய பாத்திரம் வகித்தார் என்பதையும் திட்டவட்டமாக ஸ்தாபித்தன. படுகொலை முயற்சி நடந்து பலநாட்களின் பின்னர், அவரைக் கொலைசெய்து அவரது துரோகத்திற்கு GPU பரிசளித்திருந்தது. இளம்வயது துரோகியை அவமதித்த, சிக்விரோஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஹார்ட்டை நம்பமுடியாத ஒரு நபராக கருதினர். அவர் இறுதியில் பொலிஸால் விசாரிக்கப்பட்டால் உண்மையை கூறக்கூடும் எனக் கருதினர், ஹார்ட் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் குண்டை பாய்ச்சி அவரைக் கொன்றுவிட்டு, அவரது உடலை ஒரு சாக்கடைக் குழிக்குள் எறிந்து மேலே சுண்ணாம்பை போட்டு மறைத்து விட்டிருந்தனர். ஹார்ட்டின் உருச்சிதைந்து போன சடலம் பல வாரங்களுக்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்ராலினின் உத்தரவின் பேரில்தான் ட்ரொட்ஸ்கி மீதான கொலைமுயற்சி நடந்திருந்தது என்பது வெளிப்படையான உண்மையாக இருந்தபோதும், மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் செய்தித்தாள்கள் ஆகியவற்றினுள் இயங்கிக் கொண்டிருந்த GPUவின் கைக்கூலிகள், மே 24 தாக்குதலானது ட்ரொட்ஸ்கி தன் மீதே நடத்திக் கொண்ட ஒரு “சுய-தாக்குதல்” என்று கூறி பொதுஜனக் கருத்தை தடம்புரட்டுவதற்கான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். “ஸ்ராலின் எனது மரணத்தை எதிர்பார்க்கிறார்” மற்றும் “மூன்றாம் அகிலமும் GPUவும்” ஆகிய இரண்டு முக்கியக் கட்டுரைகளில் (இதில் இரண்டாவது கட்டுரை, 1940 ஆகஸ்டு 17 அன்று, அதாவது, ட்ரொட்ஸ்கி மீது ரமோன் மெர்காடர் மூலம் நடத்தப்பட்ட இரண்டாவது மற்றும் அவர்களுக்கு வெற்றியளித்த தாக்குதலுக்கு மூன்றே நாட்களுக்கு முன்னர்தான் எழுதி முடிக்கப்பட்டிருந்தது) ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசப் பொய்களை ஒரு தகர்த்தெறியும் மறுப்புக்கு உட்படுத்தியிருந்தார்.

“மூன்றாம் அகிலமும் GPUவும்” இல், ட்ரொட்ஸ்கி, மே 24 தாக்குதலை அவரே ஏற்பாடு செய்திருக்கலாம் அல்லது செய்திருந்தார் என்பதான கூற்றின் அபத்தத்தை அம்பலப்படுத்தினார்.

இப்படியான அரக்கத்தனமான, வெறுப்பூட்டுகின்ற மற்றும் அபாயகரமான ஒரு முயற்சியை மேற்கொண்டு என்ன நோக்கங்களை நான் சாதித்திருக்க முடியும்? இன்று வரை அதனை யாரும் விளக்கவில்லை. ஸ்ராலின் மற்றும் அவரது GPU மீது சேறுபூச நான் விரும்பினேன் என்பதாக சூசகம் செய்யப்படுகிறது. ஆனால் போல்ஷிவிக் கட்சியின் ஒட்டுமொத்த பழைய தலைமுறையையும் அழித்துவிட்டிருக்கும் ஒரு மனிதனின் மரியாதைக்கு இன்னுமொரு தாக்குதல் எதனை புதிதாகச் சேர்த்து விட முடியும்? “ஐந்தாம் கையாட்கள்” ஒன்று இருப்பதை நிரூபிக்க நான் விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஏன்? எதற்காக? தவிரவும், ஒரு தாக்குதலை திட்டமிட்டு நடத்துவதற்கு GPU முகவர்களே போதும்; மர்மமான “ஐந்தாம் கையாட்களுக்கு” எந்த அவசியமுமில்லை. மெக்சிகோ அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை உருவாக்க நான் விரும்பியதாக சொல்லப்படுகிறது. எனக்கு இடமளித்து உபசரிக்கின்ற ஒரே அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் உண்டாக்க எனக்கு என்ன நோக்கமிருக்க முடியும்? அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் ஒரு போரைத் தூண்டுவதற்கு நான் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விளக்கம் முற்றிலும் ஒரு பிதற்றல் நிலைக்கு உரியதாகும். அப்படியாக ஒரு போருக்கு ஆத்திரமூட்ட வேண்டுமென்றால், ஒரு அமெரிக்க தூதரின் மீதோ அல்லது எண்ணெய் அதிபர்கள் மீதோ தாக்குதலை ஒழுங்கமைப்பது தான் மிகப் பொருத்தமாயிருக்குமே அன்றி, ஏகாதிபத்திய வட்டாரங்களுக்கு அந்நியமான அவற்றால் வெறுக்கப்படுகின்ற ஒரு புரட்சிகர-போல்ஷிவிக் மீதல்ல.

ஸ்ராலின் என்னைப் படுகொலை செய்யும் ஒரு முயற்சியை ஏற்பாடு செய்கிறாரென்றால், அவரது நடவடிக்கைகளின் அர்த்தம் தெளிவானது: அவர் தனது முதல் எதிரியை அழிக்க விரும்புகிறார். ஸ்ராலினுக்கு இதில் எந்த ஆபத்துகளுமில்லை; அவர் வெகு தொலைவில் இருந்தபடி செயல்படுகிறார். அதற்கு நேரெதிராய், ஒரு “சுய-தாக்குதலை” ஏற்பாடு செய்வதன் மூலமாக, அத்தகையதொரு முயற்சிக்கான பொறுப்பை நானே ஏற்க வேண்டியிருக்கும்; எனது தலைவிதி, எனது குடும்பத்தின் தலைவிதி, எனது அரசியல் மரியாதை, நான் சேவை செய்கின்ற இயக்கத்தின் மரியாதை அத்தனையையும் ஆபத்துக்குட்படுத்துவதாயிருக்கும். அதனால் எனக்கு என்ன பயன்?

எனது மொத்த வாழ்க்கையின் நோக்கத்தையும் பணயமாக வைத்து, இயல்பான புத்தியையும் எனது சொந்த ஜீவாதார நலன்களையும் காலில் போட்டு நசுக்கிவிட்டு, ஏதோ ஒரு தெரியாத நோக்கத்துடன் நான் “சுய-தாக்குதலை” ஒழுங்கமைக்க ஏற்பாடு செய்தேன் என்று சாத்தியமற்ற ஒன்றை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும், அப்போதும் அங்கே பின்வரும் கேள்விகள் தொக்கி நிற்கின்றன: இருபது கொலைப்படையினர் எனக்கு எங்கிருந்து எப்படிக் கிடைத்தார்கள்? அவர்களுக்கு போலிஸ் சீருடைகள் எப்படி நான் கொடுக்க முடிந்தது? ஆயுதங்கள் எப்படி கொடுக்க முடிந்தது? தேவையான அத்தனை பொருட்களும் எப்படி கொடுக்க முடிந்தது? இப்படியான கேள்விகள். வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், வெளி உலகில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாய் தனிமைப்பட்டு வாழும் ஒரு மனிதன், எவ்வாறு, ஒரு சக்திவாய்ந்த எந்திரம் மட்டுமே சிந்திக்க இயலத்தக்க ஒரு முயற்சிக்கு திட்டம்தீட்ட முடியும்? விமர்சனங்களுக்குத் தகுதியில்லாத ஒரு கீழ்த்தரமான சிந்தனையை விமர்சனத்திற்கு உட்படுத்துவதில் உண்மையிலேயே வெறுப்படைகின்றேன் என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும். [41]

தாக்குதலுக்கான GPU இன் அரசியல் தயாரிப்பு குறித்த அவரது பகுப்பாய்வில், ட்ரொட்ஸ்கி, அவரது அசாதாரண புத்திக்கூர்மைக்கு புதிய ஆதாரத்தை வழங்கினார். 1940 மார்ச்சில் நடத்தப்பட்டிருந்த மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கமான காலத்திற்கு முன்னர் கூட்டப்பட்ட காங்கிரஸ் தொடர்பாக அவர் கவனம் ஈர்த்தார். ட்ரொட்ஸ்கிசத்தை அழித்தொழிப்பதற்கான தேவை தான் அந்த காங்கிரசில் மேலோங்கியிருந்த பிரதான கருப்பொருளாக இருந்தது. மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான ஹெர்னான் லபோர்ட், மற்றும் தொழிற்சங்கங்களின் ஒரு முக்கிய புள்ளியான வலண்டின் கம்பா ஆகியோரை வெளியேற்ற காங்கிரசு எடுத்த முடிவானது, அரசியல்ரீதியாக ஆபத்தான மற்றும் இழிபிரசித்தி பெறத்தக்க ஒரு படுகொலை சதித்திட்டத்தில் கட்சியை ஈடுபடுத்துவதற்கு தயக்கம் காட்டிய தனிப்பட்ட தலைவர்களை அவர்களின் அதிகாரநிலைகளில் இருந்து அகற்றுவதற்கான தேவையுடன் பிணைந்ததாய் இருந்தது என்று ட்ரொட்ஸ்கி ஊகித்தார். இந்த வெளியேற்றத்திற்கான முன்னெடுப்பு அந்த அமைப்புக்கு வெளியில் இருந்து, அதாவது கிரெம்ளின் ஆட்சியின் உத்தரவின் பேரில் செயல்பட்ட GPUவிடம் இருந்து, வந்திருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். மூர்க்கமான அமைப்பு மாற்றங்களை செயலுறுத்த தயாரிப்பு செய்வதற்கு காங்கிரசுக்கு பல மாதங்கள் அவசியமாக இருந்திருக்கும் என்பதை விளக்கி ட்ரொட்ஸ்கி, படுகொலை முயற்சிக்கான உத்தரவு 1939 நவம்பர் அல்லது டிசம்பரில் மாஸ்கோவில் இருந்து வந்திருந்தது என்று வாதிட்டார்.

மே 24 தாக்குதலுக்கான நீண்ட தயாரிப்புகள் குறித்தும் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் காலத்திற்கு முன்னர் கூட்டப்பட்ட காங்கிரசின் முக்கியத்துவம் குறித்துமான ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கான திட்டமிடல் 1939 வசந்த காலத்தில் தொடங்கியது என்பதை எடுத்துக்காட்டியிருக்கின்ற சமீபத்திய ஆய்வின் மூலமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் அகிலத்தின் பெயரில் செயல்பட்டு வந்த GPU இன் முகவர் ஒருவர், லபோர்ட் (Laborde) ஐ தொடர்பு கொண்டிருந்தார். “ட்ரொட்ஸ்கியை அழிப்பதற்கான திட்டங்களில் PCM செயலகத்தின் ஒத்துழைப்பை நாடுவது தான் அந்த முகவருக்கான இலக்கு. கம்பா மற்றும் ரஃபேல் கார்ரியோ [மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்னுமொரு முன்னணி உறுப்பினர்] ஆகியோருடன் லபோர்ட் கலந்தாலோசனை செய்தார் என்றும், இத்தகையதொரு நடவடிக்கை கார்டினாஸ் அரசாங்கத்துடனான PCM இன் உறவுகளை ஆபத்துக்குள்ளாக்கும் என்பது மட்டுமின்றி, ட்ரொட்ஸ்கி ஒரு ஓய்ந்துபோன சக்தி என்பதால் அது அவசியமும் இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்ததாகவும் சொல்லப்பட்டது.” [42]

ட்ரொட்ஸ்கியின் அரசியல் செல்வாக்கு குறித்த லபோர்ட் மற்றும் கம்பாவின் மதிப்பீட்டுடன் GPU உடன்படவில்லை. ட்ரொட்ஸ்கி மீதான ஒரு தாக்குதலுக்கு எதிராக அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (CPUSA) தலைவரான ஏர்ல் பிரவுடர் (Earl Browder) இடம் இருந்து ஆதரவை எதிர்நோக்கி லபோர்ட், கம்பா மற்றும் கார்ரியோ 1939 மே மாதத்தில் நியூயோர்க் பயணம் செய்தனர். அந்த முயற்சி வெற்றிகாணவில்லை. ஒரு காலத்திற்கு முன்னர் காங்கிரசை கூட்டுவதற்கான முடிவு மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவில் 1939 செப்டம்பர் முழுப்பேரவையில் எடுக்கப்பட்டது. அறிஞர் பாரி கார் (Barry Carr) இன் கருத்துப்படி, ”மெக்சிகன் கட்சியின் ட்ரொட்ஸ்கி-விரோத பிரச்சாரத்தின் பற்றாக்குறைகள் மற்றும் சோவியத் வெளியுறவுக் கொள்கையை, குறிப்பாக, 1939 நவம்பரில் பின்லாந்தில் இராணுவரீதியாக தலையீடு செய்ய எடுக்கப்பட்ட முடிவை மேலெழுந்தவாரியாக அது பாதுகாத்தமை” ஆகியவை தொடர்பாக CPUSAவும் மூன்றாம் அகிலமும் கவலை கொண்டிருந்தன. [43]

காலத்திற்கு முன்னர் கூட்டப்பட்ட காங்கிரசுக்கான முதல் பகிரங்க அழைப்பு நவம்பரில் வெளியிடப்பட்டது. ஐரோப்பாவில் இருந்தான மூன்றாம் அகிலத்தின் பிரதிநிதிகள் (இவர்கள் உண்மையில் GPU முகவர்களாய் இருந்தனர்) ஐரோப்பாவில் இருந்து மெக்சிகோ வந்துசேரத் தொடங்கினர். ஸ்பெயினில் நிலைகொண்டிருந்த விட்டோரியோ கோடோவில்லாவும் (Vittorio Codovilla) அவர்களில் ஒருவர். மூன்றாம் அகிலத்தின் பிரதிநிதிகள் திட்டமிடப்பட்டிருந்த காங்கிரசுக்கான தயாரிப்புகள் மற்றும் திட்டநிரல் மீது அதிருப்தியுற்றனர் என்று வரலாற்றாசிரியர் Carr எழுதுகிறார்.

திட்டநிரலை முழுமையாக மாற்றி எழுதுவதற்கும் “பிரதிநிதிகளின் கவனத்தை திசைதிருப்பா வண்ணம்” ஒரேயொரு அத்தியாவசியப் புள்ளியில் மட்டும் கவனம் குவிப்பதற்கும் கோடோவில்லா ஆலோசனையளித்தார். மக்களின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம் (ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டமே அதன் பிரதான கருப்பொருளாக) குறித்த ஒரு புதிய அம்சம் உள்ளடங்கலாக, மாற்றிய திட்டநிரலின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டுமளவு அவர் சென்றிருந்தார்.

பிரதிநிதிகள் காலத்திற்கு முன்னர் கூட்டப்பட்ட காங்கிரசின் ஆரம்பநிலை ஆவணங்களின் வடிவம் குறித்த ஆலோசனைகளுடன் தங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. காங்கிரசுக்கு முன்பாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வெளியேற்றி “வீட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை”யை கட்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்... நாடுகடந்து வாழ்ந்த ஸ்பானிய கம்யூனிஸ்டுகளின் சேவைகள் இந்த இரண்டாவது வேலைக்காய் முன்மொழியப்பட்டன. [44]

ஸ்ராலின், தனது ஆட்சிக்கான மிகத் தீவிரமான அரசியல் அச்சுறுத்தலாய் ட்ரொட்ஸ்கியை கருதினார். 1929 இல் ட்ரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகடத்த எடுத்த முடிவை தான் செய்த மிகப்பெரும் அரசியல் தவறாகக் காணும் நிலைக்கு அவர் வந்திருந்தார். ஒரு அந்நிய நாட்டில் தனிமைப்படுகின்ற நிலையில், ட்ரொட்ஸ்கியால் கிரெம்ளினுக்கு எந்த முக்கியமான எதிர்ப்பையும் முன்நிறுத்தும் திறனில்லாது போய்விடும் என்றே ஸ்ராலின் அனுமானித்திருந்தார். ஸ்ராலின் அனுமானம் தவறாகியிருந்தது. ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டவாறாய், “ஒரு அமைப்போ அல்லது பொருளாதாய வளங்களோ இல்லாமலேயே கூட அரசியல் வாழ்வில் பங்கேற்பது சாத்தியமே என்பதை நிகழ்வுகள் காட்டியிருக்கின்றன.” [45] ஸ்ராலினின் அந்தரங்க ஆவணங்களுக்கு அணுகல் பெற்றிருந்த அவரது வாழ்க்கைச்சரித ஆசிரியரான டிமிட்ரி வோல்கோகோனோவ், அந்த சர்வாதிகாரி “ட்ரொட்ஸ்கியின் ஆவி” பற்றிய சிந்தனையால் தொடர்ச்சியாக குழப்பமுற்றவராக இருந்தார் என்று எழுதினார்.

மோலோடோவ், ககானோவிச், குருசேவ் மற்றும் ஸடானோவ் (ஸ்ராலினிச அரசியற்குழு உறுப்பினர்கள்) ஆகியோருடன் உட்கார்ந்து பேசுகின்றபோது அவர் [ஸ்ராலின்] ட்ரொட்ஸ்கியை நினைத்துக் கொள்வார். ட்ரொட்ஸ்கியின் அமைப்புரீதியான புரிதலும் ஒரு பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அவரது திறமைகளுமாய், புத்திஜீவிதரீதியாக அவர் வித்தியாசமானவரான உயர்தரநிலை கொண்டிருந்தவர். ஒவ்வொரு விதத்திலும் இந்த அதிகாரத்துவ குழுவினரைக் காட்டிலும் மிக உயர்ந்தவர், ஆனால் அவர் ஸ்ராலினை விடவும் உயர்ந்தவராகவும் இருந்தார், அது ஸ்ராலினுக்கும் தெரிந்திருந்தது. “அப்படியொரு எதிரியை எப்படி நான் விரல்கள் வழியே நழுவ விட்டேன்” என்று அவர் கிட்டத்தட்ட புலம்பினார். அது தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரும் தவறுகளில் ஒன்று என்று ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு நெருங்கிய சிறிய வட்டத்திடம் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

குறிப்பாக, ட்ரொட்ஸ்கி தனக்காக மட்டும் பேசவில்லை, சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக இருந்த அவரது அமைதியாக இருக்கும் ஆதரவாளர்கள் மற்றும் எதிரணியினர் ஆகியோருக்காகவும் பேசினார் என்ற சிந்தனை ஸ்ராலினுக்கு வலியூட்டுவதாக இருந்தது. ஸ்ராலின் பொய்மைப்படுத்தல் பள்ளி, போல்ஷிவிக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம், ஸ்ராலினிச தேர்மிடோர் போன்ற ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் படிக்கும்போதெல்லாம், இந்த தலைவர் கிட்டத்தட்ட அவரது சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவார். [46]

ட்ரொட்ஸ்கி மீதான ஸ்ராலினின் வெறுப்பானது முற்றிலும் அல்லது முக்கியமாக தனிப்பட்டரீதியானதாய் இருக்கவில்லை. அவரது கோபாவேசத்தின் சகோதரப் படுகொலை பரிமாணங்கள், ஆளும் அதிகாரத்துவம், ஒரு தனிச்சலுகை கொண்ட சாதியாக, அதன் மிகவும் சமரசமற்ற எதிரியை நோக்கி காட்டிய குரோதத்தின் செறிவான வெளிப்பாடாக இருந்தது. “மூன்றாம் அகிலமும் GPUயும்” என்பதில் ட்ரொட்ஸ்கி அதனை பின்வருமாறு விளக்குகின்றார்:

என் மீதான மாஸ்கோ சிலவராட்சியின் வெறுப்பானது, நான் அதனை “காட்டிக்கொடுத்து” விட்டதாக அதன் ஆழமாய்-வேரூன்றி விட்ட உறுதிப்பாட்டில் இருந்து உண்டாவதாகும். இந்தக் குற்றச்சாட்டிற்கு ஒரு சொந்த வரலாற்று அர்த்தம் உள்ளது. சோவியத் அதிகாரத்துவம், ஸ்ராலினை உடனேயும் தயக்கமில்லாமலும் தலைமைக்கு உயர்த்தி விடவில்லை. 1924 வரையில், மக்களுக்கு மட்டுமில்லாது, பரந்த கட்சி வட்டாரங்களுக்கும் கூட ஸ்ராலின் அறியப்படாத நபராகவே இருந்தார் என்பதுடன், நான் ஏற்கனவே சொன்னதைப் போல அதிகாரத்துவ பதவிகளில் இருந்தவர்கள் மத்தியிலும் அவருக்கு பிரபலம் இருக்கவில்லை. புதிய ஆளும் அடுக்கு அதன் தனிச்சலுகைகளை பாதுகாக்க நான் பொறுப்பேற்பேன் என்று நம்பியது. அந்த திசையில் செலவிடப்பட்ட முயற்சிகள் கொஞ்சமல்ல. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் எண்ணம் எனக்கு இல்லை, மாறாக புதிய பிரபுத்துவத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாக்கவே எண்ணமிருக்கிறது என்பதில் அதிகாரத்துவம் உறுதியடைந்த பின்னரே, ஸ்ராலினை நோக்கி அது முழுமையாகத் திரும்பியதோடு, நான் “துரோகி”யாக பிரகடனம் செய்யப்பட்டேன். தனிச்சலுகை எடுத்துக்கொண்ட அதிகாரத்துவத்துவ சாதியின் உதடுகளில் இருந்து இந்த அடைமொழி வருவதே தொழிலாள வர்க்கத்தின் பக்கத்திற்கான எனது விசுவாசத்திற்கு ஆதாரமாகும். போல்ஷிவிக் கட்சியைக் கட்டியெழுப்பிய, அக்டோபர் புரட்சியை நடத்திய, சோவியத் அரசையும் செம்படையையும் உருவாக்கிய, உள்நாட்டுப் போரில் வழிநடத்திய புரட்சியாளர்களில் 90 சதவீதம் பேர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளின் காலத்தில் “துரோகிகள்” என்று கூறி அழிக்கப்பட்டுள்ளனர் என்பது தற்செயலானதல்ல. மறுபுறத்தில், ஸ்ராலினிச எந்திரமானது இந்தக் காலகட்டத்தில் தனது அதிகாரப் பொறுப்புகளில் அமர்த்தியிருப்போரில் மிகப் பெருவாரியானோர் புரட்சியின் ஆண்டுகளில் தடையரண்களின் எமக்கு எதிர்ப்பக்கத்தில் நின்றவர்களாவர். [47]

அரசியல் சீரழிவும் தார்மீக சிதைவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் மட்டுப்பட்டதாக இருக்கவில்லை. வெளித்தெரியாமல் அரிக்கின்ற அதே நிகழ்ச்சிப்போக்கானது மூன்றாம் அகிலம் முழுவதும் காணக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு நாட்டிலுமிருந்த அதன் முதன்மையான ஆட்கள் கிரெம்ளினின் அரசியல் மற்றும் கருத்தியல் தேவைகளுக்கு தக்கபடி மாற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். தேசியத் தலைவர்கள் அவர்களது புரட்சிகர விட்டுக்கொடுக்காத தன்மை, அரசியல் புத்திக்கூர்மை மற்றும் தனிமனித ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. முதுகெலும்பில்லாமை, சந்தர்ப்பவாதம் மற்றும் உத்தரவுகளை சிரமேற்கொண்டு நடத்துகினற விருப்பம் இவற்றையே தேசியக் கட்சிகளின் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட இருந்தவர்களிடம் கிரெம்ளின் எதிர்பார்த்தது. ஸ்ராலினை விரும்புபவர்கள் எந்த வகையினரை சேர்ந்தவர்கள் என்பது ட்ரொட்ஸ்கிக்கு பரிச்சயமாய் இருந்தது:

சுயாதீனமான ஆளுமை, சுயாதீனமான கருத்துக்கள், சுயாதீன செல்வாக்கு இல்லாதிருந்த, மூன்றாம் அகிலத்தின் பிரிவுகளின் தலைவர்கள், கிரெம்ளினின் நிலைப்பாடு மற்றும் நற்பெயருடன் தங்கள் நிலைப்பாடும் நற்பெயர்களும் எழுந்து நிற்கும் மற்றும் வீழ்ச்சியுறும் என்பதை நன்கு அறிவார்கள். பொருளாதாய ரீதியாகவும், நாம் பின்னர் காட்டப்பட்டதுபோல், GPUவின் கொடுப்பனவுகளில் தான் அவர்கள் வாழ்ந்தனர். ஆகவே வாழ்க்கைக்கான அவர்களது போராட்டமானது, எவ்வாறான அல்லது அனைத்து எதிர்ப்பிலிருந்தும் கிரெம்ளினை படுதீவிரமாகப் பாதுகாப்பது என்றானது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று சொல்லப்படுபவர்களிடம் இருந்து வரக்கூடிய விமர்சனத்தின் சரியானதன்மை, ஆகவே அதன் அபாயம் குறித்து அவர்கள் உணர முடியாதவர்களில்லை. ஆயினும் என் மீதும் எனது சக-சிந்தனையாளர்கள் மீதுமான அவர்களது வெறுப்பை இது இரட்டிப்பாக்க மட்டுமே செய்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், அவர்களது கிரெம்ளின் எஜமானர்களைப் போலவே, நான்காம் அகிலத்தின் உண்மையான கருத்துக்களை விமர்சிக்கத் திறனற்றவர்களாய், மாஸ்கோவில் இருந்து எண்ணிக்கை வரம்பின்றி ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொய்மைப்படுத்தல்கள் மற்றும் ஜோடிப்புகளில் தஞ்சம்புகத் தள்ளப்படுகின்றனர். மெக்சிகன் ஸ்ராலினிஸ்டுகளின் நடத்தையில் “தேசிய”ரீதியான எதுவுமில்லை; அவர்கள் வெறுமனே ஸ்ராலினின் கொள்கைகளையும் மற்றும் GPUவின் கட்டளைகளையும் ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கின்றனர், அவ்வளவேதான். [48]

GPU ஆல் வளர்த்தெடுக்கப்பட்ட மூன்றாம் அகிலத்தின் பிரிவுகளது திட்டமிட்ட ஊழலை ட்ரொட்ஸ்கி ஆவணப்படுத்தினார். கிரெம்ளின் விரும்பிய கொள்கைகள் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான ஒரு வழிவகையாக, மிரட்டல்களின் பின்புலத்துடனான கையூட்டுகள், அரசியல் விவாதங்களைப் பிரதியீடு செய்தன.

லியோன் ட்ரொட்ஸ்கி

இரண்டாம் உலகப் போரின் வெடிப்பானது ட்ரொட்ஸ்கி குறித்த ஸ்ராலினின் அச்சத்தைத் தீவிரப்படுத்தியது. ஹிட்லர் வலிந்து தாக்கா ஒப்பந்தத்தை மதித்து நடப்பார் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமிக்கமாட்டார் என்ற நப்பாசைமிக்க நம்பிக்கை ஸ்ராலினுக்கு இருந்தபோதிலும், ஹிட்லருக்கான தனது விட்டுக்கொடுப்புகள் அத்தனையையும் மீறி ஒரு ஜேர்மன் படையெடுப்பின் அபாயம் மிக உண்மையாக இருந்தது என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருந்தார். அவ்வாறு ஒன்று நடக்கும்போது, 1937-38 இல் செம்படையின் மிக அனுபவமும் திறமையும் வாய்ந்த தளபதிகளும் மற்றும் அதிகாரிகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேரும் சரீர ரீதியாக அழித்தொழிக்கப்பட்ட இரத்தக்களரியான களையெடுப்பை நடத்தியதையும் உள்டங்கிய ஸ்ராலினின் கொள்கைகளினது நாசகரமான பின்விளைவுகள் ஆட்சியை முற்றிலும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

இருபது வருடங்களுக்கு சற்று கூடுதலான காலத்திற்கு முன்பாகத்தான், முதலாம் உலகப் போரில் ஜாரிசப் படைகள் பெற்ற தோல்விகள் ரஷ்யப் புரட்சியின் வெடிப்பிற்கான ஒரு முக்கிய காரணியாக இருந்திருந்தன. இராணுவத்தின் தலைமைத் தளபதி பொறுப்பைக் கையில் கொண்டிருந்த ஜார் மன்னர், அதிகாரத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். ஆகவே ஒரு புதிய போரினால் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாகவும் ஒரு எழுச்சி விளையக் கூடிய சாத்தியம் அங்கே இருக்கவில்லையா? அதிலும் போர் வெடிப்பைத் தொடர்ந்து ஆட்சியின் திறனின்மையின் காரணத்தாலான தோல்விகளும் பின்தொடரும்போது. பிரபல எழுத்தாளரும் புரட்சியாளருமான விக்டர் சேர்ஜ் 1937 இல் எழுதிய ஒரு கட்டுரையின் விடயத்தை ஸ்ராலின் நிச்சயமாக அறிந்திருந்தார். அத்தனை துன்புறுத்தல்களுக்குப் பின்னரும் கூட, “பெரியவர்” (Old Man – ட்ரொட்ஸ்கியை பின்பற்றிய பலரும் அவரை பாசத்துடன் அவ்வாறே அழைத்தனர்) சோவியத் மக்களால் மறக்கப்பட்டு விடவில்லை என்று சேர்ஜ் எழுதியிருந்தார்.

பெரியவர் வாழ்கின்ற வரை, வெற்றிபெற்ற அதிகாரத்துவத்திற்கு பாதுகாப்பு இருக்காது. அக்டோபர் புரட்சியின் ஒரு மூளை இன்னும் உயிர்வாழ்கிறது, அது ஒரு உண்மையான தலைவரின் மூளை. முதல் அதிர்ச்சி வந்தவுடனேயே, வெகுஜனங்கள் அவரை நோக்கித்தான் திரும்புவார்கள். ஒரு போரின் மூன்றாவது மாதத்தில், சிரமங்கள் ஆரம்பிக்கின்றபோது, ஒட்டுமொத்த தேசமும் “வெற்றியின் ஒழுங்கமைப்பாளரை” நோக்கித் திரும்புவதை எதுவொன்றும் தடுத்துவிட முடியாது. [49]

ட்ரொட்ஸ்கியின் மரணத்தை ஸ்ராலின் விரும்பியதில் அங்கே இன்னுமொரு காரணமும் இருந்தது. ஸ்ராலினின் வரலாற்றுச் சரிதத்தை எழுதுவதற்கு ட்ரொட்ஸ்கி கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார் என்பதை அந்த கிரெம்ளின் சர்வாதிகாரி அறிந்திருந்தார். ட்ரொட்ஸ்கியின் எழுத்து ஆவணங்களை அழிப்பது மே 24 தாக்குதலின் நோக்கங்களில் ஒன்றாய் இருந்தது. இந்த ஆவணங்களில் இந்த வரலாற்றுச்சரிதத்தின் கையெழுத்துப் பிரதியும் இருக்கும் என்று ஸ்ராலின் நிச்சயமாக அனுமானித்திருந்தார், அந்த ஆவணங்களை தேடிப்பிடித்து அழிக்க மே 24 தாக்குதல் தவறியது. அந்த வரலாற்றுச்சரிதம் எழுதப்படுவதை தடுத்துநிறுத்துவதற்கு இருந்த ஒரே வழி அதன் நூலாசிரியரைக் கொல்வது தான். ஸ்ராலினின் பின்புலம், அவரது அரசியல் புத்திசாதுரியமின்மை, 1917க்கு முன்பாகவும் புரட்சியின் போதும் போல்ஷிவிக் கட்சியின் வரலாற்றில் அவர் சொற்ப பாத்திரம் மட்டுமே வகித்திருந்தமை, உள்நாட்டுப் போரின் போதான அவரின் திறனின்மை, மற்றும், எல்லாவற்றுக்கும் மேல், ஸ்ராலின் அவரது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று 1923 இன் ஆரம்பத்தில் லெனின் முடிவுக்கு வர இட்டுச் சென்றதான அவரது விசுவாசமின்மை மற்றும் துரோகப் போக்கு ஆகியவற்றை ட்ரொட்ஸ்கி அம்பலப்படுத்துவதன் பின்விளைவுகளைக் குறித்து ஸ்ராலின் அஞ்சினார். மே 24 அன்று நடைபெற்ற வெற்றிபெறாத தாக்குதலுக்கும் 1940 ஆகஸ்டு 20 அன்று ரமோன் மெர்காடரால் நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலுக்கும் இடையில் இருந்த மிகக் குறுகிய காலமே (மூன்று மாதங்களுக்கும் குறைவான காலம்) இந்த வாழ்க்கைசரிதத்தை நிறைவுசெய்வதையும் வெளியிடுவதையும் தடுத்துநிறுத்தி விட வேண்டும் என்ற ஸ்ராலினின் தீர்மானகரமான உறுதி நிச்சயமாக ஒரு முக்கியமான காரணியாக இருந்தது.

அந்தப் படுகொலை, உண்மையாகவே, வாழ்க்கைச்சரிதம் எழுதி முடிக்கப்படுவதைத் தடுத்து விட்டதுதான். ஆயினும் ட்ரொட்ஸ்கி விட்டுச் சென்றிருந்த ஒரு பெரும் கையெழுத்துப் பிரதி ஸ்ராலினின் ஆளுமை மற்றும் அரசியல் பரிணாமவளர்ச்சி குறித்த ஒரு அசாதாரண உட்பார்வையை வழங்கியது. ட்ரொட்ஸ்கி எழுதிய வாழ்க்கைச்சரிதம் 1946 வரையில் பிரசுரமாகவில்லை; பிரசுரமான அந்த பதிப்பும் திறனற்ற விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது; முழுமையடைந்த அத்தியாயங்கள், வாழ்க்கைச்சரித விவரிப்பில் ட்ரொட்ஸ்கி தெளிவாக ஒன்றுபடுத்தியிராத துண்டுதுண்டான குறிப்புகள் மற்றும் பத்திகளுடன் கலக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பாளரான சார்லஸ் மலமூத் (Charles Malamuth) திறமைகுறைந்தவராக இருந்தார். 1939 இன் ஆரம்பத்திலேயே, கையெழுத்துப் பிரதியின் பகுதிகளை மொழிபெயர்ப்பதற்கான மலமூத்தின் ஆரம்பகட்ட முயற்சிகளைக் கண்ணுற்றபோது, ட்ரொட்ஸ்கி இவ்வாறு புகாரிட்டார்: “மலமூத்திற்கு மூன்று பண்புகள் இருப்பதாய் தென்படுகிறது: அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது; அவருக்கு ஆங்கில மொழி தெரியாது; அவர் அபார பாசாங்கு செய்பவராக இருக்கிறார்.” [50]

இன்னும் மோசமாய், படுகொலைக்குப் பின்னர், மலமூத் ட்ரொட்ஸ்கியின் எழுத்து தொடர்பில் அசாதாரண சுதந்திரம் எடுத்துக் கொண்டு, இஷ்டம் போல தனது சொந்த வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் செருகினார், ஆசிரியரின் கருத்துக்களுக்கு நேரடி முரண்பாடான அபிப்ராயங்களை வேண்டுமென்றே அந்த வாழ்க்கைச்சரிதத்தில் திணித்தார். மலமூத்தின் செருகல்கள் பலசமயங்களில் பல பக்கங்களுக்கும் நீண்டு ட்ரொட்ஸ்கி எழுதிய விவரிப்பை நீர்த்துப் போகவும் திரிக்கவும் செய்தது. சுமார் 70 வருடங்களாக பொது மக்களுக்கு அணுகக் கிடைத்த வாழ்க்கைச்சரித பதிப்பு இதுவாக மட்டுமே இருந்தது. 2016 இல், வாழ்க்கைச்சரிதத்தின் ஒரு புதிய பதிப்பு வெளியிடப்பட்டது, கையெழுத்துப் பிரதி மற்றும் முன்னர் உள்வாங்கப்படாத எழுத்துத்துண்டுகளின் மொழிபெயர்ப்பு மற்றும் ஒழுங்கமைப்பில் அதிக நனவுடனான ஒரு அணுகுமுறையை அது கொண்டிருந்தது. [51]

இஸாக் டொய்ச்சர், அவர் எழுதிய ட்ரொட்ஸ்கி முத்தொகுப்பின் இறுதித் தொகுதியில், ஸ்ராலினின் வாழ்க்கைச்சரிதம் தான் “அநேகமாய் அவரது எழுத்துக்களில் மிகப் பலவீனமானதாய் இருக்கும்” என்று எழுதினார். ஸ்ராலினிசத்தை எதிர்ப்புரட்சிகரமானதாக ட்ரொட்ஸ்கி ஒரேகுரலில் மதிப்பீடு செய்தமைக்கு டொய்ச்சர் கொண்டிருந்த அரசியல் ஆட்சேபங்களில் இருந்து எழுந்ததாய் இருந்த இந்த விமர்சனம், ஆழமானவிதத்தில் தவறாய் இருந்தது. உள்ளடக்க விடயத்திலும் சரி, அந்த மகத்தான எழுத்தாசிரியர் கையெழுத்துப்பிரதிக்கு தனது கலைநுட்பத்தின் முழு வீச்சையும் அளிக்க வழிதந்திருக்கக் கூடிய ஒரு இறுதித் திருத்த நிகழ்முறை நடைபெற முடியாது போயிருந்தமை வெளிப்பட்டிருந்த விடயத்திலும் சரி, அந்த வாழ்க்கைச்சரிதம் நிறைவுறாததாக இருந்தது என்ற உண்மையையும் தாண்டி, ட்ரொட்ஸ்கி எழுதிய ஸ்ராலின் ஒரு மேதமைப்படைப்பாகவே இருக்கிறது. ஸ்ராலின் குறித்து எண்ணற்ற வாழ்க்கைச்சரிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, அதில் ஸ்ராலினை ஒரு அரசியல் பிரம்மாண்டமாக முன்வைத்த டொய்ச்சர் எழுதிய வாழ்க்கைச்சரிதமும் ஒன்று. ஆனால் அரசியல் ஆழம், உளவியல் உட்பார்வை, மற்றும் இலக்கியக் கூர்மை ஆகிய விடயங்களில் இவற்றில் ஒன்றும் கூட ட்ரொட்ஸ்கி எழுதிய வாழ்க்கைச்சரிதத்திற்கு கிட்ட நெருங்க முடிவதில்லை.

ட்ரொட்ஸ்கி எழுதிய வாழ்க்கைச்சரிதமானது பரந்த ரஷ்ய சாம்ராஜ்யம் முழுமையிலும் அபிவிருத்தி கண்ட புரட்சிகர தொழிலாளர்’ இயக்கத்தின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் சூழல் குறித்த நிகரற்றதொரு அறிவை உள்ளடக்கியிருந்தது. ஸ்ராலினின் ஆளுமையை, ட்ரொட்ஸ்கி மறுஉருவாக்கம் செய்தது ஒரு கேலிச்சித்திரமாக அல்ல. ஜூகாஷ்விலி-ஸ்ராலினின் (Djughashvili-Stalin) ஆளுமையானது, ட்ரொட்ஸ்கி எடுத்துக்காட்டுகிறவாறாக, அவரது குடும்ப வளர்ப்பு மற்றும் அவரது ஆரம்பகட்ட அரசியல் நடவடிக்கைகள் கட்டவிழ்ந்த கலாச்சார மற்றும் அரசியல் சூழல் ஆகியவற்றின் பின்தங்கிய நிலைமைகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது, இந்த அசாதாரணப் படைப்பு குறித்த ஒரு விரிவான மற்றும் திறம்பட்ட மதிப்பாய்வு செய்வதற்கான இடமல்ல. என்றாலும் இந்த வாழ்க்கைச்சரிதத்தில் கவனம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஸ்ராலின் அதிகாரத்தின் உச்சத்திற்கு எழுவதை சாத்தியமாக்கிய புற நிலைமைகள், மற்றும் அதன் பிரதிபலிப்பான அகநிலைவாத நிகழ்ச்சிப்போக்குகள் ஆகியவற்றின் மீதே ட்ரொட்ஸ்கி முக்கிய கவனத்தை செலுத்தியிருந்தார் என்பதாகும். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலத்தில் போல்ஷிவிக் கட்சியின் சமூக கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறார். புரட்சியை வழிநடத்திய கட்சி, வரலாற்றில் வேறெந்தவொரு இயக்கத்துடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு “அத்தகைய ஒற்றுமை, அத்தகைய சித்தாந்தரீதியான மீளெழுச்சி, அத்தகைய அர்ப்பணிப்பு, அத்தகைய சுயநலமின்மை” ஆகியவற்றுக்கான ஒரு தீரமிக்க உதாரணத்தை வழங்கியது. [52]

போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக உள்முக விவாதங்கள், மோதல்கள், ஒரேவார்த்தையில் சொல்வதானால், மனித இருப்பின் இயல்பான பகுதியாக இருக்கின்ற அத்தனை விடயங்களும் இருந்தன. மத்திய குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்களும் மனிதர்கள் தான், என்றபோதும் ஒரு சிறப்பு சகாப்தமானது அவர்களை அவர்களுக்கும் மேலாக உயர்த்தியது. எதையும் இலட்சியநிலைப்படுத்தாமல், மனித பலவீனங்களுக்கு கண்ணை மூடிக் கொள்ளாமல், அந்த ஆண்டுகளில் கட்சியில் ஒருவர் சுவாசித்த காற்று என்பது மலைச் சிகரங்களினுடையதாகும் என்று நாங்கள் கூறமுடியும். [53]

ஆயினும், உள்நாட்டுப் போருக்குப் பின்னர், புதிய, பரிசோதிக்கப்படாத மற்றும் சமூகரீதியாக அந்நியப்பட்ட கூறுகள் கட்சிக்குள் பாய்ந்ததை அடுத்து சூழல் மாற்றம் கண்டது. பிழைப்புவாதிகளின் பாய்ச்சலில் இருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கான ஆங்காங்கான முயற்சிகள் இருந்தன. ஆனால் புற நிலைமைகள் சாதகமற்ற ஒரு திசையில் நகர்ந்து கொண்டிருந்தன.

உள்நாட்டுப் போருக்குப் பின்னர், அதிலும் குறிப்பாக ஜேர்மனியில் புரட்சி தோல்வியடைந்ததற்குப் பின்னர், போல்ஷிவிக்குகள் இனியும் அணிவகுத்து நின்ற போர்வீரர்களாக உணரவில்லை. அதேநேரத்தில், கட்சி புரட்சிகரக் காலகட்டத்தில் இருந்து நடவடிக்கைகளற்றதொரு காலகட்டத்திற்குள் சென்றது. உள்நாட்டுப் போரின் ஆண்டுகளில் நடந்த திருமணங்கள் கொஞ்சமன்று. அதன் முடிவு சமயத்தில், தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். குடியிருப்புகள், வீட்டுச்சாமான்கள், குடும்பம் குறித்த கேள்வி முன்னெப்போதினும் பெரும் முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக சிரமங்களை வென்றிருந்த புரட்சிகர ஒற்றுமைப் பிணைப்புகள், கணிசமான மட்டத்திற்கு, அதிகாரத்துவ மற்றும் பொருளியல்ரீதியாக சார்ந்திருப்பவர்களது பிணைப்புகளைக் கொண்டு பிரதியிடப்பட்டுக் கொண்டிருந்தது. முன்னர், புரட்சிகர இலட்சியங்களின் மூலம் மட்டுமே வெற்றிகாண்பது சாத்தியமாக இருந்தது. இப்போதோ, பலரும் பொருளாதாய அந்தஸ்துகள் மற்றும் தனிச்சலுகைகளைக் கொண்டு வெற்றி காணத் தொடங்கினர். [54]

அனைத்து தனிப்பட்ட மற்றும் பொருளாதாய கவலைகளில் இருந்தும் அப்பாற்பட்ட ஒருதொலைதூர மற்றும் அடைய முடியாத துறவுநிலைக்காக ட்ரொட்ஸ்கி வாதாடிக் கொண்டிருக்கவில்லை. அவருக்கே நான்கு பிள்ளைகள் இருந்தன. மாறாக அவர், எவ்வாறு ஒரு பழமைவாத சமூக சூழலானது கட்சிக்குள்ளாக படிப்படியாக அபிவிருத்தி கண்டது, புதிய பொருளாதாரக் கொள்கை ஒரு முதலாளித்துவ சந்தையை மீண்டும் உயிர்ப்பித்தது தொடர்பில் நாட்டிற்குள்ளாக நீண்ட-கால சமூகபொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளுடன் எவ்வாறு உறவாடியது என்பதை அவர் விளக்கிக் கொண்டிருந்தார். கிராமப்புறங்களில் தனியார் ஸ்தாபனங்களுக்கு புதுப்பித்த முக்கியத்துவம் கிட்டியமையானது சமூக சமத்துவமின்மையின் ஒரு திடீர் ஏற்பையும் இன்னும் ஊக்குவிப்பையும் கூட உண்டாக்கியது. ட்ரொட்ஸ்கியும் இடது எதிரணியில் இருந்த அவரது ஆதரவாளர்களும் சமத்துவத்திற்கு அளித்த முக்கியத்துவம், தாக்குதலுக்கு இலக்கானது. ஸ்ராலின் இந்த மனோநிலைக்குத் தகவமைத்துக் கொண்டு அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டார். சமத்துவமானது, “ஒரு குட்டி-முதலாளித்துவ தப்பெண்ணமாக அதிகாரத்துவத்தால் பிரகடனம் செய்யப்பட்டது.” சமத்துவத்தை நோக்கிய வெறுப்பு, நிரந்தரப் புரட்சி முன்னோக்குக்கு வளர்ந்துசென்ற ஒரு குரோதத்துடன் கைகோர்த்துக் கொண்டது:

”தனியொரு நாட்டில் சோசலிசம்” தத்துவமானது அந்தக் காலகட்டத்தில் அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவினால் விவசாய மற்றும் நகர்ப்புற குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் துணைகொண்டு முன்நிறுத்தப்பட்டது. சமத்துவத்திற்கு எதிரான போராட்டமானது அதிகாரத்துவத்தை, விவசாய மற்றும் நகர்ப்புற குட்டி-முதலாளித்துவ வர்க்கத்துடன் மட்டுமல்லாது, தொழிலாளர் பிரபுத்துவத்துடனும் முன்னெப்போதினும் வலிமையுடன் ஒட்டவைத்தது. சமத்துவமின்மையே இந்தக் கூட்டாளிகளது பொதுவான சமூக அடிப்படையாக, மூலவளமாக, இருப்புக்கான காரணமாக ஆனது. இவ்வாறாக, 1923 முதல் 1928 வரையான காலத்தில் பொருளாதார மற்றும் அரசியல் பிணைப்புகள் அதிகாரத்துவத்தையும் குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தின. [55]

ஸ்ராலின் அதிகாரத்திற்கு உயர்ந்தமையானது அதிகாரத்துவ எந்திரம் படிகமாக்கலுடனும் அதன் குறிப்பான நலன்களைக் குறித்த அதன் விழிப்பு பெருகியதுடனும் பிணைந்திருந்தது. “இந்த விடயத்தில், ஸ்ராலின் ஒரு முழு அசாதாரண நிகழ்வுப்போக்கை முன்நிறுத்துகிறார். அவர் ஒரு சிந்தனையாளருமில்லை, எழுத்தாளருமில்லை, சிறந்த பேச்சாளரும் இல்லை. வெகுஜனங்கள் செஞ்சதுக்கத்தின் கொண்டாட்டப் பேரணிகளில் பார்த்தவுடன் அவரை யாரென்று கண்டுகொள்ளும் நிலை வரும்முன்பாகவே அவர் அதிகாரத்திற்கு வந்துவிட்டிருந்தார். ஸ்ராலின் அவரது தனிப்பட்ட குணங்களின் காரணத்தால் அதிகாரத்திற்கு வரவில்லை, மாறாக ஆட்சார்பற்ற ஒரு எந்திரத்தின் காரணத்தால் அதிகாரத்திற்கு உயர்ந்திருந்தார். அவர் அந்த எந்திரத்தை உருவாக்கவில்லை, மாறாக அந்த எந்திரம் தான் அவரை உருவாக்கியிருந்தது.” [56]

”ஸ்ராலின் குறித்த கட்டுக்கதையை” அது உருவாகியிருந்த சமூகபொருளாதார மற்றும் வர்க்க உறவுகளை வெளிக்கொணர்ந்து ட்ரொட்ஸ்கி தகர்த்தார். இந்த கட்டுக்கதை, “எந்த கலைப் பண்புகளும் இல்லாதிருக்கிறது. வீட்டின் எஜமானராக ஆனதும் களியாட்டம் ஆட விரும்புகிற புதிதாய் உயர்ச்சி கண்ட அற்பர்களது பேராசை கொண்ட சாதியின் குணத்துடன் முழுக்க பொருந்திப் போகிறதான வெட்கம்கெட்டதனத்தின் பெரும் எழுச்சியைக் கொண்டு கற்பனைத்திறனை மலைத்துப் போகும் செய்யும் திறன் மட்டுமே அது கொண்டிருக்கிறது.” என ட்ரொட்ஸ்கி எழுதினார் [57]

ஸ்ராலினுக்கும் அவரது கீழ்நிலை ஆட்சித்தலைவர்களது பரிவாரங்களுக்கும் இருந்த உறவினைக் குறித்த ட்ரொட்ஸ்கியின் விவரிப்பு, ரோமானிய கவிஞரான Juvenal இன் நையாண்டி கதைளை நினைவுக்குக் கொண்டுவருகிறது:

கலிகுலா அவருக்கு விருப்பமான குதிரையை ஒரு செனட்டராக ஆக்கினார். ஸ்ராலினுக்கு அபிமான குதிரை ஏதுமில்லை, இதுவரை உயர் சோவியத்தில் குதிரைபோன்ற பிரதிநிதியும் இல்லை. எனினும், கலிகுலாவின் குதிரை, அல்லது இன்னும் அவரது செனட்டர்களுமே கூட, ரோமின் விவகாரங்களில் எத்தனை குறைந்த செல்வாக்கு கொண்டிருந்தார்களோ, அத்தனை குறைந்த செல்வாக்குத்தான் சோவியத்தின் விவகாரங்களில் உயர் சோவியத்தின் உறுப்பினர்களுக்கு இருக்கிறது. ரோம அரசரின் பாதுகாப்புபடையினரான பிரதோரிய காவலர்கள் மக்களுக்கு மேலாக, இன்னும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், அரசுக்கே மேலாகவும் கூட அமர்ந்திருந்தார்கள். சக்கரவர்த்திதான் அங்கே இறுதி மத்தியஸ்தராக இருக்க வேண்டியிருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஸ்ராலினை உயர் தலைவராகக் கொண்டதான, பிரதோரியன் காவலர்களின் நவீனகால பதிப்பாக இருக்கிறது. ஸ்ராலினின் அதிகாரம் சீசரிசத்தின் ஒரு நவீன வடிவமாய் இருக்கிறது. அது ஒரு கிரீடம் இல்லாத, அத்துடன் இதுவரையில், வெளிப்பட்ட வாரிசு இல்லாத, முடியாட்சியாக இருக்கிறது. [58]

அரசியல் களத்தில், ட்ரொட்ஸ்கி அவரது வயதில் மிகப்பெரும் மூளையாக இருந்தார். இறுதிஆய்வில் உலக ஏகாதிபத்தியத்தின் ஒரு முகமையாக செயல்பட்ட ஸ்ராலினிச ஆட்சிக்கு ஒரு சகிக்கமுடியாத அச்சுறுத்தலை அவர் முன்வைத்தார். அது அவரை வாழ அனுமதிக்க முடியாததாக்கியது. ட்ரொட்ஸ்கி அவருக்கு எதிராக குறிவைத்திருந்த சக்திகளை புரிந்திருந்தார்: “ஆகவே நான் இந்த பூமியில் வாழ்வது விதிக்கு இணங்க அல்ல, மாறாக ஒரு விதிவிலக்காக என்று நான் கூறவியலும்.” [59] ஆயினும் அத்தகையதொரு அதீதமான ஆபத்துக்கு முகம்கொடுத்தபோதும், ட்ரொட்ஸ்கி தனிப்பட்ட குறிக்கோளின் அசாதாரண அளவைப் பராமரித்தார்:

நம்முடையதை போன்றதொரு பிற்போக்குத்தனமான சகாப்தத்தில், ஒரு புரட்சியாளன் எதிர்நீச்சல் போட நிர்ப்பந்திக்கப்படுகிறான். என்னால் இயன்ற அளவுக்கு நான் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். உலக பிற்போக்குத்தனத்தின் அழுத்தமானது, சொல்லப்போனால் மிகவும் தாட்சண்யமற்ற வகையில் எனது தனிப்பட்ட விதியிலும் எனக்கு நெருக்கமானவர்களின் விதியிலும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. இதில் என்னுடைய எந்தவொரு தகுதியையும் நான் இதில் காணவில்லை: இது வரலாற்று சூழ்நிலைகளின் ஒன்றிணைப்பின் விளைவாகும். [60]

தொடரும்…..

[1] “Trotsky’s place in History,” in C. L. R. James and Revolutionary Marxism: Selected Writings of C.L.R. James 1939-49, ed. Scott McLemee and Paul Le Blanc (Chicago, 2018), p. 93

[2] The Case of Leon Trotsky (New York, 1968), p. 291

[3] Leon Trotsky “The USSR in War,” In Defence of Marxism (London, 1971), p. 21

[4] “On the Eve of World War II, Writings of Leon Trotsky 1939-40 (New York, 1973), p. 17

[5] Ibid, pp.17-18

[6] Ibid, p. 25

[7] Ibid, p. 26

[8] Ibid, pp. 19-20

[9] In Defence of Marxism, p. 4

[10] Ibid, p. 11

[11] Ibid, pp. 14-15

[12] Ibid, pp. 114-15

[13] Ibid, p. 236

[14] Ibid, pp. 65-66

[15] Lenin Collected Works, Volume 38 (Moscow: 1961), p. 182

[16] In Defence of Marxism, p. 257

[17] Ibid, p. 224

[18] Writings of Leon Trotsky 1939-40, p. 183

[19] Ibid, p. 185

[20] Ibid, p. 188

[21] Ibid, p. 191

[22] Ibid, pp. 193-94

[23] Ibid, p. 197

[24] Ibid, pp. 199-200

[25] Ibid, p. 202

[26] Ibid, p. 206

[27] Ibid, p. 217

[28] Ibid

[29] In Defence of Marxism, p. 17

[30] Ibid, p. 219

[31] Writings of Leon Trotsky 1939-40, p. 218

[32] Writings of Leon Trotsky 1939-40, p. 233

[33] Ibid, pp. 233-34

[34] Ibid, p. 235

[35] The author of this essay engaged in numerous discussions with Harold Robins (1908-1987) during our collaboration in the 1970s and 1980s on the International Committee’s investigation into the assassination of Trotsky.
[36] Writings of Leon Trotsky 1939-40, p. 247

[37] Ibid, p. 248

[38] Ibid, p. 247

[39] Patenaude, Bertrand M., Trotsky: Downfall of a Revolutionary (HarperCollins e-books. Kindle Edition), p. 256

[40] “Healy’s Big Lie,” in Education for Socialists, December 1976, p. 36
[41] Writings of Leon Trotsky 1939-40, pp. 363-64

[42] Barry Carr, “Crisis in Mexican Communism: The Extraordinary Congress of the Mexican Communist Party, Science & Society, Spring, 1987, Vol. 51, No. 1, p. 50

[43] Ibid, p. 51

[44] Ibid, p. 54
[45] Writings of Leon Trotsky 1939-40, p. 352
[46] Stalin: Triumph & Tragedy, translated by Harold Shukman (New York, 1988), pp. 254-256.
[47] Writings of Leon Trotsky 1939-40, p, 350

[48] Ibid, p. 351
[49] From Lenin to Stalin (New York, 1937), p. 104
[50] Writings of Leon Trotsky: Supplement 1934-40 (New York, 1979), p. 830

[51] The translator and editor of this new edition is Alan Woods. Though he is associated with a left-wing political tendency with which the International Committee has well-known and fundamental political differences, Woods’ efforts in producing this edition of Trotsky’s Stalin deserve appreciative recognition and commendation.

[52] Leon Trotsky, Stalin, edited and translated by Alan Woods (London, 2016), p. 545

[53] Ibid

[54] Ibid

[55] Ibid, p. 565

[56] Ibid, p. 676

[57] Ibid, p. 672

[58] Ibid
[59] Writings of Leon Trotsky 1939-40, p. 250

[60] Ibid

Loading